வெங்கி தாத்தாவும் வெற்றிலைப் பெட்டியும்!!!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 3, 2020
பார்வையிட்டோர்: 3,044 
 
 

‘வெண்ணிலாவும் வானும்போலே வீரனும் கூர்வாளும்போலே’ என்று பாடிய பாரதிதாசன் வெங்கட்டைப் பார்த்திருந்தால், ‘வெங்கியும் வெற்றிலைப் பெட்டியும் போலே!’ என்று இன்னொரு வரியை கட்டாயம் சேர்த்திருப்பார்!

வெங்கி என்று செல்லமாய் அழைக்கப்படும் வெங்கட்ராமன் வெற்றிலை செல்லத்திற்கு எப்படி அடிமையானார்???

அடிமை என்றால் அடிக்ட் ஒன்றும் கிடையாது! ஒரு எஜமான விசுவாசம்….. அவ்வளவுதான்…!!!

வேறு எந்தப் பழக்கமும் இல்லை ! எப்பவுமே இல்லையா என்றால் ஒருகாலத்தில் இருந்தது!

வெங்கட்ராமன் அமெரிக்கன் கல்லூரியில் , ஆங்கில துறையின் விரிவுரையாளராக இருந்து பின்னர் துறைத்தலைவராகி ஓய்வு பெற்றவர்….

அதன் HOD யாக மூன்று வருஷம் இருந்த போதுதான் அப்போது விசிட்டிங் ப்ரொஃபசராய் வந்த மிஸ்டர் பென்னட்டின் நட்பு கிடைத்தது….

இரண்டு வருஷம் இருவரும் சேர்ந்து வேலை பார்த்ததில் பைப்பில் புகையிலை பிடிக்க கற்றுக் கொண்டார்!

வெளிநாட்டிலிருந்து தருவித்த மார்ல்பரோ , லக்கி ஸ்ட்ரைக் மாதிரியான சிகரெட் பிடிக்கக் கற்றுக் கொண்டார்! எப்போதாவது ஸ்காட்ச்…விஸ்கி…..

ஒய்வு பெற்றதும் மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம் போகிற வழியில் திருநகரில் சின்னதாய் தோட்டத்துடன் ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டு செட்டில் ஆகி விட்டார்!

சிகரெட்… டிரிங்க்ஸ்… எல்லாம் விட்டு ரொம்ப நாளாயிற்று!

ஆனாலும் என்னமோ வேண்டியிருந்தது! அப்போது தொடங்கியது தான் இந்த வெற்றிலை போடும் பழக்கம்!

சின்ன தோட்டம் இருந்தது என்று சொன்னேனில்லயா ? அதில் தான் பாதிப்பொழுது போனது ! ஒருமாதிரி வீட்டுக்கு வேண்டிய காய்கறி, சுமதிக்கு முல்லைப்பந்தல் என்று திருப்தியாய் அமைந்து விட்டது !

ஒரு வெற்றிலை கொடியும் இருக்கட்டுமே என்ற விபரீத ஆசை தோன்றியது தப்பா?

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வெற்றிலைக் கொடி வளர்ந்தது !

அதிலிருந்த வெற்றிலையும் ‘ வா! வா ! என்று கூப்பிடவே இரண்டு வெற்றிலை எடுத்து போட்டுக்கொண்டாலென்ன என்று தோன்றியது !

ஆனால் அதனால் தனியாக இருக்க முடியாது என்றும் , பின்னால் ஒரு குடும்பமே இருக்கிறது என்றும் அப்புறம் தான் புரிந்தது !

சுண்ணாம்பு , கும்பகோணம் சீவல் , புகையிலை சகிதம் குடும்பத்தோடு குடியேறி விட்டது !

அதற்கென்று வீடு வேண்டாமா?? அப்படி வந்துதான் இந்த வெற்றிலைப் பெட்டி !!

வெற்றிலைப் பெட்டி என்று இரண்டு வார்த்தையில் சொல்லி விட முடியாது !

பளபளவென்று பித்தளையில் 31 cm உயரமும் , 51 cm நீளமும் 41 cm அகலமும் ( எந்த பெட்டியை வேண்டுமானாலும் அளந்து பாருங்கள் !!) , நல்ல அழகிய கைப்பிடியுடன்………

( போகிற இடமெல்லாம் தூக்கிக் கொண்டு போக வேண்டாமா ? ) ! கூடவே ஒரு சாவி துவாரமும் அதற்கு ஒரு பித்தளை சாவியும் !

( இதுதான் எனக்குப் புரியவில்லை வெற்றிலைத் திருடனை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா ? திருட வருபவன் பெட்டியோடல்லவா தூக்கிக் கொண்டு போவான் ? ) சரி இப்போது உள்ளே பார்க்கலாமா??

உள்ளே என்றால் வெற்றிலை பெட்டிக்குள்ளேதான்! இரண்டு பகுதியாக பிரித்திருக்கும்! நடுவில் அகலமாய் ஒரு தடுப்பு.. ! குட்டி குட்டியாய் மூன்று அறைகள்.. சீவல் , சுண்ணாம்பு , புகையிலை வைத்துக் கொள்ளலாம் ! மற்றொரு பக்கம் துளிர் வெற்றிலை !

கை நடுவில் வெற்றிலையை வைத்துக் கொண்டு, காம்பை லாவகமாய் கிள்ளி , பின்னால் திருப்பி , ஆள்காட்டி விரலால் சுண்ணாம்பை மிதமாக எடுத்து…

( சுண்ணாம்பு ரொம்ப கெட்டியாகவும் இல்லாமல் , தண்ணியாகவும் இல்லாமல்)தடவி விட்டு ,திருப்பி இரண்டாக மடித்து நடுவில் சீவலையும் , புகையிலையும் அளவாக வைத்து மூன்றாக மடித்து ,கட்டைவிரலுக்கும் , நடுவிரலுக்கும் இடையில் பிடித்துக் கொண்டு , வாயைத்திறந்து , ஒரு ஓரமாய் அடக்கி விட்டால் , வாயில் வைத்துக் கொண்டே கூட பேசலாம்!

( சினிமாவில் வரும் வரும் விளம்பரம் மாதிரி , சீவல் , புகையிலை வாய்ப்புற்று நோயை உண்டாக்கும் ! சொல்லி விட்டேன்)

வெற்றிலையில் இத்தனை சமாசாரம் இருப்பது வெங்கு தாத்தா வெற்றிலை போடும் போதுதான் தெரியவந்தது !!

வெங்கட்ராமன் எப்போது தாத்தாவானார்?? வெங்கட்ராமன் , சுமதிக்கு பிறந்தது ஒரே பிள்ளை! பெயர் ஆனந்த் ! மனைவி உமா!

அடிக்கடி மாற்றலாகும் வேலை ! பேரன் அஸ்வினுக்கு எட்டு வயது ! தாத்தா பாட்டியிடம் தான் இருந்து படிக்கிறான் ! அஸ்வினுக்கு தாத்தா என்றால் உயிர்!

வெங்கி ஒரு நாளைக்கு மூன்று வேளை வெற்றிலை போடுவார்! சாப்பிட்டு அரைமணியில் வெற்றிலைப் பெட்டியுடன் உட்கார வேண்டும் !

போட்டுக்கொண்ட ஒரு மணிநேரத்தில் வாயை நன்றாக கொப்பளித்து அலம்பி , இவரா வெத்தலை போட்டுக்கொண்டார் என்று கேட்கும் அளவுக்கு பற்பசை விளம்பரம் மாதிரி , பளிச் பற்களுடன் , புஸ்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்து விடுவார்!

வெங்கியின் பற்களைப் போலவே வெற்றிலைப் பெட்டியும் பளபளவென்று மின்னும்!

மாசம் ஒரு தடவை மட்டும் தான் சுமதிக்கு அதைத் தொட அனுமதி! புளி போட்டு நன்றாகத் தேய்த்து தருவாள்! வாராவாரம் வெங்கியே பிராஸ்ஸோ போட்டு துடைத்து வைத்துக் கொள்வார் !!

ஆனந்த் அம்மா பிள்ளை ! அம்மாவுக்கு சமையலறையில் எல்லா உதவியும் செய்வான்! அம்மாவுடன் எல்லா கோவிலுக்கும் போவான்! அப்பாவுடன் அதிக நேரம் செலவழித்ததேயில்லை!

ஆனால் பேரனோ நேர் எதிர்!

தாத்தாவையும் பேரனையும் இணைத்து வைத்ததே இந்த வெற்றிலைப் பெட்டி தான் ! எப்படி என்று கேட்கிறீர்களா ?

ராத்திரி சாப்பிட்டுவிட்டு வெற்றிலைப் பெட்டியுடன் உட்காருவாரில்லையா ? அப்போது அஸ்வினும் கூட உட்கார்ந்து கொள்வான் !

” தாத்தா ! தாத்தா ! நான் மடிச்சு தரட்டா?”

தாத்தாக்கு கசக்குமா ?

” சரி! ஹோம் ஒர்க் எல்லாம் பண்ணியாச்சா?”

” ஆல் டன் தாத்தா ! ”

பள்ளியில் கற்றதை விட தாத்தாவிடம் கற்றது தான் அதிகம்! அவர் ஒரு நடமாடும் எனசைக்ளோபீடியா…..

! ஆங்கில இலக்கியத்தை அப்படியே கரைத்து பேரனுக்கு ஊட்டிவிட்டார் !

இப்போது அஸ்வின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆனந்ரபாலஜி டிபார்ட்மெண்டில் Assistant Professor!

தன்னுடன் படித்த ஆண்ட்ரியா என்ற பிரேசில் நாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு பாஸ்டன் நகரில் செட்டில் ஆகி விட்டான் !

வெங்கட்ராமன் போய் இரண்டு. வருஷம் ஆகிறது! அப்பா போன பின் ஆனந்தும் உமாவும் திருநகர் வீட்டை விற்று விட்டு , சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு வீடு வாங்கிக் கொண்டு அம்மாவையும் கூட வைத்துக் கொண்டுவிட்டார்கள்!

அஸ்வினால் தாத்தா காரியத்துக்கு வர முடியவில்லை !

அவன் விடுமுறைக்கு வரும்போதெல்லாம் தாத்தாவுக்கு வெற்றிலை மடித்துத் தர தவறவே மாட்டான் ! அப்போது இருவரும் பழைய நினைவுகளில் மூழ்கி விடுவார்கள் !

ஆனால் கடைசியாக வந்த போது அவரால் வெற்றிலை முழுங்க கஷ்ட்டமாயிருந்ததால் நிறுத்திவிட்டதைப்பார்த்து அழுது விட்டான் !

தாத்தாவுக்கும் அவனுக்குமான நெருக்கத்தின் முடிச்சு சற்றே நெகிழ்ந்தது போன்ற உணர்வு !

கடைசியாக வந்த போது அஸ்வின் பாட்டியிடம் , தாத்தாவின் வெற்றிலைப் பெட்டியை மட்டும் பத்திரமாக எடுத்து வைக்கும்படி சொல்லியிருந்தான்!

அதனால் வீடு மாறும் போது சுமதி அதை மட்டும் பொக்கிஷம் போல எடுத்து தன் அறையில் வைத்துக் கொண்டிருந்தாள்!

வெங்கி போய் ஒரு வருஷத்தில் சுமதியும் போய்ச் சேர்ந்து விட்டாள்! அப்போதுதான் சரியாக ஆண்ட்ரியாவுக்கு ஜெய் பிறந்தான்!

சரியாக மூன்று வருஷம் கழித்து அஸ்வின் இப்போதுதான் இந்தியா கிளம்புகிறான்!

காரணம் இல்லாமல் இல்லை !
ஆனந்துக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை…. !

மற்றொரு முக்கிய காரணம் வெங்கி தாத்தாவின் வெற்றிலைப் பெட்டி !

ஒரு வாரமாகவே மனதை ஏதோ அரித்துக் கொண்டிருந்தது! தாத்தா அடிக்கடி கனவில் வந்தார்! ‘

அஸ்வின் ! என் வெற்றிலைப் பெட்டியை கொண்டு வரியா கண்ணா! !!’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தார் !

ஆண்ட்ரியா தான் உடனே ஊருக்கு போய் வரும்படி வற்புறுத்தி அனுப்பி வைத்தாள்!

வந்து இறங்கி ஒருவாரம் ஆஸ்பத்திரியில் சரியாக இருந்தது ! நல்லபடியாக சர்ஜரி முடிந்து வீட்டுக்கு வந்தாயிற்று !

அம்மாவுக்கும் பிள்ளைக்கும் தனியாக நேரம் கிடைத்த போது அஸ்வின் மெதுவாய் பேச்சை ஆரம்பித்தான் !

‘ அம்மா ! தாத்தாவின் வெத்தலப் பெட்டி ……”

உமா சத்தியமாய் அதைப் பற்றி மறந்தே போயிருந்தாள் !

‘ அஸ்வின் ! சாரிடா.. ! நான் கொஞ்ச நாளாய் எதைப் பற்றியுமே யோசிக்க முடியலை ! பாட்டி ரூம்ல தான் டிரெஸ்ஸிங் டேபிள்ள இருந்தது ! அந்த ரூம்ல எல்லாமே அப்படியேதான் இருக்கு ! போய்ப் பாரேன் !’

அஸ்வின் பாட்டியின் அறையில் நுழைந்தான் ! எவ்வளவு தேடியும் வெற்றிலைப் பெட்டி மட்டும் கிடைக்கவேயில்லை !

ஆனால் கப்போர்ட் டிராயரில் ஒரு சாவிக்கொத்தில் அதன் சாவி மட்டும் இருந்தது ! கருத்துப் போய் உருமாறியிருந்தது!

‘ அம்மா ! சாவி மட்டுமே கிடச்சுது ! பெட்டியக் காணமே ! ‘

‘ நல்லா தேடிப்பாத்தியா ?

‘ அஸ்வின் ! இப்போதான் ஞாபகம் வருதுப்பா ! நம்ப வீட்டுல கண்ணம்மான்னு
ஒருத்தி வேல பார்த்தா! பாட்டி ஒரு மாசம் படுத்த படுக்கையாக இருந்தப்போ ஒரு நர்ஸ் மாதிரி அவதான் பாத்துண்டா !

பாட்டி போனதும் ஒரு நாள் இந்த வெத்தலப்பெட்டியப்பாத்துட்டு

‘ அம்மா இத நான் எடுத்துக்கட்டான்னு கேட்டா ! அப்பாவும் முடியாம இருந்ததால் ஏதோ ஞாபகத்தில சரின்னுட்டேன்.

ஐயம் சாரிடா அஸ்வின்… நீ இவ்வளவு முக்கியமா அதைத் கேப்பன்னு தோணாம போச்சே ! மன்னிச்சுக்கோப்பா..”

அம்மா நிஜமாகவே நிறைய ஃபீல் பண்ணிதான் ஸாரி கேட்டாள்!

அஸ்வினுக்குத்தான் அத்துடன் முடிந்துவிடும் விஷயமாக இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை !

வெற்றிலைப் பெட்டி இல்லாமல் ஊருக்குத் திரும்புவதை கற்பனை பண்ணி பார்க்கக்கூடிய மனநிலையின் அவன் இல்லை!

இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலையில் ஆண்ட்ரியாவுடன் பேசினால் தான் அவன் மனம் சமாதானமடையும்!

ஆண்ட்ரியாவை உடனே அழைத்தான் .

‘ Hi honey ! ‘
‘ Hello Ash ! How is your dad ?’
” He is recouping well ! He was so happy to see me ! ”
” Could your find your grandpa’s betal nut box ??”
” No Andy ! It looks like I lost it !!!””
” Are you serious ?? “
” Yes dear !!!”

அதற்கு மேல் அவனால் பேசமுடியவில்லை !!
அவன் உடைந்து போனதை அவளால் உணர முடிந்தது !

“Cool Ash ! “

ஆண்ட்ரியா எதையுமே நிதானமாய் யோசித்து முடிவெடுக்கக் கூடியவள் !
அவள் தான் இந்த யோசனையை சொன்னாள் !

காலையில் எழுந்ததுமே முதல் வேலையாக முத்துவைப் பார்க்க கிளம்பினான் ! முத்து அவர்கள் காம்பவுண்ட் வாசலில் மொபைல் லாண்ட்ரி வைத்திருக்கிறான் !

வீட்டு வேலை முடித்து விட்டு போகும் பெண்கள் பத்து நிமிஷமாவது அங்கே உட்கார்ந்து‘ ஊர் ஞாயம் ‘ பேசிவிட்டுத்தான் போவார்கள் !

” முத்து ! நல்லாருக்கியா ? நான் உமாம்மா பையன்….!!”

முத்து அவனை சுலபமாக அடையாளம் கண்டு கொண்டான்…

“தம்பி ! எப்ப வந்தீங்க ! இப்பத்தான் முத தடவ நேர்ல பாக்கறேன்! . நீங்க வரப்போறதா உமா அம்மா சொன்னாங்க”

“ஆமா ! முத்து! வர முடியாமலே போச்சு !” ஆனா பாட்டியும் அம்மாவும் உன்னப்பத்தி நிறைய சொல்லுவாங்க !”

‘ முத்து ! எனக்கு ஒரு உதவி வேணுமே ! ‘

‘ சொல்லுங்க தம்பி ! ‘

‘ நம்ப வீட்டுல கண்ணம்மான்னு ஒருத்தர் வேல பாத்தாங்களே ! தெரியுமா ? ‘

‘ நல்லா தெரியும் தம்பி ! ‘

‘ அவங்க இப்போ எங்க இருக்காங்க தெரியுமா ? ‘

‘ நல்லா தெரியுமே ! ஏந்தம்பி ? ‘

‘ இல்ல ! பாட்டிய நல்லா பாத்துகிட்டாங்க! போய்ப் பாத்துட்டு வரலாமேன்னுதான்! ‘

‘ கண்ணம்மாக்கா ரொம்ப நல்ல மாதிரி ! இப்ப பேரப்பிள்ளை பிறந்திருச்சா! எல்லா வீட்டு வேலையும் விட்டுப்போட்டு வீட்டுல புள்ளய பாத்துக்குது ! மருமக வேலக்கி போறாப்பல !’

‘ வீடு தெரியுமா முத்து ! ‘

‘ இங்கதான் ! பக்கத்தால! வரச் சொல்லட்டுங்களா ? ‘

‘ இல்ல ! முத்து ! கூட்டிட்டுப் போவியா ? ‘

‘ என்ன தம்பி ! இப்படி கேக்குறீங்க ? ஆறு மணிக்கு இங்க வந்திருங்க ! நா கூட்டிட்டுப் போறேன் !

‘ தாங்ஸ் ! முத்து !’

சரியாக ஆறுமணிக்கு கிளம்பி விட்டார்கள் ! மந்தவெளி பஸ் ஷெட்க்கு எதுத்தாப்போல் ஒரு சந்துக்குள் நடந்தார்கள் !

சிறிய சிறிய ஒட்டு வீடுகள் , குடிசைகள் ! அஸ்வினால் நம்பமுடியவில்லை ! இப்படிப்பட்ட ஏழ்மைக்கு நடுவிலா அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான் !

மனதைப் பிசைந்தது !

‘ ஒரு சின்ன ஓட்டு வீட்டின் முன்னால் நின்று ‘ ‘கண்ணம்மா ! கண்ணம்மா ! ‘ என்று கூப்பிட்டான் முத்து!

வெளியிலிருந்து ஒரு குரல் கேட்டது! ‘

‘ யாரு ? முத்துவா ? ‘

கண்ணம்மா வெளியில்தான் நின்று தண்ணி பிடித்துக் கொண்டிருந்தாள்!

‘ கண்ணம்மா! உன்னியத்தேடி ஒரு விருந்தாளி வந்திருக்கு ‘

‘ யாரு இந்த நேரத்தில ? ‘

‘ நம்ப உமாம்மா வீட்டு தம்பி ! உன்னய பாக்கணும்னு சொல்லிச்சு ! பாப்பா நல்லாருக்கா ? எனக்கு நேரமாச்சு ! வரேன் தம்பி ! !’

கண்ணம்மா வாயிலிருந்த வெற்றிலையைத் துப்பிவிட்டு கையை முந்தானையால் நன்றாய் துடைத்துக் கொண்டு வந்து அஸ்வினைப் பார்த்தாள் !

‘ தம்பி யாருன்னு ?……’

‘ வணக்கம்மா ! நா சுமதியம்மா இருக்காங்களே ! முத்து வேல செய்யறாரே ! மதுரம் ஃப்ளாட்ஸ் ! அவங்க பேரன் ! ‘

‘ அஸ்வின் தம்பியா ? அப்பிடியே சுமதி அம்மாவ அச்சில வாத்தாப்பல !’

‘ உள்ளார வாங்க தம்பி ! ‘

சின்ன வீடு ! கச்சிதமாய் இருந்தது ! தூளியில் குழந்தை தூங்கிக் கொண்டிருந்ததது !

ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டாள் !

‘ மூணு மாசம் தான் ஆகுது! கைவிடாம அழுவுது ! மருமக வேலக்கி போகுது ! அதான் நான் எல்லா வீட்டையும் விட்டுட்டேன் !

தம்பி ! மூச்சுக்கு மூச்சு உம்பேருதான் ! ரொம்ப நாள் கிடக்கல ! மகராசி !….

தம்பி ! ஏதாச்சும் குடிக்கிறீங்களா ? கலரு வாங்கியாரச் சொல்லவா ?’

‘ அதெல்லாம் வேண்டாம் கண்ணம்மா ! ‘

‘டீ யாச்சும் குடிங்க தம்பி! ‘

‘ சரி ! டீ போட்டுக் குடுங்கம்மா!’

நல்ல சூடான டீயைக் குடித்துக்கொண்டே கேட்டான் !

‘ கண்ணம்மா ! நா உங்கிட்ட ஒண்ணு கேப்பேன் ! தப்பா நினைக்காதே ! ‘

‘ சொல்லு தம்பி ! ‘

‘ எங்கம்மா உங்களுக்கு ஒரு வெத்தலப்பெட்டி குடுத்த ஞாபகம் இருக்கா ? ‘

‘ ஏனில்லாம ? குடுத்த பொருள ஆயுசுக்கும் மறக்க மாட்டேன் தம்பி ! ‘

‘ அது உங்ககிட்ட இன்னும் இருக்கா ?

எல்லா தெய்வங்களையும் மனதில் வேண்டிக்கொண்டான் !

‘ என்ன தம்பி இப்படி கேட்டுப்பிட்டீங்க!
இப்ப கூட அதில வச்ச வெத்தலயத்தான் எடுத்துப் போட்டேன்!’

அவன் மனசு இறக்கை கட்டி பறந்தது ! அவள் அங்கிருந்த ஒரு பிறையிலிருந்து ஒரு பெட்டியைக் கொண்டு வந்தாள்!

அந்தபெட்டியைப்பார்த்து ஒரு வினாடி அதிர்ந்தான்!

கன்னங்கரேலென்று , அங்குமிங்கும் சுண்ணாம்பு கறையுடன் !

உடனே சமாளித்துக் கொண்டு எழுந்திருந்தான்!

‘ தம்பி ஒரு மினிட்டு! பெட்டியப் பாத்து பயந்துடாதிங்க ! இந்த பிள்ள பொறந்த பின்னே ஒரு வேல ஆவல ! இப்போ வரேன்!’

பத்தே நிமிஷத்தில் பழையபடி பளபளத்தது பெட்டி ! புதையல் கிடைத்த சந்தோஷத்தில் மனசு துள்ளிக் குதித்தது !

“கண்ணம்மா.. நான் இத திருப்பி கேக்கறது நியாயமே இல்லை…. .ஆனா இது எனக்கு வேணும்…

கண்ணம்மா ! இதுக்கு விலையா நான் எதுவுமே குடுக்க முடியாது ! ஆனாலும் நான் ஏதாவது குடுத்தா மறுக்காம வாங்கிப்பியா !”

‘ தம்பி ! உங்கிட்ட இத்த திருப்பி குடுக்கிற வரைக்கும் என்ன ஆண்டவன் உசிரோட வச்சானே ! அதே போதும் !

பாட்டி எம்பேரில லச்ச ரூபா பாங்கியில போட்டுட்டுத்தான் போயிருக்கு ! அதே போதும் சாமி ! உனக்கு ஒரு குறையும் வராது ! மகராசனா போய்வா!’

செக்யூரிட்டி செக் எல்லாம் முடித்து பாஸ்டன் செல்லும் விமானத்துக்குக் காத்திருந்தான் அஸ்வின்!

உமாவும் ஆனந்தும் வழியனுப்ப வந்தபோது…..

“அஸ்வின் ! My father is so lucky to have you as his grandson ! எனக்கு சிலசமயம் பொறாமையாகக்கூட இருக்கு ! ! Wish you a pleasant flight !”

“அப்பா ! அம்மா…!நீங்க இரண்டு பேரும் இனி அடிக்கடி வரணும் ! எனக்கு தாத்தாவுடன் கிடைத்த அனுபவம் போல அவனுக்கும் கிடைக்க வேண்டும்….

மடியில் வைத்திருந்த கேபின் பேகைத் திறந்து வெற்றிலை பெட்டி பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டான் !

அதை சூட்கேசில் வைத்து உள்ளே போட மனம் மறுத்து விட்டது !

தாத்தாவை எத்தனையோ தடவை பாஸ்டனுக்கு அழைத்திருக்கிறான் !

” தாத்தா ! உலகத்திலேயே மிகப்பெரிய யுனிவர்சிட்டி லைப்ரரி ஹார்வர்ட் தான் தாத்தா !

உங்களுக்கு பொழுது போவதே தெரியாது! அதில் உட்கார்ந்து படிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததே உங்களால் தான் !”

“இல்லை ! அஸ்வின் !

You are mistaken ! இந்த வெற்றிலைப் பெட்டியால்தான் !” என்று தன் Colgate பற்களைக் காட்டி சிரிப்பார் !

இப்போது தாத்தாவையே கூட்டிக்கொண்டு போவது போல ஒரு உணர்வு !

இன்னும் ஆண்ட்ரியாவிடம் சொல்லவில்லை !

ஸர்ப்ரைஸ் அவளுக்குப் பிடிக்கும்!!!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *