வேண்டாம் இந்த விபரீதம்…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 18, 2018
பார்வையிட்டோர்: 6,918 
 
 

கூடத்து சோபாவில் தனித்து அமர்ந்திருந்த சந்திரசேகரனுக்கு இரண்டு நாட்களாக மனசு சரி இல்லை. காரணம், நிர்மல் விமலுக்குள் சரியான பேச்சு வார்த்தைகள் இல்லை. மனமுறிவு!.
அவர்கள்; இவர் மகன்கள். நிர்மல் மூத்தவன். விமல் அவனைவிட மூன்று வயது இளையவன். இருவருக்கும் தற்போது வாலிப வயது. படித்து முடித்து முறையே வேலைக்குச் செல்கிறார்கள். மூத்தவனுக்குத் திருமணம் முடிந்து விட்டது. இளையவனுக்கு இன்னும் இல்லை.

அவர்கள் இருவரும் மதிப்பிலாகட்டும், மரியாதையிலாகட்டும் அண்ணன் தம்பிகளாய்ப் பேசிக் கொள்வதே இல்லை.

‘மாப்ளே! மச்சான் !’ வார்த்தைகளைத் தவிர்த்து மற்றப்படி அவர்கள் தோழர்கள்தான். அப்படி ஒரு அன்னியோன்யம,; அன்பு, பாசம்.

அப்படிப்பட்ட இவர்கள் இரண்டு மூன்று நாட்களாக ஒருவருக்கொருவர் பேசாமல் முகம் தூக்கிப் போகிறார்கள். சுமார் பத்தாண்டு காலங்களில் இவர்கள் இப்படி இருந்ததே இல்லை.
இருவரும் பள்ளிக்கூடப் படிப்பின்போது ஒருத்தன் பென்சிலை ஒருத்தன் பிடுங்கிக் கொண்டு சண்டை போட்டார்கள். அடுத்து சில்லரைச் சில்லரையாய்ச் சின்னச் சின்ன சண்டைகள் போட்டு கடைசியாய் ஒருத்தரை ஒருத்தர் மூர்க்கமாய் அடித்துக் கொண்டுச் சட்டையைக் கிழித்துக் கொண்டார்கள்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தப் பெற்றவளுக்கு இது தாங்கவில்லை.

”இப்படி ரெண்டையும் ஆணாப் பெத்து அடிச்சிக்கிறதைப் பார்க்கிறதைவிட ஒன்னைப் பெண்ணாய்ப் பெத்துத் தொலைச்சு தவிர்த்திருக்கலாம்!” – என்று தேவி சத்தம் போட்டாள்.
அதிலிருந்து அவர்களிடம் பேச்சுமில்லை, மூச்சுமில்லை, சண்டை இல்லை. இதெல்லாம் அவர்கள் ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை உள்ள நடப்பு.

அப்புறம் பருவ வயதில் ஒரு நாள் அறையில் சாத்திக்கொண்டு படித்துக் கொண்டிருந்தவர்களுக்குள் சண்டை.

கண் கலங்கி முகம் சிவக்க….. விமல் கதவு திறந்து வெளியே வந்தான்.

”என்னடா ? ” கூடத்தில் அமர்ந்து தினசரி படித்துக் கொண்டிருந்த சந்திரசேகரன் கேட்டார்.

”ஒ….ன்னுமில்லே.”

”உள்ளே என்னவோ நடந்திருக்குன்னு முகமே சொல்லுது. என்ன ? ”

”ஒன்னுமிப்பா. சின்னப் பிரச்சனை. சட்டுன்னு நிர்மல் கைநீட்டிட்டான். அடிச்சா தாங்க மாட்டான். அண்ணான்னு நானும் திருப்பி அடிக்கலே.” சொல்லி வெளியே சென்றான்.
உண்மைதான். நிர்மல் நோஞ்சானாகப் பிறந்த பிள்ளை. முதல் பிள்ளை நோய்ப் பிள்ளை என்பதால் மருந்து மாத்திரைகள் கொடுத்து, பார்த்து பார்த்து வளர்த்த குறை வேறு. உடலில் சதைப் பிடிப்பே இல்லை.

விமல் அப்படி இல்லை. பிறக்கும்போதே நல்ல கொழு மொழு. வளர வளர….. அவனுக்கு இயற்கையிலேயே உடல் அழகில் பிரியம் என்பதால் தண்டால், பஸ்கி என்று ஆரம்பித்து ஜிம்மிற்கும் சென்று வர……இவன் அடித்தால் அவன் தாங்க மாட்டான்.

‘சின்னவனாலும் இதைக் கருத்தில் கொண்டு அண்ணனைத் திருப்பித்தாக்காமல் வந்திருக்கிறானென்றால்….. உண்மையில் நல்ல மனசு.!’ – இவருக்குத் தெரிந்ததோ இல்லையோ…. அறையில் இருக்கும் அடித்தவனுக்குத் தெரிந்தது.

”சரி சரி…. சண்டை போடாம இருங்க.” என்று சந்திரசேகரன்….இருவருக்கும் பொதுவாகச் சொல்லி சமாதானப்படுத்தினார்.

இரண்டு நாட்கள் பேசாமல் இருந்த அண்ணன் தம்பிகள் அடுத்து சகஜமானார்கள்.

அடுத்து இவர்கள் கல்லூரி படிக்கும்போது நடந்த விபத்துதான் சகோதரர்களை உயிருக்குள் உயிராக்கியது.

அது நிர்மலை விண்ணப்படுத்த வேண்டும் என்றே நடந்த விபத்தா, இல்லை…. அண்ணன் தம்பிகள் உயிருக்குயிராக வேண்டும் என்று நடந்த விபத்தா என்பது இதுவரை புரியாத புதிர்.
சந்திரசேகரன் தன் குடும்பத்துடன்…… மச்சான், மைத்துனி குடும்பங்களையும் சேர்த்து வேலூர் லட்சுமி நாராயிணி பொற்கோயிலைப் பார்க்க வேனில் புறப்பட்டார். நிர்மல் வயசுப் பிள்ளை என்பதால் வேடிக்கைப் பார்த்து வரும் ஆவலில்…ஓட்டுநருக்கு அருகில் உள்ள முன்னிருக்கையில் அமர்ந்து வந்தான். இரவு பத்து மணிக்குப் புறப்பட்ட வேன் அரை மணி நேரத்தில் ஓட்டுநரின் கவனக்குறைவால் சாலையோரம் நின்ற டிராக்டர் துணை வண்டியில் மோதியது. ஓட்டுநரின் சாமார்த்தியம் அருகில் வந்ததும் கவனித்து வண்டியை சடாரென்று திருப்பியதால்…..ஓட்டுநர் தப்பிக்க…. வேன் இடது பக்கம் மோதி…. அந்த இருக்கையில் உட்கார்ந்திருந்த நிர்மல் இடது கைவிரல்கள் இரண்டு நசுங்கி சிதைந்து போய், இடது காலும் முறிந்து தொங்கியது.

ஆறுமாதங்கள் படுத்தப் படுக்கையாய் இருந்த நிர்மலுக்கு பெற்றவரைவிட எல்லாவகையிலும் உதவியாக இருந்தது விமல்தான்.

தம்பி தனக்கு மலம், மூத்திரமெடுத்து…. சூத்துக்கழுவி, குளிப்பாட்டி விட்டதில் அண்ணன் நெக்குருகி விட்டான். அப்போதிருந்துதான் அவர்கள் உயிருக்குயிராய் ஆனார்கள். அண்ணன் தம்பி என்பதால் ‘மச்சான்! மாப்ளே!’ வார்த்தைகளைத் தவிர்த்து விளையாடுவதிலிருந்து ஒருத்தரை ஒருத்தர் வெறியேற்றுவதுவரை தோழர்களாகிப் போனார்கள்.

அண்ணன் தம்பிகள்தான் அப்படி ஆனார்கள் என்றால் நிர்மலுக்கு வாய்த்த மனைவி….கணவனுக்கு மேல் கொழுந்தன் மேல் பாசமாகிப் போனாள். தீபா மருமகளாகாமல் மகளாகி அந்த குடும்பத்தில் பெண்ணில்லா குறையைப் போக்கியவளானாள்.

இப்போது மகன்களுக்குள் மனக்கசப்பு, பேச்சு வார்த்தை இல்லை, சண்டை என்றால்…..பெற்றவருக்கு மனசு வலிக்காமல் என்ன செய்யும் ?

வெகு நேர யோசனைக்குப் பின்…..

”தேவி !” சந்திரசேகரன் மனைவியை அழைத்தார்.

”என்ன ? ” அவள் சமையல்கட்டிலிருந்து கையைத் துடைத்துக் கொண்டு வெளி வந்து அவர் அருகில் வந்தாள்.

”நம்ம பசங்க பேசாம இருக்கிறது தெரியுமா ? ”

”தெரியும்.”

”அவர்களுக்குள் என்ன கலாட்டா ? ”

”தெரியாது.”

”நீ விசாரிக்கலையா ? ”

”விசாரிக்கலை.”

”ஏன் ? ”

”அது எனக்கும் அவனுங்களுக்கும் சம்பந்தமில்லாத விசயம். வழக்கம் போல் நீங்களே கேட்டுக்கோங்க.” அடுத்து பேசாமல் உடன் சென்றாள்.

‘அப்பா அடிப்பார்! அடிப்பார்!’ என்று பெற்ற மக்களை வீணே பயமுறுத்தி அவர்கள் பாசநேசங்களைத் தனதாக்கிக் கொள்ளும் தாயமார்களில் தேவி மாறுபட்டவள்.

பிள்ளைகளில் யார் தவறு செய்தாலும் கண்டிக்க மாட்டாள், கண்டு கொள்ள மாட்டாள். காரணம்….. அதைக் கேட்கப் போய்… ‘நீ அவனுக்கு வக்காலத்து வாங்கறே. உனக்கு அவன் மேல்தான் ஆசை, பாசம் அதிகம். என் மேல் குறைவு, கிடையாது.!’ என்று ஒருவர் மாற்றி ஒருவர் மகன்கள் பழி சொல்லிவிடக்கூடாது என்கிற பயம். அதனால் அவர்களுக்குள் எந்த பிரச்சனை என்றாலும் இவள் தலையிட மாட்டாள். இவர்தான் விசாரிக்க வேண்டும். விசாரிக்கும் போது இடையில் அவளது தலையீடு, குறுக்கீடு, ஈடுபாடும் இருக்காது.

அடுத்து….

”தீபா!” மருமகளை அழைத்தார்.

”மாமா !” அவள் அறையிலிருந்து வந்தாள்.

”உன் புருசனுக்கும் அவன் தம்பிக்கும் என்ன பிரச்சனை? ”

”போன வாரம் நீங்க ஊருக்குப் போயிருந்த சமயம் நான், அத்தை, பெரியவர், சின்னவர் எல்லாம் ஒன்னா உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டிருந்தோம். அப்போ… சின்னவர் தன் கிட்ட இருந்த மாம்பழத்தைச் சாப்பிட்டுவிட்டு பெரியவர்கிட்ட இருந்ததைக் கேட்டார். பெரியவர் குடுக்க முடியாதுன்னு பிகு பண்ணி… பிச்சைக்கார நாயே! இந்தா தின்னுத் தொலைன்னு விளையாட்டாய்ச் சொல்லி அவர் தட்டுல தூக்கி எறிஞ்சார். அது சோத்து மேல விழுந்து சின்னவர் கண்ணுல தெரிச்சுடுச்சு. சின்னவருக்குக் கோபம் வந்து சாப்பிடாம சடக்குன்னு எழுந்து போய்ட்டார். இதுதான் நடந்துது. அன்னையிலிருந்து ரெண்டு பேருக்கும் பேச்சு வார்த்தை இல்லே.” – பெற்றப் பெண் பிள்ளை வீட்டில் நடக்கும் குற்றம் குறைகளை தகப்பனிடம் ஒப்புவிப்பதுபோல் ஒப்புவித்தாள்.

”நிர்மல் மன்னிப்புக் கேட்டு சமாதானப்படுத்தினானா? ”

”இல்லே மாமா.”

”ஏன் ? ”

”ஆனா…. நான், சின்னவர் கோபமா இருக்கார். சமாதானப்படுத்துங்கன்னு கேட்கச் சொன்னேன் மாமா. அதுக்கு இவர், ‘நான் தப்பு செய்யலை. எப்போதும் போல்தான் விளையாட்டாய்ப் பேசி விளையாட்டாய்த் தூக்கிப் போட்டேன். அது சாதத்துல விழுந்து தெரிச்சு கண்ணுல பட்டது எதிர்பாராதது. அதை அவன் சாதாரணமாய் எடுத்து என்கிட்ட பேசுறதுதான் சரி. மாறாய் என்மேல கோபப்பட்டு பேசாம இருக்கிறது சரி இல்லே. தப்பு அவன் பேர்ல இருக்கு. சொல்றார் மாமா.”

”சின்னவன்கிட்ட பேசுனீயா ? ”

”அண்ணன் செய்தது தப்பேன்னாலும் நீங்க மன்னிக்கிறது இல்லையான்னு அவரையும் சமாதானப்படுத்தினேன் மாமா. அதுக்கு அவர் வாயைத் திறக்கலை. கோபம் தீரலை.”

”நீ சின்னவனிடம் சரியா பேசுறீயா ? ”

”ஐயோ ! நான் பேசுறேன் மாமா. அண்ணன் தம்பி விசயத்துல இடையில் என் தலையீடு கூடாது. இப்போ கணவருக்குப் பரிந்தோ பயந்தோ நான் பேசாம இருந்தால் பின்னுக்கு அது வில்லங்கம். நாளைக்கு அவுங்க சட்டுன்னு ஒன்னு கூடி சகஜமாகும் போது நான் உடைஞ்ச கண்ணாடியாகி ஒட்டாமல் போறதுக்கு வாய்ப்பு உண்டு. அதனால நான் பேசுறேன், பேசுவேன்!” அழுத்திச் சொன்னாள்.

”சரி. நீ பெத்தவளை விட ரொம்;ப புத்திசாலியாய் இருக்கே. போ.” அவளை அனுப்பினார்.

தீபா அகல….தனித்து விடப்பட்ட சந்திரசேகரனுக்குள் மீண்டும் சிந்தனை.

நடந்தது ரொம்ப சாதாரண விசயம். பெரிதாக எடுத்துக் கொண்டால் பெரிது. சிறிதாக எடுத்துக் கொண்டால் சிறிசு. பெற்றவர்களுக்கே பயம் வரும் அளவிற்கு இவர்களுக்குள் சண்டை வரும் அளவிற்கு இதை விட ரொம்ப அற்பமாய், மோசமாய் விளையாடி இருக்கிறார்கள், பேசி இருக்கிறார்கள்.

அப்போதெல்லாம் வராத கோபம் இப்போது வந்ததற்குக் காரணம்… மனிதன் மனம் எப்போதும் ஒரே நிலையில் இருக்காது என்பது. அவருக்குப் புரிந்தது.

சரி. அதற்காக இந்த மவுனம், பேச்சற்ற போக்கு எப்படி சரி.?! நாட்கள் ஆக ஆக…இந்த மனக்கசங்கள்… கசப்பாகி உறவு பிரிய வழி வகுக்கும்.! எண்ணம் வர…. சந்திரசேகரன் நன்றாக சோபாவில் சாய்ந்து தன் சிறுபிள்ளை பருவம் சென்றார்.

அண்ணன், தம்பி, அக்காள், தங்கை என்று இவரோடு பிறந்தவர்கள் பத்து பேர்கள். இது இல்லாமல் அப்பப்பா அம்மம்மா – தாத்தா பாட்டிகள் என்று கிராமத்து பெரிய சுத்துக்கட்டு ஓட்டு வீட்டில் பெரிய கூட்டுக்குடும்பம். இந்த பத்துப் பேர்களில் தினம் சண்டை வராத நாட்களே கிடையாது. அம்மா, அப்பா@ தாத்தா பாட்டி என்று இவர்களைச் சமாதானப்படுத்தாத ஆட்களேக் கிடையாது. கடுப்பில் ஒரு நாள் அம்மா, ”இதுங்களைப் பெத்துப் போட்டு இப்படி அல்லாடுறதைவிட பேசாம செத்தேப் போயிருக்கலாம்!” சலிப்போடு பிலாக்கினம் செய்ய….அன்றிலிருந்து இவர்கள் அவைகளைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைத்து பாசநேசமானார்கள். இன்றைக்கும் அந்த பந்தபாசம் அப்படியே தொடர்கதை. அப்படி இருக்கும் போது…. பிறந்தது இரண்டே இரண்டு. அதுவும் இப்போது இப்படி சண்டை சச்சரவு, கோபம் என்றால்……?

இன்றைக்கு எல்லாம் சுருங்கி யாரும் கூட்டுக் குடித்தனம் இல்லை. குடும்பக்கட்டுப்பாடு சட்டதிட்டமில்லாமலேயே…. ஆணோ பெண்ணோ இரண்டு பெற்றுக் கொள்வதோடு சரி. இன்னும் சொல்லப் போனால் ஒன்றோடு நிறுத்திக் கொள்வதே உத்தமம் என்று எல்லாரும் அதோடு நிறுத்திக் கொள்கிறார்;கள். அந்த ஒன்றும்…. பிறந்து விழுந்ததிலிருந்து தாய் தகப்பன் வேலை நிமித்தம் குழந்தைக் காப்பகத்திற்குப் போகிறது. அடுத்து… படிப்பு படிப்பு, வேலை என்று பெற்றவர்களுடன் கூட ஒட்டாமல் உறவு என்றாலே என்ன என்று கேட்கும் அளவிற்கு உலகம் மாறிப்போய் வருகிறது. அப்படி இருக்கையில்…..இவர்கள் இப்படி என்றால்…… ? நினைக்கச் சங்கடமாக இருந்தது.

நிறைய யோசித்து ஒரு முடிவிற்கு வந்து… மகன்களுக்காக வழி மேல் விழி வைத்தவர் போல் இருந்த இடத்தை விட்டு எழாமல் கூடத்து சோபாவிலேயே இருந்தார்.

இரவு ஏழு மணிக்கு நிர்மலும் விமலும் அலுவலகம் விட்டு ஒவ்வொருவராகத் திரும்பினார்கள். அவர்கள் முகம் கழுவி ஆசுவாசப்படட்டும் என்று காத்திருந்தார்.

அவர்கள் அப்படி முடித்து வந்ததும்…..

”நிர்மல்! விமல்!” அழைத்தார்.

”அப்பா !” அவர்கள் இருவரும் கோரசாக குரல் கொடுத்து இவர் அருகில் வந்தார்கள்.

சந்திரசேகரன் அவர்களை நிமிர்ந்து பார்க்காமல்….

”தம்பிகளா! இன்னைக்கு எல்லாம் சுருங்கி உலகம் கைபேசியாய் கையில் இருக்கு. அதே போல் மனிதனும் குழந்தை, கூட்டுக்குடும்பங்களெல்லாம் உதறி…. இப்போ ஒரு தம்பதி ஒரு பிள்ளையாய்ச் சுருங்கி இருக்கான். இந்த நிலையில் நீங்களும் வீணா சண்டை போட்டு பேசாமல் இருந்து இருக்கும் மிச்ச சொச்ச உறவுகளையும் முறித்துத் தள்ளினால்….உங்களுக்கு உறவே இல்லாத ஆதாம் ஏவாள் காலம் சீக்கிரம் கிடைக்கும். வேண்டாம் இந்த விபரீதம் என்கிறது என் அபிப்பிராயம். புரிஞ்சு நடந்துக்கோங்க. அவ்வளவுதான் நான் சொல்வேன்.!” முடித்து தரையைப் பார்த்தார்.

அப்பாவின் முகவாட்டம், பேச்சு எல்லாம் நிர்மல் விமல் நெஞ்சுகளில் வேலாகத் தைக்க….துடித்த அவர்கள்…..

”அப்பா! எங்களை மன்னிச்சிடுங்க….!” கதறி சட்டென்று இருவரும் அவர் அருகில் ஆளுக்கொரு பக்கம் அமர்ந்து தகப்பன் நெஞ்சில் கைகோர்த்தார்கள்.

சந்திரசேகரனுக்குள் இருந்த வருத்தம் மறைந்து அவரையும் மீறி ஆனந்தக் கண்ணீர் விட்டு மகன்களை அணைத்தார்.

தூர இருந்து இவர்கள் உரையாடல், நடவடிக்கைகளைக் கவனித்த தேவி, தீபாவும் தங்கள் கண்களின் ஓரம் கசிந்த கண்ணீரை முந்தானையால் துடைத்தார்கள்.

– 12 – 7 – 14

Print Friendly, PDF & Email
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *