எதிர்பார்ப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 29, 2021
பார்வையிட்டோர்: 4,971 
 
 

“டேய் மாப்ளே நீ எங்கேயோ போகப்போறடா ! செல்வாவின் தோளைப்பிடித்து சொன்ன ஹரி போதையில் இருந்தான். நடக்கக்கூடிய நிலையில் இல்லை.நிற்பதற்கே செல்வாவின் தோளைப்பிடித்தே நிற்க வேண்டியிருந்தது. அவன் தோளை தட்டி விட நினைத்த செல்வா பாவம் கீழே விழுந்து விடுவான் என்ற எண்ணத்தில் சரி சரி ரூமுக்கு வா என்று அவனின் இடுப்பில் கை கொடுத்து இழுத்தவாறே சென்றான். உள்ளுக்குள் அவன் மீது எரிச்சல் வந்தது. காலையில் செலவுக்கு ஐம்பது ரூபாய் கேட்டான் சுத்தமாக என்னிடம் பணமில்லை என்று சொன்னவன் இப்ப்பொழுது முழு போதையில் வந்து நிற்கிறான். எரிச்சல் வராமல் என்ன செய்யும்? ஒன்றும் பேசாமல் அவனை அறைக்குள் அழைத்து சென்று இருந்த அந்த இரும்புக்கட்டிலிலே படுக்க வைத்தான்.அதில் போட்டிருந்த பழைய கித்தானை காலையில் தான் தண்ணீரில் ஊறவைத்து காயப்போட்டிருந்தான். வெறும் கட்டிலில் படுத்த ஹரி கட்டிலின் குளிர்ச்சியில் அப்படியே கை கால்களை மல்லாத்திவிட்டு தன்னை மறக்க ஆரம்பித்தான்.

அவனையே பார்த்துக்கொண்டிருந்த செல்வாவின் மனதுக்குள் மீண்டும் எரிச்சல் வந்து சூழ்ந்து கொண்டது. மதியம் சாப்பிடுவதற்கு எங்கு போவது? ஏற்கனவே சாப்பிட்டுக்கொண்டிருந்த கடையில் பாக்கி நிறைய இருப்பதால் ஒரு மாதமாக சாப்பிட போவதில்லை. காலையில் ஹரி ஐம்பது ரூபாய் கண்டிப்பாய் கடன் கொடுப்பான் என்ற நம்பிக்கையில் இருந்தான். பாவி சுத்தமாக பணம் இல்லை என்று கை விரித்து விட்டான். சரி பணமில்லை போலிருக்கிறது என்று விட்டு விட்டால், பதினோரு மணிக்கு தலைகீழாக வந்து நிற்கிறான்.

செல்வா நீ எங்கேயோ போகப்போறே ! அந்த போதை மயக்கத்திலும் ஹரியின் வாய் முணங்கிக்கொண்டிருந்தது. செல்வா வெற்று பார்வை பார்த்தான்.இவன் எப்பொழுதும் இப்படித்தான் யாரை பாராட்டினாலும் வாய் கொள்ளாமல் பாராட்டி விடுவான். ஒரு டீ வாங்கிக்கொடுத்தாலும் போதும் வாயார புகழ்ந்து விடுவான். செல்வா முறைத்தால் விடு மாப்பிளே ஒருத்தரை பாராட்டுறதுனால நமக்கு என்ன குறைஞ்சுடுது, சொல்லி சத்தமில்லாமல் சிரிப்பான்.

இருவருமே சேலத்தில் வட கோடியின் ஒரு மூலையில் இருக்கும் கிராமத்திலிருந்து சினிமா வாய்ப்புக்காக படை எடுத்து வந்தவர்கள்.. முதலில் வந்தது ஹரிதான், ஏதாவது ஒரு வேலை, அதுவும் சினிமா ஸ்டுடியோவில் பார்க்க வேண்டும் என்று வந்தவன் ஆறு மாதம் நாயாய் அலைந்து ஒரு ஸ்டுடியோவில் “லைட் பாயாக” சேர்ந்து விட்டான். அடுத்த ஆறு மாதத்தில் ஊருக்கு வந்தவன் அவன் பள்ளித்தோழனான செல்வாவையும் இழுத்து வந்து விட்டான். இவன் விட்ட கதைகளை நம்பிய செல்வா சென்னையில் தனக்கொரு பெரிய எதிர்காலம் இருப்பதாக நம்பி வந்து விட்டான். வந்த மூன்று வருடங்களில் சினிமா ஸ்டுடியோக்களில் அவ்வப்போது தரும் எடு பிடி வேலகளை தவிர எந்த முன்னேற்றமும் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தது.

. பசி வயிற்றை கிள்ள ஆரம்பித்து விட்டது. ஒரு டீ குடிக்கலாமா? சட்டையிலும், சாயம் போன கால் சராயிலும் கை விட்டு பார்த்தான். ஹூஹூம். பத்து பைசா பெயரக்காணோம். உதட்டை பிதுக்கியவன் அறையின் மூலையில் இருந்த மண் பானையிலிருந்து ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து அப்படியே மட மட வென வாய் வழியாக வயிற்றுக்குள் தள்ளினான். சற்று சமாதானப்பட்டது வயிறு. என்ன செய்யலாம்? முத்து மாணிக்கத்திடம் கடன் கேட்கலாமா? அவரிடம் இல்லாவிட்டாலும் எப்படியும் யாரிடமாவது வாங்கி கொடுப்பார். நம்பிக்கையுடன் கதவை அப்படியே மூடிவிட்டு வெளியே வந்தவன் நடக்க ஆரம்பித்தான்.

முத்து மாணிக்கம் உதட்டை பிதுக்கி காண்பித்தவர் அவன் இருந்த கோலத்தை கண்டு வா என்று பக்கத்து கடையில் ஒரு பன்னும் டீயும் வாங்கிக்கொடுத்தார். பசிக்கு அது சற்று இதமாக இருந்தது. செல்வா போன வாரம் நம்ம பாரதி டைரக்டர் உன்னைய பத்தி ஹரி கிட்டே கேட்டுகிட்டு இருந்தாரு..சாதாரணமாய் சொன்னார். அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது, “அண்னே ஹரி இதை பத்தி எங்கிட்ட சொல்லவே இல்லை” மறந்திருப்பான் அவர் சமாதானமாய் சொன்னாலும் இவனுக்கு மீண்டும் ஹரியின் மேல் எரிச்சலாய் வந்தது. ராஸ்கல் மூணு படம் ஹிட் கொடுத்திருக்கற டைரக்டர் என்னைய பத்தி கேட்டிருக்காருன்னா சொல்லியிருக்கணுமில்லை. மனதுக்குள் கருவிக்கொண்டாலும், இப்பொழுது என்ன செய்வது பேசாமல் டைரக்டர் பாரதியை பாக்க முடிஞ்சுதுண்ணா பாத்துடுவமே, முடிவு செய்தவன், அண்ணே நானே போய் அவரை பாக்கறேன். வேகமாக நடக்க ஆரம்பித்தான். பஸ்ஸுக்கு காசு இல்லை, நல்ல பசியில் உச்சி வெயிலில் நடந்தாலும் பாரதி இவனை விசாரித்திருக்கிறார் என்ற செய்தி அவன் மனதுக்குள் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்ததால்,வெயில் உறைக்கவில்லை.

பாரதி எங்கு ஷூட்டிங்க் செய்து கொண்டிருக்கிறார் என்ற விவரத்தை விசாரித்து போய் சேர்வதற்குள் களைத்து போய்விட்டான்.அவனுக்கு தெரிந்த இரண்டொருவர் அந்த இடத்தில் இருந்ததால் என்ன செல்வா? இன்னைக்கு எங்கேயும் ஷூட்ங்க் இல்லையா? விசாரிப்பவர்களிடம் டைரகடரை பார்க்க வந்திருக்கிறேன் என்று சொல்ல கூச்சம், வேலை கேட்டு வரமாட்டான் என்று தெரியும், காரணம் பாரதியை பொருத்தவரை படம் ஆரம்பிக்கும்போதே ஆட்கள் எல்லோரையும் எடுத்துக்கொள்வார். அதன் பின் அது எத்தனை மாதங்கள், வருடங்கள் ஆனாலும் மாற்றமே இருக்காது. புதிய ஆட்களையும் எடுக்க மாட்டார்கள். காரணம் இந்த காலத்திற்குள் கதை எப்படி போகும் என்று வேலை செய்பவர்களுக்கு புரிந்து விடுவதால் எல்லோருக்குமே ஒரு ஈடுபாடு வந்து விடும். புதிதாக ஒருவர் வந்தால்

தேவையில்லாத குழப்பம் வரும். அதனால், வேலை ஆட்கள் விலகிக்கொண்டாலும் புதிய ஆட்கள் எடுக்க மாட்டார்கள்.

டைரக்டரின் பார்வையில் பட்டாலும் போதும், ஷூட்டிங்க் நடந்து கொண்டிருந்த பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த ஆட்களோடு ஒட்டி அப்படியே டைரகடரின் பார்வையில் படுமாறு நின்று கொண்டான்.

இரண்டு மூன்று முறை அவர் கவனத்தை கவர அவர் பார்வை போகும் இடம் எல்லாம் போய் நின்றவன், வேலை மும்முரத்தால் எதையும் கவனிக்கும் நிலையில் அவர் இல்லை. கடவுளே.. ஒரு முறை பார்த்தாலும் போதும், கவனத்தை திருப்பி விடலாம். நம்மை அடையாளம் தெரியுமா? தெரியாமல் என்ன? இரண்டு படத்தில் அவர் யூனிட்டில் வேலை செய்திருக்கிறோம், மனதை தேற்றிக்கொண்டு காத்திருந்தான்.

கிட்டத்தட்ட இரவு ஏழு மணிக்கு மேல் ஆகி விட்டது. டைரக்டர் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தார். இடையில் சிறிய பிரேக், இவனுக்கும் டீ பிஸ்கட் கிடைத்தது அவ்வளைவுதான். குடல் சுண்டி சுண்டி இழுத்தது. போதும் போய்விடலாம் என்று மனசு கெஞ்ச ஆரம்பித்து விட்டது. இவனுக்கு பசியை விட எதனால் என்னை கேட்டார் என்ற கேள்விக்கு எப்படியாவது அவரிடமிருந்து பதிலை எதிர்பார்த்தான்.

பேக் அப்..பட பட வென விளக்குகள் அணைக்கப்பட்டன.ஆளாளுக்கு தனித்தனியாக கூட்டம் போட்டு பேச ஆரம்பித்து விட்டார்கள். டைரகடரை சுற்றி பத்து பேர் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்.அந்த கூட்டத்தில் இவன் மட்டும் தனியாய். யாரும் இவனை கண்டு கொள்ளவில்லை. தெரிந்த ஒரிருவர், வா வா சாப்பிடலாம் என்று கையை பிடித்து இழுத்தனர். இவன் அவர்களிடம் மெல்ல சிரித்து, நழுவினான். அவன் நினைத்து வந்த காரியம் நடக்கவில்லை. பாவி ஹரி என்ன சொன்னார் என்னைப்பற்றி என்று சொல்லியிருக்கலாம், அவனை குறை சொல்லி என்ன பயன். இது நாள் வரை அறைக்கு வாடகை கொடுத்து இவனுக்கும் சாப்பாடு போட்டுக்கொண்டிருக்கிறான். திரும்பி நடக்க ஆரம்பித்தான். வயிறு பசியினால் சுண்டி இழுத்ததது.

ஸ்டுடியோவை விட்டு வெளியே வந்தவனுக்கு உயிரே இல்லாமல் இருந்த்து.கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. நாமே அவரிடம் கேட்டிருக்கலாம், என்னை எதற்கு விசாரித்தீர்கள் என்று, எப்படி முடியும், அவரை சுற்றி அத்தனை பேர்கள் இருந்தார்களே, அவர் மட்டும் சும்மாவா இருந்தார், அங்கும் இங்கும் பரபரப்பாய்த்தானே இருந்தார்.

செல்வாவிற்கு தன்மேலேயே கழி விரக்கம் வந்தது, இனி நடக்கனும் தூரம். அவனுக்கு பெரிய மலை மாதிரி தெரிந்தது.மயக்கத்திலேயே நடக்க ஆரம்பித்தான்.

யாரோ கைதட்டி கூப்பிடுவது போல் இருந்தது, மெல்ல திரும்ப, ஸ்டுடியோ ஆள் நின்று இவனை கை அசைத்து அழைத்துக்கொண்டிருந்தார்.

“டைரக்டர் உன்னைய அங்க தேடிகிட்டு இருக்காரு”

செல்வா இப்பொழுது மீண்டும் உயிர் பெற்றவனனான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *