யாரிடமும் சொல்லாதே – நான் ஒரு பெண்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 2, 2024
பார்வையிட்டோர்: 12,329 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பட்டணத்து நாகரிகம் எவ்வளவு பரபரப்பாக வேண்டுமானாலும் ஆகட்டும்; ஜனநாயக வாதிகள் எவ்வளவுதான் கரடியாகக் கத்தட்டும்; இங்கே வாழுகிறவர்கள்தான் வாழுகிறார்கள், மற்றவர்கள் வறண்டு தான் கிடக்கிறார்கள். சுதந்திரம் வந்து முப்பத்திரண்டு ஆண்டுகளாகியும்கூடப் பொருளாதார ஏற்றத்தாழ்வு அப்படியேதான் இருக்கிறது. பேச்சுரிமை எழுத்துரிமை என்ற பேரில் வறட்டுத் தனமான பொழுதுபோக்கு மட்டும் தாராளமாக வழங்கப்பட்டிருக்கிறது. 

இந்தியப் பொருளாதாரத்தின் சிருஷ்டிதான் டாக்ஸி டிரைவர் ராதா. தான் எங்கு பிறந்தவன் எப்படி வளர்ந்தவன் என்ற விவரங்களை அவன் யாருக்கும் சொன்னதில்லை. தான் ஒரு அனாதை என்று மட்டும் கூறிக்கொள்வான். 

சென்னையில் பிரபலமான ஒரு ஹோட்டலுக்கு எதிரில் இருக்கும் பத்துப் பதினைந்து டாக்ஸிகளில் அவனுடையதும் ஒன்று. மற்ற டாக்ஸி டிரைவர்கள் அரட்டை அடிக்கும்போது தன்னுடைய டாக்ஸியில் சாய்ந்தவாறு ராதா அதில் கலந்துகொள்வானே தவிர, மற்றவர்களைப்போல் தோளில் கை போட்டுக்கொண்டு குதிக்கமாட்டான். மற்றவர்களெல்லாம் ஒரே காக்கிச் சட்டையையும், பேண்டையும் இரண்டு மூன்று நாட்கள் போட்டிருந்தால்கூட, ராதா தினசரி சலவைச் சட்டையாகத்தான் போடுவான். அவன் ஓட்டியதும் அவனது சொந்த டாக்ஸி தான். 

கையில் இருந்த பணத்தை யெல்லாம் போட்டுத் தன் தந்தை அதை வாங்கிக் கொடுத்ததாகவும், நாளொன்றுக்கு ஐம்பது ரூபாயாவது கொண்டு போய்ப் பெற்றோரிடம் கொடுத்துவிட வேண்டும் என்றும் ராதா சொல்வான். தன் வீட்டுக்கு யாரையும் விருந்துக்கு அழைக்கமாட்டான், தன் வீடு எங்கிருக்கிறது என்பதைக்கூடச் சொல்ல மாட்டான். வயது இருபத்தைந்துக்கு மேல் இருக்காது. சிவப்பாக அழகாக இருப்பான். தலைமுடி கருகருவெள் என்றிருக்கும். 

“உனக்கிருக்கும் அழகுக்கு இந்தப் பணத்தை டெபாசிட் கட்டி ஏதாவது ஒரு பாங்கில் நீ வேலைக்குச் சேர்ந்திருக்கலாமே? ஏன் இந்த வேலைக்கு வந்து சேர்ந்தாய்?” என்று சில பேர் அவனைக் கேட்பார்கள். 

“எந்த மனிதனும் உத்தியோகத்தையே நம்பி வாழக்கூடாது. சொந்தமாகத் தொழில் கற்றுக்கொள்ள வேண்டும். தொழில் செய்கிற தற்குறி லட்சாதிபதியாகிறான்; உத்தியோக பார்க்கும் பட்டதாரி ஆயிரம் ரூபாவை ஆயிரத்தி இருநூறாக்கவே மன்றாடுகிறான். தெருவிலே ஐஸ் விற்பவனுக்கும், பாங்க் குமாஸ்தாவுக்கும் வருமானத்தில் என்ன வித்தியாசம்?” என்று கேட்பான் ராதா. 

இப்படி ஒரு விசித்திரமான இளைஞன் தங்களோடு இருப்பது பற்றி மற்ற டாக்ஸி டிரைவர்கள் அடிக்கடி பேசிக்கொள்வார்கள். 

ராதாவின் டாக்ஸியில் பெண்கள் தனியாக ஏறினாலும், அவன் அவர்களை நிமிர்ந்துகூடப் பார்ப்பதில்லை. அதனால் யோக்கியன் என்றுப் சில பேர் அழைத்தார்கள். திமிர் பிடித்தவன் என்றும் சிலர் பட்டம் சூட்டினார்கள். 

ராதா டாக்ஸி ஓட்டும்வரை தான் ‘ராதா’ என்ற இளைஞனாக இருப்பான். இரவு வீட்டுக்கு வந்துவிட்டாலோ, அவன் இளைஞனல்ல; ‘ராதா’ என்ற குமரிப் பெண்ணாக மாறிவிடுவான். 

ஆம். ராதா ஒரு கன்னிப் பெண். மனித குலத்தின் பண்பாட்டுக்குப் பயந்துகொண்டு அவள் ஆண் வேடம் தரித்திருந்தாள். 

அவள் தனது ஆணுடையைக் கழற்றும்போதும், சேலை கட்டும் போதும் அவளுடைய அன்னை கண்ணீர் வடிப்பாள். 

பெண், பெண்ணாகவே வாழ்வதற்கு இந்தப் பூமியில் இடமில்லையே? மேலை நாடுகளில் எல்லாத் தொழில்களிலும் பெண்கள் இருக்கிறார்கள். எங்கோ விரும்பினால் காதல் நிகழ்கிறதே தவிர, எக்கச்சக்கமாக இவள் மாட்டிக் கொள்ளமாட்டாளா என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை; இந்தியாவில் அது மிக அதிகம். 

ஒரு பெண் டாக்ஸி ஓட்ட வேண்டும் என்றால், அவளுக்கு ஆண்மை இருக்கவேண்டும்; இல்லை என்றால் ஆண் வேடம் தரிக்க வேண்டும். டாக்ஸிகளில் பெண்களை ஏற்றிக்கொண்டு வருகிறவர்கள் டிரைவரே பெண்ணாக இருந்தால் விடுவார்களா? 

கெட்டிக்காரத்தனமாகத்தான் முடியை வெட்டிக்கொண்டு ஆண் வேடம் தரித்துக் கொண்டாள் ராதா. அவள் இருந்த வீட்டுக்கு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள்கூட ராதாவின் வீட்டில் ஒரு பெண்ணும், அவளுடைய சகோதரனும் இருப்பதாகக் கருதினார்களே தவிர, ராதாவே இரட்டை வேடம் போடுவதாக நினைக்கவில்லை. 

ராதா டாக்ஸி ஒட்டிக் கொண்டு செல்லும்போதெல்வாம் பாலாஜிநகரில் இருந்து ஒரு பெண் நடந்து வருவாள். அடிக்கடி ராதாவைப் பார்ப்பதும், சிரிப்பதும் அவள் பழக்கமாக இருந்தன. சமயங்களில் காரணம் இல்லாமலேயே அந்தப் பெண் டாக்ஸியில் ஏறிக்கொண்டு ராயப்பேட்டைக்கும், மயிலாப்பூருக்கும் போய்த் திரும்புவாள். அதற்குக் காரணம், ராதாவோடு பழகிக்கொள்ள வேண்டும் என்பதே. 

தான் ஒரு ஆடவன் என்று நினைத்து அந்தப் பெண் காதலிக்கிறாள் என்பது ராதாவுக்கு நன்றாகப் புரிந்தது. ஆனால் அதை எப்படிச் சொல்வது? தான் ஒரு பெண் என்பதை எப்படி வெளியிடுவது? அவள் கண்ணுக்குப் படாமலே இருந்துவிடத்தான் ராதா விரும்பினாள். ஆனால் வாடிக்கைக்காரர்கள், ‘பாலாஜிநகருக்குப் போ’ என்றால் அவள் என்ன செய்வாள்? 

ஒருநாள், சுமித்ரா என்ற அந்தப் பெண் மயிலாப்பூரில் சினிமா பார்த்துவிட்டு வரும்போது திடீரென்று ராதாவின் டாக்ஸி எதிரே வந்தது. டாக்ஸியை நிறுத்தினாள். 

ஏறி உட்கார்ந்தவள் சும்மா இருந்தாளா? “நல்ல வேளை. நான் உங்களோடு வெகுநேரம் பேச வேண்டும் என்று நினைத்தேன். நான் இங்கே ஒய்.ஜி.ஏ.யில் ஒரு தனி அறையில் தான் இருக்கிறேன். அங்கே வாருங்கள் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் போகலாம்!” என்று அழைத்தாள், அந்தப் பெண். 

சே! என்ன இப்படிக் கூச்சமில்லாமல் அழைக்கிறாளே என்று ராதாவுக்கே வெட்கமாகத்தான் இருந்தது. 

“இல்லை. நாளை வருகிறேன்.” என்று மறுத்துப் பார்த்தான்: சுமித்ரா விடுவதாக இல்லை. 

“நான் ஒன்றும் மோசமான பெண்ணல்ல, கௌரவமான உத்தியோகம் பார்ப்பவள்தான். உங்களைக் கெட்ட நோக்கத்தோடு அழைக்கவில்லை. தனியாகவே கிடக்கும் ஒரு பெண்ணுக்கு, பேச்சுத் துணைக்கு ஒரு ஆண் வேண்டும். அதுவும் உங்களைப் போலவே நல்லவர்களாக இருந்தால் நிம்மதி. அதுக்காகவே அழைத்தேன்!” என்றாள் சுமித்ரா.

“நான் வருகிறேள். ஆனால் பத்தரை மணிக்குள் வீட்டுக்குப் போக விட வேண்டும்.” என்றாள் ராதா. 

“அதற்குமேல் பேசுவதற்கு என்ன இருக்கிறது? தாராளமா போய்விடலாம்!” என்றாள் சுமித்ரா.

சுமித்ரா தங்கியிருந்த வேலை செய்யும் பெண்களுக்கான ஹாஸ்டல். அங்கே ஒரு தனியறையில் சுமித்ரா இருந்தாள். அந்த அறை வசதியானதுதான். ஒற்றைக் கட்டில், காத்ரேஜ் பீரோ, ஏராளமான புத்தகங்கள் ஆகியவை இருந்தன. 

“இங்கே பத்தரை மணிக்கு மேல் சொந்தக்காரர்கள் கூடத் தங்க முடியாது” என்று சொன்னபடி, கதவைத் திறந்து ராதாவை உள்ளே அழைத்துச் சென்றாள் சுமித்ரா. 

உள்ளே சென்றதும், “ஐயோ இந்த அறை ஒரே புழுக்கம். சட்டையைக் கழற்றுங்கள்” என்றாள் அவள்.

‘ராதா’ பயந்து விட்டாள். “நான் சித்திரை மாத வெயிலில் கூட இந்தச் சட்டையோடுதான் அலைவேன். சட்டையைக் கழற்ற வேண்டாம்!” என்று கையை வைத்து மூடிக் கொண்டாள் ராதா. 

“நன்றாய் இருக்கிறது. சட்டையைக் கழற்றி விட்டுக் கொஞ்சம் மின்சார விசிறிக்குக் கீழே உட்காருங்கள். காற்றுப் பட்டால் கொஞ்சம் களைப்பு நீங்கும்,” என்று சொன்ன சுமித்ரா தானே சட்டையைக் கழற்றப் போனாள்.

“இல்லை. முடியாது” என்று அறவே மறுத்து விட்டாள் ராதா. 

“ரவிக்கையைக் கழற்றச் சொன்னால் பெண்கள் பயப்படலாம். சட்டையைக் கழற்றுவதற்கு ஆண்கள் பயப்படலாமா? இது என்ன பைத்தியகாரத்தனம்!” என்று கேட்டாள் சுமித்ரா.

“ஆடவர்களும் தங்கள் உடம்பைப் பெண்களுக்கு மறைக்க வேண்டியது அவசியம்தான். கணவனும் மனைவி மட்டும் தனி அறையில் தங்கள் மேலாடையைக் கழற்றிக் கொள்ளலாம். மற்ற இடங்களில் மட்டு மரியாதை இல்லையா?” என்று கேட்டாள் ராதா. 

“சரி, பரவாயில்லை. நீங்கள் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை?” என்று கேட்டாள் மித்ரா. 

“நல்ல பெண்ணாக என் பெற்றோர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். கிடைத்தால் நடத்திவிட வேண்டியது தான்!” என்று சிரித்தான் ராதா.

“இதோ பாருங்கள்! ஆண்களுக்குப் பெண்களின் குரல் இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கிறது தெரியுமா? நீங்கள் சிரிக்கும்போது ஆண்மையின் பெண்மை தோன்றுகிறது!” என்றாள் சுமித்ரா. 

“சில பெண்கள் அப்படிப் பட்ட ஆடவரைத்தானே விரும்புகிறார்கள்?” என்றாள் ராதா. 

“எனக்கு அதுதான் ரொம்பப் பிடிக்கும்!” என்றாள் சுமித்ரா. 

“நீங்கள் ரொம்ப தெருங்கி வருகிறீர்கள்..!”

“கள்ளம் கபடம் இல்லாதவர்கள் உடனே நெருங்கி விடுவார்கள்!” 

“சரி நான் புறப்படுகிறேன்!” 

“நாளைக்கும் நான் உங்களைச் சந்திக்க வேண்டும்..” 

“நாம்தான் தினமும் சந்திக்கிறோமே!” என்று கூறிவிட்டு நடந்தாள் ராதா. 

வீட்டுக்கு வந்த ராதா நடந்த வித்தையெல்லாம் தன் தாயிடம் விவரித்தாள். 

“இப்படி எத்தனை கூத்து இனிமேல் நடக்குமோ….” என்று பயந்தாள் தாய். 

“பேசாமல் வேலைக்கு ஒரு ஆள் வைத்து விட்டால், அவனே கார் ஓட்டிக் கொள்வான், சம்பளம்தானே போகப் போகிறது. ராதாவுக்குக் கல்யாணத்தை முடித்து விடலாம்,” என்றார் நோயுற்ற தந்தை. 

“நீங்கள் பார்த்து எதைச் செய்தாலும் எனக்குச் சம்மதம்,” என்று சொல்லிவிட்டு நிம்மதியாகத் தூங்கினாள் ராதா. 


அன்று நல்ல மழை. ஹோட்டல் அருகில் டாக்ஸி நின்றபோது, குடையைப் பிடித்துக் கொண்டு அங்கே வந்து விட்டாள், சுமித்ரா. 

“டிரைவர் காரை எடு!” என்று அறிமுகம் இல்லாதவள் போல் பேசிக் கொண்டு காருக்குள் ஏறி உட்கார்ந்தாள். 

அப்போது ராதாவின் சட்டை நனைந்திருந்தது. காரின் பின்னாலிருந்த படியே சட்டையில் கை வைத்து ஈரமா என்று பார்த்தாள். 

அங்கே ஈரமும் தெரிந்தது. ராதா ஒரு பெண் என்ற ரகசியமும் தெரிந்தது. 

வீட்டுக்கு வந்ததும் மட மடவென்று அவளைக் கேளாமலேயே சட்டையைக் சுழற்றினால் சுமித்ரா? 

உடனே ராதா அவள் கையைப் பிடித்துக் கொண்டு, “இதை யாரிடமும் சொல்லாதே. நான் ஓரு பெண்தான்!” என்றாள். 

“தெரியுமே எனக்கு” என்றபடி அவளைக் கட்டிப் பிடித்துக் கன்னம், உதடு, மார்பு அனைத்திலுமே முத்தம் கொடுத்தாள் சுமித்ரா. 

ராதாவைச் கட்டிலில் சாய்த்துக் காதல் லீலைகள் நடத்த ஆரம்பித்தாள். 

“சீச்சீ! என்ன இது! என்னை விடு! நான் வெளியே போகிறேன்” என்று அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் ராதா. 

சுமித்ராவின் கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் வடிந்தது. ராதா திரும்பிப் படுத்தாள். கொஞ்ச நேரத்தில் அவளை மீண்டும் திரும்பச் சொன்னாள் சுமித்ரா. திரும்பிப் பார்த்த ராதா திடுக்கிட்டாள். 

சுமித்ரா ஓர் ஆண் மகனாக நின்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *