மண் பிள்ளையார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 10, 2014
பார்வையிட்டோர்: 8,617 
 

இன்று விநாயகச் சதுர்த்தி நாள்.

என் கூடத்தங்கியிருந்தவர்கள் அனைவரும் நேற்றே அவரவர்களின் கூட்டைத் தேடிப் பறந்துவிட்டார்கள்.

தனிமையில் ஆகாயத்தை வெறித்தபடி இங்கே நான். எனக்குப் போக இஷ்டமில்லை. ‘பரவாயில்ல, கிளம்பி வாயேன்டா. ‘ – என்று பலமுறை அப்பா கூப்பிட்டார். அவாின் கெஞ்சலுக்கு நான் பதிலாக வெளிப்படுத்திய மெளனத்தின் அர்த்தத்தைப் புாிந்துகொண்டுவிட்டார் என்று நினைக்கிறேன். அதற்குமேல் அவர் வற்புறுத்தவில்லை.

காலையிலிருந்தே ஏதோ ஒரு சஞ்சலத்தில் அகப்பட்டுக் கொண்டிருந்தது என் மனம். என்னவென்று ஆய்ந்தறிய எனக்கு விருப்பமில்லை. மனத்தின் பின்கட்டில் அதைத் தள்ளிவைத்துவிட்டு வேலைக்குச் சென்று பார்த்தேன். ஆள் அரவமேயில்லாது வெறிச்சோடிப் போயிருந்த அலுவலகத்தில் மனம் ஈடுபடவில்லை. கட்டட வரைபடங்கள் நவீன ஓவியங்களாயின. தப்பும் தவறுமாய் வரைந்துவைத்த படத்தின் மீது கோபம் கோபமாக வர, கணினியைத் தூங்கச் செய்துவிட்டு அறைக்குத் திரும்பிவிட்டேன்.

தனிமையின் கரங்களுக்குள் அகப்படுவது எனக்கொன்றும் புதிதில்லையே ? இல்லை, தனிமை காரணம் இல்லை. நினைக்க விரும்பாத ஒரு சோகம் மனத்தின் மேற்பரப்பிற்கு வர முயல்வது தொிகிறது. வேண்டாமே பழைய நினைவுகள்!

என் எண்ணங்கள் அழைப்பு மணியால் கலைக்கப்பட்டன. கீழ் வீட்டில் இருக்கும் வீட்டுக்கார மாமிதான் கூப்பிடுகிறாள். என் சஞ்சலத்தைத் தற்காலிகமாகத் தொலைத்து மறக்கும் ஆசையில் கீழிறங்கிப் போனேன்.

இப்பொழுதுதான் ஞாபகம் வருகிறது. மதியம் சாப்பிட வா என்று நேற்றே அழைத்திருந்தார்கள். அலுவலகம் போனதில் மறந்தேவிட்டேன். பிரம்மச்சாாி ஒருவனுக்கு அன்னமிட்டு நேரே சொர்கத்திற்கு போகும் வாய்ப்பை நான் பறித்துவிட்டேன் என்று குற்றம் சுமத்தினார்கள். இப்பொழுதாவது சாப்பிட வேண்டும் என்று கட்டாயப்படுத்திச் சாப்பிட வைத்தார்கள். பெங்களூாில் இருப்பது பல விதங்களில் வசதி. தமிழ் பேசும் வீட்டுக்கார அம்மாள் அதில் ஒன்று. கையேந்தி பவனில் (இன்று இந்த இராத்திாியில் திறந்திருக்குமோ என்பதும் சந்தேகம்தான்) கால் வலிக்கத் தன்னந்தனியே கீழே குனிந்த வண்ணம் எனக்குளேயே பேசிக்கொண்டு உண்ணுவதை விட இது எவ்வளவோ மேல். வேறொருவர் வீட்டில் உண்ணுகிறோம் என்ற அந்நிய உணர்வும், கூச்சமும் வந்து என்னை ஆக்கிரமித்துக் கொண்டாலும், அவர்கள் மத்தியில் ஒரு பாதுகாப்பை உணர்ந்தேன்.

அவர்களுடன் பேசிக்கொண்டு உண்டதில் சிறிது தெளிவடைந்திருந்தது மனம். மேலே ஏறி வந்து எனது அறையை விடுத்து மொட்டை மாடித் தரையில் படுத்துக்கொண்டேன். விசாலமான வானத்தில் துண்டு நிலா பிரகாசமாக ஒளிர்ந்தது. வீட்டைச் சுற்றிலும் தென்னை மரங்கள் சற்றைக்கொருதரம் தங்கள் கீற்றுகளைக் காற்றில் ஆடவிட்டு, மீண்டும் அசைவுகளை ஒடுக்கி அமைதியாய் அடங்கிய வண்ணம் இருந்தன. என் மனவெளியிலும் பழைய ஞாபகங்கள் எழுந்தெழுந்தடங்கின.

தெளிவான வானத்தில் தொிந்த நட்சத்திரப் புள்ளிகளை என் மனக்கோடுகளால் இணைத்தேன். கட்டட வரைபடங்கள் போலல்லாமல் இங்குப் புள்ளிகளை இணைக்கும் கோடுகளை வளைத்தும், நெளித்தும், ஏன் எப்படி வேண்டுமானாலும் இழுக்கலாம். இந்தச் சுதந்திரம் சிறு குஷாயைக் கொடுத்தது. இழுத்து இழுத்து வரைந்தேன். பொிய அகண்ட காது மடல்கள், ஐந்து கைகள், மேலிருந்து கீழாய் இறங்கும் கண்கள், துதிக்கை என இஷ்டத்திற்கு வரைந்ததில் ஒரு பிள்ளையார் வடிவம் உருப்பெற்றது.

அப்பா செய்யும் மண் பிள்ளையாரை ஒத்திருந்தது உருவம்.

எதை நினைக்கவேண்டாம் என்று தவிர்க்க நினைக்கிறோமோ அதுதான் முந்திக்கொண்டு முதலில் மனதில் தலைதூக்குகிகிறது.

ஆமாம். அப்பா தான் ஒவ்வொரு சதுர்த்திக்கும் மண் பிள்ளையார் செய்வார். எனக்குத் தொிந்து காசு கொடுத்து பிள்ளையாரை எங்கள் வீட்டில் வாங்கியதேயில்லை.

மற்ற வீடுகளைப் போலில்லாமல் எங்கள் வீட்டில் மட்டும் அப்பா, தானே செய்யும் பிள்ளையாரை வைத்துப் பூஜை செய்து வந்தது அந்த பால்ய வயதில் பெருமை அடித்துக் கொள்ளும் விஷயம் எனக்கு. என்றாலும் ஏன் எங்கள் வீட்டில் மட்டும் அச்சில் வார்த்த மண் பிள்ளையாரை வாங்குவதில்லை என்று பலமுறை யோசித்ததுண்டு. இந்த வழக்கம் தாத்தாக் காலத்திலிருந்து தொடர்ந்து வருகிற வழக்கம்.

பாட்டி சொல்லுவாள், ‘உங்க அப்பா என்னடா பிள்ளையார் செய்யறான் ? அவரு, அதான்.. உங்கத் தாத்தா செய்யறாப்பல வருமா ? கடைல கூட அப்படி அழகா ஒரு பிள்ளையாரை வாங்க முடியாது. உங்கத் தாத்தாவோட பாட்டனுக்குப் பாட்டன் பொிய பொிய கோவில் சிலையெல்லாம் செஞ்சிருக்காரு தொியுமா ? ‘ என்று என் கண்கள் அகல விாியப் பெருமையடித்துக் கொண்டிருக்கிறாள்.

தாத்தாவின் கையில் நிஜமாகவே திறமையிருந்ததா என்பது எனக்குத் தொியாது. தாத்தா இடைத்தரகராக வேலைப்பார்த்தவர் என்று அப்பா சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். கிராக்கி எதுவும் மாட்டாத வருமானமற்ற வறுமை நாட்கள் நிறையவற்றை அனுபவித்திருக்கிறார். பாட்டி அப்பொழுது பட்ட கஷ்டங்களையும், சமாளித்த விதங்களையும் கதை கதையாகச் சொல்லுவாள். ‘காலணா வள்ளிக் கிழங்கும், காட்டுல பறிச்ச கீரையுமா நிறைய நாள் ஓட்டியிருக்கோம். சில நாள் அது கூட இல்லாம வாழ்ந்திருக்கோம். ‘ என்பாள். இந்த வறுமைதான் காசு கொடுத்துப் பிள்ளையாரை வாங்க இயலாமல் செய்து விட்டதோ ?

இதில் பாட்டியைப் பற்றி சொல்ல வேண்டும். பாட்டிக்குப் பிள்ளையார்பட்டி தான் சொந்த ஊர். அதனால் பிள்ளையார்தான் பாட்டிக்குக் கடவுள், குலதெய்வம் எல்லாம். விநாயகச் சதுர்த்திதான் அவளுக்குத் தீபாவளி. எப்போதும் காலையிலும், மாலையிலும் ஜபமாலையை உருட்டிக்கொண்டு, அர்த்தம் புாிந்தோ, புாியாமலோ விநாயகர் அகவலை முணுமுணுத்தபடி தியானித்திருப்பாள்.

பாட்டியின் இந்தப் பக்திதான், வருமானமற்ற நாட்களில், பண்டிகை விட்டுப் போகாமலிருக்க, தாத்தாவைப் பிள்ளையார் செய்யத் தூண்டியிருக்கும் என்பதும் ஒரு சாத்தியக் கூறுதான். எது எப்படியோ, பிள்ளையார் பிடிப்பது என்பது எங்கள் குடும்ப வழக்கமாகிப், பாரம்பாியமும் ஆகிவிட்டது என்பது மட்டும் உண்மை.

சிறு வயதில் என்னை வெகுவாகக் கவர்ந்த விஷயமிது. சதுர்த்திக்கு மூன்று நாட்கள் ஒரு வாரத்திற்கு முன்பே இரும்பு வாளியையும், மண் வெட்டியையும் ஒரு குட்டைக் கடப்பாரையும் கையில் கொடுத்துப் பாட்டி மண் எடுத்து வரச் சொல்லுவாள்.அப்பா தன் பங்குக்கு, ‘மண்ணு ரப்பர் மாதிாி, இழுத்த இழுப்புக்கு வளைஞ்சி கொடுக்கணும். பொடிப் பொடியா கலகலத்துப் போறமாதிாியோ, ஒண்ணோட ஒண்ணு சேராமயோ இருந்தாக்க எடுத்திட்டு வராத. நான் சொன்ன மாதிாி கண்டுபிடிச்சு வெட்டி எடுத்திட்டு வா! ‘ என்று சொல்லிக் கொடுத்து அனுப்புவார்.

நான் இதையெல்லாம் தூக்கிக்கொண்டு செல்லும் வயது வருவதற்குமுன் யார் மண் எடுத்து வருவார்கள் என்று தொியவில்லை. அப்பாவே எடுத்து வந்திருக்கலாம். அதைப் பற்றி நான் யோசித்ததில்லை. என்னிடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்த பொழுது ஆர்வமும் மகிழ்ச்சியும் பொங்கக் கிளம்புவேன். நான் குறி வைத்துப் போகும் இடம் முக்கால்வாசி ஏாிக்கரை ஓரமாகத்தான் இருக்கும். அங்கு நல்ல களிமண் கிடைக்கும். கோவிலின் பின்புறத்தில் உள்ள தாிசு நிலத்தின் மேற்கு மூலையிலும் நல்ல களிமண் கிடைக்கும். ஈரத்தன்மை ஊடுருவியிருக்கும் அந்த மண்ணை வெட்டி எடுத்து வாளியில் போட்டுக் கொண்டு வருவேன். கொண்டு வந்தபின் சிறிது தண்ணீர் தெளித்து வைத்திருப்பார் அப்பா.

அதற்குப் பின் அந்த மண்ணைத் தொட விடமாட்டார்கள். செய்யக் கூடாது எனும்போது தான் ஆவல் அதிகம் பிறக்கும். அந்தி மயங்கி இருட்டும் நேரத்தில், கொல்லைத் தாழ்வாரத்தில் ஊறிக்கொண்டிருக்கும் அதிலிருந்து சிறிது மண்ணைத் திருடி எடுத்து உருண்டை உருண்டையாய்ச் சிறிய சொப்புப் பொம்மைகள் பிடிப்பதில் ஒரு கள்ளச் சந்தோஷம் இருந்திருக்கிறது. மொட்டை மாடியில் ஏதோ ஒரு மூலையில் யாருக்கும் தொியாமல் அந்த உருவங்களைக் காய வைத்து, அவை திடப்படும்போது ஒரு மகிழ்ச்சி பற்றிக்கொள்வதை அனுபவித்திருக்கிறேன்.

அதெல்லாம் ஏழிலிருந்து எட்டுப் பத்து வயது வரைதான். ஆனால் அப்பா வடிக்கும் பிள்ளையார் படிப் படியாய் உருவம் பெறுவதை மட்டும் எல்லா வருடமும் கவனித்துப் பார்ப்பதில் ஒரு ஆர்வம் இருந்து கொண்டுதானிருந்தது.

சதுர்த்தியன்று குளித்துவிட்டு, ஈரத்துண்டுடன் தாழ்வாரத்தில் அமர்ந்து செய்யத் தொடங்குவார். அப்பாவிற்கு தோசைத் திருப்பியும், ஈர்க்குச்சியும், கைகளும்தான் சிற்பி உளிகள். மண்ணை நன்கு குழையப் பிசைந்து, ஒரு செவ்வகமாய்ப் பிடித்து நிறுத்தி, தோசைத்திருப்பியைக் கொண்டு பின்புறத்தைச் சமன்படுத்தி, முன்புறத்தில் தேவையில்லாத மண்ணை வெட்டியெடுத்துச் செதுக்குவார். முதலில் முகமும், துதிக்கையும் உருப்பெற்று, பிரதானமாய்ப் பிள்ளையார் என்று அடையாளம் காட்டும். பின் தந்தங்களும் சேர்ந்துகொள்ளும்.

அதற்கப்புறம் பின்புலத்தினின்று மேடாய் எழும்பும் முகத்தின்மேல் கிாீடமாக மண்குவித்து, ஈர்க்குச்சியால் கோடுகள் வரைந்து அழகுபடுத்துவார். பின்னர்த் தொந்தியை வடிவமைப்பார். நடு நடுவில் தண்ணீரைத் தொட்டுத்தொட்டு மேற்பரப்பில் ஒரு வழவழப்பைக் கொண்டு வருவார். இதற்குப் பிறகு கைகால்களை வடிப்பார். அவை மட்டும் அவ்வளவு சாியாக வராது.

அப்பா, பிள்ளையாாின் கைகால்களை எந்த உருவப்படத்திலும் கவனித்துப் பார்த்தில்லையோ என்று ஐயமிருந்திருக்கிறது எனக்கு. மற்ற அங்கங்களைக் கூடக் கூர்ந்து பார்த்திருக்க மாட்டார் என்பதும் என் முடிவகளில் ஒன்று.

சாதரணமாக எல்லோர் கண்களிலும் தென்படும் விஷயங்களோ, பொதுப்படையாகத் தொியும் அழகோ, அற்புதமோ, வடிவோ, திறனோ, இயக்கமோ – இவை மட்டும் தான் அவர் கண்களில் படும். நுண்ணிய அழகியல் நுணுக்கங்களை அவர் கண்டுபிடித்து ரசித்து நான் பார்த்ததில்லை. அப்படியிருக்க இந்தப் பிள்ளையார் பிடித்தலைக், கூர்ந்து கவனிக்காமல் செய்ய இயலாத இந்தக் கலையை அப்பா செய்கிறார் என்பது பெரும் வியப்பு எனக்கு. அதனால் சாியாக வராத அங்கங்களை நான் சட்டை செய்ததில்லை.

அப்பாவின் இந்தத் திறனுக்கு இன்னொரு காரணம் கூடச் சொல்லலாம். எங்கள் வீட்டுப் பூஜை விக்கிரகங்களில் சிறிய மாக்கல் பிள்ளையார் ஒன்று உண்டு. பாட்டியின் பிறந்தவீட்டுச் சீதனங்களுடன் வந்தது அது. நாள் தவறாமல் அதற்கு நல்லெண்ணெய் சிறிது தேய்த்து, ஸ்நானப் பொடி போட்டு, பின் சந்தனம், திருநீறு, பால், தயிர் என்று அபிஷேகம் நடக்கும். அப்பாத்தான் செய்வார். அந்தச் சிறுசிலையைத் தொட்டுத் துடைத்த பாிச்சயம் கூட அப்பாவிற்கு உதவியிருக்கலாம்.

ஒரு வழியாக ஒரு மணி நேரத்திற்குள் பிள்ளையாாின் உருவத்தைக் கொண்டுவந்து விடுவார். கடைசியில் கண்கள் வைக்கும் படலம். இதற்கென்றே பிரத்யேகமாக கருஞ்சிவப்பில் சில கோதுமை வடிவ மணிகளைப் பழைய பெருங்காய டப்பாவில் பத்திரப் படுத்தியிருப்பாள் பாட்டி. எங்கள் வீட்டுக் கொல்லைப்புறத்துக் கம்பி வேலியில் படர்ந்திருக்கும் ஒரு கொடியின் காய்கள் வைகாசி மாத வெயிலில் காய்ந்து வெடிக்கும்போது இந்தக் கருஞ்சிவப்பு மணிகள் (பிள்ளையார் கண்மணிகள் என்றும் குறிப்பிடப்படும்) தரையில் சிதறும். இதைத்தான் பொறுக்கியெடுத்து வைத்திருப்பாள் அவள்.

அந்த டப்பா ஒருமுறை என் தம்பியிடம் மாட்டிக்கொண்டது. அவனது நான்கு வயதிற்கு அந்த மணிகள் வண்ணப் பல்லி மிட்டாய்கள் போலவும், சிறு சிறு பூச்சிகள் போலவும் தோன்ற, கையில் எடுத்தும், மீண்டும் டப்பாவில் போட்டும் விளையாடிக் கொண்டிருந்தான். மின்மினிப் பூச்சியைக் கையில் பிடித்தது போன்ற சந்தோஷம் அவன் முகத்தில். அதைக் கொடுக்கச் சொல்லிக் கேட்டபொழுது, தரமுடியாது என்று பிடிவாதம் பிடித்தான். இரண்டு மணிகள் கூட தர மறுத்துவிட்டான். அப்புறம், ‘உமாச்சி (சாமி) -யோட கண்ணை நீ குடுக்கலன்னா, உன்னோட கண்ணை உமாச்சி எடுத்துக்கும். அதுனால குடுத்துரு. ‘ என்று பயமுறுத்தித்தான் வாங்கினாள். பயம் கலந்த ஆற்றாமையுடன் பாட்டியின் கையில் அதைக் கொடுத்தது இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. இந்த மணி கிடைக்காதபொழுது உளுத்தம்பருப்பை வைத்து ஒப்பேற்றிவிடுவார் அப்பா.

பாட்டியின் அந்த மாக்கல் பிள்ளையார்ச் சிலையும் இந்த மண் பிள்ளையார் பக்கத்தில் இடம்பெறும். இரண்டும் பார்த்தால் ஒரே உயரம், அகலம். அந்தச் சிலை கருப்பு. இது செம்பழுப்பு. பின்தெருக் காலி நிலத்தில் மண்டிக்கிடக்கும் எருக்கஞ்செடியிலிருந்து பறித்த பூக்களாலான் மாலையையும், அருகம்புல் மாலையையும் சூட்டிய பிறகு பார்த்தால், இரண்டும் நிறத்தில் மட்டும் வித்தியாசப்பட்ட இரட்டைப்பிறவிகளாய்க் காட்சியளிக்கும். புஸ்தகத்தைப் பார்த்து அப்பா மந்திரம் சொல்லி பொியதாக பூஜை செய்வார்.

இந்த நேரத்தில், சமையலறையில் அடுப்படியில் அமர்ந்துகொண்டு, கொழுக்கட்டைக்கான வெள்ளை நிறச்சொப்புகளைப் பாட்டி செய்துகொடுக்க, அம்மா பூர்ணத்தை வைத்து மூடி, ஆவியில் வேகவைத்துக்கொண்டிருப்பாள். எண்ணையைத் தொட்டுத் தொட்டு, உருண்டையாக எடுத்துக்கொண்ட மாவைத் தட்டையாக்கிச், சிறிது சிறிதாக விளிம்புகளைப் பொிதாக்கிக், குழிவாய், சிறிய அகல் விளக்குச் சட்டியைப் போல் பாட்டி சொப்புச் செய்யும் அழகும் அடுத்து என்னைக் கவர்ந்த விஷயம்.

என் சித்தப்பாவிற்குக் கல்யாணம் நடந்தால், ( ‘என்னமோ தொில! ஜாதகம்-லாம் நல்லாத்தானிருக்கு, ஏன் தட்டிண்டே போறதுன்னு புாியல. அந்தப் பிள்ளையார்தான் ஒரு வழி பண்ணணும். ‘ என்று பலமுறை பாட்டி புலம்பியிருக்கிறாள்.) ஆயிரத்தெட்டுக் கொழுக்கட்டை செய்வதாகப் பாட்டி ஒருமுறை வேண்டிக்கொண்டுவிட்டாள். கல்யாணம் நடந்தபின், அம்மா, அத்தை, சித்தி, சித்திப்பெண்கள், ஒண்ணுவிட்ட மாமிகள் என்று ஒரு கூட்டமே உட்கார்ந்து ஓயாமல் இந்தச் சொப்புச் செய்திருக்கிறது ஒரு விநாயகச் சதுர்த்தியில். எங்கள் தெருவில் உள்ள எல்லார் வீட்டிற்கும் ஓடி ஓடிக் கொண்டு கொடுத்ததுகூட ஞாபகமிருக்கிறது. அன்று அந்த கொழுக்கட்டைகள் எங்கள் தெருமுழுதும் இறைந்தன.

துரதிர்ஷ்டவசமாக விநாயகச்சதுர்த்தி கொண்டாடுவது இரண்டு வருடம் முன்னால் நின்று போய்விட்டது. என் அப்பா செய்து வந்த ஒரே கலைப்படைப்பிற்கும் (அப்படிச் சொல்லலாம் என்றே நினைக்கிறேன்), களிமண் தேடலுக்கும், எப்பொழுது அந்தக் கருஞ்சிவப்பு மணிகள் வெடிக்கும் என்ற காத்திருப்புக்கும், பாட்டி செய்யும் கொழுக்கட்டைச் சொப்புகளுக்கும் மொத்தமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ஆமாம், இரண்டு வருடம் முந்தைய விநாயகச் சதுர்த்தி அன்று காலையில் என் பாட்டி காலமாகிவிட்டாள். இனி வருடா வருடம் விநாயக சதுர்த்தி இல்லை. அவளது திதி, திவசம்தான் இந்த நாளில்.

பாட்டி போன சோகம் மட்டுமல்லாமல், சதுர்த்தி சம்மந்தப்பட்ட விஷயங்கள் எல்லாமே வெறும் ஞாபகங்களாகிப் போன இந்தக் கடந்தகால நிகழ்வுகளின் பாரத்தைத் தாங்க முடியவில்லை. பாரம் தாங்கமுடியாத தென்னை மரம், முற்றிய தேங்காய்களை காற்றின் துணைகொண்டு பிய்த்து எறிவதைப் போல, எறிந்துவிட முடிந்தால் தேவலை. இல்லை மூன்றாம் நாள் கிணற்றில் போட்ட மண் பிள்ளையாராய்க் காலப் போக்கில் கரைந்துவிட்டாலும் பரவாயில்லை. கரைந்துவிடும் என்று உள்மனது சொல்லிற்று.

– அக்டோபர் 1999

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *