அன்னைக்கு நடந்தது எல்லாம் கனவு மாதிரி இருக்கு!!, சில கனவுகள் உண்மையாகவே நடந்தது மாதிரி இருக்கும், ஆனால் கண் விழித்ததும், “ச்ச!! கனவு!!” என்று சலித்து கொண்டு அதனை மறந்து விடுவோம்!! ஆனால் அன்னைக்கு எனக்கு நடந்த அனுபவம்!! அதிலும் அந்த பெரியவரின் பேச்சும் தோற்றமும் மறக்குற மாதிரியா இருந்தது!!?
அது கனவா!? நனவா!? எதுவும் யோசிக்க விரும்பல, அந்த சம்பவத்திற்கு பிறகு என் வாழ்க்கையே பெரிய மாற்றத்தை அடைஞ்சிருச்சி!!
அன்னைக்கு அந்த சம்பவம் நடந்ததுலருந்து இரண்டு மூணு நாளுக்கு சொந்த பந்தங்கள் எல்லாம் வீட்டுக்கு வந்து என்னை பார்த்திட்டு போனாங்க!! ஏன் ஊரே திரண்டுவந்து கூடதான் பத்துது!! சிலபேர் என்னை நோண்டி நோண்டி கேள்வி கேப்பாங்க!!
எனக்கு பதில் சொல்லி சொல்லி அலுத்து போச்சு!! இப்பலாம் யார்ட்டயும் நா பேசுறதே கிடையாது, முன்னடிலாம் வாழ்க்கை மேலயே ஒரு வெறுப்பு இருக்குமே அதுவும் இப்பலாம் எனக்கு கிடையாது!!
நா நல்லாதான் இருக்கன், ஆனா இப்போதான் நா ஏதோ பாதிக்கப் பட்டவன் மாதிரி எல்லாரும் என்ன சுத்தி சுத்தி நின்னு கவலப் படுறாங்க!!
எனக்கு என் ப்ரைவசியே போய்றுச்சி!!, என் தனிமை என் புஸ்த்தகங்கள், என் மொபைல் போன், எனக்கே எனக்கு என்று நான் உரிமையுடன் நேசித்த ஒரு சில உறவுகள் எல்லாத்தயும் என்கிட்ட இருந்து பிரிச்சிட்டாங்க அல்லது பிரிஞ்சிட்டாங்க!! எப்டி வேணா எடுத்துக்கலாம்!!
உறவுகள்னு சொன்னன்ல அதுலதான் எனக்கு சிக்கலே!! சின்ன வயசுலலாம் சொல்லுவாங்க தெரியுமா!? “எதுக்கும் ஒரு லெவல் உண்டு!!” அத தாண்டினா நாமதான் பித்து பிடிச்சி திரியனும்னு!! அது இந்த உறவுகள், நட்புகள் எல்லாத்துக்கும் பொருந்தும்!!
நீங்க அந்நியன் படம் பாத்துருக்கிங்களா!? அதுல வர அம்பி மாதிரி நீங்க இருந்திங்கன்னா உங்கள இந்த உலகம் இளிச்சவாயனாவும் ஏமாஞ்சாளியாவும் பாக்கும்!!
இந்த உலகத்துக்கு உங்களோட நேர்மையும் உண்மையும் அக்கறையும் மட்டும்தான் தேவை, ஆனா நீங்க தேவை இல்லை!! நீங்க படிக்கிற புத்தகங்கள் கேக்குற கதைகள் எல்லாமும் உங்களை “சத்யசந்தனாக வாழு!! உண்மையாக இரு!! உண்மையாக காதலி!! பலனை எதிர் பாக்காத!! கடமையை செய்!! கடவுள் பாக்குறார் கடைசியில நேர்மைதான் ஜெயிக்கும்!!” அப்டின்னுலாம் சொல்லும்
அத நீங்களும் நம்பி “அம்பி விக்ரம்” மாதிரி இருந்தீங்கன்னா இதோ!!, என்ன மாதிரிதான் புலம்பனும்!!
“கடைசியில நேர்மையும் உண்மையும் ஜெயிக்கும்னு எவனாவது சொன்னான்னா அவனை பாத்து சிறிது புன்னகை செய்ங்க, அவ்வளவுதான் நம்மலால இங்க பன்ன முடியும்”
சரி!! நா ஏதேதோ சொல்ல வந்து ஏதேதா சொல்லிட்டு இருக்கன்!!
முன்னடிலாம், நா தினமும் ஒரு கோயிலுக்கு போவன், எங்க ஊர் கடற்கரைக்கு பக்கம் இருக்குற ஊர்;
எனக்கு மனசு சங்கடமா இருக்குற நேரத்துலலாம் எனக்கு பிடிச்சவங்ககிட்டலாம் பேசனும்னு நினைப்பன், நீங்களும் அப்டிதான் நினைப்பிங்க இல்லையா!?
ஆனா, காமெடி என்னன்னா அவங்களுக்கு அப்ப நாம தேவை இல்லாதவங்களா இருப்போம்!! உங்களுக்கு தேவையானப்ப இந்த உலகத்தில எதுவுமே நடக்காது!!” அதுக்கு இதுலாம் ஒரு உதாரணம்தான்
அந்த மாதிரி நேரங்கள்ள எனக்கு தனிமையா இருக்குறதுதான் பிடிக்கும்!! வீட்ல கூட எல்லாம் கேப்பாங்க தனியா என்ன பன்ற!? தனியா என்ன பன்றி!?ன்னு தனியா இருந்து என்ன அணுகுண்டு சோதனையா நடத்த முடியும்!!
மனசுல லட்சம் யோசனைய வச்சிருக்கவங்களுக்கு தனியா இருக்குறதுதானங்க ஜாலி!? அது யாருக்கு புரியும்!! இது மாதிரி கேள்விகளுக்கு பயந்துகிட்டு நா அடிக்கடி கடற்கரைக்கு போயிறுவன்,
அங்க ஒரு பெரிய சவுக்கு தோப்பு இருக்கும் அதுக்கு நடுப்புற ஒரு சிவன் கோயில் இருக்கும் பாழடஞ்சது!! சின்னதுதான்!!
அங்க ஊர்காரவங்க யாரும் வரமாட்டாங்க, மதியான நேரத்தில் கடற்கரையில அடிக்கிற வெயிலுக்கும் வீசுற காத்துக்கும் அந்த கோயில் மண்டபம் சொர்க்கம் மாதிரி இருக்கும், அங்க இருக்குற தனிமைதான் சொர்க்கம் போலன்னு நான் அப்பப்ப நினச்சிப்பன்,
தினமும் கோயிலுக்கு போவன், அது யாரும் வராத கோயில்தான் கதவுலாம் இருக்காது!! அந்த கோயில்ல யாரு சுவாமிக்கு பூசை பன்னுறாங்க எப்போ வராங்க எப்போ போறாங்கன்னுலாம் ஒன்னும் தெரியாது!!
ஆனா, நா எப்போ போனாலும் சுவாமிக்கு புதுப்புது பூவா சாத்தியிருக்கும்!! அந்த பூக்கள்ளாம் நம்ம ஊர்பக்கம் பூக்குற பூ மாதிரி ஒன்னும் தெரியாது!! ஆனா வாசனை கமகமன்னு அந்த ஏரியாவையே தூக்கும்!!
நா கையில ஏதாவது புத்தகம் எடுத்திட்டு போவன்; போனதும் சாமிய கும்பிடுவன் எனக்கு எதும் வேண்டிக்க தெரியாது!! அப்டியே கும்பிடுவன் அவ்ளோதான், எப்பவாது மனசு கஷ்டமா இருந்தா மட்டும் “அது செய்ங்க சாமி இத செய்ங்க சாமி” ன்னு கேப்பன், ஆனா நா நினச்சதுக்கு எதிர்மாறாதான் எல்லாமும் நடக்கும்!! அதுக்காக சாமி மேல நம்பிக்கலாம் எனக்கு இல்லாம போனது இல்ல!!
மறுநாளும் போவேன் சாமிய பாப்பேன் அவர் என்ன பாத்து அழுத்தமா சிரிக்கிற மாதிரி இருக்கும்!! நானும் அவர பாத்து சிரிச்சிட்டு கும்பிட்டுட்டு வணங்கிட்டு, என் தனிமை, என் புத்தகம்னு உக்காந்திருவன்;
ஒருநாள் எனக்கு மனசுல தாங்க முடியாத வேதனை, அது என்னனுலாம் கேக்காதிங்க அதலாம் வெளிய சொன்னா சிரிப்பிங்க, “இதுக்கு போயா கஷ்டப்படுற!?” ன்னு நீங்களும் கேப்பிங்க
மனுசன் மனசுல ஒவ்வொருத்தனும் எது எதுக்கு முக்கியத்துவம் தருவான், எது எது அவனவனுக்கு பிடிக்கும், ஏன் பிடிக்கும்னுலாம் ஒன்னும் காரணம் தேவை இல்ல, பிடிச்ச விஷயத்து மேல ஒவ்வொருத்தங்களுக்கும் ஒரு காதல்தான், அதுக்குலாம் காரணம் கேட்டா!!,
பூமி ஏன் சுத்துது!? காத்து ஏன் வீசுது!? மனுசன் ஏன் பொறந்தான்!? கடவுள் ஏன் இருக்கார்!? எல்லாத்துக்கும் காரணம் கேட்டுட்டே இருக்கலாம் பதில் சொல்ல யாரும் இருக்க மாட்டாங்க!!
எனக்கு என் வேதனை அவ்வளவுதான், தாங்க முடியாத வேதன, தோல்வியையும் நிராகரிப்புகளையும் ஏமாற்றங்களையும் மட்டுமே திரும்ப திரும்ப
இந்த உலகம் எனக்கு கொடுத்ததால வந்த வேதன, மனசு தாங்காம அழுதன், கோயிலுக்கு வேகமா போனேன்!!
அங்க என் இதயத்துக்கு நெருக்கமான தனிமையையும் சாமியையும் நினச்சி “ஓ”ன்னு கதறி அழனும்னு போனன், பாருங்க அதிசயமா அந்த தனிமையும் அன்னைக்கு எனக்கு இல்ல!!
கோயில்ல, யாரோ இருந்தாங்க, நா நெருக்கமா போனேன், நல்ல பெருத்த உருவம் தலையில நீலகலர் துணியால பெரிய முண்டாசு மாதிரி கட்டிருந்தார், தாடியும் மீசையும் அவரோட வாழ்க்கை அனுபவங்களில் தேங்கிய ஞான அருவிபோல வழிஞ்சுது,
இந்த ஊர்பக்கமே அவர நா இதுவரை பாத்தது இல்ல, அவருடைய வயசு நூறுக்கு மேல இருக்கும்னு தோனுச்சு ஆனா உடம்ப பாத்தா 50 வயசு இராணுவ வீரர் மாதிரி இருந்தது,
ரொம்ப கசங்கிய அழுக்கும் இரத்தமும் சீழும் ஒழுகி ஒழுகி காய்ஞ்சி தொடச்சது மாதிரியான ஒரு வேட்டியதான் அவரு கட்டிருந்தார், மேல சட்டை எதும் போடல,
தினமும் சுவாமி மேல, நா பாத்த அந்த அதிசயமான பூக்கள் அவர் கைகள்ள இருந்துச்சி, ஆனா அந்த பூக்களோட சுகவாசனைய மறைக்கிற அளவுக்கு அங்க இப்போ கொடுமையான நாத்தம் அடிச்சிது!!
ப்பா!! பொறுக்க முடியாத நாத்தம், மனுஷங்களுக்கு நாள்பட்ட புண்ணுலருந்து இரத்தமும் சீழும்வடிஞ்சி அடிக்கறது மாதிரி ஒரு நாத்தம், ஆனா எனக்கு அப்ப அந்த நாத்தம் பெருசா தெரியல, நாறுதுனு தெரியுதே தவிர அவர நா நெருங்க நெருங்க அது எனக்கு பெருசா தெரியல!! இதே நீங்களா இருந்தா குடல் புரட்டிருக்கும்!!
அந்த பெரியவர் நா வரப்பக்கத்த ஒரு தடவ திரும்பி பாத்தார், ஆனா என்ன பத்தி அவர்கிட்ட ஒன்னும் ரியாக்ஷன் இல்ல அவர் பாட்டுக்கு சாமிகிட்ட போனார், அந்த பூவெல்லாம் எடுத்து சாமிக்கு வச்சார்!! சாமிய கும்பிட்டு ஏதோ ஒரு பாட்டு பாடினார்!!
எனக்கு தமிழும் இங்க்லிஷும் தெரியும், மத்த பாஷைகள் பேசுறத வச்சி இன்ன பாஷ பேசுறாங்கன்னு ஓரளவுக்கு கண்டுபிடிப்பன், அவர் பாடின பாட்டு சமஸ்கிருதம்னு என்னால புரிஞ்சிக்க முடிஞ்சிது!!
“ஒருவேள இவர்தான் இந்த கோயிலுக்கு பூசை பன்னுற ஐயரோ!?” ன்னு நெனச்சி அமைதியா நின்னன் அவர் முதுகு பக்கத்துல பூணூல் ஓடியிருந்தது, ஐயருதான் னு நினச்சிகிட்டேன்!!
ஆனா இத்தன நாள்ள ஒருநாள் கூட இவர நாம் பாத்தது இல்லையே!! என்ன அதிசயமா இருக்கு!??ன்னு நா யோசிக்க ஆரம்பிச்சன்,
அவர் பாட்டு பாடுறத நிறுத்திட்டு சாமிகிட்ட ஏதோ பேசினார் அதுவும் சமஸ்கிருதம்தான், எனக்கு தெரிஞ்சவரை கோயில் பூசை பன்ற ஐயருங்கலாம் “சமஸ்க்ருத ஸ்லோகங்கள்” பாடுறாங்களே தவிர “ஸ்போக்கன் சமஸ்க்ருதமா” அந்த மொழிய பயன்படுத்துற முதல் ஆள அப்போதான் பாத்தன்!!
அவர் என்ன பேசுறாருன்னு புரியல ஆனா!! அவருக்கும் என்ன மாதிரி ரொம்ப நாள் கவலை ஏதோ இருக்கு அத நெனச்சி சாமிகிட்ட முறையிட்டு பேசுறார்னு மட்டும் புரிஞ்சிது!! நொடிக்கு நொடி அந்த பெரியவர் மேல எனக்கு ஆர்வம் கூடினது!! அவர் வழிபாட்ட முடிச்சிகிட்டு வெளிய வந்தார்,
என்ன ஒரு தடவ நேருக்கு நேரா பாத்திட்டு கௌம்ப நினக்கிறவர் மாதிரி தரையில இறங்குனார்!! அவரு என்ன பத்தி எதுவும் கேக்கல, பேசல, இங்க ஒரு மனுசன் நிக்கிறான்னு கூட நினைக்கல இப்டி போறாரே!! யாரிவர்!??
ஆச்சர்யம் தாங்காம, அவர “ஐயா!!” ன்னு கூப்பிட்டேன்!!
நடந்தவர் “சடார்!!” ன்னு நின்னு என்ன அதிர்ச்சியோட திரும்பி பார்த்தார், எனக்கு “திக்” ன்னு ஆய்றுச்சி
“ஐயா!! ன்னு தானே கூப்டோம் இதுக்கு ஏன் இவ்ளோ அதிர்ச்சி ஆவுறார்!?” ன்னு நினச்ச நான், அடுத்து என்ன பேசுறதுன்னு தெரியாம, “இந்த பூவெல்லாம் எங்க பூக்குது!? நீங்க என்ன ஊர்!?” அப்டின்னு கேட்டேன்!!
தரையில இறங்கி நடந்த அவர் திரும்பவும் அதிர்ச்சி மாறாம என் கிட்ட வந்தார், வந்தவர் “நான் உனக்கு தெரியிறனா!?” அப்டின்னு ஒரு கேள்வி கேட்டார் பாருங்க!! என்ன சொல்ல முடியும்!?
“ஆமா!! கண்ணுக்கு எதிர நின்னா தெரியத்தானே செய்விங்க இது என்ன கேள்வி!?” ன்னு கேட்டு நா ரொம்ப சத்தமா சிரிச்சன்,
“அடச்சை!! நா ஏன் இப்டி அசிங்கமா சிரிக்கிறன், நா ரொம்ப ஆற்றாமையும் கோவமும் அழுகையுமாதான இந்த கோயிலுக்கு வந்தன் இப்ப என் சோகம்லாம் எங்க போனுது!? எப்டி எனக்கு சிரிப்பு வருது!!”
அவர் என்ன பாத்து சிரிச்சார், “நா உன் கண்ணுக்கு தெரிஞ்சன்னா நீ கடவுளோட பிள்ளையா ஆயிட்டன்னு அர்த்தம்!!” அப்டின்னு சொன்னார்
“உங்களுக்கு ஏதாவது புரியுதா!? சத்தியமா எனக்கு எதும் புரியல!!” திரும்பவும் சிரிச்சன்,
“நீங்க பேசுறது எனக்கு புரியலயே!! உங்கள நா இது வரை இங்க பாத்ததே இல்ல, உங்க துணிமணியலாம் பாத்தா ஏதோ வடநாட்டு காரர் மாதிரி இருக்கிங்க!? தினமும் நீங்கதான் இந்த பூவெல்லாம் வைக்கிறிங்களா!?” அப்டின்னு கேட்டேன்
அவர் அமைதியா இருந்தார், “என்னய்யா நா சரமாரியா கேள்வி கேக்குறன் நீங்க பேசாம இருக்கிங்க!?” ன்னு கேட்டேன்
“சரமாரி!!” என்று ஒரு தடவ சொல்லி சிரிச்சார், அப்றம் அவரே சொன்னார், “வாழ்க்கையில நா பாக்காத சரங்களா ஆயுதங்களா போர்களமா!?, அந்த அகம்பாவத்துலதான் செய்யக்கூடாத தப்பு ஒன்னு செஞ்சி இந்த நிலைமையில இருக்கன்”, அவர் கண்கள் லேசா கலங்கினுது!!
“ஐயா, ஏன் கவல படுறிங்க, உடம்புக்கு ஏதாவது பிரச்சனையா!? வைத்தியம் பாக்க காசு இல்லையா!? நா உங்கள ஹாஸ்பிடல் கூப்டு போறேன், உங்க உடம்புல ஏதோ பிரச்சன இருக்குன்னு தெரியுது!! அது என்னனு சொல்லுறிங்களா நான் வேணும்னா உதவி பன்னுறன்!!?”
நானே இந்த கோயிலுக்கு அழுவ வந்தவன், இப்ப நா இவருக்கு வைத்தியம் பாப்பனாம்!! ஹாஹா!! சிரிப்புதான் வருது!! ஏன் இப்டி சிரிக்கிறன்னு தெரியல,
அவர் சொன்னார்
“என் காயம் மருத்துவத்தால் தீராதப்பா, இது பாவத்தால் வந்த காயம், இதை அந்த சர்வேஸ்வரன்தான் தீர்க்க முடியும் பல வருசமா இந்த காயத்தோட நா போராடுறன்!!”
“பல வருசமாவா!?, எத்தினி வருசமா ஐயா!?”
“இரண்டாயிரம் வருசத்துக்கு மேல போறாடுறன்!!” என்ற அவர் என் கண்களை தீர்க்கமாக பார்த்தார்!!
“ப்பா!! அவரது பார்வையின் தீட்சண்யம் யுக யுகங்களை கடந்து ஏதேதா என் மனசுல தோன வச்சது!!” மறுபடியும் சிரிச்சன், பிறகு சிரிப்பை அடக்கி கொண்டு
“நா என்ன பைத்தியம் பிடிச்சவன்னு நினச்சிட்டிங்களா!? இரண்டாயிரம் வருசமா மனுசங்களால வாழ முடியுமா!? உங்கள பாத்தா 50 வயசு காரர் மாதிரில்ல இருக்கு!?, சரி அப்டி என்னதான் பாவம் பன்னிங்க!?” சிரிப்பு திரும்பவும் வந்தது!!
“நீ பைத்தியம் இல்லப்பா, உன்ன நா தினமும் பாக்குறன் நீ ரொம்ப நல்லவன், உன்னை இந்த நிலைமையில் வச்சிருக்குற இந்த உலகத்து மனுசங்கதான் பைத்தியம்!! நீ கடவுளுக்கு விருப்பமானவன் இனிமே உன் வாழ்க்கையில கவல பட எதுவும் இல்ல!! நீ என்னை பார்ப்பன்னு நா எதிர் பாக்கல, உன்ன நினச்சி என் மனசு இரக்கப் படுகிறது!!” என்றார் அவர்
“ஐயா, நீங்க சொல்றது எதுவுமே புரியலயே!! என்ன தினமும் பாத்திங்களா, ஆனா நான் உங்கள இப்பதானே பாக்குறன்!!?”
“உனக்கு நா இப்ப சொல்லப்போற விசயம் பரம இரகசியம்ப்பா, இத நீ வெளியில யார்கிட்ட சொன்னாலும் உன்ன நம்ப மாட்டாங்க, உனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சுன்னு சொல்லுவாங்க!!”
“ஐயா, எனக்கு ஒன்னும் புரியலயே!!”
“நீ தினமும் இந்த கோயில்ல வந்து அழுவியே, அந்த பிரச்சனையலாம் இப்ப நினச்சி பாரு!! ஏதாவது உனக்கு நாபகம் இருக்கா!?”
நீளமா யோசிச்சு பாத்த எனக்கு நா என்ன பிரச்சனைகளால பாதிக்கப் பட்டேன், நா ஏன் இங்க வந்தன் ஏன் அடிக்கடி சிரிக்கிறன் எதுவுமே புரியாம இருந்தது!! திரும்ப திரும்ப யோசிச்சன் மறுபடியும் நா எது எதுக்கு கவல பட்டன்னே யோசிக்க முடியாம ரப்பர் வச்சி மூளைய அழிச்ச மாதிரி இருந்தது!!
“ஐயா!! எனக்கு எதுவுமே நாபகம் இல்லையே!! நா ஏன் இங்க வந்தன் எல்லாமே மறந்த மாதிரி இருக்கே, மனசுல இருந்த கவலையெல்லாம் மறந்து போய் ஆழ்ந்த நிம்மதி வந்த மாதிரி இருக்கே!!” அப்டின்னு அவர்கிட்ட நா சொன்னன்
அவர் என் கிட்ட வந்து என் கையபிடிச்சிகிட்டார், “மகனே!! பல வருசஷங்களுக்கு முன்னால நா வாங்கின சாபம் உன் பிரச்சனைகளில் இருந்த விடுதலை அடைய உனக்கு காரணமா அமைஞ்சிருச்சி!!, தூங்கிகிட்டு இருந்த சின்ன பசங்கள நா கொன்னுட்டேன், அதுக்காக ஸ்ரீ கிருஷ்ணர் என்ன சபிச்சிட்டார்!!”,
“ஏதுமறியா பாலகர்களை கொன்றதால் உனது நெற்றி மணி இற்று, அதில் சீழும் இரத்தமும் வடிய மூவாயிரம் வருஷத்துக்கு மேல மரணமே அடையாமல் இந்த உலகத்தில் அலைவாய், உனக்கு புத்தி ஸ்வாதீனம் உடைய மனிதர்களிடத்தில் வாசம் கிடையாது!! உன்னை பார்ப்பவர்கள் புத்தி சுவாதீனம் இல்லாதவர்களாக இருப்பார்கள்!! எவரும் பிரவேசிக்காத தனிமையான வானந்திரங்களிலேயே நீ திரிவாய்!! உனது நெற்றியில் உண்டான புண் என்றுமே ஆறாமல் எவராலும் ஏற்க முடியாத இழிந்தவனாக நீ இருப்பாய்” என்பதுதான் என்னுடைய சாபமப்பா!!” ன்னு சொன்னார் அவர்,
எனக்கு ஆச்சர்யமாக இருந்தது!!
என்ன அதிசயம் இதெல்லாம்!? இப்டிலாம் கூட நடக்குமா!? இவர் என்ன ஏதாவது மகாபாரத நாடகக் காரராக இருப்பாரா!? என்று நினைத்து ஒருதடவ சிரிச்சேன்
“தம்பி!! நீ இத நம்ப மாட்டன்னு தெரியும்!! நீ நம்பினாலும் இத நீ சொன்னா மத்தவங்க நம்ப மாட்டாங்க, இதோ பார் என் நெற்றியை!!” ன்னு அவர் முண்டாச அவுத்து காமிச்சார்
“ப்பா!! என்ன ஒரு அருவெறுக்க தக்க புண்!!” அதில் இரத்தமும் சீழும் வடிஞ்சிது!! பல காலமாக ஆறாமல் இருந்த புண்ணின் ஓட்டை வழியே மண்டையோடு திறந்து முளை வரை தெரியும்படியான அருவெருப்பு!! இந்த புண்ணோட சாதாரண மனிதர்கள் உயிர் வாழவே முடியாதே!? இவர் சொன்னது உண்மையாகத்தான் இருக்குமோ!?”
நான் இப்படி நினைக்க ஆரம்பிச்சப்ப அவர் மறுபடியும் முண்டாச கட்டிகிட்டு கடலநோக்கி போனார்!!
“ஐயா!! நாளைக்கும் வருவிங்களா!!?” என்று கேட்டன்
அதுக்கு சிரித்தபடி, “நான் வருவன் நீ வரமாட்டியே தம்பி!!” ன்னு சொன்னார் எனக்கு அப்போது அது புரியவில்லை திரும்ப அவரை கேட்டேன்,
“ஐயா!! உங்க பேர் என்ன ஐயா!?”
அதற்கு, *”அஸ்வத்தாமன்”* என்று சொன்னவர் அப்படியே காற்றோடு கரைந்து போனார்
நானும் அப்டியே கோயிலிலேயே உக்காந்திருந்தன், எப்படி வீட்டுக்கு வந்தன், என் கூட இருந்தவங்களாம் எங்க!? என்ன ஏதுன்னு எதுவுமே நாபகம் இல்ல, அந்த “அஸ்வத்தாமா” வந்திட்டு போனப்ப வீட்ல அம்மா அப்பா எல்லாரும் இருந்தாங்க, அதலாம் நடந்து ரொம்ப நாள் ஆயிருச்சி, இப்ப யார் யாரோ இருக்காங்க!! நானும் இருக்கன்!! ஏன் இருக்கன்!? என்னை ஏன் யாரும் கண்டுக்குறது இல்லை!? தெரியல!! எனக்கு தேவை தனிமைதானே!? அத ஆண்டவன் கொடுத்திட்டார் போல!!