(2012ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தொழிலாளர்கள் காலையிலிருந்து, அந்த உச்சிப் பொழுதுவரை காத்திருந்தார்கள்.
அவர்கள் வெட்டிய அத்திவாரத்தின் ஈர மண் கூட உலர்ந்து சொரிந்து விழுந்து கொண்டிருந்தது.
சீமெந்துக் கலவை ஈரம்வற்றி, உலர்ந்து கொண்டிருந்தது.
அவர்கள் தங்கள் சாந்தகப்பை, மட்டத்தடி, நீர்மட்டம், மண்வெட்டி என்பனவற்றுடன் நீண்ட நேரமாகக் காத்திருந்தனர்.
வேலை தொடங்கவில்லை.
தந்தையுடன், வேலைக்குத் துணையாக வந்திருந்த சிறுவன் கேட்டான்:
“அப்பா, ஏன் இன்னும் வேலையை நீங்கள் தொடங்கவில்லை”
“மகனே, அடிக்கல் நாட்டுபவர் இன்னும் வரவில்லை”
“அடிக்கல் மிகப் பெரிதா அப்பா? உங்களால். அதை நாட்ட முடியாதா?”
“அப்படியல்ல மகனே. அடிக்கல் பெரிதல்ல: அதனை நாட்டுபவர் பெரிய மனுஷன்”
“உங்களைவிட அவர் பெரிய உழைப்பாளியா? இந்தக் கட்டிடம் கட்டும்வரை உழைப்பாரா? அப்படியான உழைப்பாளி ஏன் இன்னும் வந்து சேரவில்லை”
“இல்லையடா மகனே. அவர் உழைப்பாளியல்ல. பதவிக்காரன். அவரால் இந்த அடிக்கல்லை தூக்கவும் முடியாது. தூக்கவும் மாட்டார். அது அவருக்குக் கௌரவக் குறைவு. நாங்கள் தூக்கிக் கொடுக்க அவர் அதனை ஆசீர்வதிப்பதுபோல் தொட்டுக் கொண்டு நிற்க புகைப்படங்கள் பிடிப்பார்கள். வெயிலிலும் மழையிலும் நாங்கள்தான் உழைத்துக் கொடுக்கவேண்டும்,
“அப்படியானால் அவருக்கு எதற்கா இதில் பங்குகொடுக்கவேண்டும். அடிக்கல்லில் அவர் பெயரைப் பொறிக்க வேண்டும்”?
“பாவம்…. வருங்கால சமுதாயம் அவர்மீது குற்றம் சாட்டாமல், அவரும் உழைப்பில் பங்கு கொண்டார் என நாம் வழங்கும் பிச்சைக்காரத்தனமான சான்றிதழ்” அதுமட்டுமல்ல, மகனே! இந்தக் கட்டிடம் கட்டி முடிந்ததும் திறப்புவிழாவுக்கென இன்னொரு பதவிக்காரன் பட்டு நாடா ஒன்றை வெட்டுவான். அவன் செய்த மாபெரும் உழைப்புக்காக அவன் பெயரும் பொறிக்கப்படும்”
“இதெல்லாம் ஏன் இப்படி?”
“நம் தலைவிதி என்றுதான் இவ்வளவு நாளிருந்தோம்” இப்போது நாம் விழித்துக் கொண்டோம்” அவன் முடிக்கவில்லை.
மாபெரும், நீண்ட கப்பல் போன்ற கார் ஒன்று, ஒருவனை மட்டும் சுமந்தவாறு, அலுங்காமல் குலுங்காமல் சப்தம் எதுவுமின்றி வந்து நின்றது.
– குறுங்கதை நூறு (செம்பியன் செல்வன்), டிசம்பர் 1986, நான் வெளியீடு, யாழ்ப்பாணம்
– கதை கதையாம்… – தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள் – தொகுப்பு: சு.குணேஸ்வரன், முதற்பதிப்பு: 24.01.2012, இளையகுட்டி அருமைக்கிளி நினைவு வெளியீடு, தொண்டைமானாறு.