கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 4, 2015
பார்வையிட்டோர்: 6,582 
 
 

எனக்கு எப்போதாவது என் நாளாந்தக் கிரியைகளிலிருந்து ஒரு மாற்றமோ அல்லது சிறுகளிப்போ வேண்டும்போலிருந்தால் தமிழில் தொடர்பாடல் வசதியுள்ள (சாட்) ஏதாவது வலைப்பக்கத்துக்குப்போய் எவரையாவது வம்புக்கிழுப்பேன். நிஜப்பெயரில் நுழைந்து மணிக்கணக்கில் காத்திருந்தாலும் எவருமே கண்டு கொள்ளமாட்டார்கள்.

சும்மா ஒரு ’ஹை’யோடு சரி.

ஒரு அனுஷாவோ ஆஷாவோ என்று பெயரை வைத்துக்கொண்டால் காத்துக் கிடந்ததுபோல் ஒரு பத்துப்பேராவது ஒரே சமயத்தில் குதித்து வந்து குசலம் விசாரித்துச் செல்லம்பொழிய ஆரம்பித்துவிடுவார்கள். வயதுபேதமின்றி அனைத்து ஆடவர்களுக்கும் ஸ்திரீகளுடன் வார்த்தைச் சல்லாபஞ்செய்வதில் அத்தனை ஆனந்தம்.

‘ ஹை………ஆஷா எப்பிடி இருக்கே?’

‘ ஃபிட் டு சாட்’

‘ என்ன வயசு?’

‘ இன்னும் டீன் வயசு தாங்க.’

‘ எனக்கு 23 பையன், மென்பொருள் படிக்கிறேன்.’

90 சதவீதம்பேர் சொல்வது மென்பொருள்தான்.

‘ சரி, எங்கடா இருக்கே நீ?”

‘ ஜுனவ்னு ஒரு சிட்டி.’

‘அதெங்கடா இருக்கு?’

‘அலாஸ்காவிலயுங்க.’

‘ஹை……..நீ கிறீன்கார்ட் கேஸ்னு சொல்லு.?’

‘ கிறீன்கார்ட்டெல்லாம் அமெரிக்காவில. இது அலாஸ்காவுங்க.’

‘ அதெந்தப்பக்கம்?’

‘ பிறேஸிலுக்கு தென்-மேற்கே, அபிஸீனியாவுக்கு வட-கிழக்கேயுங்க’

‘ நமக்கு ஜியோகிறாபி பூஜ்ஜியம், சரி. அங்கே எதுக்குப்போனே…..என்ன பண்ணிட்டிருக்கே செல்லம்?‘

‘ நான் தமிழிச்சி இல்லையா அதனால வந்தேன். ஒட்டகம் மேய்க்கிறது, அப்பாவின் தங்கச்சுரங்கத்தில வெள்ளெலி விரட்டிறது, திமிங்கிலத்தில கொழுப்பெடுக்கிறது, உணவகமொன்றில் அடுப்பங்கரை அசிஸ்டெண்ட் இப்படி சீஸனுக்கேத்தாப்போல ஏதோவொரு ஜோலி இருக்குமுங்க.’

‘சரி உன் மோபைல் நம்பரை கொடும்மா?”

‘ஒரு நிமிஷ பழக்கத்தில ஒருதமிழிச்சி போன் நம்பர் தந்திடுவளா மாமா?’

‘என்ன திடீரென்று மாமாங்கிறே?’

‘ஸும்மா ஒரு ஆசைக்குத்தான். ஏன் ஸொல்லக்கூடாதா ஸும்மா ஸும்மா ஸும்மா………….ம்ம்ம். ’

‘சரி, சரி நீ ரொம்ப அழகாயிருப்பியா ஆஷாக்குட்டி?’

‘நான் அசப்பில கௌதமிபோல இருப்பதா என் ஃப்ரெண்ட்ஸ் சொல்வாங்க’

‘ஆகா…… சுருள் சுருளா கேசத்தோட…..வாவ். நிஜமாலும் கௌதமிதான் என் கனவுக்கன்னி தெரியுமோ……… சரி இப்போ என்ன டிரெஸ் போட்டிருக்கே?’

‘ லெகின்ஸ் அன்ட் ஸ்றெச்டாப் மாமா ’

‘ உன்னைப்பார்க்காம இனித்தாங்காது, சரி உன் வெப் காமை ஆன் பண்ணு பார்க்கிறேன்’

‘வெப் காம் எல்லாம் கிடையாது மாமா’

‘ஏன்டா’

‘விலைக்குப்போட்டிட்டேன் மாமா’

இதுக்கிடையில் 4 தடவைகள் முத்தம் கொடுக்கிறமாதிரி ஐகோன்ஸ் அனுப்பிவிடுவான்.

‘ நீ பொய் சொல்றே…..எனக்கு ஜிவு ஜிவுன்னாகிட்டிருக்கு. நாம இனி செக்ஸ் பேசலாமா?’

‘இந்த வலைக்கு அதைவிடவும் அதிகம் பயன்பாடுகள் இருக்குதுன்னு நினைக்கிறேன். நாம வேறு விஷயங்கள் பேசலாமே……’

‘சரி வேறயென்னதான் பேசலாங்கிறே?’

‘ உலகமயமாக்கலின் பின்விளைவுகள், பூகோள உஷ்ணஉயர்வு, உலகப்பொருளாதாரத்தின் திடீர்ச் சரிவுக்கான மூலகாரணங்கள்………… இப்பிடி ஏதாவது………..?’

ஓரளவுக்கு மரியாதை தெரிந்தவர்கள் அத்துடன் வெளியேறிவிடுவார்கள்.

‘ சரி, அதைவிடு, உனக்கு வேறு என்னவென்னவெல்லாம் பிடிக்கும்?’

‘ மியூசிக், அதுவும் டி.கே மோதி, யூ.ஆர்.ஜீவரத்தினத்தினம் இவங்கள் பாட்டுக்கள் என்றால் எனக்கு உசிருங்க?’

‘ அது யாரு புதுசா?’

‘ அவங்கதானே இப்போ பொலிவூட்ல டாப் சிங்கர்ஸ் தெரியாதுங்களா?’

‘ இல்லை இன்னும் கேட்டுப்பார்க்கலை. அப்புறம்?’

‘ எனக்கு இன்னும் புத்தகங்கள் என்றால் ரொம்ப இஷ்டம்…..’

‘கடைசியா நீர் படித்த 3 புத்தகங்களையோ இல்லை பிடித்த 4 எழுத்தாளர்களையோ சொல்லும் ’ என்று கேட்டால் மீதியில் பாதிப்பேர் காணாமல் போயிடுவார்கள்.

அதுக்குப்பிறகும் யாரும் தாக்குப்பிடித்து நின்று ஃப்ளேபோய், ஹஸ்லர், ப்றாவோ என்று ஃபோனோகிறாபி சஞ்சிகைகளின் பெயர்களைச்சொல்லி செக்ஸ்தான் பேசுவேனென்று அடம் பிடித்தால் வாத்ஸாயனரே உறைந்துபோகும்படியா ஒரு சங்கதியைச்சொல்லி ‘அது தெரியுமா’ என்றுகேட்பேன். கொஞ்சப்பேர் வெட்டிக்கொண்டுவிடுவார்கள்.

நிற்கும் மீதிப்பேருக்கும் இங்கே தரமுடியாத என்பதில்களின் காட்டம் இவள் நிஜமாலும் பெண்தானோ என்றொரு சந்தேகத்தை உண்டாக்கிவிடும்.

‘ஹே…………ஆஷாகுட்டி நீ நிஜமாலும் பெண்தானே………உன் ஒறிஜினல் பெயர் என்ன டியர்?’

‘ சுகுணமனோகரசந்தரவதனசுந்தரரூபிணி’ என்றொரு பெயரைச் சொன்னாலோ லெஸ்பியன் அல்லது திருநங்கை என்றாலோ மீதிப்பேர்வழிகளும் சொல்லாமல் கொள்ளாமல் மாறிவிடுவார்கள்.

பாலியல் சல்லாபங்கள், ஃப்ளேர்டிங்குகளுக்கென்றேயுள்ள சானல்களைத்தவிர எனக்குத்தெரிந்த ஐரோப்பிய மொழியிலுள்ள பிற சாட் சானல்களில் எவரும் தமிழர்களளவுக்கு அந்நியர்களிடம் பாலியல்பேச விழைவதில்லை. பாலியல் சரசங்களுக்காகவே சாட் சனல்கள் இயங்குகின்றன என்ற எண்ணம் ஏனோ அனேகமான தமிழ் இளைஞர்களிடம்.

அன்றும் அப்படித்தான் பல சாட் கொழுந்துகளை ராவிவிட்டு ஏதோவொரு நினைப்புவந்து அதிகம் பாவிப்பில் இல்லாத எனது பழைய மின்னஞ்சல் முகவரியின் அஞ்சல்பெட்டியைத் திறந்து பார்த்தேன். பத்துநாட்களுக்கு முன் புதுச்சேரியிலிருந்து என் நண்பரும் தமிழறிஞருமான ஓய்வுபெற்ற பேராசிரியர் திருமுருகன் அனுப்பியிருந்த அஞ்சல் ஒன்று இருந்தது.

சீர்நிறை நண்ப;

வணக்கம்.

எனது நண்பர் பேராசிரியர். முனைவர். திரு. இதயச்சந்திரன் அவர்கள் நுண்ணுயிர்துறைசார்ந்த மாநாடு ஒன்றுக்காக அடுத்தமாதம் பெர்லினுக்கு வருகை தருகின்றார். மிகவும் நல்லமனிதர். அவருக்கு அங்கே ஆவன உதவிகள் செய்ய உங்களிடம் விண்ணப்பித்து எழுதுவது…………………

இப்படிப்போனது அக்கடிதம்.

சென்ற ஆண்டும் பெர்லினுக்கு இவ்வாறே ஏதோவொரு மாநாட்டுக்கு இவர் சிபார்சோடு இன்னும் ஒரு பேராளர் வந்திருந்தார். முதநாள்வரை ஒரு தொலைபேசி அழைப்புக்கூடச் செய்யாமல் இருந்துவிட்டு ஒருநாள் காலை பத்து மணிக்கு வந்து விமானநிலையத்தில் இறங்கி நின்றுகொண்டு யாருடையதோ செல்போனைவாங்கி ‘சார் நான் கண்ணபிரான் ஏர்போர்ட்டில் வந்து இறங்கியிருக்கேன் என்னை வந்து அழைத்துப்போறீங்களா’ என்றார்.

‘ நான் வண்டியிலே வந்து அழைக்கிறதுன்னா இன்னும் ஒருமணிநேரமாவது ஆகும். பேசாம ஒரு டாக்ஸி வைச்சுக்கொண்டு வந்திடுங்க ஒரு 30 இயூரோ தான் ஆகும்’ என்றபோது வி.கே.ராமசாமி மாதிரி அலறினார்.

‘என்ன 30 இயூறோவுங்களா…… நமக்கு ரொம்ப லிமிட்டாத்தான் ஃபோறின் எக்ஸேஞ் அனுமதிச்சிருக்காங்க, எத்தனை நாழியானாலும் பரவாயில்லை, நான் காத்திருக்கிறேன் நீங்க நிதானமாக வாங்க சார்’ என்றார் கெஞ்சலாக. நான் அப்பொழுது பணியில் இல்லாமல் இருந்தேனாதலால் காரை எடுத்துப்போய் அன்று அவரை அழைத்து வரமுடிந்தது.

மேலும் அவர் இங்கே இருந்த காலத்தில் அவர் கொண்டுவந்த டாலர்களுக்கு சேதாரமெதுவும் வந்துவிடாமல் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொண்டோம். இருந்தும் ஐயன் ஊர்திரும்புகையில் தன் நண்பர்களுக்கு சின்னசின்ன ஞாபகப்பரிசுப் பொருட்களும் பேரப்பிள்ளைக்கு ஒரு வீடியோ பிளே-ஸ்டேஷனும் வாங்கித்தரச்சொல்லி விண்ணப்பித்ததுதான் அதிகம். எங்குழந்தை நயனிகாவுக்கு ஒரு நிரெண்டொ கேம்போய் வாங்கித்தருவதாய் கொடுத்த என் வாக்குறுதியே அப்போது ஒருவருஷத்தையும் தாண்டி ஒயில்நடை போடுகிற சேதியை பாவம் எப்படி அவர் அறிவார்? கடன் அட்டைமூலம் வங்கியில் ஓவர் டிராஃப் செய்தே அவர் விண்ணப்பங்களை நிறைவுசெய்தேன். வெளிநாடுகளில் மாநாடுகளுக்கு பேராளர்களை அனுப்பும் பல்கலைக்கழகங்கள் அவர்களின் நியாயமான செலவுகளுக்கு வேண்டிய அந்நியச்செலாவணிக்கும் வகை செய்யலாம்.

‘சந்தோஷம். அவரைப் புறப்பட்டு வரச்சொல்லுங்கள். கவனித்துக்கொள்ள நாங்களாச்சு.’ என்று உடன் பதில் எழுதினேன். பேராசிரியர். இதயச்சந்திரனும் வந்துசேர்ந்தார். பார்வைக்கு வெகு இயல்பான எளிய மனிதர் போலிருந்தார். அவரது திருமணத்தின்போது சீர்வரிசைகள் வச்சுவந்ததாயிருக்கலாம் மூலைகளில் தேய்ந்து நிறம் போயிருந்த ஒருபெரிய பழைய சூட்கேஸும், பொண்ட் கேஸ் மாதிரி சிறியதாக ஒன்றுமாய் இரண்டு சூட்கேஸ்களுடன் வந்து இறங்கினார். அவருக்கென ஒரு அறையை ஒதுக்கித் தயாராக வைத்திருந்தோம். குளித்துச் சாப்பிட்டான பின் வதியும் அறையின் டீபோயில் ஒரு சங்குமார்க் சாரம் இருந்தவொரு நெகிழிப்பையை வைத்தார்.

வீட்டுக்கு வரும் சில விருந்தினர்கள் தமது பரிசானது விருந்தோம்புவாரின் கைகளில் தருவதற்கு தகுதியற்றதெனும் தாழ்மையுணர்வாலாவென்னவோ தாம் எடுத்துவரும் பிஸ்கட் பெட்டியையோ, ஆப்பிளையோ, பேரீச்சம்பழத்தையோ குழந்தைகளின் கையில்கூடத்தராமல் அப்படி எங்காவது மேசையிலோ, ஜன்னல்மாடத்திலோ வைத்துவிட்டு விருந்தாடிப் போவதுண்டு.

ஹைடெல்பேர்க் யூனிவேர்சிட்டியில் எனக்குப் பரிச்சயமான ஒரு கோவைத் தமிழரும் இதே நுண்ணுயிர் துறையில் பணிபுரிந்தார். அவரைத் தொலைபேசியில் அழைத்து இப்படி நுண்ணுயிர்துறையின் மாநாட்டுக்கு ஒருபேராசிரியர் புதுவையிலிருந்து வந்திருப்பதைச் சொன்னேன். அவர் சிறிதும் ஆர்வம்காட்டாதது மாத்திரமல்ல, வந்திருப்பவருக்கு என்னபெயர் என்றுதானும் கேட்கவில்லை. தான் இப்போது மிகவும் பிஸியாக இருப்பதாக ஜெர்மனில் மொழிந்துவிட்டு வைத்தார்.

பெர்லின் சுயாதீன பல்கலைக் கழகம் நடத்திய அம்மாநாடு அதன் ஓறானியன்பேர்க் நுண்ணுயிர்த்துறை வளாகத்திலேயே நடைபெற இருந்தது. ஓறானியன்பேர்க் எனும் சிறுநகரம் பெர்லினிலிருந்து ஏறத்தாழ 46 கி.மீட்டர்தூரத்தில் கிழக்கு ஜெர்மனிக்குள் இருக்கிறது. ஜெர்மன்மொழி தெரிந்தவர்களாயின் விரைவுத்தொடருந்தில் அங்கு சென்றுவிடலாம் பிரச்சனை இல்லை. அது சோவியத் யூனியனின் காபந்தில் அமைந்திருந்த பிரதேசம். ஜெர்மனை விட்டால் ரஷ்யனை இரண்டாவது மொழியாகப் படித்தவர்கள் எவராவது ரஷ்யன் பேசினால் சரி தவிர அங்கே இங்கிலிஷ், ஸ்பானிஷ், பிரெஞ்சன்ன ஐரோப்பியபாஷைகள் வேறெதுவும் எடுபடாது. மாநாடு இணைப்புமொழியான ஆங்கிலத்தில் நடைபெற்றாலும் ஜெர்மன் புரியாத பேராசிரியர் தனியாக மாநாட்டு மண்டபத்தைப் போய் அடைவதென்பது இலகுவான காரியமல்ல.

அமயவிடுப்பு (காஷுவல் லீவ்) என்கிற சமாச்சாரமே ஜெர்மன் அகராதிகளில் கிடையாது. தவிரவும் எனது இபோதைய பணியில் நான் சேர்ந்து மூன்று மாதங்களே ஆகின்றன. இப்போதுபோய் விடுப்பென்கிறால் கடுப்பாவார்கள்.

அவ்விடத்துக்குச் சிரமமில்லாமல் போவதற்கான ஒரே மார்க்கம் ஓட்டோ நவிகேஷன் வசதியுடன்கூடிய ஒரு டாக்ஸியை வரவழைப்பதுதான். ஆனால் அதுக்கு நூறு இயூரோ செலவாகுமென்ற கதையைச்சொன்னால் இம்முனைவரும் மூர்ச்சையாகலாம்.

எப்படித்தான் அவரை அங்கே அனுப்பிவைப்பதென்று நான் குழம்ப ஆனந்தி தானாகவே “அவருக்கு பத்துமணிக்குத்தானே கொன்ஃபெரென்ஸ் ஆரம்பம். நயனிகாவை ஸ்கூலுக்கு அனுப்பியிட்டு நான் சாரை ட்றெயின்ல கூட்டிக்கொண்டுபோகிறேனே ” என்றொரு இனிய தீர்வை முன்மொழிந்தாள்.

“ ஓகே…..சார்……ஆனந்தி உங்ககூட வருவா.”

“ என்ன சார் உங்க ஒய்ஃபை எங்கூட அனுப்புறீங்களா?”

“ இல்லை சார் என் வைஃப் உங்களை அழைத்துப்போய் உங்களுக்கு இடத்தைக் காட்டுவார்.”

“ என்ன சொல்றீங்க உங்க ஒய்ஃபா?”

“ ஜா…… மை வைஃப் “

“வேணாங்க அது நன்னாயிருக்காது ”

“ நான் பத்திரமா உங்கள இட்டுக்கிட்டுப்போவேன்…….. சாரே. ”

“ அதுக்கில்லீங்க யாராவது பார்த்தா…… தப்பா நினைப்பாங்க.”

“ என்ன சார் நீங்க என்ன ஹனிமூனுக்கா போறிங்க….. அவ உங்களுக்கு இடத்தைக் காட்டத்தானே வர்றா………… முன்னூறு ஏக்கர்கள்ள அமைஞ்ச பெரீய வளாகம் சார், தனியாய்ப்போய் சிரமப்படப்போறீங்க.”

நாஜிகள் ஜூதமக்களை வதைத்துக்கொன்ற கொலைமுகாம்களில் ஒன்றான சன்ட்ஹவுஸன் முகாம்கூட அங்கேதான் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

சரித்திரத்தகவல்கள் கேந்திரங்களில் எதிலும் முனைவருக்கு ஆர்வமில்லை.

மாநாட்டுக்குப் புறப்படுகையில் இரண்டு சூட்கேஸ்களையும் கையில் எடுத்தார் இதயச்சந்திரன். ‘ஏதாவது காரணம் இருக்கும். எடுத்துத்தான் போகட்டுமே’ என்று நானிருக்க ஆனந்தி கேட்டேவிட்டாள்:

“ எதுக்கு சார்…… இரண்டு சூட்கேஸையும் வீணாய் காவிட்டு?”

“ இரண்டிலும் நிறைய டாக்குமெண்ட்ஸ் இருக்குங்க……..அதுதான். ”

“ சரி. உங்க சௌகரியத்துக்காகச் சொன்னேன் ”

அவர்கள் புறப்பட்டுப்போனபின்னால் சங்கு மார்க் சாரத்தையும் காணவில்லை.

மாலை நான் அலுவலகம் முடிந்து வீட்டுக்குத்திரும்பவும் ஆனந்தி அபூர்வமாக ஆலங்காய்ப்பிட்டு அவித்துகொண்டிருந்தாள். “ ஏதேது பேராசிரியரை ஒரேயடியாய் அசத்திவிடுற ப்ளான்போல’’ என்றேன்.

“ நோ…………… ஹி ஸ்பொயில்ட் த சான்ஸ். ”

“ என்ன சொல்றே நீ? ”

“ இல்லை. முனைவர்தான் நம்மை ஒரேயடியாய் அசத்திட்டார்.

அநேகமாகப் பெம்மான் இரவு வீட்டுக்குத் திரும்பமாட்டார்.” என்றாள் முடிவாக.

“அப்பிடி என்னதான் பண்ணினே ஆளை?”

“ ட்றெயினிலயப்பா ஸ்டூடென்ஸாயிருக்கவேணும் பக்கத்து சீட்டில ஒரு இளஞ்ஜோடி ’முஞ்ஞா முஞ்ஞா முஞ்ஞா’ பண்ணிக்கொண்டே வர்றாங்கள். இந்தாள் என்னெண்டா நானும் இருக்கிறேனே என்கிற விவஸ்த்தைகூட இல்லாமல் அவங்களையே ‘ஆ’வெண்டு பார்த்துக்கொண்டு வருகுது.”

“ ஃப்றீ லைஃப் ஷோக்கள் இப்பிடி ஊர்ல கிடைக்குமே…….. அதுதான் பார்த்திருக்குக் கேஸ். ”

“ தான் வழிஞ்சுகொண்டுபார்க்கிறதும் போதாதென்று என்னட்டயுமல்லே விண்ணாணம் விளாவுறார் மாமா.”

“ என்னாங்கிறார்……..?”

“இந்தமாதிரித்தான் நீங்களும் அடிக்கடி ஜாலி பண்ணுவியளோண்றார்………. கண்ணிறைஞ்ச விஷமம் ”

“ மற்றவையின்ரை பெட்றூமுக்குள்ள எட்டிப்பார்க்கிற பிளாகார்ட் எங்கேயாவது போய்த்தொலையட்டுமென்று அடுத்த ஸ்டொப்பில இறங்கி வந்திட்டன்.”

ஆனந்திக்குச் சொல்கையில் ஆத்திரத்தில் மூச்சிரைத்து முகம் வியர்த்தது.

“ மைக்கிறோபயோலொஜிஸ்டுக்கு மருந்தை கூத்திக்கு கொடுக்கிறதோ இல்லை தாயுக்கு கொடுக்கிறதோங்கிறதில ஜஸ்ட் ஒரு கொன்பியூஷன்போல விட்டுத்தள்ளும்.”

***

இரண்டு வாரங்களின் பின் பேராசிரியர். திருமுருகன் மீண்டும் அஞ்சல் அனுப்பியிருந்தார்.

நீங்கள் இருவரும் தம்மை அமோகமாகக் கவனித்துக்கொண்டதாக முனைவர் இதயச்சந்திரன் ஒரேயடியாக என்னிடம் புகழ்ந்தார். உங்கள் மனப்பூர்வமான உபச்சாரத்துக்கு மிக்க நன்றி. என் எளிய பரிசுகள் உங்களுக்குப்பிடித்திருந்ததா. சேலையின் நிறம் சகோதரிக்கு நிச்சயம் பிடித்திருக்குமென்று நம்பிக்கை. இப்படிச்சென்றது அவர் மின் அஞ்சல்.

பல நுண்ணுயிர்களை ‘கல்ச்சர்’ செய்து வளர்த்து அவற்றின் பண்புகளையும், குணாதிசயங்களையும் ஆய்ந்து வகைமை செய்யவல்ல பேராசிரியருக்கு பரிச்சயம் அதிகமில்லாத ஒரு மானுஷஉயிரியுடன் பழகுகையில் இருக்கவேண்டிய குறைந்தபட்ஷ முன்னவதானங்கள், இங்கிதங்கள் தெரியவில்லை.

இன்னும் விரித்துரைப்பின் எங்கோவொரு இணைய உலாவல் நிலையத்தில் காத்துக்கிடந்து, கைக்காசைக்கொடுத்து உலாவி முகந்தெரியாத ஒருத்தியிடம் தன் பாலியல் தாபங்களை வக்கிரமாகப் பகிர அலையும் ஒரு விசில்- மறவனின் அறங்களுக்கும் –

ஆண்டுக்கணக்காகப் பல கலாசாலைகளின் கதிரைகளையும் தேய்த்து முனைந்து முனைவர் பட்டங்கள்வாங்கி இன்று ஐரோப்பாவரையில் வந்திருக்கும் இந்தப் பிரகிருதியின் கண்ணியத்துக்கும் பெரிய வித்தியாசத்தை தொன்மநெறிகளில் தோய்ந்த செம்மொழித்தமிழ் உலகம் வழங்கி இருக்கவில்லை.

– பெர்லின். 10.04.2009 ( உயிர்மை ஆகஸ்ட் 2009)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *