ரோசம்மா பீவி..

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 14, 2022
பார்வையிட்டோர்: 4,083 
 
 

பூவத்தானின் விஸ்வரூபம் கண்டு பயந்து நோய் நொடியில் விழுந்து மரிக்கக்கிடந்த ஒன்றிரெண்டு பேர்களை தர்ஹாவில் தூக்கிக் கொண்டு போட்டார்கள். பேயாடிய வியாத்தும்மா நாக்கைக்கடித்துக் கொண்டு முரட்டுக் குரலில் ஹே.. ஹே. . . என அலறிக்கொண்டே சத்தமிட்டாள்.

‘எனக்க மரத்த வெட்டுனவனுக்க கோட்டைய நான் தகர்ப்பேன்….”

பயந்து நடுங்கிய ஜனங்கள் மோந்திக்குப் பிறகு வீடுகளைவிட்டு வெளிய வருவதில்லை. சடங்கான பிள்ளைகள் இருட்டியபிறகு வளவுக்கு போகும் அவசியங்களில் கூடவே வீட்டிலிருக்கும் வயசான பெத்தாமார் இரும்பு கம்பியோடு ஓதிக்கொண்டே காவல்நிப்பார்கள். வா என்று யாரும் மோந்திக்கு பிறகு சொல்லுவதில்லை. வாசல்கதவை பூட்டும் போதுகூட போ. . .போ. . .” என்று சொல்வதுதான் நடைமுறையாக இருந்தது.

பக்கீர் மம்மது அண்ணன் தம்பிகளுக்குள் பாகப்பிரிவினையில் குளத்தை ஒட்டிய வயிலங்கரை தோப்பை பங்கு வைக்கும் போது தொட்டடுத்து கிடந்த புறம்போக்கில் நின்ற பெரிய வாவமரத்தையும் வெட்டி அந்த பாதையையும் சேர்த்துப் பிரித்துக் கொண்ட அந்த இரவிலேயே வாவமரத்தை வெட்டிய வெட்டுக்காரன் ரத்தம்கக்கி செத்துப் போனது பலரையும் உறைய வைத்துவிட்டது. வெட்டப்பட்ட வாவ மரத்தில் ராத்திரி சங்கிலி சத்தம் கேட்கும். சாமத்தில் ஒரு கனத்த மனிதன் சங்கிலியை இழுத்துக் கொண்டு அங்குமிங்கும் ஓடும் ஓசைகேட்டு ஊரே நடுங்கியது.

ஒருநாள் இரவில் நேரம் தெரியாமல் வளவு வாசலை திறந்த மம்மதியாவின் நாசிதுவாரத்தில் ஒரே பூவாசம். . நிமிர்ந்து பார்த்தவள் அலறிவிழுந்து மயங்கினாள். . . மறுநாள் போதம் தெளியாமலேயே மரித்துப் போனாள். மைய்யத்தைக் குளிப்பாட்டும் போது அவள் வாயிலிருந்து ரத்தம் கசிந்ததைப்பார்த்து ஊர்கூடி தீர்மானித்து இருபது வருசங்களுக்கு முன்னால் நீக்கம்பு தினத்தை நொடியில் விரட்டி தேவுவை குப்பியில் அடைத்து பகுதாத் முஹைதீன் அப்துல்காதர் ஜீலானி அளவுக்குப் பேசப்பட்ட பாவாவின் பழய மகிமைகளை சொல்லிக் கொண்டே அவரை கொண்டுவர முதலாளிமார்கள் ஜெயமங்கலத்துக்கு ஆள் அனுப்பினார்கள்.

மணிக்கூண்டிலிருந்து கரிகோஸ் வண்டியில் புறப்பட்டுப் போனவர்களுக்கு பழய பாவா மரித்துப்போன தகவல் கிடைத்தது. ஆண்டிப்பட்டியிலிருந்த பாவாவின் மகனை கேள்விப்பட்டுப்போய் பாவாவின் மகன் அசனார்பாவாவை அழைத்துக் கொண்டு ஊருக்கு வந்தார்கள்.

அசனார்பாவா ஊருக்குள் வரும்போது பெரும் காற்றும் மழையும் வீசி அடித்து சம்முவபுரத்துக்கும், வெள்ளமடத்துக்கும் இடையே குளம் உடைந்து வயக்காடெல்லாம் அழிந்து போனது. அசனார்பாவா முதலாளி வீட்டு மாடத்தில் நின்று தன் நீண்டதாடியை இழுத்துத் தும்புவரை நீட்டிவிட்டுக்கொண்டே யோசித்தார். தாடகமலையை கருப்புமேகம் முழுங்கிவிட்டிருந்தது. அரிக்கிலாம்பு வெளிச்சத்தில் முதலாளியைப் பார்த்து “தொழுகை உண்டா…?” என கேட்டபோது முதலாளியின் தலை வெட்கமாய் குனிந்தது.

“பலாய் முசிபத்தெல்லாம் ஒழியனும்னா தொழுகை வேணும்…வாய் பேசாம ஒரு எலுமிச்சைபழம் பறிச்சி கொண்டு வரணும்..இது ஊர அழிக்க வந்த மழை…”

பேய் மழையில் போக சிலர் பயந்து நின்றபோது முதலாளி அசனார்பாவாவிடம் சொல்லத் தயங்கி நின்றார். “நீ..இங்க வா..” ஒருவன் நடுங்கிக் கொண்டே பாவாவிடம் வந்தான். பாவா உள்ளங்கையை பொத்திவிரித்தார். ஒரு நீள கருப்பு கயிறு. அவன் புருவம் விரியும் போதே அவன் கையில் கட்டிவிட்டு “ம்.. போ…” என்றபோது அவன் தைரியமாக நெஞ்சை மலத்திக்கொண்டு கொட்டும் மழையில் நடந்தான். கொஞ்ச நேரத்திலேயே எலுமிச்சைபழம் வந்ததும் வாங்கிக் கொண்டு பாவா அறைக்குள் நுழையும் முன்னால் “மழை நின்னதும் கதவ தட்டுங்கோ…” எனச்சொல்லிக் கொண்டே உள்ளேபோய் கதவைப் பூட்டினார்.

அசனார்பாவா கதவைப் பூட்டிய ஐந்தாவது நிமிடத்தில் மழை நின்றது. தாடகமலையை கருப்புமேகம் சுத்தமாக கழுவிபோட்டிருந்ததால் பகல் பகலாகவே இருந்தது. அரிக்கிலாம்பை அணைத்துவிட்டு முதலாளி மெல்ல கதவைத் தட்டினார். பாவா வெளியே வந்தபோது வெயில் சுள்ளென அடித்தது.

அன்று மாலைக்குள் ஊரில் எல்லோரும் கருப்புகயிறு கட்டிக்கொண்டார்கள். காய்ச்சல் குணமானது. பாவா காசு பணம் கேட்கவில்லை. பலரும் மரியாதையாக மடக்கிக் கொடுத்தார்கள். ஒருபாடு கூட்டம் தண்ணி ஓதி வாங்கி குடித்தது. தோளில் கிடந்த துண்டால் ஆட்டி ஆட்டி சூராக்களை முணுமுணுக்கும் போது குழந்தைகள் ம்மாக்காரிகளின் மடியிலிருந்து அழுதன. வீட்டை விட்டு வெளியேறாத பெண்கள் பலரும் பாவா முன்னால் கூச்சமில்லாமல் வந்துபோனார்கள்.

வெட்டப்பட்ட வாவமரத்தை பாவா பாக்கப்போனார். அவர் பின்னால் ஒருபாடு கூட்டம். பொம்பளைகள் முட்டாக்கும் போட்டுக்கொண்டு தூரமாய் தோப்பில் நின்று பார்த்தார்கள். தூரமாய் நின்ற கூட்டத்திலிருந்து பாவா முதலாளியை அழைத்தார். பயந்துகொண்டே முதலாளி கிட்டேபோனதும் கம்பீரமாகச் சொன்னார்.

“இதுல ஒண்ணு இருக்கு. – சித்து வேலைகள் செய்யணும்….ம்..சரியாக்கிதாறேன்…” ரொம்ப நேரம் மரமூட்டைப்பார்த்து யோசித்துக்கெண்டே நின்றவர் மோந்திக்குப் பிறகுதான் விலகி நடந்தார். இதன்பிறகு பாவா இரவு நேரங்களில் தனியாய் வெட்டப்பட்ட வாவமரம் இருந்த புறம்போக்கு பாதையில் அரிக்கிலாம்பு விளக்கைத் தூக்கிக்கொண்டு நடந்து போவார். என்னவெல்லாமோ செய்வார் யாரும் எதுவும் பயந்து கேட்டதில்லை. பாவா வந்து ஒரு மாசத்துக்குப்பிறகு ஒருநா இரவு சாமத்தில் பயங்கரமான காற்று வீசிய நேரத்தில் பாவா விளக்கைத் தூக்கிக்கொண்டு நடந்தார் கையில் வைத்திருந்த தேங்காயை கீழே வைத்ததும் அது பாவாக்கு முன்னால் உருண்டு உருண்டு போய்கொண்டே இருந்தது. பாவா உருளும் தேங்காய்க்கு பின்னால் நடந்தார். வாய் எதை எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தது. தேங்காய் வாவ மரமூட்டின் அருகே நின்றது.

“பூவத்தான்…வெளியே வா…” பாவா வெங்கல குரலில் கத்தினார். வாவ மரமூட்டுக்குள்ளிருந்து பூவத்தான் விஸ்வரூமாய் எழுந்து நின்றது. அதன் முரட்டுக்கண்கள் ரெண்டும் தீ பந்தமாய் எரிந்தது. அதன் நாக்கு நெஞ்சுவரை நீண்டு தொங்கியது. ம்… ம்.. என முறுவிக்கொண்டே நின்ற பூவத்தானின் மூச்சுக்காற்றில் மரங்கள் அசைந்தன.

“எதுக்கு ஆளுவள ஒபத்திரம் செய்யா …?

பூவத்தான் அழுதான். அழுதுகொண்டே சொன்னது “எங்கூட்ட கலைச்சானுவோ…”

“தெரியாம நடந்துட்டு..இனி வேற எடத்துக்குப் போ…”

“முடியாது…”

“மரியாதையா போ…இல்லன்னா உன்ன விரட்டுவேன்…”

பாவா கையிலிருந்த சின்ன ஊசியால் தகட்டில் குத்தினார். பூவத்தானின் நெஞ்சிலிருந்து குபுக்கென ரத்தம் பீறிட்டுச்சாடியதும் அது அலறியது.

“சொல்லு…இங்கே இருந்து போவியா…”

“என்னைய ஒண்ணுஞ்செய்யாதைங்கோ பாவா….இது எனக்க எடம் நான் போவமாட்டேன்…”

“நீ போவலன்னா தகட்ட கொளுத்துவேன்…ஒனக்க சாம்பல குப்பியில அடச்சு மண்ணுல மூடுவேன். போறியா.. போவலியா..?”

மீண்டும் தகட்டில் ஊசியால் குத்தினார். பூவத்தான் அலறி துடித்தது அதன் உடல் முழுவதும் ரத்தம் கசிந்து சிகப்பாக மாறியது.

“தகட்ட கொளுத்துவேன்..போறியா.. ?”

“நான் போறேன்…” பூவத்தான் மண்டிபோட்டது.

“இனி இங்கே வரமாட்டேன்னு சத்தியம் செய்து கொடு…” பூவத்தான் சத்தியம் செய்தது.

“நீ போறதுக்கு என்ன அடையாளம்…”

“ஊர் எல்லையில் தென்னமரத்த முறிச்சிப் போடுவேன்…”

பாவா தகட்டில் மை தடவினார். தேங்காய் உருண்டு பாவாவின் கைக்கு வந்ததும் பூவத்தான் ஊளிபோட்டு ஓடியது. பாவா திரும்பியபோது ஊர் எல்லையில் தென்னைமரம் முறிந்துவிழும் சத்தம் கேட்டது.

பூவத்தானை ஊளிபோட்டு ஓடவைத்த அசனார்பாவா ஊரிலேயே தங்கிவிட்டார்.

முதல் உலகமகாயுத்தம் உச்சத்திலிருந்த போதுதான் பாவாவைப் பார்க்க பாவாவின் மகன் ஜீலானிபாவா என்ற இருபது வயது இளைஞன் முதன்முதலாக ஊருக்கு வந்தான்.

வீராணி சாயிபுக்கும் செல்லம்மா பீவிக்கும் மொத்தம் எட்டு பிள்ளைகள் பிறந்து நான்கு பிள்ளைகள் இறந்துபோனது போக மிச்சம் மூன்று பொட்டபிள்ளைகளும் ஒரு ஆணும் உண்டு. ரோசம்மாபீவிதான் இளைய மகள்.

ரோசம்மாபீவிக்கு நாலு வயசு இருக்கும்போது வீட்டின் பின்பக்கம் பரந்து விரிந்துகிடந்த தோப்பில் மாமரமூட்டில் மரக்குதிரையில் விளையாடிக் கொண்டிருந்தவளின் தோளில் ஒரு மாங்காய் விழுந்தது. மாங்காயின் காம்பில் வடிந்தபால் ரோசம்மாபீவியின் தோளில்பட்டு அந்த இடத்தில் மதியத்துக்குள் தோல் பொள்ளி புண்ணானது. செல்லம்மாபீவி மரத்தை எரித்து விடுவதைப்போல பாத்துவிட்டு மாலையில் வில்வண்டியில் வீட்டுக்கு வந்த வீராணிசாயிபிடம் சொன்னாள். அவர் பெரிய கோடாலியை கொண்டுபோய் மாமரத்தை மூட்டோடு வெட்டித்தள்ளினார்.

ரோசம்மா பீவிக்கு காய்ச்சல் அடித்தது. மண்டைக்காட்டு வைத்தியர் குளிசை கொடுத்தார். சின்ன உள்ளி, சீரகம், இந்திப்பூ, நறுக்குமூலம், சதஉப்பு எல்லாமுமாகப் போட்டு கசாயம் வைத்து குளிசையை கரைத்துக் கொடுத்தபோதும் காய்ச்சல் இறங்கவில்லை. ரோசம்மா பீவிக்கு ஒரே வாய் பொலப்பம். வீராணிசாயிப்பு பாவாவிடம் போனார். பாவா மகன் ஜீலானிபாவாவை வீராணிசாயிப்போடு அனுப்பி வைத்தார். ஜீலானி பாவாவை நடுவீட்டில் தடுக்குப் போட்டு உட்கார வைத்துவிட்டு வீராணிசாயிபு ரோசம்மா பீவியை மடியில் வைத்துக் கொண்டு எதிரில் உட்கார்ந்தார். ஜிலானி ஒருகப்பு நீரில் ஓதி ஓதி ஊதினார். அவரின் கண்கள் ரோசம்மா பீவியின் மேல் நிலைத்து நின்றன. ஓதிய தண்ணீரை ரோசம்மாவுக்கு குடிக்க கொடுத்துவிட்டு ஜிலானி எழுந்து வந்து வாசலில் படியிறங்கும் போதும் ரோசம்மாவைப் விசித்திரமாகவே பார்த்தார். ரோசம்மாபீவிக்கு காய்ச்சல் குணமானதை கேள்விப்பட்டு மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டுப் போனார்.

ஜீலானிபாவாவுக்கு ஜெயமங்கலத்தில் ஒரு மனைவி இருந்தாள். ஒரு வயதில் ஒரு ஆண்குழந்தையும் கூட உண்டு. ஜீலானியின் மனைவி எல்லோரிடமும் திடீரென், ‘வியாழக்கிழமை அசருக்கு முன்னால் தான் மரித்துப் போவேன்’ எனச் சொன்னாள். ஜீலானி மௌனமாக நின்றார் மற்றவர்கள் பைத்தியம் உளறுது என்றார்கள். அவ சொன்னதுபோலவே அதே நாளில் மரித்தும் போனாள். சரியாக இருபது நாட்களுக்குப்பிறகு ஜீலானிக்கு இன்னொரு பொண்ணைக் கட்டிவைத்தார்கள். ஆறுமாதங்கள் தாண்டி அவள் ஜீலானியை பிடிக்காமல் விலகி போய்விட்டாள். அவள் போனபிறகுதான் ஜீலானி வாப்பாவைத்தேடி ஊருக்கு வந்தது.

ரோசம்மாபீவியின் குட்டியாப்பா மனைவி சோக்கேட்டில் மரித்துப்போனதும் அவருக்கு இரண்டாவது கல்யாணம் செய்து வைத்தார்கள். இரண்டாவது மனைவி நாலு குழந்தைகள் பெற்றும் ஒன்றும் மிஞ்சவில்லை. இரண்டாவது மனைவியே மாப்பிள்ளைக்கு பெண்பார்த்து மூன்றாவதாக ஒருத்தியை கெட்டி வைத்தாள். மூன்றாவதுகாரிக்கு தலைபிரவசம் குழந்தை பிறந்து அழாமல் உயிருக்குப் போராடியது ஊளிபோட்டு ஓடிய பழய பூவத்தானின் சாபத்திற்கு பயந்து ஜீலானிபாவாவை அழைத்து வந்தார்கள். ரோசம்மாபீவிக்கு அப்போது பத்து வயது.

ரோசம்மா பீவியின் பழய குடும்ப வீட்டில் ஜீலானிபாவா நாப்பது நாள் ஒரு அறையில் தங்கி சில்லா இருந்து அல்லாவைப் பார்க்க ஏற்பாடு செய்தார்கள். வடக்கு மூலையில் பத்தைய பெறையை சுத்தப்படுத்திக் கொடுத்து ஜீலானிபாவா குளிக்கவும் கக்கூஸ் போகவும் குளிமுறியும் கக்கூஸும் புதிதாக கட்டிக் கொடுத்தார்கள். சில்லா இருந்த ஜீலானி பாவாவின் கண்கள் அடிக்கடி ரோசம்மாபீவியை சுற்றின. சாம்பிராணி புகையும் முட்டையும், எலுமிச்சைப்பழமும், தேங்காயும் கொண்டைபூ முத்திய சேவலுமாக வீடு ஒரு புதிய கூடாரமாக மாறிய ஒரு சாமத்தில் தேங்காய் வைத்து குடும்பக்காரர்கள் சுற்றிலும் உட்கார்ந்து பாத்துக் கொண்டிருக்கும் போதே . . வெட்டுக்கத்தியால் தேங்காயை ஓங்கி வெட்டினார். அது வாள் கொண்டு அறுத்தெடுத்த நேர்த்தியைப் போல இரண்டாக பிரிந்தது. எல்லோரும் மலைப்பாக பார்த்தபோது ஜீலானி பாவா அர்த்தம் கண்டுபிடிக்க முடியாத ஒரு சிரிப்புச்சிரித்தார். மறுநாள் காலையில் சடங்காவாத பெண்ணிடம் பத்து முட்டை சில்லா அறைக்கு கொண்டுவரச் சொன்னார். முட்டையை தூக்கிக் கொண்டு ரோசம்மாபீவி போனதும் ஜீலானியின் கண்களில் தீ கங்குகள் மின்னின. அவரின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் ரோசம்மாபீவி சில்லா அறையை விட்டு வேகமாக வெளியே வந்து மூச்சுவாங்கினாள்.

நாப்பதாவதுநாள் ரோசம்மாபீவியின் குட்டியாப்பாமகன் அழுதான். குழந்தை உயிர் பிழைத்து கையையும், காலையும் அடித்தது. ஒட்டு மொத்த குடும்பமும் ஆனந்த கூத்தாடி ஜிலானியின் மகிமைக்கு முன்னால் மண்டிபோட்டது. சில்லாவிலிருந்து இறங்கி வந்த ஜீலானிபாவா நேராக பேசினார்.

“ஒங்க காரியத்த நான் சிறப்பா முடிச்சாச்சி..எனக்கொரு காரியத்த நீங்கோ முடிச்சி தரணும்…”

“சொல்லுங்கோ..என்ன செய்யணும்…”

“எனக்கு அந்த பிள்ளைய நிக்காஹ் பண்ணித்தரணும்…” ரோசம்மாபீவி திடுக்கிட்டு கதவுக்குப் பின்னால் முழுவதுமாக மறைந்து கொண்டாள்.

தாடியும் அந்த முகமும் அந்த உருவமும் ரோசம்மாபீவியை நொடித்துப் போட்டது. ஆகாயம் அவளை சுருட்டி வீசியதைப்போல உணர்ந்தாள். குழந்தை உயிர் பிழைத்த மகிழ்ச்சி நிலைக்கவில்லை. எல்லார் இருதயங்களிலும் ரத்தம் கசிந்தது. “அது சின்ன புள்ளைலா…” குட்டியாப்பா பயந்து சொன்னார்.

“சமயம் வந்தபொறவு செய்து தந்தாபோதும்…யோசிங்கோ. ஆனா நிக்காஹ் நடத்தியே தரணும்…” கடைசி வார்த்தை எச்சரிக்கையாக விழுந்தது.

வீராணிசாயிபும் செல்லம்மாவும் அழுதார்கள். ரோசம்மாவின் குட்டியாப்பா சமாதானம் பேசிப்பார்த்தார்.

‘அவன் மந்திரவாதில்லா. பிள்ளைய என்னமும் செய்துடுவானே.”

– தொடரும்…

– ரோசம்மா பீவி (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு:2000, திணை வெளியீட்டகம், நாகர்கோவில், 2000

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *