சிட்டுக்குருவி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 27, 2023
பார்வையிட்டோர்: 1,451 
 
 

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ரவீனா உயர்தரத்துக்கு தெரிவாகியிருந்த போது அதே வகுப்பில் படிப்பதற்காக தூர கிராமத்துலிருந்து வந்திருந்தாள் ஷியாமளா. வந்த புதிதில் யாருடனும் பெரிதாக ஒட்டிக் கொள்வதில்லை. தானும் தன் படிப்பும் என்றிருப்பாள். பாடசாலை இடைவேளை நேரத்தில்கூட யாருடனும் கலந்து கொள்வதில்லை. இவளுடைய இந்தப் போக்கு ரவீனாவுக்கு கவலையை ஏற்படுத்தியது. எனவே அவளே வலிய சென்று ஷியாமளாவுடன் பேச்சுக்கொடுத்தாள். 

ஷியாமளாவுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. புதிய பாடசாலைக்குப் போனால் அங்குள்ளவர்கள் முதலில் கதைத்தால் தானே சந்தோஷமாக இருக்கும். அந்த சந்தோஷத்தை ரவீனாவின் நட்பில் உணர்ந்தாள் ஷியாமளா. ஒவ்வொரு நாளும் சோகத்துடனேயே பாடசாலைக்கு வருவதில் உள்ள கஷ்டத்தை 

உள்ள கஷ்டத்தை ஷியாமளா சொல்லாமலேயே ரவீனா புரிந்து கொண்டாள். ஷியா பிரிதொரு விடுதியிலிருந்தே பாடசாலைக்கு வருவதாய் ரவீனா எண்ணியிருந்தாள். 

‘ஏன் ஷியா இங்க உங்கட சொந்தக்காரங்க யாரும் இல்லயா?’ 

ரவீனாவின் இந்தக் கேள்வி ஷியாவுக்கு உள்ளூர வருத்தத்தை ஏற்படுத்தியது. ஷியாமளா விழித்தாள். விடை சொல்ல முடியாமல் தவித்தாள். ஷியாவின் மௌனம் யாரும் இல்லை என்பதற்கு அறிகுறியாக இருக்கலாம். அல்லது இருப்பவர்கள் பெரிய வசதிக்காரராய் இருந்து அவள் அங்கே தங்குவது பிடிக்காதவர்களாயிருக்கலாம். அதை ரவீனா ஊகித்துக்கொண்டாள். 


ஷியாவுடைய பெரியம்மாவின் மகளான அபி டீச்சர் இந்தப் பிரபலமான பாடசாலையில்தான் தமிழ் மொழி விசேட ஆசிரியராக கடமையாற்றிக் கொண்டிருந்தார். பாடசாலையில் அவருக்கு செல்வாக்கு அதிகம் என்று அவரே சொல்லித்தான் தெரியும். ஷியாவை எப்படியாவது அந்த பாடசாலையில் சேர்த்து படிக்க வைக்க பேரவா கொண்டார்கள் ஷியாவின் பெற்றோர். தனது சகோதரியின் மகள் தனது மகளுக்கு உதவுவாள் என்ற நம்பிக்கை ஷியாவின் தாயாருக்கு இருந்தது. 

அதே போல் தங்கள் வீட்டில் வந்து ஷியாவை தங்கியிருக்குமாறும் டியூஷன் வகுப்பு தேடித்தருவதாயும் அபி டீச்சர் சொன்னதால் அவர் தனக்கு பக்கபலமாக நின்று உதவுவாள் என்று ஷியாவும் எண்ணினாள். ஆனால் அவையெல்லாம் வெறும் பித்தலாட்டங்கள் என்று பிறகே தெரிந்தது. 

அம்மா அப்பாவின் ஆசைப்படி நன்றாக படிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் மட்டுமே ஷியாவின் மனதில் படிந்திருந்தது. கிராமத்து பாடசாலையில் இருந்த உயிர்த்தோழிகளை மறந்தது, பசி தாகம் பாராமல் பொறுமையாக இருந்தது எல்லாம் லட்சியங்களை நனவாக்கிக் கொள்ளத்தானே. 

ஆனால் அந்த அபி டீச்சருக்கு பாடசாலையில் செல்வாக்கு இருந்ததே ஒழிய அவர் சொல்வாக்கில் தவறியவராகவே இருந்தார். தெரியாத இடத்தில் விடுதி தேடிப்போகுமாறு அடிக்கடி ஷியாவுக்கு கட்டளையிட்டார். தன் பிள்ளைக்கு சுகமில்லை என்றால் ஷியா மேல் எரிந்து விழுந்தார். ஆயிரம் கனவுகளை சுமந்து பறந்து வந்த ஷியா எனும் சின்னச் சிட்டின் சிறகுகள் மாதம் ஒன்று செல்லும் முன்பே கத்தரிக்கப்பட்டன. படிப்பின் மீதுள்ள ஆர்வம் காரணமாக வாய் மூடி மெளனம் காத்தாள் ஷியா. 

ஊரிலிருந்து அம்மா தொலைபேசியில் கதைக்கும் போதெல்லாம் தொண்டை அடைக்கும். அழுகை முட்டும். சிரிக்கவே தோன்றாது. அப்பா, தம்பியுடனும் கொஞ்சமாக பேசிவிட்டு வைத்துவிடுவாள். பிறகு தலையணை நனையும். தன் அக்காவுடன் மாத்திரம் ஷியா கூடுதலாக ஒட்டுவதுண்டு. பாடசாலையில் உள்ள மாணவர்கள் ஷியாவுக்கு காதல் மனு போட்டதையெல்லாம் கூறுமளவுக்கு நெருக்கமாகப் பழகினார்கள் அவர்கள். 

ஆனால் இப்போது அருகில் அக்காவும் இருக்கவில்லை. ஓரிரு முறைதான் தொலைபேசியில் கதைத்தார். அப்போதும்கூட தன் பிரச்சனைகளை கூறவில்லை ஷியா. கூறவில்லை என்பதை விட கூறும் வாய்ப்பு இருக்கவில்லை. முதன்முதலாக தான் சந்தோஷமாக இருப்பதாயும் படிப்பதாயும் அக்காவிடம் பொய் சொன்னபோது உள்ளம் பற்றி எரிந்தது ஷியாவுக்கு. 

இன்றைய காலத்தில் கல்விக்கு கொடுக்கப்படும் மதிப்பு மிகவும் உச்ச நிலையில் உள்ளது. வறுமைப்பட்டவர்களும் தங்கள் பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். விருப்பம் மட்டும் இருந்தால் போதுமா? கல்வி மனதில் பதிவதற்கு என்றொரு சூழல் வேண்டுமே. அது கிடைக்காத போது படிபடி என்று சொல்லுவதில் அர்த்தமில்லை. 

‘ஏய் என்ன யோசிக்கிற? அவளைப் பிடித்து உலுக்கிய போது சிந்தை கலைந்தாள் ஷியா. 

‘எங்களுக்கு பெரிய வீடு இருக்கு. 3 பேர் இருக்கோம். அப்பா வியாபாரத்துக்காக வெளிநாட்டுக்குப் போனால் ஒரு மாசம் கழிச்சி வருவாரு. அம்மாகிட்ட சொல்லிட்டா நீயும் வந்து தங்கிக்கலாம். என்ன வர்ரியா? 

ஷியாவுக்கும் உண்மையில் வேறெங்காவது போனால் நன்றாக இருக்கும் என்றே தோன்றியது. உடனே தாயாருடன் தொடர்பு கொண்டு விடயத்தை சொன்னாள் ஷியா. தன் மகள் படிக்கிறாள் என்று எண்ணியிருந்த பெற்றோருக்கு இந்த செய்தி உண்மையை உணரச்செய்தது. அவள் அங்கே படிக்கவில்லை. துடித்துப் போயிருக்கிறாள் என்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். 

இப்போது ஷியா தன் தோழி ரவீனாவுடன் மிகவும் சந்தோஷமாயிருக்கிறாள். இரத்த பந்தத்தை விட இந்த உறவுகள் வலிமை கூடியது. 

சிறகொடிக்கப்பட்டிருந்த சிட்டுக்குருவி ஷியாவின் ஆசைகள் மீண்டும் சிறகடிக்கத் தொடங்கி விட்டன!!!

– வைகறை (சிறுகதைகள்), முதல் பதிப்பு: நவம்பர் 2012, இலங்கை முற்போக்கு காலை இலக்கிய மன்றம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *