கைக்கடங்கா நரைக்கூந்தலைக் காற்றாட விட்டது போல நுரைத்துப் புரண்டது காவிரி.
முதலில் மரங்களின் கருநிழலில் கண்ணாடியாய் பதுங்கிக் கிடந்த நீரும், அதில் தளும்பலாய் மிதந்த பரிசல்களும்தான் தெரிந்தன. போகப் போகத்தான் ஆர்ப்பாட்டம்! முதலில் மிரட்டியது நீரின் இரைச்சல்தான்.. ‘நான் சாதாரணமானவளில்லை’ என்ற அதன் எச்சரிப்பை உள்வாங்கியபடி தொடர்ந்து நடக்க, கிடைத்த காட்சி அசாதாரணமானதுதான்.
போன மாதம் வினு குளியலறையில் அப்படி கேட்ட போதுகூட இப்படி ஒகேனக்கல் வந்து நிற்போம் என்று விமலாவும் அவள் கணவனும் எண்ணவில்லை..
‘‘நீர்வீழ்ச்சின்னா எப்படி இருக்கும்? இப்படியா?’’ துளைகள் பாதி அடைபட்ட ஷவரின் கீழ் நின்று, அண்ணாந்து பார்த்தபடி வினு கேட்டதுதான் ஆரம்பம்.
‘‘ச்சே…அது ரொம்பப் பெருசடா.?’’
‘‘எவ்வளவு? ஃபைவ் டைம்ஸா?’’
‘‘அம்பது, ல்ல.. ஐநூறு டைம்ஸ்னு வை’’.
எட்டு வயது வினுவின் கண்கள் இருமடங்காகின.
‘‘நாம போய்ப் பார்க்கலாமாம்மா?’’
‘‘இது குற்றால சீஸனில்லியே.. அருவின்னா அதுதான்.. குளிச்சா உடம்பு உருவி விட்டாப்ல சுகமாயிருக்கும்..’’
‘டீச்சர் சொன்னது நீர்வீழ்ச்சிம்மா..?’’
‘‘எல்லாம் ஒண்ணுதான்டா செல்லம். குற்றாலம்னா ஐநூறு கிலோமீட்டர் தொலைவு..’’
‘‘அதெதுக்கு? இங்குள்ள தீம்&பார்க் போனா செயற்கை குற்றாலத்தைக் காட்டிரலாமே’’ வாய் திறந்த கணவனை விழிகளாலேயே அடக்கினாள். முறைப்பின் காரணம் அவனுக்கு சற்று தாமதமாகவே உறைத்தது.
வினுவுக்கு ‘ஈஸ்னஃபோலியா’ இருக்கக்கூடும் என்று டாக்டர் சொன்னதிலிருந்து மகனை நீர்நிலைகள் அண்டவிட்டதில்லை அவள். அதிலும் பலர் ஊறித் திளைத்த அசுத்த நீரில் மகனை அமிழச் செய்வது பற்றி நினைத்தாலே உடல் கூசிப் போவாள். மூழ்கி எழுபவன், பெயரே அறியாத பலநூறு வியாதிகளோடு கரையேறுவான் என்ற பீதி. மேலும், கடும் சுழற்சியும் சரிவுகளும் கொண்ட ‘ரோலர் கோஸ்ட்டரில்’ தன் கண்மணியை ஏற்றி அனுப்பினால் அவளது உயிரே கலங்கிப் போகும்.
ஆக, அதுபோன்ற பேச்சு எழ, ‘பிமினோஸ்’, ‘மாயாஜால்’, ‘ஸ்பென்ஸர்ஸ்’ என்று வேறு ஜாலங்களில் மறக்கடித்துவிடுவாள். தீம்பார்க்கில் பிற பிள்ளைகளோடு வினு ஆட ஆசைப்படுவான். ஆனால், பிரமாண்ட ஒகேனக்கலில் அவன் பார்வையின் பசியை மட்டும் தீர்த்துவிட்டு, பத்திரமாய் வீடு திரும்பிவிடலாம் என்ற எண்ணம். ஆக, சேலத்து மாமா மகளின் திருமணம் முடிந்ததும் இங்கே வந்தாயிற்று.
‘‘ஹைய்யோ.. எவ்ளோ தண்ணி.. அதுவும் மேலேயிருந்து!’’ மகனின் விழிகளில் வழிந்த வியப்பை தன் விழிகளால் விழுங்கி ரசித்தாள்.
மீன் வறுபடும் வாடை வந்தது. வினுவின் மூக்கு விடைக்க, அவசரமாய் ஐம்பது ரூபாய் வறுவல் டப்பாவை உடைத்து நீட்டினாள். அவர்களது அருகே வந்து நின்ற மூன்று சிறுவர்களை அவளது பார்வை விரட்டியது. அது புரியாததுபோல பொடியன்கள் பேச்சுக் கொடுத்தனர்.
‘‘அதோ.. அதாம்மா ஷ¨ட்டிங் ஃபால்ஸ்!’’
குடும்பம் எதிரே நூறு அடி செங்குத்தில் நின்ற முரட்டுப் பாறைகளைப் பார்த்தது.
‘‘அது உச்சியில நின்னு பார்த்தீங்கன்னா.. தல கிறுகிறுத்துரும்’’
‘‘நாங்க ஏறி அங்கயிருந்து தண்ணிக்குள்ள டைவ் அடிப்போம்..’’
‘‘ஒரு டைவ்வுக்கு அஞ்சி ரூவா.’’
‘‘வெள்ளைக்காரங்க பத்து.. ல்ல அம்பது கூட தருவாங்க..’’
விமலாவின் கணவன் மறுப்பாய்த் தலையாட்டினான். ‘‘அதெல்லாம் ஆபத்துப்பா.. கரணம் தப்பினா.. செய்யக் கூடாது’’
வெந்த மீன்கள் புரட்டிய கடைக்காரர் ஆமோதித்தார்.
‘‘பிறகு ஏன் இந்தப் பசங்களை குதிக்க விடறீங்க?’’
‘‘ஜாலி வேலை இல்ல சார்.. இவனுங்க வயித்துப் புழைப்பே இதுதான். அப்பன் விறகு வெட்டி வர்ற காசு அவனுக்கே பத்தாது. பிறவெங்கே குடும்பத்துக்கு கஞ்சி ஊத்தி, படிப்பு சொல்லி வைக்கறது? இந்த சாகசந்தான் இவனுகளுக்கும் இவங்க குடும்பத்துக்கும் கஞ்சி ஊத்துறது..’’
‘‘பயமாயிராதா தம்பி?’’
‘‘முதத் தரம் உதறி காச்சலே கண்டிருச்சுல்ல? பிறவு சரியாப் போயிடும் சார்’’
& அரைச் சிரிப்பு சிரித்தவனின் கைகள் அவனை அறியாமலேயே அவன் வயிற்றைத் தடவியது.
‘குதித்தால்தான் இந்த கும்பிக்கு சோறு’ என்பதற்காகவா?
வினு மென்ற ‘மொறுமொறு’ பதார்த்தத்தில் அவர்களுக்கு எச்சில் ஊறியது.
‘‘குதிச்சுக் காட்டவா சார்?’’
அதற்குள் விமலா கணக்காய் சில்லறையை எடுத்துவிட்டாள்.. ‘‘இந்தா பதினைஞ்சு ரூவா. மூணு பேரும் போய்க் குதிங்க, பார்ப்போம்’’ அரை டவுசரை இறுக்கியபடி எதிர்ப்புறம் ஓடிய மூவரும் மூச்சிறைக்க மேலேறினார்கள். பாதாளத்தில் புரண்டு சீறிய காவிரிக்குள் அம்பெனப் பாய்ந்தார்கள்.
அந்தச் சாகசத்தை, விழி தெறிக்க தன் மகன் பார்த்ததை பூரிப்பாய் ரசித்து நின்றிருந்தாள் விமலா. ஆங்கார சீறலுடன் அத்தனையும் கண்டிருந்தது நீர்வீழ்ச்சி!
– மார்ச் 2007