கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 8, 2023
பார்வையிட்டோர்: 2,962 
 

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கண் விழித்ததும் மீண்டும் அவன் நினைப்பு. என்னதான் ஒதுக்கி வைக்க நினைத்தபோதும் மீண்டும் மீண்டும் …. கழுவினாலும் கழராத எண்ணெய்ப் பிசு பிசுப்புப்போல அந்த முகம். கள்ளங் கபடம் இல்லாத சிரிப்பு. ஆழமானது போலத் தோன்றும் உள்ளடங்கல். சங்கோஷம்.

ஐந்து தினங்களுக்கு முன் அவன் கொடுத்த அதிர்ச்சியில் இவன் ஸ்தம்பித்துப் போனான். அதிலிருந்து உடனடியாக விடு பட முடியாமல், கொஞ்சங் கொஞ்சமாகத் தெளிந்து கொண்டு வந்தபோது, அந்த நாளும் அண்மித்து மீண்டும் மீண்டும்…

வாழ்க்கைப் பயணத்தில் எத்தணை சந்திப்புகள்! எத்தனை முகங்கள்! எத்தனை மனங்கள்! எத்தனை குணங்கள்! சிலரை – மிகச் சிலரைச் சந்திக்க நேர்ந்த பிறகு தான் ஒரு உணர்வு. இவர்களைச் சந்திக்காமலே போயிருந்தால் வாழ்வில் ஈடுசெய்ய இயலாத இழப்பு என்று.

அவனைச் சந்திக்க நேர்ந்தது, கலந்து உறவாட வாய்த்தது. அதன் பிறகுதான் இத்தகைய ஓர் ஆதங்கம்.

பதுளையிலிருந்து கொழும்புக்கு மாற்றலாகி வந்தபோது வழமையான தேடல்; தினமும் இரவு வருவதால், படுத்தெழும்ப வேண்டுமல்லவா! தங்குவதற்கு அவன் அறையில் இடம் கிடைத்தது ஒரு அதிர்ஷ்டந்தான். வெள்ளை மனம் படைத்த அவனைப் புரிந்து கொள்ள அதிக நாட்களாகவில்லை. அவனைக் கண்டு, அவனுக்கு வெள்ளையாகவே இவனும் இருந்து கொண்டான்.

யாழ்ப்பாணத்துப் பின்தங்கிய குக் கிராமம் ஒன்றில் பிறந்த அவனிடம் கிராமத்து மண் அப்படியே படிந்து கிடக்கிறது. வெளித் தோற்றத்தில் பட்டணத்தானாகத் தோன்றும் அசல் கிராமத்தான் அவன். வஞ்சனை இல்லை சுயநலமில்லை. அயலானின் இன்ப துன்பங்களால் ஆகர்ஷிக்கப்பட்டு அவர்களில் ஒருவனாக சிரிக்கவும் அழவும் செய்வான். கூட்டுவாழ்வு அவன் வாழ்க்கையின் ஆதார சுருதி. நட்பு, அன்பு என்றால் அதற்கு அவனிடம் விகிதாசாரமிருப்பதில்லை. முழுமையானவன். உள்ளொன்று வைத்து நாவில் இன்னொன்று பேசத் தெரியாதவன். உறவென்றால் கிராமத்து மண்ணுக்கே உரித்தான அத்துவித நெருக்கம்.

இவன் போக்கே பட்டணத்து அலாதி. பழகும் வரை சீனிக்கரைசல், விலகிப் போனால் சென்ற இடத்தில்தான் அந்தச் சீனிக்கரைசல். கடிதங்கூட எழுத மாட்டான், புதியவர்களைச் சேர்த்து இடத்தை நிரப்பிக் கொள்வான்.

அவனுக்கு முடிந்தவரை விசுவாசமாக இருந்து கொள்வதற்கு இவன் தன்னைக் கொஞ்சங் கொஞ்சமாகப் பக்குவப் படுத்திக் கொண்டான். அவன் நட்பை என்றென்றும் நெஞ்சில் வைத்துக் கொண்டாட வேண்டுமென்பது இவன் துடிப்பு. அவன் சுகத்தில் அக்கறை கொண்டு தாய்மையாக இருக்க வேண்டும் என்பதே மனம் நிறைந்திருக்கும் ஒரே கரிசனை. அவன் எப்பொழுதும் அவனாக இருப்பதிலேயே இவனுக்கு இனம் புரியாத நிறைவு. ஆனால் எல்லோருக்கும் எப்பொழுதும் பச்சைப் பிள்ளையாக இருந்து ஏமாந்து போக வேண்டாம் என்ற கவலைபில் இவன் அவனுக்காக விழித்துக் கொண்டிருந்தான்.

எவ்வளவு விழிப்பாக இருந்து மென்ன? அவன் இன்று ஏமாந்து தான் போய்விட்டானோ?

படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியவில்லை. எப்படியும் ஒரு தீர்மானத்துக்கு வந்தாக வேண்டும்.

இப்போது என்ன செய்யலாம்? மீண்டும் மீண்டும் அந்த முகம். அதே சிரிப்பு. அவன் நினைப்பு.

ஒரு சமயம் அவனிடம் கேட்டான்.

‘ஏன் இப்பிடி.. ?’

‘எப்பிடி…?’ கேட்டு கொண்டு அதே சிரிப்புத்தான்.

‘இல்லை, இந்தமாதிரி இருக்கறது…?’

‘நான் குடிசைக்காரன். என்ரை கிராமமே அப்பிடித்தான். முதல் படிப்பாளி நான். அவர்களின்ரை கணிப்பு பெரிய படிப்பாளி எண்டு. பட்டணத்துக் காற்று இன்னும் நுழையவில்லை. சினிமா இளசுகளிட்டைப் புகுந்துவிட்டுது’

‘அப்பிடியே இருங்கோ மனிதர்களாக…, படிச்சது?’

‘கிராமத்துப் பள்ளிக்கூடம். நான் செருப்புப் போட்டதே உத்தியோகத்துக்கு வெளிக்கிட்ட போதுதான்’

இவனுக்குத் தன் ஆசிரியர் ஒருவரின் எண்ணம். சகலவற்றுக்கும் அடிப்படை பொருளாதாரக் காரணி என்பார். அவன் இல்லாமையின் குழந்தை. ஏதோ வந்துவிட்டான் இப்படி. அவன் பண்புகள் மாசடையாமல் இருக்கட்டும்.

ஆனால் ஐஸ் பழத்தைப் பார்க்கும கிராமத்து ஏழைச் சிறுவனாக பட்டணத்துப் போலி நாகரிகத்தைக் கண்டு அவன் அங்காந்து நிற்பது உணர்ந்து இவன் உள்ளூர அஞ்சுகிறான் .

அவனுடைய ஏக்கங்கள்… தவிப்புகள் இவனை உள்ளத்தை வதைக்கின்றன.

சிரித்துச் சிரித்துக் குழையும் பட்டணத்துச் சிங்காரிகளைச் சந்தித்துவிட்டால் ஐஸ் பழத்துக்கு வாய் திறந்து நிற்கும் சிறுவன்தான் அவன்.

ஒருசமயம் ஒன்றாகப் படித்தவள் என்று ஒரு நளினக்காரியைக் கோல்பேஸில் அறிமுகப்படுத்தி வைத்தான் இவன்.

அவள் பலகாலம் பழகியவள் போல அவனைச் சீண்ட ஆரம்பித்து விட்டாள். அதுதான் அவளுடைய வாழ்க்கைப்போக்கு. பலரை வளைத்துப் போட்டு, வளைந்து கொடுத்துத் தோற்றுப் போனவள். எவனாவது பிடிபட மாட்டானா என்று அந்தரித்துக் கொண்டிருப்பவள்.

அவன் அப்படியே லயித்துப் போனான். அவன் தோளில் தட்டி சுயவுணர்வுக்கு இறக்கிக் கொண்டு வரவேண்டி இருந்தது.

அந்த லயிப்பு அவனுடைய ஏக்கத்தின் பிரதிபலிப்பா? இந்த நாகரிக உலகத்தின், பெற்றுக் கொள்ள முடியாது போன இழப்புக்களை ஈடு செய்ய வேண்டும் என்ற தவிப்பா? அல்லது அவனது தாழ்வுச் சிக்கலுள்ள அடி மனதின் வெளிப்பாடா?

அவன் ஒதுங்கல், நாகரிக அம்சங்களை நயக்காத ஏழ்மையின் கூர்ப்பாக இருக்குமா?

இப்போதே புறப்பட்டால் இரவு யாழ்ப்பாணம் போய் வீட்டில் தங்கி, காலையில் எழுந்து…

எந்த முகத்துடன் அவனைப் போய்ச் சந்திப்பது?

இவன் பதுளையிலிருந்து கொழும்புக்கு வந்தவன். மூன்று ஆண்டுகள் ஒன்றாகவே வாழ்ந்திருக்கிறார்கள். ஆறுமாதங்களுக்கு முன்பு அவனுக்கு மாற்றம் பதுளைக்கு.

பதுளை அநுபவங்களெல்லாம் அவனுக்குச் சொல்லியாயிற்று. இறுதியில் ஓர் எச்சரிக்கை.

அண்ணன் ஒருவர் இருக்கிறார் குடும்பத்துடன்: நீண்ட காலமாக அங்குதான் உத்தியோகம். யாழ்ப்பாணத்திலிருந்து சகோதரியையும் கூப்பிட்டுக் குடும்பத்துடன் வைத்துக் கொண்டிருக்கிறார். அங்கு மாற்றலாகிச் செல்லும் புதியவர்களுக்கு வலிந்து கொண்டு பரோபகாரஞ் செய்வார். வீட்டுக்கு அழைப்பார், அடிக்கடி விருந்துகள் வைப்பார். தங்குவதற்கு அறை தந்துதவத் தயாராக இருப்பார். பழகுவதற்கும் வாய்ப்புத் தங்கையோடு தந்து…

‘விருந்து கிடைச்சுதா?’

‘விடுவேனா…! கலியாணத்துக்கும் கேட்டார்’

‘பாவம் எங்கெயும் சீதனக் கொடுமைதான்‘

‘இல்லை, இப்பதான் முன்னுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். எண்டாலும், ஓரளவு வசதியான குடும்பம்: அண்ணன் தான் படிச்சவர், உத்தியோகம். தங்கை நாயோடையும் இங்கிலிஸிலேதான் பேசுவாள், கொஞ்சுவாள். ஆங்கில மலிவு நாவல் ஒண்டு எப்பவும் கையிலே இருக்கும். மை பூசவேண்டிய இடங்களுக்குப் பூசுவாள். சாயம் எல்லா இடமும் தடவுவாள். தேசியத்துக்குத் திரும்புவதுதான் நவீன நாகரிகம் என்று தந்தக் கோபுரத்தில் இருந்தவர்கள் இறங்கிக் கொண்டிருக்கும் போது அவள் மாத்திரம்…’

‘அதுதான் கலியாணமு மில்லை!?’

‘அதுவுந்தான்……வேறை யுந்தான்’

‘என்ன சங்கதி?’

‘குழந்தை ஒண்டு சகோதரியின் பிள்ளையாக ஊரிலே வளருதாம்’

‘ஆபத்து…’

‘ஆமாம், பெரிய ஆபத்து’

அவன் எல்லாவற்றையும் விபரமாக அ றிந்து கொண்டு சென்றவன். நான்கு மாதங்கள் வாரந்தவறாமல் இவனுக்கு எழுதிக் கொண்டிருந்தான். இவனாலும் அவனுக்கு எழுதாமல் இருக்க முடியாதே. ஒழுங்கு தவறத் தொடங்கியது இரண்டு மாதங்களுக்கு முன். இவனுக்கு எதிர்பார்ப்பும் ஏமாற்றமுமாக ஆரம்பித்தது, தகவலே இல்லை ஒரு மாதமாக. அவனைத் தேடிக் கொண்டு போவதற்கு எண்ணிக் கொண்டிருந்த சமயந்தான், இருந்தாற்போலத் திருமண அழைப்பிதழ் அனுப்பி வைத்திருக்கிறான்.

அழைப்பு எல்லோருக்கும் போலவா இவனுக்கும் சம்பிரதாயமானது? அப்படி இல்லையென்றால்…? நேரில் சென்று அவனையும் அவளையும் எப்படி முகம் கொடுத்து வாழ்த்தலாம்! அல்லது ஒரு தந்தி. அவன் என்ன கருதுவானோ!

அவனும் அவளும் எப்படி இணைய முடிந்தது! இரண்டு துருவங்கள். அவனும் இவனும் போலவா?

நடுப்பகல் தாண்டிவிட்டது. இவனால் ஒரு முடிவைத் தொட முடியவில்லை. உள்ளத்திலே பாய்ச்சல். அவன் நினைப்பு. தொடர்ந்து அவளும்.

இறுதியில் ஒரு தீர்மானம்.

அவன் மனத்தில் அவளை ஏற்றுக் கொள்ளுகின்ற துணிச்சல், ஐஸ்பழத்தைக் கண்டு அங்காந்து நிற்கும் அப்பாவித்தனமாகவும் இருக்கலாம்.

திருமண அழைப்பிதழ் அனுப்பி வைத்திருக்கிறானே, அது அவனது வச்சிரத் துணிச்சலோ! அல்லது அத்த வெள்ளை மனத்தின், கிராமத்துப் பச்சை மண்வாசனையின் அழைப்போ!

எது, எப்படி இருந்தாலும்…

இரவு வண்டியில் இவன் புறப்பட்டுவிட்டான்.

காலையில் வீடு வந்து சேர்ந்தவன், உடனே அவள் கிராமத்துக்குப் பயணப்பட்டான்.

அவனுக்கு மணப்பந்தல் அவள் வீட்டில்தானே!

இவன் அங்கு போய்ச் சேர்வதற்கு முன் அவள் கழுத்தில் தாலி ஏறிவிட்டது. அவனும் அவளும் ஒன்றாக இணைந்து பந்தலில் இருக்கிறார்கள். அந்தக் கும்பலுக்கு மத்தியிலும் எதிர்பார்த்திருந்தவன் போல எழுந்தோடி வந்து இவனை அழைத்துச் செல்லுகிறான்.

அவன் முகத்தில் அச்சொட்டான அதே சிரிப்பு.

அவன் மன்னித்து மறந்து விடக்கூடிய பக்குவப்பட்ட மனிதனா? அல்லது ஐஸ்பழத்தைப்…?

அவளுக்கு அறிமுகப்படுத்துகிறான். இது வெறும் சம்பிரதாயந்தான். இவனுக்குச் ஜீரணிக்க முடியவில்லை.

‘எங்கே திருமணப் பரிசு?’ சிரித்துக் கொண்டே கேட்கிறான்.

‘என் நினைவைச் சுமக்கிற எதுவும் இனிமேல் உனக்கு வேண்டியதில்லை’ என்று இவன் நினைத்துக் கொண்டான்.

அவன் போலச் சிரிக்க முடியவில்லை. முயன்றான்.

எதனையோ இழந்து போனதான உணர்வு இவனுக்கு நெஞ்சை அழுத்துகிறது.

– மல்லிகை இதழ் 154, ஆகஸ்ட் 1981

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *