தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 8,263 
 
 

அப்பாவின் பதினாறாம் நாள் காரியங்கள் முடிய, உள் அறையில் இருந்த கமலத்திடம் வந்தான் செல்வம்.
“”கமலம்… அப்பா இறந்த பின், அம்மாவை தனியாக தங்க வைப்பதில் எனக்கு விருப்பமில்லை. நான் அமெரிக்காவில் இருப்பதால், கூட்டிட்டுப் போக முடியாத சூழ்நிலை. அம்மாவை, உன்னோடு வச்சுக்கிறதில் ஆட்சேபனை ஒன்றுமில்லையே?”
அண்ணனை நிமிர்ந்து பார்த்தாள் கமலம்.
வைரமாக“”என்ன அண்ணா இது? நானும் அவங்க பெத்த பொண்ணுதானே… எனக்கும் பொறுப்புகள் இருக்கு. அம்மாவை நான் நல்லவிதமாகப் பார்த்துக்கிறேன். நீ கவலைப் படாதே!”
கமலத்தின் கணவனும், “”கமலம்… உங்க அம்மா நம்மோடு வந்து இருக்கிறது, எனக்கும் சந்தோஷம்தான். நானும், ஆபிஸ் வேலையாக அடிக்கடி டூர் போயிடறேன். நம்ம மகன் சிவாவும், ஆஸ்டலில் இருக்கான். நீயும், நிஷாவும் தனியா இருக்கீங்க.
“”அவங்க வந்து இருந்தா உனக்கும் துணையாக இருக்கும்; நிஷாவுக்கும் பாட்டியோடு இருக்கிறது சந்தோஷத்தைக் கொடுக்கும்,” என்று கூறிய கணவனை, நன்றியுடன் பார்த்தாள் கமலம்.
“”அம்மா… சாப்பிடுங்கம்மா!”
“”வை… அப்புறமா சாப்பிட்டுக் கிறேன்…”
“”நேரத்துக்கு சாப்பிட்டு, மாத்திரை போட்டுக்கங்க. அப்பாவையே நினைச்சுக்கிட்டு உடம்பை கெடுத்துக்காதீங்க.” ஆறுதலாகச் சொன்னாள் கமலம்.
“”அம்மா… பாட்டி தோட்டத்தை கூட்டிகிட்டு இருக்காங்க,” நிஷா சொல்ல, தோட்டத்துக்கு விரைந்தாள் கமலம்.
“”என்னம்மா இது? நீங்க ஏன் கூட்டறீங்க… காலையில் வேலைக்காரி பெருக்கிட்டாளே… உள்ளே வாங்கம்மா…”
“”அங்க பாரு கமலம், குப்பையாக கிடக்கு. அதான் சுத்தம் பண்ணுவோம்ன்னு கூட்டறேன்!”
“”வேண்டாம்மா… கிடக்கட்டும் விடுங்க…”
“”சரி… இது உன் வீடு. எனக்கு எந்த உரிமையும் இல்லைன்னு சொல்ற. இனிமே செய்யலைம்மா!”
துடைப்பத்தை கீழே வைத்துவிட்டு, மவுனமாக உள்ளே வர, “”என்னம்மா இது… நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை. வயசான நீங்க எதுக்கு சிரமப்படணும்ன்னு தான் சொன்னேன்!”
பதிலொன்றும் சொல்லாமல் அம்மா உள்ளே செல்வதை பார்த்து, கமலத்தின் மனம் சங்கடப்பட்டது.
“”அம்மா ஸ்கூலுக்கு நேரமாச்சு. தலை பின்னி விடும்மா!”
“”இங்கே வா நிஷா… நான் பின்னி விடறேன்!”
“”வேண்டாம் பாட்டி. உனக்குத் தெரியாது. அம்மாவே சீவி விடுவாங்க!”
சொன்னபடி அம்மாவை தேடி நிஷா செல்ல, “”ஆமாம்… எனக்கு ஒன்றும் தெரியாது. நான் தான் எதுக்கும் லாயக்கில்லாதவளாகப் போயிட்டேன்!”
அம்மா புலம்புவதைக் கேட்ட கமலத்திற்கு, என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை.
போனில் சிவா, “”அம்மா… எப்படி இருக்கீங்க. பாட்டி வந்ததில், உன் பொழுது சந்தோஷமாக போகும்ன்னு நினைக்கிறேன். பாட்டி எப்படிம்மா இருக்காங்க?”
“”சிவா… மனசுக்கு சங்கடமா இருக்குடா. நான் ஒண்ணு நினைச்சேன்… அது ஒண்ணு நடக்குது. அம்மா நம்மோடு இருந்தா, நல்லவிதமாக கவனிச்சு, கடைசிக் காலத்தில் அவங்களை சந்தோஷமாக வச்சுக்கணும்ன்னு நினைச்சேன். ஆனா, அவங்க அதை புரிஞ்சுக்காம எல்லா விஷயத்திலும், கோபப்படறாங்க சிவா…” என்று நடந்ததை அவனிடம் சொன்னாள்.
“”சரிம்மா… நீ சொல்றதை என்னால புரிஞ்சுக்க முடியுது. நீ ஒண்ணும் வருத்தப்படாதே… அடுத்த வாரம் வரேன். நான் பாட்டிக் கிட்டே பேசறேன்!”
உள்ளே நுழைந்த சிவா, நேராக பாட்டி இருக்கும் அறைக்கு வந்தான்.
படுக்கையில் சுவரை பார்த்தபடி திரும்பி படுத்திருக்க, “”பாட்டி… எப்படி இருக்கே?” கேட்டபடி படுக்கையில் அவளருகில் அமர்ந்து கொண்டான்.
“”வா சிவா… இருக்கேன். சோத்துக்குக் கேடாக, பூமிக்கு பாரமாக பொழுது போயிட்டிருக்கு!”
“”ஏன் பாட்டி அப்படி சொல்றீங்க… உங்களுக்கென்ன ராணியாட்டம் இருக்கீங்க. எழுந்திருங்க; வெளியே வாங்க…”
வற்புறுத்தி அழைத்து வந்து, ஹாலில் உட்கார வைத்தான்.
“”பாட்டி… வாங்க சாப்பிடலாம். அம்மா தோசை ஊத்திட்டாங்க!”
“”நீ சாப்பிடு சிவா. எனக்கென்ன அவசரம். மெதுவா சாப்பிடறேன்!”
“”சொன்னா கேளுங்க. எழுந்து வாங்க. உங்களோடு தான் சாப்பிடுவேன்!”
கமலம் தோசை ஊற்றிக் கொண்டு வந்து, இருவருக்கும் தட்டில் வைத்து சாம்பார் ஊற்றினாள்.
பாட்டியுடன் உட்கார்ந்து சாப்பிட்ட சிவா, “”பாட்டி… என்னதான் அம்மா நல்லா செய்தாலும், உங்க கை பக்குவம் யாருக்கும் வராது பாட்டி. நீங்க முறுகலாக தோசை ஊற்றி, சாம்பார் வைத்து கொடுக்கும்போது, சாப்பிட்டா அவ்வளவு ருசியா இருக்கும்!”
கண்கள் பிரகாசிக்க பேரனைப் பார்த்து, “”உங்க தாத்தாவும் அப்படித்தான் சொல்வாரு சிவா,” என்ற குரலில் பெருமை பொங்கி வழிந்தது.
“”பாட்டி… நீ பால் பணியாரம் செய்வியே… வாயில் போட்டதும் கரைஞ்சுடும். எப்படி செய்யணும்ன்னு அம்மாகிட்டே பக்குவம் சொல்லு… சாயந்திரம் செய்து தருவாங்க!”
பாட்டியுடன் உட்கார்ந்து, சிரிக்க, சிரிக்க பேசும் மகன் சிவாவைப் பார்த்தாள் கமலம். இவன் வந்த நான்கு நாட்களும் அம்மா மிகவும் சந்தோஷமாக இருப்பது கமலத்திற்கு புரிந்தது.
“”பாட்டி… நீ சொன்ன மாதிரியே இனி நண்பர்கள் விஷயத்தில் நடந்துப்பேன். ஆபத்து சமயத்தில் உதவுறது மனித நேயம். நீ சொல்றது சரிதான் பாட்டி… உனக்கு எவ்வளவு அனுபவம் இருக்கு!” என்றான் சிவா.
“”பாட்டி… நான் காலேஜுக்கு கிளம்பறேன்!”
கேட்ட மாத்திரத்தில் பாட்டியின் முகம் சுருங்கி,””நீ வந்து இருந்தது என் மனசுக்கு ரொம்ப ஆறுதலாக இருந்தது. நீ கிளம்பிட்டா, நான் திரும்ப பழைய நிலைக்கு போயிடுவேன். என் வேலைகளை பார்த்துக்கிட்டு, யாருக்கும் பிரயோசனமில்லாமல் என் பொழுதுகள் போகும்!” என்றாள்.
“”விரக்தியாக பேசும் பாட்டியை புன்னகையுடன் பார்த்தான்.
“”தப்பு பாட்டி… உன் நினைப்பு தப்பு. வீட்டிலே வயசானவங்க இருக்கிறது வைரம் இருக்கிறது மாதிரி பாட்டி. நீங்க எங்களுக்கு கிடைச்சிருக்கிறது எவ்வளவு சந்தோஷமான விஷயம் தெரியுமா? அதான், உங்களை ஒரு பொக்கிஷமாக பாதுகாக்க நினைக்கிறாங்க அம்மா. வயசான நீங்க வேலை பார்த்தா, உங்களுக்கு ஏதும் உடம்புக்கு வந்துடுமோன்னு பயப்படுறாங்க…
“”இனிமே உங்க கிட்ட நாங்க எதிர்பார்க்கிறது உங்களோட உடல் உழைப்பு இல்லை பாட்டி… உங்களுடைய அனுபவங்களும், அறிவுரைகளும்தான். அதை நீங்க எங்களோடு இருந்து, கடைசி வரை எங்களுக்குச் சொல்லி, உங்க அனுபவங்களால் எங்களை வழி நடத்தணும்ன்னு நினைக்கிறோம்…
“”நீங்க தான் இதை புரிஞ்சுக்காம, அம்மா உங்களை ஒதுக்கி வைக்கிறதாக நினைச்சு, நீங்க ஒதுங்கி இருக்கீங்க!
“”இந்த நாலு நாட்களும், அம்மா உங்ககிட்டே கேட்டு எவ்வளவு விஷயங்களை செய்தாங்க கவனிச்சீங்களா… புரிஞ்சுக்குங்க பாட்டி, நீங்க எங்களோடு இருக்கிறது எங்களை எவ்வளவு சந்தோஷப்படுத்துது தெரியுமா?”
சிவா சொல்ல, கண்கலங்க அம்மாவின் அருகில் வந்தாள் கமலம்.
“”அம்மா… நீ எனக்கு கடைசி வரை வேணும்மா. சிவா சொன்ன மாதிரி, என் தாயை, வைரமாக நினைச்சு பாதுக்காக்கணும்ன்னு நினைக்கிறேனே தவிர, உன்னை நான் ஒதுக்கலைம்மா… என்னை புரிஞ்சுப்பியாம்மா?”
குரல் தழுதழுக்க பேசும் மகளை, புரிந்து கொண்டவளாக,””நான் தான் உன் நல்ல மனசை புரிஞ்சுக்காம, கஷ்டப் படுத்திட்டேன் கமலம்… மறந்துடுடா!”
மகளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்ள, மகனை நன்றி கலந்த பார்வையுடன், அன்பு கனிய பார்த்தாள் கமலம்.

– எல்.என்.இந்திரஜித்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *