கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 10, 2014
பார்வையிட்டோர்: 9,211 
 
 

பாீட்சைக்கு இன்னும் ஒரு நாள் மீதமிருந்தபோது அந்த தலைவலி துவங்கியது.

சுற்றி புத்தகங்கள், நோட்ஸ், பழைய காலண்டர் தாள்களின் பின்னால் எழுதின குறிப்புகள் என்று நிரப்பிக் கொண்டு கூடப் படித்துக் கொண்டிருந்த சிநேகிதர்களிடம் சொன்னபோது ‘ஏண்டா, நாங்கல்லாம் மட சாம்பிராணிங்க., பாீட்சை நேரத்திலே எங்களுக்கு உடம்பு சாியில்லாம போனா, ஜூரம் வந்தா அதிலே ஒரு நியாயம் இருக்கு. நீதான் நல்லா படிக்கிறவனாச்சே.,

உனக்கெதுக்குடா இப்போ தலை வலிக்குது ? ‘ என்று கிண்டலடிக்க ஆரம்பித்தார்கள்.

இவர்கள் இப்படித்தான். இவர்களோடு சேர்ந்து படிக்கிற நான் முதல் ரேங்க் எடுக்கையில் இவர்கள் பதினைந்து, பதினாறாவது ரேங்குக்கே பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருப்பதில்., அத்தனை பயல்களுக்கும் என்மேல் பயங்கர பொறாமை.

எாிச்சலில் கத்தியே விட்டேன். ‘சும்மா விளையாடாதீங்கடா முண்டங்களா., நிஜமா தலை வலிக்குதுடா., யாரோ குண்டூசியாலே தலைக்குள்ளே குத்தறாப்பலே இருக்கு., ‘

அப்போதும் யாரும் என்னை கண்டு கொள்ளவில்லை. ‘பேசாம படிடா., ‘. என்று புத்தகத்தில் மறுபடி மூழ்கிப் போனார்கள்.

எனக்கு வந்த கோபத்துக்கு அத்தனை பேரையும் அடித்துத் துரத்த வேண்டும் போலிருந்தது. தலை வலி அனுமதிக்கவில்லை. ‘போங்கடா., ‘ சத்தமாய்க் கத்திவிட்டு படியிறங்கி கீழே போனேன்.

அப்பா டிவியில் சூப்பர் குடும்பம் ரசித்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் அம்மாவின் புறம் திரும்பி ‘ஏய்., பசங்களுக்கு காஃபியை மேலே கொண்டுபோய் கொடு, அவங்களை மேலேயும் கீழேயும் அலைய விடாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்., பாவம்., அவங்க கவனம் சிதறிடும்மா., ‘ என்றார்.

அம்மா பேசுமுன். ‘இல்லைப்பா., காபியெல்லாம் ஆச்சு., அம்மா அப்பவே கொணாந்து தந்தாங்க ‘ என்றேன்.

‘அப்புறம் என்னடா கண்ணா விஷயம் ? உடம்பு கிடம்பு சாியில்லையா ? ‘ நெற்றியில் கை வைத்துப் பார்த்தார்.

‘ஆமாம்ப்பா., தலை வலிக்குது. ‘ பாதி அழுகையே வந்து விட்டது எனக்கு.

அப்பா பதறிப் போனார். ‘அய்யோ., பாீட்சை நேரத்திலே தலைவலின்னு சொல்றியேப்பா., ரொம்ப வலிக்குதா ? ‘

‘ஆமாம்ப்பா., ‘

‘அச்சச்சோ., கிளம்பு., டாக்டர்கிட்டே போய்ட்டு வந்துடலாம் ‘

அம்மா குறுக்கிட்டு ‘தலை வலிக்கு எதுக்குங்க டாக்டர் ? அமிர்தாஞ்சனம் தடவிண்டு பத்து நிமிஷம் படுத்தா தானா சாியாயிடும் ‘ என்றாள்.

நானும் ‘ஆமாம்ப்பா., டாக்டர்கிட்டே போனா நாழியாகும்., அந்த நேரத்திலே கொஞ்சம் படிக்கலாம் ‘ என்றேன்.

‘ப்ச்., கிளம்புன்னா கிளம்பணும்., என்ன தொியும் உனக்கு ? அமிர்தாஞ்சனும், இன்னொண்ணும் இப்போ தலைவலியை போக்கினாப்பலே பாவலாதான் காட்டும்., நாளைக்கு பாீட்சை நேரத்திலே மறுபடி தலைவலி வந்துட்டா என்ன பண்ணுவே., போய் டாக்டரண்டே உடம்பைக் காட்டி., ஒரு இஞ்செக்ஷன் போட்டுண்டு வந்துடலாம்., ‘ என்றார். ஏற்கெனவே சட்டையை மாட்ட ஆரம்பித்திருந்தார்.

‘டைமாகும்ப்ப்பா., இன்னும் ரெண்டு ாிவிஷனாவது பண்ணனும் ‘

‘சொன்னா கேளுடா., நம்ம தெருக்கோடியிலே டாக்டர். ரங்காச்சாாி இருக்கார். போய்ட்டு உடனே வந்துடலாம். எவ்வளவு நேரமாகப் போறது ? சுவர் இருந்தாதாண்டா சித்திரம்., வெறும் வர்ணத்தாலே பிரயோஜனமில்லை., கிளம்பு ‘ விரலில் சொடக்குப் போட்டு விரட்டினார். ‘போ., போய் முகம் அலம்பிண்டு வா ‘

இனி அப்பாவை நிறுத்த முடியாது. கிளம்பித்தான் ஆக வேண்டும்.

அம்மா அதற்குள் காஸ் அடுப்பில் வைத்திருந்த சுடுநீாில் முகம் அலம்பினபோது இது சீக்கிரமாய் முடிய வேண்டுமே என்கிற கவலை வந்தது. இது பொிதாகி உடம்புக்கு ரொம்ப முடியாமல் போய் பாீட்சை எழுத முடியாமல் போய் விடுமோ என்கிற பயமும் வந்தது. பகவானே., பாீட்சை எழுதலைன்னா என்னாகும் ? ஒரு வருஷம் வீட்டிலே சும்மா உட்கார்ந்துண்டு இருக்க வேண்டியதுதானா ? கடவுளே காப்பாத்து.,

** ** ** ** ** **

அப்பா பைக் எடுத்தபோது ‘தெருக்கோடிக்கு எதுக்குப்பா பைக் ? ‘ என்றேன்.

‘வார்த்தைக்கு வார்த்தை மறுபேச்சு பேசாதே., பின்னாலே உட்கார் ‘ என்றார் கோபமாய்.

** ** ** ** ** **

அப்பா நினைத்ததுபோல அது அத்தனை சுலபமாய் முடியவில்லை. வாரமுழுதும் சேர்ந்த வியாதிகளை மொத்தமாய் போக்கிக் கொள்ளவோ என்னவோ., அந்த ஞாயிற்றுக் கிழமை நண்பகலிலும் ரங்காச்சாாி டாக்டாின் வரவேற்பறையில் குறைந்தது இருபது பேர் இருந்தார்கள். எல்லோரும் ஸ்வாரஸ்யமாய் டிவி திரையில் விஜயின் நடனத்தைப் பார்த்தவாறு அவ்வப்போது டாக்டர் அறைக் கதவையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவரையும் பார்க்கும் போது வியாதியஸ்தர்களாய்த் தொியவில்லை. ஒருவேளை நான்தான் ரொம்ப அலட்டிக் கொள்கிறேனோ என்கிற சந்தேகம் வந்தது.

ஓரமாய் டேபிள், சேர் போட்டு அமர்ந்திருந்த ஒரு பெண் எங்களிடம் ஒரு காகிதத்தை நீட்ட அதில் 32 பெயர்கள் இருந்தன. முப்பத்து மூன்றாவதாய் என் பெயரை எழுத முயன்றபோது அந்த பேனா பிடிவதமாய் ‘க ‘வுக்கு மேல் எழுத மறுத்தது., பேனாவை அவளிடமே திருப்பித் தந்துவிட்டு என் பேனாவை எடுத்து ‘ண்ணன் ‘ எழுதி முடித்தேன்.

அப்பா விசாாித்தார் ‘ஏம்மா., இன்னும் எத்தனை பேர் இருக்காங்க ? ‘

அவள் அலட்டிக் கொள்ளாமல் ‘பதினாலு பேர் போய்ட்டு வந்தாச்சு ஸார்., பதினஞ்சாவது ஆள் உள்ளே இருக்கார்., நீங்க முப்பத்தி மூணாவது. ‘ என்றுவிட்டு மாதநாவலில் மூழ்கிப் போனாள்.

அப்பா சளைக்காமல் ‘ஒரு நிமிஷம்மா., குழந்தைக்கு நாளைக்கு பாீட்சை., பப்ளிக் எக்ஸாம். படிச்சிண்டிருந்தவனுக்கு திடார்ன்னு தலை வலிக்கறதுன்னான்., சீக்கிரம் டாக்டரைப் பார்த்தா தேவலை. பாவம்., போய் மறுபடி படிக்கணும் பாருங்கோ., ‘ என்றார். அப்பா என்னை குழந்தை என்றது எனக்குப் பிடிக்கவில்லை – அதுவும் அந்த பெண்ணிடம். அந்த வெறுப்பை எப்படிக் காட்டுவது என்று தொியவில்லை.

அவள் எாிச்சலாய் நிமிர்ந்தாள் ‘அதுக்கு நான் என்ன ஸார் பண்றது ? இங்க வர்ரவங்க ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சனைதான். நான் ஒவ்வொருத்தரா முன்னாலே அனுப்பிட்டு இருக்க முடியாது. வேணும்ன்னா லிஸ்ட்ல உங்களுக்கு முன்னாலே இருக்கிற அத்தனை பேரையும் போய் கேளுங்க. அவங்க ஒத்துகிட்டா உங்களை அனுப்பறேன் ‘. அதற்குள் அந்த பதினைந்தாவது மனிதர் மடித்த மாத்திரைச் சீட்டுடன் வெளியே வந்திருக்க, லிஸ்டைப் பார்த்து ‘சோம சுந்தரம் யார் ஸார் ? ‘ என்றாள். ஒரு கண்ணாடிக்காரர் எழுந்து தளர்வாய் நடந்து டாக்டர் அறைக்குள் போனார். அவள் லிஸ்டில் பதினாறை டிக் செய்து கொண்டாள்.

அப்பாவுக்கு கோபம் என்பது தெளிவாய் தொிந்தது. ஆனாலும் அதை வெளியே காட்டிக் கொளாது ‘கோபப் படாதேம்மா., பாீட்சை நேரம்., அதான் கேட்டுட்டேன். ‘ என்றார்.

அந்த மன்னிப்பில், விண்ணப்பம் இன்னும் தொக்கி நிற்பதை அவள் கண்டு கொள்ளாது ‘சாிசாி., அங்கே போய் உட்காருங்க. உங்க நேம் வரும்போது கூப்பிடறேன் ‘ என்றாள்.

அப்பா இயலாமையால் என் கையை அழுத்தமாய்ப் பிடித்தபடி அவள் காட்டின திசைக்கு எதிர் திசையிலிருந்த சோில் போய் அமர்ந்தார். நானும் பக்கத்தில் உட்கார்ந்தேன். தலைவலி இன்னும் அதிகமாகி விட்டதாய்த் தோன்றியது.

டிவி பார்க்கத் தோன்றாது,. சூழலையும், அங்கே எங்களைப்போல காத்துக் கொண்டிருந்தவர்களை நோட்டமிட்டுக் கொண்டிருந்தேன். சுவாில் அழகான குழந்தைப் படங்கள். ஒரு மருந்துக் கம்பெனியின் எப்போதோ நடந்த இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவை அறிவித்துக் கொண்டிருந்த கடிகாரம். உயரத்தில் யாரும் அணுக முடியாதபடி மேடையமைத்து அதில் டிவி. பிளாஸ்டிக் நாற்காலிகளில் மக்கள் தாற்காலிகமாய் நோய் மறந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தது ஆச்சர்யமாய் இருந்தது. நாளைய உலகத்தில் காத்திருப்பவர்கள் பொழுதுபோக்கிற்கென சுடுகாட்டிலும் டிவி இருக்குமோ ?

ஜீன்ஸ் அணிந்த ஒரு பெண், அவளோடு வந்திருந்த பையனிடம் கோபமாய், அதே சமயம் மெல்லமாய் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். பக்கத்தில் உட்கார்ந்திருந்த குழந்தை அம்மாவின் பிடியிலிருந்து தாற்காலிகமாய் தப்பித்த சந்தோஷத்தில் இவர்களை வியப்பாய் பார்த்துக் கொண்டிருந்தது. எல்லோரும் அடிக்கடி வாட்ச்சைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொருவராய் போய் வந்து கொண்டிருந்தார்கள். எப்போது எங்கள் முறை வரும் என்று தொியவில்லை. ‘அப்பா., நான்தான் நேரமாகும்ன்னு சொன்னேனே., கேட்டேளா ? இன்னும் எத்தனை பேர் இருக்காளோ தொியலையே., ‘

அப்பா நான் சொன்னதை கவனிக்கவில்லை. புதிதாக வந்து பட்டியலில் பெயர் எழுதின ஒருவன் அந்தப் பெண்ணிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்ததை சந்தேகக் கண்களோடு பார்த்துக் கொண்டிருந்தார். என்ன பார்க்கிறார் ?

அப்பாவின் சந்தேகம் சாிதான். அவன் பாக்கெட்டிலிருந்து ஒரு நோட்டை – ஐந்தா பத்தா தொியவில்லை – எடுத்து அவளிடம் கொடுக்க, அவள் தயக்கமாய் ஒரு முறை சுற்றிப் பார்த்துவிட்டு அதை வாங்கி கையிலிருந்த நாவலுக்குள் வைத்துக் கொண்டாள்.

அப்பா என் கேள்விக்கு பதில் சொல்லாது அந்த புது ஆளையே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் எதற்காகவோ காத்திருப்பதாய்த் தோன்றியது. எனக்கும் இதில் ஒருவித ஸ்வாரஸ்யம் ஏற்பட்டுப் போய் நானும் அந்த எதற்காகவோ காத்திருக்க ஆரம்பித்தேன்.

டாக்டர் அறையினுள் இருந்த அம்மாள் வெளியே வந்தபோது அப்பா எதிர்பார்த்த அது நடந்தது. நாவல் படித்துக் கொண்டிருந்த பெண், சுற்றிலும் இன்னொரு முறை பார்த்துவிட்டு, புதிதாய் வந்த அந்த ஆளை ‘நீங்க உள்ளே போங்க ஸார்., ‘ என்றாள்.

அப்பா அத்தனை வேகமாய் எழுந்திருப்பார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அவர் எழுந்ததும் தொியவில்லை, அந்தப் பெண்ணிடம் போனதும் தொியவில்லை.

‘எதுக்கும்மா இவரை உள்ளே போகச் சொல்றீங்க ? ‘

அவள் தடுமாற்றத்தை மறைக்க முயன்று தோற்றாள். ‘ஏ.. ஏ.. ஏன் ? அவர் பேருதான் லிஸ்ட்ல அடுத்ததா இருக்கு,. ‘ என்றாள்.

அப்பா மோகனமாய்ச் சிாித்தார் ‘அப்படியா., காட்டுங்க பார்க்கலாம் ‘

தவறு கடைவிாிக்கப் பட்டு சந்தி சிாிக்கையில் கோழைகளுக்குக் கூட வீரம் வந்து விடுகிறது. ‘எதுக்கு காட்டணும் ? லிஸ்டை யாருக்கும் காட்டணும்ன்னு எனக்கு அவசியம் இல்லை ‘ என்றாள்.

‘அப்போ., இவர் உள்ளே போறதை நான் அனுமதிக்க மாட்டேன். என்ன ஸார் சொல்றீங்க ‘ என்று சுற்றி உட்கார்ந்திருந்தவர்களை பொதுவாய்க் கேட்டார். அவர்கள் டிவியை மறந்து இந்த கலாட்டாவை கவனிக்கத் துவங்கியிருந்தார்கள்.

‘சும்மா கத்தாதீங்க ஸார்., இவர் பேர்தான் அடுத்து இருக்கு., ‘

‘அப்போ தைாியமா லிஸ்டைக் காட்டும்மா., அதிலென்ன பயம் உனக்கு ? ‘

‘என்னய்யா ? உன் பையனை முதல்ல அனுப்பலைன்னு கலாட்டா பண்றியா ? ‘ அவள் தரம் இறங்கிப் பேசலானாள்.

‘முதல்ல மாியாதையா பேசக் கத்துக்கோம்மா., என் பையனை முன்னாலே அனுப்புன்னு சொன்னது ஒரு உதவி. அவனுக்கு பாீட்சை இருந்தது. சாதாரண பாீட்சை இல்லை., அவன் வாழ்க்கையையே தீர்மானிக்கப் போகிற பாீட்சை., அவனை முன்னாலே அனுமதிக்கச் சொல்ல என்கிட்டே காரணம் இருந்தது. அதான் கேட்டேன். நீ இல்லைன்னு சொன்னதும் பேசாம போய் உட்கார்ந்துட்டேன். எந்த சண்டையும் போடலை. ‘

சலசலப்பு துவங்கியிருந்தது., ஆளாளுக்கு தங்களுக்குள் பேசிக்கொள்ள ஆரம்பித்திருந்தார்கள். அப்பா தன் தரப்பு நியாயம் சொல்ல குரலை உயர்த்த வேண்டியிருந்தது., ‘ ஆனா., நீ இப்போ செஞ்சே பாரு., அது ஒரு கேவலமான காாியம். வாிசையிலே பத்து பேர் காத்திண்டிருக்கச்சே காசு வாங்கிட்டு இவனை முன்னாலே அனுப்பப் பார்க்கிறியே., இதைப் போல அசிங்கம் வேற இல்லை. என்ன அர்த்தம் இதுக்கு ? காசு இருக்கிறவன், வாிசை, ஒழுங்கு இதையெல்லாம் மீற தைாியம் இருக்கிறவன் முன்னாலே போகலாம்., மத்தவங்க எல்லாம் வாிசையிலே உட்கார்ந்திண்டிருக்கணுமா ? ‘

அவள் கத்த ஆரம்பித்திருந்தாள். ‘நீ மட்டுமென்ன ஒழுங்கா ? உன் பிள்ளையை முன்னாலே அனுப்பச் சொன்னியே., ‘

அப்பாவுக்கு ஏனோ இப்போது கோபம் வரவில்லை. ‘அதுவும் இதுவும் ஒண்ணாயிடுமாம்மா ? விதிமுறைகள் மனுஷத்தனத்தினாலே மீறப் படலாம்., அதிலே பொிசா தப்பில்லை. ஒரு கர்ப்பிணிப் பொண்ணு ஆட்டோவிலே பின்ஸீட்டிலே துடிச்சிண்டு இருக்கும்போது ஒரு டிராஃபிக் சிகப்பு சிக்னலை மீறி ஆட்டோவை ஓட்டிண்டு போகலாம். அது மனிதாபிமானம். நான் கேட்ட உதவி அப்படித்தான். ஆனா நீ செஞ்சது ? சிக்னலை மீறினதுக்காக ஃபைன் போட்டா கட்டறதுக்கு காசு இருக்குங்கிறதுக்காக சிகப்பு விளக்கை மதிக்காம போற மாதிாி இது., ‘

அவள் மெளனமானாள். சம்மதம், தவறுணர்தல் என்று அந்த மெளனத்திற்கு இரண்டு அர்த்தங்கள் இருந்தது.

கூட்டம் அப்பாவை கொஞ்சம் மாியாதையாய்ப் பார்த்தது. ‘இதோ பாரும்மா., நான் உன்கிட்டே இந்த உதவி கேட்டபோது நீ ‘பத்து ரூபாய் கொடுங்க ஸார்., உடனே உள்ளே அனுப்பறேன் ‘ன்னு சொல்லியிருந்தேன்னா வேண்டாம்ன்னு சொல்லிட்டுப் போயிருப்பேன். அதுதான் இந்த ரெண்டு கேஸுக்கும் வித்தியாசம். ‘

அவள் இன்னும் தலைகுனிந்திருந்தார். பணம் தந்திருந்த அந்த இளைஞனும் கூட.

‘சாி., அந்த பணத்தை எடுத்து அவன்கிட்டேயே கொடுத்துடு., வாிசையிலே நியாயமா அடுத்தது யார் போகணுமோ., அவங்களை உள்ளே அனுப்பு., பாவம், டாக்டர் காத்திண்டிருப்பார் ‘ அப்பாவே சூழலை இயல்பாக்க முயன்றார். அந்தப் பெண் அமைதியாய் பணத்தை எடுத்து அவன் கையில் கொடுத்தது. லிஸ்டை எடுத்துப் பார்த்து ‘ரமேஷ்., ‘ என்றது. அந்த ஜீன்ஸ் பெண்ணும் அவளோடு வந்தவனும் உள்ளே போனார்கள்.

அப்பா அமைதியாய் வந்து என்னருகே உட்கார்ந்தார். அப்பாவிடம் ஏதேனும் பேசவேண்டும் போலிருந்தது, என்ன பேசுவதென்றுதான் தொியவில்லை. அந்தப் பெண் நாவல் படிப்பதை நிறுத்திவிட்டு டேபிளில் இருந்த காகிதங்களை ஒழுங்கு பண்ணுவது போல் ஏதோ செய்து கொண்டிருந்தது.

இப்போது தலைவலி நன்றாகவே குறைந்திருந்தது. சொன்னால் அப்பா நம்ப மாட்டார்.

நாங்கள் டாக்டர் அறைக்குள் போனபோது மணி ஒன்றரை. அப்போது எனக்கு தலைவலி சுத்தமாய் குணமாகி இருந்தது.

** ** ** ** ** **

ாிஸல்ட் வந்தபோது நான் கிரவுண்டில் சின்னப் பையன்களின் பந்துகளை சச்சின் பாணியில் சிக்ஸரடிக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தேன். அவன் மட்டும் எப்படி அத்தனை சுலபமாய் அடிக்கிறான். அம்மாவை இந்த மாதத்திலிருந்து வீட்டில் பூஸ்ட் வாங்கச் சொல்ல வேண்டும்.

நான் யோசித்துக் கொண்டிருந்தபோதே அப்பாவைப் பார்த்து விட்டேன். பைக்கை நிறுத்துவதிலேயே அவாின் பரபரப்பு தொிந்தது.

‘நீங்க விளையாடுங்கடா., ‘ பேட்டை அவர்களிடம் வீசி விட்டு வேகமாய் அப்பாவை நோக்கி நடந்தேன். நடக்கையிலேயே ஆயிரம் கற்பனைகள். அப்பா என்முன்னே வந்து நின்று முகமுழுக்க சிாிப்பாய் பாக்கெட்டிலிருந்த அரசாங்க வாசனைக் கடிதத்தை எடுத்தபோது எல்லாம் உறுதியாகிப் போனது.

இரண்டு கிலோ ஸ்வீட் வாங்கிக் கொண்டு அப்பாவின் பைக்கில் பின்னால் உட்கார்ந்து போகையில் ‘டாக்டர். கண்ணன் ‘ என்று சொல்லிப் பார்த்துக் கொண்டேன்.

** ** ** ** ** **

சென்னையில் என்னை காலேஜில் சேர்க்க அப்பா, அம்மா, தங்கை ஷாலினி எல்லோரும் வருவதென்றும், அட்மிஷன் முடிந்த கையோடு திருப்பதி போவது என்றும் முடிவாயிற்று.

‘அப்பா., என்னாலே மொட்டையெல்லாம் போட முடியாது சொல்லிட்டேன்., ஏற்கெனவே ராக்கிங் அது இதுன்னு பயமுறுத்தறாங்க., இதிலே மொட்டை வேற போட்டுண்டு போய் நின்னேன்னா ‘மொட்டையன் ‘னு பட்டப் பெயரே வெச்சிடுவானுங்க., ‘

அப்பா சிாித்தார் ‘சாிடா., உன்னை யாரு மொட்டை போடச் சொன்னது ? உனக்கு மெடிகல் ஸீட் கிடைச்சா உன்னையும் கூட்டிண்டு மலையேறி வரேன்னு வேண்டிண்டேன். அதான் போறோம். மத்தபடி நோ மொட்டை. நான் கேரண்டி அதுக்கு ‘. என்றாலும் எனக்கு சந்தேகமாகத்தான் இருந்தது.

** ** ** ** ** **

சுந்தாி அத்தை வீட்டில் தங்கி காலேஜ் போய் வருவதாய் ஏற்பாடாயிற்று. அத்தை என்னைப் பார்த்ததும் வாய் நிறைய சிாித்து ‘வாடா கண்ணா., இப்பவே டாக்டர் களை வந்துடுத்து. உனக்காகத்தான் வித்யாவுக்கு எல்லாம் பார்த்துப் பார்த்து சொல்லித் தந்திண்டிருக்கேன். நாளைக்கு படிப்பு முடிஞ்சப்புறம் அவளையே கல்யாணம் பண்ணிண்டுடு., என்ன ? ‘ என்றபோதுகூட எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. அதைச் சொன்னதும் அந்தப் பெண் வித்யா முகத்தை மூடிக் கொண்டு உள்ளே ஓடிப் போனபோதுதான் வெகு கூச்சமாயிருந்தது.

** ** ** ** ** **

வித்யாவும் திருப்பதிக்கு வந்தாள். ஆனாள் மலையேற முடியாது, கால் வலிக்குமென்றாள். அவள் சொன்னதும் அம்மாவுக்கும் கால் வலிக்குமோ என்கிற சந்தேகம் வந்து ‘பஸ்ல போயிடலாமே., ‘ என்றாள். ஷாலினியும் ‘ஆமாம்ப்பா., பஸ்தான் பெஸ்ட்.,அண்ணா நீயாவது சொல்லேன் ‘ என்றாள்.

அப்பா சிாித்தார். ‘மூணு லேடாஸ் வரும்போதே எனக்கு சந்தேகம்தான். ஆனா மலையேறி வரேன்னு வேண்டிண்டிருக்கேனே., அதான் யோசிக்கிறேன் ‘

நான் குறுக்கிட்டு ‘அப்பா., அவங்க பஸ்ல போய் வெயிட் பண்ணட்டும்., நாம நடந்து போவோமே., ‘ என்றேன்.

அப்பா ‘ நானும் அதான் நினைக்கிறேன் டாக்டர் ‘ என்றபோது சிாிப்புதான் வந்தது. வித்யா என்னை பெருமிதமாய்ப் பார்ப்பது போலிருந்தது.

பெண்களை பஸ் ஏற்றி அனுப்பிவிட்டு நாங்கள் நடக்கலானோம்.

நல்ல செங்குத்தான படிகள். முதல் இரண்டு கிலோ மீட்டர் கடப்பதற்குள் கையிலிருந்த தண்ணீர் பாட்டில் மூன்று முறை நிரம்பி, காலியாகியிருந்தது., வியர்த்து ஊற்றினது. மேலே போனதும் முதல் காாியமாய் குளிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

** ** ** ** ** **

காட்டேஜ் ஏற்கெனவே புக் செய்திருந்தது. அங்கே போனபோது மூன்று பேரும் எங்களுக்காக காத்திருந்தார்கள். ‘அப்பா., குளிச்சுட்டு கோயிலுக்கு போலாம்ப்பா., ஒரே கசகசப்பு ‘ என்றேன்.

அப்பாவும் குளித்தார். பிற்பகல் ஒன்றரை மணியிருக்கும் நாங்கள் கோவிலுக்கு போனபோது.

நீண்ட க்யூ வாிசை காத்திருந்தது. அம்மா அதைப் பார்த்ததும் மலைத்துப் போனாள். ‘ஏன்னா., இத்தனை நீள க்யூவா., இதிலே எப்படி நிக்கறது ? எவ்வளவு நேரமாகுமோ ? மயக்கம் வராப்பலே இருக்கு ‘

‘அவசரப் படாதேடி., விசாாிக்கலாம் ‘.

அங்கே நின்றிருந்த செக்யூாிட்டியிடம் கேட்டபோது இந்த க்யூவில்தான் நிற்க வேண்டும் என்றான்.

‘ஸ்பெஷல் டிக்கெட் எதுவும் கிடையாதா ஸார் ? ‘ அப்பா அரைகுறை ஹிந்தியை முயன்று கொண்டிருந்தார்.

‘அங்கே பேங்க் இருக்கு., அதிலே போய் கேளுங்க., சொல்வாங்க. ‘ கைகாட்டினான்.

படியேறி பேங்க் அடைந்தபோது கவுன்டாிலிருந்த அதிகாாி ‘அடடே., தமிழா., வாங்க ‘ என்றார். எப்படிக் கண்டுபிடித்தார் தொியவில்லை.

‘தாிசனத்துக்காக வந்தோம் ஸார்., ரொம்ப கூட்டம் இருக்கு. ஸ்பெஷல் டிக்கெட் வாங்கினா கொஞ்சம் கூட்டம் குறைச்சலா இருக்குமோன்னு பார்க்க வந்தேன் ‘

‘அடடே., ஸ்பெஷல் தாிசனம் டிக்கெட்டெல்லாம் தீர்ந்து போச்சே ஸார்., ‘

அப்பாவின் ஏமாற்றம் தெளிவாய் முகத்தில் தொிந்தது. ‘அப்படியா., ‘

அவர் சிாித்தார் ‘கவலைப் படாதீங்க., இன்னொரு வழி இருக்கு. தீப அலங்கார சேவைன்னு இருக்கு. ஐநூறு ரூபா டிக்கெட். சேவை முடிஞ்சதும் அஞ்சு பேரை தாிசனத்துக்கு அலவ் பண்ணுவாங்க., எத்தனை பேர் வந்திருக்கீங்க ? ‘

அப்பா யோசித்து ‘அஞ்சு., ‘

‘அப்புறமென்ன ? ., எப்படியும் ஸ்பெஷல் டிக்கெட் அஞ்சு வாங்கினாலும் ஐநூறு ரூபாய் ஆகப் போறது., இங்கேயும் அதே செலவுதான். சந்தோஷமா போய் பகவானை தாிசிச்சுட்டு வாங்கோ., அஞ்சு லட்டு தருவா. யதேஷ்டம் ‘ என்றார்.

அப்பாவின் முகத்தில் பழைய சிாிப்பு திரும்பி வந்தது.

** ** ** ** ** **

தீபாலங்கார சேவை என்று கடவுளை ஊஞ்சலமைத்து சுற்றி விளக்குகள் ஏற்றினார்கள். ஷாலினி பிடிவாதம் பிடித்ததில் அப்பாவும் சட்டையைக் கழற்றிவிட்டு போய் நாலைந்து விளக்குகள் ஏற்றி விட்டு வந்தார். அத்தனை விளக்குகளின் வெளிச்சத்தை ஒரே இடத்தில் பார்க்கையில் இதமாய் இருந்தது. பின்னணியில் ஒருவர் அன்னமாச்சார்யாின் கீர்த்தனைகளை உருகிப் பாடிக் கொண்டிருக்க, அர்த்தம் புாியாவிட்டாலும், இசை மயக்கிற்று.

சேவை முடிந்ததும் எங்களை தரைக்கடியிலிருக்கிற பாதை வழியாக தாிசனத்திற்கு விசேஷமாய் அனுப்பினார்கள்.

அந்த வழி நாங்கள் முன்பு பார்த்த நீண்ட க்யூவுக்கு பக்கத்தில்தான் தொடங்கிற்று. அங்கே காத்திருந்த மக்கள் எங்களை சற்றே கோபமாய்ப் பார்ப்பதாகத் தோன்றிற்று.

தரையடிப் பாதையில் அப்பாவின் வேகத்திற்கு உடன் நடக்க முடியாமல் பின்தொடர்ந்தேன். இன்னும் எவ்வளவு தூரம் கடக்க வேண்டுமோ தொியவில்லையே. பெண்கள் மூவரும் ரொம்ப பின்னே மெதுவாய் நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.

‘அப்பா., உங்ககிட்டே ஒண்ணு கேட்கணுமே ‘

‘என்ன சொல்லு., ‘ அப்போதும் அவர் நடைவேகம் குறையவில்லை.

‘இல்லைப்பா., அன்னிக்கு ஆஸ்பத்திாியிலே காசு இருக்குங்கறதுக்காக விதியை மீறக் கூடாதுன்னு சொன்னேளே., இப்போ இத்தனை பேர் காத்திண்டிருக்கச்சே., ஐநூறு ரூபாய் தந்ததுக்காக நம்மளை ஸ்பெஷலா முதல்ல அனுமதிக்கறாளே., இது மட்டும் சாியாப்பா ? ‘ நடந்தவாறு பேசினதில் லேசாய் மூச்சிறைத்தது.

அப்பா ஒரு விநாடியும் யோசிக்கவில்லை. கண்கள் சிவக்கிற கோபத்துடன்., ‘கோயிலாச்சேன்னு பார்க்கறேன்., இல்லைன்னா அடிச்சு முதுகுத் தோலை உாிச்சிருப்பேன். இந்த வயசிலே நாத்திகம் பேசறியா ? வாயை மூடிண்டு வாடா., ‘ என்றார்.

– ஜனவரி 2001

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *