ரெண்டுங்கெட்டான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 13, 2023
பார்வையிட்டோர்: 2,378 
 
 

தனக்கு மட்டும் ஏன் இத்தனை பெயர்கள் என்று தாயிடம் புகார் செய்தபோது அவளுக்கு ஏழு வயது.

அது ஏன் அம்மா சுகந்தி, என்றும் அப்பா `மலரு’ என்றும், பள்ளித்தோழிகள் சுகி என்றும் அழைக்கிறார்கள்?

“எனக்கு ஏம்மா இவ்வளவு நீளமான பெயர் வெச்சீங்க?” என்று சிணுங்கினாள்.

“அதவா கண்ணு? எனக்கு சுகந்திங்கிற பேரு பிடிச்சுது. அப்பாவோ, மலருன்னுதான் வைக்கணும்னு பிடிவாதம் பிடிச்சாரு!”

புன்னகையால் விரிந்த இதழ்களை மூடிக்கொண்டாள் மகள்.

“நாங்க ரெண்டு பேரும் விட்டுக்குடுக்கல. கடைசியில, `இதுக்கு என்ன சண்டை?’ன்னு சுகந்த மலர்னு வெச்சோம். அதுக்கு அர்த்தம் என்ன தெரியுமா? வாசனையுள்ள மலர்!”

சமாதானம் மட்டுமல்ல, பெருமையும் ஏற்பட்டது சுகந்தாவிற்கு. தோட்டத்திலிருந்த மல்லிகையையும் ரோஜாவையும் விரும்பிச் சூடிக்கொண்டாள்.

மலர் என்ற தான் எப்படி மாலாவாகிப்போனோம் என்று சற்றுப் பெரியவளானதும் புரிந்துகொண்டாள்.

சீனர்களுக்கு ‘ர’ என்கிற எழுத்து தகராறு. அவர்கள் மொழியில் அது கிடையாதாம். சிலர் அதற்குப் பதில் லகரத்தைப் பயன்படுத்துவார்கள் — ராகவன் என்ற அவளுடைய மாமாவின் பெயர் `லகாவான்’ என்று மாறுபட்டுவிட்டதுபோல். சீன ஆசிரியைகளுக்கு அவள் மாலா.

அடுத்த சில ஆண்டுகள் எவ்விதக் குழப்பமுமின்றி நகர்ந்தன.

பன்னிரண்டு வயதில் அடையாளக்கார்டு எடுக்கவேண்டும்.

“நீ எடுத்த பிள்ளையா? என்னடா, அப்பா அம்மா ரெண்டுபேர் சாயலும் இல்லியேன்னு பாத்தேன்!” என்று ஆசிரியை கூற, சுகந்தாவுக்கு எதுவும் புரியவில்லை.

வீடு திரும்பியதும், “எடுத்த பிள்ளைன்னா என்னம்மா?” என்று கேட்டாள். அப்போது அவளுக்குத் தெரியவில்லை, தாயின் பதிலால் தன் வாழ்க்கையின் தடம் மாறிப்போகுமென்று.

தாய் முதலில் பயந்தாள். பிறகு, `இதெல்லாம் மறைக்கக்கூடிய சமாசாரமா என்று உண்மையைச் சொன்னாள்: “மத்தவங்க குழந்தையை தன்னோட குழந்தையா வளக்கறது!”

“ஏன் அப்படிச் செய்யணும்?”

“பெத்தவங்களுக்கு ஏதோ அசௌகரியம்”. வலிய வரவழைத்துக்கொண்ட அலட்சியத்துடன் கூறினாள்.

“ஏழையா இருந்திருப்பாங்களா?”

“அப்படியும் இருக்கலாம். ஏனோ அவங்களால குழந்தையை வளக்க முடியல. தத்து எடுக்கிறவங்களுக்குப் பிள்ளை பெறமுடியாம ஏதோ கோளாறு. இதனால இப்போ ரெண்டு பக்கத்திலேயும் நிம்மதி”.

நிம்மதிதானா? மகிழ்ச்சி கிடையாதா?

அதற்குமேல் எதுவும் கேட்காது, முகம் வாட அப்பால் நகர்ந்தாள் பெண்.

‘அம்மா’ என்று உயிரையே வைத்திருந்தோமே! அந்த அம்மா, மீனாம்பாள், தன்னைக் குப்பைத்தொட்டியிலிருந்து பொறுக்கியிருக்கிறாள் — சாமான் போட்டு வரும் பிளாஸ்டிக் பையைக்கூட ஒருமுறை உபயோகப்படுத்திவிட்டு, வேறு எதற்காவது பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சுத்தப்படுத்தி வைப்பதுபோல!

இந்தக் குடும்பத்தில் தானும் ஒரு குப்பை. என்றைக்காவது எதற்காகவாவது பயன்படும் என்று சோறு போட்டு வைத்திருக்கிறார்கள். அவ்வளவுதான்.

அழுகை ஆத்திரமாக மாறியது. தனக்குச் சொந்தமில்லாதவளை எதற்காக ‘அம்மா’ என்று அழைப்பது?

அப்போதிலிருந்து சுகந்தாவின் குணமே மாறிப்போயிற்று. பள்ளிக்கூடத்தில் அவளைப்போன்ற சில பெண்கள் தோழிகளாக அவளை ஏற்றுக்கொண்டபோது, `வாழ்க்கை அவ்வளவு மோசமில்லை!’ என்று தோன்றிப்போயிற்று.

“நாம்ப சந்தோஷமா இருக்க கூடாதுன்னுதான் சாமி அம்மான்னு ஒருத்தரைப் படைச்சிருக்கிறாரு,” என்றாள் உமா. இத்தனைக்கும், அவளைச் சுமந்து பெற்ற தாய்! இரவு நேரங்களில் மகள் தனியாகச் சற்றே பெரிய பையன்களுடன் ஊர்சுற்றுவதைக் கண்டித்ததால் எழுந்த கோபம் வெறுப்பாக மாறி இருந்தது.

“சரியாச் சொன்னே, உமா,” என்று பாராட்டினாள் கமலி. “எங்கம்மாவை அவங்க வீட்டில அதிகம் படிக்கவைக்கல. அதனால, என்னை எப்பவும் `படி, படி’ன்னு பிராணனை வாங்கறாங்க,” என்று பொருமினாள். “போன பரீட்சையில நல்லா செய்யலேன்னு ரூமில போட்டு பூட்டிட்டாங்க. மூணு நாள்! அம்மாவாம் அம்மா!”

தன்னையுமறியாது, அவர்களுடன் தன்னை ஒப்பிட்டுக்கொண்டாள் சுகந்தா. இப்படியெல்லாம் செய்து தன்னைத் துன்புறுத்தவில்லை அம்மா என்று தான் நம்பிய மீனாம்பாள்.

இருந்தாலும், `இனிமே என்னை அம்மான்னு கூப்பிடவேமாட்டியா?’ என்ற ஏக்கம் பெருக, அவள் முகத்தில் ஆழ்ந்த வருத்தம் குடிகொண்டிருப்பதைப் பார்த்து ஒரு குரூர திருப்தி எழுந்தது சுகந்தாவுக்கு. வளர்ப்புத்தாயை இன்னும் எப்படியெல்லாம் நோகடிக்கலாம் என்பதுபோல் நடந்துகொண்டாள், தன்னையுமறியாது.

உமாவின் பிறந்தநாள் விழா என்று போனவள், அங்கு முன்பின் தெரியாத ஒருவனுடன் நேரத்தைக் கழித்துவிட்டு வீடு திரும்பும்போது நள்ளிரவு. அவன் அவளைவிட மூத்தவனாக இருந்தபோதும் அவளை மதித்துப் பேசியதில் நேரம்போனதே தெரியவில்லை. அவளுடைய அறிவையும் அழகையும் எப்படிப் புகழ்ந்தான்!

வழக்கத்துக்கு விரோதமாக முன்ஹாலில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அமைதியான முகத்துடன் மீனாம்பாள் உட்கார்ந்திருந்தாள்.

அவளைக் கவனியாததுபோல உள்ளே செல்ல முற்பட்டாள் சுகந்தா.

“இப்படி வந்து ஒக்காரு. ஒங்கிட்ட ஒண்ணு சொல்லணும்.” வழக்கத்துக்கு விரோதமாக அவள் குரலில் இருந்த கண்டிப்பு சுகந்தாவைப் பணியவைத்தது.

“நான் நல்லவிதமா வளத்தா, ஒன் பிறப்பை மாத்திடலாம்னு நினைச்சேன். அது தப்புன்னு இப்போ தோணுது”.

சுகந்தா விழித்தாள். என்ன சொல்ல வருகிறாள்?

“ஒனக்கு இப்போ ரெண்டுங்கெட்டான் வயசு. நீ குழந்தையுமில்லே, வளந்த பெரியவளும் இல்லே. ஒனக்கு இன்னும் ஒலகம் புரியல. அதான் ஒன்னைப் பெத்தவ செஞ்ச தப்பையே நீயும் பண்ணறே!”

சுகந்தா நிமிர்ந்து உட்கார்ந்தாள். தான் கேட்க நினைத்ததைத் தானே சொல்கிறாள்.

“அவளுக்கும் அப்போ பதினஞ்சு வயசுதான். கூடப் படிக்கிற பையனோட கண்ட கண்ட படங்களை ஒண்ணாப் பாத்துட்டு…! சுதந்திரம்னு நினைச்சு மனம்போனபடி நடந்துக்கிட்டா. அவ வயத்திலே நீ! படிப்பு பாதியில நின்னுபோச்சு.” பழைய சம்பவத்தில் மனம் நிலைக்க, சற்றே நிறுத்தினாள்.

“மைனர் பொண்ணைக் கற்பழிச்ச குத்தத்துக்காக அந்தப் பையனை போலீஸ் பிடிச்சுக்கிட்டுப்போச்சு”.

பிறக்குமுன்பே தாய் தந்தை இருவர் வாழ்க்கையையும் நாசமாக்கியிருக்கிறேன்! சுகந்தா மெல்ல விசும்பினாள்.

“அந்த அம்மா செஞ்ச தப்பை நீயும் செய்யக்கூடாது, சுகந்தி. அப்புறம் ஒனக்குப் பிறக்கப்போற குழந்தையும் நிம்மதி இல்லாமத் திண்டாடும்”.

சுகந்தாவின் மனதில் பல கேள்விகள் எழுந்தன.

அப்புறம் அந்தப் பெண்ணுக்கு என்ன ஆயிற்று?

சீர்திருத்தப்பள்ளியிலிருந்து வெளியேறியதும் பையனுடைய வாழ்க்கை சீரடைந்ததா?

அதெல்லாம் தெரிந்து இப்போது என்ன ஆகப்போகிறது!

‘யார் எப்படிப் போனால் எனக்கென்ன!’ என்று அவற்றை ஒதுக்கித் தள்ளியபோது, தானும் அப்படி ஒரு கண்டத்திலிருந்து தப்பித்தோமே என்ற நிம்மதி பிறந்தது.

ஓடி வந்து, “அம்மா!” என்று விம்மியபடி மீனாம்பாளை இறுக அணைத்துக்கொண்டாள் சுகந்தா.

நிர்மலா ராகவன் (பிறப்பு: அக்டோபர் 17 1942) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். ஓய்வு பெற்ற இடைநிலைப் பள்ளி ஆசிரியையான இவர் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் சரளமாக எழுதக்கூடியவர். மின் அஞ்சல் முகவரி: nirurag@ashleydamico78 எழுத்துத் துறை ஈடுபாடு 1967 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதை, கட்டுரை, தொடர்கதை, வானொலி நாடகம், விமர்சனங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியாவின்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *