வேளை வந்துவிட்டது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 5, 2022
பார்வையிட்டோர்: 5,170 
 
 

மகனுக்கு ஈமெயில் எழுத உட்கார்ந்தார் சதாசிவம். மனம் மகிழ்ச்சியாக இருந்தது. அமெரிக்காவில் சிகாகோவில் இருக்கும் மகன் அண்மையில் அடிக்கடி “வாங்க அப்பா! வந்து நாங்கள் எப்படி இருக்கோம்னு பாத்துட்டுப் போங்க. பேரப் பிள்ளைகளையும் வந்து கொஞ்சுங்க” என்று எழுதிக் கொண்டிருக்கிறான். இப்போது போவது என்று முடிவெடுத்து அமெரிக்க விசாவுக்கு மனுப்போட்டிருக்கிறார். மூன்று மாதத்திற்கு முன் மனுப்போட்டது. அதுவும் கிடைத்து விட்டது. அது விவரம்தான் எழுத வேண்டும்.

விசைப் பலகையில் தட்டினார்:

“அன்பு மகன் சுந்தரம்,

நல்ல செய்தி. செப்டம்பர் மூன்றாம் தேதி நேரில் வந்து விசா வாங்கிக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள். அன்று காலை நான் பஸ்ஸில் குவால லும்பூர் போய் அமெரிக்கத் தூதரகத்தில் விசா பெற்றுக் கொள்ளப் போகிறேன். செப்டம்பர் மத்தியில் டிக்கெட் புக் பண்ண டிரேவல் ஏஜெண்டிடம் சொல்லி வைத்திருக்கிறேன். தேதி நிச்சயமானவுடன் தெரிவிக்கிறேன். உன் மனைவிக்கும் பேரப் பிள்ளைகளுக்கும் என் அன்பைச் சொல்!

அப்பா”

“அனுப்பு” என்று சொடுக்கினார். திரையில் சிறிய சதுரம் தோன்றி அதன் நடுபட்டையில் கிடுகிடுவென்று கோடுகள் ஓடி “அனுப்பியாயிற்று” என்றது. இந்தப் பினாங்கிலிருந்து சிக்காகோ போக சில விநாடிகள்தான் ஆகும். அதிசயித்துப் பார்த்திருந்தார்.

***

கபீர் தனது மனைவிக்கு மின்னஞ்சல் எழுதினார்:

“அன்பு மனைவிக்கு,

மலேசியாவில் வேலை முடிந்தது; இந்த மாதமே புறப்படலாம் என்றுதான் இருந்தேன். ஆனால் ஒப்பந்தத்தை இன்னும் மூன்று மாதம் நீட்டித்திருக்கிறார்கள். என் வேலையில் அனைவருக்கும் மிகவும் திருப்தி. இன்னும் ஒரு மூன்றாண்டுகளுக்குக் கூட இருக்க வைப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் மலேசிய அரசாங்கம் விசா கொடுக்கமாட்டார்கள். ஆகவே இன்னும் மூன்று மாதங்கள் பொறுத்துக் கொள்.

அமெரிக்கத் தூதரகத்தில் ஒரு சிறு வேலைக்காக ஆகஸ்ட் இறுதியில் குவால லும்பூர் போகிறேன். நான் போகும் காரியம் நல்ல முறையில் நிறைவேற ஆண்டவனை வேண்டிக்கொள். பிள்ளைகளை நல்ல முறையில் பார்த்துக் கொள்.

அன்புக் கணவன்
கபீர்”

கபீருக்கு கலிஃபோர்னியாவில் இருக்கும் தனது மகன்களின் நினைவு வந்தது. ரெண்டு பேரும் இன்னேரம் பள்ளிக் கூடத்தில்தான் இருப்பார்கள். என்ன குப்பையை அங்கு கற்கிறார்களோ தெரியவில்லை. அமெரிக்கக் கல்வியும் அமெரிக்கக் கலாச்சாரமும் அவருக்கு ஓர் இம்மியும் பிடிக்கவில்லை. ஆனால் என்ன செய்வது? பிழைப்புத் தேடிப் போன நாட்டில் அப்படித்தான் ஏற்றுக் கொண்டு வாழ வேண்டியுள்ளது. வீட்டில் இருக்கும் நேரங்களில் மனைவி அவர்களுடைய கலாச்சார மேன்மைகளைச் சொல்லிக் கொடுப்பாள். இனியும் தொடர்ந்து சொல்லிக் கொடுக்க வேண்டும். பையன்கள் திசை மாறிப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கடல்துறைப் பொறியியலில் கடலுக்கடியில் கேபல்கள் போடுவது கபீரின் நிபுணத்துவம். மலேசியாவில் கடலுக்கடியில் கேபல் போடும் ஒப்பந்தம் அவருடைய அமெரிக்கக் கம்பெனிக்குக் கிடைத்திருந்தது. அதன் தொடர்பில் மலேசியக் கம்பெனிக்கு ஆலோசகராக மூன்றாண்டுகள் இருந்தாயிற்று. நல்ல ஊர். இஸ்லாமிய உன்னதப் பண்புகளைக் கொண்ட நல்ல மக்கள்.

இன்னும் பத்தாண்டுகள் இங்கே இருக்கச் சொன்னாலும் கபீர் தயார்தான். அதிலும் குடும்பத்தோடு வருவதென்றால் இன்னும் மகிழ்ச்சி. ஆனால் இந்த நாடு அதற்கு இடம் கொடுக்கவில்லை. அதற்கு மேல் ஹம்பாடியின் தொடர்பு ஏற்பட்ட பின்னர் கபீரின் உலகம் மிகவும் மாறிவிட்டது. இந்த வேலையை விட, குடும்பத்தை விட, உயிரை விட, மிக உன்னதமான விஷயங்கள் இருக்கின்றன என்பதை ஹம்பாடிதான் கற்றுக் கொடுத்து அவரைப் புது ஆளாக்கினார்.

***

சதாசிவத்துக்குத் தன்னைப் பற்றி நினைக்க மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. இதோ இந்த ஆகஸ்ட் மாதம் வந்தால் வயது எழுபதாகப் போகிறது. ஆனால் என்ன குறை? இதோ கணினி முன் உட்கார்ந்து பிசிறில்லாமல் மின்னஞ்சல் எழுத முடிகிறது. பல மணி நேரம் இணையத்தில் மருத்துவத்திலிருந்து தத்துவ விசாரணைகள் வரை தேடிப் படிக்க முடிகிறது.

தடி பிடிக்காமல் நடக்க முடிகிறது. படியேறும்போது முட்டி இலேசாக வலிக்கிறதுதான். ஆனாலும் என்ன? ஏதாவது ஒரு தைலம் எடுத்துத் தேய்த்தால் போய்விடுகிறது.

இனிப்பு நீர். அது முப்பது ஆண்டுகளாக இருக்கிறது. தொடக்கத்திலேயே தெரிந்த காரணத்தால் முற்றாகக் கட்டுப் படுத்த முடிந்தது. இந்தச் சோறு சனியனை விட்டு 20 ஆண்டுகள். ஹை ஃபைபர் ரொட்டி, சப்பாத்தி இதற்கு என்ன குறை? நல்ல கறிகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு சாப்பிட்டால் இறங்கும். வயிற்றில் தங்கிப் பசி போக்கும். எடை ஏறாது.

மனைவி இருக்கும்போது ருசியாகச் சமைத்துப் போட்டாள். கோழி, இறைச்சி என்று சாப்பிட்ட நாட்கள் உண்டு. அவள் போய் பத்து வருடம். அவள் இருக்கும்போதே இனிப்பு நீர்க் கட்டுப்பாட்டை ஆரம்பித்து விட்டாள். அவளுக்கு இனிப்பு நீர் இல்லையென்றாலும் அவர் சாப்பிடும் சாப்பாடுதான் அவளும் சாப்பிட்டாள். இன்றைக்கு நாக்கு அவள் உணவுக்கு ஊறவில்லை. ஆனால் அவள் இல்லாத தனிமை மனதைப் பிடுங்குவதுண்டு.

என்ன வாழ்கிறது? முதுமைக் காலத்தில் மனைவி பக்கத்தில் இருந்தும் சண்டையும் சச்சரவுமாகப் போகும் வாழ்க்கைக்கு இந்தத் தனிமை தேவலாம்.

ஆனால் கிழவருக்கு மரணம் பற்றிய எண்ணம் அடிக்கடி வருகிறது. மரண பயமல்ல. ஆனால் நாள் நெருங்கிவிட்டது என்பது தெளிவாகிறது. என்று என்பதும் எப்படி என்பதும் தெரியவில்லை.

ஒரு நெஞ்சடைப்பில் “ஹா” என்று மூன்று நிமிடங்களுக்குள் மூச்சுத் திணறிப் போவதுதான் உத்தமம். ஒரு நண்பர் அப்படிப் போயிருக்கிறார். இரத்தத்தில் சீனி முற்றி சிறுநீரகம் பாழடைந்து அப்புறம் இரத்தத்தில் நச்சு ஏறி சாவது சில நண்பர்களுக்கு நடந்திருக்கிறது.

பத்திரிகைகளில் மரண அறிவிப்புக்களை இப்போதெல்லாம் கவனமாகப் பார்க்கிறார். பார்க்கும்போதெல்லாம் ஒரே நாளில் சாகும் வெவ்வேறு மனிதர்களை விதி எப்படி இந்த இறுதி நாளில் சேர்த்து வைக்கிறது என அவர் வேடிக்கையாக நினைப்பதுண்டு. தான் போகும்போது தன்னோடு வரப் போகிறவர்கள் யார் யார்?

சாவு எப்படி வந்தாலும் பரவாயில்லை. பேரப் பிள்ளைகளைப் போய்ப் பார்த்துவிட்டு வந்த பிறகு எப்போது வந்தாலும் சரிதான். ஆனால் இழுத்துப் பறித்துக் கொண்டிருக்கக் கூடாது. அதுதான் முக்கியம்.

***

செப்டம்பர் முதல் வாரத்துக்குள் எல்லாம் தயாராக இருக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். தேதி மட்டும்தான் பிறகு அறிவிக்கப் படும். கபீரைப் பொருத்தவரை அனேகமாக எல்லாம் தயாராகிவிட்டன. எல்லாவற்றையும் விட குவால லும்பூர் போவதற்கு ஒரு வாரம் விடுமுறை கிடைப்பதுதான் பெரிய சிரமமாக இருந்தது.

“என்ன கபீர்? கேபல்களை முழுக்கவும் டெஸ்ட் பண்ணியாகவேண்டும். அதற்கான பொறியியல் சோதனையாளர்கள் செப்டம்பரில்தான் வேலையை ஆரம்பிக்கப் போகிறார்கள். வேலைக்கான ஃப்ளோ சார்ட் எல்லாம் போட்டாகிவிட்டது. நீங்கள் உடன் இருந்தால்தானே அதைச் செய்ய முடியும்? அந்த வேலையை முடித்துவிட்டுப் போங்களேன்!” என்றார் அவருடைய பிரிவின் இயக்குநர்.

“இல்லை ஹாஷிம். அமெரிக்க அரசாங்கத்தின் கெடுபிடிகள்தான் உங்களுக்குத் தெரியுமே. என்னுடைய இந்த மூன்று மாத வேலை நீட்டிப்பு விஷயத்தை நான் அவர்களுக்கு முறையாக எடுத்துச் சொல்லி அனுமதி வாங்க வேண்டும். இல்லாவிட்டால் பெரும் பிரச்சினையாகிவிடும். நீங்கள் கேபல் டெஸ்டை ஒரு வாரம் தள்ளி வையுங்கள். நான் வேலையை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன்!” என்றார். இதனால் ஏற்படுகின்ற அசௌகரியங்களைப் பற்றி அலுத்துக் கொண்ட இயக்குநர் வேறு வழியில்லாமல் “சரி” என்றார்.

***

இவ்வளவு தூரம் பினாங்கிலிருந்து குவால லும்பூர் போகிறோம். ஓரிரு நாள் தங்கியிருந்து வருவதுதான் நல்லது என்று சதாசிவம் நினைத்தார். நண்பர் யோகேஸ்வரன் அங்கு இருக்கிறார். அவரோடு தங்கலாம். பார்த்து மூன்று வருடங்களாகிறது. உட்கார்ந்து பழைய கதைகள் பேசலாம்.

குவால லும்பூர் எவ்வளவோ வளர்ச்சி கண்டுவிட்டது. ஓரிரு இடங்கள் சுற்றிப் பார்க்கலாம். இரட்டைக் கோபுரங்களையும் கே.எல். கோபுரத்தையும் மேலே ஏறிப் பார்க்க வேண்டும். யோகேஸ்வரன் உடன் வருவாரா என்னவோ தெரியவில்லை. ஒரு டேக்சி ஏற்பாடு செய்துகொண்டு போய் வரலாம்.

யோகேஸ்வரனுக்குப் போன் பண்ணிச் சொன்னார். அவர் மகிழ்ச்சியில் துள்ளினார். “டேக்சி எடுத்துப் போறதா? என்ன என்ன உன் மாதிரிக் கிழவன்னு நெனைச்சிட்டியா? என்னுடைய காரிலேயே போகலாம்!” என்றார்.

“சரி சரி! அப்ப நான் மூணாம் தேதி முதல் வேலையா எம்பசிக்குப் போய் விசாவை வாங்கிக்கிட்டு உன் வீட்டுக்கு வந்திர்ரேன். அப்புறம் போவோம்!” என்றார்.

“அதெல்லாம் முடியாது. நீ வேல முடிஞ்சவொண்ண எனக்கு கைத்தொலைபேசியில சொல்லிடு. நான் வந்து எம்பசி கேட்டுக்கு முன்னால உன்ன பிக் அப் பண்ணிக்கிறேன்! அங்கிருந்த வாக்கில ரெட்டைக் கோபுரம், கே.எல். கோபுரம் எல்லாம் பாத்திட்டு வீடு திரும்பிடலாம்”

அவ்வாறே முடிவாயிற்று.

***

கபீருக்கு லீவு கிடைத்து விட்டது. ஆனால் தேதி கிடைக்கவில்லை. இவ்வளவு கஷ்டப்பட்டு லீவு வாங்கி வைத்தது வீணாகப் போய்விடுமோ என்ற பயம் வந்தது. ஆனால் அவர் தொடர்பு கொண்டு கேட்க முடியாது. ஹம்பாடிதான் அவருக்குச் சொல்ல வேண்டும்.

உபகரணங்களை மீண்டும் மீண்டும் சோதனைகள் செய்து பார்த்தார். எல்லாம் சரியாகத்தான் இருந்தன. ஆனால் இதெல்லாம் இறுதி நேரத்தில் எப்படி நடக்கும் என்று சொல்ல முடியாது. எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

தொலை பேசி அடித்தது. கபீர் எடுத்துக் கேட்டார். “வேளை வந்து விட்டது கபீர்! செப்டம்பர் மூன்றாம் தேதி. தூதரகக் கேட்டுக்கு வெளியில!”

***

விசா கைக்கு வந்ததும் பாதுகாப்புக் கெடுபிடிகளை முடித்துக் கொண்டு கிழவர் வெளியே வந்தார். அடைத்து வைத்திருந்த கைத்தொலைபேசியை உயிர்ப்பித்து யோகேஸ்வரனைக் கூப்பிட்டார்.

“வேலை முடிஞ்சதா? உன்னொட அழைப்புக்குத்தான் காத்துக்கிட்டிருந்தேன். இதோ பார், என் பேரன்தான் காரோட்டி வர்ரான். புதுசா டிரைவிங் லைசன்ஸ் எடுத்திருக்கான். அந்த குஷியிலதான்! நீயும் அவன ரொம்ப நாளாப் பாக்கலியே! சரி, கேட்டுக்கு வெளியே நில்லு. 20 நிமிஷத்தில வந்திட்ரோம்!”

“சரி, இன்னைக்கு யாரோ முக்கியமானவங்க வர்ராங்க போல இருக்கு. பாதுகாப்புக் கெடுபிடியா இருக்கு. நான் கொஞ்சம் கேட்டுக்குத் தள்ளியே நிக்கிறேன். நீ வந்திடு!” என்றார்.

தூதரக கேட்டுக்கு வெளியே வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு காரணங்களுக்காக வந்தும் போயும் இருந்தனர். கேட் திறப்பதும் மூடுவதுமாக இருந்தது.

சொன்னபடி இருபது நிமிஷத்தில் யோகேஸ்வரன் வந்துவிட்டார். ஓட்டுநர் இருக்கையில் அகலச் சிரித்தவாறு பேரன். சதாசிவம் நட்புச் சிரிப்பைப் பரிமாறியவாறு காரில் ஏறி அமர்ந்தார்.

அவர் காருக்குப் பின்னால் போலீஸ் மோட்டார் சைக்கிள்கள் பாதுகாப்போடு ஏதோ ஒரு தூதுவரக எண் பொருத்திய கார் வந்து தூதரக கேட் திறக்கக் காத்திருந்தது.

அவர்களெல்லாம் அங்கு ஒன்று சேர்ந்திருந்த பொழுது கபீருடைய கார் தலைதெறிக்கும் வேகத்தில் கேட்டை நோக்கிச் சீறி வந்து கொண்டிருந்தது.

– ஜூன் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *