எல்லைகள் அற்ற உலகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 18, 2015
பார்வையிட்டோர்: 6,553 
 
 

அது 1980ம் ஆண்டு, நாங்கள் வெளிநாடு போகவென்று அணியணியாகப் புறப்பட்டிருந்தோம். எந்த நாடென்ற இலக்கெல்லாமில்லை. எந்நாடு எங்களை அனுமதிக்கிறதோ அங்கே முகாமிடுவதென்பது உத்தேசம். ஐரோப்பா முழுவதும் அலைந்துழன்று அவ்வாண்டின் வசந்தத்தின்போது பெர்லினில் ஒதுங்கினோம். சோலைகளிலும் பூங்காக்களிலும் கடந்த இலையுதிர்காலத்தில் இலைகளை முற்றிலும் உதிர்த்துவிட்டு அலம்பல்விளாறுகள் மாதிரிச்சிலுப்பிக்கொண்டும் விடைத்துக்கொண்டும் நின்ற மரங்களும்; வானத்தை நோக்கித் துடைப்பக்குச்சிகள் மாதிரி நீட்டிக்கொண்டு நின்ற பைன், ஓக், தனன் வகையான மரங்களும் இனித்துளிர்க்கலாமா வேண்டாமாவென்று ஜெர்மனில் சிந்தித்துக்கொண்டு நின்றன. ‘குமாரப்பா மட்டும் ஒரு சின்னக்கைக்கோடாலியுடன் வந்திருந்தாரேயானல் (வேலணையில் மரக்காலை வைத்திருந்தவராம்) அத்தனை மரங்களையும் இந்நேரம் எல்லாம் பட்டுப்போய்ச்சென்று குறுக்காய்த்தறிச்சு அடுக்கியிருப்பார்’ என்றான் கூடவந்த ஒருவன்.

அப்போது சூழலின் வெப்பநிலை 10 இலிருந்து 15 வரைகள் செல்சியஸ்வரை இருந்திருக்கலாம். யாழ்ப்பாணத்தின் காங்கை வெய்யிலில் வெந்துவிட்டு விமானத்தில் ஏறிக்குந்திய எமக்குத் பெர்லினில் தரையிலிறங்கியதும் சில்லிட்டு வெட வெடத்தது. அப்போது ‘அதுதான் அவர்களின் வசந்தம்’ என்று யாரும் சூடம் கொழுத்திச் சத்தியம் செய்திருந்தாலுந்தான் நம்பியிருக்கமாட்டோம்.

நான் சிறுவனாயிருந்தபோது இலங்கையில் SHELL பெற்றோல் அடித்த ஸ்கூட்டர்கள் கடந்து செல்கையில் அதன் வாசனையை நுகரப்பிடிக்கும். கிழக்கு பெர்லினில் (Two Strokes Machines)கார்கள் கமழ்ந்து சென்றமணம் என்னை என் பால்யப்பருவத்துக்கு இழுத்துப்போயிற்று. காணுமிடமெங்கும் கார்களைத்தவிர முயல்களும் வெண்பழுப்புநிறத்தில் சிறுநரிகளும் Hedgehog/Igel எனப்படும் சிறியவின முள்ளெலிகளும் தம்பாட்டுக்குத் திரிந்து கொண்டிருந்தன. நகரத்தின் குறுக்கும் நெடுக்கும் குளிரால் தயங்கித்தயங்கி வழிந்துகொண்டிருந்த கால்வாய்களில் ஏராளம் வாத்துக்கள் வெள்ளை, சாம்பல், பிறவுண், கறுப்பு, நரைப்பச்சை இன்னும் கலவன் நிறங்களில் அமுக்கிக்கொண்டுபோய் குழம்புவைப்போரின் பயமில்லாமல் சுகம் சுகமென்று தம்பாட்டுக்கு மிதந்துகொண்டிருந்தன. கரிய உடலையும் சாம்பலை மருவிய வெள்ளைநிற இறக்கைகளையும் கொண்டிருந்த காகங்கள் எதுவும் கரையாமல் அவசரமெதுவுமின்றி தேமே எனத்தம்பாட்டுக்குச் சும்மா நின்றன. மற்றும்படி குயில்கள் கூவவோ, மயில்கள் மருவவோ காணோம்.

விடுதலை ராணுவத்தினர் (இது எங்களை நாங்களே சொல்லிக்கொண்டது) எம்முள் அநேகமானோர் கிடைத்த ஹொட்டல்களில் உடலோடு தலையையும் சேர்த்து மூடிப்போர்த்துக் குறண்டிக்கொண்டு கோடை வரட்டும், வேலைதேடலாம் என்று படுத்திருந்தோம். ஜெர்மன்மொழியும் துண்டறப்பிடிபடாமல் ஐஸைவிட வழுக்கி எமக்குப்போக்குக் காட்டிக்கொண்டிருந்தாலும் ‘Guten Tag’ , ‘Auf wiedersehen’ என்பனவற்றுடன் ‘ஒரு பாக்கெட் பாண் வேணும்’, ‘உருளைக்கிழங்கு சிப்ஸ் பிற்றே’, ‘ ஒரு பால்ப்பெட்டி பிற்றே’, ‘ஒரு டிக்கெற் பிற்றே’ போலான பத்துவசனங்களும், சில கெட்டவார்த்தைகளும் கதைக்கக் கற்றுக்கொண்டோம். போர்வையை தூரவீசிவிட்டுத் தீமிதிக்க துணிந்தவர்கள்போலும் குளிரைப் பொருட்படுத்தாமல் வீதியில் இறங்கி வேலை தேடியவர்களில் ஒரு சிலருக்கு சிறிய சிறிய வேலைகள் ஆங்காங்கே கிடைத்திருந்தமை ஏனையோருக்கும் நம்பிக்கையூட்டுவதாக இருந்தது. சிலர் பிட்ஷா தட்டினர், சிலர் வெதுப்பகங்களில் கோதுமைமா பிசைந்தனர். உணவகம் ஒன்றில் ‘சலாட்’ போடும் வாய்ப்புக்கிடைத்த ஒருவர் தான் தான் அங்கே Kitchen Superviser என்றார். Renault கார்கொம்பனி ஒன்றில் கார் சேர்விஸ் பண்ணி பொலிஷ்போடும் வேலைகிடைத்த ஒருவர் தான் தான் அங்கே Chief’s Office Assistant என்றார். உண்மையில் அப்படியான பணிகள் அங்கிருந்தனவா என்பதுகூட அப்போது நமக்குத்தெரியாது.

கோடைகாலம் பிறக்கவும் ஒருநாள் ‘இன்றுதொடக்கம் புதிதாக வந்த Auslander (விதேசிகள்), மற்றும் பொருளாதார அகதிகள் எவரும் வேலைகள் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள்’ என ஜெர்மன் அரசு பட்டவர்த்தனமாக அறிவித்தது. விதிவிலக்காக ஒரு உபவிதியும் செய்யப்பட்டிருந்தது அஃது:- ‘ இவர்கள் (ஜெர்மன்காரர் செய்ய விரும்பாத) கோப்பைகழுவுதல் , அதிகாலையில் ஒரு மணிக்கு வீடுகளுக்குச் செய்திப்பத்திரிகைகள் விநியோகித்தல் போன்ற சிலவற்றைச் செய்யலாம்’ என்பதாகும்.

நூறு வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட மின்தூக்கி வசதிகள் இல்லாத பழைய வீடுகளைக்கொண்ட குடியிருப்புக்களில் பத்திரிகை விநியோகிக்கும் பணிசெய்வது துன்பம். சிலவேளைகளில் பத்திரிகைவண்டியை தள்ளிக் கொண்டுபோய் வீட்டின்வாசலில் நிறுத்திவிட்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிலோ தேறக்கூடிய இரண்டு மூன்று சாவிக்கொத்துகளையும், நூறுபக்கமுள்ள பேப்பரையும் காவிக்கொண்டு நாலு அல்லது ஐந்துமாடிகள்வரை ஏறிப்போய் ஒரேயொரு பேப்பரை மட்டும் போட்டுவிட்டு இறங்கவேண்டியிருக்கும். சாவிக்கொத்தை வண்டிக்குள் போட்டுவிட்டும் போகமுடியாது. யாராவது தத்தாரிகளின் கண்ணில் பட்டுவிட்டால் எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள். அல்லது பேப்பர்வண்டியைத் தள்ளிக்கொண்டுபோய் எங்கேயாவது ஒரு புதருக்குள் சொருகிவிட்டுப் போய்விடுவார்கள். பத்திரிகை விநியோகப்பணி முடிந்து வந்துபடுத்தால் கால்கள் ‘விண்விண்’ணென்று உளைந்துகுத்தும், தூக்கம்வராது.

கொஞ்சம் ‘வொட்கா’வின் உதவியுடன் கால்களின் உளைவு குத்தையும் மீறி எப்படியோ நீங்கள் தூங்க முயலுகையில் உங்கள் மூத்தசகோதரியின் மாப்பிள்ளையின் தங்கச்சியின் புருஷனின் சகோதரனின் சகலன் போன்செய்து ” புனிதா குந்திவிட்டாள் சடங்குகள் செய்யவேணும் மினைக் கெடுத்தாமல் ஒரு இரண்டு (லட்ஷம்) ரூபா அனுப்பிவிடு என்ன” என்று எழுப்பித் திடுக்கிடுத்துகையில் உங்கள் முழங்கால் மூட்டுக்கள் தேய்ந்து கிறீச்சிட ஆரம்பித்திருக்கும். பத்திரிகை வேலையின் தாற்பரியம் முழுவதும் தெரியாமல் இளமை தரும் உசாரில் என்ன வேலையென்றாலும் பரவாயில்லையென்று நம்மவர் குளிரில் முகமும், காதுச் சோணைகளும் சிவக்க பத்திரிகைகள் விநியோகிக்கும் அலுவலகங்கள் எல்லாவற்றுக்கும் போய்ப்போய் தினமும் நூற்றுக்கணக்கில் முற்றுகையிட்டு நிற்கையில் ஆரம்பத்தில் அங்குள்ளவர்கள் எம் ஆர்வக்கோளாற்றை அதிசயித்துப் பார்த்தாலும் பின்னர் சினந்தும் விழுந்தார்கள்.

கண்களைச்சுழற்றித் திருமண்ணை இட்டுக்கொண்டோ கொள்ளாமலோ ” நாலு வர்ணங்களையும் படைத்தவன் அவனே என்பதையொப்பும் எம் வருணாச்சிரம தர்மத்தின் இறுதி இணைப்பாய் பறையனாக சிங்களவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு தமிழனைத் திட்டுவதற்கு இன்னும் சிங்களவர் “பறத் தெமிளோ” என்னும் சீர்த்தொடரைக் கூறுவதை இலங்காபுரியில் கேட்கலாம். இன்னும் மாணிக்கதுவீபத்தில் அதன் தமிழ்ப்பகுதியோ , சிங்களப்பிரதேசமோ எந்தவொரு நகரமோ கிராமமோ அங்கே மலங்காவி அல்லது பொதுக்கழிப்பறைபேணும் உஸ்த்தியோகம் தவறாமல் ஒரு தமிழ்ப்பறையனுக்கோ அருந்ததியனுக்கோதான் வழங்கிக்கௌரவம் செய்திருப்பார்கள். இங்கும் முப்பது வருஷங்களாக அதிகாலையில் பெர்லினின் எந்தப் பகுதியையாவது ஒரு ரவுண்ட் வந்தீகளாயின் அங்கே எம் சாதிக்கொழுந்தொன்று வண்டியிலோ மிதியுந்திலோ பத்திரிகை விநியோகித்துக்கொண்டிருப்பதைக் கண்டேகலாம். அதாவது அஃது நம்மவர்களுக்கேயான தொழில் என்றாகிப்போனது.

” இதெல்லாம் வெளிநாட்டுக்காரரை வெளியேற்றுவதற்கான முதற்படி, இன்னும் அறமிஞ்சிப்போனா……..ஒரு ஆறுமாதம். அதுக்கிடையில எப்படியும் எல்லாரையும் ‘பாக்’ பண்ணி அனுப்பிவிடுவார்கள்” என்றெல்லாம் நம்மவர்கள் மனப்பிராந்தியில் வதந்திகளை தமக்குத்தோன்றியவாறு ‘ஜெனறேட்’ செய்தும் பரவவிட்டுக்கொண்டுமிருந்தனர்.

பெர்லினில் Pension கள் என்று சொல்லப்படும் Domitry ஹொட்டல்களாக ஒரு முப்பது முப்பத்தைந்தைக் கண்டுபிடித்து அவற்றில் ஏறத்தாழ ஆயிரத்திஐந்நூறு பங்களாதேஷ், பாகிஸ்தானி, தமிழீழஅகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்தோம். சில ஹொட்டல்களில் மாத்திரம் சமைப்பதற்குக் கண்டிப்பாக அனுமதி இருந்திருக்கவில்லை. அவர்கள் தரும் குலாஷ் சூப்புடனும், சலாட்டுடனும், பாணுடனும் காலத்தைக் கழிக்கவேண்டும். இத்தாலியினூடு தரைமார்க்கமாய் வந்துசேர்ந்திருந்த ஒருவர் மட்டும் “உந்த சூப் நான் மிலானில சாப்பிட்டனான்….. உதங்கே குதிரை இறைச்சியிலதான் காய்ச்சிறது” என்று சொல்லித்தேமேயென்று சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களையும் அருக்குழித்து வாந்தியெடுக்க வைத்துக்கொண்டிருந்தார். எங்களில் சிலருக்கு BLUMESHOF எனும் செஞ்சிலுவைச்சங்க ஹொட்டல் ஒன்றே தந்திருந்தார்கள் அங்கே சமைக்க அனுமதிகண்டிப்பாகக் கிடையாது. ஏனைய அறைகளில் எல்லோரும் தூங்கியபிறகு நாங்கள் கட்டிலுக்குக் கீழே ஒளித்துவைத்திருக்கும் லுண்டாவில் (A Floor market for secondhand items) வாங்கிய வெந்நீர் கொதிக்கவைக்கும் Water Cooker ஐ இரகசியமாக எடுத்து அதனுள் அரிசி, பருப்பு , உருளைக்கிழங்கு , வெங்காயம், உப்பு , மிளகுத்தூள் எல்லாவற்றையும் கலந்து இட்டு ஒரே அவியலாக அவித்துச்சாப்பிட்டுவிட்டு குக்கரையும் கட்டிலுக்குக் கீழேதள்ளிவிட்டுத் சிவமேயென்று படுத்தோம். எல்லாத்துக்குந்தான் ஜெர்மன்காரர்களைச் சும்மா அநியாயம் சொல்லக்கூடாது, சில ஹொட்டல்களில் நாமே சமையல் செய்துகொள்ளத் தாராளவசதி செய்யப்பட்டிருந்தது. சமையல் பொருட்களுக்கான பணமும் தராளமாகவே கொடுத்தார்கள். இருந்த இரண்டொரு பாகிஸ்தானிய/இந்தியர்களின் கடைகளில் செத்தல்மிளகாய், மிளகாய்த்தூள் ,கொத்துமல்லி, நற்சீரகம், அப்பளம், நெய்த்தலியும், தயிர், புளி, தொன்கணக்கில் விலைப்படத்தொடங்க அவர்கள் மேன்மேலும் கிளைகளை விஸ்தரித்துக்கொண்டார்கள்.

பெர்லினில் இருந்த ஈழஅகதிகளுள் அனலை தீவு , அல்லைப்பிட்டி, மண்டதீவு, கரம்பன் ஆட்கள்தான் வீதாசாரத்தில் அதிகம்பேர் இருந்தனர். ஒவ்வொரு அகதியும் தமக்கு ஏன் அரசியல் தஞ்சம் தரவேண்டும் என்பதை விளக்கி ஒரு ‘கேஸ்’ எழுதிக்கொடுக்க வேண்டும். அனலைதீவுவாசிகள் எழுதிக்கொடுத்த ‘கேஸ்’களில் அனேகமாக ஒவ்வொருவரும் தான்தான் ‘அனலைதீவு Tamils United Liberation Front கிளையின் செக்கிரட்டரி’ என்று தவறாமல் எழுதினார்கள். அவர்கள் கேஸ்களைப் பெற்றுக்கொண்ட சட்டத்தரணிகள் இலங்கை குட்டித்தீவுக்குள் ஒரு குட்டிக்கட்சி அதற்கு தீவுக்குள் தீவான அனலைதீவில் மாத்திரம் 200 வரையில் கிளைகள் இருப்பது அறிந்து அதிசயித்தாலும் அவர்களுக்கு அனைத்து TULF இன் கிளைகளிலும் தலைவர்கள், அமைப்பாளர்கள், பொருளாளர்கள், மற்றும் கட்சியின் அங்கத்தவர்கள் எல்லாம் அங்கேயே இருக்க இந்த செக்கிரட்டரிகள் மட்டும் உதறிக்கொண்டு வெளியேற நேர்ந்ததின் சூக்குமம் இன்றுவரை புரியவே புரியாது.

மாலையானதும் ஒவ்வொரு ஹொட்டலிலிருந்தும் மற்ற ஹொட்டல்களுக்கு சனம் கூட்டங்கூட்டமாக விஜயம் செய்யும்.

குறிப்பாய் சமைக்க அனுமதியில்லாத ஹொட்டல் சனம் விசாவழங்கும் அலுவலகத்தில் நின்ற கியூவிலயோ, சமூக உதவிகள் அலுவலக கியூவிலயோ பழக்கம் பிடிச்ச சனமிருக்கிற ஹொட்டல்களுக்கு அணுக்கமாய் யாரும் ஒருவாய் சோறு தரமாட்டனோவென்ற நப்பாசையில் பியர்ப்போத்திலும் கையுமாய் சுழலும். எங்கேயோ எப்பிடியோ சாப்பாடானதும்

” பிராங்பேட்டில பதினெட்டுப்பேர் டிப்போட்டாம்”

” ஹைல்புறோணிலயிருந்து முப்பத்திமூண்டாம் ” என்பதுபோன்ற அமங்கலச்செய்திகளைக் கொண்டுவந்து சேர்க்கும்.

‘டிப்போட்டுகள்’ தவிர காணும் தமிழரிடையே வேறு கதைகளே இருக்கவில்லை.

இன்னும் துட்டும் துணிச்சலுமிருந்த சிலசனம் பரம இரகசியமாக பிரான்சில் புதுச்சேரிக்காரரிடமும், சூரினாம்காரரிடமும் கடவுச்சீட்டுக்களைக் காசுகொடுத்து வாங்கித்தலைகளை மாற்றி ஒட்டிக்கொண்டு கனடா, அமெரிக்கா, அலாஸ்காவெனக் கண்டந்தாவினர். மெய்யாலும் எம்மையுந்திருப்பி அனுப்பிவிடுவார்களோ என்கிற பயம் லேசாக தொற்றிக்கொள்ள மனம் விச்ராந்தியாகி மிதியுந்தில் ஃப்றீ-வீலில் மிதிக்காமலே போவது போல பிடிப்பெதுவுமின்றி உழலத்தொடங்கியது.

ஒரு சனிக்கிழமை சரி ‘லுண்டா’வுக்காவது போய்வரலாமென்று U- Bahn (சுரங்கரயில்) ல் ஏறினேன். அதிலும் அன்று சற்றே நெரிசலாக இருந்தது. ஒரு தரிப்பில் ஒரு இடம் காலியாக அதற்கு ஓடினால் இன்னொரு ஜெர்மன் இளைஞனும் அதுக்கே ஓடிவருகிறான். என் இயல்பான பின்னடிக்கும் சுபாவத்தால் அவ்வாசனத்தை அவனுக்கே விட்டுக்கொடுக்கவும் அவனோ உட்காராமல் தெளிவான ஆங்கிலத்தில்

” Hi……….Comrade! Why do you offer me the seat? ” என்றான்.

எனக்கு அப்படித்தான் அப்போது வாயில் வந்தது. “It’s your Train No……….So it’s your Seat!” என்றேன்.

” Who says so ? ”

” Please Enjoy your priority ”

” Oh…..No! It’s a silly idea………….You are totally mistaken.Personally I feel that the whole Universe materials belong to everyone in the Universe and everyone has the equal right on them, I come from such a School. Your attitude causes me a terrible pain!” என்றான்.

எங்கள் சம்வாதம் ஒரு முடிவுக்கு வரமுதலே இடையில் ஒரு அகலமான பெண்மணிவந்து அவ்விடத்தில் வசதியாக அமர்ந்துகொண்டு கால்களை ஆட்டவுந்தொடங்கியிருந்தார்.

” Okay, that’s a good doctrine indeed, but who will appreciate it ?” என்றேன்.

” Let’s change a Ten …….. who will change a Hundred and they will do a Thousand…… likewise a Million soon!” என்றவனுடைய ஸ்டேசன் அதற்குள் வந்துவிடுகிறது. இறங்கிப்போகும்போது தன் விசிடிங்காட்டை என்னிடம் நீட்டினான். அதில் அவன் பெயர் விபரங்களைத் தவிர

* BREAD FOR THE WORLD *

* LET US CREATE A WORLD WITHOUT BARRIERS *

என்று ஆங்கிலத்திலும் இன்னும் பல வாசகங்கள் ஜெர்மனிலும் அச்சிட்டிருந்தன.

மஹாவம்சவாரிதி அநகாரிக தர்மபாலா போன்ற சில சரித்திராசிரியர்கள் திரித்துவைத்த இலங்கையின் சரித்திரத்தை சந்திரிகா விஜேகுமாரதுங்க படித்திருந்தாலும் அப்போது அவர் தென்னாபிரிக்காவுக்குச் சென்று ‘இலங்கையில் தமிழர்கள் வந்தேறுகுடிகள்’ என்றெல்லாம் பேசியிருக்கவில்லை.

அவன் போன திசையைப் பார்த்துக்கொண்டிருந்தேன் வெகுநேரம்.

– வார்த்தை (டிசம்பர் 2007.)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *