விதியே விதியே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 17, 2023
பார்வையிட்டோர்: 1,864 
 

சென்னையிலும் பெங்களூரிலுமாக வாழ்க்கை ஒடிக்கொண்டிருக்கிறது. பெற்ற குழந்தைகளுக்கு இறக்கைகள் முளைத்தன. அது அதுகளுக்கு பிழைப்பு எங்கோ, அங்கு அங்கு போய் அவரவர்கள் காலத்தை ஓட்டுகிறார்கள். என் பெரிய பையனுக்குக் கலிஃபோர்னியாவில் வேலை. அந்த அமெரிக்க வாழ்க்கை எல்லாம் நமக்குச் சரிப்படாது.

சின்னவனுக்கு பெங்களூரில் ஜாகை.. ஆக அந்த பெங்களூருக்குத்தான் சென்னையிலிருந்து அடிக்கடி போய் வர முடிகிறது. கலிஃபோர்னியா மாநிலத்து லாஸேஞ்சலிஸ் போய்வருவது பற்றி எல்லாம் நினைப்பதுகூட இல்லை. கொரானா அரக்கன் கண்விழித்தபிறகு அந்த மாதிரிக்கு இருந்த யோசனை தீய்ந்துதான் போனது.

என் வீடிருக்கும் முடிச்சூர் அருகே அடையாறு ஓடுகிறது. அந்த ஆற்றின் வடகரை குடியிருப்புப்பகுதியாய் இருக்கும் இந்த நேதாஜி நகருக்கும் தாம்பரத்திற்கும் ஒரு நான்கு கிலோமீட்டர் இருக்கலாம். வீட்டிலிருந்து தாம்பரம் வரைக்கும் ஆட்டோ கீட்டோ என்று பிடித்துக்கொண்டு போய்விடலாம். பிறகு புறநகர் ரயில் பிடித்துத்தான் சென்ட்ரல் போகவேண்டும். தாம்பரத்திலிருந்து சென்ட்ரலுக்கு நேர் ரயில எல்லாம் ஏது ? பூங்க்கா ரயில் நிலையத்தில் இறங்கித் தாண்டுத்தப்படியாய் மூட்டை முடிச்சுகளுடன் அந்த சென்ட்ரலுக்குள்ளே போகவேண்டும். அப்படியும் இப்படியும் மொத்தத்தில் நூறு படிக்கட்டுகள் ஏறி இறங்கவேண்டும். மின்சார ஏணி வேலை செய்யும் சமயத்தில் படுத்தும் கொள்ளும்.

தாம்பரத்திலிருந்து மும்பை கொல்கத்தா டில்லிக்கு ரயிலுண்டு ஆனால் இந்த பெங்களூருக்குத்தான் இல்லை. இதனை எல்லாம் நாம் எங்கேபோய்ச் சொல்லமுடியும்.

சென்னைக்குத் தாம்பரம் மாதிரி பெங்களூருக்கு கே.ஆர் புரம் அந்த கிருஷ்னராஜபுரம் நிறுத்தத்தில் டபுள் டெக்கர் ரயிலைவிட்டு இறங்கினேன். மதியம் மணி பன்னிரெண்டரை. என்னோடு என் துணைவியும் வந்திருந்தாள்.ரயில் நிலையம் என்றால் மாடிப்படியும் கூடவே இருக்கத்தானே செய்யும். அதனில் ஏறவும் இறங்கவும் அவளால் முடிவதில்லை. அறுபது வயது நெருங்கிய பெண்களுக்குப் படி ஏறுவதும் இறங்குவதும் சங்கடமாகவே இருக்கிறது .மின்சார ஏணி வசதி என்பதெல்லாம் இந்த ரயில் நிலையத்தில் இல்லவே இல்லை.

மாடிப்படி ஏறி ரயில் நிலையத்தின் அடுத்த வாயிற்பக்கம் இறங்கியிருந்தால் ராமமூர்த்தி நகருக்கு எளிதாகச்சென்றுவிடலாம். ஆட்டோ செல வுக்கும் ரூபாய் நூறுதான் ஆகும். மாடிப்படி ஏறுவது நம்மால் ஆகாது என்றால் கே ஆர் புரத்தின் மெயின் கேட் வழியாகத்தான் வெளியே வரவேண்டும். ஆட்டோவில் ஏறி ஊர் சுற்றிக்கொண்டு அந்த ராமமூர்த்தி நகருக்குச் செல்லலாம்.

அப்படித்தான் நானும் என் மனைவியும் ஒரு ஆட்டோவைத்தேடிக்கொண்டு மெயின் கேட் வாயிலில் நின்றோம். பெங்களூர் ஆட்டோக்காரர்களுக்கு அனேகமாக இங்கு புழங்கும் எல்லாபாஷைகளும் தெரிந்தே இருக்கின்றன. கன்னடம் தமிழ் தெலுங்கு மலயாளம் இந்தி ஆங்கிலம் என ஆறு பாஷைகள் தெரிந்தவர்கள்தான் இந்த பெங்களூர்வாசிகள். இன்னும் கூட மராட்டி கூர்க் என மொழி அறிந்தவர்கள் இங்கே இருக்கிறார்களாம். நான்தான் அவர்களைப் பார்த்ததில்லை.

‘சார் ஆட்டோ சார் ஆட்டோ ‘ நான்கைந்து ஆட்டோக்காரர்கள் என்னை வழிமறித்தார்கள்.

‘நான் ’ராகவேந்திரா சர்க்கிள்’ போகணும்’

‘அப்பிடி போங்க அதுக்கு வேற ஆளு வேற ஆட்டோகாரங்க’ டிரைவர்கள் எங்களைத்தள்ளி தள்ளி விட்டார்கள்.

கடைசியாக ஒரு ஆட்டோக்காரர் எங்களை வழி மறித்து,’ எங்க போவுணும்’ என்றார்.

’ராகவேந்திரா சர்க்கிள் ராமமூர்த்தி நகர்’

‘ஆட்டோல ஏறுங்க’

‘எவ்வளவு கேக்குற’

‘ஏரநூற்று அம்பது’

‘எர நூறு வாங்கிக’

‘இண்ணைக்கு ஆட்டோ கேஸ் என்ன வெல விக்குது’

‘எப்பவும் ஆட்டோவுக்கு நூறு நூத்தம்பது தர்ரது’

‘அது மாடிப்படி ஏறி அங்காண்ட போயிட்டா நூற்றம்பதுதான்’

‘அது முடியாமதான இந்தப்புறமா நிக்குறம்’

‘அப்பறம் என்னா பேசுற’

என் மனைவிக்கு ஆட்டோவில் கால் தூக்கி எடுத்து வைக்க முடியாது. ’அந்தப்படி உயரம். அந்த உயரம் என்னால் முடியவே முடியாது’ என்பாள். எப்போதும் அப்படித்தான். எப்போதும் என்றால் அது சமீபமாகத்தான். ஒரு நான்கைந்து ஆண்டுகளாக இருக்கலாம்.

ஆட்டோக்காரன் ஒரு செங்கல்லை எங்கிருந்தோ தூக்கிக்கொண்டு வந்தான். கீழே கிடத்திப்போட்டு ‘இதுல மொத ஏறிக பெறகு வண்டில ஏறு நாங்களும் தெனம் ஜனத்த பாக்குறம்ல’என்றான்.

செங்கல்லில் கால் வைத்து என் மனைவி மெதுவாக வண்டிக்குள் ஏறிவிட்டாள். அவள் நகர்ந்து உட்கார்ந்தாள். நானும் அமர்ந்து கொண்டேன். ஆட்டோக்காரன் வண்டியை எடுத்தான். கொல்கத்தாவின் தொங்கு பாலம் போல் ஒரு பெரிய பாலம் சாலையில் தொங்கிக்கொண்டிருந்தது. அதனை ஒரு புறமாக்கி எங்கள் ஆட்டோக்காரன் ஒரு ம ஃப்சல் பேருந்து நிலையம் வந்தான். ஊர் பேர் எல்லாம் அங்கு எழுதியில்லையே. ஆட்டோக்காரன் சர்க்கு புர்க்கு என்று வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தான். ஐ டி ஐ க்கு பக்கமாய் வந்து சேர்ந்தான் ஐ டி ஐ கட்டிடங்கள் இன்னும்தான் பிராணனை வைத்துக்கொண்டு இருக்கின்றன. இங்கு அட்டைக்கருப்பு நிறத்தில் சம்மணமிட்டு அமரும் தொலைபேசியைத் தயாரிப்பார்கள். அது எல்லாம் நின்று போய்எவ்வளவோ காலம் ஆகிவிட்டது.பொதுத்துறைக்கு எல்லாம் பிரதமர் நரசிம்ம ராவ் காலத்திலேயே குழிவெட்ட ஆரம்பித்துவிட்டார்கள்..

மய்ய அரசு இந்த ஐ டி ஐ அடிமண்ணை பல்லாயிரம் கோடிகளுக்கு காசாக்கலாம். அதற்கு ஆட்களும் நேரமும் இன்னும் பொறுத்தமாக அமையவில்லை அவ்வளவுதான்

ஆட்டோக்காரன் வண்டியை தட்டுக்கு புட்டுக்கு என்று பிரேக் போட்டு போட்டு ஓட்டிக்கொண்டு வந்து, ஐ டி ஐ செண்ட்ரல் ஸ்கூல் அஞ்சலகம் பிஎஸ் என் எல் வாடிக்கையாளர் அலுவலகம் எஸ்.பி ஐ கிளை என்று தாண்டித்தாண்டி ஐ டி ஐ டவுன்ஷிப்பை விட்டு ஒரு வழியாய்க் கரை ஏறினான்

இந்தப்பகுதியில் ஐ டி ஐ பெரிய பூங்காவுக்கு எதிரே ராகவேந்திரர் கோவில் ஒன்று கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது. அதனைப்பார்த்துக்கொண்டே வந்தேன். கோவிலுக்குப்பக்கமாய் இருந்த ராட்சத அரசமரத்தின் கீழே ஸ்வாமி படங்கள் ஏகத்துக்கு உடைந்தும் உடையாமலும் பரிதாபமாய்க் கிடந்தன. அதன் அருகே ’ஸ்வாமிபடங்கள் இந்தக் குப்பையிலா? வேண்டாம் பாவம் மகாபாவம்’ என்று எழுதி விளம்பரம் ஒன்றை வைத்திருந்தார்கள். அரச மரத்தோடு உடன் உறையும் வேப்பமரம்தான் கண்ணில் படவில்லை

ஆட்டோ டிரைவர் ஒரு மாதிரியாக வண்டியை ஓட்டியது நன்றாகவே தெரிந்தது. கல்கரே ரோடில் வளைய வேண்டியவன் முன்னமேயே வளைந்துசந்து சந்து எனப் போனான்.எனக்குச் சந்தேகம் வந்தது.

‘எங்கப்பா போற நீ’

‘நீ டென்ஷன் காட்டாதே’

ஆட்டோக்காரன் எனக்குப்பதில் சொன்னான்.

ஒரு தெருவின் பின் அடுத்த தெருவாகப் போய்க்கொண்டிருந்தான். சம்பந்தமே இல்லாத தெருவெல்லாம் வந்தது. எனக்கும் பழகிய ஊர்தானே இது.

‘ஏம்பா எடம் தெரியலன்னா யாரையாவது கேக்குலாம்’

‘நீனு டென்ஷன் காட்டாதே’

என் மனைவி அவன் குடித்திருப்பதைத்தெரிந்துகொண்டு’ நீங்க கொஞ்சம் பொறுமையா வாங்க’

எனக்கு அறிவுரை சொன்னாள்.

‘ஏம்பா கோஷி ஆஸ்பிடல் தெரியுமா’ இல்லே லோடஸ் கல்யாண மண்டபம் தெரியுமா இல்லே சைதன்யா டெக்னோ ஸ்கூலாவது தெரியுமா’

‘எல்லாம் எனக்கு தெரியும் நீ டென்ஷன் காட்டாதே’

கோஷி ஆஸ்பிடலையும் தாண்டி வேறு எங்கோ போய்க்கொண்டிருந்தான்.

‘வண்டிய நிறுத்து நாங்க இறங்கிகறம்’

வண்டியை நிறுத்தினான் யார் செய்த புண்ணியமோ.

‘வண்டியை விட்டு எறங்காதே’

எங்களுக்குக் கட்டளையிட்டான்.

எதிரே இவனைப்போலவே நடந்து வந்த இன்னொருவனை நிறுத்தி’ ராகவேந்திரா சர்கிள் எப்பிடி போவுணும்’

ஆட்டோக்காரன் கேள்வி கேட்டான்.

அவனும் குடித்துத்தான் இருந்தான்.

‘எலே வண்டிய ராகவேந்திரா சர்கிள் தாண்டி ஓட்டிகினு வர, வந்த வழியே ஒரு கிலோமீட்டருக்கு போ ரைட்டுல திரும்பு எதுத்தாப்புல ராகவேந்திரா சர்கிளு அப்பிடியே அடையாறு, ஆனந்த பவனு அடுத்தாப்புல லோடஸ் மண்டபம் எங்க எங்கயோ இவாள இட்டுகிணு அலையற’

அவன் பதில் சொன்னான்.

‘உன் வண்டியே எங்களுக்கு வேணாம் நாங்க வேற எதானா பாத்து போய்க்கிறம்’

‘உங்களை கும்புடறன் ஒண்ணும் சொல்லாதிங்க எறங்கிடாதிங்க வண்டியிலயே இருங்க’

எங்களிடம் சொன்னான். இரண்டு கைகளாலும் கும்பிட்டான்.

‘ நா அளவா குடிப்பன்.அவன் சாதியில அய்யிரு ஆட்டோ ஓட்ட வந்துட்டான் அளவு கிளவு தெரியாம குடிப்பான். அய்யிரு சனம் நல்லா இருந்தா முருங்கக்கா வேணாம் கத்திரிக்கா வேணாம் வெங்காயம் வேணாம்னு பேசும். கெட்டு போனா ஆமய சுட்டு, பாம்ப சுட்டு, பல்லிய சுட்டு தின்னும். பேட்டரி கட்ட பிளாஸ்டிக் செருப்பு ஊறலுல போட்டு சாராயம் காச்சுனாலும் வாங்கி குடிச்சி குண்டி வெடிச்சி சாவும். நீங்க எறங்கிகிங்க வேற எதனா ஆட்டோல போவுலாம்’ எதிரே நடந்து வந்தவன் எங்களுக்குச்சொன்னான்.

என் மனைவிக்கு ஆட்டோவில் ஏற ஒரு செங்கல் உயரம் வேண்டும்.இறங்கவும் எதாவது உயரமாக வேண்டும். நாங்கள் எங்கே ஏறுவது? எங்கே இறங்குவது? எனக்குள்ள பிரச்சனையே வேறு.

‘செத்த பொறு சாரு. டென்ஷன் மட்டும் நோ’ என்றான்.

வண்டியை U டர்ன் போட்டான். அதே சாலையில் போய் ரைட்டில் திரும்பி ராகவேந்திர சர்கிள் தாண்டினான். என் சின்ன பையன் வீட்டு வாயிலில் டக்கென்று நிறுத்தினான்.

அடையாறு ஆனந்த பவனுக்கும் லோடஸ் கல்யாண மண்டபத்துக்கும் இடையுள்ள தெருவில் முதல் வீட்டில்தானே நாங்கள் இறங்க வேண்டும்.

நானும் என் மனைவியும் அப்படியே இறங்கினோம்.

எங்கோ தெரு எல்லாம் தேடி ஒரு செங்கல் கொண்டு வந்தான் ‘ அம்மா இப்ப எறங்குங்க’ என்றான்.என் மனைவிக்குப்பெரிய ஒத்தாசை அது.

‘ஆட்டோகாரன் ஊர சுத்தி சுத்தி வந்தான் பெட்ரோல் என்ன வெல விக்கறது ஒரு ஐம்பது ரூபா சேர்த்து குடுங்க ஒண்ணும் காச பாக்கவேணாம்’

என் மனைவியா சொல்வது நான் பார்த்துக்கொண்டேன். அவள் தான் சொன்னாள்.

முந்நூறு ரூபாய் எடுத்து ஆட்டோக்காரனிடம் கொடுத்தேன்.

‘சார் வேணாமுங்க இந்தாங்க உங்க ஐம்பது நா பேசுனது எர நூத்து அம்பது அது போதும் எனக்கு. நடந்த தப்பு என் தப்புதான்’

‘ஆட்டோவின் ஸ்டேரிங்க் பிடித்தபடி ஆட்டோ டிரைவர் எங்களையே பார்த்தான்.

அவன் கண்கள் குளமாகியிருந்தன. அது எதற்காகவும் இருக்கலாம்.

‘அவன் அழறானா என்ன’

‘வேற எதானா பேசேன்’ என் மனதிலும் சங்கடம். என் மனைவியை நோக்கினேன்.

‘எங்க போறிங்க அடுத்தாப்புல’ ஆட்டோக்காரனைக்கேட்டேன். இது நாம் கேட்க வேண்டுமா? என்ன.

‘சாரு தெரியாதமாதிரிக்கு கேக்குறீங்க’

சொல்லிக்கொண்டே வண்டியை ஓட்டினான்.

‘அவன் எங்க போறான்னு தெரியுமா’

‘திரும்பவும் கே ஆர் புரம் ரயில்வே ஸ்டேஷனுக்குத்தான்’

‘அதுதான் இல்ல அவன் நேரா அந்த பலான கடைக்குப் போறான்’

‘அது எப்பிடி சொல்றீங்க’

‘பேசனதவிட பத்து ரூபாயாவது தனக்கு கூட வேணும்னு சண்ட போடணும். அப்பிடி போடுறவன்தான் சரியாத் தொழில் பண்ணுற ஆட்டோக்காரன். அவன்மட்டும் தான் ஆட்டோ ஸ்டேண்டுக்கு திரும்பவும் போவான். சவாரியும் அடுத்ததா ஏத்துவான்.’

‘இல்லன்னா’

‘அவன் அதே நெம்பர் கடைக்குத்தான் போவான்’

’அட நாராயணா’ மனைவி எனக்குப் பதில் சொன்னாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *