இரணிய வதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 2, 2022
பார்வையிட்டோர்: 5,780 
 

சின்ன கருப்பு ராஜவாய்க்கால் மதகின் மேலே உட்கார்ந்து கால்களை ஆட்டிக்கொண்டிருந்தார். கால்களுக்குக் கீழே பழைய செருப்பு. காது அறுந்த பழைய செருப்பைச் சற்றே முன்னே சாய்ந்து வலக்காலால் நகர்த்திப் போட்டுவிட்டு – பெல்ட்டில் இருந்து பொடி டப்பாவை எடுத்து இரண்டு மூக்கிலும் பொடியை ஏற்றிக் கொண்டு கையை உதறியபடி தலை நிமிர்ந்தார். ஒரு சாரைப்பாம்பு தண்ணீர் பக்கம் ஊர்ந்து சென்றது. சின்னகருப்பு மதகின் மேலே இருந்து இறங்கி இடுப்பு பெல்ட்டைத் தூக்கிவிட்டுக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தார்.

ராஜாராமன் தென்னந்தோப்பில் வருவது அரையுங் குறையுமாகத் தெரிந்தது. கொக்கு கூட்டமாகத் தலைக்கு மேலாகப் பறந்து சென்றது. அவர் அவசர அவசரமாக மதகின் மேலே தாவியேறி உட்கார்ந்தார். ராஜாராமன் முன்னே வந்து மடித்துக் கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து விட்டான்.

அவர் திரும்பி இப்போதுதான் அவனைப் பார்ப்பது போல ஒரு பார்வை பார்த்துத் தலையசைத்தார். பறந்த வேட்டிய இழுத்துப் பிடித்து, “இப்படி குந்து ராஜா” என்று மதகு சுவரில் உட்கார அவனுக்கு இடம் காட்டினார்.

“இருக்கட்டுங்க” பின்னால் நகர்ந்த அவன், “நேத்தி சாயந்தரம் வீட்டுக்குத் தேடிக்கிட்டு வந்திருந்தீங்களாம். பாப்பா சொல்லுச்சி” என்றான்.

“ஒண்ணும் விசேஷம் இல்ல. ஆக்கூர் பக்கிரிகிட்ட நரசிம்ம வேஷம் கட்டிக்கிட்டு ஆடுற புலி நெகம் இருக்கு. அதெ வாங்கிக்கிட்டு வந்தா – ஜெர்மனியில இருந்து வர்றவங்களுக்கு ஆடிக்காட்ட நல்லா இருக்குமேன்னு தோணுச்சி, அதச் சொல்லத்தான் வந்தேன். நீ வீட்டுல இல்ல.”

“நீடூரில் ஒரு சாவு”

“எங்க தாத்தா காலத்து நெகம். நீ அதெப் போட்டுக்கிட்டு ஆடினா ஜோரா இருக்கும்.”

“இப்பப் போய் வாங்கிட்டு வந்துடறேன்.”

“பொழுது சாஞ்சிடுச்சி. இருக்கறத வச்சிக்கிட்டு நாளைக்கு கூத்த நடத்திடுவோம். ஜெர்மனிக்காரவங்க வர்றதுக்கு இன்னும் நாளு இருக்கு” அவர் மதகின் மேலே இருந்து கீழே குதித்தார்.

“அதெப் போட்டுப் பழகிக் கொள்ளலாம் இல்ல.”

“ஆமாம்… ஆமாம். ஆனா, அதுக்கு அம்மாந்தூரம் போவணுமே.”

“ஒண்ணு பூட்டிக்கிட்டா – கூத்துக்கு அது நல்லா இருக்குமென்னா அதுக்காக எம்மாந்தூரம் வேணுமென்னாலும் போகலாம்.

“அசல் கூத்துக்காரன் மாதிரியே பேசற.”

அவன் அடக்கத்தோடு தலையசைத்தான்.

“பக்கிரி வீட்டில் இல்லாவிட்டா அவன் பொண்டாட்டிக் கிட்ட என் பேரச்சொல்லு.”

“சரி”

“அந்தப் புலி நெகத்தை நீ போட்டுக்கிட்டு ஆடினா ரொம்ப நல்லா இருக்கும். எனக்கு கூட அதெப் போட்டுக்கிட்டு ஆடணுமென்னு ரொம்ப ஆசை. ஆனா, அதுக்கு வேஷம் மாத்தணும்.

“இரணியந்தான் உங்க வேஷம்.”

சின்ன கருப்பு பெரிதாக ஒரு சிரிப்பு சிரித்தார். அந்தச் சிரிப்பு, செடி கொடிகளைத் தாண்டிப் புல்லில் படர்ந்து தண்ணீருக்குத் தாவி, மேலே எழுந்து நாலாப் பக்கமும் எதிரொலித்தது. பூவரசு மரத்தில் உட்கார்ந்து இருந்த நீலநிற மீன் கொத்திக் குருவி சரேலென்று தாவிப் பறந்தோடியது.

“வா” சின்ன கருப்பு அவன் தோளில் கை வைத்தார். அவர் கூடவே ஒவ்வோர் அடியாக எடுத்து வைத்துச் சென்றான்.

“நம்ம பக்கிரி நல்லாதான் ஆடிக்கிட்டு இருந்தான். ரெண்டு மூணு வருசத்துல பெரிய ஆளா வந்துடுவான்னு இருந்தேன். ஆனா, பொண்டாட்டி வந்ததும் அவகிட்ட ஆடுறதே போதுமுன்னு நின்னுட்டான்” சின்ன கருப்பு நடந்து கொண்டே எட்டி வரப்பில் வளர்ந்திருந்த துவரை செடியில் இருந்து ஒரு கிளையை முறித்தார். துவரைக் காய்களை உருவிப் போட்டுக் கொண்டு ஒரு நடை நடந்தார். நளினமும், அகங்காரமும் கொண்ட நடை – பூமியில் நடப்பது மாதிரியே இல்லை .

அந்த நடைதான் அவருக்கு அழகு. அப்புறம் அவரின் கம்பீரம். அது அவர் நடையிலும், குரலிலும், கை அசைவிலும், கண் வீச்சிலும் பளிச்சென்று ஜொலித்தது. ஒவ்வொரு கூத்திலும் இன்னும் இன்னுமொன்று பிரகாசித்துக் கொண்டு வந்தார்.

அவன் அம்மா, சின்ன கருப்பு கூத்து ஒன்றைப் பார்த்து விட்டு, “ராட்சஷன் வேஷம் அச்சா பொருந்திப் போவுது. இன்னக்கி நேத்தியா வேஷம். மூணு தலைமுறையா இல்ல.” என்றாள். அவள் சொன்னதை அவரின் ஒவ்வோர் அசைவும் மெய்ப்பித்துக் கொண்டு இருந்தது.

சின்ன கருப்புக்கு முன்னால் அவர் அப்பா இரணிய கசிபு வேஷம் கட்டிக்கொண்டு ஆடினார். அதற்கு முன்னால் அவர் அப்பா – இவன் தாத்தா – அவர்தான் முதன்முதலாக மூஞ்சியில் சாயம் பூசிக்கொண்டு இரணிய கசிபுவாக ஆடினார். அவர் ஆடும்போது இரணியனே பூமிக்கு வந்து அதம் பண்ணுவது போல இருக்கும். ஆனால், அவர் கூத்தாடி வம்சம் இல்லை . அவருக்குப் பத்துப் பன்னிரென்டு வயது இருக்கும்போது – தன் அப்பாவை ஒரு கொலை வழக்கில் போலீஸ் பிடித்துக் கொண்டு போய் தூக்கில் போட்டது. அப்பா போனதும் அம்மாவை விட்டு விட்டு உசிலம்பட்டியில் இருந்து மதுரைக்கு ஓடிவந்தார்.

தமுக்கம் மைதானத்தில் ஒரு கூத்து. முதல் வரிசையில் குந்தி இரவு முழுவதும் கூத்து பார்த்தார். பொழுது விடிந்ததும் கூத்தாடிகளுக்கு எடுபிடி வேலை செய்தார். அப்படியே அவர்களோடு ஒட்டிக்கொண்டு ஊர் ஊராகச் சுற்றினார். சின்னச் சின்ன வேஷமெல்லாம் போட்டு ஆடினார். ஆறேழு வருஷத்திற்கு அப்புறம் ஒரு பெரிய வேஷம் – இரணியன் வேஷம் – கிடைத்தது. கிடைத்ததை சட்டென்று அவர் பற்றிக் கொண்டார். கற்றதையும் கேட்டதையும் பார்த்ததையும் மனதில் இறுத்தி, பாட்டாலும் மெருகூட்டினார். அதனால் கூத்துக்கு கூட்டம் கூடியது. ஊர் முழுவதும் அவர் பேச்சாகியது.

“சின்ன கருப்பு இரணியன் ஸ்பெஷல்’ என்று மதுரைக்கு ரயில் வந்தது.

தாத்தாவிடம் காணப்பட்ட நளினமும் பாவமும் இளைய சின்ன கருப்புவிடம் அபரிமிதமாகக் குடிகொண்டு உள்ளதாக கிருஷ்ண ஐயர், ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகை வாராந்தரப் பதிப்புக்குப் படங்களோடு ஒரு கட்டுரை எழுதினார். ஆத்திரத்திலும் அதட்டலிலும் அகங்காரம் கொண்ட மனித ஆத்மாவை இளைய சின்ன கருப்பு துல்லியமாகச் சித்திரிப்பதாக எழுதியது – நாடு முழுவதுக்கும் அவரைத் தெரிந்தவர் ஆக்கியது.

அதனால் பலரும் சின்ன கருப்புவைத் தேடிக் கொண்டு வந்தார்கள். தன்னைக் காண வந்தவர்களுக்கெல்லாம் அவர் ஆடிக் காட்டினார். ஆட்டத்தில் அவருக்கு வஞ்சனையே இல்லை. ஆடு என்றால் உடனேயே ஆடுவார். அதுவும் பெண்களாக இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். அவர்கள் கண்ணசைவும், தலையசைப்பும், குறுஞ்சிரிப்புங்கூட ஆட வைத்துவிடும்.

வரப்பு சாலையில் ஏறியது. சின்னகருப்பு துவரைச் செடியை வயலில் வீசியெறிந்து விட்டுத் திரும்பினார். ராஜாராமன் கருநொச்சிக் கிளையைத் தள்ளிக் கொண்டு முன்னே சென்றான்.

“கூட நானும் வரட்டுமா ராஜா?”

“எதுக்கு? நானே போயிட்டு வந்துடுறேன்.”

“இப்பவே இருட்டிடுச்சி. போயிட்டு சீக்கிரமா வந்திடு.”

“சரி” ராஜாராமன் இலுப்பைத் தோப்பிற்குள் நுழைந்தான்.

ஒரு பஸ், புழுதியைக் கிளப்பிக்கொண்டு சென்றது. சின்னகருப்பு அவன் போவதையே பார்த்துக் கொண்டு நின்றார். இலுப்பை மரங்களுக்குள் அவன் மறைய ஆரம்பித்தான். சின்னகருப்பு தலையை அசைத்தபடி ஒரு சிரிப்புச் சிரித்தார்.

ஆக்கூர் சாலை மேட்டிலிருந்து கீழே இறங்கியது. மண் சாலை. மண்ணில் கால் புதைந்தது. கையை வீசிக் கூத்துப் பாட்டுப் பாடிக்கொண்டு ராஜாராமன் நடந்தான். நடக்கையில் கூத்துக் கற்றுக்கொள்ள ஆரம்பித்து ஆறேழு வருஷம் இருக்குமா என்று கேட்டுக் கொண்டான். இருக்கும் போலத்தான் பட்டது.

பர்கூரில் சின்ன கருப்பு இரணியன் வேஷம் புனைந் தாடியதை அத்தை வீட்டிற்குச் சென்றிருந்த அவன் முதன் முதலாகப் பார்த்தான். கூத்து ஆசை மனதில் பற்றிக்கொண்டது.

அப்புறம் ஒரு வருஷம் கழித்து ஒரு கூத்து. அரசூரில் பார்த்தான். அதுவும் சின்னகருப்பு கூத்துத்தான். விடிய விடிய நடந்தது. அவன் கண் மூடாமல் பார்த்தான். கூத்து கற்றுக் கொள்ள வேண்டுமென்று துளிர்த்த ஆசை விருட்சமாகியது. எப்படியாவது சின்னகருப்புவை மடக்கிப் பிடிக்க வேண்டுமென்று ஐந்தாறு நாள்கள் யோசித்தப்படியே இருந்தான்.

ஒரு மாலைப்பொழுது, ராஜ வாய்க்கால் மதகுமேல் சின்ன கருப்பு குத்துக்கால் வைத்துக் குந்தியிருந்தார். அவன் வாய்க்காலில் முகம் அலம்பிக்கொண்டு எதிரே போய் நின்றான்.

“ஆரு? என்ன வேணும்?”

“உங்ககிட்ட கூத்து கத்தக்கணும்.”

அவர் பார்வையில் இவன் மேல் ஆச்சரியமாக இறங்கியது.

“நீ உக்கடை தேவர் வீட்டுப் பையன் இல்ல?”

ராஜாராமன் தலையசைத்தான்.

“கூத்தெல்லாம் உனக்கு சரிப்பட்டுவருமா?”

“வரும்”

“வருமா? எப்படிச் சொல்லுற?”

“ஆசையாயிருக்கு.”

சின்னகருப்பு மதகு மேலிருந்து கீழே குதித்தார். அவன் தோள்மீது கைவைத்து இரண்டு முறை தட்டிக் கொடுத்தார்.

“அது சரி, நாளைக்கு மாந்தோப்புக்கு வா. கூத்து ஆரம்பிச்சிடலாம்.”

அடுத்த நாள் அவன் மாந்தோப்பிற்குச் சென்றான். பூத்திருந்த மாமரத்தின் கீழே ஐந்தாறு பையன்கள் கூத்தாடிக் கொண்டிருந் தார்கள். அவன் ஒரு பக்கமாக ஒதுங்கி நின்றான்.

சின்ன கருப்பு பொடியை உறிஞ்சிக் கொண்டு வந்தார். பையன்களில் கூத்து நின்றது. அவனைக் கையை நீட்டி முன்னே கூப்பிட்டார். பக்கத்தில் உட்கார வைத்துக் கதையைச் சொன்னார். சொல்லிக்கொண்டே வந்தவர் திடீரென்று எழுந்து ஆடினார் – இரணியனாகவும், பிரகலாதனாகவும் – நரசிம்மராகவும். அவன் மண்டியிட்டு உட்கார்ந்து அவரின் ஒவ்வொர் அசைவையும் மனதில் இருத்திக் கொண்டான். ஆடி முடிந்ததும் அவன் அருகில் வந்து நின்று “பார்த்துக்கிட்டியா?” என்று கேட்டார். அவன் தலையசைத்தான்.

“எங்க நீ ஆடு… நான்தான் இரணியன். நீதான் நரசிம்மம் என்னப் பிடிச்சி மடியிலே போட்டு நெஞ்சைக் கிழிச்சிக் கொல்லுற… உம்… ஆடு.”

ராஜாராமன் வேட்டியை மடித்துக் கட்டிகொண்டு காலை எடுத்து வைத்து ஆடினான். கொஞ்ச நேரத்தின்பிறகு கண்டது எல்லாம் மறந்து போய்விட்டது. கால் முன்னே போகவில்லை. ஏதோ கட்டிப் போட்டது மாதிரி சிக்கிக் கொண்டது. திகைத்து நிற்பதைக் கண்டு ஒரு பையன் களுக்கென்று சிரித்தான்.

சின்னகருப்பு சிரிப்பு வந்த திக்கைத் திரும்பிப் பார்த்தார். ஒரு பையன் சிரித்துக்கொண்டே இருந்தான். கையை நீட்டி அவனைக் கூப்பிட்டார். சந்தோஷமாக அவர் முன்னே வந்தான். கன்னத்தில் பளீரென்று ஓர் அறை விழுந்தது. அவன் ‘ஜயோ’ என்று கத்தினான். அது தனக்கே வலிப்பது மாதிரி இருந்தது.

ராஜாராமன் திரும்பி சின்ன கருப்பை ஒருபார்வை பார்த்தான்.

“நீ பயப்படாம ஆடு” என்றார் வாஞ்சையுடன்.

அவன் பயந்துகொண்டே ஆடினான். கண்டதையும் கேட்டதையும் கால்களில் வழியாகவும், கண்களின் மூலமாகவும் காட்சிப்படுத்தினான்.

“பலே.. பலே… நீ தேறிட்ட” சின்னகருப்பு எழுந்து வந்து அவன் தோளில் தட்டிக் கொடுத்தார்.

மூன்று மாதங்கள் சென்றதும் சின்ன கருப்பு பழைய நரசிம்மத்தைக் கழித்துக் கட்டி விட்டு அந்த இடத்தில் ராஜாராமனைப் போட்டார். தைரியமான சோதனைதான். ஆனால் அவன் அதில் பிரமாதமாக ஜொலித்தான்.

‘புதிய நரசிம்மத்தின் வரவால் இரணிய கசிபு நாடகம் புது மெருகும் புத்துயிரும் பெற்றது! என மைதிலி ஐயங்கார் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஞாயிறு இதழில் குறிப்பிட்டு எழுதினார். கூடவே கலர் கலரான படங்கள். ஏழு படங்களில் இரண்டு படத்தை வெட்டி எடுத்து ராஜாராமன் மனைவி சுவரில் ஒட்டி இருந்தாள். கல்யாணமான புதிது. அவன் மாப்பிள்ளையாக இல்லாமல் – வெள்ளை தாடியும் மீசையுமாக – சிங்க மூஞ்சியோடு கோரமாக இளித்துக் கொண்டு இருந்தான்.

“பயமா இல்லை?” படுக்கைக்கு எதிரே இருந்த படத்தைப் பார்த்துக்கொண்டே கேட்டான்.

அவள் தலையசைத்து சிரித்தாள்.

“நிஜமா?”

அவள் படுக்கையில் இருந்து எழுந்து அவனைக் கட்டியணைத்துக் கொண்டாள். அவனுக்கு மூச்சுத் திணறுவது மாதிரி இருந்தது. அவள் பிடி இன்னும் இன்னமென்று இறுகியது. தன் முழுபலத்தையும் கொண்டு அவளைக் கீழே உருட்டித் தள்ளினான். அவள் எழுந்து நின்று ஒரு சிரிப்பு சிரித்தாள்.

“இன்னம கூத்துக்குப் போக வேணாம்.”

“ஏன்?”

“போக வேணாம்.”

“சரி”

ஆனால் அவன் சின்னகருப்போடு ஊர் ஊராகச் சென்றான் ஒவ்வோர் ஊரிலும் மெச்சும்படியாக ஆடினான். சன்மானம், பூமாலை சால்வையெல்லாம் கிடைத்தன.

ராஜாராமன் ஆக்கூர் பக்கிரியிடம் இருந்து புலி நகத்தை வாங்கிக்கொண்டு காவேரி ஆற்றுப் பாலத்தைத் தாண்டி ஊருக்கு வந்தான். தலைக்கு மேலே நிலவு வந்துவிட்டது. ரொம்ப நேரம் ஆகிவிட்டதை உணர்ந்தான். வேகமாக நடந்து வீடு வந்தான். வீட்டுக்கதவைத் தட்டினான்.

“யார் அது?” இரண்டு முறை அவன் மனைவி கேட்டாள். அவனுக்கு அது வழக்கம் இல்லாத பழக்கமாகக் கேட்டது.

“நான்தான்” என்றான்.

அவள் விளக்கைத் தூண்டி விட்டுவிட்டு வந்து கதவைத் திறந்தாள். அவளை நிமிர்ந்து பார்த்தான். முகம் தெரியவில்லை. தலையை அவிழ்த்தபடி இருந்தாள். அவள் கையைப் பிடித்து அழைத்துப் போய் கட்டிலில் உட்கார்ந்து நிமிர்ந்து பார்த்தான். முகம் வீங்கி இருந்தது. நெடு நேரமாக அழுது கொண்டிருப்பது போல பட்டது.

“பாப்பா” அவள் தோளைப் பற்றினான். அவனைக் கட்டியணைத்துக் கொண்டு சப்தம் இல்லாமல் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

“பாப்பா…என்ன சொல்லு?”

அவள் நிமிர்ந்து அவனை ஒரு பார்வை பார்த்தாள்.

“சொல்லு பாப்பா… இன்னக்கியும் வந்தானா?”

அவள் தலையசைந்தது.

“அதுக்குத்தான் ஆக்கூருக்கு அனுப்பி இருக்கான்” அவனை அடிப்பது போல கைகளைக் காற்றில் வீசினான். அவள் முன்னே நகர்ந்த அவன் தோளைப் பற்றினான். தோளில் தலை சாய்த்து அழ ஆரம்பித்தாள். வெகு நேரம் வரையில் அவள் அழுகை ஓயவே இல்லை. அவள் முதுகில் மெல்ல மெல்லத் தட்டிக்கொடுத்தான். அழுது ஓய்ந்து தூங்கிப் போனதும் அவளைக் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு எழுந்து நின்றான்.

கை இடுப்பு வேட்டியைத் தடவியது. முடிச்சில் புலி நகங்கள். இரண்டு புலி நகங்களை எடுத்துக்கொண்டு லாந்தர் விளக்கைத் தூண்டி விட்டான். வெளிச்சம் எங்கும் பரவியது. பாப்பா புரண்டு படுத்தாள். அவசர அவசரமாகத் திரியை இறக்கி வெளிச்சத்தைக் குறைத்தான். அவள் கால்களை நீட்டிப் படுத்தாள்.

அவன் விளக்கை எடுத்துக்கொண்டு கொல்லைப்பக்கம் சென்றான். கள்ளிப் பெட்டியைக் கீழே சாய்த்து ஓர் அரத்தைக் கையில் எடுத்தான். விரலால் தடவிப் பார்த்தான். சுணை இருப்பது மாதிரிதான் இருந்தது. மடியில் இருந்த – புலி நகத்தைக் கையில் மாட்டிக்கொண்டு கண்களுக்கு நேரே வைத்துப் பார்த்தான். விளக்கு வெளிச்சத்தில் இரும்பு நகத்தின் கூர் பளிச்சென்று மின்னியது.

“ஆஹா… ஆஹா…” பயங்கரமாகச் சிரித்துக்கொண்டு அவன் இரண்டு கைகளையும் மாறி மாறிக் காற்றில் வீசினான்.

“என்ன, என்ன ஆச்சுங்க?” அவன் மனைவி கேட்டாள்.

அவன் அவளை ஒரு பார்வை பார்த்தான். கீழே சாய்ந்தது. புலி நகங்களில் இரண்டு கீழே விழுந்தன. கைகளிலும் கண்களிலும் ஏறி இருந்த கோபம் இறங்குவது மாதிரி இருந்தது. அவன் கையைப் பற்றி இழுத்து வந்து கட்டிலில் உட்கார வைத்தாள். எண்ணெய் இல்லாத விளக்கு மங்கி அணைந்தது. அவனைக் கட்டியணைத்துக் கொண்டு பாப்பா படுக்கையில் சாய்ந்தாள்.

அடுத்த நாள், வெள்ளிக் கிழமை பொழுது புலர்ந்தது. அவன் எழுந்து குளித்துவிட்டு வெளியில் சென்றான். அவள் சமைத்து வைத்துவிட்டு காத்துக்கொண்டு இருந்தாள். வெகுநேரங் கழித்துச் சாப்பிட வந்தான். சாப்பிடும்போது “ராத்திரிக்கி கூத்துப் பார்க்க வர்ற” என்றான். அவள் ஆச்சரியப்பட்டாள். சாதாரணமாகக் கூத்துப் பார்க்கக் கூப்பிடும் ஆள் இல்லை அவன்.

கல்யாணமாகியதில் இருந்து இரண்டு கூத்தோ மூன்று கூத்தோதான் பார்த்திருக்கிறாள்.

கூத்து சப்தம் காதில் விழுந்த பிறகு அவள் பக்கத்து வீட்டு அஞ்சலையைக் கூப்பிட்டுக்கொண்டு மாரியம்மன் கோயில் பக்கம் சென்றாள். பெரிய கூட்டம். முன் வரிசையில் இரண்டு வெள்ளைக் காரப் பெண்கள் போட்டோ பிடித்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தார்கள். ஒரு தாடிக்காரன் நின்று கொண்டிருந்தான். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் விழிப்பிலும் தூக்கத்திலுமாய்க் கூத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவள் மாமரத்துக்குப் பின்னால் மறைந்தும் மறையாமலும் உட்கார்ந்தான்.

சின்னகருப்பு சலங்கை கட்டிய கால்களைத் தரையில் உதைத்து ஜில் ஜில் என்று சப்தம் எழுப்பியபடி வந்து திடீரென்று நின்றார். பார்வை இப்படியும் அப்படியும் அலைபாய்ந்தது. முகத்தில் ஆணவம். கண்களில் கர்வம். இகழ்ச்சியாக ஒரு சிரிப்புச் சிரித்தபடி இந்தக் கோடியில் இருந்து அந்தக் கோடிக்கும் – அந்தக் கோடியில் இருந்து இந்தக் கோடிக்கும் மாறி மாறி ஓடியவர், சட்டென்று பிரகலாதன் முன்னே நின்றார். பெரிய மீசையைத் திருகியபடி, “உன் ஹரியானவர் இந்தத் தூணில் இருக்கின்றாரா?”, என்று ராகம் போட்டு இழுத்தார்.

“ஆமாம்… இந்தத் தூணில் இருக்கிறார்.”

“இந்தத் தூணில்?” துள்ளிப் பாய்ந்து மேலே எழுப்பிக் கீழே குதித்தார்.

“இந்தத் தூணிலும் இருக்கிறார்.”

கால் சலங்கை சப்தமிட ஓர் ஓட்டம் ஓடி நின்றார்.

“இதில். இந்தத் தூணில்….?”

“என் ஹரியானவர் இந்தத் தூணிலும், துரும்பிலுங்கூட இருக்கிறார்.”

சின்னகருப்பு எகத்தாளமாக ஒரு சிரிப்புச் சிரித்து கூட்டத்தை ஒரு பார்வை பார்த்தார். பாப்பா பார்வையில் தட்டுப்பட்டாள். இன்னும் ஓர் அடியெடுத்து வைத்தார். அவள் புடைவையை இழுத்துப் போர்த்திக்கொண்டு மாமரத்தில் மறைந்தாள். ஆனால் அவர் மனதில் முழுமையாக நிறைந்திருந்தாள். அவள் தனக்காகவே கூத்துப் பார்க்க வந்திருப்பது மாதிரி பட்டது. குதூகலமும் பெருமிதமும் கொண்டார்.

தலையைச் சொடுக்கிச் சொடுக்கி எட்ட எட்டக் கால் வைத்து ராஜநடை போட்டு, “இந்தத் தூணிலுமா?” என்று கேட்டு எட்டி ஓர் உதைவிட்டார்.

சலங்கையும், மத்தளமும், ஹார்மோனியமும் சேர்ந் தொலித்தன. தூணுக்குப் பின்னால் இருந்து வெண் மயிரும் சிங்க முகமும் புலி நகத்தோடு நரசிம்மம் வெளிப்பட்டது. விசித்திரமான உருவத்தை இரணியன் ஒரு பார்வை பார்த்தார். கோரமாகச் சிரித்துக்கொண்டு நரசிம்மம் எட்டி அவர் நெஞ்சில் ஓர் அடி அடித்தது. பழக்கமில்லாத அடி தாங்க முடியவில்லை . இரணியன் தடுமாறிக் கீழே விழுந்தான்.

ஒரு பெரிய நாற்காலி வந்தது. நரசிம்மம் கீழே கிடந்த இரணியனைத் தூக்கிக் கொண்டு நாற்காலியில் உட்கார்ந்தது. கால்களைப் பரப்பி மடியில் போட்டுக் கொண்டு தலையைச் சிலுப்பி நெஞ்சில் இரண்டு அடி அடித்தது.

“ஐயோ” – இரணியன் அலறினான்.

நரசிம்மம் ஒரு சிரிப்பு சிரித்தது. அந்தச் சிரிப்பும் கொடுத்த அடியும் புதுசாக இருந்தது.

இரணியன் திமிறினான். மேலும் இரண்டு அடி விழுந்தது.

கூத்துப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் பயந்து மௌனம் காத்தது. மாறி மாறி விழுந்த அடியைத் தாங்க முடியாமல் இரணியன் பெரிதாகக் கத்த ஆரம்பித்தான்.

நரசிம்மம் தலையைக் குலுக்கிப் பல்லை இளித்தது. போலிப் பல்லும் பொய் முகமும் இரணியனை அச்சம் கொள்ள வைத்தன.

“அற்பப் பதரே… அக்ரமமா புரியறே?” நரசிம்மம் அவன் நெஞ்சில் அடித்து மார்பில் இருந்த துணிகளைக் கிழித்து நாலாப்பக்கமும் வீசியது. இரணியன் திமிறினான். “உம்” நெஞ்சில் இன்னோர் அடி விழுந்தது. இரத்தமும் சதையும் புலி நகத்தில் சிக்கியது. இரணியன் காலைப் படபடவென்று உதறினான்.

ஆனால், நரசிம்மம் விடவில்லை. ஒரு காலை மேலே தூக்கிப் போட்டு அமுக்கி இரண்டு கை புலி நகத்தாலும் இரணியன் மார்பைக் கிழித்து இரத்தத்தையும் சதையையும் நாலாப்பக்கமும வாரி இறைத்தது.

“ஐயோ…. ஐயோ…” இரணியன் அலறினான். அவன் அலற அலறக் கூட்டம் பின்னே இருந்து முன்னே வந்தது.

துடியாய்த் துடித்த இரணியன் கையும் காலும் நின்றது. உயிரற்ற உடலைக் கீழே தள்ளிவிட்டு நரசிம்மம் எழுந்து நின்றது. தலையைச் சிலுப்பிக் கொண்டு கூட்டத்தை நோட்டமிட்டது. புலி நகத்தில் இருந்து இரத்தம் கொட்டியது.

பாப்பா கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு முன்னே வந்தாள். அவள் முகத்தில் எல்லையற்ற சந்தோஷம். அவளைக் கண்டதும் நரசிம்மம் குதூகலம் கொண்டது. தாடியையும் மீசையையும் பிடுங்கிப் போட்டுக்கொண்டு “அவனை அதம் பண்ணிட்டேன்” என்று கூட்டத்தில் இறங்கியது.

அவள் இன்னும் இன்னுமென்று சந்தோஷத்தோடு முன்னே வந்து கொண்டிருந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *