ஒரு கடன் மறுக்கப்படுகிறது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 6, 2021
பார்வையிட்டோர்: 5,215 
 

அந்த ஏழை ஊரில் பணக்கார மிடுக்குடன் தெரிந்த ஒரே கட்டிடத்துக்குள் நுழையலாமா வேண்டாமா என்ற தயக்கத்துடன் டயர் செருப்பை வெளியே பத்திரமாக வைத்து விட்டுத் தலையை மட்டும் உள்ளே பயத்துடன் நீட்டினான் பன்னீர்.

“ஏய்யா! என்ன வேணும்?” –

‘போரப்போ!’ விளம்பரத்தில் காட்டப்படும் அழுக்குக் கும்பலாக நுழைந்த பன்னீருக்கும் தனக்கும் சற்றே சம்பந்தமில்லாத ‘சன் லைட்’ வெண்மையில் பளிச்சிட்ட வங்கி அலுவலர் கணபதி உரக்கக் கேட்டது அனைவர் காதுகளிலும் விழுந்தது.

“ஒண்ணுமில்லீங்க!” என்ற பன்னீரின் பதிலுக்கு,

“இம்புட்டு தூரம் இதுக்காகவா வந்தே?” என்றார் கணபதி.

சற்றே தயங்கி, “இருசு அனுப்பிச்சாருங்க!” என்றான்.

“ஆம்மா! ஏதோ உனக்கு ‘ரோன்’ வேணும்னான். என்ன லோன் போடலான்னு பாக்கிறே?”

“ஐயா! இந்த நோயில எல்லாப் பொழப்பும் பாழாயிடிச்சு! ஏதாவது மாடு கன்னு வாங்கலாம்னு…” என்று இழுத்தான்.

“சொசைட்டியில நெம்பரா? அப்பத்தான் ….”

“ அவிக சேத்த மாட்டாக! நமக்கு எடம் இல்லீங்களாம்!”

‘சாதிகள் இல்லையடி பாப்பா!’ என்று பாடிக்கொண்டே போன பாரதியார், கணபதிக்கு காட்சி கொடுத்தார்.

“எட்-ஆபீஸ்லருந்து சொசைட்டி நெம்பர்னா மட்டும் மாட்டு லோன் கொடுக்கலாம்னு சொல்றாங்க! எளுதிப் பார்க்கலாம்!” பேச்சை முடித்துக் கொண்டார் கணபதி.

பன்னீர் ரொம்ப நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தான். பின்னர், காஷியரையும், கணபதியையும் கும்பிட்டு விட்டுக் கிளம்பினான்.

* *

பாங்கு வாசலை அடைத்துக் கொண்டு, பளிச்’சென்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்தக் கார் சிறுவர்களைப் பெரிதும் ஈர்த்தது! மாதாமாதம் அங்கே வரும் அந்தக் காரின் நம்பர் பிளேட்டின் மேல் பக்கத்தில், ‘ஏழைப் பங்காளன்-உங்கள் வங்கி’ என்ற பளபள போர்டு அனைவரையும் படிக்கத் தூண்டியது. ஆனால், சிலரால் மட்டுமே படிக்க இயன்றது!

“என்னய்யா பண்றீங்க? ஒரு டார்கெட்டும் நடக்கவில்லை! ரெண்டு பேரும் பூட்டிகிட்டுப் போய்டுறீங்களா?” பேயாட்டம் ஆடினார் கனமான அதிகாரி.

கணபதியின் முகத்தில் களை இல்லை! ‘எப்படா இவனை அனுப்பலாம்னு’ யோசனையில் இருந்தார்.

“ஆறு! சாருக்கு சூடா ரெண்டு காப்பி (சக்கர இல்லாம) வாங்கியா!” என்று குசுகுசுத்தார்-ஆறுமுகத்திடம்.

“ஐயா! பாலு சாயந்திரம்தான்…… அது…..”

“சரி! இள நீ போட்டுக் கொண்டா! போ!”

“ஏய்யா! ஒரு காப்பி வாங்கக் கூட இந்த ஊரில வக்கில்லாம கிடக்குது! என்னதான் நடக்குது?” ரீஜனல் மானேஜர் தீவிரமானார்.

“சார்! கீழத் தெரு கிராமத்துல நிலமில்லாதவங்களுக்கு மாட்டு லோன் கேக்கிறாங்க! லெட்டர் போட்டிருக்கிறேன்!”

“அப்புறம் பால் கறந்து காய்ச்சி எனக்கு காப்பி கொடுப்பீரோ?” ரீஜனல் மானேஜர் எகத்தாளம் செய்தார்.

கணபதி கூரையைப் பார்த்துப் பரிசோதிதுக் கொண்டிருந்தார்- கண்களால்.

“அதைப் பாக்கலாம்! இப்ப என்ன சீசன்? மல்லாக் கொட்டை கிடைக்குமா? வேக வச்சு உப்பு போட்டு சாப்பிட்டா ரொம்ப அருமையானது. காந்திஜி கூட கடலை தான் சாப்பிட்டார்- தெரியுமில்லே?’

“இள நீர் போனதரம் நல்லாவே இருந்தது. டிரைவரக் கூப்பிட்டு, காரில் வக்கச் சொல்லுங்க!’

“சார்! புதுசா தறி போட்டு நெசவு பண்ணி சேலைகள் அனுப்பிருக்காங்க! மேடமுக்கு ரொம்பப் பிடிக்கும்னு ……”

“சரி சரி! அதையும் பின்னாடி சீட் ல வச்சிருங்க!”

“சார்! அரிசி மூட்டை கார்ல வச்சிட்டேன்!”

“யோவ்! போனமுறை கல்லா இருந்துச்சு! ஐயரிடம் சொல்லணும்! லோனை கான்சல் பண்ணிடுவேன்!”

“ஸார்! அந்த மாட்டு லோன் பத்தி!……இவந்தான் பன்னீர்……”

“என்ன கணபதி! டிபாசிட் ஏறிடுச்சா? இன்னும் தீயா வேலை செய்யணும் குமாரு! இந்த இயர் எண்டு உங்க பிராஞ்ச் தான் அவார்டு வாங்கணும்னு சேர்மன் சொல்றார். நானும் உங்களப் பத்தி ரொம்பவே சொல்லியிருக்கிறேன்.”

“இப்படித்தான் கடலூருக்குப் பக்கத்துல மாம்பழப்பட்டுல நான் புதுசா மானேஜரா சேர்ந்தேன். ஒரே மாசத்துல இயர் எண்டு டார்கெட் பண்ணி சவால் விட்டேன். சேர்மன் அசந்து போயிட்டார்.” அப்படி எடுத்துக்கணும் வேலையை- சீரியஸ்ஸா-சேர்மன் அசந்து போயிட்டார்.” அப்படி வேலையை- சீரியஸ்ஸா எடுத்துக்கணும் -BANKING IS A SERIOUS BUSINESS- தெரியுமில்லையா?

கணபதி இப்போது கம்ப்யூடரைப் பக்கத்திலிருந்து சரி பார்த்துக் கொண்டிருந்தார், “பாவி! எப்போ கிளம்புவானோ?”

“அப்போ சாப்பாடு வீட்டில தானே? போலாமா?”

“போன தடவை அந்த மாங்கா ஊறுகா ரொம்ப நல்லா இருந்துதுன்னு என் மிஸஸ் சொன்னா.”

சாப்பிட்டதும் ரீஜனல் பாராட்டினார்- அடுத்த பார்சலுக்காக!

“சார்! இப்ப ரெண்டு பாட்டிலில் வைத்து ரெடி பண்ணிட்டேன் !”

“சார்! அந்த மாட்டு லோன் பத்தி!”

“என்ன கணபதி! வந்ததிலிருந்து மாட்டு லோன் பத்தி நச்சரிக்கிறே! கமிஷன் வாங்கறியா? இல்ல பால் இலவசமா வருதா?”

“…………….”

“சார்! என் டிரான்ஸ்பர் பத்தி!”

“எளுது! பார்க்கலாம்” கார் கண்ணிலிருந்து மறைந்தது.

***

பன்னீர் மீண்டும் வந்தான்.

அந்தக் கிராமத்தின் கீழத்தெருவில் மாட்டு லோன் கொடுப்பதில் கணபதி ஆர்வமாக இருந்தார். ஆனால் அவர்களை சொசைட்டியில் சேர்க்க உள்ளூர் மேலத் தெரு பன்னாடிகள் இசையவில்லை. ஏன்? உஷ்! உங்களுக்கும் காரணம் தெரியும்! ஆனால் சொல்லக்கூடாது! சொசைட்டியில் மெம்பராக இல்லையென்றால், தொலை தூரம் சென்று பால் விற்பனை செய்ய இயலாது! வியாபாரம் செய்வது கடினம்! காலனியில் சொசைட்டி துவக்குவது அத்தனை சுலபமான காரியமாகத் தோன்றவில்லை.

இன்னும் சில நபர்கள் பன்னீரைப் போலவே கடன் கேட்டு வந்திருந்தனர். ஆனால் எல்லோருக்கும் “எளுதியிருக்கிறோம்!” என்பதுதான் பதில்.

அடுத்த பல நாட்களில், இன்னும் பலர் லோன் கேட்டு வந்து விட்டனர். கணபதியால் சரியான பதில் கொடுக்க முடியவில்லை.

கீழத் தெரு தலைவர் வந்தார்.

“ஐயா! நாங்க தீண்டத் தகாதவங்கதான்! எங்களுக்கு லோன் குடுக்காம பணக்காரனுக்கு மட்டும் பல்லிளிச்சு லோன் குடுக்கிறீங்கன்னு ஊர்ல பேசிக்கிறாங்க! மேல் சாதி மானேஜர் ஏதோ எதிர்பார்க்கிறார்னு வேற புரளி கிளப்பிவிட்டுடாங்க! இப்ப என்ன பண்ணலாம்? நாங்க போராட்டம் பண்ண பிளான் போட்டு வச்சிருக்கோம்! எங்க தலைவர் வாராரு! அடுத்த 15ஆம் தேதி.

இது முடிந்ததும் கீழத்தெருவில் மீட்டிங்க்!

“டேய் பன்னீரு! மேல் சாதி மானேஜர் உனக்கு எப்படிடா லோன் குடுப்பாரு?”

“அபாண்டமா பேசாதீங்க ஐயா! அவர் நல்லவரு. இருசுக்கு அவர்தானே லோன் குடுத்தாரு?”

“ஆமா! இருசு அவர் வீட்டு வேலைகளைச் செஞ்சு குடுக்கிறான்……..”

“நாம கொஞ்சம் திட்டமா நடக்கணும்டா!” தலைவர் முடித்தார்.

பன்னீரின் மனசில் விரிசல்! போராட்டம் ஒன்றுதான் வழியா?

“உனக்கு மட்டுமில்ல! இந்த அரிசன காலனியில எல்லாருக்கும் நான் லோன் இந்த ஆளு கையால வாங்கித் தர்ரேன் பாரு!” தலைவர் துரைக்கு கணபதியிடம் ‘காண்டு’ இருந்தது. ஒரு லோன் கட்டாமல் இருந்தபடியால் துரைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி, போலீஸைத் தலையிட வைத்துக் கட்ட வைத்தார்.

மறு நாள்!

முழுக் கீழத் தெருவும் வங்கியில் வாசலில்!

தலைவர் துரை எல்லாருக்கும் நடுவில் நடு நாயகமாக!

அனைவரும் கூச்சலிட்டனர் , “மானேஜரே! கடமையை செய்! சாதி பார்க்காதே! சதி செய்யாதே!” என்று.

சிலர் கைகளில் கற்கள், ஆயுதங்கள் இருந்ததாக காஷியர் சொல்ல கணபதிக்குப் பெரும் அதிர்ச்சி ஏற்படத் தொடங்கியது.

சற்று நேரத்திலேயே விஷயம் மோசமானது. ‘மானேஜர் சாதி பற்றி ப் பேசினார் என்று யாரோ சொல்ல, கூட்டத்திலிருந்து கற்கள் பறந்தன- வங்கியை நோக்கி!

“விஷயம் என் கையை மீறி விட்டது ஐயா! இன்னும் ஒரு வாரம் டைம்!…” துரை மானேஜரை எச்சரித்து நகர்ந்தான். கூட்டம் அவனைப் பின் தொடர்ந்தது.

அங்கே மண்டல அலுவலகத்திலிருந்து ரீஜனல் மானேஜர் சாமிநாதன்,

“உன்னைப் போட்டதே தப்பாப் போச்சு! திறமையாக நடக்கணும். எப்படியாவது நீதான் சமாளிக்கணும்! நீதானே மானேஜர்?” போனில் அமிலம் கலந்தார் மண்டல மேலாளர்.

“நீதான் சமாளிக்கணும்! முடியலன்னா போலீசைக் கூப்பிடு!” கணபதியின் காதுகளில் எதிரொலித்தது.

மீண்டும் போன் செய்தார் கணபதி.

“சார்! லோன் குடுத்திட்டா பிரச்சினை தீரும். குடுத்திடலாமா சார்?”

“ஏய்யா! எனக்கு பிராவிடண்டு பண்டு வராம இருக்கணும்னு வேண்டுதலா? பென்ஷனும் வராது! இந்த லோன் எல்லாம் NPA ஆவது நிச்சயம்தான். ஏதாவது பொய் சொல்லு! சாக்குப் போக்கு சொல்லு! எங்கிட்ட சொல்லற மாதிரி! போயி வேற வேலையைக் கவனிய்யா!”

போன் துண்டிக்கப் பட்டது.

ஒரு வாரம் கழித்து ஒரு நாள்…….

துரை உள்ளே வந்தான்- ஒரு சிலருடன்

அவர்கள் முகங்களில் நட்பு இல்லை!

“என்ன முடிவு சொல்றீங்க சார்?” துரை கேட்டான் அதிகாரமாக

“எட் ஆபீஸ் சொன்னாதான் குடுக்கலாம்” என்றார் கணபதி.

அதற்குள் கூட்டத்தின் சலசலப்பில் “மானேஜர் மசிய மாட்டார். கடன் இல்லையாம்!” என்று செய்தி ஒலிபரப்பானது!

“நமக்கில்லாத பாங்கு யாருக்கு வேணும்! கொளுத்துங்கடா பாங்கை!”

“மானேஜரை உள்ள வச்சுப் பூட்டுங்கடா”

சில நிமிடங்களில் வங்கி பூட்டப் பட்டதும், மானேஜர் உள்ளே காஷியருடன் மாட்டிக் கொண்டதும், வங்கியினுள் நெருப்புப் பந்தம் வீசப் பட்டதும், சினிமாவில் வரும் சீன் போல நடந்தேறின.

அதே நேரத்தில் தொலைவில் வந்து கொண்டிருந்த காரில் அமர்ந்திருந்த சாமிநாதனுக்கு ஒரு திடீர் எச்சரிக்கை தோன்றியது-மனதில்.

ஆபத்து! எங்கோ புகைகிறதே! என்று

“செல்வா! வண்டியைத் திருப்பு! அரிசி, இளநீ எடுக்க நாளைக்கு வரலாம்! ” என்று டிரைவருக்கு உத்தரவு இட்டார்.

அங்கே நிஜம்மாகவே புகை சூழத் தொடங்கியிருந்தது. கூட்டம் தீவிரமாகக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தது துரையின் அருகாமையில்.

பாங்க் எரிந்து கொண்டிருந்தது. உள்ளே அடைபட்ட மானேஜர், காஷியருடன்.

கார் நெடுஞ்சாலையை நோக்கி அவசரமாகத் திரும்பிக் கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *