கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 5, 2023
பார்வையிட்டோர்: 3,471 
 
 

கதைமூலம்: மாக்ஸிம் கார்க்கி, ருஷ்யா

இந்தச் சின்னக் கதையை எப்படிச் சொல்லுவது என்று புரியவில்லை. அவ்வளவு எளிதானது.

நான் வாலிபப்பருவத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் தெருக் குழந்தைகளை எல்லாம் கூட்டிக்கொண்டு ஊருக்கு வெளியே உள்ள வயல் வெளிகளுக்கும் காடுகளுக்கும் அழைத்துச் செல்வது வழக்கம். குருவிக்குஞ்சு மாதிரி சுற்றித்திரியும் இந்தச்சின்னவர்களோடே சிநேகமாகப் பழகுவதில் எனக்கு ஒரு அபாரப் பிரேமை.

புழுக்கமும் புழுதியும் குமையும் தெருக்களை விட்டு விட்டு வெளியே வந்து விடுவதில் குழந்தைகளுக்கும் ஆசை தான். தாய்மார் ரொட்டித் துண்டுகள் கட்டிக் கொடுத்தார்கள். நானும் கொஞ்சம் லாஸஞ்சர் வாங்கிக் கொண்டு, ஒரு பாட்டில் நிறைய க்வாஸ் (ஒரு வகைப் பானம்) நிறைத்துக் கொண்டு புறப்படுவேன். கவலை தெரியாத இந்தச்சித்தாட்டுக்குட்டிகளை நகர் வழியாக வயற்புறம் கூட்டிச்சென்று, பசிய நிறம் படர்ந்து கண்ணுக்கு ரம்மியமாக இருக்கும் வசந்தம் அணிந்த கானகத் துக்குக் கூட்டிக் கொண்டு போவேன்.

அதிகாலையிலேயே ஊரைவிட்டுப் புறப்பட்டு விடுவது வழக்கம். மாதாகோயில் மணி உதயகால ஜபத்துக்குக் கூப்பிடும் நேரத்திலேயே புறப்பட்டு விடுவோம். இளங் குதிகால்கள் புழுதியைக் கிளப்பிக் கொண்டு பரிவாரமாக ஓடிவரும. மத்தியானத்தில் சூரிய வெப்பம் உச்சத்தில் இருக்கும் போது, விளையாடிக் களைத்த என் நேசர்கள் கானகத்தின் ஓரத்தில் வந்து கூடுவார்கள். சாப்பிட்ட பிறகு சிறுசுகள் மர நிழலில் படுத்துக் கிடந்து உறங்கும். சற்றுப்பெரிய குழந்தைகள் என்னைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு கதை சொல்லச் சொல்லி வற்புறுத்தும். இவர்களுடைய இடையறாத சளசளப்புடன் என் கதாகாலட்சேபமும் நடைபெறும். வாலிபத்துடுக்கும் தலைக் கொழுப்பும் அனுபவமற்ற சிற்றறிவுக்கு நிலைத்திருக்கும் வேடிக்கையான நிச்சயத்தன்மையும் எனக்கு இருந்தாலும், சின்ன விவேகிகளிடையே சிக்கிக் கொண்ட இருபது வயதுக் குழந்தையாக இருக்க வேண்டிய நிலைமை எனக்கு அடிக்கடி ஏற்பட்டதுண்டு.

தலைக்குமேல் என்றும் இருக்கும் வானம் எங்களைக் கவித்தது. கண்ணெதிரே கானகத்தின் வண்ணக்கலவைகள் வாரி எடுத்துக்காட்டி அரிதுயில் போல் ஆழ்ந்த மௌனத்தில் கூடிக்கிடந்தது. ஊசல் காற்று காதில் குசுகுசுப் பேசியது. கானகத்தின் மகரந்த நிழல்கள் சற்றே நடுங்கி மற்றும் மௌனத்தில் ஆழ்ந்தன. இந்தப் புனிதகரமான மௌனம் ஜீவனிலும் துளும்பிப் பரிபூர்ணப்படுத்தியது.

கரைகாணா நீலவானத்தில் வெள்ளை மேகங்கள் மெது வாக நீந்தின. சூரிய வெது வெதுப்பில் ஒண்டி வளரும் மண்ணிலிருந்து பார்க்கும் நமக்கு வானம், உயிர் தரும் வெப்பம் அற்றதாகத் தெரிகிறது.அப்படி இருந்தும் அந்த மேகங்கள் அங்கு கிடந்து உருகுவதும் புதிர்போலத்தான் நமக்குத் தெரிகிறது.

என்னைச் சூழ இந்தக் குழந்தைகள் வாழ்வின் இன்ப துன்பங்களைக் கற்றுத் தெரிந்து கொள்வதற்காக இவ் வுலகிற்குத் தருவிக்கப்பட்டிருக்கின்றனர்.

அந்தக்காலத்தை என்னுடைய நல்ல தசை என்றே சொல்ல வேண்டும். அந்தச் சாப்பாடு எல்லாம் வாஸ் தவமான விருந்துகள். என் ஜீவன் அந்தக் காலத்திலேயே வாழ்வின் இருள் நதியிலே முழுகுண்டு மாசுபட்டிருந்தாலும் குழந்தைகளின் சிந்தனைகள் உணர்ச்சிகள் என்ற தெளிவான விவேகம் என்னைத் தளிர்க்க வைத்தது.

ஒரு நாள், நான் என் குழந்தைப் பரிவாரத்துடன், ஊருக்கு அப்புற மிருந்த வயல் வெளியை மிதிக்கும் போது, நாங்கள் ஒரு அன்னியனைச் சந்தித்தோம். ஒரு சின்ன யூதப் பையன். காலில் ஜோடுகிடையாது. உடம்பில் கிழிசல் சட்டை, கருப்புப்புருவம். வெண்மையான சுருட்ட்டத் தலை, ஆட்டுக்குட்டிமாதிரி. அவனை ஏதோ தொந்திரவு படுத்தியிருக்க வேண்டும். அழுது கொண்டிருந்தான் போல் தெரிகிறது. ஒளியற்ற கருங் கண்களைப் பாதுகாத்த இமை வீங்கிச் சிவந்திருந்தது. முகத்தில் பசிகாட்டும் நீலப்பூப்பு படர்ந்தது. குழந்தைகள் மத் தியில் ஓடிவந்து தெருவின் மையத்தில் நின்று கொண் குளிர்ந்த காலைப் புழுதியில் காலை ஊன்றி நின்றான். அழகமைந்த அவன் உதடுகள் பயக்குறிகாட்டி மலர்ந்தன. அடுத்த வினாடி ஒரே குதியில் நடைபாதைக்குத் தாவி விட்டான்.

‘அவனைப் பிடியுங்கள். சின்ன யூதப் பயல். அந்தச் சின்ன யூதப்பயலைப் பிடியுங்கோ’ என்று குழந்தைகள் உற்சாகமாகக் கத்தின.

அவன் ஓடிவிடுவான் என நினைத்தேன். அகன்ற கண் ஏந்திய ஒல்லிய முகம் பயக்குறி காட்டியது. உதடு கள் நடுங்கிப்படபடத்தன. கேலி செய்யும் குழந்தைக் கும் பலின் நடுவே நின்றான். உயரத்தைப் பெரிதுபடுத்திக் கொள்ள முயலுவது போல நிமிர்ந்து கொண்டான். தோள்களை வேலியோடு அமுக்கிக்கொண்டு கைகளைப் பின்னுக்கு இறுகக்கட்டிப் பிடித்துக்கொண்டு நின்றான்.

அவன் திடீரென்று அமைதியாகத் தெளிவாக, ‘ஒரு வித்தை காட்டுகிறேன் பார்க்கிறீர்களா?’ என்று கேட்டான்.

தன்னைத் தற்காத்துக் கொள்ள அவன் செய்யும் சூழ்ச்சியை நான் முதலில் எண்ணினேன். குழந்தைகளுக்கு அந்த வித்தையில் உடனே ஆசை தட்ட விலகி நின்று வழி கொடுத்தார்கள். சற்று வயசும் முரட்டுத் தனம் வலுத்தவைகளே அவனைச் சந்தேகத்துடன் கவனித்து நின்றன. எங்கள் தெருக்குழந்தைகளுக்கும் மற்ற எல்லாத் தெருக்குழந்தைகளுக்கும் சண்டை. தாங்கள் தான் அந்தஸ்து மிகுந்தவர்கள் என்பதில் ஸ்திரமான நம்பிக்கை. இதரர்களின் உரிமைகளைப் பற்றி அவை சட்டை செய்வதில் சிரத்தை கொள்ளுவதில்லை. அவை சட்டை செய்யாதிருந்தன என்பதே உண்மை.

சிறுசுகள் அவனை நம்பின.

‘உம்உன் வித்தையைக் காட்டு, பார்ப்போம்’ என்றன.

அந்த அழகான, ஒல்லியான சிறுவன் வேலி ஓரத்தி லிருந்து வந்தான். மலர்ந்த உடலை வளைத்துத் தரை மீது கை ஊன்றி வில்போல் வளைந்து நின்றான். காலை உதறி ஒரே துள்ளலில் கைகளைத் தட்டிக் கொண்டு எழுந்து நின்றான.

‘ஹப்’

பிறகு சகடக்கால் மாதிரிக் கைகளையும் கால்களையும் விரித்துப் பக்கவாட்டில் சரிந்து சுழன்று சக்கரடித்தான். அக்னி தீய்த்துக்கொண்டு போவது போலிருந்தது அவனுடைய கதி. சட்டை ஓட்டை வழியாகத் தோள்ப்பட் டையும் சாம்பல் பூத்தசர்மமும் விலாவெலும்பும் தெரிந்தன. கழுத்து எலும்புகள் கண்டமாலை மாதிரி கிடந்தன. அதை அவன் வலுவாக அமுக்கினால் எங்கே ஒடிந்து விடுமோ என்றிருந்தன. முயற்சியால் வேர்வை கொட்டி முதுகுப்புறத்தை நனைத்தது. ஒவ்வொருதரம் விதவிதமான வித்தை காட்டும் போதும் ஜீவனற்ற ஒரு சிரிப்போடு குழந்தைகளை ஏறிட்டுப் பார்த்தான். ஒளி மங்கிய கண்கள் விரியத்திறந்திருப்பது பார்ப்பதற்கு அகோரமாக இருந்தது. பார்வையில் சிசுத்தன்மையற்ற ஒரு வெறி இருந்தது. குழந்தைகள் கூச்சல் போட்டு அவனை உத்சாகப்படுத்தின. அவனைப் பின்பற்றி அவை களும் புழுதியில் குட்டிக்கரணமடிக்க ஆரம்பித்துவிட்டன. லாவகமற்ற முயற்சிகளால், சரிவதும் விழுவதும், சமயத்தில் கரணம் போட்டு விழுவதும் பொறாமைப்பட்டுப் பார்த்துக்கொண்டிருப்பதுமாகக் குழந்தைகள் குமைந்தன.

இந்தக் கோலாகலம் திடீரென்று முடிவுற்றது.அவன் துள்ளியெழுந்து நின்று அனுபவசாலியான வித்தைக் காரன் மாதிரி புன்சிரிப்போடு கைகளை நீட்டி ‘ஏதாவது கொடுங்கள்’ என்றான்.

குழந்தைகள் மௌனமாக நின்றன. ஒரு குழந்தை ‘துட்டா’ என்று கேட்டது.

‘ஆமாம்’ என்றான் பையன்.

‘இது நல்ல வேடிக்கையா இருக்கே?’

‘துட்டுன்னா நாங்களே நல்லா அது மாதிரி செஞ்சிருப்பமே…’

இந்த வேண்டுகோள் வித்தைக்காரனைத் துச்சமாக மதிக்கும்படி செய்வித்தது. குழந்தைகள் சிரித்துக் கொண்டு, கொஞ்சம் வைதுகொண்டு வயற்புறமாக ஓடின. அவர்களிடை பணம் கிடையாது தான். என் வசம் ஏழு கொபெக்குகள் தான் வைத்திருந்தேன்.(ருஷ்யச் சில்லறை நாணயம்) அழுக்கேறிய அவனுடைய உள்ளங் கையில் இரண்டைக் கொடுத்தேன். அவன் அவற்றை விரலால் தொட்டுப் பார்த்துவிட்டு வந்தனம் கூறினான்.

அவன் போகும் போது, மமுதுகை மூடியிருந்த சட்டையில் கறை படிந்திருப்பதைப் பார்த்தேன். அது தோள்பட்டையுடன் ஒட்டிக் கொண்டு விட்டது.

‘நில்லுடா, அதென்ன?’ என்றேன்.

அவன் நின்றான். திரும்பினான். என்னை ஊன்றிக் கவனித்தான். பழைய ‘நல்லதனச்’ சிரிப்போடு சாந்த மாகப் பதில் சொன்னான். ‘முதுகில் இருப்பதா? ஈஸ்டர் பண்டிகையில் சர்க்கஸ் ஆடுகிற போது டிரிபீஸிருந்து நாங்கள் விழுந்து விட்டோம். அப்பா இன்னும் படுத்த படுகையாகத்தான் இருக்கிறார். எனக்குக் குணமாகி விட்டது’.

நான் சட்டையைத் தூக்கிப் பார்த்தேன். இடது தோள்பட்டையிலிருந்து துடை வரை முதுகுத்தோல் அப்படியே உறிந்து போய் ஒரே பெரிய வடுவாக மாறியிருந்தது. புண்வாய் ஆறி உலர்ந்து காய்ந்து பொறுக்கேறியிருந்தது. அவன் வித்தை காட்டிய போது பொறுக்கில் பல இடங்களில் கீரல் விழுந்து அதன் வழியாக ரத்தம் பீறிட்டுக்கொப்புளித்தது.

‘இப்போது வலிக்கவேயில்லை … வலிக்கவேயில்லை அரிக்கத்தான் செயகிறது…’

வீரனுடைய நெஞ்சழுத்தப் பார்வையுடன் அவன் பெரிய மனுஷன் குரலோடு ‘எனக்காக நான் இப்படி வேலை செய்தேன் என்றா நினைக்கிறாய்? சத்தியமா அப்படியே இல்லை. எங்கப்பா-எங்கிட்டத் தம்பிடி கிடையாது. எங்கப்பாவுக்கு ரொம்பக் காயம். அதனாலே எப்படியும் வேலை செய்து தானே ஆகணும். மேலும் நாங்கள் யூதர்கள். எல்லோரும் எங்களைப்பார்த்தால் கேலி செய்கிறார்கள்…போயிட்டு வாரேன்’

அவன் மலர்ந்த முகத்துடன் குதூகலத்துடனேயே பேசினான். பிறகு விசுக்கென்று வாய்திறந்த வீடுகளைத் தாண்டிச் சென்று மறைந்து விட்டான்.

இதெல்லாம் அற்ப விவகாரந்தானே. ஆனால் என் ஆயுளில் கஷ்டம் வந்த போது இந்தச் சின்னப் பையனுடைய தைரியத்தை அடிக்கடி நினைத்தேன். நன்றியுடன் நினைத்தேன்.

– தெய்வம் கொடுத்த வரம், தமிழில்: புதுமைப்பித்தன், முதற் பதிப்பு: செப்டம்பர் 1951, ஸ்டார் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email
புதுமைப்பித்தன் என்ற புனைபெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - சூன் 30, 1948), மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. இவரது படைப்புகள் மிக அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, 2002இல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *