கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 6, 2024
பார்வையிட்டோர்: 5,361 
 
 

(1967ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பொறி இரண்டு | பொறி மூன்று | பொறி நான்கு

கதம்பத்தின் மணம் 

தனி மல்லிகைச் சரத்துக்கும். ரோஜாச் செண்டுக் கும் இருக்கும் சிறப்பு கதம்பத்துக்கும் உண்டு. முல்லை, இருவாட்சி தாழம்பூ, மருக்கொழுந்து முதலிய மலர்களை அருகருகே வைத்து இணைக்கும் போதுதோற்றத்திலும் மணத்திலும் தனிச்சிறப்பை அடைந்து விடுகிறது அந்த மாலை. கதம்பச்சரத்தின் பல மலர்களைப்போல, பல்வேறு கருத்துக்களை – கற்பனைகளை எண்ணங்களை நாங்கள் ஒன்றுசேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். திரு.வாசவன் அவர்கள் தீபாவளித் திருநாளில் ஆடும் தீபத்தில் சுடரை ஏற்றிவைத்து விட்டார். அது உமிழும் ஒளியிலே அல்லியை அரக்கர் வாயிலிருந்து கம்பீரமாக மீட்டுப் பட்டணம் கொண்டுவந்து சேர்த்து விட் டார் திரு.வல்லிக்கண்ணன் அவர்கள். நாட்டுப் புறத்து அல்லிமலரை நகரத்து மேஜை ஜாடியில் வைத்து அழகு பார்க்க வேண்டிய பொறுப்பு என் மீது விழுந்திருக்கிறது. கள்ளமில்லாத நாட்டுப் புறத்துப் பெண் அல்லியின் வாழ்க்கையிலே இனி நாட்டியமும் நடிப்பும் இடம் பெற வாய்ப்பு ஏற்படுத்தத்தான் ராஜநாயகம் அவளைத் தேடி வருவதாக நாம் ஏன் எண்ணலாகாது? 

ஸரோஜா ராமமூர்த்தி 

பொறி மூன்று

கைவழி நயனம் செல்ல, கண்வழி மனமும் செல்ல…! 

வாத்தியார் ராஜநாயகம் உள்ளே நுழைந்ததும், அல்லியின் நற்குணங்கள் யாவும் அவளிடம் ஓடிவந்து அடைக்கலம் புகுந்தன. பெற்ற தந்தையை மீண்டும் உயிருடன் பார்ப்பதுபோல் அவள் மனத்துள் அன்பு கொப்புளித்து எழுந்தது. பரபரப்புடன் எழுந்து மேலாப்பை போர்த்தியவாறு அவர் எதிரில் வந்து பய பக்தியுடன் நின்றாள். 

ராஜநாயகம் அன்று எழும்பூர் ரெயிலடியில் தான் பார்த்த எழிலுருவத்தினை மறுபடியும் ஏற இறங்கப் பார்த்தார். காரில் ஏறிய அல்லி சற்று நடுங்கியவாறு ஒரு மூலையில் இடம்பிடித்துக்கொண்டு சென்னை நகரத்துத் தெருக்களையே வெறித்துப் பார்த்துக்கொண்டு வந்தாள். வழியெங்கும் பெரிய சினிமா சுவரொட்டி விளம்பரங்கள்! காதளவு நீண்ட தன் கருவிழிகளை இமைக்க க மறந்தவாறு, ஏதோ கனவு லோகத்தில் காணப்பட வேண்டியவை தன் முன் பரந்து கிடப்பது போன்ற பிரமையுடன் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டே வந்தாள் அல்லி, வண்டியில் இருந்தவர்கள் அவ்வளவு பேரும் அல்லியையே பார்த்தவாறு இருந்தனர். அருணாசலம் பார்க்கும்போது. ராஜநாயகம் பொங்கித் தணிந்தவாறு பெருமூச்சுவிட்டார். ராஜநாயகம் பார்க்கும்பொழுது, அருணாசலத்தின் உள்ளம் ‘திகு திகுவென்று’ எரிந்தது. ஒருத்தியை நடுவில் வைத்து, அவளைச்சுற்றி தத்தம் உணர்ச்சிகளை அடக்க முடியாமல் திண்டாடுவதை வண்டியிலே இருந்த மற்ற அலங்கார வல்லிகள் கவனித்துத் தமக்குள் லேசாகச் சிரித்துக் கொண்டனர். அவர்களுக்கு இந்தப் பட்டணத்துக்காரர்களின் பார்வை ஒன்றும் புதிதில்லை. பழகிப் புளித்துப்போன விஷயம்தான். 

‘கலைக்கூட’த்தில் வந்து இறங்கிய அல்லிக்கு அங்கு யாவுமே புதுமையாயிருந்தன. புது வர்ணத்தினால் திகு திகுவென்று பிரகாசிக்கும் சுவர்களில் கலைகுடியிருந்தது. நடனத்தில் அரசனாகிய நடராஜன் தன்னைச்சுற்றி ஒளி ரும் தீப்பிழம்பின் மையத்தில் நின்று நடனம் ஆடினான். அவன் அருகில் பெண்மைக்கு விளக்கம் தருவது போல் அன்னை சிவகாமி நின்றிருந்தாள். ராதையும் கண்ணனும் கை கோர்த்து நின்ற காட்சி காதலின் தத்துவத்தை உணர்த்துவதாக இருந்தது. 

சுவரைப் பார்த்தவாறு மெய்ம்மறந்து கூடத்தில் நின்ற அல்லியிடம் விடைபெற்றுக்கொண்டு அருணாசலம் வெளியே போய்விட்டான். அவ்வளவு பெரிய வீட்டில்- அந்தக் கலைக்கூடத்தில் அவள் ஒருத்தி மட்டும் நின்றிருந்தாள். கூட வந்திருந்த அலங்கார வல்லிகள் அவரவர் வீட்டுக்குப் போய்விட்டார்கள். 

உள்ளே இருந்து வற்றிச் சருகாய்க் காய்ந்த உடலுடன் ஒரு கிழவி வெளியே வந்தாள். கூடத்தில் நின்றிருந்த அல்லியின் எதிரில் வந்து நின்று அவளை ஏற இறங்கப் பார்த்தாள். வானத்து நிலவு கீழே விழுந்து விட்டாற் போல இருந்தது அல்லியின் தோற்றம். 

நிலவுக்குக் கண்கள் உண்டா? செம்பவழவாய் உண்டா? முத்துப் பற்கள் உண்டா? மோகனச் சிரிப்புத்தான் உண்டா? ஒரே உருண்டையாய்த் தேய்ந்து, தேய்ந்து, இப்படிப் பொ போக்குவதுதான் அதற்குவேலையோ? 

கிழவி கலை உள்ளம் படைத்தவள். பெரிய ரசிகை. அவள் வியந்தவாறு நின்றபோது, ராஜநாயகம் அங்கு வந்து, “நாச்சியாரம்மா, இது ஒரு புதுப் பொண்ணு, பட்டிக்காட்டிலே வளர்ந்த பொண்ணுன்னு அதன் பார்வையைப் பார்த்தாலே தெரியுது. மாடியிலே நம்ப ராஜவல்லியின் அறையை இதுக்கு ஒழிச்சுக்கொடு,” என்று கூறிவிட்டு வெளியே போய்விட்டார். 

மாங்குடியிலிருந்து வயலிலும், வரப்பிலும் நடந்து வந்த களைப்பு வேறு, இரவின் இருளில் காமத்தால் சிவந்திருந்த நான்கு கொள்ளிக் கண்களின் பார்வையை விட்டு விலகி ஓடிவந்த பதைப்பு வேறாக, அவள் மாடி அறையில் சாப்பிட்டுப் படுத்தவள்தான்; உறக்கம் இமைகளைத் தழுவ. உள்ளம் சற்றே ஆறுதல் அடைய, பகல் பொழுது மேற்கே சரிந்து போவது கூடத் தெரியாமல் தூங்கிப் போனாள். 

பள பளவென்று தங்கம்போல் மின்னும் ரெயில் பெட்டி ஒன்றில் அவளும் அவனும், அதுதான் அருணாசலமும்- திசை தெரியாமல் எங்கோ பிரயாணம் செய்துகொண்டிருந்தனர். ரெயிலின் இருபக்கங்களிலும் கண்ணாடிப் பலகை போல் தெளிந்த நீர் நிலைகள். அங்கே பூத்துக் குவிந்திருக்கும் அல்லி மலர்கள்! வெண் தாமரைகள் வானத்தில் உலவும் கதிரவனைப் பார்த்து இதழ்கள் விரித்து அவை ஆடும் அழகை அல்லி கண் கொட்டாமல் பார்த்து வந்தாள். எங்கோ பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கப்பால் சுடர்விடும் அந்தக் கதிரவனிடம் அவற்றுக்கு எத்துணைக் காதல் என்று வியந்தாள் அவள். அருணாசலம் அவளுக்கு அண்மையில் உட்கார்ந்து அவள் முகத்தையே பார்த்துக்கொண்டு வந்தான். இருவருமே பேசவில்லை. சொல்லால் அளக்க முடியாதவற்றை அவர்களின் இரு உள்ளங்களும் அளந்து பார்த்துக் களித்துக் கொண்டிருந்தன. 

திடீரென்று அல்லி பட பட வென்று கைகளைக் கொட்டினாள். குளத்தில் முழுகி எழும் பெண்ணொருத்தி சற்றுத் தொலைவில் மலர்ந்திருந்த தாமரையைக் கொய்ய முடியாமல் திண்டாடுவது அவளுக்கு வியப்பாக இருந்தது. ஒரே பாய்ச்சலில் குளத்திலே குதித்து, ஒரு மலர் என்ன, கை நிறைய மலர்களைக் கொய்துவிட வேண்டும் என்கிற துடிப்பு அவள் கைதட்டலில் பிரதிபலித்தது. 

அல்லி கனவு கண்டு விழித்தாள். வாசற் கதவைப் போய்த் திறந்ததும், ராஜநாயகம் தம் காவிப்பற்கள் தெரிய நகைத்தவாறு உள்ளே வந்து சேர்ந்தார். 

கோவிலின் சிற்பம் தன் இடம் விட்டுப் பெயர்ந்து வந்து தம் அருகில் நிற்பது போலிருந்தது ராஜநாயகத்துக்கு. 

”என்னம்மா, அல்லி! எப்படி இருக்கிறே? ஊரெல்லாம் பிடிச்சிருக்கா?” என்று, அடக்கத்துடன் நிற்கும் அவளைப் பார்த்துக் கேட்டார் அவர். 

நிலத்தை நோக்கியிருந்த நீள் விழிகளை மேலும் உயர்த்தினாள் அல்லி. 

”உட்காருங்க வாத்தியார் ஐயா! ஊரைப் பார்த்தா எல்லாமே புதுமையா இருக்கு; பட்டணத்திலே பிறந்தவங்களுக்குத் தரையிலே கால் பாவாதாமே?” என்று குறும்பாகக் கேட்டுத் தனக்குள் சிரித்துக்கொண்டாள் அவள். 

“ஏன்? நாங்க எல்லாம் பிசாசா? நீ ஒண்ணு…!” என்று கூறிய ராஜநாயகம் அங்கு கிடந்த பெஞ்சியில் உட் கார்ந்தவாறு அல்லி மீது பார்வையைச் செலுத்தினார். 

வாயிற்கதவு லேசாகத் திறந்திருந்தது. பகல் பொழுதின் வெப்பம் சற்று தணிந்து, மாலைக்காற்று சுகமாக வீசிக் கொண்டிருந்தது. வாத்தியாரின் பார்வையும் பேச்சும் அல்லிக்கு அவ்வளவாக ரசிக்கவில்லை. மாங்குடி வயலில் பார்த்த அந்த இருவரின் பார்வையில் சுழன்ற பேராசை யும், அக்கிரமும் வாத்தியாரின் பார்வையில் இல்லை. நாகரிகமாக, சாமர்த்தியமாக கொடுமையை மறைத்து, குளிர்ந்த பார்வை பார்த்தார் ராஜநாயகம். பட்டினத்தின் நாகரீகத்தின் முதற்படி இது. அரக்கத்தனத்தை மறைக்கும் ஆற்றலைப் பட்டணத்தார்கள் நன்றாகப் பயின்றிருக்கிறார்கள் என்பது அவளுக்குப் புரிந்தது. இந்தப் புலி திடீரென்று பாய்ந்து விடாது; ‘குறி வைத்துத்தான் பாயும்’ என்பதும் அவளுக்குப் புரிந்து விட்டது. 

ராஜநாயகம் தொண்டையைக் கனைத்தவாறு, ”அல்லி! அந்த அருணாசலம் உனக்கு மாமனா? அவனுடைய அக்காள் மகளா நீ?” என்று கேட்டார். 

அருணாசலத்தைப் பற்றி அவர் பேசியதும், அல்லியின் முகத்தில் நாணம் ஏற்பட்டது. சற்றுமுன் கண்ட கனவை நினைத்துப் பார்த்தாள். வாத்தியாரின் பக்கம் திரும்பி. ”வாத்தியாரிடம் நான் எதற்குப் பொய் சொல்லணும்? குருவிடம் பக்தியோடு இருந்தால் தான் ஏதாவது வித்தை கத்துக்கிட்டாலும் சரியாக வரும். அவர் எனக்கு உறவு இல்லீங்க, ரயிலிலே சந்திச்சோம் அவ்வளவு தான்…!” என்றாள் அல்லி. 

“பூ! இவ்வளவுதானா? பயல் சரியான பிடியாகத்தான் பிடித்திருக்கிறான். அவனை நம்பி – ஹும்- ஏம்மா, இப்படித் தனியாக வரலாமா?…” 

அல்லியின் நீண்ட விழிகள் வியப்பால் மலர்ந்தன. 

”அவரை நம்பியா? நானா…” கட கடவென்று மணியோசை போல அவள் சிரித்து விட்டு, “ஐயா, நான் யாரை நம்பியும் ஊரை விட்டுக் கிளம்பவில்லை. என்னை நம்பித்தான் நான் வெளியில் வந்தேன்.” என்றாள். 

“தன்னம்பிக்கை ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டி யது தான்.ஆனால் உன் வயசு, காலம் எல்லாம் நீ தனியாக வாழ முடியாதென்று கூறுகின்றன. மீன்விழிகளும் எள்ளுப்பூ நாசியும், மாதுளை மொட்டன்ன இதழ்களும், முத்துப் பற்களும் கொண்ட நிலவு முகத்தினளாக ஒரு பெண் இருந்து விட்டால், பேராசைக்கழுகுகள் கொத்திப் விடுங்க வராமலிருக்குமா அல்லி? சமூகத்தில் நீ தகுந்த துணையுடன் வாழவேண்டும். கண்டவனை நம்பக் கூடாது. இந்த வீடு எனக்குச் சொந்தமானது. பெயருக்கும் புகழுக்கும் எனக்கொன்றும் குறைச்சல் இல்லை. எப்பொழுதோ என் மனைவி என்னை விட்டுப் விரிந்து போய் விட்டாள்.அவள் வெறுமனே போகவில்லை. அழகுப் பதுமை போல் ஒரு மகளை எனக்குக் கொடுத்து விட்டுத் தான் போனாள். என் மகள் ராஜவல்லி மேகத் திரளில் தோன்றும் மின்னல் கீற்றென பன்னிரண்டு வயசுக்குள் பரதக்கலையைப் பழுதில்லாமல் ஆடி என்னைக் களிப்பில் ஆழ்த்தி விட்டு நான்கு நாள் ஜூரத்தில் இறந்து விட்டாள்”. 

வாத்தியார் சாஜநாயகம் கண்ணீர் பெருக மகளை நினைத்துத் தேம்பினார். அல்லி திறந்த வாய் மூடாமல் அவர் முகத்தையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந் தாள். 

மேல் துண்டினால் கண்ணீரைத் துடைத்து விட்டு ராஜ நாயகம் அவளை மீண்டும் ஆசை பொங்கப் பார்த்தார். 

“வெறிச்சோடிப்போன என் வீட்டிற்கும், வாழ்க்கைக்கும் நீ ஏன் ஆடும் தீபமாக இருக்கக் கூடாது, அல்லி? அன்று ரெயிலடியில் உன்னைப் பார்த்தபோதே என் இதயம் பொங்கி வழிந்தது. அந்த அருணாசலம் உன் கூட இருந்ததால், என் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டேன்.” 

ராஜநாயகம் சற்று முன் மகளைப் பறிகொடுத்த தந்தையாக இருந்தவர், மூன்றாம்தர மனிதராக மாறிச் சாக்கடைக் குழியில் தலை குப்புற விழ தம்மையே ஆயத்தம் படுத்திக் கொண்டிருந்தார். 

“ஐயோ பாவம்!” என்று அல்லி அனுதாபப்பட்டுக் கொண்டிருந்தபோது, அவர் பேச்சுக்கள் அவளைச் சிலிர்த்தெழச் செய்தன. கண்கள் ‘ஜிவு ஜிவு’ என்று சிவக்க அவள் அவரை ஏறிட்டுப் பார்த்தவாறு “அன்று ரெயிலடியில் என்னுடன் அருணாசலம் மட்டும் இராமல் இருந்தால், என்னை நீங்கள் என்ன செய்து விடுவீர்களாம்? வளர்த்த மகளுக்குத் திருமணத்தைச் செய்து. கண்குளிரப் பார்க்கவேண்டிய தாங்கள், இந்த வயதில் திருமணத்திற்கு ஆசைப்படுகிறீர்களே? ஒரு பெண்ணைத் தன் சகோதரியாகவோ, மகளாகவோ பார்க்கவே உங்களில் அநேகருக்குத் தெரியாதோ? வாத்தியார் ஐயா இறந்துபோன என் தந்தையெனவே உங்களை நம்பி நான் இந்த வீட்டுக்கு வந்தேன். மானமாக வாழ எனக்கு எத்துணையோ வழிகள் உண்டு. உலகம் பரந்து கிடந்த போதிலும், மனித இதயம் சூம்பிப்போய் இருந்தால் நாம் என்ன செய்ய முடியும்? ஐயா! என்னை உங்கள் மகளாகவே நினைத்துக் கொள்ளுங்கள்…….!” என்று தேம்பினாள். 

அல்லியின் கண்ணாடிக் கன்னங்களில் கண்ணீர்த் திவலைகள் தாரை தாரையாக இறங்கி வந்தன. 

ராஜநாயகம் பால்யந்தொட்டுப் பயின்று வளர்த்து வந்த பரதக்கலை தெய்வீகமானது. கடவுளுடைய அருளோடு கூடியது. படிப்பால் உயர்ந்த அக்கலைஞனின் இதயத்தில் மூடியிருந்த இருள் விலகிற்று. 

”அல்லி, நீ என் மகள்தான் அம்மா. என்னவோ என் மனம் சரியாக இல்லை. ஏதேதோ பேசிவிட்டேன். கீழே. போய் முகம் கழுவி, தலை வாரிக்கொண்டு வா இன்றே பாடம் ஆரம்பிக்கலாம்!” என்று கூறியவாறு ராஜநாயகம் படிகளில் இறங்கிச் சென்றார். மேலே வந்த போது இருந்த படபடப்பும், மன உளைச்சலும் குறைந்தவராக, தெளிந்த உள்ளத்துடன் அவர் செல்லுவதைக் கவனித்துவிட்டு அல்லி அவர் பின்னாலேயே கீழே சென்றாள். 

கூடத்தில் விளக்கேற்றப்பட்டிருந்தது. பசும் பொன்னைப் போல் மின்னும் வெண்கலத்தாம்பாளத்தில் நாச்சியாரம் மாள் முல்லை மலர்களைத் தொடுத்த மாலையைப் பந்து போல் சுருட்டி வைத்திருந்தாள். அரும்புகள் வெடித்து, மெல்லிய மணம் கூடம் முழுவதும் பரவியது. 

“நாச்சியாரம்மா, குழந்தைக்குத் தலைவாரிப் பின்னிப் பூச்சூட்டிவிடு. நம்ப ராஜவல்லியின் பட்டுச் சிற்றாடை ஒன்றை எடுத்து அல்லியிடம் கொடு. இன்றைக்குப் பாடம் ஆரம்பம் ஆகிறது.ஹும், சீக்கிரம்,” என்றவாறு வெற்றிலை சக்கையைத் துப்ப கொல்லைப்புறம் போனார் ராஜநாயகம். 

நாச்சியாரம்மாள் கொட்டக் கொட்ட கண்களை விழித்து அவரைப் பார்த்துவிட்டு, அல்லியையும் பார்த்தாள். வாத்தியாரின் பேச்சு, அல்லியின் நிதானம் முதலியவற்றைக் கண்டதும், வாத்தியார் பகலில் போட்டிருந்த திட்டம் தலைகீழாகிவிட்டது என்பதை உணர்ந்து கொண்டாள். 

அரக்குப் பட்டுக்கட்டி, கண்களுக்கு மை தீட்டி, விற் உருவம் எழுதி, செஞ்சாந்தில் திலகம் வைத்து, மின்னற் கொடிபோல்வந்து. மன்றிலாடும் மணியாம் நடராஜரின் சிலைக்கு முன்னாள் நின்றாள் அல்லி. 

மேல் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு தேங்காய் உடைத்துச் சூடம் காட்டினார் வாத்தியார். சூடத்தை இரு கரங்களிலும் ஏற்றுக் கண்களில் ஒற்றிக் கொண்டு நடராஜரின் முன்பாக வீழ்ந்து வணங்கி எழுந்தாள் அல்லி. பிறகு வாத்தியாரையும் வணங்கினாள். 

“தக…தைய்ய… தீம் … தக … தாம்… தைய்ய தீம் … ” என்று தாளமும், இசையும் ஒலிக்க அல்லி நாட்டியம் பயில ஆரம்பித்தாள். 

வாயிற் கதவைத்திறந்து கொண்டு நேற்று வந்த அலங்கார வல்லிகள் நால்வர் உள்ளே வந்தனர். உதட்டுச் சாயமும் குதிரை வால் கொண்டையுமாக அவர்கள் வந்து அங்கே நின்றபோது, கோயில் சிற்பத்தின் அருகில் தற்கால நவராத்திரி நடனப் பொம்மைகளைக் கொண்டு வந்து வைத்தாற் போல் இருந்தது. 

என்னங்க வாத்தியார் ஐயா! நீங்க இன்னிக்கு அல்லிக்குப் பாடம் ஆரம்பிக்கப் போறேன்னு எங்களிடம் ஒன்றுமே சொல்ல வில்லையே?” என்று கேட்டவாறு அல்லியின் மீது தங்கள் பார்வைகளைப் பதித்தனர். 

அல்லி பழைய நாட்டுப்புற அல்லி அல்ல. மாங்குடியிலி ருந்து வெள்ளை மனத்துடன் வெளியேறிய அவள் இப் பொழுது நாலும் தெரிந்தவள் ஆகிவிட்டாள். ஓடும் ரெயிலில் அருணாசலத்தின் மீது அவளுக்கு ஏற்பட்ட அனுதாபம் நிலைத்து நின்று விட்டது. அத்துடன் மட்டும் இல்லாமல், அருணாசலத்தின் வாசாலகப் பேச்சிலும், கம்பீரச் சிரிப்பிலும், குளிர்ந்த பார்வையிலும் தன் மனத் தைப் பறிகொடுத்து விட்டாள் அவள். அவன் யாரா யிருந்தால் என்ன? எங்கே பிறந்திருந்தால் என்ன? அவனுக்கும் அவளுக்கும் நெடுநாளாகப் பிணைப்பு ஏற் பட்டது போன்ற பிரமையை அவள் இதயம் உணர்த்திக் கொண்டேயிருந்தது. 

நடனக் கலையை அவள் ஆவலுடன் பயின்று வந்தாள். ன்னாசியும், சிங்கப்பூரானும் ஒரு விதத்தில் அவளுக்கு நன்மையே செய்துவிட்டதாக அவள் நினைத்தாள். இன் சி மட்டும் அப்படி விரட்டி அடிக்காமல் இருந்தால். அந்த மாங்குடிக் கிராமத்தின் வம்புச் சேற்றுக்குள் அழுந்திக்கிடந்து உழலவேண்டியதுதான். தீமையில் நன்மை ஒளிந்து கிடக்கும் விந்தையை அறிந்து கொண்டாள் அல்லி. 

கார்த்திகைத் தீபம் அவளை ஊரை விட்டு விரட்டினாலும், தைப் பொங்கலை அவள் வெகு விமரிசையாகத் தன் ஆசிரியருடன் கொண்டாடினாள். ராஜநாயகம் தம் மகளைப் போலவே நினைத்து அல்லியிடம் அன்பு செலுத்தினார். நாச்சியாரம்மாவுக்கு ராஜநாயகம் இப்படித் திடீரென்று மாறிப்போனது வியப்பாகத்தான் இருந்தது. பெண்களைப் பார்த்துச் சிரித்துக் கேலி செய்தவர் முற்றிலும் புதிய தோரணையுடன் நடந்து கொண்டார்.

அன்று கன்னிப் பொங்கல். திரள் திரளாக மக்கள் சென்னையைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பியிருந்தனர். கட்டுச்சோறும் புதுச்சேலையும், கொண்டையில் மருக் கொழுந்துக் கதம்பத்துடன் பெண்களும், புது வேட்டி யும் சட்டையுமாக ஆண்களும் கடற்கரை என்றும், காட்சி சாலை என்றும் சுற்றிச் சுற்றி வந்தனர். 

அல்லி,மாடி அறை ஜன்னல்அருகில் நின்று தெருவிலே செல்பவரைக் கவனித்தவாறு இருந்தாள். வாத்தியார். ஐயா யாரோ ஒரு பணக்காரப் பெண்ணுக்கு நாட்டியம் பயில்விக்க வெளியே போயிருந்தார். நாச்சியாரம்மாள் தன் வழக்கப்படி அண்டை வாசலில் பேசப் போய் விட்டாள். 

தொலைவில் தெரியும் மாளிகைகளும், எழும்பூர் ரெயில் நிலையமும். தூங்குமூஞ்சி மரங்களும் மாலைச் சூரியனின் மஞ்சள் ஒளியில் மூழ்கிக குளித்துக் கொண்டிருந்தன. 

திருமாலின் சக்கரமான ஆதவன் சுழன்று மலை வாசலுக்குப் போயிருந்தான். அல்லி தன்னை மறந்த நிலையில் நின்றிருந்தாள். 

“அல்லி!”

தேனும்,பாகும் கலந்தாற்போல் இனிப்பாக அந்தக் குரல் காற்றில் மிதந்து வந்தது. 

அலை அலையாக வாரிவிடப்பட்ட கிராப்புத் தலையும், பள பளக்கும் ‘சிலாக்’ சட்டையுமாக அருணாசலம் வாயிற்படியைத் தாங்கியவாறு நின்றிருந்தான். 

தன் விழிகளை அவன்பால் திருப்பி, குறுகுறுத்த புருவங்களை ‘என்ன?’ என்ற பாவனையால் அல்லி கேட்டாள். 

“இங்கே வாயேன், சொல்கிறேன். அது ஒரு பெரிய ரகசியம்!” என்று சிரித்தவாறு கூறினான் அருணாசலம்.

அல்லி அவனுக்கு அருகில் வந்து நின்றாள்.பிறகு ஆவலுடன், ”என்ன அது?” என்று கேட்டாள். 

“ஊரெல்லாம் ஒரே மக்கள் கூட்டமாக இருக்கிறது. அங்கே, இங்கே என்று வேடிக்கை பார்க்கப் போய்க் கொண்டிருக்கிறார்கள். நீயும், நானும் தனிமையில் பேச இங்கு சந்தர்ப்பமே இல்லையே? வாயேன். இப்படி வெளியே போய்விட்டு வரலாம்” என்று அழைத்தான் அவன். 

“ஐயா வீட்டிலே இல்லையே?” என்றாள் அவள். 

“நீ என்ன இன்னும் பச்சைக் குழந்தையா? உன்னைப் பற்றி ஒரு தீர்மானத்துக்கு வர உனக்கு வயசாக வில்லையா? கிளம்பு அல்லி; ஹும் சீக்கிரம்!” என்று அவசரப்படுத்தினான் அவன். 

ஆமாம்; அல்லிக்கும் வெளியே சுதந்திரமாகப் போய்ப் பார்த்துவிட்டு வரவேண்டும் என்று ஆசையாக இருந்தது. ஐயாவுக்குப் பழக்கமான மனிதர் அருணாசலம். ஐயா ஒன்றும் சொல்ல மாட்டார் என்ற துணிச்சலுடன், அல்லி வெளியே கிளம்பி விட்டாள். 

தெருக்கோடியை அடைந்ததும் அங்கு விரைந்து செல்லும் ‘டாக்ஸி’ யைக் கைதட்டி அழைத்தான் அருணாசலம். இருவரும் ஏறி அமர்ந்தபின் பள பளவென்று நீல நிறத்தில் அன்னப்படகென அது தரையில் ஓடுவது தெரியாமல் விரைந்தது. ஒரே வியப்பில் ஆழ்ந்து போன அல்லி சென்னை நகரத்தின் தெருக்களையே பார்த்து வந்தாள். அவளுக்கு வெகு அருகில் மிகமிகநெருக்கமாக அருணாசலம் உட்கார்ந்திருந்தது அவளுடைய மனசுக்குத் தெம்பாக இருந்தது. அவன் ஒருவனே அவளுக்கு எல்லாமாக விளங்கினான். ஆயிரம் உறவினர்கள் ஏற்படுத்த முடியாத ஒரு நிறைவை அவன் ஒருவன் அவளது உள்ளத்தில் ஏற்படுத்தினான். நாட்டியம் என்ற பெயரில் ஒருமங்கை இடுப்பை வளைக்க முடியாமல், கையை மட்டும் ஒயிலாக அசைத்தபடி நிற்கும் கோலத்தை சுவரொட்டி சினிமா விளம்பரத்தில் பார்த்த அவள் ‘களுக்’கென்று சிரித்தாள். 

“சினிமாவில் நாட்டியம் என்றால் இப்படித்தான் இருக்குமா?” என்று கேட்டவாறு அல்லி அவனைத்திரும்பிப் பார்த்தாள். 

“பெரும்பாலான படங்களில் நாட்டியம் இப்படித்தான் இருக்கும். உயர்ந்த நடனத்தை மக்கள் ரசிக்க மாட்டார்கள் என்பது அவர்கள் எண்ணம். ஒரு வேளை உன்னைப் போல ஒரு நாட்டியக்காரி அவர்களுக்கு அகப்படவில்லையோ என்னவோ?” கையில் புகைந்து கொண்டிருந்த சிகரெட்டை உதட்டிலே சாய்த்துப் பொருத்தியவாறு அருணாசலம் கூறினான். 

“என்னைப் போல ஒரு நாட்டியக்காரியா? அப்படி நான் அந்தக் கலையில் கரை கண்டு விட்டேனா, என்ன? இன்னும் நான் படிக்க வேண்டியது எவ்வளவோ உண்டே?” 

குழந்தைபோல தற்பெருமை எதுவும் இல்லாமல் அடக்கமாகப் பேசினாள் அல்லி. 

அருணாசலம் தன் முன் சுழன்று செல்லும் சுருளைக் கவனித்தவாறு குறுநகை புரிந்தான். 

”உனக்குத் தெரிந்தவரை போதும். தாளத்தைப் பற்றி அறியாதவர்கள் சினிமாவில் நாட்டியம் ஆடவந்து விடுகிறார்கள். உனக்கென்ன? அன்று ஒரு நாள வெள்ளியன்று ஆடினாயே, ‘எதைக் கண்டு நீ இச்சை கொண்டாய்’ என்கிற பாடலுக்கு! பாவம் அப்படியே ததும்பி நின்றதே உன் சிரிப்பிலும் கண் வீச்சிலும்! அது போதுமே!” 

அல்லி திகைப்புடன் அவனைப் பார்த்துக்கொண்டே, “நீங்கள் எவ்வளவு படித்திருக்கிறீர்கள்? உங்கள் சொந்த ஊர் எது? உங்களுடைய விருத்தாந்தம் தான் என்ன?” என்று வினவினாள். 

“ஊரென்ன,பெயரென்ன, சம்பாத்தியமென்ன என்று ஆரம்பித்து விட்டாயே? ஊரும் பெயரும் தெரிந்தால் உன் காதலுக்கே கத்தரிக்கோல்போட்டு விடுவாயோ. சினிமா தணிக்கையாளர் மாதிரி?” என்று கேட்டு கட கட வென்று சிரித்தான் அவன். 

” ஏதேது, சினிமா ஞானம் அபாரமாக இருக்கிறதே! கேட்ட கேள்விக்குப் பதிலைக் காணோம்!” என்று சிணுங்கிக் கொண்டே முகத்தை ‘உர்ரென்று வைத்துக் கொண்டு ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டிப் பார்த்தாள். 

அருணாசலம் சட்டைப் பையிலிருந்து சிகரெட்பெட்டியை வெளியே எடுத்தான். ‘லைட்’டரால் ஒரு சிகரெட்டைப் வற்றவைத்தவாறு “நான் கொஞ்சம் பசை உள்ளவன் தான். ஒவ்வொரு சமயம் திடீரென்று வீட்டிலே சொல்லாமல் பட்டணம் வந்து விடுவேன்” என்றான். 

“ஏன் அப்படி?”

“நீ ஏன் திடுதிப்பென்று வீட்டை விட்டுக் கிளம்பினாயாம்? உனக்குத் தெரியுமா, இப்படி நீ திடீரென்று பட்டிணம்போய் காரில் சவாரிசெய்து கொண்டே என்னுடையபூர்வ கதையைக் கேட்கப்போகிறாய் என்று. உலகத்திலே அப்படி அப்படித்தான் சில நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மதுரைப் பக்கத்துப் பசுமலைக்காரனுக்கும் தஞ்சாவூர் ஜில்லாவைச் சேர்ந்த மாங்குடிப் பெண்ணுக்கும் நான்முகன் முடிச்சுப் போட்டு வைத்திருக்கிறானே, நீயும் நானும் பின்னே எப்படித்தான் சந்தித்துக் கொள்கிறதாம்?…” 

அல்லிக்கு அவனைப் புரியவில்லை. பசை உள்ள குடும்பத்து இளைஞன் பிரயாணச் சீட்டு இல்லாமல், ரெயிலில் பலர் முன்னிலையில் அவமானப்படுவது அவளுக்கு வேதனையாகவும், விசித்திரமாகவும் இருந்தது. 

“பணம் இருக்கிற நீங்கள், இல்லாதவர்களைப்போல ஏன் வேஷம் போட்டீர்களாம்? அன்று ரெயிலில் டிக்கட் பரிசோதகர் முன்பு பல்லை இளித்து உறுமினீர்களே?  அபாரமாக இருந்தது.”

அல்லி பாதிகேலியாகவும் பாதிவருத்தமாகவும் பேசினாள் அவள் முகத்திலே வேதனை நிழலாடியது. மையுண்ட கருவிழிகளின் ஓரத்திலே முத்துப்போல் கண்ணீர்த் துளிகள் தேங்கி நின்றன. உதடுகள் சொல்லொண்ணாத் துயரத்தால் மெல்ல அசைந்தன. 

அவன் அவளைக் கவனித்தான், 

“அல்லி,ஏன் கலங்குகிறாய்? ஓரளவு வீட்டுக்கு அடங்காத பிள்ளை நான். சேற்றிலும் சகதியிலும் பாடுபடும் தந்தைக்கு உதவியாக இராமல் ஊரைவிட்டு ஊர் ஓடி வருகிறவன்தான் வளர்ந்து பலன் தரவேண்டிய விவசாயக் குடும்பங்களில் எங்களுடையதும் ஒன்று. என் பெற்றோர் என்னை நம்பித்தான் இருக்கிறார்கள். ஆனால் ஏதோ ஒரு பலஹீனம், நிலையாமை, பட்டிணத்து நாகரீகத்திலே ஏற்பட்டிருக்கிற பிரமை எல்லாமாகச் சேர்ந்து என்னை இப்படி இயங்க வைக்கின்றன. என் குற்றங்கள் எனக்குப் புரிகின்றன. அவைகளை வெல்லத்தான் எனக்குத் துணிச்சல் இல்லை. திறமை இல்லை.”

அல்லி கண் மை கரைய அழுதுவிட்டாள். சற்று முன் ரோஜா மலரெனச் சிவந்திருந்த அவள் முகம் அதன் மையத்தைப்போலச் சிறிது வெளுத்து விட்டது.

அருணாசலத்திடம் ஒரு குணம் உண்டு. எதையுமே நினைத்துச் செய்து முடிக்கும் ஆற்றலும், செய்யமுடியா விட்டால் மறந்துபோகும் குணமும் அவனுக்கு உண்டு. 

அருணாசலம் தன் ஊரைப்பற்றியும், பெற்றோரைப் பற்றியும் மறந்துவிட்டு, தனக்கே உரித்தான குறுநகையுடன் சோகமே உருவாக உட்கார்ந்திருக்கும் அல்லியைப் பார்த்தான். அவன் பார்வையின் தன்மையைத் தாள முடியாமல், “ஹுக்கும், போங்கள்! எது எப்படி வேணுமானாலும் இருக்கட்டும். நீங்கள் சொல்கிற கெட்ட குணங்கள் எலலாவற்றையும் தூக்கி மூலையில் எறிந்து விட்டு நேர்மையாக நடக்க வேண்டும். ஒருவரையும் ஏமாற்றக் கூடாது. என்ன, தெரிந்ததா?” என்று அவன் முகத்துக்கு நேராக மருதோன்றி இட்டிருந்த தண் அழகிய கையை ஆட்டிப் பேசினாள். 

”தெரிந்தது, தெரிந்தது, இப்பொழுது நாம் எங்கே போகிறோம், தெரியுமா?”

“எனக்கென்ன தெரியும்?” என்று உதட்டைக் குவித்தவாறு கூறினாள் அல்லி.

காரோட்டியின் பக்கம் தன் தலையைச் சாய்த்து அவன் காதருகில் ஏதோ கிசுகிசுத்தான் அருணாசலம். கார் ‘விர்’ ரென பறந்துவந்து அடையாற்றில் ஒரு பெரிய மாளிகையின் முன்பாக நின்றது. வாயிற்கதவைத் திறந்து விட்டு வணங்கினான் வாயிற் காப்போன். 

‘அழகி படத் தயாரிப்பாளர்கள்’ என்று கொட்டை எழுத்தில் இருப்பதை வெகு சிரமத்துடன் கூட்டிப் படித்தாள் அல்லி. அவள் எழுத்துப் பயின்றதும் ராஜநாயகத்திடம் தான். 

”என்ன இது? எங்கே போகிறோம் நாம்” என்று மெல்லக் கேட்டு அவனைப் பார்த்தாள் அல்லி. 

“ஒரு படக் கம்பெனியின் முதலாளியிடம் உன்னைப் பற்றி நிறையக் கூறி இருந்தேன் அல்லி. அவரைப் பார்த்து உன்னை ஒரு படத்தில் நடிக்கச் சேர்க்கத்தான் அழைத்து வந்தேன்.” 

அல்லியின் திகைப்பு அடங்குவதற்குள், நெடிதுயர்ந்து பருத்த பிரமுகர் ஒருவர் தம் தங்கப்பல் தெரிய பெரிய ஹாஸ்ய நிகழ்ச்சியைக் கண்டவர் போல் சிரித்து அவர்களை வரவேற்றார். 

உள்ளமும் உடலும் பதைக்க, உள்ளே செல்வதா வேண்டாமா என்று திகைத்தவாறு, அல்லி காரின் கதவைப் பிடித்துக்கொண்டு நின்றாள்.

தொடரும்…

– ஆடும் தீபம் (நாவல்), முதற் பதிப்பு: மார்ச் 1967, செல்வி பதிப்பகம், காரைக்குடி

சரோஜா ராமமூர்த்தி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூலை 27, 1921-ல் ராமச்சந்திரன், கிரிஜா இணையருக்குப் பிறந்தார். தந்தை திருக்கழுக்குன்றத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தார். பதினொரு வயதில் தாயை இழந்தார். தந்தையுடன் ஏற்பட்ட மனவேறுபாடு காரணமாக 1940-ல் அத்தை, மாமாவுடன் பம்பாயில் குடியேறினார். எழுத்தாளர் து. ராமமூர்த்தியை ஜனவரி 28, 1943-ல் பம்பாயில் பதிவுத் திருமணம் செய்துகொண்டார். மூன்று மகள்கள். நான்கு மகன்கள். மகள்கள் சரஸ்வதி, பாரதி, கிரிஜா. மகன்கள் ரவீந்திரன், ஜெயபாரதி,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *