கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 5, 2022
பார்வையிட்டோர்: 2,297 
 
 

(1992 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குடாக்குடல் உள்வாங்கி தெடுந்தூரம் ஓடி உப்பங்கழி யாய்ப் பரந்து கிடந்தது அந்த உப்பங்கழியின் சங்கமத் திட்டில், மணல் மேடையில் நான் நின்று கொண்டிருந்தேன்.

உப்பங்கழியில் வீச்சு வலை வீசி மீன் பிடித்துக்கொண் டி.ருந்தவர்கள் ஒவ்வொருவராகத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். காலை நேரத்து வெய்யில் முதுகுத் தோலை உரித்து விடுவது போலச் சுள்ளென் றடித்துக் கொண்டிருந் தது. சூரிய கிரணங்களைத் தன்னுட் பிரதபலித்துக் குடாக்கடல் தகதகத்து மின்னிக் கொண்டிருந்தது. தூரத்தே தெரிந்த வள்ளங்களும் விசைப்படகுகளும் தங்கள் மீன் பிடியை முடித்துக் கொண்டு கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தன.

இன்னுஞ்சற்று நேரத்தில் அந்தச் சங்கமத்திடல் மணற்றிட்டுகளை கட்டிவிடும். மீன் வாங்குவதற்கு ஆயத்தமாகச் சைக்கிளிற் பெட்டிகளைக் கட்டிக்கொண்டு மீன் வியாபாரிகள் வந்து விட்டார்கள். மணற்றிட்டின் பின்னாற் பசுமையாய்ப் பரந்து கிடந்த அடம்பன் கொடி களில் ஊதா நிறப்பூக்கள் மின்னிக் கொண்டிருந்தன. அந்த அடம்பன் கொடிப்பசுமைக்கு அப்பால் நீண்டு நிமிர்ந்து குடைவிரித்திருந்த தென்னை மரங்களின் நடுவே கீற்றுக் கொட்டகையிலிருந்து தேநீர் தயாரிக்கும் ஓசை கடகடவென்று கேட்டுக் கொண்டிருந்தது. கொட்டகைக்கு முன்னே நீண்டு கிடந்த தென்னங்குத்தி களில் குந்திக் கொண்டு பணிசைக் கடித்துத் தேநீரைச் சுவைத்துக் கொண்டிருந்தனர் மீன் வியாபாரிகள்.

நான் உப்பங் கழிப் பக்கமாகவே பார்த்துக் கொண் டிருந்தேன். கொழும்பிலிருந்து வந்த என் மகனுக்கு நண்டு வேண்டுமாம். நண்டுக் கூட்டுக்காரர்கள் கரைக்கு வர இன்னும் சற்று நேரம் ஆகுமாம் அதுவரை நான் தரித்திருக்க வேண்டும். நான் உப்பங்கழிப் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தேன். காலை வெய்யல் முதுகுத் தோலை உரித்துக் கொண்டிருந்தது.

எதிரேயிருந்த தென்னந்தோப்புக்குள் அங்குமிங்கு மாகச் சிதறிக் கிடந்த குடிசைகள் ஒன்றிலிருந்து இரண்டு சிறுவர்கள் உப்பங்கழியின் கரையோரமாகச் சென்று கொண்டிருந்தார்கள். ஒருவனது கழுத்தைச் சுற்றி வலைத்துண்டு ஒன்று சால்வையாகத் தொங்கிக் கொண்டிருந்தது.

நான் அச்சிறுவர்களைக் கவனித்தேன். பத்துப் பதினொரு வயதிருக்கும். அகநானூறு கூறும் நெய்தல் ‘நிலத்துப் புன்தலைச் சிறுவர்கள். தங்கள் சாரத்தை மடித்துக் கொடுக்குக் கட்டியிருந்தார்கள். உடம்பிலே ‘சட்டையில்லை. வலைத்துண்டுதான் மார்பிற் தொங்கிக் கொண்டிருந்தது. ஆனால் அந்த வலைத்துண்டும் கண்ணறுந்த பழைய வலை. இந்த வலைத்துண்டைக் கொண்டு என்ன செய்யப் போகிறார்கள்? எனசகு விளங்க வில்லை .

நான் அந்தச் சிறுவர்களையே பார்த்துக் கொண்டி ருந்தேன். அவர்கள் உப்பங் கழியின் கரையோரமாக யமன் திக்கான தென் திசையை நோக்கி யமகிங்கரர்களைப் போலப் போய்க் கொண்டிருந்தார்கள்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை சென்ற அந்த யமகிங் கரர்கள் உப்பங்கழியின் கரையிலே கரை கட்டி வளர்ந் திருந்த ஆற்றுக்கோரைகளின் ஓரமாகத் தங்கள் வலையை விரித்து விட்டுச் சற்றுத் தூரமாகச் சென்று மேட்டிலேறித் ‘தென்னை மரங்களின் பின்னாற் பதுங்கிக் கொண் பார்கள். –

அந்தச் சிறுவர்கள் எதைப் பிடிக்க வலை கட்டியிருக்கிறார்கள் என்று எனக்கு விளங்கவில்லை. நிச்சயமாக மீன் பிடிப்பதற்காக அல்ல. மீன் பிடிப்பதாயின் ஆற்றுக்குள் அல்லவா வலையைக் கட்டவேண்டும். ஆனால் இவர்கள் கரையிலே வலையைக் கட்டியிருக்கிறார்கள்.

எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போமே என்ற எண்ணத்துடன் நானும் அடம்பன் கொடிகளைத் தாண்டிக் கரையிலிருந்த தேநீர்க் கடையையும் தாண்டி தென்னந்தோப்பினுள் நுழைந்து, தென்னை ஒன்றிற் சார்ந்து நின்றுகொண்டு சிறுவர்களையும் அவர்கள். விரித் துள்ள வலையையும், நான்வந்த காரியத்தைக்கூட மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான் சார்ந்து கொண்டு நின்ற தென்னை மரத்திற்குத் தெற்காக, வானுற ஓங்கி வளம் பெற வளர்ந்த ஒரு பனை மரம். அந்த ஒற்றைப் பனை மரத்தில் ஒரு பறவைக்கூடு.

அந்தக் கூட்டை நான் கூர்ந்து பார்த்தேன். கடல் நாரை ஒன்றின் கூடு அது. சுள்ளிகளையும், அலம்பல் களையும் அடுக்கிக் கோத்த அந்தக்கூடு பனை உச்சியில் வட்டினிடையே இருந்தது. பனைமட்டையில் ஆணும் பெண்ணுமாக இரு சின்னஞ்சிறிய நாரைகள், ஏதோ பேசிக் கொண்டிருந்தன.

கூட்டினுள்ளே அவைகளின் குஞ்சுகள் இருந்தன. அவைகளின் ‘கீச்கீச்’ என்ற சத்தம் என் காதுகளில் விழுந்து கொண்டிருப்பதைப் போன்ற ஒரு பிரமை!

நான் அந்தக் கூட்டையும் நாரைகளையும் பார்த்துக் கொண்டிருக்கையில் திடீரென ஆண் நாரை உயர எழுந்து தெற்குப் பக்கமாகப் பறந்து சென்றது. தன் பேடைக்கும் குஞ்சுகளுக்கும் இரைதேடச் செல்கின்றதோ, ‘ அது யமன் திக்கான தென்திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

பறந்து சென்ற நாரை கண்ணுக்கு மறைந்ததும், நான் மீண்டும் உப்பங்கழியை நோக்குகிறேன்.. வீச்சுக்குப் போன மீனவர்கள் எல்லாம் உப்பங்கழியை விட்டு வெளியேறிவிட்டார்கள். அவர்கள் தத்தம் பறிகளிற் கொண்டு வந்த காரல், திரளி, மணலை போன்ற மீன்கள் விற்பனையாகிக் கொண்டிருந்தன. கடலுக்குச் சென்ற வள்ளங்கள், விசைப்படகுகளிற் சிலவும் கரைக்கு வந்து விட்டன. சீலாவும் பாரையும் சுறாவும் அவைகளிலிருந்து இறக்கப்பட்டு விற்பனையாகிக் கொண்டிருந்தன. நண்டுக்கூட்டுக்காரர்கள் இன்னமும் வரவில்லை. நான் இன்னமும் தாமதிக்க வேண்டும்! தாமதித்தேன்.

ஒரு மணித்தியாலம் சென்று விட்டது! நான் நண்டுக் கூட்டுக்காரர்களின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

நான் அசந்து இருக்கையில் நான் ஏற்கனவே கண்ட இரு மீனவச் சிறுவர்களும் தங்கள் வலைகளோடு குதூகலமாக வந்து கொண்டிருந்தார்கள். ஒரு சிறுவனின் கைகளில் நாரை ஒன்று இருந்தது!

அலர்கள் எதற்கு வலை விரித்தார்கள் என்பது இப்போது எனக்கு விளங்கிவிட்டது. பனைமரத்திலிருந்து தெற்கு நோக்கிப் பறந்த நாரை தான் இப்போது அவர்கள் கைகளிற் சிக்கிக் கொண்டிருக்கிறது! அது தன் சிறகுகளை அடித்துத் தன்னை விடுவித்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தது.

நான் பனைமரத்தை நிமிர்ந்து பார்க்கிறேன், பனை மரத்திலிருந்த பெண் நாரை மரத்தைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டு மாரடித்துக் கதறும் பெண்ணைப் போலச் சிறகுகளை அடித்துக் கதறிக் கொண்டிருந்தது. கூட்டுக் குள்ளிருந்த குஞ்சுகளும் அபயக் குரலெடுத்துக் கதறிக் கொண்டிருப்பதாக என் பிரமை!

ஐயோ! அந்தக் குஞ்சுகளுக்கும் தாய்க்கும் யார் இனி இரை தேடிக் கொடுப்பார்கள்? அவைகள் எப்படி வாழப் போகின்றன?

என் மனம் அழுகிறது. இதயத்தை தகித்து நின்ற ஏக்கத்தின் சுவாலையாய் நெடுமூச்செறிந்தேன். நான் குமைந்து போனேன்.

சைக்கிள் ஹாண்டிலில் நண்டுப்பையைக் கொளுவிக் கொண்டு, நான் சைக்கிளை உருட்டியபடியே தென்னஞ் சோலையினூடே, மனிதர் நடந்தது விழுத்திய தடத்தினுாடே சென்று கொண்டிருந்தேன். ஒரு பெர்லாங் தூரம் நடந்தாற்தான் மெயின்ரோட்டை அடையலாம். அதுவரை சைக்கிளை உருட்டித்தான் செல்லவேண்டும்!

தென்னை மரங்களினுாடே அங்குமிங்குமாக மீளவக் குடிசைகள், குடிசைகளின் முன்னால் இரு தென்னை மரங்களைத் தொடுத்துக் கட்டிய கப்புகளில் வலைகள் காய்ந்து கொண்டிருந்தன. வலைகளின் பக்கலில் தோணிகளின் சுக்கானான சவளும், துடுப்பு வலிக்க உதவும் தண்டு மரங்களும் (தெண்டு மரங்கள் இலக்கணப் பிரயோகமாயிருக்கலாம்) சார்த்தப்பட்டிருந்தன.

நேரம் மதியத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. ஆனாலும் தென்னை மரங்கள் குடை கவித்துச் சூரியக் கதிர்களை மறைத்திருந்தன. மெதுவாக அசையும் சோழகத்தில் கருவாட்டு வாடை மிதந்து வந்து கொண்டி ருந்தது . நான் சைக்கிளை உருட்டியபடி நடந்து கொண்டிருந் தேன் .

தூரத்தே ஒரு குடிசையிலிருந்து அவலச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. அக்குடிசையின் முன்னால் மக்கள் குழுமி நின்றனர்.

குழுமி நின்ற மக்களின் கசமுசச் சப்தங்களுக்கு மேலாக ‘என்ர தாலு குஞ்சுகளையும் எப்படிக் காப்பாத்தப் போறன் ஐயா’ என்ற பெண்ணின் அவலக் குரல் காற்றில் மிதந்து வந்து என் இதயத்தைத் தொட்டது.

நான் என் சைக்கிளைத் தென்னை மரம் ஒன்றிற் சார்த்தி வைத்து விட்டு அக்குடிசையை நோக்கி நடந்தேன். குடிசையை நெருங்க நெருங்க அவலக் குரலும் ஒப்பாரியும் அதிகரித்துத் தெளிவாக என் காதுகளில் விழுந்தது.

குடிசையை அண்மித்து விட்டேன்.

எனக்கு நன்கு தெரிந்த சந்தியாகுவின் குடிசை தான். மீனவனுக்கே உரித்தான வைரித்த சரங்களும், பரந்த மார்பும், திடகாத்திரமான உருவ அமைப்புங்கொண்ட சந்தியாகுவின் குடிசை!

குடிசைக்குள்ளே மார்பிலும் தலையிலும் அடித்து அவன் மனைவி மார்த்தா குமுறி அழுது கொண்டிருந் தாள். ஒன்பது வயதுள்ள அவள் மூத்த மகளும் தாயை அணைத்தபடி அழுது கொண்டிருந்தாள். மற்றைய மூவரும் திகைப்பூண்டை மிதித்தவர்கள் போலப் பக்கத்தில் அலமந்து நின்று கொண்டிருந்தார்கள். நான் முற்றத்திற் குழுமிநின்றவர்களில் வயதடைந்த ஒருவரிடம் என்ன நடந்தது என்று விசாரித்தேன்.

“விடியப்புறம் மூணு மணிக்கு எல்லாரையும் போலச் சந்தியாவும் கழிக்குள்ள வீசப்போனான் ஆனாத் திரும்பி வரல்ல. யாரோ பிடிச்சிற்றுப் போனாங்க எண்டு அவனோட போனவங்க சொன்னாங்க”

“யார் பிடிச்சிற்றுப் போனது?”

“யாரெண்டு தெரியும்? எல்லாரிட்டையும் துவக்கு இருக்கு. ஆமிக்காரனும் வச்சிருக்கான். பெடியங்களும் வச்சிருக்காங்க. மறைச்சட்டையும் எல்லாரிட்டயும் இருக்கு”

பனைமரத்து நாரையைச் செம்படவச் சிறுவர்கள் பிடித்தது போலச் சந்தியாகுவையும் பிடித்துவிட்டார்கள் என்று எனக்கு விளங்கியது.

பனைமரத்தின் உச்சியிலே தன் கூட்டிலிருக்கும் குஞ்சுகளை யார் காப்பாற்றுவார்கள் என்று பெண் நாரைக் கதறிக் கொண்டிருக்கிறது.

இங்கே தென்னை மரத்தின் கீழுள்ள ஓலைக்குடிசை யில், தன் நான்கு பிள்ளைகளையும் யார் காப்பாற்றுவார்கள் என்று, மார்த்தா விம்மி வெடித்துக் கதறுகிறாள்.

(இக்கதையைப் படித்தவர்கள் வாய்ப்பிருந்தால் அகநாநூற்றின் 230ம் பாடலையும் படியுங்கள்)

– வீரகேசரி’92

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *