சலிப்பு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2023
பார்வையிட்டோர்: 2,263 
 

“உன் பேரு குப்பம்மாள். என் பேரை மட்டும் எதுக்கு நவீனான்னு வச்சே…..?”

 “நாங்க வாழ்ந்தது பட்டிக்காட்ல…! நீ வாழப்போறது பட்டணத்துல…! அதுக்கேத்தாப்பல பேர் வைக்கலேன்னா உன்ன யாருமே மதிக்க மாட்டாங்க… அதான்…!” என்றாள் தாய்.

“நான் ஆரோக்யமா இருக்கனம், புத்திசாலியா இருக்கனம், வசதியா வாழனம்னு பேரு வைக்கல அப்படித்தானே…? துணி எடுத்தாலும், செருப்பு வாங்கினாலும், செல் போன் வாங்கினாலும், படிச்சாலும், ஸ்கூட்டி வாங்கினாலும், நெத்தில பொட்டு வச்சாலும், வேலைக்கு போனாலும் அடுத்தவங்களுக்காகன்னா எனக்காக எப்ப வாழறது….?! நான் என் விருப்பப்படி வாழனமா…?சமூக விருப்பத்துக்கு வாழனமா…? இந்த படிப்பு யாரு கண்டு பிடிச்சா…? நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து அப்பா சம்பாதிக்கிற பணத்தை என் ஸ்கூலுக்கும், காலேஜூக்கும் செலவு பண்ணிட்டிங்க..! நீ நல்ல சேலை கட்டினியா…?பக்கத்துல உள்ள ஊட்டிய சுத்தி பார்த்திருப்பியா….? விரும்பினதை சமைச்சு சாப்பிட்டியா….? நான் சாப்பிட்ட மிச்சத்தையும், முதல் நாள் மீதத்தையும் தானே சாப்பிட்டே? இப்ப நான் படிப்பு முடிச்சுட்டேன். வேலைக்கு போகத்தானே படிக்கவச்சே? மாசம் பத்தாயிரம் வாங்கறேன்….! என் படிப்புக்கு மட்டும் இருபது லட்சம் அப்பா செலவழிச்சிருக்கார். ஒத்த ரூபா சேமிக்கலே. இப்ப கவர்மெண்ட் ஆஸ்பத்திரில இலவச மருந்துல உயிர் வாழறார்” எனக்கூறி வேதனைப்பட்டாள் நவீனா.

“ரிட்டேர்டுமெண்டுக்கப்புறம் அப்பா நான் படிச்ச தனியார் ஸ்கூலுக்கு கேட்டு திறந்து விட மாசம் மூவாயிரம் சம்பளத்துல ராத்திரில தூக்கம் தொலைச்சிட்டிருக்கார். இருபது வருசம் வேலைக்கு நான் போனால் தான் படிப்புக்கு நீங்க போட்டத நான் எடுக்க முடியும்…! இப்பவும் என் இஷ்டப்படி வாழ முடியல. இனி என் ஆயுள் முழுக்க முதலாளின்னு என்னை ஒருத்தன் அவன் இஷ்டப்படி கஷ்டப்பட வைப்பான். இந்த லட்சணத்துல மண்டபம் புடிச்சு, நகை போட்டு ஊரை, உறவை அழைச்சு கல்யாணம் பண்ணி, சீர்வரிசை கொடுத்து அவங்க சொல்லுக்கு கட்டுப்பட்டு, குழந்தையப்பெத்து, அத வளர்த்து, படிக்க வச்சு, அது ஆசைப்பட்டதை வாங்கி கொடுத்து, முடியாது….!” என சலித்துக்கொண்டாள் நவீனா..!

“சொந்த வீடு வாங்க கேட்டேன். கீழேயும், மேலேயும் சொந்தமில்லாத அபார்ட்மெண்ட் ஐம்பது லட்சம். கடன் கிடைக்குமாம். நாற்பது வருசம் கடன் போட்டுக்கலாமாம். இப்ப இருபத்தாறு. அறுபத்தாறுக்கு மேல இருப்பனான்னு தெரியல. என்னோட ஆசை, லட்சியம் எல்லாம் துறந்து குருவிக்கூடு போன்ற வீட்டை சொந்தப்படுத்தவா பிறப்பெடுத்தேன்…? பத்து வயசுல பாட புத்தகம் சுமக்காம சித்தாள் வேலைக்கு போயிருந்தாக்கூட இப்ப கடனில்லாம கீழயும், மேலயும் என்னோடதா சொந்த வீடு வச்சிருப்பேன்…! அப்பா பேர்ல சம்பள பணம் அப்படியே டெபாசிட்டா இப்ப வட்டியக்கொடுக்கும். அப்பாவும் வயசான காலத்துல வேலைக்கு போகாம நிம்மதியா வீட்ல இருந்திருப்பாரு”

என தன் மகள் நவீனா பேசிய பேச்சில் உள்ள உண்மை புரியத்துவங்கியபோது கண்ணீர் ஆறாக ஓடியது குப்பம்மாவுக்கு.

இந்த சமுதாய அமைப்பு முறை சிலரை வாழவைப்பதும், பலரை வீழ வைப்பதுமாக இருப்பதை எண்ணி வருந்தினாள். பலரது உழைப்பை சுரண்டி சிலர் வாழும் முறை ஒழிக்கப்பட்டு அனைவரும் சமநிலை பெறும் நிலை வரவேண்டுமென இறைவனை வேண்டினாள். வேறு என்ன செய்வாள் பேதை?!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *