‘‘சார், போஸ்ட்…’’குரல் கேட்டு வெளியே வந்தான் ஸ்ரீராம். அவன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. இரண்டு வாரத்துக்கு முன் நடந்த இன்டர்வியூ அது. சரியாகப் பண்ணவில்லையோ என்று குழம்பிக் கொண்டேயிருந்தான். இன்று அந்த கம்பெனிதான் அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் அனுப்பியிருந்தது.
வானில் பறக்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. காரணம் அவனது அப்பா.நேற்றுக்கூட லட்சுமியோடு ஒப்பிட்டு அவனை வசைபாடினார்.தபாலை வாங்கியவனின் எதிரில்தான் நின்றாள் லட்சுமி.
‘‘பாரு லட்சுமி! ஐயா இப்போ கம்பெனி மேனேஜர். பார்த்துக்கோ! அப்பா நேற்று ரொம்ப பேசிட்டார்னு வருத்தப்பட்டேன். அதுவும் உன்னோட ஒப்பிட்டு என்னைப் பேசிட்டாங்க, ரைட்டு! இப்பவும் உனக்காகத்தானே டவுனுக்கு அப்பா போயிருக்காங்க’’ என்றபடி லட்சுமியை நெருங்கினான்.
‘‘என்னடா, கையில கடுதாசியோட லட்சுமியை முறைச்சிக்கிட்டு இருக்க?’’ என்றபடி வந்தார் அம்மா.
‘‘அம்மா! எனக்கு வேலை கிடைச்சிட்டும்மா’’ என்றான் உற்சாகத்துடன்.
‘‘ரொம்ப சந்தோஷம்டா… லட்சுமிக்கு புண்ணாக்கு வாங்க அப்பா டவுனுக்கு போயிருக்காங்க. போன் போட்டு சொல்லு. நான் லட்சுமிக்கு தண்ணி வைக்கணும்… வழிவிடு’’ என்றபடி சென்றார் அம்மா!
– வே.சரஸ்வதி உமேஷ் (ஜனவரி 2011)