உன்னைச் சொல்லிக் குற்றமில்லை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 10, 2023
பார்வையிட்டோர்: 1,672 
 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ரேடியோ ஏசியாவின் ஐரோப்பிய வலத்தில் அந்தச் செய்தியைக் கேட்ட நேரம் தொட்டு தூக்கமின்றி நெடுநேரமாகச் சிந்தனையில் மூழ்கியிருந்த கரன் எப்போது கண்ணயர்ந்து போனானோ தெரியவில்லை. கதவு தட்டப்படும் சத்தம் கேட்டுக் கண்விழித்த அவன் அருகிலிருந்த மணிக்கூட்டைப் பார்த்தான். காலை பத்தரை மணியைக் காட்டியது. 

‘யாராக இருக்கும்?’ 

சிந்தனையோடு மிகவும் சிரமப்பட்டு எழுந்து போய்க் கதவைத் திறந்தான். 

“என்னடாப்பா மத்தியானமாப் போச்சுது. இப்பத்தான் நித்திரையாலை எழும்பிறாய் போலக் கிடக்குது!” என்று கூறியபடி அவனுடைய நண்பன் மனோ உள்ளே வந்தான். 

“ஓமடாப்பா இரவு படுக்கக் கொஞ்சம் நேரம்செண்டு போச்சு…!”

“இரு மச்சான் ஒருநிமிசத்திலை வாறன்!” என்று கூறிய கரன் குளியலறைக்குள் நுழைய, வரும்போது கையில் எடுத்துக்கொண்டு வந்த பூவரசு இதழைப் புரட்டிக் கொண்டிருந்தான் மனோ. 

கரன் மனோ இருவரும் ஜெர்மனிக்கு வந்த புதிதில் தொழிற்சாலை ஒன்றில் இருவரும் சந்தித்துக்கொண்டார்கள். அன்று தொடக்கம் இன்று எட்டு வருடமாக அவர்களின் நட்புத் தொடர்கிறது. 

இருவரும் ஒரே நாடு ஒரே பிரச்சனை ஆனால் மனோவின் புகலிடக் கோரிக்கையை ஏற்றுக்காண்டு நிரந்தர வதிவிட அனுமதிய வழங்கிய ஜெர்மன் அரசாங்கம் கரனின் கோரிக்கையை ஏதோ காரணங்களைச் சொல்லி இரண்டு வருடத்தின் பின் நிராகரித்துவிட்டது. ஆதலால் அவன் செய்துவந்த அந்தத் தொழிற்சாலை வேலையையும் விடவேண்டியதாயிற்று. மீண்டும் தனது புகலிடக் கோரிக்கையை சட்டத்தரணி ஒருவர் மூலம் மறுவிண்ணப்பம் செய்துவிட்டு, இன்றுவரை உணவு விடுதி ஒன்றில் வேலை செய்து வருகின்றான் கரன்.
“மனோ.. இரவு ஐரோப்பிய வலம் கேட்டனியா?” 

“இல்லை மச்சான்!. ஏன்.என்ன விசயம்?” 

“ஜெர்மனியிலை அகதிஅந்தஸ்து நிராகரிக்கப்பட்ட எல்லாரையும் இலங்கைக்குத் திருப்பி அனுப்புறதுதான் என்று அரசாங்கம் முடிவு எடுத்திட்டுதாம். இந்த முடிவிலை எந்தவித மாற்றமும் இல்லையாம். இதைக் கேட்டதிலை இருந்து இரவுமுழுக்க எனக்கு நித்திரையே இல்லை மச்சான்!” என்று சோகம் தழும்பக் கூறினான் கரன். 

“அப்ப மச்சான்… இப்ப அண்மையிலைதானை எங்கட தமிழ்க்கட்சி ஒன்று வந்து அரசாங்கத்தோட கதைச்சு இனிமேல் ஒருத்தரையும் திருப்பி அனுப்ப மாட்டினம். நாங்கள் நாட்டுநிலமையளை விபரமாக எடுத்துச் சொல்லியிருக்கிறம் எண்டெல்லாம் ரேடியோவிலை பேட்டி குடுத்திச்சினம்.”

“அதோ..அவையள் வந்திட்டுப் போனதுக்குப் பிறகுதானாம் திருப்பி அனுப்புறதுதானெண்ட இந்தத் தீர்க்கமான முடிவு.!” 

ஆத்திரமும் எரிச்சலும் வார்த்தைகளில் தெறிக்க அதட்டலாகக் கூறிய கரனின் உள்ளக் குமுறலை உணர்ந்துகொண்ட மனோ- 

“உன்னுடைய கேஸ் இப்ப என்ன நிலைமையிலை இருக்கு மச்சான். லோயர் என்ன சொல்லுறார்?” 

“நான் இஞ்சை வந்து எட்டு வருசம் முடிஞ்சபடியால் எப்பிடியும் எங்கட ‘பாஸ் போட்டிலை இரண்டுவருச விசா எடுத்துத் தாறனெண்டு சொன்னவர். ஆனால் அதுக்குள்ளை நிலமை இப்பிடியாகக் கிடக்குது!” என்று அலுத்துக்கொண்ட கரன், “எல்லாத்துக்கும் எங்கடஆக்கள்தான் மச்சான் காரணம். எங்கட நாட்டில் பிரச்சனை அங்கே உயிர்வாழமுடியாது. எங்களுக்குப் புகலிடம் தாருங்கோ எண்டு இஞ்சை வருகினம். பிறகு நல்ல விசாக் கிடைச்சதும் முதலிலை சுற்றுலாப் போறதும் எங்கட நாட்டுக்குத்தானே.. அதுமட்டுமே இஞ்சையிருந்து அங்கே போய் கலியாணவீடும். பிறந்தநாளும் பெரிய ஆடம்பரமாய் செய்து அதை வீடியோ எடுத்துக்கொண்டுவந்து இஞ்ச தாங்கள் நல்லாப் பழகிற ஜெர்மன்காறருக்கெல்லாம் போட்டுக்காட்டிறதோட நில்லாமல் சில பேர் சோசலிலையும், விசா வழங்கிற காரியாலயத்திலை வேலைசெய்யிறவையையும் கைக்குள்ளை போட்டு அவையளை வீட்டுக்குக் கூப்பிட்டு விருந்தும் குடுத்து தங்கட ‘பவரை’க் காட்ட அந்த வீடியோக் கொப்பியையும் போட்டுக் காட்டினம். 

அடே சாதாரண ஆக்கள்தான் இப்பிடிச் செய்யினம் எண்டு பார்த்தால் இஞ்ச வந்து படிச்சு இந்த நாட்டுச் சட்டதிட்டங்களை நல்லாத் தெரிஞ்சுகொண்டு டொல்மேச்சர் (மொழிபெயர்ப்பாளர்) வேலை செய்யிறவையே சிலர் புதிசா வந்த எங்கட ஆக்களின்ர புகலிடக்கோரிக்கையை விசாரணைசெய்யிற அதிகாரிகளுக்கே தங்கட சொந்தநாட்டுச் சுற்றுலாக்கொப்பிகளைப் போட்டுக் காட்டி பெருமையடிச்சிருக்கினமாம். இப்பிடியெல்லாம் இவையள் செய்யேக்கை எங்களுக்கு உண்மையில பிரச்சினைதான் அங்கே வாழ முடியாத நிலமைதான் எண்டதை இவங்கள் எப்பிடி மச்சான் ஏற்றுக் கொள்ளுவாங்கள்? அதுபோக எங்கட ஆக்களிட்ட ஒற்றுமை என்ற சாமான் துளிகூட இல்லை மச்சான். இந்தப் புலம்பெயர்ந்த நாடுகளிலை ஒரு ஈழத்தமிழனுக்குப் பிரச்சினையெண்டால் அதே பிரச்சனைதான் எல்லோருக்கும் என்றதை ஒருத்தரும் உணர்ந்து கொள்ளுறேல்லை.ஒவ்வொருத்தரும் தங்கட வாழ்க்கையும் வசதிகளும் நல்லாயமைஞ்சால் போதும் என்கிற சுயநலமான சிந்தனைகளோடை மட்டும்தான் வாழினம்”. 

கரனின் இந்த வார்த்தைகள் மனோவின் இதயத்தில் ஈட்டியால் குத்துவது போலிருந்தது. 

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஈழத்தமிழர்களை திருப்பி அனுப்பக்கூடாது என்றுகோரி சென்றவாரம் ஜெர்மனியில் உள்ள தமிழமைப்புக்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து நடாத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலத்துக்கு தானும் போகவில்லையே என்ற குற்ற உணர்வு அவன் உள்ளத்தை உறுத்தியது.

“இவன் தயாவை உனக்குத் தெரியும்தானே மனோ..?”

“ஓம்.!”

“அவன் முதலிலை என்னைப் போல விசாப் பிரச்சனையாத்தான் இருந்தவன். அப்பவெல்லாம் இஞ்சயிருந்த எங்கட நாட்டுக்குப் போய்வாற எங்கட ஆக்களையெல்லாம் கண்டபடி திட்டிப்பேசுவான். இப்ப அவனுக்கு நல்ல விசாக் கிடைச்சதும் தன்ரை பிள்ளையின்ரை முதலாவது பிறந்தநாளை தன்ர தாய் தகப்பனோடை ஊரிலை கொண்டாட வேணுமாமெண்டு போன கிழமை குடும்பத்தோடை போட்டான். இவனெல்லாம் மனிசனே..?. ச்சீ! மனிசனாய்ப் பிறந்தால் தனக்காகமட்டும் வாழக்கூடாது மச்சான்.மற்றவைக்காகவும் கொஞ்சம் வாழவேணும். சரி மற்றவைக்கு உதவிதான் செய்யாவிட்டாலும் உபத்திரவம் இல்லாமலாவது இருக்கலாமெல்லே? நாட்டுக்குப் போய்வரக்கூடிய விசாக் கிடைக்காவிட்டால் பேசாமல் இருக்கிறவைதானே? அதேபோல நாங்கள் நாட்டுக்குப் போய்வாறதாலை இருக்கப்படுகிறவைக்கும் புதிசாக வாறவைக்கும் பிரச்சினை எண்டதைப் புரிஞ்சுகொண்டுபோகாமல்.. இருக்கலாம்தானே..?” என்று தன் மனதில் இருந்தவகளையெல்லாம் அள்ளிப்பொழிந்து கொண்டிருந்த கரனின் கதைகளை அமைதியோடு கேட்டுக்கொண்டிருந்த மனோ-

“என்ன மச்சான் செய்யிறது.. நீ சொல்லிறது நியாயம்தான். உன்னைப்போல எல்லோரும் நினைச்சால் எங்கட சனங்களுக்கு ஏன் இந்த ஆத்தலைவு? எங்களுக்குள்ள ஒற்றுமை இருந்திருந்தால் நாங்கள் எண்டைக்கோ எங்கட சொந்த நாட்டிலையே சுதந்திரமாக வாழ்ந்திருப்பமெல்லோ..ம்.. எல்லாம் தலைவிதி. சரி மச்சான் நேரமாகுது. நானொருக்கால் சாந்தியக்கா வீட்டை போக வேணும்.. போயிற்றுப் பிறகுவாறன்!” என்று கூறிவிடைபெற்றான் மனோ…

காலம் தன்கடமையைச் செய்ய நாட்கள் கரைந்து வாரங்களாகி மாதங்களாய் கழித்துக்கொண்டிருந்தன. 

இந்த வருடம் தனது விடுமுறையைக் கழிக்க சுவிஸிலிருக்கும் தனது அண்ணன் வீட்டிற்குச் செல்வதற்கான ஆயத்தங்களைச்செய்து கொண்டிருந்த மனோ தொலைபேசியழைக்கும் சத்தம் கேட்டு ரிசீவரை எடுத்தான்.

“ஹலோ மச்சான் மனோ…நான் கரன் கதைக்கிறன்..என்னடாப்பா இரண்டு கிழமையாக இந்தப் பக்கம் ஆளையே காணேல்லை..?” என்ற கேள்வியோடு மனோவின் பதிலை எதிர்பாராமல் தொடர்ந்த கரன், 

“ஒரு குட் நியூஸ் மச்சான்.எனக்கு விசாக் கிடைச்சிட்டுது.இந்தச் சந்தோசத்தைக் கொண்டாட நாளைக்கு சின்னதாய் ஒரு பார்ட்டி வைக்கிறன்.. நீயும் வாவன் மச்சான்!” என்று விசாக் கிடைத்த சந்தோசக்களிப்பில் நின்றுகேட்டான் கரன். 

“மச்சான் நானே உனக்கு ரெலிபோன் எடுக்கத்தான் இருந்தனான். எனக்கு இன்றையிலை இருந்து ஊர்லாப்(விடுமுறை). நாளைக்கு நான் சுவிசுக்குப் போறன். குறைநினைக்காதை மச்சான் உன்னுடைய நீண்டகாலப் பிரச்சனைக்கு ஏதோ ஒரு நல்லமுடிவு வந்ததே எனக்குச் சந்தோசம். நீ அதை சந்தோசமாய்க் கொண்டாடு தான் சுவிசுக்குப் போய் வந்தபிறகு வாறனே குறைநினைக்காதை மச்சான் என்ன..?” என்று மீண்டும் ஒருமுறைகூறி கரனிடமிருந்து விடைபெற்று தன் பயணத்துக்குரிய ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினான் மனோ. 

தனது ஒருமாத விடுமுறையைக் கழித்துவிட்டு சுவிசிலிருந்து வந்ததும் கரனின் அறைக்குச் செல்ல எண்ணி தொலைபேசி எடுத்தான். கரன் அறையில் இல்லை. கரன் இருக்கும் கட்டிடத்தில் இன்னோர் அறையில் வசித்துவரும் கரனின் நெருங்கிய நண்பன் சுதனுடன் தொடர்புகொண்டான். 

“கரனுக்குக் கலியாணம் பேசி கரனுடைய தாயார் பொம்பிளையின்ர போட்டோவும் அனுப்பினவா… அதுதான் கரன் நேரிலை போய் பெட்டையையும் பார்த்து உடனே அங்கேயே கலியாணத்தையும் முடிச்சுப்போட்டு வந்து பெட்டையைக் கூப்பிடலாமெண்டு.. முந்தநாள் திடீரென வெளிக்கிட்டு இலங்கைக்குப் போய்விட்டார்.. மூன்று கிழமையிலை திரும்பிவந்துவிடுவார்!” என்று சுதனின் வார்த்தைகளைக் கேட்டதும் மனோவிற்கு ஆச்சரியம் தாங்கவில்லை. 

ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் எங்களுடைய நாட்டிற்குப் போய் வருகிறவர்களை உணர்ச்சிபொங்க கடும் வார்த்தைகளால் திட்டித் தீர்த்ததோடு உண்மையின் தத்துவங்களையும் பொதுநலக் கருத்துக்களையும் அள்ளிப்பொழிந்து தள்ளிய கரனா இப்படி.? ச்சீ..! என்று சினந்து கொண்ட மனோ சிறிது நேரச் சிந்தனைக்குப் பின், ‘உன்னைச் சொல்லிக் குற்றமில்லை கரன்… பொதுநலம் என்ற புனிதமான செயலை வெறும் வார்த்தைகளில் மட்டுமே போர்த்திக்கொண்டு ஒரு போலித்தனமான வாழ்க்கை வாழுற எங்களுடைய மனங்கள்மாறுமட்டும் எங்களுடைய இனத்துக்கே விமோசனம் என்பது வெறும் சொப்பனம்தான்’ என்று தனக்குள் கூறிக்கொண்டான் மனோ. 

– பூவரசு, 10வது ஆண்டுமலர் , இதழ் 67, தை-மாசி 2001

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *