வெயில் வா மழை போ..!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 14, 2019
பார்வையிட்டோர்: 11,275 
 

என்றும் இல்லாதவாறு இன்று வாசலில் அதிக கூட்டமாக இருந்தது. டாக்டர் அஞ்சலி பம்பரம் போல சுழன்று கொண்டிருந்தாள். கடமையில் இருந்த தாதிகளால் கூட அவளுக்கு ஈடாக நின்று பிடிக்க முடியவில்லை. இடியும் மின்னலுமாய் இருந்த வானம் சற்று ஓய்ந்திருப்பது போலத் தோன்றினாலும், இன்னும் மழை கொட்டலாம் என்ற எதிர்பார்ப்போடு வானம் காத்திருப்பது தெரிந்தது.

‘டாக்டர் எங்க அம்மாவைக் காப்பாற்றுங்க..!’

‘டாக்டர் என்னோட ஒரே பிள்ளை, பிளீஸ் காப்பாற்றுங்க..!’

பரிதவிப்போடு ஓடி வந்த எல்லோருக்கும் அவள் கைகொடுத்தாள். ஒவ்வொரு உயிருக்கும் ஒரு பெறுமதி உண்டு. ஏற்றதாழ்வுகளை எல்லாம் கடந்து, எந்த சூழ்நிலையிலும் மனித உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற கொள்கையோடு அவள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தாள். மகள் டாக்டராக வேண்டும் என்ற அவளது தாயின் கனவை அவள் நிறைவேற்றி வைத்ததில் அவள் மனதில் ஒருவித ஆத்ம திருப்தி இருந்தது.

சென்னைக்கு இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மழை இல்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு வரப்பிரசாதமாய் மழை வந்தது. வழமை போல பெய்யும் மழைதானே என்றுதான் எல்லோரும் சந்தோஷப் பட்டார்கள். ஆனால் நடந்ததோ வேறு விதமாக இருந்தது. மூன்று மாதத்தில் பெய்ய வேண்டிய மழை மூன்று நாளில் பெய்திருந்தது. கழிவு நீர் ஓடையில் திடக்கழிவுகள் தேங்கிக் கிடந்ததால், மழை நீர் சென்றடைய வழியில்லாமல், தெருக்கள், குடிமனைகள் எல்லாம் வெள்ளம் புகுந்திருந்தது. ஏரிகள், கண்மாய்கள், அணைகள் எல்லாம் தகுந்த முறையில் பராமரிக்கப் படாமையால் வண்டல் படிந்து அப்பகுதிகள் மேடாய்க் காட்சி தந்தன. ஆங்காங்கே இருந்த பல ஏரிகள் காணாமல் போயிருந்தன. காளான்கள் போல அந்த இடங்களில் எல்லாம் புதுமனைகள் முளைத்திருந்தன.

இளம் தலைமுறைக்கு எங்கிருந்து இவ்வளவு பொறுப்பும் வந்ததோ தெரியவில்லை, குழுக்களாகச் சேர்ந்து மனிதாபிமானத்தோடு களத்தில் இறங்கித் தாங்களாகவே தொண்டாற்றினார்கள். உணவு, உடை, இருக்கை என்று எப்படியோ வெள்ளத்தில் அவதிப் பட்டவர்களுக்கு உதவிக் கரம் நீட்டினர். வேலை வெட்டியற்ற ஓரு சிலர் சொகுசாக உட்கார்ந்து முகநூலில் தாங்கள் நினைத்ததை எல்லாம் தங்கள் இஷ்டத்திற்குப் பதிந்து கொண்;டிருதார்கள். யாரோ வெள்ளத்தில் தத்தளித்த போது அவரைக் காப்பாற்றத் தண்ணீரில் குதித்தவர் வெள்ளத்தோடு அடிபட்டு இறந்த போன செய்தியைத் துயரத்துடன் பதிந்தபோது அதற்கும் ‘லைக்’ போட்டார்கள்.

அவள் ஐசியு வில் அனுமதிக்கப்பட்ட நோயாளியைப் பற்றிய மருத்துவ விபரங்களைப் படித்துக் கொண்டிருக்கும்போது பாதவணிச் சத்தம் அட்டகாசமாய்க் கேட்டது. தலையை உயர்த்தாமலே மெல்லக் கிரகித்தாள். அவள் எதிர்பார்த்ததுதான், குனிந்திருந்த பார்வையில் முதலில் வெள்ளைச் செருப்பும், அதற்கும் மேலே கரைவேட்டியும் கண்ணில் பட்டது. புரிந்துபோயிற்று, அரசு மருத்துவமனை ஆலோசனைக் குழுவைச் சேர்ந்த ஒருவர்தான் என்பது அவளுக்குத் தெரியும். இப்படித்தான் தினமும் ஏதாவது ஒரு சிபார்சுக் கடிதத்தோடு வருவார்கள். இன்றும் கையிலே ஒரு சிபார்சுக் கடிதத்தோடு அவர் நின்றார். அவருக்கு அருகே இன்னுமொருவர் ஒற்றைக் கையை உயர்த்திப் பிடித்து, வேதனையில் துடிப்பது போன்ற முகபாவத்தோடு நின்றார்.

‘என்ன?’ என்பது போல பார்வையை உயர்த்திச் செயற்கைப் புன்னகையோடு கேட்டாள். இப்படியான ஒரு ‘ரெடிமேட்’ புன்னகை இவர்களைப் போன்றவர்களை எதிர் கொள்ளும் போது கட்டாயம் உதிர்த்தாக வேண்டும், இல்லாவிட்டால் நிலைமை தலைகீழாக மாறிவிடும் என்பதை அவள் அனுபவதால் அறிந்து வைத்திருந்தாள்.

கையில் இருந்த சிபார்சுக் கடிதத்தை நீட்டினார். ஹெல்த் மினிஸ்டரோட ஸ்பெஷல் பி.ஏ. கொடுத்து விட்டதாக சொன்னார்.

‘மேடம், ஸாரோட வண்டிக் கதவைச் சாத்தும் போது கவனிக்காம சாத்திட்டார். ஸாரோட விரல் அதில அகப்பட்டு நசுங்கிட்டதால வலி தாங்க முடியாமல் அவஸ்தைப்படுறார், உடனே ஏதாவது செஞ்சாகணும்.’

அவள் பொறுமையாகத் தாதியை அழைத்து அவருக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்வித்தாள். விரலுக்குப் பிளாஸ்டர் போட்டு, தசை விறைப்பு காரணமாக ஏற்பு ஏற்படாமல் இருப்பதற்காக, ‘டெட்ரனஸ்’ ஊசியும் போட்டு விட்டாள். அவர் அங்கேயே தங்க வேண்டும் என்று அவரை அழைத்து வந்தவர் நிர்ப்பந்தம் செய்ததால் அவருக்கு ஒரு கட்டிலும் ஏற்பாடு செய்து கொடுத்தாள். மழை வெள்ளப் பெருக்கெடுப்புக் காரணமாக வீதிகள் தடைப்பட்டதால், அவளது இடத்திற்கு அடுத்துக் கடமைக்கு வரவேண்டிய வைத்தியர் வராததால் அவளே இரவும் கடமையில் ஈடுபட வேண்டி வந்தது.

இரவு நேர அமைதியைக் கடந்து வாசலில் பரபரப்புச் சந்தம் கேட்டது. பிரசவ வேதனையால் துடித்துக் கொண்டிருந்த கர்பிணித் தாய் ஒருத்தியைக் கொண்டு வந்திருந்தார்கள். தெருவெல்லாம் வெள்ளம் நிரம்பியிருந்ததால் தோளிலே சுமந்து கொண்டு வந்ததாகச் சொன்னார்கள். அசதியை மறந்து கடமை உணர்வோடு அவள் செயற்பட்டாள். பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த தாயை அவசர சிகிட்சைப் பிரிவுக்குக் கொண்டு சென்றாள். நிலைமை மோசமாக இருந்தது. காலநிலை காரணமாக வெளியே இருந்து உதவிக்கு யாரையும் அழைக்க முடியாத நிலை, யாரைக் காப்பாப்பாற்றுவது, தாயையா இல்லை சேயையா?

ஒரு கணம் மண்டியிட்டுப் பிரார்த்தித்தாள். என்னுடைய அம்மாவும் பிரசவ வேதனையால் இப்படித்தானே துடித்திருப்பாள்! அம்மாவின் ஆசீர்வாதம் கண்ணுக்குள் நிழலாடியது. ஏதோ ஒரு சக்தி உந்தித் தள்ளவே முழுமூச்சோடு கடமையில் ஈடுபட்டாள். வலியால் துடித்த தாய்க்கு ‘உன்னால் முடியும்’ என்ற நம்பிக்கையைக் கொடுத்தாள். தாதிகளின் உதவியோடு குழந்தையை மெல்ல மெல்ல வெளியே எடுத்தாள். வீறிட்டு அழுத குழந்தையின் சத்தத்தில் மயங்கிக் கிடந்த தாய் கண் விழித்தாள். ‘பெண் குழந்தை’ தாதி குழந்தையைக் காட்டினாள். இயலாமையிலும் டாக்டரின் கைகளை மெல்லப் பற்றிக் கண்ணில் ஒற்றிக் கொண்டாள் அந்தத் தாய். அம்மாவின் ஆசை எல்லாம் அந்தக் கணமே நிறைவேறிவிட்ட பெருமிதத்தில் இவள் செய்வதறியாது கண் கலங்கிப்போய் நின்றாள்.

பிரசவம் நல்லபடியாய் முடிந்து விட்டாலும், தாயையும் சேயையும் எங்கே படுக்க வைப்பது என்ற இடப்பிரச்சனை திடீரெனத் தலை தூக்கியது. முதன்மைத் தாதியின் கண்ணில் முதலில் பட்டது விரலில் பிளாஸ்ரரோடு ஹாயாகத் தூக்கம் போட்டுக் கொண்டிருந்த சிபார்சுக் கடிதம்தான்.

விரலிலே கட்டுப் போட்டபடி கட்டிலில் படுத்திருந்தவரிடம் வந்தாள்.

‘ஸார் நீங்க ஒரு உதவி செய்யணும்.’

‘என்ன?’ என்பது போல அவர் பார்த்தார்

‘கஸ்டமான பிரசவம், நீங்க மனசு வெச்சால் அவங்களை இங்கே படுக்க விடலாம்.’

அவர் கட்டிலில் எழுந்து உட்கார்ந்து சுற்றிவரப் பார்த்தார்.

சுற்றிவர இருந்த நோயாளரின் பார்வையும் அவர் மீதே இருந்தது. பிரச்சனைப் படுத்த நினைத்தாலும் அந்த சூழ்நிலையில் முடியாது போல இருந்தது.

‘உங்களுக்கு நல்ல படுக்கை தாறேன், கீழே படுத்துக்குங்க’ என்று, அவருக்குச் சிந்திக்கச் சந்தர்ப்பம் கொடுக்காமல், தாதி கீழே இருந்த படுக்கையைக் காட்டினாள்.
வேண்டா வெறுப்பாக அவர் எழுந்து கீழே உள்ள படுக்கைக்குச் சென்றார். கட்டில் இல்லாமல் தன்னால் அங்கே இருக்க முடியாது என்று குறைப்பட்ட அவர்,

டாக்டரம்மாவிடம் முறையிடப் போவதாக மிரட்டிப் பார்த்தார். அவருக்குச் சாதகமாய் எதுவும் அமையவில்லை. கட்டில் கிடையாது என்ற நிலையில், திட்டித் தீர்த்துக் கொண்டே மறுநாள் ஆவேசத்தோடு வைத்திய சாலையை விட்டு வெளியேறினார். தாயும் சேயும் நலமாக இருந்தார்கள்.

‘நல்ல காரியம் செஞ்சீங்க, டாக்டரம்மா..!’ வைத்தியசாலை ஊழியர்கள் ஆளுக்காள் டாக்டர் அஞ்சலியைப் பாராட்டினார்கள்.

வெள்ளம் மெல்ல மெல்ல வடிந்து போனதால் தாயும் சேயும் நலமாக வீடு போய்ச் சேர்ந்தார்கள். தொடர்ச்சியான வேலைப்பளுவால் சோர்ந்துபோன டாக்டர் அஞ்சலியும் இரண்டு நாள் விடுப்பில் ஓய்வெடுத்துக் கொண்டாள்.

மூன்றாம் நாள் வேலைக்குச் சென்றபோது, ஹெல்த் மினிஸ்ரியில் இருந்து வந்த கடிதம் ஒன்று அவளுக்காகக் காத்திருந்தது. கையில் எடுத்தபோது, வெளியே வெள்ளைச் செருப்புச் சத்தமும் சிரிப்பும் அட்டகாசமாய்க் கேட்டது. மழை விட்டும் தூவானம் ஓய்ந்த பாடில்லை!

Print Friendly, PDF & Email

1 thought on “வெயில் வா மழை போ..!

  1. இதுவரை படித்த குரு அரவிந்தன் கதைகளிலேயே என் மனதைத் தொட்ட சிறுகதை இது. சென்னை வெள்ளம் பற்றி நன்கு விபரம் தெரிந்து கொண்டு சம்பவங்களைக் கோர்வையாக எழுதியிருக்கிறார்.
    அரசியல் அதிகார பலத்தை எதிர்க்கும் , டாக்டர்அஞ்சலியைப் போன்ற சில தைரியமான மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை இந்தக் கதையில் கோடிட்டுக் காட்டிய விதம் அருமை.
    மழை விட்டும் தூவானம் விடாத நிலை என்பது வருத்தத்துக்குறியது. SURVIVAL OF THE FITTEST என்ற டார்வினின் தியரிதான் ஞாபகம் வருகிறது.
    காலங்கள் மாறும். மாற வேண்டும்.
    குரு அரவிந்தன் கதைகள் திறனாய்வுக் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதற்கான நான்கு கதைகளைத் தேர்ந்தெடுக்கத்தான் அனைத்துக்கதைகளையும் படிக்கத் திட்டமிட்டுள்ளேன். எழுதுவதாக இருப்பின் நிச்சயம் வெயில் வா… மழை போ…! என்ற இந்தக் கதை என்னுடைய திறனாய்வுக்கு உட்படும் என்பது உறுதி.
    வாழ்த்துக்கள் , பாராட்டுக்கள்
    ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *