எதேச்சதிகாரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 15, 2014
பார்வையிட்டோர்: 9,659 
 
 

பகல் பதினொன்று மணியிருக்கும்.

கோடை வெயிலின் கதகளியில் கால நிலை குச்சுப்புடி ஆடிக் கொண்டிருந்தது. வெயிலின் வியர்வையில் சோர்வு உழவு செய்து கொண்டிருந்ததில் மனித குல நமைச்சல காரணமேயில்லாமல் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருந்தது. மனிதனின் மனோ நிலை மாற்றங்களுக்கு பிரதான காரணமாக காலநிலை மாற்றங்கள் கவனயீர்ப்பு செய்து விடுகின்றன… மற்றும்… என கருத்துத் தெரிவித்துக் கொண்டிருக்கும் உளவியலாளர்களைக் கொஞ்சம் விட்டு விட்டு கரையோரமாய் நீண்டு சென்று கடலை முறைத்துக் கொண்டிருக்கும் கொங்ரீட் வீதியின் அழுக்கற்ற அழகினைப் பார்த்து சோகையாய் சொல்லவும் முடியாமல் மௌனமாயிருக்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் கிண்ணியா பொலிஸ் ஸ்டேஷனுக்குள் கொஞ்சம் வாருங்கள்.

அந்த பழைய காலக் கட்டிடம் ஒன்றும் பொலிஸ் திணைக்களத்துக்குரியதல்ல.

மறைந்த அப்துல் மஜீத் எம் பியின் தனிப்பட்ட பங்களா. தற்காலிகமாக பொலிஸ் நிலையமாக மாறி இருக்கிறது. தற்காலிகம் தற்காலிகம் என்று இந்தா ஆறு வருஷம் போயாச்சு. இன்னும் பொலிஸ் நிலையம் அந்த இடத்தில்தான் இருக்கிறது. இன்னும் கொஞ்ச வருஷங்களில் தற்காலிகம் நிரந்தரமாகி விடுமோ என்ற அச்சத்தில் ரொம்ப வயசாகிப் போய் நின்று கொண்டிருக்கும் அந்தப் பொலிஸ் நிலையக் கட்டிடத்தின் பின்னனியில் ஏகப்பட்ட சுவாரஸ்யமான சம்பவங்கள் இருக்கின்றன.

அது பற்றி ஆயிரம் கதைகள் எழுதலாம் என ஊருக்குள் புழங்கி அப்புறம் புழுங்கிக் கொண்டிருக்கும் எக்கச்சக்கமான கதைகளை வைத்து எண்ணிக் கொண்டாலும் அதற்கெல்லாம் அவகாசம் தராமல் அந்த வெள்ளைக்காரன் காலத்து பொலிஸ் ஜீப்பில் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் நானாவித குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக அவசர அவசரமாக ஏற்றிக் கொண்டிருந்தார்கள் என்பதனை விட அவர்களை ஜீப்புக்குள்ளே திணித்துக் கொண்டிருந்தார்கள் என்று சொன்னால் ரொம்ப சரியாக இருக்கும்.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்து எட்டாம் ஆண்டின் இலங்கையின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பின் உறுப்புரை பதின்மூன்றின் உட்பிரிவு ஐந்து சொல்லும் ‘ஒவ்வொரு நபரும் அவருக்கெதிரான குற்றச்சாட்டு நிரூபனம் செய்யப்படும் வரை அவர் குற்றமற்றவர் எனக் கட்டாய ஊகம் கொள்ளப்பட வேண்டும்.’ என்பதெல்லாம் பொலிஸூக்கு எப்போது தெரிந்திருக்கிறது… தெரிந்தாலும் எப்போது அது மாதிரியெல்லாம் நடந்திருக்கிறார்கள்.

எவனாவது குற்றம் செய்தாலும் சரி குற்றம் செய்யாவிட்டாலும் சரி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டால் போதும். ஒரு மனுஷனாக வேண்டாம்… ஆகக் குறைந்தது ஒரு மிருகத்துக்குக் கொடுக்கின்ற ஜீவகாருண்யம்… ம்ஹூம்… அந்த சந்தேக நபர்களை பொலிஸ் நடத்துகின்ற விதம்… ரொம்பக் கொடுமை… அதாகப்பட்டது…

‘இக்மனின் நகின்ட’ என முதுகில் அறைந்தவாறு ஒவ்வொரு நபர்களையும் ஜீப்புக்குள் திணித்துக் கொண்டிருந்தார்கள். இந்த இரண்டு பொலிஸில் ஒருவன் கோர்ட் சார்ஜனாக இருக்க வேண்டும். அவனது கையில் பொலிஸ் தகவல் புத்தகம் உட்பட பீ அறிக்கைகள், புதிய முறைப்பாடுகள் மற்றும் குற்றச்சாட்டுப் பத்திரங்கள் அத்தனையும் அவனது கை எழும்புகளை கைசேதப்படுத்திக் கொண்டிருந்தன.

கட்டுக்கட்டாய்…. என கையில்

வலித்திருக்க வேண்டும்.

அந்தக் கடுப்பில் அந்த சார்ஜன் கத்திக் கொண்டிருந்தான்.

மொத்தமாக இருந்த ஆறு பேர்களில் இரண்டு பேர் கஞ்சா கேஸில் பிடிபட்டவர்கள். அவர்களை மேலதிக விசாரணை கருதி பதினான்கு நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்கும் கட்டளை ஒன்றினை ஆக்குமாறு பொலிஸ் நிலையப் பொறப்பதிகாரியின் கட்டளை கோர்ட் சார்ஜனுக்கு வழங்கப்பட்டிருந்தது.

கஞ்சா கேஸில் பிடி பட்டால் அம்போதான்…..பொலிஸாரினால் குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்படும் வரை உள்ளே இருக்க வேண்டியதுதான். இதாவது பரவாயில்லை….அதை விடக் கொடுமை அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் சட்டத்தின் பிரிவு ஐம்பத்தினான்கின் கீழ் கஞ்சா விற்பனை செய்தார் என பீ அறிக்கையினை பொலிஸ் நீதிமன்றத்தில தாக்கல் செய்தால்; போதும்…அதற்காக பிடி பட்டவனுக்காக மாகாண மேனீதிமன்றத்தில் பிணை கோரி மனுப்பத்திரமும் சத்தியக் கடதாசியும் போட்டு சட்டம் கோருகின்ற விதிவிலக்காக சந்தர்ப்பங்களைக் காட்டப் போராடி…எப்படியும் பிணையில் வெளி வர சும்மா ஒரு எட்டொன்பது மாதம் எடுக்கும்…அதெல்லாம் கோர்ட் சமாச்சாரம்.

ஆந்த ஜீப்புக்குள்ளே கஞ்சா கேசுக்காக பிடிக்கப்பட்டவர்கள் இது எதுவும் தெரியாமல் பலத்த யோசனையிலும் அதென்ன சொல்லுவார்களே..அதாங்க..பீதி..ஆமா..பீதியிலும் ஃபிரீசரில் வைத்த தண்ணீராய் உறைந்து போயிருந்தார்கள்.

அடுத்தவர் ஏலவே நீதிமன்றத்தில் வழக்கில் கடந்த தவணைக்கு ஆஜராகாமலிருந்ததன் காரணமாக அவருக்கெதிராகப் பிடிவறாந்து பிறப்பிக்கப்பட்டு அதனடிப்படையில் நேற்றுக் காலை பிடிக்கப்பட்டவர். கோர்ட்டுக்கு வராமல் பிடிவிறாந்தில் பிடிக்கப்பட்டவரை பொலிஜார் ரொம்ப கஷ்டப்பட்டுப் பிடித்திருக்க வேண்டும்…லாடம் கட்டி விட்டார்கள்..

அடுத்த மூன்று நபர்களும் பாவம்… அன்றாடக் காய்ச்சிகள். தினப்பிழைப்புக்காக காட்டில் விறகு வெட்டி வாழும் தொழிலாளர்கள். தங்கள் குடும்பங்களை வாழ வைக்கும் தொழிலாளர்கள். முந்தா நாள் விறகு வெட்டி வரும் போது அநியாயத்துக்குப் பொலிஸாரால் பிடிக்கப்பட்டு இன்றுதான் செய்யாத குற்றத்துக்காக குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப் படுகின்றார்கள்.

‘ ரஷீது கவுத’

‘ஹாஜா கவுத’

‘ அனீபா கோ’

என காற்றில் எகிறிய அந்தக் காக்கியின் குரலில் அந்த மூவரும் கைகளை உயர்த்தினார்கள். உயர்த்தினார்களா… இல்லை… மேலே கைகள் தானாக உயர்ந்தன. அடிமைச் சின்னத்தின் டிரேட் மார்க். இந்த நூற்றாண்டின் மனித குல இழுக்கு… என்றெல்லாம் அந்த அசாதாரண சூழல் எண்ணங்களை மொழி பெயர்த்த வண்ணமிருந்தது.

வயிற்றுப் பிழைப்புக்காக விறகு வெட்டிக் கொண்டு வந்த அந்த மூன்று பேரினதும் வாக்கு மூலங்களை பொலிஸார் காலைதான் எடுத்திருந்தார்கள். எங்கே எடுத்தார்கள்… அவர்களாகவே வழமை போல சிங்கள மொழியில் எழுதி விட்டு கடைசியில் எழதிய அந்தத் தாளில் ஒப்பமிடுமாறு அந்த அப்பாவிகளை மிரட்டி அந்த வாக்கு மூலங்களை பெற்றிருந்தார்கள். அதில் என்ன எழுதியிருக்கிறது…

ஆண்டவன் சத்தியமாக அவர்களக்குத் தெரியாது…

‘என்னங்க…’ என வார்த்தைகள் வருவதற்கு ரொம்பக் கஷ்டப்பட்டு அனீபாவின் மனைவி பதிலுக்கு அழுது தீர்த்துக் கொண்டிருந்தாள். காலை ஆறு மணிக்கே பொலிஸூக்கு வந்தவள் பொலிஸ் கட்டிடத்தின் வெளியே என்ன நடக்கிறது ஏது நடக்கிறது எனத் தெரியாமல் அந்த மர நிழலின் கீழ் தற்போது அனீபாவைக் கண்டு கதைக்கும் வரை பழியாய்க் கிடந்தாள்.

காலையிலிருந்து அவள் எதுவும் உண்ண வில்லை பருக வில்லை என்பதனை அவளது முகத்தில் தெரிந்த பசியின் பதிவுகளும் துயரத்தின் பதிவுகளும் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தன. உள்ளுக்குள் நிகழ்கின்ற அத்தணை செயற்பாடுகளையும் சரியான முறையில் படப்பிடிப்பு செய்வதில் எப்போதுமெ முகம் ஒரு ஒளி ஓவியன்தான்.

காலையிலிருந்து அனீபாவைப் பார்த்துப் பேசலாம் என அவள் முயற்சிப்பதும் அவளை உள்ளே விடாது பொலிஸார் ‘ யன்ட’ ‘பலயங்’ போன்ற வார்த்தைகளைப் பிரயோகிப்பதுமாக… அந்த முற்றத்து நாடகம் இப்போதுதான் முடிவக்கு வந்தது.

‘ என்னங்க… என்னாச்சு… நேத்து ராவுதான் ஒங்கள பொலிஸூ புடிச்சுட்டுப் போனதா தகவல் கெடச்சுது. ஒடனே வர முடியாமப் போயிட்டுது… நம்ம புள்ளக்கு நியுமோனியாவாம்… நம்ம ஆஸ்பத்திரியிலேருந்து டவுன் ஆஸ்பத்திரிக்கு மாத்திட்டாங்க. ராப்பூரா அங்கதான் இருந்தேன்… காலை புள்ளய ஆஸபத்திரில விட்டுட்டு ஒங்களப் பார்க்க டவுன்லருந்து பஸ்ஸப் புடிச்சு வந்துட்டன்…’

ஒரு வார்த்தையேனும் அனீபாவால் உச்சரிக்க முடியாத இயலாமையின் உச்ச கட்டம். மரத்திலிருந்து விழுந்தவனை மாடு மிதித்து மாடு மிதித்தவனை யானை மிதித்து பின் யானை மிதித்தவனை பாம்பு தீண்டி பின என்னென்னவெல்லாமோ மிதிச்சு வைத்து… என்ற தொனியில் தொங்கிப் போய்க் கிடந்தது அந்த முகம்.

‘ என்னங்க… எதுவும் பேச மாட்டேங்குறிங்க… புள்ளக்கி வெளியிலதான் ஊசி வாங்கணுமாம். கையில ஒத்த ரூவா கூட இல்லீங்க… இப்ப டவுன்லருந்து வரும் போது கூட வார்ட்டுல பக்கத்துக் கட்டில்ல இருக்குற ஒரு அம்மாக்கிட்ட நெலமயச் சொல்லிக் கேட்டேன். அவங்கதான் ஒரு நூறு ரூவா தந்தாங்க… ஒடனே புள்ளக்கு ஊசி போடணுமாம்… புள்ளக்கிப் போட வேண்டிய அந்த ஊசி மருந்து இப்ப ஆஸ்பத்திரியில இல்லையாம்… என்னங்க பண்றது…’ என அழது கொண்டேயிருந்தாள்.

அவளது அழுகை மற்றும் அனீபாவின் மௌனம் இரண்டும் ஒரு துயர வரலாற்றினை வலிப்பதிவெடுத்து ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தது ஒழிப்பதிவு செய்ய வழியில்லாமல்.

அனீபாதான் என்ன செய்வார். அகதியாக இருந்தவர்கள் குரங்குபாஞ்சான் பிரதேசத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு அன்றாடப் பிழைப்புக்காக வயிற்றுப் பாட்டுக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்கள் பிழைப்புக்கான வழியாக விறகு வெட்டி ஜீவனம் செய்கையில் வாழவும் விடமாட்டோம் சாகவும் விடமாட்டோம் என்ற தோரணையில்…

அதிகரித்த பொலிஸ் அராஜகத்தின் இன்னுமோர் பெறுபேறாக இவர் முந்தா நாள் பொலிஸாரால் பிடிக்கப்பட்டு பொலிஸில் வைத்து பொலிஸாரின் கைகளால் நேற்றுப் பதப்படுத்தப்பட்டு… காய்ந்த விறகுகள்தான் பொழப்புக்காகக் கொண்டு வந்தேன் என்று எத்தனை சொல்லியும் அதை செவிமடுக்காமல் பச்சை மரங்களை வெட்டி அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்தியதாக பொலிஸாரே தீர்மானித்து…

பொலிஸூக்கும் தெரியும் அவர் கொண்டு வந்தது காய்ந்த விறகுகள்தானென்று…

அது மட்டுமா அவரோடு இதோ ஜீப்பில் சோகையாய் பேயறைந்த மாதிரி உட்கார்ந்து கொண்டிருக்கும் ரஷீதும் மற்றும் ஹாஜாவும் காய்ந்த விறகுகள்தான் கொண்டு வந்தார்கள் என்பது பொலிஸூக்கு நன்றாகவே தெரியும்…. ஆனால் இந்த அப்பாவிகளுக்கு எதிராக மிக அழகாக வழக்குகளை சோடித்திருக்கிறார்கள்.

ஏன்…?

ஆயிரம் காரணங்களை அகர வரிசையில் சொல்ல முடியும். பரந்தளவில் பச்சை மரங்களை வெட்டி பப்ளிக்காக வியாபாரம் செய்யும் புள்ளிகளை விட்டு விடுங்கள். அன்றாடப் பிழைப்புக்காக காய்ந்த விறகுகளைக் கஷ்டப்பட்டு வெட்டி வயிறு கழுவும் அப்பாவிகளைப் பிடித்து வழக்குப் போடுங்கள்.

இந்நாட்டில் எழுதப்படாத விதி இன்னும் பழுது பார்க்கப் படாமல் அப்படியே நம் கண் முன்னே பத்திரமாகக் கிடக்கின்றது.

அனீபாவுக்கும்தான்.

‘இப்ப எங்களைக் கோர்ட்டுக்குக் கொண்டு போறாங்க… என்ன நடக்குமோ தெரியல்ல… கோர்ட்டுக்கு பஸ்ஸப் புடிச்சி வா… எல்லாம் அல்லாஹ் விட்ட வழி…’ எனப் பெரு மூச்செறிந்தார். அந்த மூச்சில் ஏழ்மையின் துயரமும் அதிகார வர்க்கத்தின் கூரிய நகங்கள் பிராண்டியதில் ஏற்பட்ட காயங்களின் அவலக் குரலும் சன்னமாக ஒலித்தது.

‘எத்தி… எத்தி… சுட்டக் அய்ங்வன்ன’ என அனீபாவின் மனைவியைச் சற்று அப்பால் ஒதுங்கிப் போகச் செய்த அந்தப் பொலிஸ்காரன்… சிங்களத்தில் ஏலவே அடிக்கப்பட்டிருந்த மூவருக்கெதிரான அந்தக் குற்றச்சாட்டுப் பத்திரங்களை மீள ஒரு தடவை பார்த்துக் கொண்டான்.

ஏற்கனவே இரண்டு மூன்ற தடவை பிழையான முறையில் தயாரிக்கப்பட்ட குற்றச்சாட்டுப் பத்திரத்தினை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து நீதவான் வாயால் திறந்த நீதிமன்றத்தில் அவன் வாங்கிய ஏச்சு… மீளவும் காலையில் டைப் பண்ணப்பட்டிருந்த குற்றச்சாட்டுப் பத்திரங்களை வாசித்துப் பார்த்தான்.

இலக்கம் ஒன்று என டைப் பண்ணப்பட்டிருந்த அந்தக் காகிதத்தில் முதற் குற்றச் சாட்டாக அரச காட்டுக்குள் அத்து மீறி நுழைந்தது எனவும் இலக்கம் இரண்டு என இலக்கமிடப்பட்டிருந்த இடத்தில் அவ்வாறு அத்து மீறி நுழைந்து ரூபா முப்பதினாயிரம் பெறுமதியான பச்சை மரங்களை வெட்டியமை என இரண்டு குற்றச் சாட்டுக்கள் தயாரிக்கப் பட்டு குறித்த குற்றங்கள் வனச்சட்டம் மற்றும் அதன் திருத்தப்பட்ட சட்டத்தின் பிரிவு… மற்றும் விஷேட வர்த்தமாணி அறிவித்தலின் பிரிவு… என நீண்டது.

அந்த சார்ஜனுக்கு திருப்தி ஏற்பட்ட அதேவேளை சற்று தூரத்தில் இன்னும் அழுது கொண்டிருந்த தனது மனைவியை ஒட்டு மொத்த இயலாமையோடு வெறித்தவாறு பார்த்துக் கொண்டிருந்தார் அனீபா. அவரது கண்களுக்கள் நியுமோனியாவுடன் டவுன் ஆஸ்பத்திரியில் ஏதோ ஒரு கட்டிலில் தனது இருப்புக்காக யுத்தம் செய்து கொண்டிருக்கும் தனது சின்ன மகள் ஸஹானாவின் கட்டிலில் சுருண்டு படுத்திருக்கும் அந்தக் காட்சி விஸ்வரூபமெடுத்து அவரது இதயத்தின் நான்கு அறைகளிலும் இருள் பொழியச் செய்தது.

இருண்ட கண்டமாக அவரைச் சுற்றி உள்ள சூழல் தெரிந்தது. அந்த பொலிஸ் நிலைய அத்தனை காக்கிச் சட்டைக் காரர்களும் கொடிய அரக்கர்களாகவும் டைனோசர்களாகவும்…

‘இந்தா பச்சை மரத்தை வெட்டி மரக் கேசுல மாட்டுப் பட்டவங்க மூணு பேரும் நல்லா கேட்டுக்கங்க…’

என்ற அந்த கோர்ட் சார்ஜனின் குரலில் சற்றுக் கரகரப்புத் தெரிந்தது. ‘ ஒங்கள கோர்ட்டுக்கு இப்ப கொண்டு போகப் போறோம். கோர்ட்ல ஒங்களுக்கு சின்ன ஃபன்தான் அடிப்பாங்க… ஒத்தரும் லோயர் புடிக்கத் தேவையில்ல…’

என நிறுத்தியவனை அனீபா உட்பட அந்த ஜீப்பில் இருந்த அனைவரும் மலங்க மலங்கப் பார்த்தார்கள்…

‘ ஜட்ஜ் ஐயா… நீங்க குத்தவாளியா இல்லை சுத்த வாளியான்னு கேப்பாரு… நீங்க என்ன சொல்லனும்னா குற்றவாளின்னு சொல்லுங்க… பயப்புடத் தேவையில்ல.. கொஞ்சம் தண்டப் பணம்தான் அடிப்பாரு… இன்னிக்கே ஒங்க வழக்கு முடிஞ்சிடும்…’

‘அது சரி எந்தக் குற்றமும் செய்யாத நான் ஏன் குற்றவாளின்னு சொல்லணும்…’ என அந்த கோர்ட் சார்ஜனை கேட்கலாமா என எண்ணியவரை அப்படிக் கேட்க விடாமல் மீண்டும் அந்த சார்ஜனது தடித்த குரல் தரதரவென இழுத்து வந்து இம்சை பண்ணியது.

இப்படி அடி மட்ட மக்களினால் அதிகார வர்க்கத்திடம் அவ்வப்போது கேட்க நினைத்து ஆனால் கேட்காமல் போன சந்தர்ப்பங்கள் கோடிகள் உண்டு. அவர்களால் ஆசைப்பட மட்டுமே முடிந்து விடுகின்றது….அத்தணையும் பின்னர் அவர்களது மனசுகளுக்குள்ளேயே பூட்டி வைக்கப்பட்டு விடுகின்றது.

‘ஆனா சுத்தவாளின்னு சொன்னீங்கன்னா அப்புறம் ஒங்க பாடு… வழக்கு பத்து வருஷத்துக்க இழுக்கும். அப்படி இழுத்தாலும் கடைசியில நீங்க தோத்துப் போயிடுவிங்க…’

‘அப்படித் தோத்திங்கன்னா… ரெண்டு வருஷம் ஜெயிலுக்குப் போகனும். அது மட்டுமில்ல… சுத்தவாளின்னு வழக்குப் பேசினிங்கன்னா அப்புறம் வழக்கு முடிய மட்டும் ஒங்களால வெறகு வெட்டுற தொழில இனி செய்யவே முடியாது. சேய்யுறது என்னா…அத நெனச்சிப் பாக்கவே முடியாது. பொலிஸூ ஒங்கள செய்ய விடாது. அதான் சொல்லுறன்… பொலிஸ பகைச்சுக்காம குத்தவாளின்னு சொல்லி ஜட்ஜ் ஐயா அடிக்குற சின்ன பைஃன் தொகைய கட்டிட்டு வெளிய வாங்க… என அவன் சொல்லி முடிக்க முன்னமே அந்தப் பொலிஸ் ஜீப் பொலிஸ் நிலையக் கேட்டைத் தாண்டிக் கொண்டு கோர்ட்டை நோக்கிப் பறந்தது.

அந்த ஜீப்பின் பின்னே இன்னும் அழுதவாறு அனீபாவின் மனைவி வந்து கொண்டிருப்பது ஒரு புள்ளியாய் அனீபாவுக்குத் தெரிந்தது.

– 2012-12-29

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *