செவ்வாய் தோசம் பிடித்த…?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 8, 2012
பார்வையிட்டோர்: 9,923 
 

இன்று நான் படுக்கையிலிருந்து தூக்கம் தெளிந்து கண் விழித்த நேரம் விடியற்காலை ஐந்து மணி நாற்பத்தைந்து நிமிடங்கள்! ஜன்னல் கதவுகளைத் திறந்து விட்டேன். இருளை விரட்டிக் கொண்டிருந்தது சூரியனின் இளங்கதிர்கள். பறவைகள் ஆனந்தத்தில் ஆடிப்பாடிக் கொண்டிருந்தன. விடியற்காலையில் பறவையின் கீதங்களைக் கேட்பதில் எனக்கு அலாதிப் பிரியம். மெய்மறந்து சிறிது நேரம் கேட்டுக் கொண்டிருந்தேன். ஜன்னல் வழியே ஊடுருவிய சூரியன் அறையிலிருந்த இருளையும் விரட்டியது. நாட்காட்டியைப் பார்த்தேன். நேற்றைய தேதியைக் காட்டியது. அதைக் கிழித்து எறிந்தேன்.

என் கண்ணில் பட்டது இன்றையத் தேதி – ஆகஸ்ட் 15.

”ஆகா…! இன்று போல் என்றுமில்லையடிப் பாப்பா….” என் மனம் சந்தோசத்தில் ஊஞ்சலாடியது. கதவைத் திறந்து வெளியே வந்தேன். வாசலில் நின்று சூரிய உதயத்தை உற்று நோக்கி ரசித்தேன். அண்ணாந்துப் பார்த்தேன். வானத்தில் வெள்ளிமீன் ஆடிப்பாடி ஆனந்த தாண்டவமாடிக் கொண்டிருந்தது!

”ஆகா…! என்ன இன்று பாடும் குயில், கரையும் காகம், கீச்சிடும் குருவிகள், சூரியனின் இளஞ்சிவப்புக் கதிர்கள் வெள்ளிமீன் அடிமைப்பட்டிருக்கும் என் மனம், சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும் எங்கள் வீட்டு நாய் எல்லாமே சந்தோசத்தில். நான் மாறிவிட்டேனா? அல்லது என் பார்வை மாறிவிட்டதா?

செய்தித்தாளைத் தூக்கி திண்ணை மேல் எறிந்து விட்டுச் சென்றான். ஒரு சிறுவன் ”சார்…! பேப்பர்! என்று. நான் அவனுக்கு ”சார்…!” ஆகிவிட்டேன் தினப்பத்திரிக்கை அவனுக்குப் ”பேப்பர்” ஆகி விட்டது. அவன் மூளைக்குள் தமிழ் அடிமையாகிக் கிடந்தது ஆங்கிலத்திற்கு. என் மூளைக்குள் இருப்பது போலவே.

செய்தித்தாளைப் புரட்டிப் பார்த்தேன். சுதந்திர தேவிக்கு இன்று ”டும்…டும்” தலைப்புச் செய்தி. சுதந்திர தேவிக்கு இன்று அறுபதாங் கல்யாணம்! “ஆகா…!” அருமையான சந்தர்ப்பம். இந்தியா முழுவதும் நடக்கும் கல்யாணத் திருவிழா! எங்காவது ஒரு இடத்திற்கு ஓசி சாப்பாட்டிற்குப் போய்விட வேண்டியதுதான. முடிந்தால் இரண்டு மூன்று இடங்களுக்குப் போய்விட வேண்டியதுதான். எக்காரணம் கொண்டும் மொய் வைக்கக் கூடாது. அப்படியே மொய் வைக்க வேண்டிய நிலை வந்தால், திரும்பி வரும் போது நல்ல ஒரு செருப்போடு வந்து விட வேண்டும்.

பல் துலக்கி, நீராடி உடம்பை சுத்தப்படுத்திக் கொண்டேன். புதிய துணிகளையும் உடுத்தி தயாராகி விட்டேன் கல்யாணத்திற்கு. நான் செல்லும் திருமண மண்டபம் ஒரு பெரிய மண்டபம். கரை வேட்டிக்காரர்கள், அறிவாளிகள், அறிவற்றவர்கள், கந்துவட்டிகாரர்கள், மொல்லமாரிகள், முடிச்சவிக்கிகள், ஊழல்பேர்வழிகள், கள்ளவோட்டுத் தாதாக்கள், கள்ளச்சாராய தாதாக்கள் என எல்லோரும் எவ்வித வேறுபாடுமின்றி பங்கு பெறும் மண்டபம். நம்ம செங்கோட்டை ஜார்ஜ்கோட்டை மாதிரி பெரிய மண்டபம் அது. சுபமுகூர்த்த நேரம் காலை சுமார் எட்டு மணி அளவில். நான் ஏழரை மணிக்கெல்லாம் மண்டபத்திற்கு சென்றுவிட தீர்மானித்தேன். ஏனென்றால், ஏழரையிலிருந்து எட்டரைவரைதன் நல்ல நேரம். அதற்கப்புறம், ராகுகாலம். அதைத் தொடர்ந்து எமகண்டம் வந்துவிடும் என்பதால்.

என் பாட்டிக்கும் இன்று கல்யாணநாள்தான். என் பாட்டி பெயரும் சுதந்திர தேவிதான். அதனால், பத்திரிக்கையைப் பார்த்தவுடன் என் பாட்டி “ஞாபகம் வந்துவிட்டது எனக்கு. என் பாட்டியும் வெள்ளையனிடம் அடி வாங்கியவள்தான். என் அப்பாவும் அம்மாவும் பாட்டியை அவளின் வயதான காலத்தில் அடிக்கும் போது கூட ‘வந்தே மாதரம். என்றுதன்ா சொல்லுவாள். பாட்டி என்றால் எனக்கு உயிர். அவள் சாகும் தருவாயில் என் வயிற்றை இறுக்கியருந்த அரணாக்கயிற்றை தளர்த்தி, என்னை சுதந்திரமாக்கியவள். என் பாட்டியின் “ஞாபகம் வந்ததால் மனதொடிந்து போனேன். ஒரு நிமிடம். மீண்டும் மெய்மறந்து ஜன்னலோரம் நாற்காலியில் அமர்ந்து கொண்டே.

பறவைகள் கீச்சு ஒலிகளோடு ”வந்தே…மாதரம்! வந்தே… மாதரம்!” என்ற என் பாட்டியின் கீதமும் ஒலித்தன. இன்று என் வீட்டுநாய் கட்டப்பட்டிருக்கும் நாய்ச் சங்கிலியால் நான் ஒரு வேளை கட்டப்பட்டிருக்கலாம். இந்த கீதம் வெள்ளையனை ஒரு வேளை விரட்டாமலிருந்திருந்தால். அடிமைச் சங்கிலியை உடைத்தெரிந்த மந்திரமது. எனக்கும் சொல்லிவிட்டுத்தான் போயிருக்கிறாள் என் பாட்டி. மீண்டும் மீண்டும் என் காதுகளில் ஒலித்தது. வந்தே…மாதரம்! வந்தே…மாதரம்.!! எறு. ஆனால், அன்று இருந்த கம்பீரம் அந்த மந்திர கீதத்தில் இன்று இல்லை! குரலில் ஒரு தொய்வு! ஒரு தளர்ச்சி!

என் மனதில் ஒரு துக்கம், வெறுமை, கண்களில் கண்ணீர் துளிகள். “கண்ணீர் சிந்தவா…. நான் அடிமைச் சங்கிலியை அறுத்தெறிந்தேன். என் பாட்டியின் குரல். “துடைத்துக்கொள் கண்ணீரை! கீழே சிந்தி விடாதே! உன் காலடியில் எண்ணற்ற பன்னாட்டு நிறுவனங்கள் குப்பிகளுடன்! இன்று இந்த மண்ணும் மண்ணில் விளையும் எதுவுமே உனக்கு சொந்தமில்லாமல் இருக்கு. உன் அப்பனும் அம்மாவும் ”அக்கா மாலா” வையும் ”கப்சி”யையும் வெளிநாட்டு மது பானத்தில் கலந்து குடித்து விட்டு மயங்கிக் கிடக்கிறார்கள். நீயும் அதற்கு அடிமையாகி விடாத! கண்ணீரில் இருக்கும் உப்பை நீக்கி சுவையான குடிநீராக்கி தருகிறார்களாம். அதற்கு காசு இப்போது வேண்டாமாம்! குடிநீரை என்னவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று நீ கவன! மயங்கி கிடப்பவர்கள் கிடக்கட்டும். நீ மயங்காமல் இரு! ஒரு நாள் அவர்களின் மயக்கம் தெளிந்துதான் ஆகும் என்றாள் பாட்டி.

“பாட்டி..! என பாட்டி? உனக்கு என ஆச்சி? என்னென்னவோ சொல்ற போ பாட்டி…! எனக்கு எதுவுமே புரியில.”

“பேராண்டி! நீ விழித்திரு அவ்வளவுதான்! வேறு ஒன்றுமில்லை”

“சரி பாட்டி”

நினைவு திரும்பி சுற்றுமுற்றும் பார்த்தேன். பாட்டியைக் காணவில்லை. பாட்டி..! பாட்டீ…! என்றேன்.

“பயப்படாதே…! நான் சொல்லிக் கொடுத்த மந்திரத்தை உரக்க உச்சரித்து பழகிக்கொள்.” சொல்லிவிட்டு மறைந்து விட்டாள் பாட்டி மீண்டும். எங்கள் வீட்டு சுவற்றில் மாட்டப்பட்டிருந்த ஜெர்மன் கடிகாரம் இந்திய நேரத்தைச் சரியாகக் காட்டியது. இதை வாங்கி வீட்டில் வைத்ததிலிருந்தால் என் அப்பாவுக்கு ஜென்மச்சனி தடித்துக் கொண்டதாக பாட்டி ஏற்கனவே சொல்லியிருக்கிறாள் என்னிடம். நான் கிளம்பும் போது கூட என் அப்பனும் அம்மாவும் எழுந்திருக்கவில்லை. நேற்றைய தினத்தையும் தொலைத்து இன்றைய தினத்தையும் மறந்து நாளைய தினத்தையும் விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள். நான் வேகவேகமாக கல்யாண மண்டபத்தை நோக்கி நடந்தேன். நான் போய்ச் சேருவதற்கும் கல்யாணச் சடங்கு ஆரம்பிப்பதற்கும் சரியாக இருந்தது.

“இன்று நமக்கு சுதந்திரம் கிடைத்த நாள். நமக்கெல்லாம் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த நமது முன்னோர்களை ஒரு நிமிடம் நினைத்துப் பார்க்க வேண்டும். நமது தேசத்தை மீட்டெடுத்தத் தியாகிகள் நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவர்கள் மீட்டுக் கொடுத்த சுதந்திரக் காற்றை சுத்தமில்லாமல் சுவாசித்துக் கொண்டிருப்பதால் ஆஸ்துமா வந்து அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறோம். காற்றை சுத்தமாக்கிக் கொடுக்க இன்று பன்னாட்டு கம்பெனிகள் போட்டி போடுகின்றன. நம் நாட்டுக் காற்றையும் சுத்தப்படுத்தும் பொறுப்பை அக்கம்பெனிகளிடம் ஒப்படைத்தால் நாமெல்லாம் ஆஸ்துமாவிலிருந்து விடுபடலாம். மேலும, பல லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும். வறுமைக்கு எதிரான சக்தி வாய்ந்த ஆயுதம் வேலை வாய்ப்புதான் வெட்டிப் பேச்சு இல்லை. எனவே, காற்றை சுத்திக்கரிக்கும் ஆலைகள் நாட்டின் பல பகுதிகளில் நிறுவ உள்ளோம் என்பதை இந்நனாளிள் தெரிவிப்பதோடு நம் சுதந்திர தேவியின் அறுபதாங்கல்யாண உரையை முடித்துக் கொள்கிறேன் என்றார். கல்யாணத்திற்கு தலைமை தாங்கிய கரைவேட்டிகளின் தலைவர்.

என் பின்னாடி இருந்து யாரோ என்னைக் கிள்ளினார்கள். திரும்பிப் பார்த்தேன். பாட்டி. என்ன பாட்டி…! இங்கேயும் வந்து என்னைத் தொந்தரவுப் பண்ற.

”பேராண்டி! இரத்தக்கறை வேட்டிக்கார பேச்சை கேட்டாயா? நாங்கள் இரவு பகலாக நூத்துக் கொடுத்த வேட்டியை துவைத்து கட்டக்கூட வக்கில்ல. காற்றைச் சுத்தப்படுத்தறானாம் காற்றை… ஆட்டெக் கடிச்சு, மாட்டெக் கடிச்சு மனுசனை கடிக்கிற கதையா இருக்கு. காற்றையும் விற்கப் பார்க்குறானுங்க. பேராண்டி…! கொஞ்சம் ஏமாந்து விட்டால் அப்புறம் மூக்குக்கு முன்னாடி பன்னாட்டு கம்பனிகள் விற்கும் காற்றடைத்த பலூனைத்தான் வைத்துக் கொண்டு சுற்ற வேண்டி வரும். அப்புறம் வெளிக்காற்றை சுவாசித்தால், நான் காற்றிற்கு காபிரைட் வாங்கிவிட்டேன். என்று வழக்கு தொடருவான் பன்னாட்டு கம்பனிகாரன். அக்காமாலா, கப்சி கம்பனிகாரங்ககிட்ட மாட்டன மாதிரி மாட்ட வேண்டி வரும். இன்றைய அரசியல் தலைவர்களும் கல்வியாளர்களும் பன்னாட்டுக் கம்பெனிக்காரங்க போடுகிற பூசனம் தடித்த ரொட்டித் துண்டை கவ்விக்கொண்டு வாலை ஆட்டுராங்க. அவனுங்ககிட்ட இருந்து தப்பிக் வேண்டுமென்றால் உன்னை மாதிரி இளைஞ்ர்களுக்கு சுய அறிவும் சுய சிந்தனையும் வேண்டும். அப்போதுதான் நாங்கள் வாங்கிக் கொடுத்த சுதந்திரக் காற்றை சுதந்திரமாக சுவாசிக்க முடியும்.”

“அய்யோ… பாட்டி…! மூச்சு முட்டுது போ… பாட்டி…! நானே கல்யாணத்தைப் பார்த்துட்டு வயிறு முட்டச் சாப்பிட்டுட்டு போலான்னு வந்திருக்க. சாப்பிட வந்த இடத்திலும் கொடி தடிச்சிட்டு உக்கார முடியுமா? அதுதான் கொடி ஏத்திட்டாங்க இல்ல! அப்புறம் என்ன வேணும்? வேணும்னா நீயும் வா பாட்டி சாப்பிட்டு விட்டுப் போகலாம்.” ”போடா… பேராண்டி… நான் சாப்பிடத்தான் வந்தேனா…? உன் பின்னாடியே…?” பாட்டி பிணங்கிக் கொண்டாள்.

“சரி. பாட்டி… விடு கோவிச்சுக்காதெ… நீ என்ன வேணும்னாலும் சொல்லு கேக்கற. இப்ப மட்டும் சாப்பிட்டுவிட்டு வந்தர்றேன் பாட்டி! பசிக்குது.”

“தீணிப் பண்டாரம்! தீணிப் பண்டாரம்! உங்கப்பன் இப்படி இருந்ததால்தான் பாசுமதி அரிசி, பாசிப்பருப்பு, அவரக்கொட்டை, துவரம்பருப்பு, கிளிகொத்தன கொய்யாப்பழம், காக்காய் எச்சம், கருவாட்டு மூத்திரம், எலிப் புழுக்கை, எருமை விடற குசு, எஎலாமே எங்களுக்குத்தான் சொந்தம் என்கிறா அந்த நாட்டுக்காரன். அப்புறம் இவர்கள் இங்கு போடற சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு, நீ போடற சாணியும் அவனுக்குதான் சொந்தம்ன்னு இவனுங்களே சப்போட் பண்ணுவாங்க.”

“பாட்டி…! உன்னுடைய தொல்ல தாங்க முடியில பாட்டி…! உன் தொல்லை தாங்க முடியாமதான் தாத்தா செத்துப் போயிட்டாரு போல தெரியுது…”

”எம் புருசன் தற்கொலைப் பண்ணிக்கிற அளவுக்கு அவர் ஒன்னும் கோழை இல்லை பேராண்டி… அவர் சட்டையே அணியாத அஞ்சா நெஞ்சன். அவரைச் சுட்டு கொன்னுட்டாங்க படும்பாவிங்க…”

“போ…பாட்டி…! எல்லாம் உன்னாலதான். உனக்கு செவ்வாய் தோசமிருந்ததாம். அதைத் தெரியாம உன்னை கல்யாணம் பண்ணிக் கொண்டதாலதான் தாத்தா செத்து போயிருச்சின்னு பேஙுக்கிறாங்க.”

பாட்டியின் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் நான் சொன்னதைக் கேட்டு. இதற்கு முன் பாட்டி இப்படிக் கண்ணீர் வடித்ததை நான் கண்டதே இல்லை.

பாட்டியின் கண்ணீரைப் பார்த்து எனக்கும் சங்கடமாகப் போய்விட்டது. ”ப்ளீஸ் பாட்டி… என்னை மன்னித்துவிடு பாட்டி. நீ எது சொன்னாலும் கேக்கற….” என்று பாட்டியைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதேன்.

“பயப்படாத… பேராண்டி..! நான் உனை விட்டு எங்கேயும் போய்விட மாட்டேன். என் முன்னே போய்க் கொண்டிரு. நான் சொல்வதைக் கேட்டு குறும்புத்தனம் மட்டும் பண்ணாதே… தோசம் எனக்கல்ல என்பதைப் புரிந்துக்கொள்ள நாட்கள் பிடிக்கும் உனக்கும்.”

”சரி பாட்டி…! ஆனால், ஒரு கண்டிசன். என்னைக் கிள்ளக் கூடாது. பேசாம அமைதியா வரணும். அப்படியே மீறி நையி நையினு நச்சரிச்சுகிட்டே வந்தான். நானும் இந்தக் காதுல வாங்கி அந்த காதுல விட்டுருவேன்”

பாட்டி செல்லமாக அரைந்த அரையில் என் காது கொய்யோனு சத்தம் போட்டது. “உனக்கு காது இருந்தாலும் இல்லாட்டியும் ஒன்று தாண்டா பேராண்டி” என்று கோவித்துக் கொண்டு மறைந்தும் போய் விட்டாள் பாட்டி மீண்டும். நான் விருந்தை ஒரு பிடி பிடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி விட்டேன்.

எனக்கு நன்றாகத் தெரியும் என் பாட்டியைப் பற்றி. நான் எவ்வளவு குறும்புத்தனம் பண்ணாலும் என்னை சுற்றிச் சுற்றி வந்து என்னைத் தடுத்தாட்கொண்டுதான் இருப்பாள் என்று. வீட்டிற்கு வந்து அசந்து தூங்கிக் கொண்டிருந்தேன் உண்ட மயக்கத்தில். உள்நாட்டு, வெளிநாட்டு கொசுக்கள் என் ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருந்தன.

“பேராண்டி…! பேராண்டி…! பேராண்டி..!” பாட்டியின் குரலைக் கேட்டு நான் விழித்தவுடன் கொசுக்கள் திசைக்கொன்றாக ஓடிவிட்டன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *