கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: சாவி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 17, 2023
பார்வையிட்டோர்: 7,857 
 
 

(1990ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 17-18 | அத்தியாயம் 19-20 | அத்தியாயம் 21-22

அத்தியாயம்-19

ஊர் ஓரத்து தென்னந் தோப்பில் மஞ்சு ‘கவாத்து’ பழகிக்கொண்டிருந்தபோது மூர்த்தி அங்கே போய் நின்றான். 

”உனக்கெப்படி தெரிந்தது இந்த இடம். யார் சொன்னாங்க?” என்று கேட்டாள் மஞ்சு. 

“உங்க அப்பாதான் சொன்னார்?” என்றான் மூர்த்தி. 

”அந்த சர்க்கஸ் ஆள் உன்னை ‘குத்தப் போறேன், வெட்டப் போறேன்’னு சொல்லிட்டிருக்கானே !” 

”யார் அந்த கேரளாக்காரனா? அவனுக்கு என் மேல என்ன கோபம்?” 

”பொறாமைதான்; நீ என்னோட அன்பாப் பேசறது, பழகறது, என் குடும்பத்துல ஒருத்தன் மாதிரி நடந்துக்கறதெல்லாம் அவனுக்குப் பிடிக்கலே!” 

“ஏன்?” 

“என்னைக் கட்டிக்கற உரிமை அவனுக்குத்தான் இருக்காம். அவனும் எங்களைப் போல குஜராத்லேந்து வந்தவனாம்!” 

”அட! நீ குஜராத்திப் பெண்ணா! சொல்லவே இல்லையே!” 

“நாங்க மொத்தம் அஞ்சு குடும்பம். ரெண்டு தலைமுறைக்கு முன்னால தஞ்சாவூர்லதான் குடியேறினோம். கழைக்கூத்துதான் எங்க தொழில். உறவுவிட்டுப் போகாம எங்களுக்குள்ளயே கல்யாணம் செஞ்சுக்குவம். 

” ‘அந்தக் குடுமிக்காரப் பையனோட உனக்கென்ன சிநேகம்? உனக்கும் அவனுக்கும் என்ன உறவு?’ன்னு சண்டை போடறான். என்னை சர்க்கஸ்ல சேரச் சொல்லி ஒத்தக் கால்ல நிக்கறான்!” 

”சரி; நீ என்ன செய்யப் போறே?” 

“எனக்கு அவனைப் பிடிக்கலே.” 

“அழகாத்தானே இருக்கான்?” 

“அழகு இருந்துட்டாப் போதுமா? மனசுல அழுக்கா இருக்கானே!” 

“அவனை நீ கல்யாணம் செஞ்சிண்டா அப்புறம் நல்லவனாயிடுவான்!” 

மூர்த்தியிடமிருந்து இம்மாதிரி ஒரு பதிலை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. துக்கம் தொண்டையை அடைக்க, “இதுக்குத்தான் இத்தனை நாளும் உன்னோட அன்பாப் பழகினேனா? உன் மேல நான் உயிரையே வெச்சிருந்ததுக்கு இதுதான் முடிவா?” என்று கேட்டாள். 

”நம்ம நட்புக்கு முடிவு கல்யாணமாத்தான் இருக்கணும்னு நான் நினைக்கலே. நீ குஜராத்திப் பெண். நான் பிராம்மணன். எனக்கு வேதம்தான் முக்கியம். ஏதோ வெளியே சொல்லிக்க முடியாத நிர்ப்பந்தத்துல நான் இருந்த ஊரைவிட்டு வரவேண்டியதாப் போச்சு. வந்த இடத்துல எதேச்சையா சந்திச்சோம். அன்பாப் பழகினோம். இப்ப என் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டிருக்கு. கிட்டப்பா புண்ணியத்தாலே மறுபடியும் எனக்கு வேதம் ஓதற வாய்ப்பு கிடைச்சிருக்கு.”

“நீ வேதத்தை தொடர்ந்து ஓணுங்கறதுதான் என்னுடைய ஆசையும். அதுக்கு நான் இடைஞ்சலாயிருக்க விரும்பலே. எங்க அப்பாவுக்கப்புறம் எனக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லயே; உன்னைக் கலியாணம் செஞ்சுட்டா என் வாழ்க்கை நிம்மதியாயிடும்னு நினைச்சேன். பரவாயில்லை; என் சுய நலத்துக்காக உன் எதிர்காலத்தைப் பாழடிக்கறது நியாயமாப் படலே. நீ வேதம் படிச்சுப் பெரியவனா ஆகணுங்கறதுதான் என் ஆசையும்.” 

”நீ அப்படியும் பேசற ; இப்படியும் பேசறே! ஏன், எதனாலன்னு புரியலை. ஆச்சரியமாயிருக்கு.”

“இப்ப என் உடம்பிலே உன் ரத்தமும் சேர்ந்து ஓடுதே! ஒரு வேளை அதனால இருக்குமோ, என்னவோ?” 

“அப்படின்னா நீ?…” 

“எனக்கு ஒண்ணும் புரியலே. என்ன செய்யறதுன்னும் தெரியலே.” 

“பயப்படாதே! அந்த சர்க்கஸ்காரனை நல்லவனா மாத்திடலாம். நீயும் சர்க்கஸ்ல சேர்ந்துடு. இது வரைக்கும் அவனுக்கு லைசன்ஸே கொடுக்கலையாம். கிட்டப்பாதான் லைஸன்ஸ் கொடுக்கணுமாம். அவரே சொன்னார். அவர்தான் இந்த ஊர் முனிசபல் சேர்மனாம். மழை இல்லாம பயிர் பச்சை யெல்லாம் வாடி ஜனங்க ரொம்ப கஷ்டப்படறாங்களே, இந்த சமயத்துல சர்க்கஸுக்கு அனுமதி கொடுத்தா ஜனங்ககிட்ட இருக்கிற கொஞ்சநஞ்சம் காசும் போயிடுமேன்னு யோசிக்கிறாராம்”. 

“அப்படியா? லைஸன்ஸ் கொடுக்கலேன்னா அந்த ஆள் தாக்குப்பிடிக்க முடியாம ஊரைவிட்டே ஓடிடுவான்!” 

“சே, பாவம்! சர்க்கஸ் மிருகங்களெல்லாம் பட்டினி கிடந்து செத்துப் போயிடுமே! அத்தனைக்கும் தீனி போட பணத்துக்கு எங்க போவான்?” என்று பரிதாபப்பட்டான் மூர்த்தி. 

”உன்னை என்னால புரிஞ்சுக்கவே முடியலே, மூர்த்தி! அந்த ஆள் உனக்குக் கெடுதல் நினைக்கிறான். நீயானா அவனுக்கு நல்லது நினைக்கிறே!” 

”நமக்கு இன்னொருத்தர் தீங்கு நினைச்சாலும் நாம அவங்களுக்கு நல்லதுதான் செய்யணும். அப்படி செய்யலேன்னா குறள் படிச்சு என்ன பிரயோஜனம்? சேர்மனிடம் பேசி எப்படியும் லைஸன்ஸ் வாங்கிக் கொடுக்கப் போறேன். அந்த சர்க்கஸ் ஆளை கிட்டப்பா வீட்டுக்கு இப்பவே வரச் சொல்லு. நான் அங்கயே அவனுக்காக காத்துண்டிருப்பேன்” என்றான். 

இந்தச் சமயம் அருகிலிருந்த வைக்கோல் போரிலிருந்து வந்த பாம்பைக் கண்டு பதறிப் போன மஞ்சு ”ஐயோ’ என்று அலறினாள். பெரிய கல் ஒன்றை எடுத்து அதன் மீது எறியப் போனாள். 

”வேணாம். பாம்பை அடிக்காதே, அது பாவம்!” என்று தடுத்தான் மூர்த்தி. 

“சும்மாவிட்டா, அப்புறம் அது நம்மையே கடிக்கும்…”

“கடிச்சா நான் மந்திரம் போட்டு விஷத்தை இறக்கிடறேன். கனபாடிகள் எனக்கு கத்துக் கொடுத்திருக்கார்…”

“இந்த மூர்த்தி ஏன் இவ்வளவு நல்லவனாயிருக்கார்! கடிக்க வர பாம்பை அடிக்கக் கூடாது என்கிறார். கொல்ல வர ஆளுக்கு நல்லது செய்யப் போறேங்கறார். என்னால இவரைப் புரிஞ்சுக்கவே முடியலே!” என்று மனதுக்குள் வியந்தாள். மஞ்சுவின் உள்ளத்தில் மூர்த்தி விசுவரூபமாய் உயர்ந்து நின்றான். 


மூர்த்தி எதிரில் வந்து நின்றதைக்கூட கவனிக்காமல் கிட்டப்பா சுதேசமித்திரனில் மூழ்கியிருந்தார். ஒருமுறை கனைத்து தான் வந்திருப்பதை சூசகமாகக் காட்டிக்கொண்டான் மூர்த்தி. 

“அட, நீயா வா” என்றவர் “பேப்பர்ல பாத்தயா? பஞ்சம் வந்தாலும் வரும்னு போட்டிருக்கான். இப்படி மழையே இல்லாமப்போனா அப்புறம் ஜனங்க ரொம்பக் கஷ்டப்படுவா. கனபாடிகளை அழைச்சுண்டு வந்து விராடபர்வம் வாசிக்கச் சொல்லலாமான்னு யோசிக்கிறேன்” என்றார் கிட்டப்பா. 

”அவருக்கு உடம்பே சரியில்லையே. உள்ளூர்லயே விராட பர்வம் வரசிக்கணும்னு ஊரார் வந்து கேட்டுண்டாளாம்; முடியாதுன்னு சொல்லிட்டாராம். பாகீரதி சொன்னாள்” என்றான் மூர்த்தி. 

”பாவம், இந்த வயசான காலத்துல பாகீரதி விசாரமே பாதி அவருக்கு!” என்றார் கிட்டப்பா. 

“உங்க கிட்ட. ஒரு சின்ன உதவி…” 

“முதல் முதல் உதவி கேக்கறே, பெரிய உதவியாத்தான் கேளேன்!” என்றார் கிட்டப்பா. 

“இதுவே பெரிய உதவிதான். சர்க்கஸுக்கு லைஸன்ஸ் இல்லேன்னு சொல்லிட்டேளாம். பாவம், யானை சிங்கமெல்லாம் பட்டினியாக் கிடக்கறதாம். தீனி வாங்கிப் போட பணமில்லாம திண்டாடறானாம் அந்த சர்க்கஸ் ஆள். நீங்கதான் காபபாத்தணும் அவனை” என்றான் மூர்த்தி. 

“என்ன சொல்ற நீ! அந்த துஷ்டனுக்கா உதவி பண்ணச் சொல்றே?” 

“இப்ப நீங்க உதவி பண்ணலேன்னா அத்தனை பேரும் பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான். சர்க்கஸ் கூடாரயே காத்துல பறந்திண்டிருக்கு!” என்றான். 

”அதோ, அவனே வரான் போலிருக்கே!” என்றார் கிட்டப்பா. வந்தவன், ”ஐயா என்னைக் காப்பாத்துங்க” என்று உணர்ச்சிவசமாகச் சொல்லிவிட்டு கிட்டப்பாவின் காலில் விழுந்தான். 

“முதல்ல இவர் காலில் விழு. அப்புறம்தான் மற்ற தெல்லாம்…” என்றார் கிட்டப்பா. 

“தவறா நினைச்சு கோவத்துல ஏதேதோ பேசிட்டேன். எவ்வளவு நல்லவர்னு இப்பத்தான் தெரியுது. என்னை மன்னிச்சுடுங்க மூர்த்தி!” என்று மூர்த்தியின் காலில் விழப் போனான். 

“வேணாம், வேணாம், பெரியவருக்குப் பண்ணாப் போதும்” என்று ஒதுங்கி நின்றான் மூர்த்தி. 

”உன் பேர் என்னப்பா சொன்னே?” என்று கேட்டார் கிட்டப்பா. 

“துக்காராம்…” என்றான். 

”அவர் ரொம்ப சாதுவாச்சே! அவர் பேரை வெச்சுண்டு நீ நேர்மாறா நடந்துக்கறயே!” என்றார் கிட்டப்பா.

அவன் தலைகுனிந்து வெட்கப்பட்டான். 

“இனிமே குடிக்கமாட்டயே?” 

“சத்தியமா குடிக்கமாட்டேங்க” என்றான். 

”சத்தியத்தை மீறிக் குடிச்சயானா தொலைச்சுப்புடுவேன், ஜாக்கிரதை! ஒரு நல்ல நாளாப் பார்த்து சர்க்கஸை ஆரம்பிச்சுடு. டிக்கட் ரேட்டைக் குறைச்சு வை. லைஸன்ஸ் தரச் சொல்றேன்” என்று சொல்லி அனுப்பினார் கிட்டா. 

அந்த மகிழ்ச்சியில் அவன் எதுவும் பேசத் தோன்றாமல் வாயடைத்து நின்றான். 

”இன்னும் ஏன் நிக்கறே? புறப்படு” என்றார் கிட்டப்பா.

”உங்க உதவிக்கு நான் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலே. என் நன்றிக்கு அடையாளமா ஏதாவது…” 

“என்ன செய்யப்போறே?” 

“ஒரு யானையே வேணுமானாலும் கொடுத்துடறேங்க.” 

”ஏன்? அதைக் கட்டித் தீனிபோட முடியலையோ? என் தலைல கட்டிடலாம்னு பாக்கறயா! வேணாம்; நன்றி மனசுல இருந்தாப் போதும். முக்கியமா மூர்த்திக்குத்தான் நீ நன்றி செலுத்தணும்.மூர்த்திகிட்ட மரியாதையா நடந்துக்க. அது போதும்” என்றார். 

“அடுத்த ஞாயிற்றுக்கிழமையே ஆரம்பிச்சுடறேன். நீங்க ரெண்டு பேரும்தான் வந்து தொடங்கி வைக்கணும்!” குரலில் மகிழ்ச்சி பொங்கக் கூறிக்கொண்டே கையெடுத்துக் கும்பிட்டான் துக்காராம். 

அத்தியாயம்-20

காலையிலிருந்து பாகீரதிக்கு அத்தையின் ஞாபகமாகவே இருந்தது. 

”அத்தைக்குத்தான் என் பேர்ல எத்தனை அன்பு ஊருலேந்து அக்கறையா தாழம்பூ கொண்டு வந்து தலைபின்னி அழகு பார்த்தாளே! அந்தத் துணிச்சலும், அப்பாவை எதிர்த்துப் பேசிச் சமாளிக்கிற தைரியமும் வேறு யாருக்கு வரும்? 

”அத்தை இன்னொரு முறை அந்த மாதிரி எனக்குத் தலைபின்னி விட மாட்டாளா? மூர்த்தி எதேச்சையா வந்து என் அலங்காரத்தைப் பார்த்து ரசிக்கமாட்டானா?” என்று உள்ளுக்குள் கொழுந்துவிட்டிருந்த ஆசைக்குக் கற்பனை வடிவம் கொடுத்துப் பார்த்தாள். 

சமையல் கட்டிலிருந்து, நெய் வாசனையும் தாளிப்பு நெடியும் வீடு முழுதும் கமகமத்தது. ராவ்ஜி சமையல்! 

கனபாடிகள் “ராமா!” என்று அணில் பிள்ளையைப் பால் குடிக்க அழைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த கிட்டா “காஞ்சீபுரம் சம்பந்தி யாத்துக்காரா உங்களுக்கு அரும்பாக்கம் லேகியம் கொடுத்தனுப்பிருக்கா. தலை சுத்தல், தள்ளாமை எல்லாம் போயிடுமாம்!” என்றான். 

“அரும்பாக்கம் வைத்தியருக்கே இப்ப என் வயசு ஆயிருக்குமே!” என்று சொல்லிக் கொண்டே டப்பாவைத் திறந்து கொஞ்சம் லேகியம் உருட்டிச் சாப்பிட்டார். 

“நான் இல்லாதப்ப மூர்த்தி வந்திருந்தானாமே?” கிட்டா கேட்டான். 

“ஆமாம்; சமையல் ராவ்ஜியை அழைச்சுண்டு வந்தான். உங்க மாமா கிட்டப்பா லெட்டர் கொடுத்தனுப்பிருந்தார். கௌரி மூர்த்தியை தத்தெடுத்துக்க ஆசைப்படறளாம். என் அபிப்ராயம் என்னன்னு கேட்டிருந்தார். எனக்குப் பூர்ண சம்மதம்னு பதில் எழுதி மூர்த்தியிடமே கொடுத்தனுப்பிட்டேன்.” 

“மூர்த்தி தஞ்சாவூர்லயேதான் வேதம் படிக்கப் போறானா? இங்கே வரமாட்டானா?” என்று கேட்டான் கிட்டா. 

“என்ன சொன்னே? வேதம் படிக்க…” என்று இழுத்தார் கனபாடிகள். 

“படிக்கப் போறானான்னு கேட்டேன்.’ 

“வேதம் படிக்கிறதுன்னு சொல்லக் கூடாது. ஓதறதுன்னு சொல்லணும்; எழுதப்பட்டதைத்தான் படிக்கலாம். ஒலியை ஓதணும்.மிருதங்கம் அடிக்கிறான்னு சொல்லக் கூடாது. வாசிக்கிறான்னு சொல்லணும்.” 


வாசலில் வந்து நின்ற ஜட்காவிலிருந்து அத்தையும் அவள் கணவர் அருணாசலமும் இறங்கி வந்தார்கள். 

பட்டுப் புடவையும் காசு மாலையும் பளபளக்க முக மலர்ச்சியோடு வந்து நின்ற பணக்கார அத்தையை பாகீரதி அப்படியே தழுவிக்கொண்டு “வாங்க அத்தை! கார்த்தால் லேந்து உங்க நினைவுதான். உங்களுக்கு ஆயுசு நூறு?” குதூகலம் பொங்க வரவேற்றாள் பாகீரதி. 

“கையில் என்ன அது செம்பு!” என்று கேட்டான் கிட்டா. 

“கங்கைச் செம்பு. தெரிஞ்சவா காசியாத்திரை போயிருந்தா. அவா கொண்டு வந்து கொடுத்தா. புண்ணிய தீர்த்தம். அண்ணாவுக்குக் கொடுக்கலாம்னு கொண்டு வந்தேன்” என்றாள் கெளரி அத்தை. 

“இதுக்குப் பதிலா ஒரு குடம் தண்ணி கொண்டு வந்திருந்தா ரொம்ப உபயோகமாயிருக்கும்” என்றான் கிட்டா. 

”தண்ணிக்கு அவ்வளவு பஞ்சம் வந்துட்டுதா, இங்கே? சிதம்பரத்துல பரவாயில்லே” என்றாள் கௌரி. 

”பஸ் லேட்டோ?” என்று கேட்டார் கனபாடிகள்.

“ஆமாம்; நடு வழில பஞ்ச்சர்’ என்றார் கௌரியின் கணவர்

கல்கண்டு, திராட்சை, மாம்பழம், மாதுளம்பழம், வாழைப் பழம் வெற்றிலை பாக்கு எல்லாவற்றையும் ஒரு மூங்கில் தட்டில் வைத்து கனபாடிகள் காலில் விழுந்து நமஸ்காரம் செய்து “ஆசீர்வாதம் பண்ணுங்க!” என்றனர் கௌரி தம்பதியர். 

“முகூர்த்தம் எப்ப வெச்சுக்கப் போறேள்?” என்று கேட்டு, அந்த ஒரு கேள்வியிலேயே சுவீகார சமாசாரம் பூராவும் மறுபடி ஒருமுறை பேச வேண்டிய அவசியமில்லாமல் செய்து விட்டார் கனபாடிகள். 

“உங்களுக்கு எப்ப வர சௌகரியப்படுமோ, அப்ப வெச்சுக்கலாம்” என்றார் கெளரியின் கணவர். 

“சீக்கிரமே ஒரு நல்ல நாள் பார்த்து நடத்திடவேண்டியதுதான்!” என்றார் கனபாடிகள். 

“நீங்க வரணும்; அதுதான் முக்கியம்.” 

“என்னால முடியும்னு நினைக்கிறயா, கௌரி! வரவர உடம்பு ரொம்ப பலகீனம் ஆயிண்டிருக்கே?” 

“முகூர்த்தம் நடக்கறப்போ நீங்க இருக்கணும். காலைல வந்து மூர்த்தியை ஆசீர்வாதம் பண்ணிட்டு சாயந்திரமே திரும்பிடலாம். நாங்க ஒரு ‘ப்ளெஷர்’ ஏற்பாடு பண்ணி அனுப்பறோம்” என்றார் கௌரியின் கணவர். 

“கிட்டா. அந்த பஞ்சாங்கத்தை எடு” என்றார் கனபாடிகள். 

கிட்டா பஞ்சாங்கம் கொண்டு வந்தான். 

அதைப் புரட்டி, ‘அசுவனி, பரணி’ என்று நட்சத்திரங்களை விரல் விட்டு எண்ணி, “மூர்த்திக்கு மூல நட்சத்திரம். ஆண் மூலம் அரசாளும்னு சொல்லுவா. அரசாளப் போறானோ இல்லையோ, அரசமரத்தை ஆண்டுண்டிருக்கான்” என்று சொல்லிச் சிரித்தார். அவர் இந்த மாதிரி சிரித்து ரொம்ப நாளாயிற்று. 

“மூர்த்தியின் முழுப்பெயர் என்னன்னு தெரியலே…” என்று இழுத்தார் கௌரியின் கணவர். 

“சாம்பமூர்த்தி. மூல நட்சத்திரத்துக்கு இந்த மாசம் பதிமூணாம் தேதி பொருத்தமாயிருக்கு” என்றார் கனபாடிகள். 

“பதிமுணுன்னா இன்னும் ஆறே நாள் தானே? அதுக்குள்ளே எல்லா ஏற்பாடும் பண்ணிட முடியுமா அண்ணா” என்று கவலைப்பட்டாள் கௌரி. 

“நீ என்ன கலியாணமா பண்ணப்போறே? சுவீகாரம் தானே? ரெண்டு மணி நேரத்துல முடிச்சுடலாம். ஏழெட்டு வைதிகாளைக் கூப்பிட்டா, போதும். நான் வறேன். வெள்ளிக் கடை கிட்டப்பா வருவான்.ஜாம்ஜாம்னு நடத்திடலாம். கார்த்தால ஒன்பது பத்தரை மிதுன லக்னம் முகூர்த்த நேரம்” என்றார் கனபாடிகள். 

“முகூர்த்தப் பத்திரிகையை உங்க கையாலயே எழுதி மஞ்சள் தடவி ஆசீர்வாதம் பண்ணிக் கொடுத்துட்டா, நாங்க சாயந்திரமே புறப்பட்டுடலாம்” என்றாள் கௌரி. 

“நாலு மணிக்கு மேல புறப்படுங்க. ராகுகாலம், வெயில் ரெண்டுமே போயிடும்!” 

“பாகீரதியை என்கூடவே அழைச்சுண்டு போறேன் அண்ணா! இடையிலே இன்னும் அஞ்சே நாள்தானே இருக்கு!” என்றாள் கௌரி. 

“அப்படிச் சொல்லு. அதுக்குத்தான் வந்தேன்னு சொல்லும் செல்ல மருமாளாச்சே!” என்று மறுபடியும் சிரித்தார் கனபாடிகள். 

“அவளும் இந்த வீட்டில எத்தனை நாளைக்கு கூண்டுக் கிளி மாதிரி அடைஞ்சு கிடப்பா? இப்பத்தானே சந்தர்ப்பம். சமையல்காரரும் வந்தாச்சு. துணைக்கு கிட்டா வேற இருக்கான்.” 

“எல்லாத்தையும் யோசனை பண்ணிண்டு ஒரு பிளானோடு தான் வந்திருக்கே!” என்றார் கனபாடிகள். 

”அண்ணா, உன்னோட ரொம்ப நாளாப் பேசணும்னு இருந்தேன். இப்பத்தான் அதுக்கு சந்தர்ப்பம் வாய்ச்சிருக்கு. பாகீரதி விஷயமாத்தான். உனக்கப்புறம் அவ கதி என்னன்னு யோசிச்சுப் பார்த்தயா? உன் காலத்துலயே, அந்தச் சின்னக் குழந்தைக்கு ஏதாவது ஒரு வழி செஞ்சுட வேணாமா?” 

”அவள் தலையெழுத்து இப்படி ஆயிடுத்தே? அதை நம்மால மாத்தி எழுத முடியாதே!”

“ஏன் முடியாது? மசுைவச்சா எழுதலாம்!” என்றாள் கெளரி. 

“நீ என்ன சொல்றே, கௌரி!” 

”உனக்கப்புறம் அவளை யார் காப்பாத்தப் போறா? அதுக்கு யார் உத்தரவாதம்? அதைப்பத்தி யோசிச்சயா? சின்ன வயசாச்சோ கனபாடிகள் பொண்ணு நடுத்தெருவில நிக்கறாங்கற அபவாதத்துக்கு ஆளாகப் போறயா?” 

“நீதான் இருக்கயேம்மா. அப்படி அனாதையாவா விட்டுடுவே?” 

“நான் இருந்தாப் போதுமா? எனக்கும் வயசாறதே! நான் கவலைப்படறது எதைப் பத்தின்னு என்னால உடைச்சுப் பேச முடியலே. நான் சொல்றது உனக்குப் புரியும்னு நினைக்கறேன்.”

“புரியறது. அவளுக்கு மறுபடியும் ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைக்கணுங்கறே, அதானே? அது என்னால முடியாது. சாஸ்திரத்துக்கு விரோதமா நான் எதுவும் செய்யமாட்டேன்”. 

”செஞ்சா என்ன ஆயிடும்?” 

”கௌரி! உனக்கு இவ்வளவு தைரியம் எப்படி வந்தது? என்னிட்டயா இப்படிப் பேசறே? ஊர் உலகம் ஒப்புக்குமா! சாஸ்திரம் படிச்சவராம், யாகம் பண்ணவராம்! ‘எல்லாருக்கும் சொல்லுமாம் பல்லி. தான் போய் கழுநீர்ப் பானையில் விழுமாம்’ கற கதையா கனபாடிகள் பண்ணிட்டார்னு என்னை ஊர் ஏசாதா? காறித் துப்பாதா?” 

“சரி; உனக்கப்புறம் அவாள்ளாம் வந்து உன் பொண்ணைக் காப்பாத்துவாளாமா? அதைக் கேளு; என்ன பதில் சொல்றா பாப்போம்.”

”நீ அன்னைக்கு அவளுக்கு தாழம்பூ வெச்சு தலைபின்னி அழகு பார்த்தப்பவே நினைச்சேன். உன் மனசில ரொம்ப நாளா இப்படி ஒரு விபரீத ஆசை இருக்குன்னு எனக்கு அன்னைக்கே தெரிஞ்சு போச்சு!” என்றார். 

“இப்ப நான் சொல்றது உனக்கு அக்ரமமாத்தான் தோணும்! நீயே நிதானமா யோசிச்சுப் பார்த்தா நியாயம் புலப்படும்!” 

“இப்படி ஒரு அதர்மத்துக்கு நான் சம்மதிச்சா தெய்வம் என்னை சும்மா விடாது”. 

“என்ன பண்ணும்?”

”நரகத்துக்கு அனுப்பும்!” 

“அனுப்பட்டுமே! தெய்வம் கொடுக்கிற தண்டனை அதுதான்னா, பாகீரதியோட எதிர்கால வாழ்க்கைக்காக நீ அதை தாராளமா ஏத்துக்கலாம், பரவால்லே” என்றாள் கௌரி. 

”நீ இந்த அளவுக்குப் பேசுவேன்னு நான் நினைக்கலே.”

கௌரிக்கும் அப்பாவுக்கும் நடந்த வாக்குவாதத்தை தூண் மறைவில் நின்று கேட்டுக் கொண்டிருந்த பாகீரதி ‘இந்த அத்தை ஒரு அதிசயப் பிறவிதான்! அப்பாவிடம் எத்தனை சாமர்த்தியமா வாதாடறாள். ஆனாலும் இந்த அத்தைக்கு ரொம்ப தைரியம் ஜாஸ்தி!’ என்று மனசுக்குள் வியந்து கொண்டாள்.

அடுத்தகணம் “பாகீரதி! நீ இன்னைக்கு சிதம்பரம் போகப் போறே! நாளைக்கே அங்கு மூர்த்தி வருவான்! அத்தை உனக்குத் தாழம்பூ வெச்சுத் தலைபின்னி விடுவா! காசு மாலையைக் கழற்றி உன் கழுத்துல் போடுவா! அந்த அலங்காரத்தை மூர்த்தி பார்ப்பான்!” என்று அவள் உள் மனம் உற்சாகத்தில் விசிலடித்தது. 

– தொடரும்…

– வேத வித்து, முதற் பதிப்பு: மே 1990, சாவி பப்பிளிகேஷன், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *