ஆழ்ந்த அநுதாபங்கள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 24, 2022
பார்வையிட்டோர்: 5,014 
 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இருளும் ஒளியும் மரணத்தைத் தழுவி விட்ட…… பின் அந்தி நேரம் :

முற்றத்தில் நிலா வெளிச்சத்தில் தெரிகிற – பவள மல்லிகை மரத்தில் நிலைத்த பார்வையுடன் நின்றேன்.

பவளமல்லிகை பூத்திருந்ததை நான் காணவில்லை! ஒரு வகை நிர்க்கதியான உணர்ச்சியால் என் கண்கள் நீர் சுரந்தன.

ஆனால் நான் அழவில்லை!

பக்கத்து வீட்டுப் பரமசாமி அண்ணை பேப்பர் வாங்க வந்தார்.

எனது நிலா முற்றம் நாய்க் குரைப்பின் அச்சத்தில் உறைந்திருந்து, இப்போது தான் சற்று விடுபட்டிருக்கிறது.

“பேப்பரைக் கெதியாத் தாருங்கோ போவம்,” அவரது குரலில் ஒரு அதிகாரம்.

பேப்பர் எங்களுடையது- அவர் நாள் தோறும் வாங்கி வாசிப்பவர் என்ற உண்மையை …… என்ன செய்வது? எங்காவது எழுதி ஒட்டலாம்!

அவருக்குத் தரப்பட வேண்டிய சட்டப்படி பேப்பரை மிக விரைவில் தந்து, அனுப்பிவிடாதது ஒரு குற்றம் போல……. அந்த அதிகாரக் குரல்!

ஒன்றும் பேசாமல் அன்றைய தினசரிகள் இரண்டையும் எடுத்து வந்து அவரிடம் தந்தேன்.

அவரைப் பின் தொடர்ந்து படலை வரை சென்று, படலையை ஆமைப் பூட்டுப் போட்டுப் பூட்டி விட்டுத் திரும்ப, இருளைப் பிய்த்துக் கொண்டு ஒற்றையாய் ஒரு கூக்குரல் ஓலம் !

என்னவாய் இருக்கும்?

களவோ ? கொலையோ? அதைப்பற்றி அக்கறைப்பட்டுப் போய்ப் பார்க்கும் மனத்துணிவோ மனிதாபிமானமோ யாரிடமும் இல்லை !

“படலையை வெள்ளெனப் பூட்டினால் வராங்களோ?” பரமசாமி அண்ணை நக்கலுடன் சிரித்து விட்டுத் தன் வீட்டினுள் நுழைந்தார்.

நுழையும் போது தன் வீட்டுப் படலையை மறக்காமல் பூட்டிக் கொண்டே போனார்.

விடிந்த பின் சிலவேளை என்ன நடந்த தென்று தெரியவரும்! சில வேளை வராது! ஒரு தினுசாய், மனமில்லாமல் அலட்சியமாய் வெறுப்புடன் கூடவே மெதுவாய் ஒரு நாவலை எடுத்துப் பிரித்தேன்.

படலையில் மீண்டும் ஒரு ‘ரோச்’ வெளிச்சம்! யாராக இருக்கும்?

யாராக இருந்தாலும் அவசரமாய் ஓடிப்போய்த் திறக்கக் கூடாது! திறந்தவர்கள் பட்ட பாடுகள், கெட்ட கேடுகள் தெரியும் தானே? அனுபவங்கள் எல்லாம் எமக்குச் சிறந்த முன்னுதாரணங்களாய் இருக்க வேண்டும்.

“ஆரது….. ஆ…. ஆரது……?” படலையில் நிற்பவனுக்குக் கேட்டிருக்கும்.

“அது நான் தான்… பாப்பாண்ணை … திறவுங்கோ .”

என்னுடைய வீட்டுப் பெயர் பாப்பாண்ணை என்று தெரிந்தவர்….. தெரிந்ததாள் …. பெண் குரல் போல் இருக்கிறது, பயமின்றித் திறக்கலாம்.

“அட நீரே… பபி… நான் ஆரோவெண்டு …….”

பபி மாநிறம்! குறு குறு விழி!

“நான் தான் அண்ணை , உங்களிட்டைக் கதைப் புத்தகம் ஏதும் இருந்தால் வாங்கியரட்டாம் அம்மா. ‘கறன்ரும்’ இல்லை வேறை வேலை ஒண்டும் செய்ய ஏலாது, பொழுது போகேல்லையாம் இரவைக்கு வாசிக்க….”

‘ஏதும் இருந்தால்’ என்ன ? இருக்கிறது என்று தெரிந்து தானே வருகிறார்கள்!

பபி அல்லது பபியின் அம்மா படுத்திருந்தபடியே வாசித்து .. அப்படியே நித்திரையாகி, புத்தகம் ஏதோ ஒரு பக்கம் திறந்த நிலையில் நித்திரையாகி புரளும் உடம்பின் கீழ் அகப்பட்டு நசிந்து கசங்கிச் சிலசமயம் கிழிந்து அழுக்காகி..

ஐயோ… உங்கள் கையில் விரிந்து கிடப்பது வெறும் புத்தகம் அல்ல. எழுதியவனின் இதயம் என்பதை நீங்கள் எல்லாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறீர்கள்!

யாழ்ப்பாணத்தின் எந்த மூலையில் எந்த நூலுக்கு வெளியீட்டு விழா நடந்தாலும் அந்த இடத்திற்குப் போய் விலை கொடுத்து அந்த நூலை வாங்கி வந்துவிடும் விசர்’ என்று தெரிந்து …..

குறைந்த பட்சம் – வெளியீட்டு விழாவுக்குப் போகாவிட்டாலும், பூபாலசிங்கத்தில் தேடிப் பிடித்து அந்த நூலை வாங்கிவிடும் பனி’ என்று புரிந்து …..

“உள்ளுக்கு வாருமன்.”

“இல்லை நான் இதிலை நிக்கிறான், கெதியாத் தாருங்கோ நாய் குலைக்குது போவம்.”

நிலவு தனித்துப் போய் ஒளியிழந்து ஊர்ந்து போய்க்கொண்டிருக்கிறது. “உங்களிட்டை இந்தக் குழந்தைப் பிள்ளைகள் வாசிக்க – பெரிய எழுத்திலை நல்ல புத்தகங்கள் – ரஷ்யன் பப்ளிகேஷன்ஸ் இருக்கும். உங்கடை மகன் வாசிக்கிறதெண்டு என்ரை மகன் வந்து சொன்னவர். இரண்டு புத்தகம் தந்தீங்களெண்டால் ஒரு கிழமையில் திருப்பித் தந்திடுவன்,” என்று எண்பத்தெட்டில் கேட்டு வாங்கிய பூரணம் ரீச்சர், எண்பத்தொன்பதிலும் அந்தப் புத்தகங்களைத் தந்ததாய் நினைவில்லை.

“நான் திருப்பித் தந்திட்டன் எண்டுதான் ஞாபகம். எதுக்கும் நீங்கள் இன்னொருக்கா வீட்டிலை வடிவாய்ப் பாருங்கோ,” என்று பூரணம் ரீச்சர் சொன்ன பிறகு, நான் எந்த முகமூடியைப் போட்டுக் கொண்டு திருப்பிக் கேட்கலாம்?

சும்மா சொல்லக் கூடாது!

மனதையே கழுவி வெளியே தள்ளி விடுவதில் இந்த மனிதர்கள் மகா சமர்த்தர்கள்!

முன் வீட்டில் வீடு கழுவும் சத்தம் கேட்கிறது!

நாளைக்குத் திவசமோ?

“நான் இந்த ஈழத்தில் கவிதை வளர்ச்சி பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதிறன். உங்களிட்டை இருக்கிற கவிதை நூல்களை ஒருக்காத் தந்தியளெண்டால் …”

பல்கலைக்கழகப் பிறவி ஒன்று!

திருப்பி நான் பல நேரம் கேட்டபோதும், ஆய்வுக் கட்டுரை இன்னும் எழுதி முடியேல்லை, இன்னும் எழுதி முடியேல்லை, முடியேல்லை …….’ என்று!

அந்த ஆய்வுக் கட்டுரை தேடிக் கொடுத்த பட்டம் வந்து விட்டது. என்னுடைய புத்தகங்கள் தான் வரவில்லை!

இவர்கள் எல்லாம் கெட்ட மனிதர்களா? இல்லை, நிச்சயம் அப்படிச் சொல்ல முடியாது! இவர்களில் பலர் கோயில் குளத்தில் கூட அரை நம்பிக்கையும் பக்தியுமுள்ளவர்கள்.

குற்ற உணர்வை மறைக்கத்தான் பக்தி தலைவிரித்தாடுகிறதோ? அது குற்றம் என்று அவர்கள் உணர்வதே இல்லை என்பதுதான் சரியாய் இருக்குமோ?

“எங்கை? இதிலை கிடந்த கயல்விழியைக் காணேல்லை…?” அலுமாரியைத் திறந்து பார்த்த என் மனைவி ரௌத்திர மூர்த்தம் பெற்றாள்.

“யாரிட்டையோ குடுத்திட்டன் ஞாபகமில்லை ,” நான் இரகசியம் பேசுவது போன்ற குரலில்!

“புத்தகங்களைக் குடுக்கிற தெண்டால் ஒரு கொப்பியிலை எழுதி வைச்சிட்டுக் குடுங்கோ எண்டு எத்தனை நாள் சொன்னனான். எவ்வளவு பெறுமதியான புத்தகங்கள் எல்லாம் தானம் பண்ணிப் போட்டு நிக்கிறியள். உங்களுக்கு வீட்டைப் பற்றி ஏதும் சிந்தனை இருந்தாத்தானே….”

அவள் எனக்கு மரண மண்டனை விதிக்க ஆயத்தமானவள் போல நின்றாள்.

மனிதர்கள் எவ்வளவு அழகாக மனிதர்களைப் புரிந்து கொள்கிறார்கள் தெரியுமா?

“நாளைக்கு ரெஸ்ற் பாப்பாண்ணை, அந்தக் கல்வி உளவியல் புத்தகம், முத்துலிங்கம் எழுதினது, ஒருங்காத் தாங்கோ ‘ரெஸ்ற்’ முடிஞ்ச உடனை தாறன்.”

ஏதோ சோதனை விடயம். புண்ணியமாய்ப் போகட்டும் என்று நினைவு வந்ததும் பிழையாகப் போயிற்று.

சீப்பைத் தப்பவிட்ட பிடரிச் சுருளுடன் இராசமலர்… முத்துலிங்கத்தின் புத்தகத்தையும் எங்கேயோ தப்ப விட்டு விட்டாள் என்பதுதான் என்னுடைய ஊகம்

எப்போது நான் கண்டாலும் “ஐயோ மறந்திட்டன் நாளைக்கு ,” என்று ஸ்ரீறியோரைப் பதில் தான்.

ஒரு வேளை மறந்து போவது உண்மையாகவுமிருக்கலாம். மூளை தனக்கு முக்கியமில்லை என்று கருதும் விடயங்களை உடனே மறந்துவிடுமாம்.

ஒருவர் தனது காதலன் அல்லது காதலி சந்திக்கும்படி கூறிய இடத்தையும் நேரத்தையும் ஒரு போதும் மறப்பதில்லையாம்!

சரிதான்!

என்னிடம் புத்தகம் இரவல் வாங்கியது அப்படி என்ன பெரிய முக்கிய விடயமோ, இராசமலரின் மூளை மறந்து விடாமல் இருக்க?

என்னுடைய மூளையும் மறந்து விட்டால் … தொல்லை தீர்ந்தது!

பணம் இரவல் கொடுத்தவர்களே பலர் சிரித்துச் சமாளித்துவிடும் போது, இது என்ன புத்தகம் தானே, போனால் போகிறது! வெறும் நூல் விடயம்.

அப்படி நினைக்க முயன்ற போது, என்னுள் ஏதோ ஒன்று இடிந்து தகர்ந்து போயிற்று!

மறதி என்பது இறைவன் மனிதனுக்குக் கொடுத்த வரங்களில் அதி அற்புதமானது!

நான் யார், யாருக்கு எந்தெந்தப் புத்தகங்கள் இரவல் கொடுத்தேன் என்பதில் அரைவாசியாவது மறந்து போனபடியால் இப்படி இருக்கிறேன்.

இல்லாவிட்டால்…?

உள்ளே தீ எரிந்தாலும் முகத்தில் நிலவைப் பொழியும் திறமை என்னிடம் இல்லை .

எனக்கு வருகின்ற கடிதங்களுக்கு முடிந்தவரை ஒழுங்காகப் பதில் எழுதுகிற குணம் எனக்கு இருந்தது. இது போன்ற கடிதங்களைக் காணும் வரை!

அன்புடையீர்!

நாங்கள் எமது ஊரில் புதிதாக ஆரம்பித்துள்ள சனசமூக நிலையத்தில் ஒரு நல்ல நூல் நிலையத்தை அமைக்கத் தீர்மானித்துள்ளோம். (பேஷாய்த் தீர்மானிக்கலாம் யார் வேண்டாம் என்றது?)

நீங்கள் வெளியிட்ட நூல்களில் இவ்விரண்டு பிரதிகளை எமக்கு அன்பளிப்பாகத் தரவேண்டும். (ஓகோ….. அப்படி வாருமன் வழிக்கு !)

நீங்கள் அந்த நூல்களை எமது சனசமூக நிலையத்தில் அல்லது யாழ் நவீன சந்தையில் உள்ள எகஸ்’ என்ற கடையில், 10/10/…. க்கு முன் ஒப்படைத்தால் நல்லது. (புத்தகம் இலவசமாய்த் தரவேண்டும், அதைக் கூட நீர் வந்து எடுக்க மாட்டீர். நான் நீர் குறிப்பிடும் இடத்தில் குறிப்பிட்ட திகதியில் ஒப்படைக்க வேண்டும்! நீர் என்ன என்னை அவ்வளவு வெங்காயம் என்றா நினைத்துக் கொண்டிருக்கிறீர்!)

உங்கள் அன்புள்ள (ஓ…… உமக்கு என்னிடம் சரியான அன்பு)

செயலாளர், சனசமூக நிலையம்.

புத்தகங்களை அன்பளிப்பாக வழங்க எனக்கு ஒருவரும் கிடைக்காமல் நான் மிகுந்த ஏக்கத்துடன் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன் என்பதுதான் உமது கணிப்பா?

சுக்… சுக்… சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டேன் கடிதத்தை .

இதைப் போல பல கடிதங்கள்!

பாடசாலைகளில் இருந்து ….. சனசமூக நிலையங்களில் இருந்து … போட்டிகள் வைத்துப் பரிசு கொடுப்பவர்களிடமிருந்து …!

கலைக்கக் கலைக்கத் திரும்பி வரும் ….. வருவதாகச் சொல்லப்படும் செய்வினைப் பேய் மாதிரி

மனதில் குடைச்சல்!

‘அமெரிக்க லைபிரரி ஒண்டுக்கு எங்கடை எழுத்தாளர் எல்லாற்றை புத்தகமும் அனுப்பப் போறான், உங்கடை புத்தகங்களிலை இவ்விரண்டு தாருங்கோ.’

இப்போது அறிமுகமாகிறவர் ஒரு ஏஜண்ட்! அமெரிக்கன் லைபிரரி எப்போதும் பணம் கொடுத்துத்தான் நூல்களை வாங்கும். அன்பளிப்புக் கேட்காது, ஆனால் இவர் பணத்தைப் பற்றி மூச்சு விட்டதும் இல்லை !

“உங்கடை புத்தகம் அந்த லைபிரியிலை போட்டாச்சு, இந்தா காட்லோக்’ வந்திருக்கு , பாக்கப் போறியளே?”

தன்ரை புத்தகம் அமெரிக்கா லைபிரரியிலை இருக்கெண்டு தெரிஞ்சால் போதும், அதின்ரை உற்பத்திச் செலவைப் பற்றி மறந்து போடுவான் இந்தப் புகழ் விரும்பி எழுத்தாளன் என்ற நினைவு!

மனித சிந்தனைகளை அப்படியே படம் பிடித்துத் திரையில் விழுத்த ஒரு கருவி இருந்தால்……! ஆகா என்ன அற்புதமாய் இருக்கும்?

‘இங்கே தேவையான புத்தகங்கள் எல்லாம் அன்பளிப்புச் செய்யப்படும்’ என்றொரு போட் எழுதி படலையிலை மாட்டிவிட்டால் பிரச்சினை இல்லைப் போலிருக்கிறது.

தர்மமும், பண்புகளும்…… ‘மனேர்ஸ்….’ எல்லாமே புராண இதிகாசங்களில் மட்டும் சிறைப்பட்டுப் போன பின்பு…….!

“என்னண்ணை ? யோசிச்சுக் கொண்டு நிக்கிறியள் ….? புத்தகம் …….” படலையில் நிற்கும் பயி அவசரப் படுத்துகிறான்.

குருட்டு இருளில் சாவின் துயரம் முகத்திலறையும் சூழல் !

நாளை இருப்பது நிச்சயமற்றது. புத்தகங்களை என்ன கொண்டா போகப் போகிறோம்?

மௌனமாய் உள்ளே வந்து நாவல்களை எடுத்து பபியிடம் கொடுக்கிறேன்.

நீங்கள் யாரும் ஆழ்ந்த அநுதாபங்களை அடித்துத் திணித்து எனக்கு அனுப்ப வேண்டாம்.

ஏனென்றால் ….. நான் ஒரு ஈழத் தமிழ் எழுத்தாளன் .

நான் இவற்றையெல்லாம் பழக வேண்டும் பாருங்கள்.

மை இருள் உலகத்தை மலைப்பாம்பு போல் விழுங்கி இருக்கிறது.

தங்கை விரித்த தலையுடன் இருக்கிறாள்.

மாலையில் முழுகினாள் …. இன்னும் தலை காயவில்லையாம்!

– மல்லிகை – ஆவணி ’89

– வாழ்வு வலைப்பந்தாட்டம் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: ஜூலை 1997, கலை இலக்கியக்களம், தெல்லிப்பழை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *