இவர்களும் அவர்களும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 31, 2021
பார்வையிட்டோர்: 4,831 
 

(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘சுந்தரம்ஸ் அன்ட் கோ’வின் பிரதம பங்காளியும்’ மானே ஜிங் டைரக்டருமான ஸ்ரீமான் சுந்தரம்பிள்ளை அவர் களும், ‘ஆறுமுகம் பிள்ளை அன்ட் சன்ஸ்’ உரிமையாளர் திருவாளர் ஆறுமுகம் பிள்ளை அவர்களும் ஜன்ம விரோதிகள். இதெல்லாம் பெரிய இடத்து விவகாரங்கள். எதையும் குறைத்துச் சொல்வது அவர்களுடைய அந்தஸ்தைக் குறைப்’ பதாகும். அவர்களுடைய விஷயங்களில் எதையும் ‘கோய பல்ஸ்’ பாணியில் பெருக்கிச் சொல்வது தான் முறை. இரு வருக்கும் சமீப காலத்திலேதான் சிறு மனக்கசப்புக் காரண மாகப் பூசல் ஏற்பட்டிருந்தது. இந்த உண்மையை, அவர்களுடைய அகராதிப்படி-சம்பிரதாய பூர்வமாக-இருவரையும்-‘ஜன்ம விரோதிகள்’ என்று சொல்லவேண்டியிருக்கிறது.

பணக்காரர்களுக்கும் எழுத்தாளருக்கும் ஒரேயொரு விஷயத்தில் மட்டும் நிரம்பிய ஒற்றுமை இருக்கின்றது. எதையுமே மிகைப்படுத்தி விஸ்தாரமாகச் சொல்வதில் இரு சாராருக்குமே அலாதிப் பிரீதி.

மணியம், சுந்தரம்பிள்ளையின் புத்தம் புதிய ஸ்டூடிபேக்கர் காரின் டிரைவர். ஆறுமுகம் பிள்ளையின் புத்தம் புதிய நவீன மாடல் பிளீமவுத் காரின் சாரதி கந்தையா.

பட்டினத்துப் பிரபல அந்த நாற்சந்தியில் ஸ்டூடிபேக்கரும், பிளீமவுத்தும் அடிக்கடி சந்தித்தன. சுந்தரம் பிள்ளையும், ஆறுமுகம் பிள்ளையும் அந்த நாற்சந்தியைத் தாண்டித் தான் தங்கள் தங்கள் கம்பெனிகளுக்குப் போய்வர வேண்டும். ஆகையினால் தான் இருவரும் ஒருவரையொருவர் தினசரி சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.

சுந்தரம் பிள்ளையைப் பார்த்து ஆறுமுகம் பிள்ளையும், ஆறுமுகம் பிள்ளையைப் பார்த்துச் சுந்தரம் பிள்ளையும் முகங்களைக் கோணிக் கொள்வார்கள்; மனதைக் கறுவிக் கொள்வார்கள். கந்தையாவும் மணியமும் ஒருவரை ஒருவர் பார்த்துப் பற்களை நெறுமிக் கொள்வார்கள். பிளீமவுத்தும், ஸ்டுடிபேக்கரும் பரஸ்பரம் உறுமிக்கொள்ளும். எப்படியாவது, ஞாயிறு தவிர்த்த ஏனைய நாட்களில், இந்நிகழ்ச்சி நடந்தே தீரும்.

சமீப காலத்தில் இரு பிள்ளைகளுக்கும் ஏதேதோ மனக் குறைகள்…….

சுந்தரம்பிள்ளை அவர்களின் மனதை ஒரு குறை நசித்துக் கொண்டிருந்தது. அது அப்படியொன்றும் உயிரை விடும் அளவிற்கு முக்கியமானதல்ல. ‘பெரிய’ மனிதருடைய ஆசைகளெல்லாம் மிக அற்பமானவை. அதற்காகக் குதியாய்க் குதித்து, கவலையில் பாகாய் உருகி,…..அவருடைய கவலையெல்லாம் எப்பொழுதுதான் ஒரு ‘காடிலொக்’ கார் வாங்கி, பட்டணத்து வீதிகளில் ராஜபவனி வந்து ஆறுமுகம் பிள்ளையின் முகத்தில் அசடு வழியச் செய்து திருப்திப்படுவது என்பதே! இந்தக் கவலை அவர் மனதை அரித்துத் தின்ன, பாவம் அந்த மனிதர் துரும்பானார்.

ஆறுமுகம் பிள்ளையை நெஞ்சுப்பாரம் அழுத்தியது. “பிஸினஸ் கொஞ்சம் டல்லாக இருக்கிறது. இப்பொழுதா வது மூன்றாவது உலக யுத்தம் வந்து தொலைத்தால் தேவலை. ஒரு தட்டுத் தட்டிவிடலாம். இந்த உலக யுத்தம் மட்டும் வந்துவிட்டால் ஆறுமுகம் பிள்ளை வெறும் ஆறுமுகம் பிள்ளையாகவா உலாவுவார்? ‘ஆறுமுகம் பிள்ளையா? அவரென்ன சாதாரண மனிதரா? கோடீஸ்வரப் பிரபுவாக்கும்’ என்று என்னுடைய ஆட்களையே சொல்ல வைத்து, சுந்தரத்தைக் கலங்க அடித்துவிட மாட்டேனா, என்ன? இந்த காலத்துப் பொடியர்கள் சிலர் என்னைப் பிளாக்மார்க்கட், கரும்பூதம் என்று கேலி செய்கிறார்கள். செய்யட்டுமே! என் தோலிற்குள் புகுந்து விடுமா என்ன?……அப்புறம் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிவிட்டால்?……ஆண்டவனே! அது எப்பொழுதுதான் நிறைவேறப் போகிறதோ?….. எதற்கும் இந்த அமெரிக்காக்காரன் கொஞ்சம் மனதுவைத்தால்?……..’ இப்படியான நினைவுகளில் அவருடைய நெஞ்சுப் பரம் அதிகரிக்கும். ‘பிஸினஸ் டெக்னிக்’கிலும், ‘டாக்டிக்’ஸிலும் அவர் பலே ஆள்!

அவர்களுடைய ஆசைகள் ஆசைகளாகவே இருந்தன. காலண்டரின் தின் இதழ்கள் கிழிந்து விழுந்துகொண்டிருந்ததுதான் மிச்சம்.

இருவருடைய ஆசைகளும் நினைவுகளும் தூரத்தூர விலகிப்போவது போலவே, அவர்களுடைய வெறுப்பும் விரோதமும் நெருங்கி நெருங்கி வளர்ந்தன. இரண்டு பண முதலைகள் பகையை வளர்த்துக் கொள்கின்றன. பராவாயில்லை. இரண்டு எஜமானரின் காசும், ஊற்றும் பெட்ரோலைக் குடித்து வெறிகொள்ளும் புதுமாடல், கார்களும், உறுமுகின்றன. பாதகமில்லை.

ஆனால், மணியமும் கந்தையாவும்?

பாவம், அவர்கள் எஜமானரின் உப்பைத் தின்று வளரும் மனிதர்கள்; விசுவாசமுள்ள நாய்கள். ஒரே வயிற்றில் பிறந்த இரண்டு நாய்களே வெவ்வேறு வீட்டுச் சோறுண்டு, வெவ்வேறு குணங்களுடன் வளருகின்றனவே! அவரவர் எஜமானனின் உப்பைத் தின்பதினாலேதான் கந்தையாவுக்கு மணியத்தின்மீது குரோதம்; அவனுக்கு இவன்மீது பகை!

இதற்கிடையில், பட்டணத்து முனிஸிப்பல் தேர்தல்கள் வந்தன. ‘என் கடன் பணிசெய்து கிடப்பதே!’ என்ற தத்துவத்தில் ‘அன்ட்கோ ‘விற்கும், ‘அன்ட் சன்ஸி’ற்கும் : திடுதிப்பென்று பந்தம்–ஒரு வகைப் பாசம் ஏற்பட்டுவிட்டது. மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டுமென்ற பற்றும், அவர்களுக்குத் தலைமை தாங்கி அவர்களுக்குச் சரியான வழியைக் காட்ட வேண்டுமென்ற சேவா உணர்ச்சியும், இருவரின் பிடரிகளையும் குரங்குப்பிடி பிடித்து, ஒரு ஆட்டு ஆட்டி உலுப்பியது.

நீண்ட காலமாக இருவரிடமும் மறைந்திருந்த பொது ஜனத் தொண்டு என்கின்ற இந்தச் சேவா உணர்ச்சி, மடை திறந்த வெள்ளம்போல, இந்த உவமை பத்தாம்பசலியானது என்று ஒதுக்கிவிட்டால்-தேர்தல் காலத்தில் மேடையேறும் மந்திரிமார்களின் பேச்சைப்போல, பெருக் கெடுத்து ஓடியது. இருவரும் தொண்டுணர்ச்சியினாலும், சேவைப்பற்றினாலும் தங்களைத் தாங்களே மறந்துவிட்டன ரென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

ஏதாவது கொள்கை-இலட்சியம்-கட்சி என்ற விவகாரங்களுக்கு அவர்கள் இடம் கொடுக்கவில்லை. இருந்தும் மக்களுக்குத் தொண்டாற்றுவதே அவர்களுடைய பேச்சாய், மூச்சாய், உயிர்த்துடிப்பாய் விஸ்வரூபமெடுத்தது.

சுந்தரம் பிள்ளையும் ஆறுமுகம் பிள்ளையும் மும்முரமாக எலெக்ஷனில் குதித்தார்கள்…! .

எல்லாம்வல்ல எம்பிரான் பணநாதன், அவர்கள் பணித்த வேலையைத் தட்டாமற் செய்வதற்குக் கைகட்டிக் காத்து நிற்கும்பொழுது, கேவலம் கொள்கையாவது மண்ணாங் கட்டியாவது! அது இராத்தல் என்ன விலை? எந்தக் கடையில் கிடைக்கும்?

பணத்துடன்கூடப் பலதும் பத்தும் இருக்கும்பொழுது, கொள்கையாம் கொள்கை!. அவர்கள் உழைக்கும் வர்க்கத் தைச் சேர்ந்த தொழிலாளர்களா – என்ன, வெறும் கொள் கையை அமுங்குப் பிடியாகப் பிடித்துத் தொங்க? அவர்கள் எந்தக் கொள்கையையும் பணத்தட்டில் போட்டு, எடை பார்க்கும் வியாபாரிகள் – இலட்சப்பிரபுக்கள்!

இருப்பினும் இருவரும் சந்தர்ப்பத்தை ஒட்டி ஒவ்வொரு வழியைப் பின்பற்றினர். அவர்களுக்குப் பின்னால், ஆதரவாகக் கூச்சலிட்டுச் செல்வதற்கும் சாராயத்தில் உஷார் பெறும் கும்பலொன்று ஆயத்தமாகவே இருக்கிறது!

ஒருவர் ‘மாஜி’ ஆக்கப்பட்ட மந்திரியின் கட்சியை ஆதரித்தார்; மற்றவர் மந்திரியாகிவிட்டவரின் கட்சிக்குப் பக்கபலமாக நின்றார்.

தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருந்தன. பிளீமவுத்தும், ஸ்டூடிபேக்கரும் மும்முரமாக எலெக்ஷன் பிரசாரத்திற்கு ஓடித்திரிந்தன. கந்தையாவிற்கும், மணியத்திற்கும் சாப்பிடவே நேரமில்லை. அப்படி இருந்தது இருபக்கத்துக் கார்களின் ஓய்ச்சல் ஒழிவில்லாத உழைப்பு. காரில் இருந்து கொண்டே விழுந்து விழுந்து பொதுமக்களுக்குச் சேவை செய்தனர் எஜமானர்கள். சேவை செய்யும் எஜமானர்களுக்கு இரவு பகலாக உடல் தேய உழைத்தனர் இரண்டு சாரதிகளும்.

தேர்தல் ஜூரம் உச்சக்கட்டம் அடைந்திருந்தபொழுது ஒருநாள் தார் உருகும் நேரம். நகரத்தின் பிரதான வீதி. ‘கந்தையாவும் மணியமும் எதிரும் புதிருமாகச் சந்தித்தனர். இருவருடைய எஜமான பக்தியும், ‘கிளச்சை ஆவ்ப்’ பண்ணி, கியரை மாற்றி, அக்ஸிலரேட்டரில் அமுக்கப்படும் காரின் மீட்டர் வேகம் கொண்டது; பகை உணர்ச்சி இருவரையும் ஆட்கொண்டது. கண்களில் ஆத்திரம் கொப்பளிக்க, கீழுதட்டை மேல் வரிசைப் பற்களினால் நன்னியபடி, “ஏன்ரா? என்ர ஐயாவைப்பற்றி உன்ர கொய்யா கூட்டத்திலே தாறுமாறாய்ப் பேசாத பேச்செல்லாம் பேசித் திரியிறாராம். இது ஞாயமாடா?” என்று தன் வார்த்தைகளில் ஆத்திரத்தைக் கொட்டிப் பேசினான் மணியம்.

கந்தையா எஜமான பக்தியில் மணியத்தைவிட எந்த வகையிலும் குறைந்தவனல்ல. தன்னைப்பற்றி யாராவது குறைவாகப் பேசினால், ‘பொறுத்தார் பூமியாள்வார்’ என்று வாளாயிருப்பவன், அவன். ஆனால் ஏசப்படுவது அவனல்ல; அவனுடைய ‘ஐயா’ சந்திக்கிழுக்கப்பட்டு, அவமதிக்கப்படுகிறார். அதை அவனால் தாங்க முடியவில்லை. அவருடைய உப்பைத் தின்றுகொண்டு…

“போடா, பேயா! உன்ர கொய்யா மட்டும் பெரிய நேர்மையானவரா? உன்ர ஐயா போன கிழமை, அம்மன் கோயில் வீதியிலை நடந்த கூட்டத்திலே, ஏதோவெல்லாம் இல்லாததும் பொல்லாததுமாகப் பேசித் திட்டினாராம். அதுக்கென்னடா சொல்லுறாய்?” – எதிர்வெட்டுக் கொடுத் தான் கந்தையா.

வாய்த்தர்க்கம் முற்றி, கை பரிமாறுகிற அளவுக்கு வார்த்தைகள் தடித்தன. தோள்கள் தினவெடுத்தன.

மணியம் கையடிப் படலத்தினை ஆரம்பித்து வைத்தான். கந்தையாவின் கண்களில் பிரளயகாலத்து வானத்து மின்ன லெல்லாம் பளிச்சிட்டு மறைந்தன. இருவரும் நடுரோட்டில் கட்டிப் புரண்டனர். தங்களைத் தாராசிங்கிற்கும், கிங்காங்கிற்கும் கற்பித்துக் கொண்டவர்களைப் போல கட்டிப் பிடித்து உருண்டு கொண்டே…

தெருவில் இவர்களது திருக்கூத்தைப் பார்த்து நின்றவர்கள், மேற்படி ‘குஸ்தி’யைச் சிறிது நேரம் ரஸித்தாலும், சீக்கிரமே இருவரையும் விலக்கி விட்டனர்.

மாட்டுச் சவாரியில் ஓடிக் களைத்த காளை மாடுகளைப் போல, இருவரும் மூசு மூசென்று மூசினர். ஒருவனுக்கு மூக்கிலிருந்து இரத்தம் கொட்டியது; மற்றவனுக்கு முரசிலிருந்து உதிரம் வழிந்தது.

மணியம் இச்சம்பவத்தைச் சுந்தரம்பிள்ளையிடம் முறையிட்டான். கந்தையாவும் இந்த அவமானத்தை ஆறுமுகம் பிள்ளையிடம் அறிவித்து விட்டான். இருவரும், ‘அவனை விட்டேனா பார். ஒரு கை பார்த்துக் கொள்ளுகிறேன்’ என்று சூளுரைத்து உறுமிக் கொண்டனர்.

பிளீமவுத்துக்கு ஸ்டூடிபேக்கர்மீது பகை……. கந்தையாவுக்கு மணியத்தின்மீது வெறுப்பு…… ஆறுமுகம்பிள்ளைக்கு சுந்தரம்பிள்ளைமீது விரோதம்…….. இந்தக் கட்டத்தில் தேர்தல் முடிந்தது.

பாவம், இருவரும் கோட்டை விட்டுவிட்டனர். இடையில் கேட்ட கார்த்திகேசர் மாஷ்டர் வெற்றியீட்டிவிட்டார்!

***

‘எந்தக் கதைக்கும் ஒரு திருப்பம் தேவை’ என்று எழுத்துப்புலிகள் கருதுகின்றனர். கதைகளில் வரும் திருப்பங்களைப் போல, அவர்களுடைய வாழ்க்கையிலும் ஒரு திருப்பம் திசை திருப்பியது. அது இரு பிள்ளைகளினுடைய வாழ்விலும் திடுதிப்பென்று ஏற்பட்டது.

‘புதிய பிரதமர் அந்தப் பட்டணத்திற்கு விஜயம் செய்யப் போகிறார்’ என்ற செய்தி, இருவரையும் ஒரே காலத்தில் திக்குமுக்காடச் செய்தது. அகப்பட்டதை அனுகூலமாகப் பயன்படுத்திக் கொள்ளலாமென்று இருவரும் அங்கலாய்த்தனர்.

பட்டணத்துப் பெரிய மனிதர்களெல்லாம் இது சம்பந்த மாக ஒன்று கூடினர். அதில் நமது ‘ ஏழைகளின் தொண் டரும், ‘ பாட்டாளிகளின் நண்பர் ‘களுமான திருவாளர்கள் சுந்தரம்பிள்ளையும் ஆறுமுகம்பிள்ளையும் பிரசன்னமா யிருந் தனர். அவர்களில்லாத பெரிய மனிதர் கூட்டம் எப்படித் தான் கூடமுடியும்?

பிரதமரின் வரவேற்புகளுக்கும், நிகழ்ச்சி நிரலுக்கும், அவருடைய சௌகரியங்களைக் கண்ணும் கருத்துமாகக் கவனிப்பதற்கும் ஒரு வரவேற்புக்குழு மேற்படி கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டது. அக்குழுவிலுள்ளவர்கள் ‘பசை’ உள்ளவர்களாக, கணக்குப் பார்க்காமல் செலவு செய்யக் கூடியவர்களாக இருப்பது தான் நல்லதென்பது கூட்டத்தின் பொதுவான அபிப்பிராயம். அதன் பிரகாரம், ஸ்ரீமான் சுந்தரம்பிள்ளை வரவேற்புக்குழுத் தலைவராகவும், திருவாளர் ஆறுமுகம்பிள்ளை அதன் காரியதரிசியாகவும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

அப்பதவிகள். சாதாரணமாகக் கிடைக்கக் கூடியவையல்ல. ‘காக்கா பிடிப்பதற்குக் – கேந்திரமான பதவிகள். மேற்படி பதவிகள் எம்பிரான் அனுக்கிரகம் என்று தான் கொள்ள வேண்டும். மறு புதுவருடப் பட்டங்களில் முதலியார் பட்டப் பட்டியலில் இருவரின் பெயர்களும் இடம் பெற்றுவிட்டதாக அப்பொழுதே எண்ணத் தலைப்பட்டனர். விஷயத்தை வெளியில் ‘காட்டிக் கொள்ளாது, பலத்த கர கோஷங்களுக்கிடையில், ‘நமது கடன் பணி செய்து கிடப்பதே. நாம் தோளாடு தோள் நின்று உழைத்து, பிரதமருக்குப் பிரமாதமான வரவேற்பொன்றினைக் கொடுத்து, மக்களின் நலன் கருதி பட்டினத்திற்குத் தேவையான சௌகரியங்களையும், சலுகைகளையும் பெற்றுத் தருவோம்?’ என்று இருவருமே நன்றி உரையில் சபதம் கூறினர்.

சுந்தரம்பிள்ளை அகம் மலர ஆறுமுகம்பிள்ளையைப் பார்த்தார். இவரும் அவரைப் பார்த்து முறுவல் பூத்தார். நீண்ட நாட்களின் பிரிவுக்குப் பின்னர் சந்திக்கும் அத்தியந்த நண்பர்களைப் போல, இருவரும் கட்டித் தழுவிக் கை குலுக்கிக் கொண்டனர். கூட்டம் இனிது கலைந்தது. சுந்தரம்பிள்ளையும், ஆறுமுகம்பிள்ளையும் கரம் கோர்த்தபடி, ராஜமிடுக்குடன் வெளிவந்தனர்.

“மிஸ்டர் ஆறுமுகம்பிள்ளை! உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டுமென்று நினைத்திருந்தேன். வித்தியாசமாக நினைக்காதீங்க. உங்களுடைய டிரைவர் என்னைப்பற்றி அன்றைக்கு என்னென்னமோ சொன்னானாம். அதைப் பற்றி நீங்க கொஞ்சம் கவனித்தால்……” – என்று இழுத்தார் தலைவர் அவர்கள்.

“அதற்கென்ன? உங்களிடமும் நான் இதைச் சொல்ல நினைத்திருந்தேன்; சொல்லிவிடுகிறேன். உங்கள் டிரைவர் கூட என்னைக் கடைத் தெருவில் சின்னத்தனமாகத் திட்டினானாம். இந்த வேலைக்கார நாய்களுக்கெல்லாம் நாம் இடங்கொடுக்கக் கூடாது. எதற்கும் நீங்களும் கொஞ்சம் கவனித்தால்…” – காரியதரிசியும் அதே குரலில், அதே லெயிப்புடன் சொன்னார்.

***

அடுத்த நாள் சுந்தரம்பிள்ளை மணியத்திற்குச் சீட்டுக் கிழித்தார். அதேபோல ஆறுமுகம்பிள்ளை கந்தையாவை ‘டிஸ்மிஸ்’ செய்தார்.

எஜமானருக்கு விசுவாசமான ஊழியம் செய்த இருவரும் காரணமறியாது, பேந்தப் பேந்த விழித்தனர்; பிடரி மயிரைச் சொறிந்தனர்.

இருவரும் வேலை தேடித் தேடி அலுத்துப் போனார்கள். எஸ்.எஸ்.ஸி. படித்துச் சித்திபெற்று, வேலையின்றி ரோட்டளப்பவர்களுடைய பட்டியலே லகரத்தைப் பிடித்துவிட்ட பொழுது. இவர்களுக்கு வேலைகளைத் தூக்கியா கொடுத்து விடப் போகின்றனர்? கடைசியில், செய்யாத குற்றத்திற்காக மனம் கசிந்துருகி மன்னிப்புக் கேட்டு, பழைய வேலையையே திரும்பிப் பெறும் நோக்கமாக, இருவரும் எஜமானர் வீடுகளுக்குக் காவடி யெடுத்தனர். அவர்கள் இவர்களுடைய கண்களில் தட்டுப்படவே இல்லை. அவர்களுக்குத் தலைக்குமேல் தலை புழுத்த வேலையாம்!

***

அன்று பிரதமருக்கு வரவேற்பு.

வேடிக்கை பார்க்கத் தனித்தனியே சென்ற கந்தையாவும், மணியமும் அங்கு சமீபம் சமீபமாக நிற்க நேரிட்டது. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துவிட்டனர். இருவர் முகங்களிலும் எள்ளும் கொள்ளும் வெடித்தன. பழைய எஜமான பக்திதான் இப்பொழுதும் அவர்களை உடும்புப் பிடியாக ஆட்டுகிறது என்பதை முகபாவங்கள் தெளிவாகக் காட்டின.

பொது வரவேற்பு முடிந்ததும், பிரதமருடன் சில குறிப் பிட்ட பிரமுகர்கள் வாடிவீட்டு விருந்திற்குச் செல்வதை அவர்கள் அவதானித்தனர். அந்தப் பிரமுகர்களுடைய பட்டியலில் சுந்தரம்பிள்ளையும், ஆறுமுகம்பிள்ளையும் இடம் பெற்றுச் செல்வதை அப்பொழுது தான் இவர்கள் இருவரும் அறிந்தனர். ‘இழந்த வேலையை எப்படியும் பெறவேண்டும்’ என்ற எண்ணம் இருவருடைய மனங்களிலும் ஏககாலத்தில் குதிர்ந்தது. வாடிவீட்டு வாசலுக்கு விரைந்தனர். ‘நல்ல மூட்’ உள்ள இந்தச் சமயங்களில் தலையைச் சொறிந்து காரியம் சாதிக்கலாமென்பது அவர்களுடைய அனுபவம்.

இரு எரிமலைகள், ‘தத்தம் ‘மாஜி’ எஜமானர்களின் வருகைக்காக வாடிவீட்டு வாசலில் காத்திருந்தன.

கூட்டம் கலைந்தது. பிரமுகர்கள் ஒவ்வொருவராகக் கலைந்தனர்.

கடைசியாக வரவேற்புக் குழுத்தலைவரும், காரியதரிசியும் – அதாவது இந்த இருவரின் ஐயாமார்களும் – ஆடி அசைந்து கொண்டு வெளியே வந்தனர். ஒருவருடைய தோளில் மற்றவர் கைபோட்ட வண்ணம், அத்தியந்த நண்பர்களாக இருவரும் வெளியேறுவதை கந்தையா கண்டான்; மணியமும் பார்த்தான்.

இந்த அபூர்வக் காட்சியை முதற் தடவையாகக் கண்ட இருவரும் திகைத்தனர்; திடுக்கிட்டனர். ‘உண்மைதானா?’ என மலைத்தனர். அவர்களை நெருங்க இவர்கள் அஞ்சினர்.

அவர்களிருவரும் அப்பொழுது அவர்களாக இல்லை. மேலை நாட்டுச் சரக்கு இந்தக் கீழ்நாட்டவரிடம் தனது வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் அவர்களிடம் பேச்சுக் கொடுப்பதே தவறு என்பது இவர்களுக்கு அனுபவத்தில் நன்றாகத் தெரியும்.

கனவான்கள் இருவரும் இவர்களை ஒரு பொருட்டாக மதிக்காதபடி, தள்ளாடித் தள்ளாடி நடந்த வண்ணம் ஒரே காருக்குள் போய் ஏறிக்கொண்டனர். அடடா, அது ஒரு ‘ ரோல்ஸ் ராய்ஸ்’ கார்!

பெருமூச்சு விட்டபடி மணியம் கந்தையாவைப் பார்த்தான்; கந்தையா மணியத்தைப் பார்த்தான். இருவருடைய கண்களும் கலங்கியிருந்தன.

இருவரும் பேசினர்…

…எல்லோருக்கும் தெரிந்த பாஷையில், அவர்கள் வாய்விட்டுப் பேசவில்லை, ‘காதலர்களின் தனியுடமை’ என்று கவிஞர்களால் கொண்டாடப்படும் விழிமொழி மூலம் அவர்கள் பேசிக் கொண்டனர். அவர்களுடைய பார்வையில், இதுவரை பேச்சிலும் எழுத்திலும் தொனிக்காத ஒரு புதிய ஒலி-எழுச்சி-வியாபித்திருந்தது.

பழைய குரோதம் சாம்பராகி, அதன் மேட்டிலே குளுமை தோன்றி…….

அவர்கள் அவர்கள்தான்; இவர்கள் இவர்கள்தான்!

– 10-16-1954 – தண்ணீரும் கண்ணீரும் – சரஸ்வதி வெளியீடு – முதற் பதிப்பு – ஜூலை 1960

குறிப்பு:டொமினிக் ஜீவா 28-1-2021 அன்று தன் 94ஆவது அகவையில் மறைந்தார். ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். முற்போக்கு இலக்கியத்திற்காக மல்லிகை என்னும் மாத இதழை நாற்பதாண்டுகளுக்கும் மேலாக நடத்திவந்தார். இவரது தண்ணீரும் கண்ணீரும் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *