மொட்டை மாடியை விட்டு, கீழே இறங்கிய அவனை எதிர்கொண்ட அம்மா, மறுபடியும் அதே கேள்வியைத் கேட்டாள்.
திரும்பத் திரும்ப அம்மா கேட்பது அவனுக்கு எரிச்சலைக் தர, கோபமானான்.
“”எடுத்த முடிவில் எந்த மாற்றமுமில்லை; அதுக்கு நீ தடையா இருந்தா, உன்னை பலி கொடுத்து, முடிக்கறதைத் தவிர வேற வழியில்லை.”
“”பலியா கொடுக்கப் போறே… கொடுடா… சோறு போட்ட மண்ணை விக்கற உனக்கு, பெத்த தாயை வெட்டறது பெரிய விஷயமில்லேடா. உன்னை பெத்ததுக்கு, உன் கையாலே சாவறதுதான் சரியான தண்டனை.”
சாதாரணமாக ஆரம்பித்த அம்மா, அதற்கேரிய செயல்பாட்டுடன் ஒவ்வொரு கட்டமாக அரங்கேற்ற, அவனுள் பயம் எழுந்தது. அவசரப்பட்டு பேசிவிட்டோமோ என்பதாய் நினைத்தவன், பத்ரகாளியாய் ஆடிய அம்மாவை சமாளிக்க முடியாமல் திணறினான்.
உள்ளேயிருந்து வெளியே வந்த அவன் மனைவி புவனா, நடப்பதைப் பார்த்து திகைத்து, யாராவது பார்த்து விடுவரோ என்ற பதைபதைப்புடன் ஓடி வந்து, மாமியாரை தூக்கினாள்.
“”என்னை பலி கொடுக்கப் போறானாம். அப்புறம் உன்னை பலி கொடுப்பான்… அதுக்கப்புறம் புள்ளைங்களை கொடுப்பான்… இவனுக்கு பண ஆசை பிடுச்சுடுச்சு. எல்லாத்தையும் வித்திட்டுத்தான் உட்காருவான்.”
ஆவேசமாய் பேசிய மாமியாரை, கணவனை திட்டுவதன் மூலமே சமாதானப்படுத்த முடியும் என்பதை உணர்ந்த புவனா, “”வித்துடுங்க… நிலத்தோட நிறுத்த வேண்டாம்… வீடு, தோட்டம் எல்லாத்தையும் வித்திடுங்க…” என்றாள்.
மனைவியிடமிருந்து இப்படியொரு வார்த்தையை எதிர்பார்க்காதவன் அதிர்ச்சியடைந்தான். அதன் பிறகு, அங்கு நிற்பது பிடிக்காமல், சட்டையை போட்டுக்கொண்டு வண்டியோடு வெளியேறினான்.
மகன் வருத்தத்தில் வெளியேறுவதை புரிந்து கொண்ட அம்மா, அழுகையை நிறுத்திவிட்டு, அவனை வந்து தடுத்தும், அவன் நிற்கவில்லை. கணவன் போவதை பொறுக்காத புவனா, இப்போது, தன் கோபத்தை மாமியார் பக்கம் திருப்பினாள்.
வண்டி ஏரிக்கரையை தொட்டு, சித்தலப்பாடி, சிதம்பரநாதபுரம் பாலம் தாண்டி, மருத்துவ கல்லூரி மருத்துவமனையை கடந்த போதுதான், எங்கே போகிறோம் என்ற நினைப்பு அவனுள் ஏற்பட்டது.
“இது சரியா? இப்போது என்ன நடந்து விட்டது? தலைமுறை தலைமுறையாய் இருந்துவரும் நிலத்தை, பிளாட் போடுவதற்காக விற்கக்கூடாது என்று தானே அம்மா சண்டை போடுகிறார். அதற்காக கோபித்துக்கொண்டு வருவது சரியா?’ சமாதான எண்ணம் தலை தூக்கினாலும், அம்மாவும், மனைவியும் சேர்ந்து பேசியது நினைவில் வர, சமாதான உணர்வை துடைத்தெறிந்தான்.
“நான் என்ன, அந்த நிலத்தை விற்று, சொந்த செலவா செய்யப் போகிறேன். இப்போது இருக்கிற வீட்டின் மீது, இன்னொரு பத்து சதுரத்துக்கு வீடு கட்டவும், அம்மா, மனைவி, மகள் மூன்று பேருக்கும் நகை வாங்கவும், மகனுக்காக இரண்டு பிளாட் வாங்கிப் போடவும் தானே போகிறேன். அதை இவர்கள் ஏன் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். என் போக்கைப் புரிந்து கொள்ளாத இவர்களுக்கு, ஏன் நான் எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்க வேண்டும்?’
வண்டி மேம்பாலம் ஏறி கீழே இறங்க, கோவிலுக்குப் போவது என்ற எண்ணம் அவனுள் ஏற்பட்டது போல், நாராயணன் தெரு வழியாக, கீழசன்னிதியை அடைந்தவன், வண்டியை ஸ்டாண்ட் போட்டு பூட்டிவிட்டு, கோவிலுக்குள் நுழைந்தான். தனக்கென்று நிரந்தரமானவன் இந்த நடராஜப் பெருமாள் என்று நினைப்பு வர, லேசாக விம்மினான்.
வடக்கு பிரகாரம் வழியாக, நவலிங்க சன்னிதியை அடைந்து, எதிரில் இருந்த கட்டையில் உட்கார்ந்து கொண்டான். இவன் வருகையால் பாதிக்கப்பட்ட பள்ளி காதல் ஜோடி ஒன்று, திட்டிக் கொண்டே வெளியேறியது.
அவனுள், இறந்து போன அப்பா நினைவும், தன் கடந்த கால வாழ்வும், அதை ஒட்டிய பல்வேறு சிந்தனைகளும் கிளர்ந்தன.
“ஒரு குடும்பத்தை கட்டி காப்பாற்றுபவனுக்கு, எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்று தெரியாதா? ஏன் இப்படி இவர்கள் பேசுகின்றனர்? அப்புறம் எனக்கு என்ன மரியாதை இருக்கிறது?’
அவ்வப்போது, “வீட்டிற்குப் போகலாமா… நம்மை தேடுவரோ?’ என்ற நினைப்பு ஏற்பட்டாலும், தன்னை புறக்கணித்த அவர்கள் அவஸ்தைப்படட்டும் என்று நினைத்து, நேரம் போவது தெரியாமல் உட்கார்ந்திருந்தான்.
அர்த்தஜாம பூஜை முடிவடைந்து, பக்தர்கள் வெளியேறுவதும், பிரகார லைட்கள் அணைக்கப்படுவதும் தெரிய, அதற்கு மேல் இங்கிருக்க முடியாது என்பதால் புறப்பட்டான். எங்கு போவது என்ற சிந்தனையும் வந்தது. கோபுரம் தாண்டி வெளியே வந்தவுடன், தங்கை வனஜா வீட்டிற்கு போக முடிவு செய்தான்.
இன்று ஒரு நாள் இவர்கள் தவிக்கட்டும் என்ற சிந்தனை அவனுள் மேவியது. காட்டுமன்னார் கோவில் சாலையில் உருவாக்கப்பட்டிருந்த ஒரு நகரில், வெளிநாடு போன கணவன் சம்பாதித்து அனுப்பிய பணத்தை ஆதாரமாக கொண்டு, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, மகனையும், மகளையும் படிக்க வைத்து கொண்டிருந்தாள் தங்கை.
வீட்டின் அருகே போனவுடன், தன் வீட்டுக்கே போய் விடலாமா என்ற எண்ணம் பிறக்க, வண்டியை திருப்ப முற்பட்டான். அதற்குள் தங்கை பார்த்துவிட, வண்டியை தங்கை வீட்டிற்கு விட்டான்.
“”அம்மா போன் பண்ணுச்சு அண்ணா… வா சாப்பிடலாம்.”
உள்ளே சென்று, ஒரு டவலை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
“”சீக்கிரம் முகம் கழுவிட்டு வா… நான் தோசை ஊத்தறேன்.”
தங்கையின் பேச்சை கொண்டே, அம்மா அனைத்தையும் சொல்லியிருப்பாள் என்பதை புரிந்து கொண்டவன், பாத்ரூம் சென்று, முகம் கழுவிவிட்டு, திருநீரு பூசிக்கொண்டான்.
சூடான தோசையும், காரச் சட்னியும், வாய்க்கும், மனதுக்கும் நிறைவை தந்தது.
“”முட்டை தோசை ஊத்தட்டுமாண்ணா?”
“”ஊத்து…”
முட்டைதோசையுடன், பொடியும் வைத்தாள். வழக்கத்தை விட, இரண்டு தோசைகள் அதிகமாக சாப்பிட்டான்.
“”சாப்பிட்டு இங்கேயே படுங்கண்ணா. நாளைக்கு போகலாம்.”
சற்றுநேரம் வரை அவள் புகுந்த வீட்டு செய்திகளை கேட்டவன், கட்டிலை வெளியே எடுத்துப் போட்டு படுத்தான்.
“”உள்ளேயே படுண்ணா…”
“”வேண்டாம்… நீ போய் தாழ்ப்பாள் போட்டு படுத்துக்க… விடியற்காலையில எழுந்து போய்டுவேன்… தேடாதே.”
“”வீட்டுக்குத் தானே?”
இந்த வார்த்தையை கேட்டபோது, தங்கை கண்கள் கலங்கியதைப் பார்த்தான்.
“”உன் அண்ணன் கோழையில்ல… பயப்படாம படு. சனி, ஞாயிறு இங்கே இருக்க வேண்டாம்… வீட்டுக்கு வந்துடு.”
“”சரிண்ணா…”
படுத்த இருபது நிமிடங்களில் தூங்கிப் போனான்.
தங்கை, அவன் வந்த விஷயத்தை தாய்க்கு தெரிவித்தாள்.
மறுநாள் அவன் வீட்டிற்கு வந்தபோது, வாக்கிங் சென்று கொண்டிருந்த அம்மா, எதிர் கொண்டு அவனை நிறுத்தினாள்.
“”உன்னை விட எனக்கு நிலம் முக்கியமில்லேடா… அந்த புரோக்கர் இன்னைக்கு வருவானில்ல; அவன் கிட்டே பேசி முடிச்சிடு.”
அம்மாவிடமிருந்து அப்படியொரு பதிலை எதிர்பாராதவன், சந்தோஷத்தில் திக்குமுக்காடினான். வீட்டிற்குப் போனவுடன் மனைவியிடம் கூற, மனைவி, தான் அப்படி பேசிய காரணத்தை கூறி மன்னிப்பு கேட்டதுடன், அவன் சொன்ன செய்தியால் சந்தோஷமானாள்.
“”நிஜமாகவா சொன்னாங்க… எனக்கென்னவோ நம்பிக்கையில்லே. நீங்க சாப்பிட்டு தூங்கறீங்கன்னு, வனஜா போன் பண்ணின பிறகே, என்னை கூப்பிட்டு சாப்பாடு போடச் சொன்னாங்க. அதுக்குப் பிறகு நான் தூங்கிட்டேன். நடுவில ரெண்டு தடவ எழுந்து பார்த்தப்போ, அவங்க ரூமில லைட் எரிஞ்சுக்கிட்டு இருந்தது.”
மனைவி சொல்ல, அம்மா என்ன செய்திருப்பாள் என்பது அவனுக்குப் புரிந்தது.
அம்மா ரிட்டையர்டு டீச்சர். அவளுக்கு டைரி எழுதும் பழக்கமிருந்தது. விறுவிறுவென அம்மா ரூமுக்குள் போனவன், மேஜை மீதிருந்த டைரியை புரட்டினான்…
“என் மகன் பூர்வீக நிலத்தை விற்பதாக என்னிடம் தகராறு செய்கிறான். நிலம் வெறும் மண்ணல்ல, எதைப் போட்டாலும், அதை பல மடங்கு திருப்பித் தரும் ஆற்றல் மிக்கது. இவனும், இவன் தங்கையும் வளர்ந்தது, இந்த நிலத்தில் விளைந்த பொருட்களை உண்டுதான்.
“இந்த நிலத்தில் பாடுபட்ட பலரின் வயிற்றுப் பசி தீர்க்கப்பட்டதும், அவர்கள் பிள்ளை குட்டிகளுடன் வாழ்வதும், வளர்வதும், இந்த நிலம் தந்த தானியங்களால்தான்.
“எங்கள் வாழ்வில் மட்டுமல்ல, எங்கள் மூத்தோர்கள், முன்னோர்கள் வாழ்விலும் ஜீவனாய் இருந்த இந்த நிலத்தை, என் மகன் வெறும் மண்ணாகப் பார்க்கிறான்; மனையாக்கப் பார்க்கிறான். குடும்ப பெண்ணை சோரம் போகச் செய்வது போல, விளைந்த மண்ணை வீட்டு மனைகளாக்கி, மலடியாக்க பார்க்கிறான். இந்த நிலம் இவன் சம்பாதித்ததல்ல; இவன் தந்தை, தாத்தா சம்பாதித்ததல்ல; இவனுக்கு வழிவழி வந்த உடமை என்பதால், தலைமுறை தலைமுறையாக கட்டிக் காப்பாற்றி வந்ததை தாரை வார்த்துக் கொடுக்க நினைக்கிறான்.
“என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த நிலத்தை விற்றால், வசதியை பெருக்கிக் கொள்ளலாம்; ஆனால், இதில் விளைந்த தானியங்களை உண்டு, பல உயிர்கள் வாழ்ந்திருக்கின்றனவே! அதற்கு இவன் என்ன பதில் சொல்லப் போகிறான்.
“எந்தவொரு படைப்புக்கும், ஒரு நோக்கமிருக்கிறது. விளைநிலம் என்பது விளையத்தானே தவிர, வேறெதற்காகவும் அல்ல. மனிதர்களைத் தவிர, மற்ற ஜீவராசிகள் யாவும், அதை புரிந்து செயலாற்றுகின்றன. ஆனால், மனிதர்கள், எல்லாமும் தனக்கு கீழே என்ற தலைகனத்தில் ஆடி, தனக்கும், தன்னை சார்ந்த உயிர்களுக்கும், தேவையற்ற பிரச்னைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
“இயற்கைக்கு மாறுபாடான நிகழ்வுகளை மேற்கொண்டதால், புதிய புதிய நோய்களும், தேவையற்ற பிரச்னைகளும் உருவாகின்றன. சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு அடைந்து வருகிறது.
“நிலங்கள் யாவும், முன்பு பண்ணையார் வசமும், அதன் பின்னர் மிராசுகள் வசமும் இருந்தன. அப்போது இதில் விளைந்த வைகளை, தாங்களே எடுத்துக்கொள்ள வேண்டுமென்று அவர்கள் நினைக்கவில்லை. தன் பண்ணையாள் குடும்பம் வரை அதை நம்பி இருக்கிறது என்பது புரிந்து செயல்பட்டனர். காலப்போக்கில் ஒரு கட்சி, நீங்களெல்லாம் உழைத்து உழைத்து ஓடாகி விட்டீர்கள். அவர்கள் கொழுத்து கொழுத்து பணக்காரராகி விட்டனர் என்பதான பொய் பிரசாரத்தை தொடங்கியதன் விளைவு…
“பண்ணைகளும், மிராசுகளும் ஆட்டம் கண்டன. இன்று நிலம் வைத்திருப்போருக்கு, வேலைக்கு ஆள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியே கிடைத்தாலும், பொறுப்புணர்வுடன் செய்யும் நிலையில் யாரும் இல்லை. எல்லாம் மாறி விட்டது. தொலைநோக்கு இல்லாத அரசு, ஓட்டு பொறுக்கி அரசியல் வாதிகளின் செயலால், இன்று வேளாண்மை ஆட்டம் கண்டுள்ளது.
“இந்த நிலையில், நிலத்தை விற்பதில் தவறில்லை; ஆனால், தானிய உற்பத்தி செய்யும் நிலத்தை, மனைகட்டு களாக்கும் முயற்சிக்கு மகன் துணைப் போவது, துரோகமானதொரு செயல். மகன் முடிவு இப்படி இருக்கும் போது, நான் தடுத்து என்ன செய்ய முடியும். நடப்பது நடக்கட்டும் என ஒப்புதல் தர முடிவு செய்து விட்டேன்…’
– படித்து முடித்தவுடன், எதிரே மணக்கோலத்தில் இருந்த அம்மாவின் படத்தைப் பார்த்தான். தலைமுறை தலைமுறையாக இருந்து வந்த நிலத்தை, தான் மட்டும் விற்க நினைத்தது ஏன் என்ற சிந்தனை, அவனுள் எழுந்தது. சற்று நேரம் கழித்து, மீண்டும் படித்தான்.
காபியோடு வந்த மனைவி, அவனை கண்டித்தாள்…
“”எத்தனை தடவ சொல்றேன்… அவங்க டைரியை படிக்காதீங்கன்னு. சீக்கிரம் காபி குடிங்க. அந்த புரோக்கர் காலையிலேயே வர்றேன்னு சொன்னாரு…”
காபியை குடித்து முடிக்கவும், புரோக்கர் வரவும் சரியாக இருந்தது.
மனைவி நாற்காலியை எடுத்துப்போட, இவனும் போய் உட்கார்ந்தான்.
“”பேசின தொகைக்கு மேல எட்டு லட்சம் ரூபாய் தர்றேங்கிறாங்க… இதைச் சேர்த்தா, உங்க ஒன்றரை ஏக்கருக்கும், 45 லட்சம் கிடைக்குது. எப்போ பத்திர பதிவு வெச்சுக்கலாம்.”
புரோக்கர் கூற, பதில் சொல்லாமல் இருந்தான்.
மீண்டும் புரோக்கர் அதையே கூறினார்.
“”ஒரு கோடி கொடுத்தாலும், அந்த நிலத்தை நான் விக்கிற மாதிரி இல்லை.”
“”ஏன்?”
“”அது விளைகிற இடமாகவே இருந்துட்டு போகட்டும்; விலையாகிற இடமா மாத்த வேண்டாம்.”
புரோக்கருக்கு காபி எடுத்துக் கொண்டு வந்த புவனா, கணவன் பேச்சை கேட்டு ஆச்சரியமுற்றாள்.
“”தயவு செய்து தப்பா எடுத்துக்காதீங்க. இந்த நிலத்தை நான் கொடுக்க விரும்பவில்லை.”
புரோக்கர் ஏதோ கூற வர, அவன் கையெடுத்து கும்பிட்டு, “”இந்த விஷயத்தைப் பற்றி இனி பேச வேண்டாம். தலைமுறை தலைமுறையா விளைஞ்சுகிட்டிருக்கிற நிலம், இனியும் விளைஞ்சுகிட்டே இருக்கட்டும். இதை வித்தா, எனக்கு பணம் கிடைக்கும். ஆனால், என் தலைமுறைல ஒரு பெரிய தப்ப செஞ்ச கெட்ட பேரும் வந்து சேரும்.”
“”அப்ப ஒங்க முடிவு?”
“”நீங்க போயிட்டு வரலாம்.”
அவன் சொல்லி முடிக்க, புரோக்கர் வெளியேறினார்.
புரோக்கருக்காக மனைவி எடுத்து வந்த காபியை வாங்கி, ருசித்து குடித்தான். மனதில் ஒரு இனம் புரியாத நிம்மதி ஏற்பட்டதை உணர்ந்தான்.
– நெடுஞ்செழியன்(நவம்பர் 2010)
(டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதை – 1 )
நெடுஞ்செழியன்
சொந்த ஊர்: சிதம்பரம். “வளர்தொழில்’ இதழில் 13 ஆண்டு பணியாற்றியவர். இவரது கவிதைகள், பல இதழ்களில் வெளியாகியுள்ளன. இரு நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளது. முதல் சிறுகதை இது. சிதம்பரத்தில் நூல் விற்பனையகம் ஒன்றை நடத்தியவாறே, கடலூர் மாவட்டத்திற்காக சிற்றிதழ் ஒன்றையும் வெளியிட்டு வருகிறார்.