மாலை 4 மணிக்கு மணக்க மணக்க சூடாக பில்டர் காப்பியை ருசி பார்த்துக் கொண்டிருந்த ராகவனின் கைபேசி ஓசையெழுப்பி அவரை அழைத்தது.மனமில்லாமல் காப்பி டம்பளரை டிரேயில் வைத்துவிட்டு கைபேசியை எடுத்தால்பெசண்ட் நகரில் இருக்கும் அவரின் மாட்டுப்பெண், மதுமிதா,நமஸ்காரமென்று சொல்லிவிட்டு பேச ஆரம்பித்தாள்.அவர்கள் எல்லோரும் சாயந்திரம் ஏதோ பார்ட்டிக்கு செல்லப் போகிறார்கள் திரும்பி வருவதற்கு ஒரு வேளை தாமதமாகலாம் ,அன்று இரவு விஜய் டீவியில் ஒளிபரப்பவிருக்கும் “நீயா நானா” நிகழ்ச்சியில் அவள் கணவனும் அவளும் கலந்து கொண்டிருப்பதால் அதனை ரிக்கார்டு செய்து வைக்கும்படி கேட்டுக் கொண்டாள். சரி! என்றார் ராகவன். இரவு 9 மணிக்கு ஆரம்பிக்கும் நிகழ்ச்சிக்கு 8.30 மணியிலிருந்தே குடைய ஆரம்பித்துவிட்டார். நிகழ்ச்சி ஆரம்பித்ததும் அதை நடத்தும் திரு கோபிநாத் முன்னுரையில் இது முழுவதுமாக டாக்டர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பங்கு பெறும் நிகழ்ச்சி. இரண்டு அணியிலும் டாக்டர்கள் உள்ளனர். தாங்கள் தங்களது தொழில் அனுபவங்களை வைத்து கடவுள் பற்றியும் மற்றும் கடவுள் நம்பிக்கை பற்றியும் தங்களது அபிப்ராயங்களைத் தெரிவிப்பதுடன் அதற்கான தங்களது வாதங்களையும் முன் வைக்கும்படி வேண்டுகின்றேன் என்று முடித்தார்.ராகவனின் ஒரே பிள்ளை டாக்டர் சந்தோஷ் முன் வரிசையில் வீற்றிருந்தான். அவன் புற்று நோய் பற்றிய ஆராய்ச்சிகள் எல்லாம் செய்து கொண்டிருக்கும் பெரிய டாக்டர்.அவரது மருமகள் மதுமிதாவும் டாக்டர் . எதிர் அணியில் வீற்றிருந்தாள்.
டாக்டர் மதுமிதா பேசும்பொழுது தான் வேலை பார்க்கும் ஆஸ்பத்திரியில் அனைத்து பெரிய டாக்டர்களும் முழுவதுமாக கைவிடப்பட்ட தன் வீட்டினருகிலுள்ளநோயாளி ஒருவர் வீட்டிற்கு வந்த பின் சிறிது சிறிதாக குணமடைந்து இப்பொழுது நல்ல நிலைமையில் இருக்கின்றார். இது மாதிரி பல பேர் சொல்லியும் கேட்டதுண்டு.எனவே நம்மை மீறிய சக்தி ஒன்று உள்ளது. அதைத்தான் கடவுள் என்று நாம் நம்புகின்றோம் என்று சொல்லி முடித்தாள்.
எதிர் அணியில் வீற்றிருந்த டாக்டர் கார்த்திக் குறுக்கிட்டு அந்த நோயாளிக்கு ஆஸ்பத்திரியில் கொடுத்த மருந்துகள் ஒரு வேளை கொஞ்சம் மெதுவாக வேலை செய்திருக்கலாம் மனித உடலில் ரஸாயன மாற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பது நம் அனைவருக்கும் தெரியும் ரஸாயன மாற்றங்களால் அவர் பிழைத்திருக்கலாம் பாமரர்களைப் போல் நாமும் கடவுள், அபூர்வ சக்தி என்று இவற்றுக்கெல்லாம் சாயம் பூசூவது அபத்தம் என்று வாதிட்டான்.டாக்டர் சந்தோஷ் அவனுடன் சேர்ந்து கொண்டு மனிதனின் உடம்பிலுள்ள செல்கள் பற்றியும் குறிப்பாக செம் செல்கள் பற்றியெல்லாம் பெரிய விளக்கங்கள் கொடுக்க ஆரம்பித்தான்.உலகில் பல நாடுகளில் பல இடங்களில் மருத்துவம் சம்மந்தமாக பெரிய பெரிய ஆராய்ச்சிகள் எல்லாம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.புற்று நோய் ஒருவரை பின்னாளில் தாக்க வாய்ப்பிருக்கின்றதா என்பதைக் கண்டறிய எளிய பரிசோதனை முறை கண்டுபிடிக்கப் பட்டு விட்டது மரபணு சம்மந்தப் பட்டது. இதனால் முளைவிடுவதற்கு முன்பே கிள்ளிவிடலாம் அதனால் படித்த நாமெல்லாம் கடவுள், அபூர்வ சக்தி என்றெல்லாம் சொல்வது ரொம்ப அபத்தமென்று நண்பனுக்கு தோள் கொடுத்தான். இதனைத் தொடர்ந்து டாக்டர் கார்த்திக் ஒரு படி மேலே போய் இப்பொழுது செல்களை வைத்து குளோனிங் முறையில் ஒரு லட்சம் மனிதர்களை அதுவும் ஆரோக்கியமான மனிதர்களை சுலபமாக உருவாக்க முடியும் அந்த டாக்டரைக் கடவுள் என்று சொல்லி கும்பிடலாமா என்று கேட்டான்.
நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ராகவனுக்கு வாதங்கள் கடவுள் நிந்தனை போல் பட்டதால் எழுந்து படுக்கையறைக்கு சென்று படுத்துவிட்டார். தூக்கம் வரவில்லை. பிள்ளையின் வாதங்களில் நாத்திக வாசனை வீசுவது போல் தோன்றிக் கொண்டே இருந்தது. தமது கடந்த கால வாழ்க்கையைப் புரட்ட ஆரம்பித்தார். வங்கியில் சேர்ந்த ஆறாவது வருஷமே அதிகாரியாக பதவி உயர்வு பெற்று அதன் பின் கடந்த முப்பத்து மூன்று வருடங்களுக்கு மேலாக வங்கி வீடு தவிர வேறு வெளி உலகமே தெரியாமல் வாழ்ந்து விட்டார். பிள்ளைக்கு இந்த ஆங்கிலக் கல்வி முறை நன்றாக வந்ததால் அவன் படித்து டாக்டர் ஆகி விட்டான். மற்றபடிக்கு சமூக சிந்தனை, ஆன்மிகம் போன்ற விஷயங்கள் பற்றி அவரும் எதுவும் தெரிந்து கொள்ளவுமில்லை. பிள்ளைக்கு எதுவும் சொல்லித் தரவுமில்லை. அதனால்தான் அவன் இப்படியெல்லாம் பேசும்படி ஆகிவிட்டதோ என்ற எண்ணம் அவரை துன்பப் படுத்தியது. திடீரென்று அவருக்கு தோன்றியது. தன் மனைவியாவது ஜிஜாபாய் வீர சிவாஜியை வளர்த்தது போல் நமது இதிகாசக் கதைகளைச் சொல்லி வளர்த்திருக்கக் கூடாதாவென்று.
பேரன் பிறந்த்தவுடன் அங்கு இருவரும் வேலைக்குச் செல்வதால் டாக்டர் சந்தோஷ் ராகவனையும் ஜானகியையும் பெசண்ட் நகருக்கு வந்து விடும் படி கட்டாயப்படுத்தினான். ராகவன் தீர்மானமா க சொல்லி விட்டார் ஜானகியிடம்.இங்கிருந்து அயோத்தியா மண்டபம் ரொம்பப் பக்கம். அங்கு நடை பெறும் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் தன்ஆசை. பெசண்ட் நகர் ரொம்பவும் தூரம். எனவே நீ அவர்களுடன் அங்கு போய் இரு என்றார். ஜானகிக்கு அதில் சம்மதமில்லை. மறுபடியும் சந்தோஷ் ஜானகியிடம் இநத டாப்பிக்கை ஒப்பன் பண்ணியவுடன் ராகவனிடம் சந்தோஷ் பேசிய விபரத்தைக் கூறினாள்.ராகவன் ஜானகியிடமும் சந்தோஷிடமும் எல்லாவற்றையும் விளக்கிச் சொன்ன பிறகு அவர்கள் புரிந்து கொண்டார்கள். ஜானகி பெசண்ட் நகர் வாசியாகி விட்டாள். ஞாயிற்றுக் கிழமைகளில் மாம்பலம் வந்து ராகவனுக்கு வாய்க்கு ருசியாக சமைத்து வைத்து விட்டுப் போவாள்.
ஜானகி படுக்கையறையில் நுழைந்து விளக்கைப் போட்டவுடன் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தார் ராகவன் டீவி ப்ரொக்ராம் முடிந்து விட்டதா? என்றார். ஆமாம் என்று பதிலளித்த ஜானகி இந்த நிகழ்ச்சி உங்களுக்குப் பிடிக்காது என்று தெரிந்து தான் என் பிள்ளை உங்களுக்குத் தெரிவிக்கவில்லை என்று சொல்லி பிள்ளையின் செயலை நியாயப் படுத்தினாள்.ராகவன் வாக்குவாதம் பண்ணவிரும்பாமல் அந்தப் பேச்சைஅதோடு நிறுத்தினார்.
அடுத்த நாள் காலை .சரியாக 7 மணிக்கு மது காரில் வந்து ஜானகியை பெசண்ட் நகர் கூட்டிச் சென்று விட்டாள். அந்த வாரக்கடைசியில் ஜானகியால் மாம்பலம் வர முடியவில்லை. புற்று நோய் சம்மந்தமாக கருத்தரங்குகளில் கலந்து கொள்ள அமெரிக்காவிலிருந்து அழைப்பு வந்ததால் சந்தோஷ் புறப்பட்டு போய் விட்டதாக போனில் கூறிய ஜானகி அவளால் அந்த வாரம் மாம்பலம் வர முடியாது என்றும் தெரிவித்தாள்.
ஞாயிற்றுக் கிழமை காலையில் மதுவிடமிருந்து போன் வந்தது. அவர்கள் மதியம் 1 மணிவாக்கில் மாம்பலம் வரப்போவதாகவும் அவருக்குள்ள மதியம் சாப்பாடு, இரவு டிபன் எல்லாம் கொண்டு வருவதாகவும் ராகவனிடம் தெரிவித்தாள். ராகவன் மதுவிடம் சந்தோஷிடமிருந்து போன் வருகின்றதா? சௌக்கியமாக இருக்கின்றானா? என்று கேட்டார். ஆமாம் என்று சொன்ன மது, சந்தோஷ் இன்னும் மூன்று நாட்களில் திரும்பி வரப்போவதாகவும் தெரிவித்தாள். சொன்னதுபோல் சரியாக 1 மணிக்கு மது அவரது பேரன் அஸ்வினுடன் வந்து அவருக்காக தயாரித்திருந்த உணவுகளனைத்தையும் டைனிங்க் மேஜையிலும் •ப்ர்ஜ்ஜிலும் அழகாக அடுக்கி வைத்தாள். ராகவன் அஸ்வினுடன் கொஞ்ச நேரம் விளையாடினார். கதை கேட்டான். கதையும் சொன்னார். அவர்கள் பெசண்ட் நகர் திரும்பத் தயாரானதும் மதுமிதா ராகவனிடம் அப்பா ! இந்த மாதிரி சமயத்திலாவது தாங்கள் பெ ச ண்ட் நகர் வந்து தங்கப்டாதா.நீங்கள் இங்கு தனியாகக் கஷ்டப்படுவதை நினைத்தால் எனக்கும் அம்மாவுக்கும் ரொம்பவும் கஷ்டமாக இருக்கின்றது.நீங்கள் அங்கு வந்து தங்கினால் அந்த தனி வீட்டில் எங்களுக்கு ஆண் துணையும் கிடைக்கும். அஸ்வினுக்கு நிறைய கதைகளும் கிடைக்கும். அவனும் ரொம்ப சந்தோஷப்படுவான் என்றாள்.”நானே வயதானவன். நான் என்ன பெரிய ஆண் துணையாகிவிடப் போகின்றேன். ஜானகிக்குத் தான் வேலை கூடும்” என்று சொன்ன ராகவன் அஸ்வினைப் பார்த்துக் கொண்டே சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை என்பார்கள். என்ன அஸ்வின்! நீ பெரிய வீரனில்லையா! நீ பார்த்துக் கொள்ள மாட்டாயா. அம்மாவையும் , அப்பம்மாவையும்.? அஸ்வினுக்கு ராகவன் தாத்தா. ஆனால் ஜானகி பாட்டியில்லை. பாட்டியென்றால் ஜானகி வயதானவளாகிவிடுவாளாம் இரண்டு பேரை அம்மா என்றழைப்பதிலும் குழப்பம் வரும் என்பதினால்”அப்பாம்மா” என்ற சொல்லை கண்டுபிடித்திருக்கின்றார்கள் புதிய உறவுகள் உருவாகாவிட்டாலும் தமிழுக்கு புதிய் சொற்கள் கிடைப்பதால் சந்தோஷம்.. ராகவன் அஸ்வினைப் பார்த்து நீ பெரிய வீரனில்லையா என்று கேட்டதும்
ஆமாம்! “நான் பெரிய வீரனாக்கும்!” என்றான் அஸ்வின்.
குறுக்கே புகுந்த மது “ஆமாம்! இரவில் ஏதாவது சின்ன சத்தம் கேட்டாலும் அம்மாவை இறுக்கிக் கட்டிப் பிடித்துக் கொள்கின்ற சுத்த வீரனாக்கும் “என்று கிண்டலடித்தாள்.
சிறுவயதில் ஓடி ஆடி விளையாடாமல் சதா படிப்பதிலேயே இளமையைக் கழிக்கும் குழந்தைகள் ஆரோக்கியமில்லாமல் கற்றவற்றை வைத்து என்ன சாதிக்கப் போகின்றதோ தெரியவில்லை – ராகவன். அப்பா! காலம் ரொம்ப மாறி விட்டது. எதிலும் வேகம், போட்டி. இந்த சமுகத்தில் நாமும் வேகமாக ஓடியாக வேண்டும் இல்லையென்றால் இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவோம் -. மது
தாமரை இலைத் தண்ணீர் என்று கேள்விப் ப்ட்டிருக்கின்றாயா. .அது போல் தான் நாமும் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். சமுகத்தில் இருந்து கொண்டே நமக்கு நல்லது எது என்று பகுத்தறிந்து அதன்படி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். அடுத்தவன் கிண்ற்றில் விழுந்தால் நானும் விழுவேன் என்று சொல்வது அறீவினம்- ராகவன்
ராகவனின் பேச்சுக்கள் மதுவின் சிந்தனை ஓட்டத்தை முற்றிலும் மாற்றியது.அஸ்வினை அவன் போக்குப் போல் போகட்டும் என்று விட்டாள்.அஸ்வின் படிப்பில் படுசுட்டி. அதனால் பள்ளிப் பாடங்கள் படிக்க அவனுக்கு அதிக நேரம் தேவைப் படாததால அவன் சாயந்திரம் முழுவதும் அருகிலுள்ள் பூங்காவில் நன்றாக விளையாடிவிட்டு வருவதால் நன்றாக சாப்பிட்டு அயர்ந்து தூங்குவான்.மது , டாக்டரல்லவா, அஸ்வின் கண்களில் தற்பொழுது காணும் மகிழ்ச்சியைப் பார்த்து பூரித்துப் போவாள்.
அடுத்த வாரம் ராகவன் ரொம்பவும் பிஸியாக இருந்தார். தினமும் சாயந்திரம் உபன்யாசம் கேட்பதும் மற்ற நேரங்களில் வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருக்கும்பொழுது உபன்யாசத்தில் கேட்டவற்றைப் பற்றி சிந்திப்பதிலும் காலம் நல்ல முறையில் போய்க் கொண்டிருந்தது.சந்தோஷ் திரும்பி வந்துவிட்ட விபரத்தை ஜானகி போனில் சொன்னாள்.வாரக்கடைசியில் மாம்பலம் வருவேன் என்றும் சொன்னாள்.
எப்பொழுதும் போல் அன்றும் உபன்யாச ம் கேட்கப் போவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார் ராகவன். கைபேசியில் அழைப்பு வரவே அதைக் கையில் எடுக்க எதிர் முனையில் மது பேசினாள். அவள் குரலில் பதற்றம் தெரிந்தது அப்பா! நானும் உங்கள் பிள்ளையும் அவசரமாக பெங்களுர் புறப்பட்டுப் போகின்றோம். வர இரண்டு மூன்று நாட்கள் ஆகலாம். எனவே அம்மாவுக்கும் குழந்தைக்கும் துணையாக இங்கு வந்து தங்க வேண்டும்.உடனே புறப்பட்டு வாருங்கள் என்று கூறினாள். சந்தோஷ் அவ ளிடமிருந்து கைபேசியை வாங்கி அப்பா! என் நண்பன் கார்த்திக் பெங்களுர் செல்லும் வ ழியில் சாலை விபத்தில் பலமாக அடிபட்டுக் கிடக்கின்றான் என்று செய்தி வந்துள்ளது. அதனால் நாங்கள் உடனே புறப்பட்டுப் போகின்றோம் என்றான்.
எப்படிப் போக ப் போகின்றிர்கள்?
காரில் தான்.
டிரைவர் ஏற்பாடு பண்ணிக் கொண்டிருக்கிறாய் இல்லையா?
டிரைவர் எதற்கு? நானே ஓட்டிக் கொண்டு போய்விடுவேன்
உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த மது கைபேசியை வாங்கி அப்பா! கவலைப் படாதீர்கள். நான் எங்கள் ஆஸ்பத்திரி டிரைவரை ஏற்பாடு பண்ணிவிட்டேன். நீங்கள் மட்டும் ஆட்டோ பிடித்து சீக்கிரம் வாருங்கள் என்றாள். நான் ஆட்டோ பிடித்து அரை மணியில் அங்கு வந்து விடுவேன். டிரைவர் வந்துவிட்டால் நீங்கள் புறப்பட்டுப் போங்கள்.உங்களுக்கு ரொம்ப தூரம் செல்ல வேண்டியிருக்கின்றதல்லவா போய்ச் சேர்ந்தவுடன் கட்டாயமாக போன் பண்ணி விபரங்களைச் சொல்லுங்கள். உங்கள் போனுக்காகக் காத்திருப்பேன் என்று சொல்லிவிட்டு தன் துணி மணிகளை எடுத்துக் கொண்டு ஆட்டோ பிடிக்க ஓடினார்.ஆட்டோவில் வந்து இறங்கிய ராகவனைப் பார்த்ததும் அஸ்வினுக்கு பயங்கர குஷி.சந்தோஷ¤ம் மதுவும் போய் விட்டிருந்தார்கள்.அஸ்வினோடு பேசி விளையாடிக் கொண்டிருந்துவிட்டு எல்லோரும் இரவு உணவை முடித்தார்கள். சந்தோஷிடமிருந்து அழைப்பு வந்ததும் கைபேசியை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே சென்று பேச ஆரம்பித்தார்.. சந்தோஷ் போனில் தாங்கள் ஆஸ்பத்திரியில் காத்திருப்பதாகவும் சாலை விபத்தில் கார்த்திக், அவன் மனைவி மற்றும் அவனது ஒரே குழந்தையும் இறந்து விட்டார்கள் என்று சொல்லிவிட்டு தேம்பி தேம்பி அழுதான். செய்தியைக் கேட்ட ராகவனுக்கு என்னென்வோ செய்தது. சமாளித்துக் கொண்டு சந்தோஷிடம் கார்த்திக்கின் வயதான பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய நிலையில் உள்ள நீயே கலங்கி நிலைகுலைந்து நிற்கக் கூடாது. மனதைத் தேற்றிக் கொண்டு ஆக வேண்டியதைப் பார் என்று¡ர்.
அடுத்த நாள் காலை மது பேசினாள். ராகவன் மதுவிடம் விபரங்கள் எதையும் ஜானகிக்கும் அஸ்வினுக்கும் சொல்லவில்லை என்பதைத் தெரிவித்துவிட்டு அதன்பின் கார்த்திக்கின் பெற்றோர்கள் எப்படியிருக்கின்றார்கள்? என்று கேட்டார்.அதை ஏன் கேட்கின்றீர்கள் ? என்று சொன்ன மது மேற்கொண்டு ராகவனிடம் உங்களுக்குத் தான் தெரியுமே கார்த்திக்கின் அப்பா ஒரு பெரிய விஞ்ஞானி இந்தியன் இன்ஸ்டிடியுட் ஆப் ஸயன்ஸில் ஒரு பெரிய பேராசிரியராக பணி செய்து கொண்டு ஆராய்ச்சிகளும் செய்து வருகின்றாரில்லையா. அவருக்கு கடவுள் நம்பிக்கை எதுவும் கிடையாது. ஆனால் கார்த்திக்கின் அம்மா நேர் விரோதம். இருந்தாலும் கணவரின் போக்கைப் புரிந்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகளைத் தவிர்க்க அவள் நம்பிக்கைகளை ஆழ் மனதில் புதைத்து விட்டு கணவனுக்கு நல்ல மனைவியாக வாழ்ந்து கொண்டிருந்தாள். தன் ஒரே அருமைப் பிள்ளையின் அழகிய சிறிய குடும்பம் முழுவதும் ஒரே சமயத்தில் அழிந்து விட்டது என்ற பேரதிர்ச்சியைத் தாங்க முடியாத பேதைத் தாய் அந்த பெரிய விஞ்ஞானியின் எதிரே போய் நின்று அவள் ஆழ்மனதில் அமுக்கி வைத்திருந்த கடவுள் நம்பிக்கை என்ற உணர்ச்சி பீறிட ஆக்ரோஷமாக அவரிடம் உங்களுக்கு இப்பொழுது திருப்தியா என் குழந்தைக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் செய்ததுமட்டுமில்லாமல் அவனை கடவுளை நிந்திக்கும்படியும் செய்தீர்களே. கடவுளின் தண்டனைக்கு அவர்களை ஆளாக்கிவிட்டீர்களே என்று கூக்குரலிட்டவள் திடீரென்று நிலைகுலைந்து நெஞ்சை பிடித்துக் கொண்டு சாய்ந்திருக்கின்றாள். கொடுரமான துக்க செய்தியைக் கேட்டு அங்கு ஓடோடி வந்திருந்த அவளது நெருங்கிய சினேகிதி கார்த்திக்கின் தாயை தன் மடியில் போட்டுக் கொண்டு கைபேசியில் டாக்டரை அழைத்திருக்கின்றாள். டாக்டர் வந்து பார்த்துவிட்டு “மேஸிவ் ஹார்ட் அட்டாக்”. உயிர் பிரிந்து விட்டது என்று கூறியிருக்கின்றார்.தன் கண்முன்னே நடந்து முடிந்த கொடுரக் காட்சியைக் கண்டு விக்கித்துப் போன கார்த்திக்கின் அப்பா பித்துப் பிடித்தவ்ர் போல ஆகிவிட்டார். படித்த பெரிய விஞ்ஞானி எல்லாம் சரிதான். மனோ பலமுமில்லை. விஷயத்தை எப்படிக் கையாள்வது என்று கூடத் தெரியாமல் மனைவியையும் இழந்து பித்து பிடித்தவர் போல் கடவுளே எனக்கும் தண்டனை கொடு! தண்டனை கொடு! என்று மட்டும் புலம்பிக் கொண்டிருக்கின்றார். எவ்வளவு சமாதானப் படுத்த முயன்றும் முடியவில்லை. அவருக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு மற்ற காரியங்களை எல்லாம் ஒருவாறு முடித்தோம்.மயக்கம் தெளிந்து எழுந்த பின்பும் அதே மாதிரி புலம்பிக் கொண்டிருக்கின்றார். என்ன செய்ய ! அவரை ஏதாவதொரு நல்ல மனோதத்துவ நிபுணா¢டம் கூட்டிச் செல்லலாமா? என்று யோசித்துக் கொண்டிருக்கின்றோம் என்று மீதி சம்பவங்கள்னைத்தையும் சொல்லி முடித்தாள். நல்ல வேளை! நீங்கள் அங்கு இருப்பது!. முடிந்தவரை எல்லா உதவிகளையும் செய்து விட்டு வாருங்கள் என்று சொல்லி முடித்தார்.
ராகவன் போனில் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்துவிட்ட ஜானகி ராகவனிடம் வந்து அந்தப் பையன் கார்த்திக் எப்படியிருக்கின்றான்?. ஆஸ்பத்திரியிலிருந்து ஆத்துக்கு கூட்டி வந்தாச்சா? என்று கேட்டாள். அவர் பதிலுக்குக் காத்திராமல் அடுக்களைக்குள் சென்று விட்டாள். போய்க் கொண்டே “க்ருஷ்ணா! அந்தப் பையனைக் காப்பாற்றி முன் போல் ஆரோக்கியமாக வை” என்று அவளின் இஷ்ட தெய்வம் கிருஷ்ணனைப் பிரார்த்தித்தாள். ஜானகி அடிக்கொருதரம் கிருஷ்ணனையே கூப்பிடுவதைப் பார்த்து ராகவனுக்குத் தோன்றும் தனக்கு ராமனின் பெயர் இடப்பட்டதால் தான் அவளுக்கு கிருஷ்ணன் இஷ்ட தெய்வம் ஆகி விட்டாரா அல்லது அந்தக் காலத்தில் கணவரின் பெயரை உச்சரிக்கக் கூடாது என்பதினால் கிருஷ்ணனை இஷ்ட தெய்வமாக்கிக் கொண்டாளாவென்று.
ராகவனும் மனது சரியில்லை என்று சொல்லாமல் தலை வலிக்கின்றது என்று சொல்லி இரண்டு நாட்களாக ஜானகியிடமிருந்தும் அஸ்வினிடமிருந்தும் தப்பித்துக் கொண்டிருந்தார்.அடுத்த நாள் மாலை மது மறுபடியும் போன் பண்ணினாள். ராகவன் டாக்டா¢டம் போய் வந்த சமாச்சாரம் பற்றிக் கேட்க மது சொன்னாள். தாங்க முடியாத அதிர்ச்சிகளால் கார்த்திக்கின் தந்தையின் மன நிலை பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கின்றது. மீண்டு வர கொஞ்ச காலம் ஆகும். நீங்களும் டாக்டர்கள் தான். மனோ வியாதியை மருந்து கொடுத்து உடனே குணப்படுத்த முடியாது. காலம்தான் குணப்படுத்தும். பொறுமைதான் வேண்டும் என்று சொல்லி விட்டு மருந்து மாத்திரைகள் கொடுத்தார். முக்கால்வாசி மருந்துகள் மயக்க நிலையில் தூங்க வைக்கத் தான். விஷயங்களைச் சொல்லி முடித்த மது ராகவனிடம் “நாங்கள் நாளை காலை கிளம்பி சென்னை வருகிறோம்” என்றாள். ராகவன் இரண்டொரு நாட்கள் இருந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்துவிட்டு வரப் போவதாக அல்லவா முதலில் சொன்னாய் என்று கேட்டார். அதற்கு மது “ஆமாம். முதலில் அப்படித்தான் சொன்னேன். இங்கு வர வர உங்கள் பிள்ளையும் ஒரு மாதிரி ஆகிக் கொண்டு வருவது போல் தோன்றுகின்றது. இந்த சூழ் நிலையில் அவரை மேலும் இங்கு தங்க வைக்க விரும்பவில்லை.அதனால்தான் நாளையே வருகிறோம்” என்றாள்.
ஜானகியிடம் சந்தோஷ¤ம் மதுவும் அடுத்த நாள் மதியம் வீடு திரும்புகின்றார்கள் என்றும் அவர்களுக்கும் சாப்பாடு தயார் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.மேலும் அங்கு சந்தோஷ¤க்கு நல்ல அலைச்சல் போலிருக்கின்றது. இங்கு வந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் வந்ததும் வரா ததுமாக அவனைப் போய் இம்சிக்காதே. மது எல்லாம் உனக்கு விபரமாகச் சொல்லுவாள் என்று கூறி விட்டு வேகமாக தன் அறைக்குள் ஒளிந்து கொண்டார்.
மறுநாள் மதியம் சந்தோஷ¤ம் மதுவும் காரில் வந்து இறங்கினார்க்ள்.சந்தோஷ் ரொம்பவும் சோர்ந்து போய் நடந்து வீட்டிற்குள் வந்தான். சந்தோஷின் தளர்ந்த நடையும் சோர்ந்த முகமும் அவன் ஏதோ மன உளைச்சலில் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கின்றான் என்பதனை பறை சாற்றிக் கொண்டிருந்தது.அது அவன் நண்பனின் பிரிவால் மட்டுமல்ல என்று ராகவனின் உள் மனம் சொன்னது. கண்ணை மூடி படுத்துக் கொண்டு தீவிரமாக ஆலோசிக்க ஆரம்பித்தார்.சந்தோஷ் தூங்கி எழுந்து வந்ததும் அவனிடம் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தவரை சந்தோஷ் அப்பா! என்றுகூப்பிடுவது கேட்டு திடுக்கிட்டு கண் விழித்தார். எதிரே சந்தோஷ் சோகமே உருவாக நிற்பதைப் பார்த்து அதிர்ந்து போய் பட படவென்று எழுந்து உட்கார்ந்து கொண்டு “என்னப்பா! என்ன விஷயம்! சொல்லு” என்றார் ராகவன். கேட்டதுதான் தாமதம். உடனே சந்தோஷ் ராகவனின் அருகில் அமர்ந்து “அப்பா! கடவுள் என்னை தண்டிக்கட்டும் ஆனால் என் மனைவியும் குழந்தையும் எந்தத் தவறும் செய்யவில்லை. அதனால் அவர்களை தண்டிக்க கடவுளுக்கு உரிமை கிடையாது” என்று புலம்ப ஆரம்பித்தான்.ராகவனுக்கு அவனின் மன உளச்சலும் அதற்கான காரணங்களும் புரிய ஆரம்பித்தன.அவர் சந்தோஷிடம் “நீ என்ன பாவம் பண்ணினாய்?” என்றார்.சந்தோஷ் உடனே “எனக்குத்தான் கடவுள் நம்பிக்கையில்லையே அதனால் அவரை நிந்தித்தேனே” என்றான். ராகவன் “தயவு செய்து நான் பேசுவதை அமைதியாகக் கேள்.அதன்பின் நீ பேச வேண்டியதை மீண்டும் பேசு. சரியா!” என்றார்.சந்தோஷ் அமைதியாக அமர்ந்திருந்தான்..அதே சமயம் சாப்பிட்டு முடித்து விட்டு அந்தப் பக்கம் வந்த மது அறைக்கு வெளியேயே நின்று அவர்களின் உரையாடல்களை கேட்க ஆரம்பித்தாள்
ராகவன் பேச ஆரம்பித்தார்: கடவுள் என்பவர் அனந்தன். அதாவது காலம், இடம், பொருள் என்ற எந்த வரையரைக்கும் உட்படாதவர். சுருங்கச் சொன்னால் இந்த ப்ரபஞ்சம் முழுவதும் வியாபித்திருப்பவர்.அரூபமானவர் அதே சமயம் ரூபமும் கொள்பவர். கிண்டர் கார்டனில் படிக்கும் சின்ன மழலைகளுக்கு சிங்கம், யானை, புலி, மான் போன்ற மிருகங்களாகட்டும் அல்லது மயில்,குயில் போன்ற பறவைகளாகட்டும் படங்களைக் காண்பித்துத் தான் அறியவும் புரியவும் வைப்பார்கள். அதே போல் ஆன்மிகத்தில் நாம் அனைவருமே மழலைகள்தான்.கடவுளை வரையரைக்குட்படுத்தி படங்களாக்கினால் தான் நம்மால் கொஞ்சமாவது தெரிந்து கொள்ள முடியும்.உலகத்தில் நல்லதும் தீயதும் கலந்தே இருக்கும்.அதே போல் தான் நல்லவர்களும் கெட்டவர்களும். தீயதையும், தீயவர்களையும் ஒழிக்கும் ஆற்றல் படைத்தவர் கடவுள் என்று காட்டுவதற்காகதான் படங்களுக்குள் கொண்டு வந்த கடவுள்களுக்கு நமது முன்னோர்களாகிய ரிஷிகள் கடவுளின் கைகளில் வேலாயுதமும், சூலாயுதமும், சக்கரமும் கொடுத்தார்கள். ஆனால் நம் பெற்றோர்கள், அவர்களுக்கு அவர்களின் பெற்றொர்கள் கடவுளை அறிமுகப் படுத்தும்போதே நல்வழியில் நடப்பதற்கும் தீயதை மனதினால் கூட எண்ணாமல் இருப்பதற்காகவும் தீயதை நினைத்தால் ‘சாமி கண்ணைக் குத்தும்’ என்று கடவுளை அறிமுகப் ப்டுத்தினார்கள். அதனால் ஆயுதங்கள் ஏந்தி நிற்கும் கடவுள் என்பவர் ஆயுதங்களை வைத்துக் கொண்டு நம்மை தண்டிக்க எப்பொழுதும் தயாராக இருக்கும் ஒரு ராணுவ அதிகாரி போன்ற உணர்வு நமது ஆழ் மனத்தில் பதிந்து கடவுள் மேல் பயத்தை உண்டுபண்ணியது அதனால் நாம் அனைவரும் கடவுளை உண்மையாக காதலிப்பதோ, நேசிப்பதோ, பக்தி செய்வதோ கிடையாது.செய்வதெல்லாம் வெளி வேஷம். நம் அனைவருக்கும் கடவுளிடம் பயம் மட்டும்தான்.
தமிழிலே இரண்டு வார்த்தைகள் உண்டு. பிணி, நோய் என்று. இரண்டும் வியாதியைக் குறிப்பதாகத் தோன்றினாலும் இரண்டுக்கும் பெரிய வேறுபாடு உண்டு. நோய் என்பது மருந்தால் குணப்படுத்தக் கூடியது.காய்ச்சலுக்கு மருந்து உட்கொண்டால் குணமாகிவிடும். திரும்பவும் வராது.ஆனால் பிணி என்பது திரும்பவும் வரக் கூடியது. பசியை ப் பிணி பசிப்பிணிக்கு மருந்து யாது? உணவு தான் மருந்து. சாபிட்டவுடன் பிணி நீங்கும். ஆனால் சில மணி நேரங்களிலேயே மறுபடியும் பசிப் பிணி வந்து தாக்கும். மீண்டும் உணவு என்ற மருந்தை உட்கொண்டால்தான் பிணி நீங்கும். இது வாழ் நாள் முழுவதும் பசிப்பிணிக்கு எதிராக நாம் நடத்தும் போராகும். இந்தப் போருக்குத் தேவையான முக்கியமான ஆயுதம் உணவு.இந்தஅருமையான மருந்தை நமக்கு தொடர்ந்து வழங்குவது பஞ்ச பூதங்கள் இந்தப் பஞ்ச பூதங்கள் தான் கடவுளின் அங்கங்கள். கடவுளின் அங்கங்களே இவ்வளவு கருணையுடன் நமக்கு அன்றாடம் உயிர் வாழத் தேவையான அருமருந்தை பரிவுடன் தருகின்றது என்றால் கடவுள் என்பவர் எத்தனை மடங்கு கருணையோடு இருப்பவர் என்று அறிய வேண்டும். அவருக்கு நன்றி பாரட்டும் விதமாகத் தான் நமக்கு கிடைக்கும் உணவாகிய பசிப்பிணியைப் போக்கும் மருந்தை அவர் கண்டருளக் காட்டி உண்ண வேண்டும்..சிலர் பண்டிகை நாட்களில் மட்டும் கடவுளுக்கு கைகாட்டுவார்கள். அதுவும் கடவுள் கைவைக்க மாட்டார் என்று திண்ணமாக த் தெரிந்ததால்தான்.பிள்ளையார் மட்டும் அவர் பிறந்த நாள் அன்று இவர்கள் காட்டுகின்ற கொழுக்கட்டையை ருசி பார்ப்போமென்று படத்திலிருந்தபடி தும்பிக்கையை நீட்டினால் தட்டில் ஒரு கொழுக்கட்டை மிஞ்சாது அதற்கு பிறகு நெய்வேத்தியம் செய்வதையே விட்டு விடுவார்கள். இந்த மாதிரி நாட்களில் குழந்தைகள் முதலில் தும்பிக்கையை நீட்டி விடக் கூடாதென்று ‘சாமி கண்ணைக் குத்தும்’ என்று பயமுறுத்துவார்கள். ரெண்டு கண்ணனை வைத்து பயமுறுத்தி மழலைகளுக்கு தாய்மார்கள் சோறு ஊட்டுவது போல நம்மை பயமுறுத்த பெரியவர்கள் கடவுளைத்துணைக்கழைத்து நமக்கு கடவுள் என்றாலே பய உணர்ச்சி எற்படும்படி செய்துவிட்டார்கள் யார் தன்னை எதிர்க்கிறார்கள் என்று பார்த்து அவர்களை தண்டிக்கவோ அல்லது பழிவாங்கவோ கடவுள் ஒன்னும் அரசியல்வாதியோ, மந்திரியோ அல்லது கார்ப்பரேட் முதலாளியோ இல்லை.
உன் நண்பன் கார்த்திக்குக் ஏற்பட்டது ஒரு எதிர்பாராத நிகழ்வு.அதற்கு தேவையில்லாத காரணங்களை கற்பனை பண்ணுவது மன பலம் இல்லாததைத்தான் காட்டுகிறது. சந்தோஷ்! நீயும் சரி கார்த்திக்கின் அப்பாவும் சரி ரொம்பப் படித்தவர்கள் ஆனால் வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையான மனோ பலத்தை உங்கள் கல்வி போதிய அளவு கொடுக்கவில்லை என்பது நிதர்சனமாகிறது.அது மெஞ்ஞானத்தில்தான் கிடைக்கும் நிம்மதியும் நிறைவான சந்தோஷமும் ஆன்மிகத்தில் தான் கிடைக்கும் என்பதை இப்பொழுதாவது புரிந்து கொள். அந்த டீவி நிகழ்ச்சியில் பேசும் பொழுது கார்த்திக் சொன்னான் குளோனினிங் முறையில் ஒரே மாதிரி ஆரோக்கியமான ஒரு லட்சம் மனிதர்களை ஒரு டாக்டர் விஞ்ஞானியால் உருவாக்க முடியுமென்று.எல்லோரும் ஒரே மாதிரியிருந்தால் வாழ்க்கையே சீக்கிரம் சலித்துவிடும். வித விதமான மனிதர்கள். வித விதமான விலங்குகள், பறவைகள், கடல் வாழ் உயிரினங்கள், செடி கொடிகள், மரங்கள். அதனால் தான் வாழ்க்கை எப்பொழுதும் சுவையாக இருக்கின்றது. கடவுள் நிச்சயமாக கலையம்சம் நிரம்பப் பெற்ற ஈடு இணையற்ற சிறந்த விஞ்ஞானி. இந்த பூமியில் நாமெல்லாம் விருப்பத்துடன் வாழ ஆசைப் படுவதற்குக காரணமே அவனது பிரம்மாண்டமான் படைப்புகள் தான்.நாம் வாழ்ந்து அனுபவிக்க உதவும் அவன் எத்தனை கருணையுள்ள்வனாக இருக்க முடியும். அவன் பயப்படபடவேண்டியவன் இல்லை. நேசிக்கப் படவேண்டியவன்
சந்தோஷ்!இந்த சோக நிகழ்வுக்கு முன்பிருந்த உன் மன நிலையையும் வீணான கற்பனையால் உண்டான எண்ணங்களால் ஏற்பட்ட பய உணர்ச்சிகள் மனத்தில் புகுந்து மன அழுத்தத்தையும் பாரத்தையும் கூட்டியதின் விளைவாக தற்பொழுது இருக்கும் மன நிலையையும் ஒப்பிட்டுப் பார்.நன்றாகப் புரியும். மனதால் நல்ல நண்பனாகவும் இருக்க முடியும் மோசமான எதிரியாகவும் மாற முடியும். மனது உன் வசத்திலிருந்தால் அது நல்ல நண்பனாக இருக்கும் நீ அதன் வசத்திலிருந்தால் மோசமான எதிரியாகிவிடும்.விஞ்ஞான்ம் மனித வாழ்வுக்கு வசதிகளைப் பெருக்கித் தரும்.வசதிகள் மட்டும் வாழ்க்கையில் நிம்மதியையும் சந்தோஷத்தையும் தந்து விடாது.நிரந்தரமான மன நிம்மதிதான் உண்மையான சந்தோஷத்தைத்தர முடியும் மெஞ்ஞானம் மட்டும் தான் மன ஆரோக்கியத்தை வளர்த்துக் கொள்ள உதவ முடியும் கடந்த மூன்று நான்கு நாட்களில் ஏற்பட்ட அனுபவங்களே இதை உனக்கு ப் புரிய வைத்திருக்குமென்று நினைக்கின்றேன்.
சந்தோஷ்! உனக்கு ஒரு மூன்று சக்கர வண்டி நான் வாங்கித் தருகின்றேன். மூன்று சக்கர வண்டி என்று நான் சொல்வது. பகவத் கீதையைத் தான். அதிலுள்ள கர்ம யோகம், பக்தி யோகம், ஞான யோகம் ஆகிய மூன்றும் , மூன்று சக்கரங்கள். நான் தற்பொழுது இந்த மூன்று சக்கர வண்டியை வைத்து தான் நடை பயின்று கொண்டிருக்கின்றேன் நாம் இருவருமாக நடைபயின்று அறியாமையாகிய காரிருளிலிருந்து வெளி வர முயற்சிப்போம். தேவாரம், திருவாசகம், திருக்குறள், நாலாயிர த்வ்ய ப்ரபந்தங்கள் போன்ற விளக்குகள் நடக்கும் வழியில் நல்ல வெளிச்சம் தந்து நமக்குதவும். ஆனால் நடக்க வேண்டிய் தூரம் ரொம்ப அதிகம்.உங்கள் விஞ்ஞானத்தில் சொல்வீர்களே “ஒளி யாண்டு” என்று அப்படித்தான். இந்த ஜன்மத்தில் எத்தனை தூரம் நடந்து கடக்க முடியுமோ கடப்போம் இன்னும் எத்தனையோ ஜன்மம் எடுக்க வேண்டியிருக்கின்ற்தே. கடவுளை ப் பற்றிய புரிதலும்ஒரு சிறிதளவாவது கிடைக்கலாம். அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த சந்தோஷின் மனதில் முழுவதுமாக வியாபித்திருந்த பய உணர்ச்சிகளால் ஏற்பட்டிருந்த மனப் பாரம் நன்றாகவே குறைந்து நிம்மதி குடிபுக ஆரம்பித்தது. கடந்த மூன்று நான்கு நாட்களாக மன உளைச்சலில் தூக்கமின்றி தவித்திருந்த சந்தோஷ் ராகவனின் மடியில் தலை சாய்த்து நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்தான். உள்ளே வந்த மதுவின் கண்களில் சந்தோஷமும் நன்றியுணர்ச்சியும் பொங்கி வழிவதை ராகவனால் காண முடிந்தது. மது மெதுவாக சந்தோஷின் தலையை ராகவனின் மடியிலிருந்து எடுத்து அருகிலிருந்த தலையணையில் சாய்த்தாள்.இருவரும் மெதுவாக வெளியே வ ந்தார்கள். ராகவன் மதுவிடம் குழந்தைகளுக்காக கொஞ்ச காலம் இங்கேயே தங்குவது என்று முடிவெடுத்திருக்கின்றேன் என்றார். அதைக் கேட்ட மது துள்ளிக் குதித்துக் கொண்டு அம்மாவிடம் இந்த மகிழ்ச்சியான விஷ்யத்தைச் சொல்ல ஓடினாள். சந்தோஷ் தூங்கி எழுந்ததும் கட்டாயமாக ” உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” என்ற திருக் குறளுக்கான சரியான விளக்கத்தைக் கூற வேண்டும் அது உடல் அழியக்கூடியது என்ற உண்மையை சந்தோஷ்க்கு விளக்கி தேகாபிமானத்தைக் குறைக்க உதவும் என்று எண்ணினார்.
சாயந்திரம் பள்ளியிலிருந்து திரும்பிய அஸ்வினிடம், மது, தாத்தா இனிமேல் உன்னுடன் தான் நிரந்தரமாக இங்கே தங்கப் போகின்றார் என்று சொன்னவுடன் அஸ்வின் பாய்ந்து சென்று ராகவனைக் கட்டிக் கொண்டு கூத்தாடினான். ராகவனுக்கும் பரம சந்தோஷம். இதை அனுப விக்கத்தான் முடியுமே தவிர எழுத்தாலோ பேச்சாலோ விளக்க முடியாது.
இதே போல் தான் இறையுணர்வும் அனுபவிக்கத்தான் முடியுமே தவிர விளக்க முடியாது.