ஆறில் ஒரு பங்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 20, 2013
பார்வையிட்டோர்: 22,021 
 
 

முகவுரை

ஒரு ஜாதி ஓர் உயிர்; பாரத நாட்டிலுள்ள முப்பது கோடி ஜனங்களும் ஒரு ஜாதி. வகுப்புகள் இருக்கலாம்; பிரிவுகள் இருக்கலாகாது. வெவ்வேறு தொழில் புரியலாம்; பிறவி மாத்திரத்தாலே உயர்வு தாழ்வு என்ற எண்ணம் கூடாது. மத பேதங்கள் இருக்கலாம்; மத விரோதங்கள் இருக்கலாகாது.

இந்த உணர்வே நமக்கு ஸ்வதந்திரமும் அமரத்தன்மையும் கொடுக்கும். வேறு வழியில்லை.

இந்நூலை, பாரத நாட்டில் உழவுத் தொழில் புரிந்து நமக்கெல்லாம் உணவு கொடுத்து ரக்ஷிப்பவர்களாகிய பள்ளர், பறையர் முதலிய பரிசுத்தத் தன்மை வாய்ந்த வைசிய சகோதரர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்.

– ஆசிரியன்.


அத்தியாயம் – 1

மீனாம்பாள் வீணை வாசிப்பதிலே ஸரஸ்வதிக்கு நிகரானவள். புரசைவாக்கத்திலுள்ள எங்கள் வீட்டிற்கு அவள் வரும் சமயங்களிலெல்லாம் மேல மாடத்து அறையை அவளுடைய உபயோகத்துக்காகக் காலி செய்து விட்டு விடுவது வழக்கம். நிலாக் காலங்களில் இரவு எட்டு மணிக்கெல்லாம் போஜனம் முடிந்துவிடும். ஒன்பது மணி முதல் நடுநிசி வரையில், அவள் தனது அறையில் இருந்து வீணை வாசித்துக் கொண்டிருப்பாள். அறைக்கு அடுத்த வெளிப்புறத்திலே பந்தலில், அவளுடைய தகப்பனார் ராவ்பகதூர் சுந்தரராஜுலு நாயுடு கட்டிலின்மீது படுத்துக் கொண்டு சிறிது நேரம் வீணையைக் கேட்டுக் கொண்டிருந்து, சீக்கிரத்தில் குறட்டைவிட்டு நித்திரை செய்யத் தொடங்கிவிடுவார். ஆனால், மகாராஜன் குறட்டைச் சத்தத்தால் வீணை சத்தம் கேளாதபடி செய்து விடமாட்டார்; இலேசான குறட்டைதான். வெளிமுற்றத்தின் ஒரு ஓரத்திலே நான் மட்டும் எனது ‘பிரம்மசாரி’ப் படுக்கையைப் போட்டுக் கொண்டு படுத்திருப்பேன். வீணை நாதம் முடிவுறும் வரை, என் கண்ணிமைகளைப் புளியம் பசை போட்டு ஒட்டினாலும் ஒட்ட மாட்டா. மீனாம்பாளுடன் அறையிலே படுத்துக் கொள்ளூம் வழக்கமுடைய எனது தங்கை இரத்தினமும் சீக்கிரம் தூங்கிப் போய்விடுவாள். கீழே எனது தாயார், தமையனார், அவரது மனைவி முதலிய அனைவரும் தூங்கி விடுவார்கள். எனது தமையனார் மனைவி, வயிற்றிலே சோற்றைப் போட்டுக் கைகழுவிக் கொண்டிருக்கும்போதே, குறட்டை விட்டுக் கொண்டிருப்பாள். இடையிடையே குழந்தைகளின் அழுகைச் சத்தம் மட்டிலும் கேட்கும். தமையனாருக்குக் கோட்டையில் ரெவினியூ போர்டு ஆபீஸிலே உத்தியோகம். அவருக்கு நான்கு வருடங்களுக்கொரு முறை ஆபீஸில் பத்து ரூபாயும், வீட்டில் இரண்டு குழந்தைகளும் ‘ப்ரமோஷன்’.

வஸந்த காலம், நிலாப் பொழுது, நள்ளிரவு நேரம், புரசைவாக்கம் முழுதும் நித்திரையிலிருந்தது. இரண்டு ஜீவன்கள்தான் விழித்து இருந்தன. நான் ஒன்று, மற்றொன்று அவள்.

கந்தர்வ ஸ்திரீகள் ‘வீணை’ வாசிப்பதுபோல மீனாம்பாள் வாசிப்பாள். பார்ப்பதற்கும் கந்தர்வ ஸ்திரீயைப் போலவே இருப்பாள். அவளுக்கு வயது பதினாறு இருக்கும். கதையை வளர்த்துக் கொண்டு ஏன் போக வேண்டும்? மன்மதன் தனது அம்பொன்றின் முனையிலே என் பிராணனைக் குத்தி எடுத்துக் கொண்டு போய் அவள் வசம ஒப்புவித்து விட்டான். அடடா! அவளது இசை, எவ்வளவு நேரம் கேட்டபோதிலும் தெவிட்டாது. தினந்தோறும் புதுமை தோன்றும், அவள் முகத்தில். அவளுடைய தந்தையாகிய ராவ்பகதூர் சுந்தரராஜுலு நாயுடு எனது தாயாருக்கு ஒன்றுவிட்ட அண்ணன். தஞ்சாவூர் முதலிய பல ஜில்லாக்களில் நெடுங்காலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உத்தியோகம் பார்த்து ஸர்க்காருக்கு நன்றாக உழைத்ததினால் ‘ராவ் பகதூர்’ என்ற பட்டம் பெற்றவர். சுதேசியம் தொடங்கும் முன்பாகவே இவர் வேலையிலிருந்து விலகிவிட்டார். இதை எதன் பொருட்டாகச் சொல்லுகிறேன் என்றால் அவருக்குக் கிடைத்த பட்டம் வெறுமே சில சுதேசியத் தலைவர்கள்மீது ‘ரிப்போர்ட்’ எழுதிக் கொடுத்துச் சுலபமாகச் சம்பாதித்த பட்டமன்று. யதார்த்தத்திலேயே திறமையுடன் உழைத்ததினாற் கிடைத்த பட்டம். குழந்தை முதலாகவே மீனாம்பாளை எனக்கு விவாகம் செய்து கொடுக்க வேண்டும் என்பது அவருடைய கருத்து. அந்தக் கருத்து நிறைவேறுவதற்கு நேர்ந்த விக்கினங்கள் பல. அவ்விக்கினங்களில் பெரும்பானமையானவை என்னாலேயே உண்டாயின.

நான் சுமார் பதினாறு பிராயம் வரை சென்னைக் கிறிஸ்தியன் காலேஜில் படித்துக் கொண்டிருந்தேன். “வேத கால முதலாக இன்றுவரை பாரத தேசத்திலுள்ள ரிஷிகள் எல்லாரும் ஒன்றும் தெரியாத மூடர்கள். அர்ஜுனனும், காளிதாஸனும், சக்ராசாரியரும், சிவாஜியும், ராமதாஸரும், கபீர்தாஸரும், அதற்கு முன்னும் பின்னும் நேற்று வரையில் இருந்த பாரத தேசத்தார் அனவைரும் நெஞ்சில் வளர்த்து வந்த பக்திகளெல்லாம் இழிந்த அநாகரிகமான மூடபக்திகள்” என்பது முதலான ஆங்கிலேயே ‘சத்தியங்கள்’ எல்லாம் என் உள்ளத்திலே குடிபுகுந்து விட்டன. ஆனால் கிறிஸ்துவ பாதிரி ஒரு வினோதமான ஜந்து. ஹிந்து மார்க்கத்திலும், ஹிந்து நாகரிகத்திலும் பக்தி செலுத்துவது பேதைமை என்று ருஜுப்படுத்திக் கொண்டு வரும்போதே, அவர் கொண்டாடும் கிறிஸ்து மார்க்கமும் மூடபக்தி என்று வாலிபர் மனதில் படும்படி ஏற்பாடு செய்து விடுகிறார். மத விஷயங்களைப் பற்றி விஸ்தாரமான விஷயங்கள் எழுதி, படிப்பவர்களுக்கு நான் தலைநோவு உண்டாக்கப் போவதில்லை. சுருக்கம் : நான் எனது பூர்வ மதாசாரங்களில் பற்று நீங்கி ‘ஞானஸ்நானம்’ பெறவில்லை. பிரம்மா ஸமாஜத்திலே சேர்ந்து கொண்டேன்.

சிறிது காலத்திற்கு அப்பால், பட்டணத்தில் படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் யாரிடமும் சொல்லாமல் கல்கத்தாவுக்குப் புறப்பட்டுப் பொய், அங்கே பிரம ஸமாஜத்தாரின் மார்க்க போதனை கற்பிக்கும் பாடசாலையொன்றில் சேர்ந்து சில மாதங்கள் படித்தேன். பிரம ஸமாஜத்தாரின் ‘உபதேசி’களில் ஒருவனாக வெளியேற வேண்டும் என்பது என்னுடைய நோக்கம். அப்பால் அங்கிருந்து பஞ்சாப் ஹிந்துஸ்தானம் முதலிய பல பிரதேசங்களில் யாத்திரை செய்து கொண்டு கடைசியாக சென்னப் பட்டணம் வந்து சேர்ந்தேன். நான் ஹிந்து மார்க்கத்தை விட்டு நீங்கியதாக எண்ணி, எனது ஜாதியார் என்னைப் பலவிதங்களில் இம்சை செய்தார்கள். இந்த இம்சைகளினால் எனது சித்த உறுதி நாளுக்கு நாள் பலம் அடைந்ததேயல்லாமல், எனக்கு மனச்சோர்வு உண்டாகவில்லை. எனது தகப்பனார் – இவர் பெயர் துபாஷ் ராமச்சந்திர நாயுடு – வெளிவேஷ மாத்திரத்தில் சாதாரண ஜனங்களின் ஆசார விவகாரங்களை வைத்துக் கொண்டிருந்தார்; எனினும், உள்ளத்தில் பிரம்ம ஸமாஜப் பற்று உடையவர். ஆதலால், நான் வாஸ்தவமான பரமாத்ம பக்தியும், ஆத்ம விசுவாஸமும, எப்போதும் உபநிஷத்துக்கள் படிப்பதில் சிரத்தைக் கொண்டிருப்பது கண்டு, அவருக்கு அந்தரங்கத்தில் மிகுந்த உவகையுண்டாயிற்று. வெளி நடப்பில் என் மீது கோபம் பாராட்டுவது போலிருந்தாரேயன்றி, எனது பந்துக்கள் சொற்படி கேட்டு என்னைத் தொல்லைப்படுத்தவில்லை. ஸகல ஸௌகரியங்களும் எனக்கு முன்னைக் காட்டிலும் அதிகமாக நடக்கும்படி வீட்டில் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார். ஆனால், எனது தமையன் மாத்திரம் என்னிடம் எக்காரணம் பற்றியோ மிகுந்த வெறுப்பு பாராட்டினான். நான் தலையிலே பஞ்சாபிகளைப் போலப் பாகை கட்டிக் கொள்வது வழக்கம். ‘15 ரூபாய்’க் குமாஸ்தாக்களுக்கென்று பிரத்தியேகமாக அழகு, அந்தம், ஆண்மை எதுவுமின்றி ஏற்பட்டிருக்கும் கும்பகோணத்துப் பாகை நான் கட்டிக் கொள்ளுவதில்லை. இது கூடத் தமையனுக்குக் கோபம உண்டாகும். “ராஜ புத்ருடு வீடு, தொங்க விதவா! தலலோ மகா ஆடம்பரமுக பகடி வீடிகி!” என்று ஏதெல்லாமோ சொல்லி ஓயாமல் திட்டிக் கொண்டிருப்பான். இப்படியிருக்க ஒரு நாள் எனது தகப்பனார் திடீரென்று வாயுக் குத்தி இறந்து போய்விட்டார். அவருக்குப் பிரம ஸமாஜ விதிப்படி கிரியைகள் நடத்த வேண்டும் என்று நான் சொன்னேன். எனது தமையன் சாதாரண ஆசாரங்களின்படிதான் நடத்த வேண்டும் என்றான். பிரமாத கலகங்கள் விளைந்து, நானூறு மத்தியஸ்தங்கள் நடந்த பிறகு மசானத்தில் அவன் தனதிஷ்டப்படி கிரியைகள் முடித்த பின்பு நான் எனது கொள்கைப்படி பிரம்மா ஸமாஜ குரு ஒருவரை வைத்துக் கொண்டு கிரியைகள் செய்தேன். இதுவெல்லாம் எனது மாமா ராவ் பகதூர் சுந்தரராஜுலு நாயுடுக்கு என் மீது மிகுந்த கெட்ட எண்ணம் உண்டாகும்படி செய்து விட்டது. ஆதலால் விவாகம் தடைபட்டுக் கொண்டே வந்தது. ஆனால், இறுதிவரை என்னை எப்படியேனும் சீர்திருத்தி, எனக்கே தனது மகளைப் பாணிக்கிரஹணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது அவருடைய இச்சை.

வஸந்த காலம், நிலாப்பொழுது, நள்ளிரவு நேரம். புரசைவாக்கம் முழுமையும் நித்திரையிலிருந்தது. விழித்திருந்த ஜீவன்கள் இரண்டே. ஒன்று நான்; மற்றொன்று அவள். இன்பமான காற்று வீசிக் கொண்டிருந்தது. மேல் மாடத்தில் மீனாம்பாளுடைய அறையிலிருந்து, முறைப்படி வீணைத் தொனி கேட்டது. ஆனால் வழக்கப்படி குறட்டை கேட்கவில்லை. ராவ்பகதூர் குறட்டை மாமா ஊரிலில்லை. வெளியே ஒரு கிராமத்துக்குப் போயிருந்தார். நான் நிலா முற்றத்தில் எனது கட்டிலின் மீது உட்கார்ந்து கொண்டிருந்தேன். என் உள்ளத்திலோ, இரண்டு எரிமலைகள் ஒன்றையொன்று சீரியெதிர்த்துப் போர் செய்து கொண்டிருந்தன. இவற்றுள்ளே, ஒன்று காதல், மற்றோன்று – பின்பு தெரிய வரும். வீணைத்தொனி திடீரென்று நின்றது. சிறிது நேரத்தில், எனது பின்புறத்தில் ஒரு ஆள் வந்து நிற்பது உணர்ந்து, திரும்பிப் பார்த்தேன், மீனாம்பாள்!

இப்பொழுதுதான் நாங்கள் புதிதாகத் தனியிடத்திலே சந்தித்திருக்கிறோமென்றும், அதனால் இங்கு நீண்டதோர் காதல் வர்ணனை எழுதப்படுமேன்ரும் படிப்பவர்கள் எதிர்பார்க்க வேண்டாம். இவ்விதமாக நாங்களிருவரும் பலமுறை சந்தித்திருக்கிறோம். மீனாம்பாள் மஞ்சத்தின் மீது உட்கார்ந்தாள்.

“மீனா! இன்று உன்னிடத்திலே ஒரு விசேஷம் சொல்லப் போகிறேன்’ என்றேன். ‘எனக்கு அது இன்னதென்று ஏற்கனவே தெரியும்’ என்றாள்.

‘என்னது? சொல்லு.”

‘நீ பிரம்மச்சரிய சங்கற்பம் செய்து கொள்ளப் போகிறாய் என்ற விசேஷம்.’

‘ஏன்? எதற்கு? எப்படி? உனக்கு யார் சொன்னார்கள்?” என்று கேட்டேன்.

‘வந்தே மாதரம்’ என்றாள்.

மீனாம்பாளுடைய அறிவுக் கூர்மை எனக்கு முன்னமே தெரியுமாதலால், அவள் சொல்லியதிலிருந்து அதிக வியப்பு உண்டாகவில்லை.

அதன்பின், நான் அவளிடம் பின்வருமாறு கூறலாயினேன்: “ஆம், பாரத தேசத்தை இப்போது பிரம்மசாரிகளே ரக்ஷிக்க வேண்டும். மிக உயர்ந்திருந்த நாடு மிகவும் இழிந்து போய்விட்டது. இமயமலை இருந்த இடத்தில் முட்செடிகளும் விஷப்பூச்சிகளும் நிறைய ஒரு பாழுங்காடு இருப்பது போலாகிவிட்டது. அர்ஜுனன் வாழ்ந்த மாளிகையில் வௌவால்கள் தொங்குவது போலிருக்கிறது. இதை பிரமச்சாரிகளே காப்பாற்ற வேண்டும். பொப்பிலி ராஜாவின் மகனாகவேனும், ராஜா ஸர் ஸவலை ராமசாமி முதலியார் மகனாகவேனும் பிறவாமல் நம் போன்ற சாதாரண குடும்பங்களிலே பிறந்தவர்கள் விவாகம் செய்து கொண்டால், இந்தப் பஞ்ச நாட்டில் அவர்களுக்கு மூச்சு முட்டிக் போகிறது. குருவியின் தலையிலே பனங்காயை வைப்பது போல, இந்த நரிக் கூட்டத்திலுள்ள ஒரு வாலிபன் தலையிலே ஒரு குடும்ப பாரத்தைச் சுமத்தும்போது, அவனுக்குக் கண் பிதுங்கிப் போய்விடுகிறது. அவனவனுடைய அற்ப காரியங்கள் முடிவு பெறுவதே பகீரத ப்ரயத்தனம் ஆய்விடுகிறது. தேச காரியங்களை இவர்கள் எப்படிக் கருதுவார்கள்? பிரம்மச்சாரிகள் வேண்டும்; ஆத்ம ஞானிகள் வேண்டும்; தம பொருட்டு உலக சுகங்களை விரும்பாத தீரர்கள் வேண்டும். இந்தச் சுதேசியம் கேவலம் ஒரு லௌகீக காரியமன்று. இது ஒரு கர்மம். இதில் பிரவேசிப்பவர்களுக்கு வீர்யம், தேஜஸ், கர்மதியாகித் தன்மை முதலிய அரிய குணங்கள் வேண்டும். நான் பிரம்மசரிய விரதத்தை கைக்கொள்ளலாமென்று நினைத்திருக்கிறேன். ஆனால்”

மீனா: “ஆனால், நான் அதற்கு ஒரு சனியாக வந்து குறுக்கிட்டிருக்கிறேன் என்று சொல்லுகிறாய்!”

‘பார்த்தாயா, பார்த்தாயா! என்ன வார்த்தை பேசுகிறாய்? நான் சொல்ல வந்ததைக் கேள். எனது புதிய சங்கற்பம் ஏற்படு முன்னதாகவே என் உயிரை உனக்கு அர்ப்பணம் செய்து விட்டேன். இப்போது எனது உயிருக்கு வேறொரு கடமை ஏற்பட்டிருக்கிறது. அவ்விஷயத்தில் உனது கட்டளையை எதிர்பார்த்திருக்கிறேன்” என்றேன். அவள் ஏதோ மறுமொழி சொல்லப் போனாள். அதற்குள் வாயிற்புறத்தில் ஒரு வண்டி வந்து நிற்கும் சப்தம் கேட்டது.

‘நாயன்னா வந்து விட்டார். நான் போகிறேன்’ என்று சொல்லி ஒரு முத்தத்துடன் பிரிந்தாள்.

குறட்டை நாயுடு கதவை உடைத்து, உள்ளிருக்கும் குறட்டைகளையெல்லாம் எழுப்பி, மேலே வந்து படுத்து அரை நாழிகைக்கெல்லாம் தமது தொழிலை ஆரம்பித்து விட்டார். இரண்டு ஜீவன்கள் அன்றிரவு முழுதும் விழித்திருந்தன. ஒன்று நான்; மற்றொன்று அவள்.

அத்தியாயம் – 2

மேல் அத்தியாயத்தின் இறுதியில் குறிக்கப்பட்ட செய்தி வந்ததற்கு அப்பால், சில மாதங்கள் கழிந்து போயின. இதற்கிடையே எங்களுடைய விவகாரத்திற் பல மாறுபாடுகள் உண்டாயிருந்தன. ‘வந்தே மாதரம்’ மார்க்கத்தில் நான் பற்றுடையவன் என்பதை அறிந்த ராவ் பகதூர் எனக்குத் தமது கன்னிகையை மணஞ் செய்து கொடுப்பது என்ற சிந்தனையை அறவே ஒழித்துவிட்டார். சில மாதங்களில் அவர் தமது சாஸ்வத வாஸஸ்தானமாகிய தஞ்சாவூரிலிருந்து புரசைவாக்கத்துக்கு வருவதை முழுவதும் நிறுத்தி விட்டார். இதனிடையே மீனாம்பாளுக்கு வேறு வரன்கள் தேடிக் கொண்டிருந்ததாகவும் பிரஸ்தாபம் ஏற்பட்டது. அவளிடமிருந்தும் யாதொரு கடிதமும் வரவில்லை. ஒருவேளை முழுதும் மறந்து போய்விட்டாளோ? பெண்களே வஞ்சனையின் வடிவம் என்று சொல்லுகிறார்களோ, அது மெய்தானா? “பெண்ணெனப்படுவகேண்மோ உள நிறைவுடைய வல்ல, ஓராயிர மனத்தவாகும்” என்று நான் சீவக சிந்தாமணியிலே படித்தபோது, அதை எழுதியவர் மீனாம்பாளைப் போன்ற ஸ்திரீயைக் கண்டு அவளுடைய காதலுக்குப் பாத்திரமாகும் பாக்கியம் பெறவில்லை போலும் என்று நினைத்தேனே. இப்போது, அந்த ஆசிரியருடைய கொள்கைதான் மெய்யாகி விட்டதா? நான் இளமைக்குரிய அறிவின்மையால், அத்தனை பெருமை வாய்ந்த ஆசிரியரது கொள்கையைப் பிழையென்று கருதினேன் போலும்!

‘அடா மூடா! எனக்கு ஏன் இதில் இவ்வளவு வருத்தம்? நீயோ பிரம்மசரிய விரதத்திலே ஆயுளைக் கழிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நாள்தோறும் மேன்மேலும் வளர்த்து வளர்த்து வருகின்றாய். மீனா மற்றொருவனை மணஞ் செய்து கொண்டால் உனக்கு எளிதுதானே? நீயோ வேறொரு பெண் மீது இவ்வாழ்க்கையில் மையல் கொள்ளப் போவதில்லை. இவளொருத்திதான் உனது விரதத்திற்கு இடையூறாக இருந்தாள். இவளும் வேறொருவனை மணஞ் செய்து கொண்டு அவன் மனைவியை விடுவாளாயின் உனது விரதம் நிர்விக்கினமாக நிறைவேறும். ஈசனன்றோ உனக்கு இங்ஙனம் நன்மையைக் கொண்டு விடுகிறான்? இதில் ஏன் வருத்தமடைய வேண்டும்?’ என்று சில சமயங்களில் என்னுள்ளம் தனக்குத்தானே நன்மதி புகட்டும்.

மீண்டும், வேறொரு விதமான சிந்தை தோன்றும்: “அவள் நம்மை மறந்திருக்கவே மாட்டாள். மாமா சொற்படி கேட்டு அவள் வேறொருவனை மணஞ் செய்து கொள்ளவே மாட்டாள். எனது பிராணனோடு ஒன்றுபட்டவளாதலால், எனது நெஞ்சத்திலே ஜ்வலிக்கும் தர்மத்தில் தானும் ஈடுபட்டவளாகி அந்தத் தர்மத்திற்கு இடையூறு உண்டாகும் என்று அஞ்சி எனக்கு ஒன்றும் எழுதாமலிருக்கிறாள். ஆமடி, மீனா! உன்னை நான் அறியேனா? எது வரினும் நீ என்னை மறப்பாயா? அந்தக் கண்கள் ‘உன்னை மறக்கவே மாட்டேன்’ என்று எத்தனை முறை என்னிடம் பிரமாணம் செய்து கொடுத்திருக்கின்றன! அந்தக் கண்கள்! அந்தக் கண்கள்! ஐயோ, இப்பொழுதுகூட என் முன்னே நிற்கின்றனவே! அவை பொய் சொல்லுமா?”

அப்பால் ஒரு உள்ளம்… “அடா! நல்ல துறவடா உன் துறவு! நல்ல பக்தியடா உன் பக்தி! நல்ல தர்மம்! நல்ல சிரத்தை! ஆரிய நாட்டை உத்தாரணம் செய்வதற்கு இப்படியன்றோ பிள்ளைகள் வேண்டும்? பீஷ்மர் வாழ்ந்திருந்த தேசமல்லவா? இப்பொழுது அதற்கு உன்னைப் போன்றவர்கள் இருந்து ஒளி கொடுக்கிறார்கள்! சீச்சீ! நாய் மனமே! அமிருத வெல்லத்தை விட்டு வெறும் எலும்பைத் தேடிப் போகிறாயா? லோகோத்தாரணம் பெரிதா, உனது புலனின்பம் பெரிதா? தர்ம சேவை பெரிதா, ஸ்திரீ சேவை பெரிதா? எதனைக் கைக்கொள்ளப் போகிறாய்? சொல்லடா சொல்!”

பிறகு வேறொரு சிந்தனை: “எப்படியும் அவளிடமிருந்து ஓர் உறுதி கிடைத்தால், அதுவே நமக்குப் பெரியதோர் பலமாயிருக்கும். ‘நீ தர்ம பரிபாலனம் செய். என் பொருட்டாகத் தர்மத்தைக் கைவிடாதே. நான் மரணம் வரை உன்னையே மானஸீகத் தலைவனாகக் கொண்டு நோன்புகள் இழைத்துக் காலம் கழிப்பேன். ஸ்வர்க்கத்திலே நாம் இருவரும் சேர்ந்து வாழலாம்’ என்று அவள் உறுதி தருவாளானால், இந்த் ஜன்மத்தில் ஜீவியம் வெகு சுலபமாய் இருக்கும்.”

அப்பால்: “ஒரேயடியாக, இவளுக்கு இன்னொருவனுடன் விவாகம் நடந்து முடிந்துவிட்டது என்ற செய்தி வருமானால், கவலை விட்டிருக்கும். பிறகு, இகத்தொடர் ஒன்றுமேயில்லாமல், தர்ம சேவையே தொழிலாக நின்று விடலாம்.”

பின் மற்றொரு சிந்தை: – “ஆ! அப்படி ஒரு செய்தி வருமானால் பின்பு உயிர் தரித்திருப்பதே அரியதாய்விடும். அவளுடைய அன்பு மாறிவிட்டது என்று தெரிந்தபின் இவ்வுலக வாழ்க்கையுண்டா?”

அப்பால் பிறிதொரு சிந்தை: “அவள் அன்பு! மாதர்களுக்கு அன்பு என்றதோர் நிலையும் உண்டா? வஞ்சனை கோபம் இரண்டையும் திரட்டிப் பிரமன் ஸ்திரீகளைப் படைத்தான்.’

இப்படி ஆயிரவிதமான சிந்தனைகள் மாறி மாறித் தோன்றி எனது அறிவைக் கலக்கின. ஆன்ம உறுதியில்லாதவனுடைய உள்ளம் குழம்பியதோர் கடலுக்கு ஒப்பாகும். இதனைப் படிக்கின்றவர், ஒரு கணம் சாக்ஷி போல் நின்று தமது உள்ளத்தினிடையே நிகழும் புரட்சிகளையும் கலக்கங்களையும் பார்ப்பாராயின், மிகுந்த வியப்பு உண்டாகும். மனித வாழ்க்கையிலே இத்தனை திகைப்புகள் ஏன் உண்டாகின்றன?

“மறப்பும் நினைப்புமாய் நின்ற வஞ்ச மாயா மனத்தால் வளர்ந்தது தோழி”

இவ்வாறிருக்கையில் ஒரு நாள் திடீரென்று எனது கையில் மீனாம்பாளின் கடிதமொன்று கிடைத்தது. அதனை இங்குத் தருகின்றேன். அஹ்டைப் படித்துப் பார்த்த பொழுது என்னுள்ளம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.

ஓம்.

தஞ்சாவூர்
உடையாய்,

இக்கடிதம் எழுதத் தொடங்கும்போதே எனது நெஞ்சு பதறுகிறது. எனக்கு எப்படி எழுதுகிறது என்று தெரியவில்லை. ஐயோ, இது என்னுடைய கடைசிக் கடிதம்! உன் முகத்தை நான் இனி இவ்வுலகத்தில் பார்க்கப் போவதில்லை.

‘நாயன்னா’ வருகிற தை மாதம் என்னை இவ்வூரில் புதிய இன்ஸ்பெக்டராக வந்திருக்கும் மன்னார் என்பவனுக்குப் பலியிட வேண்டுமென்று நிச்சயம் செய்து விட்டார். கலியாணத்துக்கு வேண்டிய சாமக்கிரியைகளெல்லாம் தயாராகின்றன. உனது பெயரைக் கேட்டால் வேட்டை நாய் விழுவதுபோல விழுந்து, காதால் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகள் சொல்லி நிந்திக்கிறார். நான் தப்பியோடி விடுவேன் என்று நினைத்து என்னை வெளியேறாதபடி காவல் செய்து விட்டிருக்கிறார். நீ ஒருவேளை இச்செய்தி கேட்டு இங்கு வருவாய் என்று கருதி, நீ வந்தால் வீட்டுக்கு வர முடியாமல் செய்ய, இவரும் மன்னாரென்பவனும் சேர்ந்து நீசத்தனமான ஏற்பாடுகளும் செய்து வைத்திருக்கிறார்கள். அவன் ‘நாயன்னா’வின் பணத்தின்மீது கண் வைத்து, இந்த விவாகத்தில் ஆசை மூண்டிருக்கிறான். எனது உள்ளத்திலே அவனிடம் மிகுந்த பகைமையும், அருவருப்பும் உள்ளனவென்றும், இப்படிப்பட்ட பெண்ணைப் பலவந்தமாகத் தாலி கட்டினால் அவனுக்கு வாழ்நாள் முழுதும் துக்கமிருக்குமேயல்லாது சுகமிருக்காது என்றும் சொல்லியனுப்பினேன். அதற்கு அந்த மிருகம், “எனக்கு அவளுடைய உள்ளத்தைப் பற்றி லக்ஷ்யமில்லை. அதைப் பின்னிட்டு சரிப்படுத்திக் கொள்வேன். முதலாவது, பணம் என் கையில் வந்து சேர்ந்தால், பிறகு அவள் ஓடிப்போய் அந்த ஜெயிலுக்குப் போகிற பயலுடன் சேர்ந்து கேட்டுத் திரிந்துவிட்டுப் பிறகு சமுத்திரத்தில் விழுந்து சாகட்டும்” என்று மறுமொழி கொடுத்தனுப்பி விட்டது.

அநேக தினங்களாக எனக்கு இரவில் நித்திரை என்பதே கிடையாது. நேற்றிரவு படுக்கையின்மீது கண் மூடாமல் படுத்துப் புரண்டு கொண்டிருந்தேன். அப்போது கனவு போன்ற ஒரு தோற்றமுண்டாயிற்று. தூக்கமில்லாதபோது, கனவு எப்படி வரும்? அஃது காணவுமில்லை, நினைவுமில்லை; ஏதோ ஒரு வகையான காட்சி. அதில் அதிபயங்கரமான ரூபத்துடன், இரத்தம் போன்ற சிவந்த விழிகளும் கரிய மேகம் போன்ற மேனியும், வெட்டுண்ட தலைகளின் மாலையும் கையில் சூலமுமாகக் காளிதேவி வந்து தோன்றினாள். நான் நடுங்கிப் போய், ‘மாதா என்னைக் காத்தருள் செய்ய வேண்டும்’ என்று கூறி வணங்கினேன். உடனே திடீரென்று அவளுடைய உருவம் மிக அழகியதாக மாறுபட்டது. அந்த ஸௌந்தர்யத்தை என்னால் வருணிக்க முடியாது. அவளுடைய திருமுடியைச் சூழ்ந்து கோடி சூரியப் பிரகாசம் போன்ற தேஜோ மண்டலம் காணப்பட்டது. கண்கள் அருள் மழை பொழிந்தன. அப்போது தேவி எனக்கு அபயப்பிரதானம் புரிந்து பின்வருமாறு சொல்லலாயினள்: “குழந்தாய் உனது அத்தான் கோவிந்தராஜனை எனது சேவையின் பொருட்டாக எடுத்துக் கொள்ளப் போகிறேன். உனக்கு இம்மையில் அவனைப் பெற முடியாது. நீ பிறனுக்கு மனைவியாகவும் மாட்டாய். உனக்கு இவ்வுலகத்தில் இனி எவ்வித வாழ்வுமில்லை. உங்கள் வீட்டுக் கொல்லையில், வடமேற்கு மூலையில், தனியாக ஒரு பச்சிலை படர்ந்திருக்கக் காண்பாய். நாளைக் காலை ஸ்நானம் செய்து பூஜை முடிந்தவுடனே அதில் இரண்டு இலைகளை எடுத்துத் தின்றுவிடு. தவறாதே!” மேற்கண்டவாறு கட்டளை கொடுத்துவிட்டுப் பராசக்தி மறைந்து போயினாள்.

காலையில் எழுந்து அந்தப் பச்சிலையைப் பார்க்கப் போனேன். வானத்தில் இருந்து ஒரு காகம் இறங்கிற்று. அது அந்தப் பச்சிலையைக் கொத்தி உடனே தரையில் மாண்டுவிழக் கண்டேன். தேவியின் கருத்தை அறிந்து கொண்டேன். இன்று பகல் பத்து நாழிகைக்கு அந்த இலைகளை நான் தின்று பரலோகம் சென்று விடுவேன். நின் வரவை எதிர்பார்த்து அங்கும் கன்னிகையாகவே இருப்பேன். நீ உனது தர்மங்களை நேரே நிறைவேற்றி மாதாவுக்கு திருப்தி செய்வித்த பிறகு அவள் உன்னை நான் இருக்குமிடம் கொண்டு சேர்ப்பாள். போய் வருகிறேன். ராஜா! ராஜா! என்னை மறக்காதே. வந்தே மாதரம்.”

இக்கடிதத்தைப் படித்துப் பார்த்தவுடன் மூர்ச்சை போட்டு விழுந்துவிட்டேன்.

அத்தியாயம் – 3

மீனாம்பாளுடைய ‘மரண ஓலை’ கிடைத்ததின் பிறகு இரண்டு வருஷங்கள் கழிந்துவிட்டன. இதனிடையே எனக்கு நிகழ்ந்த அனுபவங்களையெல்லாம் விஸ்தாரப்படுத்திக் கொண்டு போனால் பெரிய புராணமாக வளரும். சுருக்கமாகச் சொல்லுகிறேன். அந்த ஆற்றாமையால் வெளியேறிய நான் அப்படியே காஷாயம் தரித்துக் கொண்டு துறவியாக வடநாட்டிலே ஸஞ்சாரம் செய்து வந்தேன். ‘வந்தே மாதரம்’ தர்மத்தை மட்டிலும் மறக்கவில்லை. ஆனால் என்னை சர்க்கார் அதிகாரிகள் பிடித்துச் சிறையிலிடும்படியான முயற்சிகளிலே நான் கலங்கவுமில்லை; ஜனங்களுக்குள் ஒற்றுமையும் பலமும் ஏற்படுத்தினால், ஸ்வதந்திரம் தானே சித்தியாகும் என்பது என்னுடைய கொள்கை. காரணத்தை விட்டுப் பயனைச் சீறுவதில் என் மனங் குவியவில்லை. அங்கங்கே சில சில பிரசாரங்கள் செய்ததுண்டு. இது பற்றிச் சில இடங்களில் என்னைப் போலீஸார் தொடரத் தலைப்பட்டார்கள். இதனால், நான் ஜனங்களிடையே நன்றாகக் கலந்து நன்மைகள் செய்து கொண்டு போக முடியாதபடி பல தடைகள் ஏற்பட்டன. ஆகவே, எனது பிரசங்கங்களிலிருந்து எனது நோக்கத்திற்கு அனுகூலத்திலும் பிரதிகூலமே அதிகமாக விளங்கலாயிற்று. இதையும் தவிர எனது பிரசங்கங்களைக் கேட்டு ஜனங்கள் மிகவும் வியப்படைவதையும் மற்றவர்களைக் காட்டிலும் எனக்கு அதிக உபசாரங்கள் செய்வதையும் கண்டு உள்ளத்திலே கர்வம் உண்டாகத் தலைப்பட்டது.

“இயற்கையின் குணங்களிலிருந்து செய்கைகள் பிறக்கின்றன, மூடன் ‘நான் செய்கின்றேன்’ என்று கருதுகின்றான்” என்ற பகவத்கீதை வாக்கியத்தை அடிக்கடி மனனஞ் செய்து கொண்டேன். இந்த வீண் கர்வம், நாளுக்கு நாள் மிகுதியடைந்து என்னை விழுங்கி, யாதொரு காரியத்திற்கும் பயன்படாமற் செய்துவிடுமோ என்ற அச்சம் உண்டாயிற்று. வெளிக்குத் தெரியாமல் எவருடைய மதிப்பையும் ஸன்மானத்தையும் எதிர்பார்க்காமல் ஸாதாரணத் தொண்டு இழைப்பதற்கு என்னை மாயா வைத்திருக்கிறாள் என்பதை அறிந்து கொண்டேன்.

எனவே பிரசங்கக் கூட்டங்களில் சேர்வதை நிறுத்திவிட்டேன். சில தினங்களுக்கு அப்பால் எனக்குப் போலீஸ் சேவகர்கள் செய்யும் உபசாரங்களும் நின்று போய் விட்டன. பாதசாரியாகவே பல இடங்களில் சுற்றி விட்டு, பாதசாரியாகவே லாஹூர் நகரத்துக்குப் போய்ச் சேர்ந்தேன்.

அங்கே லாலா லஜபதி ராய் போன்ற பலரைப் பார்க்கவேண்டும் என்ற இச்சை ஜனித்தது. அவரைப் போய் கண்டதில், அவர் என்னிடம் நம்பிக்கை கொண்டவராகிக் கோசல நாட்டுப் பிரதேசங்களில் கொடிய பஞ்சம் பரவியிருக்கிறதென்றும், பஞ்சத்தில் கஷ்டப்படும் மக்களுக்குச் சோறு, துணி கொடுக்கவேண்டுமமென்ற கருத்துடன் தான் நிதிகள் சேர்த்து வருவதாகவும், பல வாலிபர்கள் தம்மிடமிருந்து திரவியங் கொண்டுபோய் பஞ்சமுள்ள ஸ்தலங்களில் இருந்து உழைத்து வருவதாகவும் தெரிவித்துவிட்டு ‘நீரும் போய் இவ்விஷயத்தில் வேலை செய்யக் கூடாத?’ என்று கேட்டார்.

ஆ! ராமச்சந்திரன் அரசு செலுத்திய நாடு! வால்மீகி முனிவர் புகழ்ந்து போற்றிய நாடு! அங்கு, ஜனங்கள் துணியும் சோறுமில்லாமல்,, பதினாயிரக் கணக்காகத் தவிக்கிறார்கள்! அவர்களுக்கு உதவி செய்யப் போவாயா என்று என்னைக் கேட்கவும் வேண்டுமா? அவர்களெல்லோரும் எனக்குத் தெய்வங்களல்லவா? அவர்களுக்கு வேண்டியன செய்ய முடியாவிட்டால் இந்தச் சதையுடம்பை எதன் பொருட்டாகச் சுமக்கிறேன்? லாலா விடம் அனுமதி பெற்றுக்கொண்டு போய் சிறிது காலம் அந்தக் கடமையைச் செய்துகொண்டு வந்தேன். அங்கு கண்ட காட்சிகளைப் பற்றி எழுதவேண்டுமா? எழுதுகிறேன். கவனி. தேவலோகத்தைப் பற்றிக் கேள்வியுற்றிருக்கிறாயா? சரி. நரகத்தைப் பற்றிக் கேள்வியுற்றிருக்கிறாயா? சரி. தேவலோகம் நரகலோகமாக மாறியிருந்தால் எப்படித் தோன்றுமோ, அப்படித் தோன்றியது. பகவான் ராமச்சந்திரன் ஆண்ட பூமி, நான் அங்கிருந்த கோரங்களையெல்லாம் உங்களிடம் விவரித்துச் சொல்ல வேண்டும். புண்ணிய பூமியைப் பற்றி இழிவுகள் சொல்வதினால் ஒருவேளை ஒரு சிறிது பாவம் உண்டாகக் கூடும். அந்தப் பாவத்தைத் தவிர வேறென்ன பயன் கிடைக்கப் போகிறது? உன்னால் எனது தாய் நாட்டிற்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது? எழுந்திருந்து வா, பார்ப்போம், எத்தனை நாள் உறங்கி இப்படி அழியப் போகிறீர்களோ? அட பாப ஜாதியே, பாப ஜாதியே! இது நிற்க. ஓரிரண்டு மாதங்களுக்கு அப்பால், லாலா லஜபதிராய் எங்களுக்குக் கடிதம் எழுதி, இனி அந்த வேலை போதும் என்று கட்டளை பிறப்பித்து விட்டார்.

கோசல நாட்டுப் பிரதேசங்களில் பஞ்சத்தின் சம்பந்தமாக நான் வேலை செய்த சில மாதங்களில், ஏற்கனவே என் மனதில் நெடுங்காலமாய் வேரூன்றியிருந்த ஒரு சிந்தனை பலங்கொண்டு வளரலாயிற்று. தணிந்த வகுப்பினரின், நன்மை தீமைகளிலே, நமது நாட்டில் உயர்ந்த வகுப்பினர் என்று கூறப்படுவோர் எவ்வளவு தூரம் அசிரத்தையும், அன்னியத் தன்மையும் பாராட்டுகிறார்கள் என்பதை நோக்குமிடத்து எனது உள்ளத்திலே மிகுந்த தளர்ச்சி உண்டாயிற்று. தென்னாட்டைப் போலவே வட நாட்டிலும், கடைசி வகுப்பினர் என்பதாகச் சிலர் கருதப்படுகின்றனர். தென்நாட்டைப் போலவே, வட நாட்டிலும், இந்த வகுப்பினர் பெரும்பாலும் விவசாயத் தொழிலையே கைக்கொண்டிருக்கிறார்கள். உழவுத் தொழில் உடைய இவர்கள் சாஸ்திரப்படி வைசியர்கள் ஆக வேண்டும். ஆனால் இவர்களிலேயே பலர் மாட்டிறைச்சி தின்பது போன்ற அனாசாரங்கள் வைத்துக் கொண்டிருபதால், ஹிந்து ஜாதி இவர்களைத் தாழ்வாகக் கருதுகின்றது. ஹிந்து நாகரிகத்திலே பசுமாடு பிரதானமான வஸ்துக்களிலே ஒன்று. ஹிந்துக்களின் நாகரிகம் விவசாயத் தொழிலைப் பொறுத்து நிற்கின்றது. விவசாயத் தொழிலுக்குப் பசுவே ஜீவன். ஆதலால் ஹிந்துக்கள் புராதனகால முதலாகவே கோ மாம்ஸத்தை வர்ஜனம் செய்துவிட்டார்கள். ஒரு சிறு பகுதி மட்டும் வர்ஜனம் செய்யாதிருப்பது கண்டு, ஜாதிபொதுமை அப்பகுதியைத் தாழ்வாகக் கருதுகின்றது. இது முற்றிலும் நியாயம். ஆனால் பஞ்சம், நோய் முதலியப் பொதுப்பகைவருக்கு முன்பு, நமது உயர்வு தாழ்வுகளை விரித்துக் கொண்டு நிற்பது மடமை. தாழ்ந்த ஜாதியாரை நாம் மிதமிஞ்சித் தாழ்த்தி விட்டோம். அதன் பயன்களை நாம் அனுபவிக்கிறோம். “ஹிருதயமறிந்திடச் செய்திடுங் கர்மங்கள் இகழ்ந்து பிரிந்து போமே!”

“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” நாம் பள்ளர் பறையருக்குச் செய்வதையெல்லாம், நமக்கு அந்நிய நாடுகளில் பிறர் செய்கிறார்கள். நமது சிருங்ககிரிச் சங்கராச்சாரியாரும், வானமாமலை ஜீயர் ஸ்வாமிகளும் நெட்டால், திரான்ஸ்வால் தேசங்களுக்குப் போவார்களானால், ஊருக்கு வெளியே சேரிகளில் வாசம் செய்ய வேண்டும். ஸாதாரண மனிதர்கள் நடக்கும் ரஸ்தாக்களில் நடக்கக் கூடாது. பிரத்தியேகமாக விலகி நடக்க வேண்டும். பல்லக்குகள், வண்டிகள் இவற்றைப் பற்றி யோசனையே வேண்டியதில்லை. சுருக்கம்: நாம் நமக்குள்ளேயே ஒரு பகுதியாரை நீசர்களென்று பாவித்தோம். இப்போது நம்மெல்லோரையுமே உலகத்தார் மற்றெல்லா ஆட்டினரைக் காட்டிலும் இழிந்த நீசர்களாகக் கருதுகிறார்கள். நம்முள் ஒரு வகுப்பினரை நாம் தீண்டாத வகுப்பினர் என்று விலக்கினோம். இப்போது வேத மார்க்கஸ்தர் மகம்மதியர் என்ற இரு பகுதி கொண்ட நமது ஹிந்து ஜாதி முழுதையுமே உலகம் தீண்டாத ஜாதி என்று கருதுகிறது. உலகத்தில் எல்லா ஜாதியாரிலும் வகுப்புகள் உண்டு. ஆனால் தீராத பிரிவுகள் ஏற்பட்டு ஜாதியை துர்லபப்படுத்திவிடுமானால், அதிலிருந்து நம்மைக் குறைவாக நடத்துதல் அன்னியர்களுக்கு எளிதாகிறது. “ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.”

1200 வருஷங்களுக்கு முன்பு வடநாட்டிலிருந்து மகம்மதியர்கள் பஞ்சாப் நாட்டில் பிரவேசித்தபோது நம்மவர்களின் இம்ஸை பொறுக்க முடியாமல் வருந்திக் கொண்டிருந்த பள்ளர் பறையர் பேரிகை கொட்டி, மணிகள் அடித்துக் கொண்டு போய் எதிரிகளுக்கு நல்வரவு கூறி அவர்களுடன் கலந்து கொண்டதாக இதிஹாஸம் சொல்லுகின்றது. அப்போது நமது ஜாதியைப் பிடித்த நோய் இன்னும் தீராமலிருக்கிறது. பஞ்சத்தில் பெரும்பாலும் பள் பறை வகுப்பினரே மடிந்து போகிறார்கள். இதைப் பற்றி மேற்குலத்தார்கள் வேண்டிய அளவு சிரத்தை செலுத்தாமலிருக்கின்றனர். எங்கிருந்தோ வந்த ஆங்கிலேயப் பாதிரிகள் பஞ்சம் பற்றிய ஜனங்களுக்குப் பலவித உதவிகள் செய்து, நூற்றுக்கணக்கான மனிதர்களையும் முக்கியமாக – திக்கற்ற குழந்தைகளையும், கிறிஸ்து மதத்திலே சேர்த்துக் கொள்ளுகிறார்கள். ஹிந்து ஜனங்களின் தொகை வருஷந்தோறும் அதிபயங்கரமாகக் குறைந்து கொண்டு வருகிறது. மடாதிபதிகளும், ஸன்னிதானங்களும் தமது தொந்தி வளர்வதை ஞானம் வளர்வதாகக் கொண்டு ஆனந்தமடைந்து வருகின்றனர். ஹிந்து ஜனங்கள்! ஹிந்து ஜனங்கள்! நமது இரத்தம், நமது சதை, நமது எலும்பு, நமது உயிர் – ஹிந்துஸ்தானத்து ஜனங்கள் _ ஏனென்று கேட்பாரில்லாமல் பசிப்பிணியால் மாய்ந்து போகின்றனர்.

கோ மாமிசம் உண்ணாதபடி அவர்களைப் பரிசுத்தப்படுத்தி, அவர்களை நமது ஸமூகத்திலே சேர்த்து அவர்களுக்குக் கல்வியும், தர்மமும், தெய்வமும் கொடுத்து நாமே ஆதரிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்களெல்லாரும் நமக்குப் பரிபூர்ண விரோதிகளாக மாறி விடுகிறார்கள். இந்த விஷயத்திலே எனது சிறிய சக்திக்கு இயன்றவரை முயற்சிகள் செய்யவேண்டும் என்ற அவா எனது உள்ளத்தில் வளரலாயிற்று. வங்க நாட்டில் அசுவினி குமார தத்தர் என்ற தேசபக்தர் ஒருவர் இருப்பதாகவும், அவர் இந்த பிரதேசங்களில் ‘நாம் சூத்திரர்’ (பெயர் மட்டில் சூத்திரர்) என்று கூறப்படும் பள்ளர்களை ஸமூக வரம்பினுள்ளே சேர்த்து உயர்வுபடுத்த முயற்சிகள் செய்வதாகவும் கேள்விப்பட்டேன். அவரைப் பார்க்க ஆசை உண்டாயிற்று.

அத்தியாயம் – 4

கலகத்தாவுக்கு வந்து சில தினங்கள் இருந்துவிட்டு பாரிஸாலுக்கு போய்ச் ஏர்ந்தேன். அங்குப் போய் வழி விசாரணை செய்துகொண்டு அசுவினி குமார தத்தருடைய வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன். வீட்டு வாசலில் ஒரு தக்காளி பாபு நின்று கொண்டிருந்தார். அவரிடம் ‘அசுவினி பாபு இருக்கிறாரா?’ என்று கேட்டேன். “இல்லை, நேற்றுத்தான் புறப்பட்டுக் காசிக்குப் போயிருக்கிறார்” என்றார். ‘அடடா’ என்று சொல்லித் திகைத்து நின்றேன். காஷாய உடைகளைக் கண்ட அந்தப் பாபு உபசார மொழிகள் கூறி உள்ளே அழைத்துப் போய் தாகசாந்தி செய்வித்து விட்டு, ‘யார், எவ்விடம்’ என்பதையெல்லாம் விசாரணை செய்தார்.

நான் எனது விருத்தமெல்லாம் தெரிவித்துவிட்டு என் மனதிலிருந்த நோக்கத்தையும் சொன்னேன். “பாரும் பாபு, நம்மில் ஆரில் ஒரு பங்கு ஜனக்களை நாம் தீண்டாத ஜாதியாக வைத்திருப்போமேயானால் நமக்கு ஈசன் நல்ல கதி கொடுப்பாரா?” என்று என் வாயிலிருந்து வாக்கியம் கேட்டவுடனே அவர் முகத்தில் வருத்தம் புலப்பட்டது. முகத்தைப் பார்த்தால் கண்ணீர் ததும்பிவிடும் போலிருந்தது. தீண்டாத வகுப்பினரின் நிலையைக் கருதித்தான் இவ்வளவு பரிதாபமடைகிறார் போலும் என்று நான் நினைத்து “ஐயா உம்முடைய நெஞ்சு போல் இன்னும் நூறு பேருடைய நெஞ்சு இருக்குமானால் நமது நாடு செம்மைப்பட்டு விடும்” என்றேன்.

“ஸ்வாமி, தாங்கள் நினைக்கிறபடி அத்தனை கருணையுடைய நெஞ்சம் எனக்கு இன்னும் மாதா அருள் புரியவில்லை. ஹீன ஜாதியாரைக் காக்க வேண்டும் என்கிற விஷயத்தில் எனக்குக் கொஞ்சம் சிரத்தை உண்டு என்பது மெய்யே., அசுவினி பாபுவுடன் நானும் மேற்படி வகுப்பினருக்கு நன்மை செய்வதில் சிறிது உழைத்திருக்கிறென். ஆயினும், என் முகத்தில் தாங்கள் கவனித்த துக்கக் குறி நம்மில் ஆறிலொரு பங்கு ஜனங்கள் இப்படி அவலமாய் விட்டார்களே என்பதைக் கருதி ஏற்பட்டதன்று. தாங்கள் சொன்ன வாக்கியம் சில தினங்களுக்கு முன் இங்கு வந்திருந்த ஒரு மந்த்ராஜி * அம்மாளின் வாயிலிருந்து அடிக்கடி வெளிவரக் கேட்டிருக்கிறேன். தாம் அது சொன்னவுடனே எனக்கு அந்த அம்மாளின் நிலை ஞாபகம் வந்தது. அவளுடைய தற்கால ஸ்திதியை நினைத்து வருத்தமுண்டாயிற்று. அடடா! என்ன குணம்! என்ன வடிவம்! இவ்வளவு பாலியத்திலே நமது தேசத்தினிடம் என்ன அபரிமிதமான பக்தி!” என்று சொல்லி திடுக்கென்று பேச்சை நிறுத்தி விட்டார். அப்பால் என் முகத்தை ஓரிரண்டு தடவை நன்றாய் உற்று நோக்கினார். அவருடைய பெயர் ஸதீச சந்திர பாபு என்பதாக ஏற்கனவே சொல்லியிருக்கிறார்.

“ஸதீச பாபு, ஏன் இப்படிப் பார்க்கிறீர்?” என்று கேட்டேன்.

“ஸ்வாமிஜீ, க்ஷமித்துக்கொள்ள வேண்டும். நீங்கள் ஸந்யாசி. எந்த தேசத்தில் பிறந்தவரென்பதைக்கூட நான் இன்னும் தெரிந்துகொள்ளவில்லை. ஆயினும், உங்கள் முகத்தைப் பார்க்கும்பொழுது, அதில் எனக்கு அந்த யுவதியின் உருவம் கலந்திருப்பது போலத் தோன்றுகிறது.. உங்களிருவருடைய முகமும் ஒன்று போலிருப்பதாக நான் சொல்லவில்லை. உங்கள் முகத்தில் எப்படியோ அவளுடைய சாயல் ஏறியிருப்பது போலத் தோன்றுகிறது” என்றார்.

மதராஸ் பக்கத்து யுவதியென்று அவர் சொன்னவுடனேயே என் மனதில் ஏதோ ஒரு விதமான பதைபதைப்பு உண்டாயிற்று. அதன் பின்னிட்டு, அவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டவுடன், அந்தப் பதைபதைப்பு மிகுதியுற்றது. ஸந்யாசி உடை தரித்து இருந்தேன். நெடுநாளாகத் துறவையே ஆதரித்து வந்திருக்கிறேன். வேஷத்திலென்னடா இருக்கிறது கோவிந்தா! வேஷத்தில் என்ன இருக்கிறது?

“மீனாம்பா – அட, போ! மீனாம்பாள் இறந்து போய் இரண்டு வருஷங்களுக்கு மேலாகிறதே! ஐயோ, எனது கண்மணி என்ன கஷ்டத்துடன் இருந்தாள்!” என்பதாக மனப்பேய் ஆயிரம் விதமாகக் கூத்தாடியது.

“ஸதீச பாபு! நானும் மதராஸ் பக்கத்திலே ஜனித்தவன்தான். நீர் சொல்லிய யுவதியைப் பற்றிக் கேட்கும்போது, எனக்குத் தெரிந்த மற்றொரு பந்துவைப் பற்றி ஞாபகம் வருகிறது. நீர் சொல்லிய பெண் யார்? அவள் பெயரென்ன? அவள் இப்போது எங்கே இருக்கிறாள்? அவள் இங்கே என்ன நோக்கத்துடன் வந்திருந்தாள்? அவளுடைய தற்கால ஸ்திதியை குறித்து உமக்கு வருத்தமுண்டாவதேன்? அவளுக்கு இப்போது என்ன கஷ்டம் நேரிட்டிருக்கிறது? எனக்கு எல்லாவற்றையும் விவரமாகத் தெரிவிக்க வேண்டும்” என்றேன்.

கதையை விரிக்கத் தொடங்கினார் ஸதீச சந்திர பாபு. ஒவ்வொரு வாக்கியமும் என் உள்ளத்திலே செந்தீக் கனலும் இரும்புத் துண்டுகளை எறிவது போல விழுந்தது. அவர் சொல்லிய கதையினிடையே என்னுள்ளத்தில் நிகழ்ந்தனவற்ரையெல்லாம் இடையீட்டுக் கொண்டு போனால் படிப்பவர்களுக்கு விர்ஸமாயிருக்கும் என்று அஞ்சி, இங்கு அவர் சொல்லிய விஷயங்களை மட்டிலும் குறிப்பிடுகிறேன். என் மனத் ததும்புதல்களைப் படிப்பவர்கள் தாமே ஊகத்தாற் கண்டுகொள்ள வேண்டும், ஸதீச பாபு சொல்லலானார்:

“அந்த யுவதிக்குத் ‘தாஞ்சோர்’. அவள் பெயர் எனக்குத் தெரியாது. நாங்கள் எல்லோரும் அவளைத் ‘தீன மாதா’ என்று பெயர் சொல்லி அழைப்போம். அவளுடைய உண்மைப் பெயர் அசுவினி பாபுவுக்கு மாத்திரந்தான் தெரியும். ஆனால் அந்தத் தேவியின் சரித்திரத்தை எங்களுக்கு அசுவினி பாபு அடிக்கடி சொல்லியிருக்கிறார். அவ்ள் ஒரு போளீஸ் பென்ஷன் உத்தியோகஸ்தருடைய குமாரியாம். அவளது அத்தை மகனாகிய ஒரு மந்த்ராஜ் நகரத்து வாலிபனுக்கு அவளை விவாகம் செய்து கொடுக்கவேண்டுமென்று தீர்மானம் செய்யப்பட்டிருந்ததாம். அவ்வாலிபன் ’வந்தே மாதரம்’ கூட்டத்திலே சேர்ந்து விட்டான். அதிலிருந்து அவள் தகப்பன் அவளை வேறொரு போலீஸ் உத்தியோகஸ்தனுக்கு மணம் புரிவிக்க ஏற்பாடு செய்தான். கடைசித் தருணத்தில் அவள் கனவில் ஏதோ தெய்வத்தின் கட்டளை பெற்று ஒரு பச்சிலையைத் தின்று விடவே, அவளுக்கு பயங்கரமான ஜ்வர நோய் கண்டு விவாகம் தடைப்பட்டுப் போய்விட்டது. அப்பால் தகப்பனாரும் இறந்து போய்விட்டார். இதனிடையே அவளுடைய காதலனாகிய மந்த்ராஜ் வாலிபன், என்ன காரணத்தாலோ, அவள் இறந்து விட்டதாக எண்ணி, ஸன்யாஸம் வாங்கிக் கொண்டு வெளியேறி விட்டானாம்.

“ஏழை மனமே, வெடித்துப் போய் விடாதே. சற்றுப் பொறு ” என்று என்னால் கூடியவரை அடக்கிப் பார்த்தேன். பொறுக்க முடியவில்லை. “ஐயோ, மீனா, மீனா!” என்று கூவினேன். பிறகு ’ஸதீச பாபு, அவளுக்கு இப்போது என்ன கஷ்டம் நேரிட்டிருக்கிறது? சொல்லும், சொல்லும்’ என்று நெரித்தேன்.

ஸதீச சந்திரனுக்கு உளவு ஒருவாறு துலங்கி விட்டது. “இப்போது ஒன்றுமில்லை. சௌக்கியமாகத்தானிருக்கிறாள்” என்றார்.
“இல்லையில்லை. என்னிடம் நீர் உண்மை பேசத் தயங்குகிறீர். உண்மை தெரிந்தால் நான் மிகத் துன்பப்படுவேன் என்று எண்ணி நீர் மறைக்கிறீர். இதுவே என்னை நரக வேதனைக்கு உட்படுத்துகிறது. சொல்லிவிடும்” என்று வற்புறுத்தினேன்.

மறுபடியும் ஸதீச பாபு ஏதோ பொருளற்ற வார்த்தைகளைப் போட்டுக் குழப்பி எனக்கு ஸமாதான வசனம் சொல்லத் தலைப்பட்டார்.
“பாரத தேவியின் ஹிருதயத்தின் மீதும், பகவத்கீதையின் மீதும் ஆணையிட்டிருக்கிறேன். என்னிடம் உண்மையை ஒளீயாமல் சொல்லும்” என்றேன். இந்த ஸத்தியம் நவீன வங்காளத்தினரை எவ்வளவு தூரம் கட்டுப்படுத்தும் எனொஅது எனக்குத் தெரியும். இங்ஙனம் நான் ஆணையிட்டதிலிருந்து அவருக்குக் கொஞ்சம் கோபம் உண்டாயிற்று.

“போமையா, மூட ஸந்யாஸி, என்ன வார்த்தை சொல்லி விட்டீர்! இதோ, உண்மை தெரிவிக்கிறேன். கேட்டுக் கொள்ளும். அந்தப் பெண், இங்கு நாம சூத்திரர்களைப் பஞ்சத்திலிருந்து மீட்கப் பாடுபட்டதில், தீராத குளிர் ஜ்வரங் கண்டு, வைத்தியர்கள் சமீபத்தில் இறந்து விடுவாள் என்று சொல்லி விட்டனர். அதற்கு மேல் அவள் காசியில் போய் இறக்க விரும்பியது பற்றி, அசுவினி பாபு அவளைக் காசிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார், உண்மை சொல்லி விட்டேன், போம்” என்றார்.

“காசிக்கா?”

“ஆம்.”

“காசியில் எங்கே?”

“அஸீ கட்டத்தில்.”

“அஸீ கட்டத்தில் எந்த இடம்?”

“அஸீக்குத் தெற்கே ‘நர்வா’ என்ற இடம் இருக்கிறது. அதில் பல தோட்டங்களும் பங்களாக்களும் உண்டு. அதில் தைப்பூர் மஹாராஜா பங்களாவில் அசுவினி பாபு இறங்கியிருக்கிறார்.”

“ரயில் செலவுக்குப் பணம் கொடும்” என்றேன். ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து வீசியெறிந்தார். மானத்தைக் கண்டதார், மரியாதையைக் கண்டதார்?அங்கிருந்து அந்த க்ஷணமே வெளியேறிவிட்டேன். வழியெல்லாம் தின்பதற்கு நெஞ்சத்தையும், அருந்துவதற்குக் கண்ணீரையுமே கொண்டவனாய் காசிக்குப் போய்ச் சேர்ந்தேன்.

அத்தியாயம் – 5

காசியில் ஹனுமந்த கட்டத்திலே எனக்குத் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். எனது நன்பர் ஒருவருடைய பந்துக்கள் அங்கு வாசஞ் செய்கின்றனர். இதைப் படிக்கும் தமிழர்கள் காசிக்குப் போயிருப்பதுண்டானால், நான் சொல்லப் போகிற இடம் அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். தமிழர்கள் எல்லோரும் பெரும்பாலும் ஹனுமந்த கட்டத்திற்கே போய் இறங்குவதுண்டு. அங்குக் கீழ்மேற் சந்து ஒன்றிருக்கிறதல்லவா? அங்கு கீழ் மேற்கு மூலையிலிருந்து மூன்றாம் வீடு. அந்த வீட்டிற்கு சிவமடம் என்று பெயர். யாத்திரைக்காரர்கள் போய் இறங்கக்கூடிய வீடுகளைக் காசியிலே மடங்கள் என்கிறார்கள். சிவமடத்தில் போய் இறங்கி ஸ்நானம் செய்துவிட்டு, மடத்தார் கொடுத்த ஆகாரத்தை உண்டபிறகு, அப்பொழுதே அந்த மடத்துப் பிள்ளைகளில் ஒருவரைத் துணைக்கு அழைத்துக்கொண்டு நர்வா கட்டத்திற்குப் போனேன். அங்கே தைப்பூர் ராஜா பங்களா எது என்று விசாரித்து, பங்களாவிற்குப் போய்ச் சேரும்போது இரவு ஏழு மணியாகிவிட்டது. வாயிலில் ஒரு குதிரை வண்டி வந்து நின்றது. அந்த வண்டி புறப்படுந்தறுவாயில் இருந்தது. வண்டியின் மேல் ஆங்கிலேய உடை தரித்த ஒரு வங்காளி உட்கார்ந்து கோண்டிருந்தார். வண்டிப் பக்கத்திலே ஒரு கிழவரும் வேறு சிலரும் நின்று கொண்டிருந்தார்கள். அசுவினி குமார தத்தரின் படத்தை நான் பல இடங்களில் பார்த்திருக்கிறபடியால், அந்தக் கிழவர்தான் அசுவினி பாபு என்று தெரிந்து கொண்டேன். நான் போனவுடனே அசுவினி பாபு பக்கத்திலிருந்த மனிதரை நோக்கி, “யாரோ ஒரு ஸன்யாஸி வந்திருக்கிறார். அவரைத் தாழ்வாரத்தில் வரச்சொல். நான் இதோ வருகிறேன்” என்றார். தாழ்வாரத்தில் போட்டிருந்த நாற்காலியில் நானும் என்னுடன் வந்திருந்த வாலிபனும் போய் உட்கார்ந்தோம். அசுவினி பாபுவும் வண்டிக்குள் இருந்தவரும் பேசியது என் செவியில் நன்றாக விழுந்தது.

அசுவினி பாபு: “டாக்டர் ஸாஹப்! நேற்றைக் காட்டிலும் இன்று சிறிது குணப்பட்டிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. தமது கருத்தென்ன?”
டாக்டர்: ‘மிகவும் துர்ப்பல நிலையிலேதான் இருக்கிறாள். இன்னும் இருபத்து நான்கு மணி நேரம் இருப்பது கஷ்டம். அந்த நேரம் தப்பினால் பிறகு விபத்தில்லை” என்றார்.

காதில் விஷந்தடவிய தீயம்பு போல இந்த வார்த்தை கேட்டது. “மீனா! மீனா! மீனா!” என்று அலறினேன். வண்டி புறப்பட்டுவிட்டது. அதற்குள் நான் என்னை மீறி அலறிய சத்தம் கேட்டு, அசுவினி பாபுவும் அவரைச் சேர்ந்தவர்களும் நான் இருந்த பாரிசமாக விரைந்து வந்தார்கள். அவர் வருதல் கண்டு, நான் மனதை ஒருவாறூ தேற்றிக் கொண்டு எழுந்து நின்று வணங்கினேன். அவர், ஸ்வாமிக்கு எவ்விடம்? இங்கு வந்த கருத்தென்ன? ஏன் சத்தம் போட்டீர்கள்?” என்று ஹிந்துஸ்தானி பாஷையிலே கேட்டார்.
“பாபு, நான் ஸன்யாஸியல்ல. நான் திருடன். மஹா நிர்ப்பாக்கியமுள்ள பாவி. மீனாம்பாள் தம்மிடம் கோவிந்தராஜன் என்ற பெயர் சொல்லியிருப்பாளல்லவா? அந்தப் பாவி நான்தான்” என்றேன்.

உடனே அவர் என்னை மேன்மாடத்திலுள்ள ஒரு அறைக்குத் தனியாக அழைத்துச் சென்றார். அங்கு என்னை நோக்கி, “நேற்றெல்லாம் உம்மை அடிக்கடி நினைத்துக் கொண்டிருந்தேன். நீர் இங்கு வரக்கூடும் என்ற சிந்தனை எனக்கு அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது” என்றார்.

பிறகு என்னிடம் ‘கிழக்கு முகமாகத் திரும்பி உட்காரும்’ என்றார். அப்படியே உட்கார்ந்தேன். ‘கண்ணை மூடிக் கொள்ளும்’ என்றார். இரண்டு கண்களையும் மூடிக் கொண்டேன். பிறகு எனது நெற்றியைக் கையாலே தடவி ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார். எனக்கு உறக்கம் வருவது போல் இருந்தது. ‘அடடா! இன்னும் மீனாம்பாளைப் பார்க்கவில்லை. எனது உயிரினுமினியாள் மரணாவஸ்தையிலிருக்கிறாள். அவளைப் பார்க்கும் முன்பாக உறக்கம் வருகிறதே! இவர் என்னை ஏதோ மாயமந்திரத்துக்கு உட்படுத்துகிறார். எனது பிராண ரத்தினத்தைப் பார்க்காதபடி கெடுத்துவிட முயலுகிறார். இந்த மாயைக்கு உட்படலாகாது. கண் விழித்து எழுந்து நின்றுவிட வேண்டும்’ என்று சங்கற்பம் செய்துகொண்டு, எழுந்து நிற்க முயன்றேன். ‘ஹும்’ என்றொரு சத்தம் கேட்டது. விழித்து விழித்துப் பார்க்கிறேன். கண்ணைத் திறக்க முடியவில்லை. மயக்கம் மேன்மேலும் அதிகப்பட்டது. அப்படியே உறங்கி விழுந்துவிட்டேன்.

விழித்த பிறகு நான் இரண்டு நாள் உறங்கிக் கிடந்ததாகத் தெரிந்தது. பக்கத்திலிருந்த ஒரு சேவகன் சொன்னான். “மீனா எங்கே? மீனா சௌக்கியமாயிருக்கிறளா?” என்று அந்தச் சேவகனிடம் கேட்டேன். ‘எனக்கு ஒன்றுமே தெரியாது’ என்று மறுமொழி கூறினான். சாதாரணமாக எப்போதும்போல் இருந்தேனாயின், அந்தச் சேவகனை உதைத்துத் தள்ளி, இடையே வந்தவர்களையெல்லாம் வீழ்த்திவிட்டு மீனா இருக்குமிடம் ஓடிப்போய் பார்த்திருப்பேன். ஆனால் இந்த நேரம் என்னுடலில் மிகுந்த அயர்வும், உள்ளத்தில் மிகுந்த தெளிவும், அமைதியும் ஏற்பட்டிருந்தன. மனதிலிருந்த ஜ்வரமும் நீங்கிப் போயிருந்தது. ‘பாரிஸால் கிழவன்’ செய்த சூது என்று தெரிந்து கொண்டேன். அரை நாழிகைக்கெல்லாம் அசுவினி பாபு, தாமே நானிருந்த அறைக்குள் வந்து, என் எதிரே ஒரு நாற்காலியின் மீது வீற்றிருந்தார். அன்னை அறியாமல், எனது இரண்டு கைகளும் அவருக்கு அஞ்சலி புரிந்தன.

’ஓம்’ என்று கூறி ஆசீர்வாதம் செய்தார். “பால ஸந்நியாசி, கபட ஸந்நியாசி, அர்ஜுன ஸந்நியாசி, உன் பக்கம் சீட்டு விழுந்தது” என்றார். மீனா பிழைத்துவிட்டாள் என்று தெரிந்து கொண்டேன்.

“முற்றிலும் சௌக்கியமாய் விட்டதா?” என்று கேட்டேன்.

“பூரணமாக சௌக்கியமாய் விட்டது. இன்னும் ஓரைம்பது வருஷத்திற்குச் சமுத்திரத்திலே தள்ளினாலும் அவளுக்கு எவ்விதமான தீங்கும் வரமாட்டாது” என்றார்.

அப்படியானால் நான் போகிறென். அவள் இறந்து போகப் போகிறாள் என்ற எண்ணத்திலேதான் என் விரதத்தைக்கூட மறந்து, அவளைப் பார்ப்பதற்காகப் பறந்தோடி வந்தேன். இனி, அவளைப் பார்த்து அவளுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. நான் போய் வருகிறென்” என்று சொன்னேன்.

அசுவினி பாபு கடகடவென்று சிரித்து விட்டு,பக்கத்திலிருந்த சேவகனை நோக்கி, “இவருக்குக் கொஞ்சம் பால் கொணர்ந்து கொடு” என்று ஏவினார். அவன் முகம் கழுவ நீரும் அருந்துவதற்குப் பாலும் கொணர்ந்து கொடுத்தான். அந்தப் பாலை உட்கொண்டவுடனே, திருக்குற்றாலத்து அருவியில் ஸ்நானம் செய்து முடிந்ததுபோல, எனது உடலிலிருந்து அயர்வெல்லாம் நீங்கிப் போய் மிகுந்த தெளிவும் சௌக்கியமும் அமைந்திருக்கக் கண்டேன்.

“இப்பொழுது என்ன சொல்லுகிறாய்? புறப்பட்டுப் போகிறாயா?” என்று அசுவினி பாபு புன்னகையுடன் கேட்டார்.

“அவளை ஒரு முறை பார்த்துவிட்டு அவளிடம் விடை பெற்றுக் கொண்டு செல்கிறேன்” என்றேன்.

திடீரென்று அசுவினி பாபுவின் முகத்தில் இருந்த புன்னகை மாறி சிரத்தா ரூபம் தோன்றியது. அப்பால் என்னிடம், “மகனே, நீ மீனாம்பாளை மணஞ் செய்து கொள்வாய். நீங்களிருவரும் சேர்ந்து வாழ்ந்து, முற்காலத்தில் ரிஷியும் ரிஷிபத்தினியுமாக வேத யக்ஞம் செய்தது போல, உங்கள் வாழ்நாள் முழுதும் மாதாவின் ப்ரீத்யர்த்தமாக ஜீவயக்ஞம் புரியக் கடவீர்கள்” என்றார்.

”காளிதேவியின் கட்டளை என்னாகிறது?” என்று கேட்டேன். இந்த ஜன்மத்தில் நீ கோவிந்தராஜனை மணஞ் செய்து கொள்ளலாகாது என்று காளீ தேவி மீனாளுக்குக் கூறி அவளை விஷம் தின்னும்படியாகக் கட்டளையிட்ட செய்தியை அவருக்கு நினைப்புறுத்தினேன்.

அதற்கு அவர், ‘அந்த செய்தியையெல்லாம் நான் அறிவேன். மஹாஸக்தியின் கட்டளையை மீனாம்பாள் நன்கு தெரிந்து கொள்ளாமல் உனக்குக் கடிதம் எழுதிவிட்டாள். மீனாம்பாளுடைய ஜன்மம் மாறுபட வேண்டுமென்று அம்மை சொல்லியதன் பொருள் வேறு. அவள் பச்சிலை தின்னும்படி கட்டளையிட்டது மீனாம்பாளுக்கு ஜ்வரமுண்டாய் தந்தை எண்ணிய விவாகம் தடைப்படும் பொருட்டாகவே. அதற்கு முன்பு அவளுடைய ஜன்மம் வேறு. மாதா தெளிவாகத்தான் சொல்லினாள். ஆனால், மீனாம்பாள் தனக்கு வேண்டாத ஒருவனுடன் விவாகம் நடக்கப் போகிறது என்ற தாபத்தால் படபடப்புண்டாகி உனக்கு ஏதெல்லாமோ எழுதி விட்டாள். நீயும் அவசரப்பட்டு, காஷாயம் தரித்துக் கொண்டு விட்டாய். உனக்கு ஸன்னியாஸம் குருவினால் கொடுக்கப்படவில்லை. ஆயினும் இதுவெல்லாம் உங்களிருவருடைய நலத்தின் பொருட்டாகவே ஏற்பட்டது. உங்களிருவருக்கும், பரிபூரணமான ஹிருதய சுத்தி உண்டாவதற்கு இப்பிரிவு அவசியமாயிருந்தது. இப்போது நான் போகிறேன்.இன்று மாலை நான்கு மணிக்கு பூஞ்சோலையிலுள்ள லதா மண்டபத்தில் மீனாம்பாள் இருப்பாள். உன் வரவிற்குக் காத்திருப்பாள்” என்று சொல்லிப் போய் விட்டார்.

மாலைப் பொழுதாயிற்று. நான் ஸன்யாசி வேஷத்தை மாற்றி, எனது தகுதிக்கு உரிய ஆடை தரித்துக் கொண்டிருந்தேன். பூஞ்சோலையிலே லதா மண்டபத்தில் தனியாக நானும் எனது உயிர், ஸ்த்ரீ ரூபங் கொண்டு பக்கத்தில் வந்து வீற்றிருப்பது போலத் தோன்றியவளுமாக இருந்தோம். நான்கு இதழ்கள் கூடின. இரண்டு ஜீவன்கள் மாதாவின் ஸேவைக்காக லயப்பட்டன. பிரகிருதி வடிவமாகத் தோன்றிய மாதாவின் முகத்திலே புன்னகை காணப்பட்டது.

வந்தே மாதரம்

*மந்த்ராஜியம்மாள் என்பது மதராஸ் பிரதேசத்து ஸ்த்ரீ என்று பொருள்படும். ’மதராஸ்’ என்பதற்கு வடநாட்டார் ’மந்த்ராஜ்’ என்பார்கள்.

நன்றி: சொல்வனம்

பிறப்பு சுப்பையா (எ) சுப்பிரமணியன் திசம்பர் 11, 1882 எட்டயபுரம், தூத்துக்குடி மாவட்டம், இந்தியா இறப்பு செப்டம்பர் 11, 1921(அகவை 38) சென்னை, இந்தியா இருப்பிடம் திருவல்லிக்கேணி தேசியம் இந்தியா மற்ற பெயர்கள் பாரதியார், சுப்பையா, முண்டாசுக் கவிஞன், மகாகவி, சக்தி தாசன் பணி செய்தியாளர் அறியப்படுவது கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி குறிப்பிடத்தக்க படைப்புகள் பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு மற்றும்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *