அனாமிகா

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 4, 2012
பார்வையிட்டோர்: 33,903 
 

மெரீனாவில் கடலருகே அதிகக் கூட்டம் இல்லை. அங்கே இங்கே ஓரிரு தப்பித்த படகுகள். வெயில் காயும் வலை தவிர மனித நடமாட்டம் இல்லை. ஈரம் இன்னும் காயாத மணல் பால் வெண்மை மறந்து பழுப்புக்கு அருகில் இருந்தது. அவசரமால உதித்துவிட்டு அபத்தமாகத் தொங்கும் பகல் நிலா தூரத்தில் காத்திருக்கும் கப்பல் வரிசை. விரைவாக மரம் திரும்பும் காகங்களைத் தொர்ந்து மெளனம்…இவையெல்லாம் ஏற்படுத்திய அமானுஷ்ய சூழ்நிலையில் சோகத்தின் கனம். தொட்டுப் பார்க்கும் அருகில் இருந்தது.

மெல்ல மணலில் நடந்தேன். விசுக்..விசுக் என்ற என் காலடியோசை எனக்குக் கேட்டது. அங்கே இங்கே ஒரு சிலர் தயங்கித்தான் மணல் பக்கம் துணிந்தனர். பலர் பத்திர தூரத்தில் பிளாட்ஃபாரத்தில் நடந்தார்கள். பலர் எதற்கு வம்பு என்று க்வின் மேரீஸ் பக்கமே நடந்து கடந்தார்கள்.

கிட்டே போய்த்தான் பார்ப்போமே. கடல் என்ன ஆசைகளைக் கொல்லக்கூடிய அத்தனைக் கொடியவளா. விசாரிக்கலாம் என்று கரை வரை சென்றேன். பேண்ட்டை மடக்கிக்கொண்டு சற்று நேரம் கடல் அலையைக் காலைத் தோட அனுமதித்தேன். நண்டுகள் குறுகுறுத்தன மழை பெய்யலாம் என்று என்று காலரில் குளிர்காற்று நினைவுறுத்தியது.

“இத்தனை அமைதியாக இருக்கிறாயே…நீயா அத்தனை அழிச்சாட்டியம் பண்ணினாய்?” – யாருமில்லாததால் உரக்கவே கேட்டேன்.

நவகளாமேகனின் வெண்பா ஞாபகம் வந்தது.

உடுக்க உடையும் உணவொடு மீன்கள்
பிடிக்கப் படகும் பணமும் கொடுத்தாய்
அலைத்தாயே அத்தனையும் தந்தோர் நொடியில்
கலைத்தாயே காரணத்தைச் சொல் ?

அந்தக் கடைசிச் சொல் வானமெங்கும் எதிரொலித்தது. ‘அங்கிள்’ என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டேன். அந்த மாலை நேரத்தில் தெளிவாகத் தெரியவில்லை. தனியாக நிற்கிறேன். சற்று பயமாக இருந்தது. மறுபடி ‘அங்க்கிள்ள்’ என்று அழுத்தமான குரல் கேட்டது. அந்தப் பெண்ணை அப்போதுதான் பார்தேன். பதினான்கு வயதிருக்கும் பட்டுப் பாவாடை சட்டையுடன் கல்யாண வரவேற்புக்குச் செல்பவள் போல நிறைய நகை அணிந்திருந்தாள். “யாரும்மா நீ? இத்தனை நகை போட்டுகிட்டுத் தனியாக வந்தியா?”

“உங்களை பார்த்தேன் அங்கிள்! சீக்கிரம் போய்க் கையெழுத்து வாங்கிட்டு வந்துடறேன்னு சொல்லிட்டு ஓடு வந்த்தேன்!”

என் ‘விஞ்ஞானச் சிறு கதைகள்‘ புத்தகத்தைக் காட்டினாள்

“இந்த வயசுக்கு நீ இந்தக் கதையெல்லாம் படிச்சியா?”

“எல்லாக் கதையும் படிக்கலை. எப்பவும் கையில வெச்சுக்கிட்டு இங்க ஒண்ணு அங்க ஒண்ணுனு படிச்சுட்டு வரேன்!”

“படிச்சவரை புரிஞ்சுதா?”“புரியுதே… ஏன்?”

“எந்தக் கதை உனக்கு அதிகம் பிடிச்சுது?”

தேஜஸ்வினி கடைசிக் கதையை முதல்ல படிச்சேன்!”

“அந்தக் கதை உனக்கு புரிஞ்சதுங்கறியா?”

“ஏன் அந்தாளு பறந்து போயிர்றான்?”

“அதான். ஏன்?”

“அவன் தேவலோகத்து ஆளா? தப்பா இருந்தா நீங்கதான் சொல்லுங்களேன்!”

நான் சொல்லவில்லை. “நீ நினைச்சுட்டிருக்கறதுதான் சரி!” என்றேன். முடிவை விளக்கவேண்டி இருந்தால் அது நல்ல கதை இல்லை.

“எனக்கு ஒரு கையெழுத்துப் போட்டு கொடுங்க அங்கிள்!” என்றாள் கெஞ்சலாக.”நீங்க சிறுகதை ஏழுதி ரொம்ப நாளாச்சே! ‘கற்றதும் பெற்றதும்‘ அதிகம் யோசிக்க வைக்குது என்றாள்.

நிறைய கதை எழுதி விட்டேன் எதை ஆரம்பித்தாலும் முன்பே எழுதிவிட்டது போல் தோன்றுகிறது என்றேன். ( இனி சுத்தத் தமிழ்!)

“எனக்காக ஒரே ஒரு கதை!” என்றாள்

“சரி பெயர் சொல்லு!”

“சிறுகதைக்கா? அதற்கெல்லாம் பெயர் வைக்கத் தகுதியிருந்தால், நானே எழுதியிருப்பேனே!”

“அப்படியில்லை. ஒவ்வொருவரிடமும் ஒரு நல்ல சிறுகதை உள்ளது!”

“என்னிடம் இருப்பதெல்லாம் ஒரே ஒரு அணில்தான்!”

“சரி அதன் பெயர் சொல்லு!”

பெயர் இன்னும் வைக்கவில்லை. தோட்டத்தில் விளையாடுவேன். தயங்கி தயங்கி என் அருகே வரலாமா என்று அது யோசித்துக்கொண்டு இருக்கிறது!”

“சரி உன் பெயர் என்ன?”

“அனாமிகா நான்கூட ஏஞ்சல்!”

“அனாமிகா என்றால் அர்த்தம் தெரியுமா? பெயரில்லாதவள்!”

“எனக்குத்தான் பெயர் இருக்கிறதே!”

ஏஞ்சல் அனாமிகாவுக்கு. அன்புடன் சுஜாதா..” என்று எழுதினேன்.

“எதாவது அறிவுரை எழுதுங்களேன்!” என்றாள்

“அறிவுரைகளை நம்பாதே!” என்றேன்

அவள் என்னை பார்த்துச் சிரித்து. “வித்தியாசமாக எதாவது எழுதுங்களேன். ஒரு பொன்மொழி அல்லது புன்னகைக்கும்படி ஏதாவ்து?” என்றாள்

சரி. கடவுளை புன்னகைக்க வைப்பது எப்படி தெரியுமா?

எப்படி?

நம்முடைய எதிர்காலத் திட்டத்தை அவரிடம் சொல்வது!” என்றேன்.

அவள் முகத்தில் ஏமாற்றம் இருந்தது.

“சரி என்ன எழுத? சொல்!”

“நன்றாகப் படி… படித்து இங்கிலாந்து போ என்று எழுதுங்களேன்!”

அப்ப்டியே எழுதிக் கொடுத்தேன்.

“உன் மாதிரி பெண்கள் தமிழ் படிப்பதே ஆச்சரியம். சென்னையில்!”

“நான் சென்னை இல்லை மட்டக் களப்பு!”

அனாமிகா வா நேரமாச்சு!

எங்கிருந்து வந்தது அந்த குரல்?

“போய் வருகிறேன். அவர்கள் காத்திருக்கிறார்கள்!” என்றாள்

“ஏய்…ஏய் அந்தப் பக்கம் போகாதே!”

நான் தடுப்பதற்குள் அவள் செலுத்தப் பட்டவள் போல அலைகடலுக்குள் நுழைந்து நடந்து செல்ல ஓர் அலை எழுந்து அவளை அணைத்து பத்திரமாக வாரி அணைத்துக்கொள்ள…
மறைந்து போனாள்!

ஏஞ்சல் அனாமிகா!
விஞ்ஞானக் கதைகள் அவளுக்குப் பிடிக்கும். சுஜாதா எழுதிய ‘விஞ்ஞானச் சிறுகதைகள்‘ புத்தகம் அவள் இறந்த பிறகும் கெட்டியாக அவள் கையில் இருந்தது” – 6-2-05 ஜூனியர் விகடன் இதழில் ஏஞ்சல் அனாமிகா பற்றிய இந்த குறிப்பின் சிலிர்ப்பில், நெகிழ்வில் சுனாமி பறித்துக்கொண்ட அனாமிகாவுக்கு அர்ப்பணமாக எழுதிய சிறுகதை அது! – சுஜாதா

நன்றி: ஆனந்த விகடன் (27-2-05 இதழ்)
Print Friendly, PDF & Email

விடியல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2023

சோதனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2023

யார் முதல்வன்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

1 thought on “அனாமிகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)