கற்றல் நன்றே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 6, 2024
பார்வையிட்டோர்: 4,962 
 
 

புதன் கிழமை. காலை நேரம் . தேசிங்கு ராஜாவின் வீட்டில் அமைதி நிலவியது. தேசிங்கு ராஜா , தரையில் அமர்ந்து செய்தித்தாளைப் புரட்டிக் கொண்டிருந்தார். தரையில் அமர்ந்து நாளிதழ் வாசிப்பதுதான் அவருக்குப் பிடிக்கும். சற்று நேரத்தில் , செய்தித்தாளில் மனம் செல்லாமல் , அதனை அருகில் இருந்த தாழ்வு மேசையில் வைத்து விட்டு இருக்கையில் அமர்ந்தார். வாசலில் நிழலாடியது. அவருடைய உதவியாளன் , தொண்டர்களில் ஒருவன் – இளைஞன் நித்தியானந்தம் நின்று கொண்டிருந்தான்.

‘வாய்யா ஒவ்வொரு நாளும் வான்னு சொன்னாதான் உள்ளே வருவியா?‘ என்றார் தேசிங்கு ராஜா.

தலைவர் மனநிலையைப் புரிந்து கொண்ட நித்தியானந்தம் , இன்று நாம் அதிகம் பேசிவிடக் கூடாது என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டான். தேசிங்கு ராஜா , செய்தித்தாளின் இணைப்பிதழ் புத்தகத்தைக் கையில் எடுத்துப் புரட்டினார். தேசிங்கு ராஜாவின் மகள் இளம்பெண் ரம்யா ஓர் அறையிலிருந்து வெளிப்பட்டாள்.

‘அண்ணே ஒங்கள அம்மா டிபன் சாப்பிட்டு விட்டுப் போகச் சொன்னாங்க …’

நித்தியானந்தம் , மிகுந்த தயக்கத்துடன் கைப்பையில் இருந்த டப்பாவை வெளியே எடுத்தான் .

‘எதுக்குய்யா டிபன் பாக்ஸ் … ‘ தேசிங்கு ராஜா கேட்டார்.

‘அது வந்து அண்ணே .. காலையில எனக்கும் என் மனைவிக்கும் சண்டை. உணவு எதுவும் செய்ய மாட்டேன்னு நீயே ஒன் பிள்ளைங்கள பார்த்துக்கன்னு வேலைக்குப் போய்ட்டா … அதனால .. ‘ என்று இழுத்தான் நித்தியானந்தம் .

‘ஒங்களுக்கு எல்லாம் இதே வேலயா போச்சு கொடுங்க டப்பாவை … அந்த பையையும் கொடுங்க ‘ என்று கேட்டு வாங்கிக் கொண்ட ரம்யா சமையலறையை நோக்கிச் சென்றாள்.

‘என்ன அண்ணே .. பாப்பா ஒங்களுக்கு எல்லாம் ன்னு சொல்லுது ‘ வாயைக் கட்ட வேண்டும் என்று நினைத்த நித்தியானந்தம் கேட்டான்.

‘ஆமாம்யா காலங்கார்த்தாலே எங்க வீட்லயும் சண்டை வாக்கு வாதம் … அறிவுடை நம்பி, கட்சில ஒங்கள விட ஜூனியர் அவரு சீட் வாங்கி எம்எல்ஏ ஆயிட்டாரு ஒங்களுக்கு தெரவசு இல்லையே ன்னு அண்ணி பிலுபிலுன்னு பிடிச்சுகிட்டா … ‘

‘ஏன் அண்ணே .. அவரு எம்எல்ஏ ஆகி ஒரு வருஷம் ஆக போவுது இன்னுமா அண்ணி அதையே பேசறாங்க…. ‘

‘அடுத்த தேர்தல் வரைக்கும் பேசிக்கிட்டு இருப்பா… நல்ல வேளை நம்ம கட்சி எதிர்க்கட்சி ஆச்சு ஆளும் கட்சியா வந்திருந்தா உண்டு இல்லைன்னு ஆக்கி இருப்பா … ‘

சமையலறையைப் பார்த்துக் கொண்டே பேசினார் தேசிங்கு ராஜா.

‘சரி இன்னிக்கு சாயங்காலம் நடக்கிற கங்காநகர் குடியிருப்போர் சங்கம் ஆண்டு விழாவுக்கு என்னை அழைச்சு இருக்காங்க இல்ல… ‘

‘ஆமா அண்ணே… எம்எல்ஏ சிறப்பு விருந்தினர் நீங்க சிறப்பு அழைப்பாளர் … ‘

வீட்டின் ஓர் அறையிலிருந்து கையில் செல்போனுடன் அவருடைய பதின் பருவ மகன் கதிரவன் ஓடி வந்தான்.

‘அப்பா இந்த டேப்ளட் எனக்கு வாங்கி குடுப்பா… ‘

‘அக்கா அக்கவுடன்ல பணம் இருக்கு ஆன்லைன்ல ஆர்டர் பண்ணி வாங்கி கொடுக்க சொல்லு… ‘

‘ டாடி என் அக்கவுன்ட் ல பணம் இல்ல’ அறையிலிருந்து பதில் சொன்னாள் ரம்யா .

‘தாத்தா அனுப்பின பணம் எல்லாம் என்ன ஆச்சு ‘உரத்த குரலில் கேட்டார் தேசிங்கு ராஜா.

சமையலறையிலிருந்து அவருடைய மனைவி சரஸ்வதி வெளிப்பட்டார்.

‘பசங்களுக்கு ஒங்க மாமனார் தான் வாங்கி கொடுக்கணுமா .. நீங்க ஒங்க பணத்தை எடுக்கவே மாட்டீங்களா… ‘ சரஸ்வதி கேட்டார்.

ரம்யா, அறையிலிருந்து வெளியே வந்தாள்.

‘தாத்தா பணம் அனுப்பினாருன்னு பொண்ணு சொன்னதால சொன்னேன்’ என்று முணுமுணுத்த தேசிங்கு ராஜா, நித்தியானந்தத்திடம் தன்னுடைய மொபைல் போனை நீட்டினார்.

‘யோவ் கூகுள் பேல பாப்பாவுக்கு பத்தாயிரம் அனுப்புயா’

நித்தியானந்தம் போனை வாங்கிக் கொண்டான்.

ரம்யா , சிற்றுண்டி டப்பா உள்ள பையை அவனிடம் கொடுத்தாள்.

‘அப்பாவோட போகும் போது வீட்டுக்குப் போய் பசங்களுக்கு கொடுத்துட்டு போங்க. சாம்பார் தனியா ஒரு பாட்டில்ல வெச்சிருக்கேன் … வாயைக் கட்டினால் வம்பு இல்ல…‘ என்றாள் ரம்யா.

‘தேங்க்ஸ் ம்மா…‘

‘நீங்க ஒண்ணும் சாப்பிடாம போறீங்களே…‘

‘அப்பா , பெரிய மனுஷங்க கிட்ட பேசிக்கிட்டு இருக்கும் போது கிடைக்கிற நேரத்துல நான் சாப்பிட்டுக்கறேன் ம்மா…‘ என்றான் நித்தியானந்தம் .

தேசிங்கு ராஜாவும் நித்தியானந்தமும் வாசலை நோக்கி நடந்தனர்.

‘நித்யா… டிரைவர் பார்த்திபன் வரலை நீ வண்டி ஓட்றியா… ‘

‘சரி அண்ணே… என் வீட்டுக்குப் போய்ட்டு… ‘

‘சரி வா’ என்றபடியே வண்டியில் ஏறினார் தேசிங்கு ராஜா.

அன்று மாலை நேரம். கங்காநகர் குடியிருப்போர் சங்கத்தின் ஆண்டு விழா நடைபெறும் அரங்கத்தில் தேசிங்கு ராஜாவும் நித்தியானந்தமும் அமர்ந்து இருந்தனர்.

‘என்னய்யா… ஆடியன்ஸ்ல உட்கார வைச்ச்சுட்டே…‘

‘நிகழ்ச்சி தொடங்கட்டும் அண்ணே மேல போலாம். எம்எல்ஏ வை லாக் பண்றா மாதிரி ஏதோ திட்டம் வெச்சு இருக்கேன்னு சொன்னீங்களே என்ன அது … ‘

‘அது என் பையன் டேப் வாங்கி கொடுன்னு கேட்டான் இல்ல, அப்ப உதிச்சுது ஒரு எண்ணம்….‘

‘வாங்க ஸ்டேஜ்ல வர சொல்றாங்க…‘

தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. சட்ட மன்ற உறுப்பினர் , தேசிங்கு ராஜா உள்ளிட்ட பிரமுகர்கள் மேடையில் அமர்ந்து இருந்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் வரவேற்புரை நிகழ்த்திய பின் , தேசிங்கு ராஜாவைப் பேச அழைத்தார்.

தேசிங்கு ராஜா பேசினார்

‘வணக்க்கம் கங்காநகர் உள்ளிட்ட இந்திரா நகர் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினராக நம் கங்காநகர் மைந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டது என்னைப் போன்றவர்களுக்கு மகிழ்ச்சி . தம்பி அவர்களிடம் ஒரே ஒரு கோரிக்கை . நேரடி வகுப்பு தான் இப்போது நடைமுறை என்று ஆகி விட்ட போதிலும் நமது பகுதியைச் சேர்ந்த வசதி இல்லாத பெற்றோரின் குழந்தைகளுக்கு அவர்கள் படிப்புக்கு உதவும் வகையில் டேப்ளட் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் . இந்த இனிய வேளையில் நடக்கும் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தமைக்கு நன்றி’

இருக்கையில் அமர்ந்தார் அவர்.

சட்டமன்ற உறுப்பினர் அறிவுடை நம்பி உரைமேசை அருகில் வந்தார். பேசத் தொடங்கினார் –

‘வணக்கம் அடுத்து யார் பேசப் போறாங்கன்னு தெரியல. நான் அண்ணன் தேசிங்கு ராஜா அவர்களுக்குப் பதில் கூற வந்து விட்டேன். அவர்களுக்கு மட்டும் அல்ல அனைவருக்குமான நல்ல தகவல் அல்லது என்னுடைய முன்முயற்சி பற்றி கூறுகிறேன். அண்ணா டேப்ளட் கொடுங்கன்னு கோரிக்கை வெச்சாரு. இப்ப பார்த்தீங்கன்னா பதின் பருவ பசங்க சிறுமிகள் எல்லார் கிட்டயும் ஹேண்ட்செட் இருக்கு அதுதான் பிரச்சினைன்னு நெனக்கிற ஒங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்குது. நான் வேற யோசிச்சேன். என்னோட பொது வாழ்க்கையின் தொடக்க காலத்துல உட்கார்ந்து வேலை செய்ய இடம் இல்லாத நிலைமையில கட்சி வேலை.. சமூக சேவை வேலை எல்லாத்தையும் நம்ம தீனா ஜெராக்ஸ் கடையில உட்கார்ந்து தான் பார்த்துகிட்டு இருந்தேன். அவரைப் பத்தி பேசும்போது என்ட்ரி கொடுக்கிறாரு பாருங்க அந்த இளைஞர் தான் தீனா. அவரோட கடைக்கு பக்கத்துல ரெண்டு கடை காலியா இருக்கு . அதை நான் எடுத்து வெச்சு ஒரு கடையில வைபை வசதி செஞ்சு தரேன்..மொபைல் டேட்டா கட்டணம் செலுத்தினால் தானே கிடைக்கும் அதுக்குதான் இந்த வைபை மையம். என்ன தீனா பண்ணிடலாம் இல்ல.

நம்ம ஏரியா ஸ்கூல் பசங்க சிறுமிங்க , காலேஜ் ல படிக்கிறவங்க எல்லாரும் அவங்க டிவைஸ் கொண்டு வந்து பயன்படுத்திக்கலாம். ஆக்கப்பூர்வமா மட்டும்தான் பயன்படுத்தணும் . கல்விக்கு மட்டும் பயன்படுத்தணும் .

இன்னொரு கடை – இ சேவை மையம் மாதிரி கல்வி சேவை மையம் . பள்ளிப் படிப்பை , கல்லூரிப் படிப்பை பாதில நிறுத்திட்டு வருத்தப்படறவங்க , படிப்பை முடிக்கணும் னு விரும்பினா அவங்களுக்கு வழிகாட்டும் மையம் . நேசனல் ஓப்பன் ஸ்கூல்ல சேர்ந்து பள்ளிப் படிப்பை முடிக்கறது எப்படி ஓப்பன் யுனிவர்சிடில சேர்ந்து டிகிரிய முடிக்கறது எப்படி போட்டி தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி … இதெல்லாம் நான் சொல்லி தரப் போறது இல்ல. பார்வையாளர்களில் முன்வரிசையில் உட்கார்ந்து இருக்கும் பேராசிரியர் கங்காநகர் கங்காதரன் தான் வழிகாட்டப் போறாரு. நம்ம ஆளுங்க காட்ற ஆர்வத்தைப் பொறுத்து ஈடுபாட்டைப் பொறுத்து அவர் ஒரு டீம் உருவாக்கிப்பாரு .. உங்களால இயன்ற தொகையை கொடுங்க இதுதான் நம்ம திட்டம் நன்றி… ‘

அவர் இருக்கையில் அமர்ந்தார். பார்வையாளர்கள் கரவொலி எழுப்ப , தேசிங்கு ராஜாவும் இருக்கையில் அமர்ந்தபடி கைகளைத் தட்டினார். அவருக்குப் பின்னால் நின்றிருந்த நித்தியானந்தம் முணுமுணுத்தான்.

‘இது என்ன பிரமாதமான ஐடியான்னு கை தட்றீங்க அண்ணே’

தேசிங்கு ராஜா அவனுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னார் –

‘பிரமாதமான ஐடியா தான்யா .. அன்னிக்கு எனக்கு படிப்பை முடிக்க யாரும் வழி காட்டலை. இன்னிக்கு வரைக்கும் என்னைப் படிக்காதவன்னு சொல்றாங்க ‘

மேடையில் இருந்த தேசிங்கு ராஜா, எழுந்து நின்று மீண்டும் கைகளைத் தட்டினார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *