வேள்விப் பலி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 25, 2022
பார்வையிட்டோர்: 247 
 

(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு மலேயாவிலிருந்து மறு படியும் என்னுடைய ஊருக்கு வந்திருக்கிறேன். இந்த ஊர்தான் எப்படி எப்படியெல்லாம் மாறிப்போய்விட்டது! வீடு, வாசல்; மரம், தடி – எல் லாமே உருமாறிவிட்டன. மனிதர்களையும் யார் யாரென்று விசாரித் துத்தான் அறிய வேண்டியிருக்கிறது. முன்னே நான் இங்கே இருந்த போது, மாமா! எனக்கு “ஆ”னா எழுதத் தெரியும்” என்று சொல்லிக் கொண்டு என் மடியில் ஓடிவந்து ஏறிய அடுத்த வீட்டுப் பெண் என்னைப் பார்க்க வந்தாள்; வரும்போது ஒக்கலையில் தனது குழந்தையையும் சுமந்து கொண்டு வந்தாள்! –

முன்னெல்லாம் என்னோடு இணைபிரியாத என் நண்பர் முத் தையா, என் வரவறிந்து ஸ்டேஷனுக்கே ஓடி வருவாரென நினைத் திருந்தேன். நான் இங்கே வந்தும் ஒரு பகல் கழியப்போகிறது; இன் னும்தான் அவர் முகத்தைக் காணவில்லை. பழைய ஞாபகங்கள் முத் தையாவைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டின. பொழுது படும் சமயத்தில் அவர் வீட்டுக்குப் போனேன். “ஓ! வாருங்கள்; வாருங் கள்! நானே வரலாமென்று இருந்தேன். தெரியாதா, என்பாடு…” என்றார்.

“குடும்பத் தொந்தரவுகளோ? எல்லாமாக எத்தனை கூப்பன் வைத்திருக்கிறீர்கள்?”

“மூன்று சாதாரணம், இரண்டு பிள்ளை, ஒரு குழந்தை – இன்னும் இரண்டு மாதத் தால் இன்னும் ஒரு குழந்தைக் கூப்பன் கிடைக்கும்…”

– இப்படியே பேச்சு வளர்ந்து சென்றது. அவையெல்லாம் இந்தக் கதைக்குத் தேவையற் றவை. முக்கியமான பகுதிக்கு வந்து சேருகிறேன். ஏதோ பேசிக்கொண்டிருக்கையில், “பௌர்ணமிக்கு இன்னும் மூன்று நாள் தானே இருக்கிறது?” என்றார் முத்தையா.

“பங்குனி மாதப் பௌர்ணமியல்லவா? பத்திரகாளிகோயில் வேள்வியும் அதோடு வரவேண்டுமே?” என்றேன்.

திடீரென்று அவர் முகத்தில் புயல் அடித்து ஓய்ந்தது போன்ற பாவம் தோன்றிற்று. ஏதோ ஒரு மயிர்க்கூர்ச் செறியும் சம்பவம் அவர் ஞாபகத்தில் துடித்தது போன்றிருந்தது.

நான் அப்படி என்ன சொல்லிவிட்டேன்? பத்திரகாளி கோயில் வேள்வி எப்போது என்று தானே கேட்டேன்! “ஏன், பேசாமலிருக்கிறீர்கள்!” என்றேன்.

“… அந்த ஞபாகம் என் நெஞ்சை உடைக்கிறது”

“நீங்கள் சொல்வது…”

முத்தையா சால்வைத் தலைப்பினால் கண்களைத் துடைத்துக் கொண்டு, “இப்படி வாருங்கள்” என்று என்னை உள்ளே ஒரு அறையினுள் அழைத்துச் சென்றார். “இந்தப் படங்களைப் பாருங்கள்” என்றார்.

அமரராகிவிட்ட மகாத்மாஜியின் படம் ஒன்று, மற்றப் படத்தில் ஆணும் பெண்ணுமாக இருவர் இருந்தனர். அந்த மனிதரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. ஞாபகம் வர வில்லை . “யார் இது? தெரியவில்லையே?” என்றேன்.

“இதோ இந்த மகாத்மாஜி சென்ற 30-01-48ல் தெய்வமானவர்; மற்றப் படத்திலிருப்ப வர் இரண்டு வருடங்களுக்கு முன்னால் தெய்வமாகிவிட்டவர். மகாத்மாஜியின் சிஷ்யர் என்றே சொல்லலாம். – குருவை மிஞ்சிய சிஷ்யர் என்று சொல்வேன்”.

“அந்தப் பெண்…”

“அவருடைய தர்ம புத்திரி, அவருடைய மனமெனும் தோணியைச் சரியான பாதையில் திருப்பிவிட்ட சுக்கான்!”

“அந்த மனிதரை எங்கேயோ பார்த்தமாதிரி…”

“மாதிரியென்ன, உங்களுக்கு நன்றாகத் தெரிந்தவர்தான்: இராமலிங்க உபாத்தியா யரின் மகன் -”

“அ… சுந்தரமூர்த்தியா? அவர் ……”

“அவர் தான்!”

“என்ன நடந்தது? விபரமாகச் சொல்லுங்கள்!”

“சுந்தரத்தினுடைய குணம் தான் உங்களுக்குத் தெரியுமே!”

“தங்கப்பவுணாயிற்றே! நல்லொழுக்கமும், தெய்வபக்தியும் – இராமலிங்க உபாத்தி யாயர் வளர்த்த வளர்ப்பல்லவா?”

“ஆனாலும், பரம்பரை பரம்பரையாக வந்த பழக்கத்தை விட்டுவிட அவருக்குத் துணிவில்லை. வருடந்தவறாமல் பத்திரகாளிக்கு ஒரு முதல் தரமான ஆட்டுக்கடாப்பலி கொடுத்து வந்தார்.”

“அதிலே”

“தவறு இல்லை, செய்ய வேண்டிய காரியமென்றுதான் அவரும் எண்ணிக்கொண்டி ருந்தார். அவருக்கு உண்மையை எடுத்துக் காட்டி அந்த வழக்கத்தை நிறுத்தி விட்டவள் அவருடைய மனைவிதான். அவரைத் தங்கப்பவுண் என்று சொன்னீர்களே. அந்த மங்கையர்க்கரசியை எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. அவளைத் தெய்வ மாக வணங்கலாம். ஒவ்வொரு பெண்ணும் அவளை லஷ்யமாகக் கொண்டு வாழலாம். மங்கையர்க்கரசி என்ற பெயர் அவளுக்கே பொருந்தும்!”

“பிரமாதமாகப் புகழ்கிறீர்களே, புருஷன் மனம் கோணாமல், அவனுடைய விருப்பப்படி நடப்பவளல்லவோ – ”

“மங்கையர்க்கரசி அப்படியில்லையென்று யார் சொன்னது? சுந்தரத்தின் இஷ்டத்திற்கு மாறாக அவள் என்றும் நடந்ததில்லை. அவளுடைய இனிய பேச்சுக்களும், சீரிய நடத்தை யுமே ஒருவரைத் தெய்வமாக்கி விட்டனவென்றால், – அவளுடைய பெருமை…”

“சுந்தரம் தமது பலியை நிறுத்தினார். அதனால் – ?”

“அவர் அவ்வளவோடு நிற்கவில்லை. காந்தீய வாழ்வில் விறுவிறென்று முன்னேறிச் சென்றார். வெகு சீக்கிரத்தில் அவர் ஒரு தூய்மையான, ஒழுங்கான வாழ்க்கையை அமைத் துக் கொண்டார். அந்த வாழ்வின் தூய்மை அவர் முகத்தில் “பளிச்” சென்று தெரிந்தது. எந்த முரடனும் அவரைக் கண்டால் பணிந்து செல்வது வழக்கமாகி விட்டது”

“பிறகு?…”

“காந்தீயத் தொண்டர் சபை” என்பதாக ஓர் சபையை அவர் நாலு வருடங்களுக்கு முன்னால் ஆரம்பித்தார். அநேகமாக ஊரிலுள்ள எல்லா இளைஞர்களும் அதில் சேர்ந்திருந் தார்கள். அறிவும், பண்பாடும் உள்ள நாலைந்து இளைஞர்கள் உண்மையான ஆர்வத்துடன் சபையின் வளர்ச்சிக்காக சுந்தரத்தோடு ஒத்துழைத்தார்கள். சுந்தரத்தின் “முகத்துக்காக” முதலில் சேர்ந்தவர்கள் கூட நாளடைவில் பண்பட்டு வந்தார்கள், சபை ஆரம்பித்து ஒரு வருடமாவதற்குள் ஒரு முக்கியமான காரியத்தைச் செய்வதற்கு இளைஞர்கள் தீர்மானித் தார்கள்.

“வேள்வியை நிறுத்தவா?”

“இல்லை. எங்கள் முருகமூர்த்தி கோயிலை ஹரி ஜனங்களுக்குத் திறந்துவிட வேண் டுமென்று துடித்தார்கள். சுந்தரம் முதலில் கொஞ்சம் தடுத்துப் பார்த்தார். “சபையின் வளர்ச்சி இன்னும் அதிகமாகட்டும். உங்கள் பண்பாடும் வளரட்டும். அடுத்த வருடம் இந்த வேலை யைச் செய்வோம். அதற்குள் பொது ஜனங்களின் மனதையும் பக்குவப்படுத்தப் பிரசாரங்கள் செய்யலாம்” என்றார். குறுகுறுத்த இளைஞர்களின் மனம் கேட்கவில்லை. அப்போதே அந்த முயற்சியில் நிச்சயமாக வெற்றியடையலாம் என்றார்கள்!”

“ஆலயப் பிரவேசம் நடந்ததா?”

“இல்லை, நடக்க முயற்சி நடந்தது. இளைஞர்களின் எண்ணத்துக்குச் சுந்தரமும் சம்மதித்து விட்டார். தேதி குறிப்பிட்டு விளம்பரம் ஓட்டினார்கள். கூட்டங்கள் நடத்தினார்கள். “பழையவர்”களின் எதிர்ப்பும் இருந்தது. கொஞ்சநாள் ஊரெங்கும் இதே பேச்சாக இருந்தது. குறிப்பிட்ட தேதியில் கோயிலில் ஒரேகும்பல். ஹரிஜனங்கள் ஆலயப்பிரவேசத்துக்கு – திகி லுடன் – தயாராக இருந்தார்கள். திடீரென்று அட்டகாசமான ஒரு குரல் கேட்டது. பொன்ன னைத் தெரியுமல்லவா? – அவன் குடித்துவிட்டு யமன் மாதிரி வந்தான். சுந்தரத்துக்கு முன் னால் போய் தாறுமாறாகப் பேசினான். இளைஞர்கள் சிலர் துடித்தார்கள். சுந்தரம் அவர்களை – அவர்களுடைய கொள்கையை ஞபாகப்படுத்தி – எச்சரித்துவிட்டு, பொன்னனுக்குச் சாந் தமாக ஏதோ பதில் சொன்னார். அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே திடீரென்று பொன்னன் கைத்தடி உயர்ந்தது. மறுகணம் “படீர்” என்று சுந்தரத்தின் தலையில் அது வீழ்ந்தது!”

“அட்டா !”

“முருகா!” என்று சத்தத்துடன் சுந்தரம் நிலத்தில் சரிந்தார். “கிசுகிசு” என்று தரையெல் லாம் இரத்தம் பெருகிற்று. ஒரே அல்லோல கல்லோலமாகிவிட்டது. பொன்னன் ஓடிவிட்டான். நல்லவேளை! நின்றிருந்தால் அந்த இளைஞர்களைத் தங்கள் அஹிம்சா தர்மத்தை விட்டு விலகச் செய்திருப்பான்!”

“சுந்தரம் அதோடு -”

“இல்லையில்லை. ஆஸ்பத்திரியில் மூன்று மாசம் கிடந்து எழும்பி வந்தார்!…பொன்னனுக்குக் கோர்ட்டிலே எட்டு மாதச் சிறைத் தண்டனை கிடைத்தது!”

“ஆலயப் பிரவேசம்?”

“அன்று நடக்கவில்லை . ஆனால் சுந்தரம் ஆஸ்பத்திரியிலிருக்கும் போதே, இளைஞர்கள் ஜனங்களைப் பக்குவப்படுத்தி வைத்திருந்தார்கள். அந்தச் சம்பவம் நடந்த பிறகு யாரும் எதிர்க்கத் துணியவில்லை. சுந்தரத்தின் வருகைக்காக காத்திருந்தார்கள். சுந்தரம் ஆஸ்பத்திரியிலருந்து வந்த அதே தினத்தில், ஒருவித எதிர்ப்புமில்லாமல் மிகக் கோலாகல மாக ஆலயப் பிரவேச விழா நடந்தது!”

“மகாத்மாஜியின் ஆயுதம் லேசானதல்லவென்பதை இன்று தான் சரியாயறிந்தேன். இல்லாவிட் டால் இந்தச் சனங்கள்”

“அஹிம்சையும், தியாகமும் யாரைத்தான் வசமாக்காது?”

“சொல்லுங்கள், சொல்லுங்கள்! சுந்தரத்தின் வாழ்க்கையில் முக்கியமான பாகத்தை இன்னும் சொல்லவில்லைப் போலிருக்கிறதே?”

“அதைத்தானே சொல்ல வந்தேன். ஆலயப்பிரவேச விழா நடந்த அதே வருடத்தில் காந் தீயத் தொண்டர்சபை இன்னொரு முக்கியமான காரியத்தைச் செய்யத் துணிந்தது. – பத்திரிகாளி கோயில் வேள்வியை நிறுத்திவிடுவதென்று தீர்மானித்தார்கள்!”

“ஆலயப் பிரவேசத்தைப் போல இது லேசான காரியமல்லவே? பல முரடர்களுடைய கடுமையான எதிர்ப்புகளை மீறிக் கொண்டு வெற்றி காண வேண்டுமே!”

“எல்லாம் சுந்தரத்துக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. ஆனால், இதில் முழுப்பொறுப்பை யும் தாமே தாங்கிக் கொண்டார். ஆலயப் பிரவேசத்தின் போது இளைஞர்களுடைய துடிப்பைக் கண்டவராதலால், எது நேர்ந்தாலும் அவர்களுடைய கொள்கையை – லக்ஷியப் பாதையை – விட்டு விலகக் கூடாதென்பதை மாத்திரம் படித்துப் படித்துச் சொல்லிவைத்தார். ஜனங்களிடையே பிரசாரம் செய்வது மட்டும்தான் இளைஞர்களுடைய வேலை. எதிர்ப்புகளுக்கெல்லாம் சுந்தரம் தாம் ஒருவராகவே “ஜவாப்” சொல்லத் துணிந்து விட்டார்?”

“அப்படியென்றால்?”

“வேள்விக்குப் பதினைந்து தினங்களுக்கு முன்னதாகவே உண்ணாவிரதம் அனுஷ் டிக்கத் தொடங்கி விட்டார். ஒரு உயிர் கூட வேள்வியில் பலியாகக்கூடாது. அப்படிப் பலியிடப்பட் டால் சாகும் வரை உண்ணாவிரதம்!” என்றார்.”

“ஐயையோ -”

“காந்தீயத் தொண்டர் சபையார் எவ்வளவோ தடுத்துப் பார்த்தனர். அவர் கேட்கவில்லை. எல்லோருக்கும் பெரிய ஏக்கந்தான். வெற்றியோ நிச்சயமில்லை. சுந்தரமும் சொன்ன வார்த்தையை மீறப்போவதில்லை. மங்கையற்கரசியே பதறிவிட்டாள். “இந்த முரட்டுச் சனங்களின் மத்தியில் நீங்கள் கருணையை எவ்விதம் எதிர்பார்க்கலாம்? வேண்டாம்; உண்ணாவிரதமிருக்க எண்ணியிருப்பதை விட்டுவிடுங்கள். இன்னும் சிலகாலம் பிரசாரம் செய்ததன் பின்னர் போராட்டத்தை ஆரம்பிக்கலாம்” என்றாள். சுந்தரம் சிரித்தார். “மங்கையர்க்கரசி! நீயே தடுமாறிவிட்டாயே? காந்தி மஹானின் அஹிம்சா தர்மத்தின் பலத்தை நீ கூடவா உணரவில்லை ? நிச்சயம் வெற்றியடைவேன். ஒரு சமயம் தோற்று விட்டாலும்கூட, அந்தத் தோல்வியே என் கடமையைச் செய்து முடிக்கும்!” என்றார். “ஐயோ, நீங்கள் இல்லாத போது, அந்த வெற்றி -” என்று விம்மினாள் மனைவி. “அடடா, துயரத்தினால் அறிவையும் இழந்து விட்டாயே? வெற்றியை அனுபவிப்பதற்காகவா, நாம் போராடுகிறோம். நம்முடைய வேலை கடமையைச் செய்ய வேண்டியது. பலனை அனுபவிக்க வேண்டியது நமது சமூகமல்லவா! உன்னைப்பற்றி நான் மிகவும் பெருமையாக நினைத்திருந்தேனே, ஏன் இப்படியாகி விட்டாய்? வீரத் தமிழ்ப் பெண்மணிகள், போர்க்களம் செல்லும் தம் கணவரை எப்படி விடை கொடுத்து அனுப்பினார்கள் என்பதைப் படித்துவிட்டால் மாத்திரம் போதுமா?” – என்று மனைவியைத் தேற்றினார். சுந்தரம், அவள் விம்மிக்கொண்டே, “உண்மைதான், என்னை மன்னியுங்கள், இறைவனருளால் நீங்கள் நிச்சயம் வெற்றி பெறு வீர்கள். ஒரு வேளை தவறிவிட்டால் – எனக்கு ஒரு வரமளித்துச் செல்லுங்கள். உங்கள் போராட்டத்தை எந்த இடத்தில் விட்டீர்களோ, அதே இடத்திலிருந்து தொடர்ந்து நடந்த என்னை அனுமதியுங்கள்!” என்றாள். “மிகவும் சந்தோஷம், அதுதான் சரி” என்று அவளைத் தட்டிக் கொடுத்தார் சுந்தரம்”.

“உண்ணாவிரதம் நடந்ததா?”

“குறிப்பிட்ட தேதியில் ஆரம்பமாயிற்று. பத்திரகாளி கோயிலிலேயே இருந்து விரதத்தை ஆரம்பித்தார். மங்கையர்க்கரசியும் பக்கத்திலேயே இருந்து வந்தாள். ஏதோ கடமைக்காக அவள் உணவருந்தி வந்தாள். இரவும் பகலும் தொண்டர்கள் சூழ்ந்திருந்தார்கள். ஜனங்க ளுக்குப் பொதுவாக நம்பிக்கையில்லை. “பதினைந்து நாளாவது ஒன்றுமில்லாமல் கிடப்பதா வது! ஏழெட்டு நாளிலேயே விட்டு விடுவார்!” என்று பலர் நினைத்தார்கள். ஏழெட்டு நாளும் போயிற்று. சுந்தரம் படுத்தபடுக்கையாக ஆகிவிட்டார். வரவரப் பலவீனம் அதிகரித்து வந்தது”.

“அடடா, ஊரிலே நீங்களெல்லாம்-”

“நாங்களெல்லாம் சும்மாயிருக்கவில்லை. கோயிலதிகாரி லேசில் சம்மதிக்கவில்லை. “ஊரார் குறை சொல்வர்” என்று அவர் சாட்டுச் சொன்னாலும், வரும்படி போய்விடுமே என்ற ஏக்கந்தான் அவருக்கு. பத்து நாளும் கழிந்துவிட்டது. கோயிலதிகாரி ஒரு விதமாகச் சம்மதித்தார். அதன் பிறகு ஊரிலே முக்கியமான சில பிரமுகர்களையும் சம்மதிக்கப் பண்ணு வதற்குள் மேலும் இரண்டு நாட்கள் கழிந்துவிட்டன. சுந்தரத்தின் நிலை மிக மோசமாகி விட்டது. எல்லோரும் அவரிடம் போய் பலியை நிறுத்தி விடுவதாகச் சொன்னார்கள். அவர் இரண்டு கைகளையும் கூப்பி வணங்கினார். பிறகு ஈனஸ்வரத்தில் “தெய்வசித்தம். வேள் வியன்று விரதத்தை முடித்துக் கொள்கிறேன்” என்றார். அதற்கு மேல் அவரை நெருக்க முடியவில்லை . என்றாலும் ஓரளவுக்கு எல்லோர் மனத்திலும் ஒரு ஆறுதல் பிறந்தது. “மகாத்மா காந்திக்கு ஜே! சுந்தரமூர்த்திக்கு ஜே!” என்ற கோஷங்கள் அடிக்கடி கேட்டன!”

“நல்லவேளை! பிறகு -”

“பிறகுதான் அந்தக் கொடுமையான சம்பவம் நடந்தது. வெண்ணெய் திரண்டபோது தாழி உடைந்துவிட்டது!”

“சொல்லுங்கள், சொல்லுங்கள்! என்னதான் நடந்தது?”

“வேள்விக்கு முதல்நாள் இரவு. நடுச்சாமமிருக்கும். தொண்டர் சபையைச் சேர்ந்த நாலைந்து பேர்கள்தான் சுந்தரத்தோடு இருந்தார்கள். அவர்களுக்கும் நல்ல தூக்கம். மங் கையர்க்கரசி கூட அயர்ந்துபோய்க் கொண்டிருந்தாள். “ஹூம்” என்ற பயங்கரமான ஒரு சப்தம் கேட்டது. மங்கையர்க்கரசி திடுக்கிட்டு விழித்தெழுந்தாள்……”

“பொன்னன்! அவனுடைய சிறை முடித்து அன்றுதான் வெளிவந்திருந்தான். சுந்தரத் தின் மீது தீராத ஆத்திரம். மனித ஹிருதயத்தை நாசமாக்கிவிடும். மதுபானமும் சேர்ந் திருந்தது. மங்கையர்க்கரசி பார்த்த போது ஒரு பெரிய நொடுவாட் கத்தியை அவன் ஓங்கிக் கொண்டிருந்தான்…”

“ஐயையோ!”

“கண்ணிமைக்கும் நேரத்துக்குள் மங்கையர்க்கரசி நிலைமையைத் தெரிந்து கொண்டாள். “ஐயோ” என்று கதறிக்கொண்டே சுந்தரத்தைத் தாவி அணைத்துக் கொண் டாள். அந்தப் படுபாதகனின் கை கூசவில்லை . ஓங்கிய கையின் வேகம் சற்றும் குறையாமற் கீழே விழுந்தது….. ஒரே வெட்டுத்தான்….. தெய்வத் தன்மை பொருந்திய இந்த இரு உயிர் களையும் பலியெடுத்து விட்டது…. மங்கையர்க்கரசி நடந்த விஷயத்தைச் சொல்லிவிட்டு இறைவனடி சேர்ந்தாள். சுந்தரம் ஒரே ஒரு வார்த்தைதான் சொன்னார்: அவனை மன்னித்துவிடுங்கள்! என்றார்.

“முருகா! முருகா!! அவனை…”

“நமது அரசாங்கம் அத்தகைய நிலைமைக்கு இன்னும் வரவில்லையே! அவனுக்குத் தண்டனை கிடைத்தது. தூக்குத் தண்டனை!”

“பத்திரகாளி -”

“சுந்தரமூர்த்தி தம்பதிகளின் தியாகக்கனல், கல்லினாற் செய்த பத்திரகாளியின் இதயத் தைக் கூடத் தான் சுட்டிருக்கும்! இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, எந்த மனிதன் தான் பத்திர காளிக்குப் பலியிடத் துணிவான்?… இந்த ஒரு கோயிலில் மாத்திரமல்ல; இந்தச் சுற்றுப்புறத் திலுள்ள எல்லாக் கோவில்களிலுமே உயிர்ப் பலி செய்வதை நிறுத்தி விட்டார்கள்!…”

நண்பர் முத்தையாவின் குரல் உணர்ச்சிப் பெருக்கினால் தழதழத்து விட்டது. என் உள்ளத்தில் கூட – ஏதோ எல்லாம் விறைத்துப்போய் ஒரு சூன்ய நிலை ஏற்பட்டுவிட்டது போலிருந்தது. கைகூப்பி அந்தப் படங்களுக்கு வணக்கஞ் செலுத்தினேன்.

– மறுமலர்ச்சி சித்திரை – 1948, ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.

Print Friendly, PDF & Email

ஆதர்ச மனைவி(?)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

அச்சமில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *