என்னை அறிந்த போது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 27, 2023
பார்வையிட்டோர்: 1,370 
 

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கவின் தேனீரை குடிப்பா! 

தயாள் அண்ணா என்னை எழுப்பிய போது நான் திடுக்கிட்டு எழுந்தேன். மணி ஆறைத் தாண்டும் முன் என்னை எழுப்பினால் நேரத்துக்கு வேலைக்கு போகலாம் என்பது அவருக்குத்தெரியும். ஏனெனில் கொஞ்சம் சுணங்கினாலும் எங்கள் மேலதிகாரி வசிட்டராகி விடுவார். ஏதோ என்னுடைய செலவுகளை கொஞ்சமாவது சமாளித்துக் கொள்ளவும் ஆத்திர அவசரமென்றால் லீவு போட்டுவிட்டு போவதற்கும் சுதந்திரம் உண்டு. அதனால் வேறு வேலைகளுக்கு போக நினைத்தாலும் இவற்றை நினைத்து மௌனியாகி விடுவேன்.

தயாள் அண்ணா ஊற்றித் தந்த தேனீரை வைத்துக் கொண்டு மிக்ஷர், பிஸ்கட் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தேன். முடிந்து போயிருந்தது. வீட்டில் அப்பா ஏதாவது வாங்கி வைத்திருப்பார். எனக்கு யோகட், ஆப்பிள் இப்படி ஏதாவது சாப்பிடுவது பிடிக்கும்.

என்றாலும் நான் வீண் செலவுகளை செய்வதில்லை என்றபடியால் எதைக் கேட்டாலும் வசதி இருந்தால் தயாள் அண்ணா வாங்கித் தராமல் இருக்கமாட்டார். இந்த இடத்தில் இன்னொரு சம்பவமும் ஞாபகத்துக்கு வருகிறது. அன்றும் ஒரு நாள் அப்படித்தான். நான் ஏ.எல் செய்து கொண்டிருந்த காலமது. அவசரத்தில் சீசன் டிக்கட்டை எடுக்காமல் போய்விட்டேன். எனவே மீண்டும் வீட்டுக்குப்போய் அப்பாவிடம் காசு இருபது ரூபாயும் கேட்க வேண்டும் என்று எண்ணியவாறு வந்து கொண்டிருந்தேன். வீட்டு வாசலை நெருங்கும் போது… 

‘அண்ணனைப் பாரு எப்பவாச்சும் காசு கேட்கிறானா… நீயும் வந்து வாச்சிருக்கியே’ என்று தம்பிக்கு அப்பா அர்ச்சனை செய்துகொண்டிருந்தார். நான் வந்த சுவடு கூட தெரியாமல் நழுவிப் போய்விட்டேன். 

எனக்கொன்றும் பெரிய வயதில்லை. தயாள் அண்ணா இருக்கும் தைரியத்தில்தான் அம்மா என்னை தலைநகருக்கு அனுப்பியுள்ளார். ஆம் தயாள் அண்ணா இப்போது என் இலக்கிய நண்பன் மட்டுமல்ல. அறை நண்பனும் கூட. அவர் தற்போது தனியார் கம்பனியொன்றில் கணக்காளராக பணிபுரிகிறார். 

கவின் என்ன எழுதுகிறாய்? என்று என் பாடசாலை நண்பனொருவன் கேட்ட போது நான் எழுதியிருந்ததை அவனிடம் கொடுத்தேன். அது பாடல் வரிகளையும் உள்ளடக்கிய எனது கற்பனை. அதற்கு சிறியதொரு அங்கீகாரம் கூட கிடைக்கவில்லை. மாறாக அவன் மற்றவர்களுக்கும் அதைக்காட்டி என்னை ஏளனம் செய்தான். (தற்போது என் கவிதைகளை பத்திரிகைகளில் பார்ப்பதும் அவனுடைய நண்பர்களிடம் என்னுடைய நண்பனென தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதும் வேறு கதை) 

எனினும் நான் என் முயற்சிகளை நிறுத்தவில்லை. சில நாட்களில் என் வரிகளை பார்த்துவிட்டு பெரிய கவிஞர்களின் வரிகளை ‘காப்பி’ பண்ணியிருக்கிறான் என்பார்கள். அப்போதெல்லாம் ஆஹா அந்தளவிற்கு நன்றாகயிருக்கிறதா என்று மனசுக்குள் சிரித்துக் கொள்வேன். 

நான் வாசிப்பில் அதிக ஆர்வம் கொண்டவன் என்று அம்மாவும் கூறுவார். தரம் மூன்றிலிருந்த போதே என் பெற்றோர் பல கதைப் புத்தகங்களை வாங்கித் தந்திருக்கிறார்கள். தரம் ஆறு வரைக்கும் பல போட்டிகளிலும் கலந்து கொண்டிருந்தேன். ஆனால் என்னை அடிக்கடி பாடசாலை மாற்றியதால் ஏதோ ஒரு தாழ்வு மனப்பான்மை என்னை வறுத்தெடுத்து செயலிழக்கச் செய்தது. இப்படி நாம் ஊர் விட்டு ஊர் செல்லக் காரணம் அம்மாவின் இடமாற்றம் என்பதை விட எங்கள் அப்பாவின் சகோதரர்களுடன் ஏற்பட்டிருந்த வாக்குவாதம் என்று பின்னாட்களில் அறிந்தேன். 

என் சிறு பராயத்தில் எல்லாம் முதல் ஐந்து நிலைகளுக்குள் வந்த நான் மற்ற பாடசாலைகளில் ஒன்பதுக்கும் பிற்பட்ட ஸ்தானத்துக்கு வந்தபோது முழங்கால்களுக்கிடையில் முகம் புதைத்து யாருக்கும் தெரியாமல் அழுதிருக்கிறேன். 

அம்மாவைத் தவிர அனைவரும் என்னை குறைத்து மதிப்பிடும் போதெல்லாம் எனக்கென்று அன்பு காட்ட யாராவது இருந்தால்… என்றெண்ணியெல்லாம் உள்ளுக்குள் மருகியிருக்கிறேன். 

ஏதோ வாழ்க்கையை கடந்து கொண்டிருந்த போது என் வகுப்பு நண்பர்களுக்கும் உயர் வகுப்பு அண்ணாமார்களுக்கும் இடையில் பாடசாலையில் சண்டை நடந்தது. ஆனாலும் அதில் கொஞ்சமும் சம்பந்தப்படாத நானும் அம்மாவின் முன்னாலேயே அதிபரால் தண்டிக்கப்பட்டபோது வாழ்க்கை மீதிருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் இல்லாமல் போயிற்று. அம்மாவின் முகம் பார்க்க முடியாதளவுக்கு வேதனையாயிருந்தது. அதற்கான காரண கர்த்தாக்கள் சில ஆசிரியர்களே என்றபோது அதிர்ச்சியடைந்தேன். அவர்கள் எமது முன்னேற்றத்தில் பொறாமை கொண்டவர்கள் என்றும் உதட்டில் தேனும் நெஞ்சில் விஷமுடனும் பேசுபவர்கள் என்று சொல்லி அம்மா என்னை தேற்றினார். 

எப்படியோ புதிய பாடசாலையில் இருந்த மூன்று வருடங்களும் படிக்க முடியாதவர்களுடனேயே நட்புகொள்ள முடிந்தது. கெட்டிக்காரப் பிள்ளைகள் ஒரு ஆசிரியையின் மகன் என்றுகூட எண்ணாமல் என்னை ஒதுக்கியது ரொம்பவும் வருத்தமாயிருந்தது. பிறகு நான் சாதாரண தரப் பரீட்சைக்கு தயாராகியிருந்ததால் என் சுட்டித் தனங்கள் யாவும் தற்காலிகமாக விடை பெற்றோடின. பின்னே? என் குடும்பத்தார் யாவரும் படித்து பெரியவர்களாயிருக்கும் போது நான் மட்டும் இப்படியே இருப்பதா என்ற சவாலுடன் பரீட்சைக்கு என்னை தயார்படுத்திக் கொண்டிருந்தேன். என் தாயும், தந்தையும், சகோதரர்களும் எனக்கு பேருதவியாய் இருந்தார்கள். 

இந்த நேரம் பார்த்துத்தான் அந்த சந்தோஷமானதும் சங்கடமானதுமான செய்தியை என் சின்னம்மா என்னிடம் கூறினார். என் தங்கை பருவமடைந்திருந்தாள். ஒருவாறு மற்ற அனைத்து அத்தை பெரியம்மாமாருக்கும் சாடைமாடையாக விஷயத்தைச் சொல்லி வீட்டுக்கு வருமாறு கூறினேன். 

பின்பு நான் உயர்தரத்துக்கும் தெரிவாகியிருந்ததுடன் அறநெறி பாடசாலையில் ஆசிரியனாகவும் கடமையாற்றிக் கொண்டிருந்தேன். இடைப்பட்ட இந்த காலத்திலேயே என் வாழ்வின் திருப்புமுனை ஏற்பட்டதென்று சொல்ல வேண்டும். மனதில் தோன்றிய அத்தனையையும் கவிதைகளாக மொழி பெயர்த்தேன். அவற்றை பத்திரிகைகளுக்கும் அனுப்புமாறு அம்மா சொன்னார். நன்றாய் இருந்திருக்க வேண்டும். மாதமொன்று செல்லு முன்பே பிரசுரமாகியிருந்தது. 

எத்தனை மகிழ்ச்சி! எத்தனை கூச்சல்!! இதையெல்லாம் காட்டிய பின்பு ‘இங்க பாருடா கழுதை கவிதை எழுதுது’ என்று என்னை கேவலப்படுத்திய நண்பன், தன் காதலிக்கு கொடுப்பதற்காக என்னிடம் கவிதை எழுதி கேட்கத் தொடங்கினான். நான் பெருமைப்பட்டுக் கொள்ளவில்லை. அவன் அசடு வழிந்தான். எனினும் மென்மேலும் என் திறமையை வளர்க்கும் முயற்சிக்கு உத்தரவாதங்கள் இருக்கவில்லை. எப்படி எழுதுவது, எதில் எழுதுவது என்று தெரியாமல் அவஸ்தை பட்டிருக்கிறேன். அப்படியிருக்கையில் ‘கவின் உனக்கொரு கடிதம் வந்திருக்கு’ என்று அம்மா கூறினார். 

முக்கியமானதொரு விடயத்தைக் கூற மறந்துவிட்டேன். உயர்தர வகுப்பில் இருந்த காலத்தில் சின்னதாய் ஒரு காதல் அரும்பியது. ஆனால் அவளுக்கு அப்படியிருந்திருக்காது. என்னைப் பார்த்து ஒரு நாளாவது வெட்கப்பட்டதில்லை. நகம் கடித்ததில்லை. நிலத்தில் கால் விரலால் கோலம் போட்டதுமில்லை. எனவே நட்பு ரீதியாகவேனும் கடிதம் போடுவதென்றால் எனக்கு அவளைத்தவிர யாரும் இருக்கவில்லை. அவளே இல்லை என்று ஆன பிறகு இப்போது யாராக இருக்கும்? என்று கலவரமடைந்தேன். கடிதத்தை வாசிக்க வாசிக்க கலக்கமும் சந்தோஷமும் ஒன்றாக உற்பத்தியானது. சாராம்சம் இதுதான். 

நான் தயாள். எழுத்தாளன். 

உங்கள் கவிதைகளின் தரம்பற்றி என் நண்பன் கூற கேட்டேன். கருத்துக்களை பரிமாறிக் கொள்ளலாம். தொடர்பு கொள்க. 

– தயாள். 

ஓரிரு மாதங்களுக்குள் என் படைப்புகளுக்கு கிடைத்த அங்கீகாரமா? அல்லது வேறு யாருடைய கவிதை வரிகளாவது தெரியாமல் என் கவிதைகளில் உள்ளடக்கப்பட்டு விட்டதா என்ற பயம் என்னைத் தின்றது. தயங்கிய படியே கோல் பண்ணிய போது தயாள் அண்ணா மிக அன்புடன் கதைத்தார். என் கவிதைகள் பற்றி சிலாகித்து பேசினார். நன்றாக எழுதுவதாக சொன்னார். என் நண்பர்களுடன் அவரை ஒப்பிட்டு வியந்தேன். 

நாட்கள் செல்லச் செல்ல நானும் தயாள் அண்ணாவும் மரியாதை எனும் போர்வையிலிருந்து விலகி அன்பென்ற பந்தலுக்குள் இணைந்து கொண்டோம். நீண்ட ஒரு விடுமுறையின் போது தயாள் அண்ணா எங்கள் வீட்டுக்கு வந்து தங்கியிருந்தபோதே இலக்கியத்தின் சுவை உணர்ந்து அதையே மூச்சாக எண்ணி செயல்பட்டேன் நான். இதைப் பார்த்து இலக்கியம் சோறு போடுமா என்று என்னை பரிகசித்தவர்களும் இருக்கிறார்கள். எனினும் என் இலக்கிய வேட்கைக்கு நல்ல பதிலை தயாள் அண்ணா தந்துகொண்டிருந்தார். அவர் தலை நகரில் வீடெடுத்தவுடனேயே என்னையும் அழைத்துக்கொண்டார். 

இங்கு வந்த பிறகுதான் நான் புதிய உலகமொன்றை கண்டு கொண்டேன். இலக்கியத்தின் நுணுக்கங்களை கற்றுத்தந்தார். என் சிறுசிறு குறைகளை சீர்படுத்தினார். எதிர்மாறான எண்ணங்களிலும் பல சிக்கல்களிலும் துவண்டிருந்த என்னை உற்சாகப்படுத்தினார். ‘என் நண்பன் துணிச்சல்காரன்’ என்று சொல்லி என்னைப் பாராட்டினார். 

தலை நகரில் நடக்கின்ற பல இலக்கிய விழாக்களையும் நான் தரிசிக்கக் காரணம் அவரே. பிரபலமான எழுத்தாளர்களும், ஊடகவியலாளர்களும் என்னுடனும் பேசும்போது எனக்கு எவ்வளவு சந்தோஷமாயிருந்தது தெரியுமா? என் குடும்பத்தார்கூட மிகவும் மகிழ்ச்சியடைந்தார்களே. 

தற்போது நானும் ஒரு அறியப்பட்ட எழுத்தாளன். முழுக்காரணமும் என் தயாள் அண்ணாதான். அவருடைய மேலீடு இல்லாமல் என்னால் எதையும் சாதிக்க முடியாது. நான் அவரை மிக மதிக்கிறேன். நேசிக்கின்றேன்!!!

– வைகறை (சிறுகதைகள்), முதல் பதிப்பு: நவம்பர் 2012, இலங்கை முற்போக்கு காலை இலக்கிய மன்றம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *