பையன் வைத்த பரீட்சை…!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 8, 2021
பார்வையிட்டோர்: 3,156 
 

அலுவலகத்தில் டாணென்று மணி நாலு அடிக்கிறதோ இல்லையோ எனக்குள் டீ குடித்து ஒரு தம்மடிக்க வேண்டும் என்கிற உணர்வு தானாக வந்துவிடும்.

பத்து வருட பழக்கத் தோசம்!

படித்து முடித்து வேலைக் கிடைக்காமல் கஷ்டப்படும் காலத்தில்…

‘புண் பட்ட மனதை புகை விட்டு ஆற்று !’ என்று என் நண்பன் தொட்டு வைக்க….. தொடர்ந்த பழக்கம் இது.

தாமதித்தால் தலைவலி வரத் தொடங்கும். மற்றவர்களை விழுந்து பிடுங்கத் தோன்றும்.

அனாவசியமாக அவர்கள் வலி படுவார்கள். எனக்கும் வலி.

இப்போதும் எனக்குள் அது தோன்றியது.

மணி 4. 00.

வெளியில் சிறிது தூரம் சென்று… வழக்கம் போல என் வேலைகளை முடித்து விட்டு வரவேண்டும்.

எழுந்து நடந்தேன்.

சாலையோர டீ கடையில் எப்போதும் போல் டீ குடித்தேன். பக்கத்தில் பெட்டிக்கடை. தினம் சிகெரெட் வாங்கும் இடம்.

கடனில் நேற்று வாங்கிய ஒரு சிகரெட்டுக்கும் இப்போது ஒன்றுக்குமான பணத்தை எண்ணி எதிரே உள்ள பாட்டிலின் மீது வைத்தேன்.

என்னைவிட இருபது வயது இளையவன். பத்தாம் வகுப்பு முடித்தவன். மேற்கொண்டு படிக்க விருப்பப் படாமல் பதினேழு வயதில் கடைக்கு வந்து ஆறுமாத காலமாக குப்பைக் காட்டுபவன்… பணத்தை எடுத்து கல்லாவில் போட்டுவிட்டு இரண்டு சிகரெட் எடுத்து வைத்தான்.

“கடனை மறந்துவிட்டானே கிறுக்குப்பய..’- மனம் உச் கொட்டியது.

‘ஒரு சிகரெட்டைத் திருப்பிவிட்டு, உண்மையைச் சொல்லலாமா…?’ எண்ணம் வந்தது.

சபல மனம் சடாரென்று குறுக்கே பாய்ந்தது.

‘அவசியமே இல்லை. நான்கு வருட காலம் நமக்கு இதே கடையில் வியாபாரம். ஒரு சிகரெட் என்ன பல பாக்கெட்டுக்களுக்கான பணத்தை நம்மிடமிருந்து சம்பாதித்திருப்பான். அதில் ஒரு சிகரெட்டுக்கான காசு குறைந்தால் அவனுக்கு ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது! என்று மனம் முகத்தைத் திருப்ப…

ஒன்றை எடுத்துப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு மற்றொன்றை அருகில் தொங்கிய நெருப்பில் பற்ற வைத்தேன்.

வழக்கம்போல கடை அருகில் உள்ள பெஞ்சில் அமர்ந்து ஆற அமர புகைத்தேன்.

பையனுக்கு நினைவு வந்து கேட்டால்..

“உனக்கு ஞாபகமிருக்கான்னு பார்க்கத்தான் அப்படி செய்தேன்! ஏமாத்திப் போறவனாக இருந்தால் உடனே போயிருக்க மாட்டேனா..?” என்று சொல்லி சமாளித்துக் கொள்ளலாம் என்கிற எண்ணம் மனசுக்குள் வந்தது.

நான் புகைத்து முடிக்கும்வரை அவன் வியாபாரத்தைக் கவனித்தானேயொழிய என்னை நிமிர்ந்து பார்க்கவில்லை.

‘சரி. லாபம்தான்!’ எழுந்தேன்.

மறுநாள்.

அதே நேரம். டீக்கு மட்டுமே பையில் காசு.!

ஆம்பளைக்குக் கையில் காசு இருந்தால்தான் மதிப்பு, மரியாதை, தெம்பு, தைரியம். திடீரென்று தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று தென்பட்டுவிட்டால் உபசரிக்க வசதி, நமக்கும் எதிர்பாராத செலவிற்குத் தேவை என்று எப்போதும் என் பையில் நூறு, இருநூறு இருக்கும்.

காலையில் வீட்டை வீட்டுக் கிளம்பும்போதும் இருந்தது. சிறிது நேரத்திற்கு முன்புதான் அதற்கு திடீர் செலவு. நண்பனுக்குக் கொடுத்துவிட்டு மீதி.

டீ குடித்து விட்டு பெட்டிக்கடைக்கு வந்தேன்.

“தம்பி! ஒரு சிகரெட்!” கை நீட்டினேன்.

“காசு..?”

“நாளைக்குத் தாரேன். பாக்கெட்ல ஐநூறாய் இருக்கு.”- நம்மிடம் இல்லாததை ஏன் அவனிடம் காட்டி கவுரவக் குறைச்சலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்! எல்லா ஆண்களும் பெண்களும் இதைத்தான் செய்கிறார்கள். பிடித்து உருவிப் பார்த்தால்தான் கூட்டு உடையும். சொன்னேன்.

“இல்லை சார்!”

“என்ன இல்லை..? சிக்ரெட்டா..?”

“அது இருக்கு. கடன் இல்லை !” கராறாகச் சொன்னான்.

“என்னாச்சு தம்பி உனக்கு..? நான் நாலு வருசமா இந்தக் கடையில சிகரெட் வாங்கும் வாடிக்கையாளன். முன் பின் தெரியாத முகம் போல ‘இல்லே..!’ சொல்றே…?”

“எனக்கு ஒன்னும் ஆகலை சார். நீங்கதான் சரி இல்லே!” என்றான்.

“என்னப்பா சொல்றே…?” அதிர்ந்தேன்.

“நேத்திக்கு நான் வச்ச பரீட்சையில் நீங்க பெயில் சார்.”

“புரியல…?!”

“நாளைக்குத் தர்றேன்னு சொல்லி முந்தாநேத்து கடன் வாங்கின சிகரெட்டுக்கு காசு கொடுக்காம போய் நாணயம் தவறிட்டீங்க…” என்றான்.

பொளேர் அறை! அவமானம்!! குட்டு!!!

தலை தானாகத் தொங்கியது.

இனி யோக்கியமாக காசு கொடுத்து வாங்குவதாக இருந்தாலும் இவன் முகத்தில் விழிக்க முடியாது.

அவன், என்ன நாணயம் கெட்டவனாகவே நினைத்து வியாபாரம் செய்வான். நாமும் குற்ற உணர்ச்சியுடன் வாங்கி நகர வேண்டும் !

ச்சே! – திரும்பினேன்.

Print Friendly, PDF & Email

1 thought on “பையன் வைத்த பரீட்சை…!

  1. மிகவும் எதார்த்தமான நிகழ்வை அருமையாக விளக்கும் சிறுகதை. பாராட்டுகள். பதிவிட்டமைக்கு மிக்க நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *