ஓடாமல்போன இயந்திரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 7,983 
 
 

இன்னும் எட்டு மணியாகவில்லை. தொழிற் சாலையின் பெரும் வாயிற்கதவுகள் அடைத்துவைக்கப்பட்டிருந்தன. மனோகரன் ஓட்டிவந்த இரு சக்கர வாகனத்திலிருந்து ஒலி எழுப்பினான். உடனே இரும்புக் கதவுகள் வேகமாகத் திறந்தன. அவற்றினருகில் நின்று கன்னங்கள்வரை கத்தையாக மீசை வளர்த்திருந்த காவலாளி விறைப்புடன் சல்யூட் அடித்தார். அவனும் வணங்கிவிட்டு உள்ளே நுழைந்து தன்னுடைய வாகனத்தைக் கொட்டகையில் நிறுத்தினான். தொழிலாளர்கள் யாரும் வந்திருக்கவில்லை. இன்று விடுமுறை. வேலை தொடங்கத் தாமதமாகும் என்று நினைத்தான். எந்த அவசரமுமில்லாத அவன் அங்கேயே கொஞ்சம் நேரம் நின்றான். சற்றுத் தொலைவில் தொழிற்சாலைக் கட்டடம் பிரம்மாண்டமாக நின்றிருந்தது. அதற்குப் பக்கத்தில் சிமெண்ட் கற்களாலான மேலும் இரு கட்டடங்கள் வளர்ந்துகொண்டிருந்தன. உற்பத்தியான தோல் அட்டைகளைக் காயப்போடும் மைதானம் எதிரில் விரிந்திருந்தது. அதைத் தாண்டி இரண்டு மூன்று சிறிய குன்றுகளைப் போல் தோல் துண்டுகள் குவிந்திருந்தன. அருகில் அவற்றைச் சுத்தப்படுத்தும் இடமான அகன்ற ஓட்டுக் கொட்டகை. தூரத்து மூலையில் நீச்சல் குளத்தைப் போன்ற தொட்டியில் நிரம்பி வழிந்த கழிவுநீர் கறுப்பாகப் பளபளத்தது. எல்லாம் தொடர்ந்து உழைத்து ஓய்வில் மூழ்கிக்கிடப்பவைபோல் தோன்றின. சற்று நேரம் முன்னதாக வந்து அவற்றைக் கலைத்துவிட்டதாக அவன் உணர்ந்தான். மெதுவாகக் கட்டடத்தை நோக்கி நடந்தான். சற்று வயதான அந்தக் காவலாளி கையில் சாவிக் கொத்து குலுங்க முன்னால் ஓடித் தொழிற் சாலையின் சுருள் கதவைத் தூக்கித் திறந்தார். மற்ற வேலை நாட்களில் கதவுகளும் சன்னல்களும் மேல் வேலையாளாகவும் உள்காவலாளியாகவும் இருப்பவரால் எல்லோரும் வருவதற்கு முன்பு திறக்கப்பட்டுவிடும். அவரை இன்று வரச் சொல்லவில்லை.

அவன் தொழிற்சாலைக் கட்டடத்துக்குள் நுழைந்தான். ஆழ்ந்த தூக்கத்திலிருப்பது போன்ற முழுமையான அமைதி உள்ளே நிலவியது. சாளரங்களில் காற்று புகுந்து ஓசையுடன் வீசியது. அது வெண்சங்கைக் காதில் வைத்துக் கேட்கையில் எழும் அலைகடலின் இரைச்சலைப் போலிருந்தது. அப்போதுதான் பொழுது விடிந்ததைப் போன்ற அரையிருட்டு சூழ்ந்திருந்தது. உயரத்திலிருந்த திறப்புகளின் வழியாக ஒளிக் கீற்றுகள் பாய்ந்தன. அங்கங்கே இயந்திரங்கள் பெரிய விலங்குகளைப் போல் உறங்கிக்கொண்டிருந்தன. அவற்றின் நுட்பமான எண்ணற்ற உள்ளுறுப்புகள் உயிரற்று உறைந்திருந்தன. வெவ்வேறு அளவுகளிலான சக்கரங்களெல்லாம் ஆரக்கால்களை விரித்து அசைவற்றிருந்தன. அனைத்திலும் ஒளிந்திருக்கும் ஆக்கவும் அழிக்கவும் வல்ல உயர்மின்சார சக்தியை நினைத்து அவனுடைய உடல் ஒரு கணம் சிலிர்த்தது. மூலையிலிருந்த தண்ணீர்த் தொட்டியின் குழாயில் நீர்த்துளிகள் சொட்டின. அது இரவெல்லாம் இடைவிடாமல் ஒலித்திருக்கும். அலுவலகத்தையும் இருப்பு அறைகளையும் காவலாளி திறந்துவிட்டுச் சென்றார். சுவரில் நடுநாயகமாயிருந்த பெரிய கடிகாரத்தின் நீண்ட முள் எட்டு மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் வேலையாட்கள் வந்துவிடுவார்கள். பிறகு முழுக்கவனத்தையும் கோரும் வேலை ஆரம்பமாகிவிடும். அவன் அலுவலகத்திற்குள் சென்று நாற்காலியில் சாய்ந்தான். மேசையில் இருப்புப் புத்தகமும் தொழிலாளர்கள் வருகைப் பதிவேடும் மேலும் சில சிறிய பெரிய நோட்டுகளும் கிடந்தன. நேற்றுக் கொடுத்த வாரக்கூலியின் பட்டியல் காத்திருந்தது. அது கண்ணில்படாமலிருக்க மேசை இழுப்பறையில் போட்டு மூடினான். ஒன்றேபோல் தொடரும் வேலை நாட்களுக்கிடையில் மாற்றமாயிருப்பது ஓய்வு நாள்தான். அதுதான் ஒவ்வொரு வாரமும் காலத்தை ஆரம்பித்தும் முடித்தும் வைத்துப் புதுப்பிக்கிறது. அவனுக்கு இன்று வழக்கமான விடுமுறை நாளில் தவறிவந்துவிட்டதைப் போல் தோன்றியது.

தொழிற்சாலை வாயிலிலிருந்து இன்னிசை எழுந்தது. அது தொழிற்சாலை உரிமையாளரின் வெளிநாட்டுக்காரினுடையது. அவர் பெரும்பாலும் மதியம் அல்லது மாலைவேளைகளில் வந்து ஒன்றிரண்டு மணிநேரம் வேலைகளை மேற்பார்வையிடுவார். இன்று வேலை ஆரம்பிக்கும் முன்பு வந்திருக்கிறார். மனோகரன் அவசரமாக எழுந்து வெளியில் வந்தான். இரும்பு வாயிலைக் கடந்து கட்டட வாசலருகில் கார் ஊர்ந்து வந்து நின்றது. வழக்கத்துக்கு மாறாக ஜீன்ஸுடன் பூப்போட்ட சட்டையணிந்து உரிமையாளர் காரிலிருந்து இறங்கினார். ஓய்வுநாளென்பதால் அவற்றை அணிந்திருக்கலாம். அவர் கொஞ்ச காலம் மேற்படிப்புக்காக அமெரிக்காவில் வாழ்ந்தவர். அவருடைய நடையுடை பாவனைகளில் கொஞ்சம் அமெரிக்கத் தன்மை கலந்திருக்கும். மனோகரன் கையை உயர்த்தி “குட்மார்னிங் சார்” என்றான். அவர் தலையசைத்து “குட்மார்னிங்” என்றார். பிறகு “லீவு நாள்ல வேலைசெய்றது கஷ்டமாயிருக்கா?” என்று உதடுகள் பிரியாமல் சிரித்தார். மனோகரன் சரியான பதிலெதுவும் தோன்றாமல் பேசாமலிருந்தான். அவர் கண்களை உயர்த்திக் காலணிகள் சப்திக்க அலுவலகத்தை நோக்கி நடந்தார். அவன் உட்கார்ந்திருந்த அதே நாற்காலியில் அமர்ந்து கூலி நோட்டைப் புரட்டினார். மனோகரன் மௌனமாக எதிரில் நின்றிருந்தான். வெளியில் தொழிலாளர்களின் பேச்சுக் குரல்கள் கேட்டன. அவர் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். “எட்டு மணியாகுது, வேலை ஆரம்பமாகலையா?” என்று எழுந்தார். பின்னால் வந்த மனோகரன் தொழிற்சாலையின் சுவர்க் கடிகாரத்தைக் காட்டினான். அதில் எட்டு மணியாவதற்குச் சில நொடிகள் பாக்கியிருந்தன. “இந்த கடிகாரப்படிதான் அவங்க வேலைசெய்றாங்க சார்” என்றான். அவர் கடிகாரத்தையும் அவனையும் பார்த்துவிட்டுத் தோள்களைக் குலுக்கினார்.

வேலையாட்கள் நிதானமாக உள்ளே வந்து உரிமையாளரைக் கண்டு சற்று வேகத்துடன் சாப்பாட்டுத் தூக்குகளை அலமாரிகளில் வைத்துவிட்டு அவரவருடைய வேலையிடங்களுக்குச் சென்றார்கள். உடைகளை அவிழ்த்து ஆணிகளிலும் சன்னல்களிலும் மாட்டிவிட்டுக் காக்கிச் சீருடைகளையோ பழைய உடைகளையோ எடுத்து அணிந்தார்கள். அவை முன்பு சிலர் போட்டிருந்த உடைகளைவிட மோசமில்லாமலிருந்தன. மேலிருந்து தொங்கிய குழல் விளக்குகள் ஓரிருமுறை கண்களைச் சிமிட்டிவிட்டு எரிந்தன. நேற்று உற்பத்தியான அட்டைகளை வெயிலில் காயப்போடப் பெண் தொழிலாளர்கள் தள்ளுவண்டியில் எடுத்துச் சென்றார்கள். அரைவை இயந்திரமிருந்த மேடைப் படிகளில் இயந்திரத்தை இயக்கும் வேலையாள் தாவி ஏறினான். அவன் தாடி ஆட்டினுடையதைப் போலிருந்ததாலும் சில ஆடுகளை வீட்டில் வளர்த்து வந்ததாலும் மற்ற தொழிலாளர்கள் அவனை ‘ஆடு’ என்பார்கள். அவனுடைய பாவனைகளும் ஆட்டைப் போல் மாறியிருந்தன. அவன் இயந்திரத்தை இயக்கும் பிடியில் கைவைத்து மனோகரனைப் பார்த்தான். அவன் மொட்டைப் பாறையின் முகட்டில் மேய்ச்சலின்போது நின்றிருக்கும் செம்மறியாட்டைப் போல் காணப்பட்டான். மனோகரன் தலையாட்டவும் இயந்திரத்தை முடுக்கினான். அது ஒருமுறை பொருமிப் பெருத்த சத்தத்துடன் ஓடத் தொடங்கியது. ராட்சதப் பல்சக்கரம் முன்தினம் கொட்டிய தண்ணீரும் ஊறிய தோல் துண்டுகளும் வழியக் கனகம்பீரமாகச் சுழன்றது. காற்று மோட்டார்களும் தங்கள் வேலையை ஆரம்பித்துத் தீனமாக இரைந்தன. இருப்பதிலேயே மிகவும் சத்தம் போடுகின்ற – அட்டைகளை அழுத்தும் – இயந்திரம் கடகடவென உருள ஆரம்பித்தது. நீல டிரவுசர் போட்டிருந்தவன் அதன் இண்டு இடுக்குகளில் தாராளமாக எண்ணெய் வார்த்தான். பிறகு தசைகள் திரண்ட கைகளால் அட்டையை எடுத்து உருளைகளுக்கிடையில் செலுத்தினான். அந்த இயந்திரம் மேலும் கத்தியது. எல்லா இயந்திரங்களும் சேர்ந்து கூரையைப் பிய்த்துவிடுவதுபோல் சத்தமிட்டன. உரிமையாளர் மிகுந்த திருப்தியடைந்தார். மனோகரன் நீண்ட வலையைப் பிணைத்த உருளைகளை நோக்கி நடந்தான். அங்கு வேலையாட்கள் தயாராக வரிசையில் நின்றிருந்தார்கள். மனோகரனுக்கும் பின்னால் வந்த உரிமையாளருக்கும் சேர்த்து அந்த இயந்திரத்துக்கு பொறுப்பான கணேசன் வணக்கம் சொன்னார். அவர் வாய் உள்ளுக்குள் அசைபோட்டுக்கொண்டிருந்தது. அட்டையின் கன அளவை மனோகரன் சரிபார்த்தான். இயந்திரத்தின் பொத்தான் அழுத்தப்பட்டது. வெவ்வேறு அளவு உருளைகள் சீரான வேகத்தில் சுற்றத் தொடங்கின. வலையின் மேல் அரைத்த குழம்பை இருவர் தொடர்ந்து எடுத்து ஊற்ற அது பதப்படுத்தும் பகுதிகளின் வழியாக ஊர்ந்தது. உரிமையாளரும் மனோகரனும் அதைப் பார்த்தவாறு நீண்ட இயந்திரத்தின் பின்பகுதிக்கு வந்தார்கள். மேலிருந்த உருளையிலிருந்து மெல்லிய அட்டைகள் இறங்கிக்கொண்டிருந்தன. அவற்றைச் சமவேகத்தில் இருவர் இழுத்து அடுக்கினார்கள். ஓர் அட்டையை எடுத்துக் கனத்தையும் வளையும் தன்மையையும் உரிமையாளர் பரிசோதித்தார். அவனும் அவரருகில் நின்று கவனித்தான். அவரிடம் இந்த இடத்துக்குத் தொடர்பில்லாத உயர்தரமான வாசனை வீசியது. அவர் வழக்கம்போல் விடுமுறைத் தினத்தில் பண்ணை வீட்டுக்குப் போகிறார் என்று மனோகரன் நினைத்தான். அங்குக் குளிர்ந்த பீரைக் குடித்து மாலைவரை விவசாய வேலைகளைக் கவனிப்பார். அப்படித்தான் தலைமை அலுவலகத்திலிருப்பவர்கள் பேசிக்கொண்டார்கள். மீண்டும் திரும்புகையில் தொழிற்சாலை வேலை முடியும் நேரத்தில் வருவார். அல்லது மற்றொரு சாலை வழியாகப் போய்விடுவார். அவர் “இன்னைக்கிக் கண்டிப்பா இதைப் போட்டு முடிக்கணும்” என்று விடுமுறை நாளுக்காகக் கூடுதலாக ஒரு புன்னகையை வீசிவிட்டுச் சென்றார். படகைப் போல் கார் வழுக்கிச் சென்றது. இரும்பு வாயில் ஒருமுறை அகலத் திறந்து மறுபடியும் மூடிக்கொண்டது.

மனோகரன் தொழிற்சாலைக்குள் மெதுவாக நடந்தான். உரிமையாளரின் வருகையால் கவிந்திருந்த இறுக்கம் மெல்லக் குறைந்தது. தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளத் தொடங்கினார்கள். அவன் ஒவ்வொரு இயந்திரமாகப் பார்த்துக்கொண்டு வந்தான். சிலர் வணக்கம் தெரிவித்தார்கள். இன்று மற்ற இரு மேற் பார்வையாளர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டிருந்தார்கள். தொழிலாளர்களில் தேவையானவர்களுக்கு மட்டும் வேலைசெய்வதற்கு நேற்றே சொல்லப்பட்டிருந்தது. சிலர் தவிர்க்க முடியாத காரணங்களைச் சொல்லி விடுமுறை கேட்டதால் அவர்களுக்கு மாற்றாக ஆட்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார்கள். அப்படியும் ரசாயனம் கலக்குமிடத்திலும் வலை இயந்திரத்திலும் பழக்கமானவர்கள் வராமல் ஏமாற்றிவிட்டார்கள். அதற்குப் பதிலாக மாற்று ஆட்கள் வேலைசெய்துகொண்டிருந்தார்கள். அப்போதுதான் வேர்த்து ஒழுகியபடி வந்த பெண் மேற்பார்வையாளர் “கொஞ்சம் வீட்டு வேலையால லேட்டாயிடுச்சு . . .” என்றவாறு வணங்கினாள். அவனும் வணக்கம் சொல்லிவிட்டு “சாப்பாடு எடுத்து வரலையா?” என்று சைகைகளுடன் விசாரித்தான். “இல்ல, மத்தியானம் வீட்டுக்காரர் எடுத்துவருவார்” என்று முந்தானையால் விசிறிக்கொண்டே சத்தமாகச் சொன்னாள். அவள் இன்று விடுப்பு கேட்டிருந்தால் கொடுத்திருக்கலாம் என்று நினைத்தபடி நகர்ந்தான்.

இயந்திரங்கள் தொடர்ந்து பேரிரைச்சலுடன் ஓடிக்கொண்டிருந்தன. மேலிருந்த அரவை இயந்திரம் ஓடுவது ‘ஏன்? ஏன்?’ என்று கேட்பதுபோலிருக்கும். வலைத் தொடர் இயந்திரம் திரும்பத் திரும்ப ‘நான் ஓடறேன்டா . . . ஓடறேன்டா . . .’ என்று கத்தும். அது சில சமயங்களில் பழைய திரைப்படப் பாடல்களின் பல்லவிகளையும் பாடும். அதிகக் கனமான அட்டைகள் தயாரிக்கும்போது ‘போங்கடா, போங்கடா’ என்று ராகத்தோடு இழுக்கும். காற்று மோட்டார்கள் அடி வயிற்றிலிருந்து கொல்லையில் குருவி ஓட்டுவதுபோல் ‘ஓகோ’ என்று கூவும். அதில் தண்ணீர் குறையும்போது குயில் கூவும் ஓசை கிளம்பும். ஆனால் அது அபாய ஒலி. உடனடியாகத் தண்ணீரைத் திறக்க வேண்டும். அருகில் மேற்பார்வையாளர்கள் இல்லாவிட்டால் இந்தச் சத்தங்களைத் தாண்டி வேலையாட்கள் இரைந்து பேசுவார்கள். சில தொழிலாளர்கள் மட்டும் சுற்றிலும் அமைதி நிலவுவதைப் போல் மிகச் சாதாரணமாகத் தங்களுக்குள் கதைபேசிக்கொள்வார்கள். ஒருவருடன் ஒருவர் முழுமனத்துடன் உரையாடினால் வெளி ஓசைகள் மறைந்துவிடும்போலும். சிலர் ‘இரவில் தூக்கத்தில்கூட மெஷின் ஓடற மாதிரியிருக்குது’ என்பார்கள்.

மூலையிலிருந்த வலிமையான அழுத்தும் இயந்திரத்திடம் வந்தான் மனோகரன். அதை மெருகேற்றுவதைப் போல் துடைத்துக்கொண்டிருந்தார். ‘மாயக் கிருஷ்ணன்’ என்று அவரில்லாதிருக்கும்போது அழைக்கப்படுகிற கிருஷ்ணன். அவர் “இன்னைக்குக்கூட வேலைவாங்குறீங்களே?” என்றார் எண்ணெய்க் கறை படிந்த கையை உயர்த்திச் சிரித்தபடி. இவர்தான் தொழிற்சாலையில் மூத்தவர். முக்கியமான இயந்திரத்தை ஓட்டுபவரும்கூட. அதனால் இந்தத் தொழிற்சாலையில் மறைமுகமாக இயங்கிக்கொண்டிருக்கும் தொழிற்சங்கத் தலைவராகத் தொழிலாளர்கள் அவரைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். இன்னும் அவருடைய இயந்திரம் தன்னுடைய பணியை ஆரம்பிக்கவில்லை. ஒரு கட்டு அட்டைகள் வந்த பிறகு அது முடுக்கப்பட்டு ஓலமிடும். மனோகரன் அங்கு நின்றிருந்த தள்ளுவண்டியின் ஓரத்தில் உட்கார்ந்தான். இந்த அழுத்தும் இயந்திரத்தை வெளிமாநிலத்திலிருந்து வாங்கிவந்த புதிதில் திடீரென்று ஒரு நாள் அதன் இரும்புக் குழாய் அழுத்தம் தாங்காமல் உடைந்து போனது. உள்ளிருந்த எண்ணெய் ஊற்றுபோல் கூரை வரை பீய்ச்சி அடித்தது. கிருஷ்ணனுடைய தலையிலிருந்து கால்வரையிலும்கூடக் கறுப்பு எண்ணெய் ஒழுகியது. ‘அப்பாமேல் குழந்தை ஒன்றுக்கடித்து விட்டதாக’ வேலைசெய்யும் பையன்கள் கேலிசெய்தார்கள். உள்ளூரிலிருந்த மெக்கானிக்கை உடனே அனுப்பி வைத்தார் உரிமையாளர். அந்த மெக்கானிக் மிகவும் திறமையாகக் குழாயை ஒட்டவைத்துச் சரிசெய்துவிட்டார். தொழிற்சாலை தொடர்ந்து இயங்கியது. அன்று உற்பத்தி நடக்காமல் கழுவுவதும் துடைப்பதுமாகப் பெரும் கொண்டாட்டமாயிருந்தது. அந்தக் கறுப்பு எண்ணெய் படிந்த தடம் சுண்ணாம்பு அடித்தும் போகாமல் கூரையில் மங்கலாக இன்னும் இருக்கிறது. சுவர்க் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு “டீ போடலாமா?” என்று கிருஷ்ணன் கேட்டார். தேனீர் இடைவேளைக்குக் கொஞ்சம் நேரமிருந்தாலும் “சரி, போடுங்க” என்றான் மனோகரன். வழக்கம்போல் பளபளவென்று துடைத்து மூலையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் அடுப்பைக் கிருஷ்ணன் ஏற்றினார். அதன்மேல் பாலை ஊற்றிவைத்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன்புதான் தொழிலாளர்களுக்குக் காலையிலும் மாலையிலும் தேனீர் தருவது ஆரம்பமானது. அதற்கு முன்னால் தேனீர் வழங்கப்பட்டதுமில்லை, தேனீருக்கான ஐந்து நிமிட இடைவேளையும் கிடையாது. இந்தத் தேனீருக்காகத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதை ‘டீ போராட்டம்’ என்று மேற்பார்வையாளர்கள் உள்ளூர மகிழ்ச்சியுடன் அழைத்தார்கள். முதலில் கிருஷ்ணனும் ‘பல்லு’ தண்டபாணியும்தான் நகரத்துக்குப் போய் ஒரு தொழிற் சங்கத் தலைவரைச் சந்தித்துப் பேசினார்களாம். அவரைக் கூப்பிட்டுப் பக்கத்திலிருந்த ஓடாத டூரிங் சினிமாக் கொட்டகையில் இரவில் லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் கூட்டம் போட்டார்களாம். இப்படித்தான் சங்கம் கட்டப்பட்டது என்று முதலாளிக்கும் மேற்பார்வையாளர்களுக்கும் உள்காவலாளி நன்றி விசுவாசத்தால் பிறகு சொன்னார். கூட்டம் நடந்த மறுநாள் தொழிலாளர்கள் உள்ளே வேலைக்கு வராமல் தொழிற்சாலைக்கெதிரில் கூடி நின்றார்கள். இதனால் மனோகரன் அஞ்சி உடனே உரிமையாளருக்குத் தகவல் சொன்னான். அவர் வந்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் மாயக் கிருஷ்ணன்தான் தைரியமாக முன்னிருந்து தொழிலாளர்கள் சார்பாகப் பேசினார். பக்கத்திலிருந்து தண்டபாணியும் சில வார்த்தைகளை எடுத்துக்கொடுத்தான். மற்றவர்கள் ஒருவருக்குப் பின்னால் ஒருவராக ஒளிந்திருந்தார்கள். ஐந்து ரூபாய்க் கூலி உயர்வு, ஞாயிறு விடுமுறை நாள் கூலி, தேனீருக்கான பணம் வழங்குதல் போன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இரண்டு ரூபாய்க் கூலி உயர்வு, தொடர்ச்சியாக வந்தால் விடுமுறை நாள் கூலி, தொழிற்சாலைக்குள்ளேயே டீ தயாரித்து வழங்குதல் ஆகியவற்றுக்கு உரிமையாளர் கடைசியில் ஒத்துக்கொண்டார். தொழிற்சாலைக் கணக்கில் மண்ணெண்னெய் அடுப்பும் பாலும் பிறபொருட்களும் வாங்கிவந்து மறுநாள் கிருஷ்ணன் தேனீர் தயாரித்தபோது தொழிலாளர்கள் கைதட்டினார்கள். மனோகரனும் மற்ற மேற்பார்வையாளர்களும் அலுவலகத்துக்குள் வந்து உட்கார்ந்துகொண்டார்கள். இவர்களுக்கும் ஆளுக்கொரு தம்ளர் டீ சூடாக வழங்கப்பட்டபோது மிகவும் ஆசுவாசமாக இருந்தது. இதுதான் இந்தத் தொழிற்சாலையின் வரலாற்றில் தொழிலாளர்கள் துணிச்சலுடன் முதன்முதலாக நடத்திய போராட்டம்.

மற்றொரு வேலைநிறுத்தத்தின்போது தொழிற்சாலை தொடர்ந்து நாலைந்து நாட்களுக்கு மூடப்பட்டது. தொழிலாளர்களிடம் பயமிருக்க வேண்டும் என்பதற்காக முதலில் நடந்த போராட்டத்தில் தன்னை எதிர்த்துக் கேள்வி கேட்ட கிருஷ்ணனையும் தண்டபாணியையும் வேலையைவிட்டு எடுக்க வேண்டும் என்று உரிமையாளர் பிடிவாதமாயிருந்தார். அதை அடிக்கடி ஞாபகமூட்டிக்கொண்டிருந்தார். சில மாதங்கள் கழித்துப் பொங்கல் ஊக்கத் தொகை கொடுக்கப்பட்டபோது இன்னும் அதிகமாகத் தர வேண்டும் என்று தொழிலாளர்கள் வாங்க மறுத்தார்கள். அதனால் வழக்கறிஞர் நண்பர் ஒருவரிடம் உரிமையாளர் ஆலோசித்தார். வழக்கறிஞர் கூறியபடி கிருஷ்ணனுக்கும் தண்டபாணிக்கும் ‘தொழிலாளர்களை வேலைசெய்யவிடாமல் தடுத்த காரணத்தால் வேலையிலிருந்து நீக்கப்படுவதாக’க் கடிதம் கொடுக்கப்பட்டது. அடுத்த நாள் அவர்களிருவரும் தொழிற்சாலைக்குள் நுழைய முடியாதபடி காவலாளியால் தடுக்கப்பட்டார்கள். தொழிற்சாலை வாயிலில் சிறிய குழப்பம் ஏற்பட்டது. ஏற்கெனவே உள்ளே வந்த சில தொழிலாளர்களும் வெளியேறி மற்றவர்களுடன் சேர்ந்துகொண்டார்கள். ‘வேலையில் சேர்த்துக்கொள், சேர்த்துக்கொள் . . .’, ‘ரெண்டு பேரையும் திரும்பவும் வேலையில் சேர்த்துக்கொள் . . .’ என்று கோஷங்களைப் புனைந்து கத்தினார்கள். ‘வேலைக்கு வராதவர்கள் வேலைநீக்கம் செய்யப்படுவார்கள்’ என்ற அறிவிக்கும் காகிதத்தைக் கதவில் ஒட்டியும் போராட்டம் தொடர்ந்தது. உரிமையாளருடைய செல்வாக்கால் இரண்டு போலீஸ்காரர்கள் தொழிற்சாலையின் பாதுகாப்புக்காகவும் தொழிலாளர்களைப் பயமுறுத்துவதற்காகவும் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் தொப்பிகளைக் கழற்றித் தலையைத் தடவியபடி லத்திகளுடன் நாளெல்லாம் வாயிலருகில் பெஞ்சு போட்டு அமர்ந்திருந்தார்கள். அந்த இரண்டு மூன்று நாட்களும் மனோகரனும் மற்ற மேற்பார்வையாளர்களும் அலுவலகத்துக்குள் சும்மா உட்கார்ந்து பொழுதுபோக்கினார்கள். ஒரு தடவை சீட்டுக் குலுக்கிப் போட்டும் விளையாடினார்கள். கொஞ்ச நாட்கள் பொறுத்துப் பார்த்த உரிமையாளர் ஒரு போலீஸ் அதிகாரியின் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தத் தொழிற்சங்கத் தலைவரை அழைத்தார். அந்தத் தொழிற்சங்கத் தலைவர் முன்பொருமுறை சட்டசபைத் தேர்தலில் கட்சியில் சீட்டு கிடைக்காமல் சுயேச்சையாக நின்று பிணைத்தொகையையும் இழந்தவராம். அவர் “இரண்டு பேரையும் திரும்பவும் வேலையில் சேர்க்கணும். ஒன்றரை மாத போனஸும் இந்த வேலைநிறுத்தம் செய்த நாட்களுக்கு முழுக்கூலியும் தரணும்” என்பதைச் சளைக்காமல் தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தார். மிகவும் கோபமடைந்த உரிமையாளர் “ஒரு மாத போனஸ்தான் தர முடியும், இல்லாட்டி இழுத்து மூடிடுவேன்” என்றார். “எல்லோருக்கும் வயிறு இருக்குது. விட்டுக் கொடுத்துப் போங்க” என்று தன்னுடைய தொந்தியைத் தடவியபடி நடுவிலிருந்த போலீஸ் அதிகாரி பொதுவாகத் தெரிவித்தார். அட்டைகளுக்கான தேவைகள் அதிகமாயிருந்ததால் வேறுவழியில்லாமல் இருவரையும் வேலையில் சேர்த்துக்கொள்ள உரிமையாளர் மறுநாள் ஒத்துக்கொண்டார். இப்படியாக அனைவருக்கும் தொடர்ந்து நீண்ட விடுமுறை கிடைத்தது. ஆனால் அதை யாரும் நிம்மதியுடன் அனுபவிக்கவில்லை. தினமும் தொழிற்சாலைக்கு வந்து வேலை நேரம் முழுக்கக் காத்திருந்தார்கள்.

மனோகரன் தேனீரைக் குடித்துவிட்டுக் கட்டட வாயிலில் வந்து நின்றான். வெளியே பரந்த மைதானத்தில் கோடு இழுத்தாற்போல் வரிசையாக அட்டைகள் காய்ந்து கொண்டிருந்தன. அவற்றைத் திருப்பிப் போடுவதற்குச் சில பெண் தொழிலாளர்கள் சென்றுகொண்டிருந்தார்கள். அட்டைகளை எண்ணிச் சிப்பம் கட்டும் முருகேசன் அவர்களைப் பின்தொடர்ந்தான். கொஞ்ச நாட்களாகத் தன்னைக் கவனமாக அலங்கரித்துக்கொண்டு வேலைக்கு வரும் வள்ளியை நெருங்கினான். அவளுடைய நடை வளைந்து நெளிந்து தயங்கியது. இவர்களைக் கண்டுகொள்ளாமல் மற்ற பெண்கள் குனிந்து அட்டைகளைத் திருப்பினார்கள். வள்ளியின் தலையிலிருந்த கனகாம்பரப் பூச்சரம் வாடி வதங்கியிருந்தது. முருகேசன் அட்டைகளைப் பார்க்கும் பாவனையுடன் அவளிடம் எதையோ கூறினான். அவளுடைய முகத்தில் மின்னலைப் போல் வெட்கப் புன்னகை பளிச்சிட்டது. முருகேசன் தன்னுடைய பனியனுக்குள்ளிருந்து சிறு பிளாஸ்டிக் பொட்டலத்தை உருவி அவளிடம் கொடுத்தான். அதிலிருந்த பொருள் வெயிலில் மஞ்சளாக மினுமினுத்தது. அவள் அதை வாங்கி ஜாக்கெட்டுக்குள் திணித்துக்கொண்டாள். பிற பெண்கள் தலையுயர்த்தாமல் வேலைசெய்துகொண்டிருந்தார்கள். அவர்களிடம் முருகேசன் ஒப்புக்குப் பேசிவிட்டுக் கழிவறைப் பக்கம் நடந்தான். மனோகரன் அவசரமாகத் திரும்பிப் பக்கத்திலிருந்த வெட்டு இயந்திரத்திடம் சென்றான். அதற்கப்பால் முருகேசன் வேலைபார்க்குமிடம் ஊசியும் பிளாஸ்டிக் கயிறும் மட்டும் கீழே கிடக்கக் காலியாயிருந்தது. மனோகரன் அவனைக் கண்டிக்க எண்ணினான். பிறகு சிறுமி போன்ற வள்ளியின் தாவணியுடுத்திய உருவத்தை நினைத்துப் பரிதாபம் கொண்டான். அட்டைகளை வெட்டிக்கொண்டிருந்த வேலையாளின் கண்கள் மனோகரனை அர்த்தப் புன்னகையுடன் சந்தித்தன. இவனும் அதற்கு உடந்தைதான் போலும். வெட்டப்பட்ட அட்டை விளிம்புகள் சருகுகளைப் போல் கீழே உதிர்ந்துகொண்டிருந்தன. சற்று நேரத்தில் முருகேசன் ஒன்றும் தெரியாதவன்போல் லுங்கியை மடித்துக் கட்டியபடி வந்தான். அவனுடைய முழங்கையை அட்டைகளை வெட்டுபவன் விளையாட்டாக எட்டிப் பிடித்து மனோகரனுக்குக் காட்டினான். அதில் ‘வள்ளி’ என்ற எழுத்துகள் தாறுமாறாக ஆழக் கீறப்பட்டு மேலே நீலமாகப் பொருக்குக் கட்டியிருந்தது. “அவள இவன் வேலகூட முடிச்சிட்டான் சார்” என்றான் அட்டை வெட்டுபவன் உற்சாகத்துடன். வலி ஒரு பொருட்டல்ல என்பதுபோல் முருகேசன் பெருமையாகச் சிரித்தான். மனோகரன் “கைக்கு மருந்து போடு, புண்ணாயிடும்” என்றபடி அங்கிருந்து நடந்தான். இந்தத் தொழிலாளர்களுக்குத் தொழிற்சாலைதான் சுற்றியுள்ள உலகமாயிருக்கிறது. இதில் முடிந்தளவுக்கு மகிழ்ச்சியாயிருக்க விரும்புகிறார்கள். அதனால் தனிப்பட்ட வாழ்க்கை உறவுகளையும் இதற்குள் தேடுகிறார்களென்று மனோகரன் எண்ணினான்.

இயந்திரத்தின் வலையில் அட்டைகள் வேகமாக வெளிப்பட்டுக்கொண்டிருந்தன. பெண் மேற்பார்வையாளர் கால் மாற்றி ஓரமாக நின்றபடி கண்காணித்துக்கொண்டிருந்தார். கோவிந்தசாமியும் செங்கமலமும் அட்டைகளை இழுத்துத் தள்ளுவண்டியில் அடுக்கிக் கொண்டிருந்தார்கள். சிலசமயங்களில் அவர்களுடைய உடல்கள் இடித்துக்கொண்டன. ஒருவரையொருவர் மையலுடன் பார்த்துக் குசுகுசுவென்று பேசிச் சிரித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய கைகள் இயந்திரத்துக்கு ஈடுகொடுக்கவில்லை. ஒன்றிரண்டு அட்டைகள் தாறுமாறாக அடுக்கப்பட்டன. மனோகரன் நெருங்குவதைக் கண்டு அவர்கள் பேசுவதை நிறுத்தினார்கள். இருவரையும் வெவ்வேறு வேலைகளுக்கு மாற்ற அவன் எண்ணினான். ஆனால் ஜோடிப் பறவைகளைப் போன்றிருந்த அவர்களைப் பிரிக்க மனம் வரவில்லை. அருகில் சென்று கவனித்தான். மீண்டும் அவர்கள் இயந்திர கதியை அடைந்தார்கள். அவளுடைய முதுகில் பனித்துளிகளைப் போல் வியர்வை அரும்பியிருந்தது. செங்கமலம் தலையில் கனகாம்பரச் சரத்தைச் சொருகியிருந்தாள். அது இன்னும் வாடவில்லை. இவளும் வள்ளியும் ஒரே பூச்சரத்தைக் கிள்ளிப் பகிர்ந்துகொண்டிருக்கலாம். இவளுடைய கணவன் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னால் வேறொருத்தியுடன் ஓடிவிட்டான் என்று மற்ற வேலையாட்கள் சொல்லியிருந்தார்கள். செங்கமலத்தைக் கோவிந்தசாமியும் இரசாயனம் கலக்கும் சங்கரனும் கூட்டாக வைத்திருப்பதாகவும் பேசிக்கொண்டார்கள். முன்பொருமுறை அவள் மேலுள்ள உரிமைக்காக சங்கரனும் கோவிந்தசாமியும் தொழிற்சாலை வாயிலில் மண்ணில் கட்டிப் புரண்டார்கள். பிறகு இருவரும் சமரசமாகி ஒன்றாக அவளிடம் நள்ளிரவுகளில் செல்கிறார்களாம். அதேபோல் ஈழ அகதியான சுந்தரியுடன் சின்ன கணேசன் தொடர்புவைத்துக்கொண்டிருக்கிறான். மாலதியுடன் கண்ணபிரானும் சற்று வயதான லோகநாயகியுடன் சாத்தப்பனும் உறவு வைத்திருக்கிறார்கள். வரலட்சுமியை வாயிலிலிருந்து வெளியாள் ஒருவன் தினமும் சைக்கிளில் கூட்டிச் செல்கிறான். ஒரு நாள் அவனை உதைக்கப்போகிறார்கள். இந்தக் கதைகளை மனோகரனுக்கும் மற்ற மேற்பார்வையாளர்களுக்கும் ஓய்ந்த வேளைகளில் தொழிலாளர்கள் தேடி வந்து சொல்வார்கள். அவற்றைக் கேட்க மறுத்தாலும் அவர்கள் பாட்டுக்கு அனுபவித்துக் கூறிக்கொண்டிருப்பார்கள். அவை பெரும்பாலும் ஒன்றுக்கு இரண்டாகக் கற்பனை செய்யப்பட்டவையாக இருக்கும்.

தோல் துண்டுகளைத் சுத்தம்செய்யும் சுமதியை அட்டைகளை அரைக்கும் குமரேசன் நீண்ட நாட்களாகக் காதலித்துக்கொண்டிருந்தான். சகதொழிலாளிகள் கூறியபடி கடந்த வருடம் அவள் வீட்டிற்கு முறையாகப் பெண் கேட்டும் போனான். அவன் தாழ்ந்த சாதி என்பதால் சுமதியினுடைய அண்ணன் “கொலை செய்து விடுவேன்” என்று கத்தியைக் காட்டி மிரட்டியிருக்கிறான். சில நாட்கள் கழித்து அவர்கள் வெளியூருக்கு ஓடிப் போய்க் கோயிலில் கல்யாணம்செய்துகொண்டார்கள். இருவரும் திரும்பி வந்ததும் குமரேசன் வீட்டில் ஏற்றுக்கொண்டார்கள். அவன் மீண்டும் வேலைக்கு வந்தான். அவனைச் சேர்த்துக்கொள்ள வேண்டாமென்று உரிமையாளர் சொல்லிவிட்டார். அவனுக்காகச் சங்கமும் போராட முன்வரவில்லை. பல நாட்களாகத் தொழிற்சாலை வாயிலில் காத்திருந்து வேலை கேட்டு அலுத்தான். பிறகு நகரத்திலிருந்த தோல் தொழிற்சாலை ஒன்றுக்கு அவன் சென்றுவிட்டதாகச் சொன்னார்கள். குமரேசனுக்கும் சுமதிக்கும் இப்போது பெண் குழந்தை பிறந்திருக்கிறதாம். அவளுடைய வீட்டிலும் பாசத்தால் குழந்தையை வந்து பார்த்தார்களாம். ஆனால் தொழிற்சாலைக்குள் யாரும் காதலித்துக் கல்யாணம் செய்துகொள்ளக் கூடாதென்ற உரிமையாளரின் கடும் உத்தரவு அமலில் இருந்தது.

மனோகரன் நடுவிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான். வழக்கம்போல் உற்பத்தி உச்சத்தை எட்டியிருந்தது. அனைத்து இயந்திரங்களும் முழுவீச்சில் ஓடின. தொழிலாளர்களும் வேகமாக இயங்கிக்கொண்டிருந்தார்கள். எல்லா வேலைகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்து தொடரோட்டம்போல் மாறியிருந்தன. அந்த நிலையில் தொழிலாளர்கள் நினைத்தால்கூட நடுவில் நிறுத்த முடியாது. தனித் தனியான இயந்திரங்கள் சேர்ந்து ஒட்டுமொத்தமாக மாபெரும் இயந்திரத்தின் உறுப்புகளைப் போலிருந்தன. யாருடைய கட்டுப்பாடுமில்லாமல் தாமாக இயங்குவதாகத் தோன்றின. அவை திரும்பத் திரும்ப ஒரே ஒலியை எழுப்பிக்கொண்டிருந்தன. தொழிற்சாலை முழுவதும் மாற்றமில்லாத ஓசையில் மூழ்கியிருந்தது. அதைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தால் இயந்திரம்போலாகிவிடுவோம். பிறகு காதலும் போராட்டமும் அழிந்துவிடும். அவன் தலையை உதறிக்கொண்டான். தொழிலாளர்கள் இயந்திரங்களுடன் மிகவும் பழகிவிட்டதால் அவை போடும் சத்தங்களைக் காதில் வாங்கிக்கொள்வதில்லை என்று நினைத்தான்.

திடீரென்று இயந்திரங்களின் சீரான ஓட்டத்தில் அபசுரம் தட்டியது. மிதமிஞ்சிய அழுத்தத்தால் சக்கரங்களின் பட்டைகள் இழுபட்டுச் சத்தமிட்டன. அது அட்டைகள் தயாராகும் வலை இயந்திரத்திலிருந்துதான் கிளம்பியிருக்கும். அதைத் தொடர்ந்து கூக்குரல்கள் கேட்டன. வேலைசெய்பவர்கள் யாராவது இயந்திரத்தில் மாட்டிக்கொண்டிருக்கலாம் என்று மனோகரன் பயந்தான். அந்த இயந்திரத்தை நோக்கி விரைந்தான். சற்று நேரத்தில் மின்சாரம் தானாக நின்றது. எல்லாக் குழல் விளக்குகளும் மங்கி அணைந்தன. இயந்திரங்களெல்லாம் மெதுவாகத் தயங்கி நின்றன. தொழிலாளர்கள் வேலையை அப்படியே போட்டுவிட்டு வலை இயந்திரத்திடம் ஓடினார்கள். அது சக்கரங்கள் இறுகி அசையாமலிருந்தது. நீண்ட வலை கிழிந்து அங்கங்கே தொங்கியது. கீழே அட்டை கூழாக வெளிப்பட்டுச் சாணியைப் போல் குவிந்திருந்தது. பக்கத்தில் செங்கமலமும் கோவிந்தசாமியும் திகைத்து நின்றிருந்தார்கள். கணேசன் ஒன்றும் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தார். அவருடைய திறந்த வாயில் செம்மண்ணைப் போல் போதைப் பாக்கு ஒட்டியிருந்தது. வலை இயந்திரத்தின் மற்ற தொழிலாளர்கள் தங்களை உயிர்தப்பியவர்களாகக் கற்பனை செய்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

அந்த இயந்திரத்தை மனோகரன் மெதுவாகச் சுற்றி வந்தான். வலைக் கண்ணிகள் பிய்ந்து கலைந்த தலையைப் போலிருந்தது. உருளைகளுக்கிடையில் அரைகுறையாக உருவான அட்டைகள் பிதுங்கிக்கிடந்தன. எவ்வித இயக்கமும் இல்லாதிருந்தும் பின்புறத்திலிருந்து ஈர அட்டைத்துண்டு ஒன்று தொப்பென்று பிண்டம் போல் விழுந்தது. கணேசன் பிரக்ஞை வரப்பெற்று “இத நாங்க ஒண்ணும் பண்ணலை சார், நல்லா ஓடிட்டிருந்து நின்னு போச்சு” என்றார். முன்பே அங்கு வந்திருந்த கிருஷ்ணன் “வலை பழசாயிருக்கலாம்” என்றார். செங்க மலமும் கோவிந்தசாமியும் வேகமாக இழுக்காததால் அட்டைகள் சிக்கியிருக்கலாம் என்று மனோகரன் சந்தேகித்தான். அவர்களிருவரையும் நிமிர்ந்து பார்த்தான். செங்கமலத்தின் கண்களில் அழுகை முட்டிக்கொண்டிருந்தது. கோவிந்தசாமி தலைகவிழ்ந்திருந்தான். பிற தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் தங்களுடைய இயந்திரங்களின் குறைகளைப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். அது குழம்பி இரைச்சலாகி இயந்திரங்களிருந்து உருவானதைப் போலிருந்தது. அந்த வலை இயந்திரம் விபத்துக்குள்ளான வாகனத்தைப் போலிருந்தது. மற்ற இயந்திரங்கள் முட்டாள்களைப் போல் ஒன்றும் புரியாமல் நின்றிருந்தன. கிருஷ்ணன் “சார், இத சரிசெய்ய ரெண்டு மூணு நாளு ஆவும். அதுவரைக்கும் எல்லாருக்கும் லீவு விட்டுடுங்க” என்றார். தொழிலாளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பதிலை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

இந்த வலை இயந்திரத்தைப் பழுதுபார்க்கச் சில நாட்கள் பிடிக்கும் என்று மனோகரன் எண்ணினான். எங்கேயோயுள்ள இயந்திரத் தயாரிப்பாளரிடமிருந்து வேறு வலையை மிகுந்த விலை தந்து வரவழைக்க வேண்டும். ஆனால் அட்டைகளை உபயோகிக்கும் காலணி உற்பத்தியாளர்கள் பொறுக்கமாட்டார்கள். அவர்களுக்கு நிறையக் காலணிகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் தேவையுள்ளது. உரிமையாளர் மிகவும் பதற்றமடைவார் என்று எதிர்பார்த்தான். தொழிலாளர்களுக்கு வேலைசெய்யாத நாட்களுக்குக் கூலி தர முடியாது என்று எடுத்தவுடனே கூறுவார். அவருக்கு விஷயத்தைத் தெரிவிக்கப் பலமுறை முயன்றான். அவரைத் தொடர்புகொள்ள முடியாதென்ற தகவல்தான் வந்துகொண்டிருந்தது. கிருஷ்ணன் மீண்டும் “வேறு வழியில்லை சார்” என்றார். பழுதான இயந்திரத்தைச் சுற்றி இழவு வீட்டைப் போல் எல்லோரும் கூடியிருந்தார்கள். அவர்களை இனித் தொழிற்சாலைக்குள் அடைத்துக் கட்டுப்படுத்த முடியாது என்று நினைத்தான். தன்னையறியாமல் ‘சரி’யென்று தலையாட்டினான். தொழிலாளர்கள் ஆராவாரத்துடன் கலைந்தார்கள். இயந்திரங்களையும் கருவிகளையும் கைகால்களையும் வேகமாகக் கழுவத் தொடங்கினார்கள். அப்புறமாகச் சந்திப்பதைப் பற்றிச் சத்தமாகப் பேசிக்கொண்டார்கள். உள்ளே காய்ந்த அட்டைகள் கொண்டுவந்து போடப்பட்டன. தொழிற்சாலை எங்கும் உற்சாகக் குரல்கள் மிதந்தன. அனைவரும் உடைகளை மாற்றிக் காலியாகாத சாப்பாட்டுத் தூக்குகளுடன் கும்பலாகக் கிளம்பினார்கள். பெண் மேற்பார்வையாளரும் அவனிடம் சொல்லிவிட்டு ஒரு வேலையாளின் சைக்கிளில் உட்கார்ந்து செல்ல அவசரமாக வெளியேறினாள்.

மனோகரன் தனித்து விடப்பட்டான். தொழிற்சாலைக்குள் மீண்டும் அமைதி வந்து குடிகொண்டது. அங்கே சற்று முன்பு தொழிலாளர்கள் கடுமையாக உழைத்துக்கொண்டிருந்தார்கள் என்பதை நம்ப முடியவில்லை. அனைத்து இயந்திரங்களும் தங்களுடைய பழைய ஜடத்தன்மையை அடைந்திருந்தன. அவற்றினிடையில் பழுதடைந்த இயந்திரம் மறைந்திருந்தது. உற்பத்தியான பொருட்கள் எந்த மதிப்புமுமில்லாமல் ஓரமாகக் கிடந்தன. நிழலைப் போல் அரையிருட்டு சூழ்ந்திருந்தது. எங்கோ அவ்வப்போது நீர்த்துளி திரண்டு மெதுவாகச் சொட்டிக்கொண்டிருந்தது. அதனுடன் இனம் புரியாத சத்தமும் அவன் காதில் விழுந்தது. அவன் உற்றுக்கேட்டான். சுற்றிலும் கவிந்திருந்த ஆழ்ந்த மௌனத்தின் அடியிலிருந்து பேரோசை எழுந்துகொண்டிருந்தது. அது இயந்திரங்கள் முழுவேகத்துடன் இயங்கும் ஒலிதான். எப்போதும் ஓயாதுபோல் பட்டது. மேலும் தாங்கிக்கொள்ள முடியாமல் வெளியில் வந்தான். ஆளற்ற மைதானமும் கொட்டகைகளும் வெறிச்சோடியிருந்தன. அவன் வாகனத்தைத் தள்ளிக்கொண்டு புறப்பட்டான். காவலாளி கதவுகளைத் திறந்து வணக்கம் வைத்தார். இரும்புக் கதவுகள் திரும்பவும் இறுக மூடிக்கொண்டன. அவற்றுக்குப் பின்னால் தொழிற்சாலை மாற்றமில்லாமல் நின்றிருந்தது. அதற்கு என்றும் விடுமுறை கிடையாது எனத் தோன்றியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *