கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: July 8, 2023
பார்வையிட்டோர்: 4,002 
 
 

“மலரு அவன் வந்துட்டான் பாரு”

முன்வாசலில் இருந்த ஆயாவின் குரல் கேட்கும் போதே தெரியும், வருவது பச்சை சட்டைக்காரர் என. தாத்தா வீட்டில் இருந்தால் வாழையிலை அறுத்து கொடுத்திருப்பார். ஐந்தாவது படிக்கும் என்னை காம்பவுண்ட் சுவர் ஏறி, வாழையிலை அறுக்க ஆயா விடுவதில்லை.

“கைய கால ஒடைச்சுக்கிட்டா, எவன் கட்டுவான்”ஆயா சொல்லும்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன், “அப்போ, கை காலை உடைச்சுக்கிட்டா கல்யாணம் ஆகாது”என. பெரியவளாகி கல்யாணப் பேச்சு எடுக்கும்போது, எதையாவது உடைத்துக் கொள்ளும் திட்டமும் வைத்திருந்தேன். வீட்டின்முன் இருந்த பாதானி மரத்து இலைகள் ஐந்தாறு பறித்தேன். நடுவில் ஒரு இலை, சுற்றிலும் நான்கைந்து இலை என வைத்து, சிறு தென்னங்குச்சிகள் கொண்டு அழகாக தைத்து முடித்தேன். வாழையிலை போல நீள வடிவம், வட்ட வடிவம் என மனம் போன போக்கில் தைப்பேன். நான் தைத்து முடிக்கவும், பச்சை சட்டைக்காரர் வாசலில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

எங்களின் வீட்டிற்கு நேர் எதிரே இருக்கும் ரோட்டின் வழியாகத்தான் எவரும் ஊருக்குள் வர வேண்டும். பெரிய ஊர் எல்லாம் கிடையாது. திருச்செங்கோட்டை ஒட்டி, கூட்டப்பள்ளி எனும் சிறு ஊர். திருச்செங்கோட்டின் வெக்கையை சமாளிக்க, வீட்டு வாசலில் தூங்குமூஞ்சி,பாதாம் என மரங்கள் வைத்திருந்தார் தாத்தா. வீட்டின் பக்கவாட்டில் நெல்லி, வாழை, பப்பாளி மரங்கள். பின்புறத்தில் மூன்று வகை முருங்கை மரங்கள், கனகாம்பரம் செடிகள் இருக்கும். இதுபோக பீர்க்கன் கொடி, சுரக்காய், அவரை என ஏதாவது சீசனுக்கு ஏற்ப பயிரிட்டு இருப்பார் தாத்தா. வீட்டின் நேரெதிரே ரோடு என்பதால் ஊருக்கு வரும் பெரும்பான்மையோரிடம் விசாரித்தோ அல்லது நலம் விசாரித்தோ அனுப்புவார் ஆயா. முன்வாசலில் சேர் போட்டு உட்கார்ந்தால், இதுதான் ஆயாவுக்கு பொழுதுபோக்கு. அப்படித்தான் அன்றும் பச்சை சட்டை காரரை கவனித்திருந்தார்.

பச்சை சட்டைக்காரர்… அவர் போட்டிருக்கும் சட்டையின் நிறம் மறைந்து, அழுக்கடைந்து ஏதோ ஒருவகையில் அடர்பச்சை போல காட்சியளிக்கும். அதனால், நான் வைத்த காரணப் பெயர்தான் பச்சை சட்டைக்காரர் . எப்போதாவது எங்கள் வீட்டுக்கு வருவார்

அதும் பசித்தால் மட்டுமே வீட்டுக்குள் நுழைவார். இல்லையென்றால், இந்த வீடு அவரின் கண்ணுக்குத் தெரியாதது போல் விடுவிடுவென கடந்துச் சென்றுவிடுவார். ஊரில் பெரும்பாலும் கிறுக்கன் என்று கூப்பிடுவார்கள், என்னுடன் படிக்கும் சக தோழியர் உட்பட. ஆயா,தாத்தா இருவருமே அப்படி கூப்பிடக் கூடாது என்று சொல்லிக் கொடுத்திருந்தனர். எப்போதாவது வீட்டிற்கும் வந்து செல்வதால், எனக்கும் அப்படி தோன்றியதே இல்லை. பச்சை சட்டைக்காரர் வாசலில் நுழைந்து, நேரே தோட்டத்து குழாயில் கை,கால் கழுவி வந்தார். இல்லையென்றால் ஆயா திட்டத் தொடங்கி விடுவார் என்று அவருக்குத் தெரியும். அதற்குள்ளாக சாப்பாடு, குழம்பு, பொரியல், தண்ணீர் என அனைத்தையும் முன்வாசலில் கொண்டுவந்து வைத்திருந்தார் ஆயா. நான்தான் பரிமாறுவேன். ஆரம்பத்தில் சரியாக பரிமாறத் தெரியாது. கீழே,மேலே சிந்தி எப்படியோ ஒரு வழியாக கற்றுக்கொண்டேன். தாத்தா சொல்லுவார் “உன்னோட ஆயாவுக்கு உன்ன பரிமாற வைக்கிறதுல ரெண்டு நல்லது. ஒன்னு, உனக்கு பரிமாற கத்துக்கொடுக்கிறது. ரெண்டாவது, சாப்பாடு போட்டா கிடைக்கிற புண்ணியத்தை உனக்கே கொடுக்கிறதா அவ நினைக்கிறா “

“சாப்பாடு கொடுத்த புண்ணியம் கிடைக்குமா தாத்தா “

“சாப்பாடு கொடுத்தா, புண்ணியம் கிடைக்குமானு தெரியாது. ஆனா, புண்ணியத்துக்காக சாப்பாடு போடக்கூடாது. பசிக்காக போடனும். “

தாத்தா சொல்லுகிற நிறைய விஷயங்கள் அப்போ புரிந்ததே இல்லை. ஆனால் மெல்ல,மெல்ல புரிய தொடங்கியது. இப்போதுவரை திருமணநாள், பிறந்தநாள் என எதற்கும் சாப்பாடு கொடுத்ததே இல்லை. இதற்கென ஒதுக்கி வைத்திருக்கும் தொகையை தோன்றும் நேரத்தில் சாப்பாடு, துணிமணி, மருந்து செலவு ஏதாவது எதற்காவது கொடுத்து விடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளேன். அதென்னவோ “இன்னைக்கு எனக்கு நல்ல நாள், நான் சாப்பாடு கொடுக்கிறேன் நீ வாழ்த்து “என கேட்க மனம் துணிந்ததில்லை.

பச்சை சட்டைக்காரர் அவசர அவசரமாக சாப்பிட்டு முடித்து கை கழுவி வெளியே வெளியேறினார். அவர் அப்படித்தான், அவர் பேசி பார்த்ததே இல்லை. எப்போதும் தரையை நோக்கி இருக்கும் கண்கள், எப்போதாவது மனிதர்களின் நேர்கொண்டு பார்க்கும். அடுத்த வினாடியே அவசர அவசரமாய் தலையைத் திருப்பிக் கொள்வார். ஆயாவிற்கு இரண்டு ஜீவன்களுக்கு சாப்பாடு போடுவதில் திருப்தி. ஒன்று இவர், இன்னொன்று ஒற்றைக்கால் காக்கா. அந்த ஒற்றைக் கால் காக்காவிற்கு கணக்கெல்லாம் இல்லை. சில

நாட்கள் தினம் வரும், சில சமயங்களில், வாரம் ஒருமுறை, சிலமுறை என முறை வைத்துக் கொள்ளும். ஆனால் அதற்கு நான் பரிமாற தேவையில்லை. ஆயா வைத்தால் மட்டுமே சாப்பிடும். ஆயா வெளியே வரும்வரை, காம்பவுண்ட் சுவரில் அமர்ந்து கத்திக்கொண்டே இருக்கும்.

“என்னமோ, இந்த காக்காவை பார்த்தா, சின்ன வயசுல ஓடி போன என் தம்பி நெனைப்புக்கு வரான். நொண்டி, நொண்டின்னு எல்லோரும் கிண்டல் செய்யறாங்கன்னு ஓடிப்போனான். எவ்வளவு தேடியும் கிடைக்கவே இல்லை. இந்த காக்கவும் பார்த்தியா, நான் வைச்சா மட்டும்தான் சாப்பிடுது.”காக்காவை கண்டாலும் இதே கதைதான், காணாவிட்டாலும் இதே கதைதான் ஆயாவுக்கு.

“அடடா, அவனுக்கு சட்டை,பேன்ட் வெச்சிருந்தேன், கொடுக்க மறந்துட்டேன். சரி, அடுத்தமுறை வந்தா கொடுக்கலாம். சாப்பிட்டதும் நிக்கறானா, ஒன்னா? கலெக்டர் வேலையாட்டம் விடுவிடுன்னு நடைவேற.”ஆயா தன் பாட்டுக்கு புலம்பிக் கொண்டிருந்தார்.

கிராமத்து ஆட்கள் டவுனுக்கு வரும்போது, எப்படியும் வீட்டுக்கு ஒரு எட்டாவது வந்துவிட்டுப் போவார்கள். எனவே வீட்டில் எப்படியும் ஒரு ஆள் சாப்பாடாவது சேர்ந்து இருக்கும். மீதி ஆனாலும் பழையதுக்கு ஆச்சு. சாப்பாடு இல்லாத நாட்களில் பச்சை சட்டைக்காரர் வந்துவிட்டால், அவருக்குத்தான் திட்டு விழும்.

“திடீர்னு வந்து நின்னா, என்ன பண்ணுவேன்? இந்தா இந்த காசை கொடுத்து, ஓட்டல்ல வாங்கி சாப்பிடு “என்பார் திட்டிக்கொண்டே. ஊரில் இருக்கும் இரண்டே இரண்டு ஓட்டல்களிலும் சொல்லி வைத்திருந்தார், எப்போது வந்தாலும் சாப்பாடு கொடுக்கச் சொல்லி.

எங்கள் தெருவின் பின் வீதியில், பாதி இடிந்த வீடு ஒன்று இருக்கும். இடிந்து, கருகி என ஒரு அமானுஷ்ய வீட்டிற்கான அத்தனை லட்சணங்களையும் கொண்டிருக்கும். எங்களுக்கு அந்த வீட்டருகே மட்டும் விளையாட தடை விதித்திருந்தார்கள். ஆனாலும் ஆட்கள் யாரும் கவனிக்காத போது, போய் எட்டிப் பார்ப்போம். அந்த வீட்டில் வாழ்ந்தவர்களைப் பற்றி நிறைய கட்டுக்கதைகளை சொல்லிக் கொண்டோம். அந்த வீட்டின் முன் நல்ல தண்ணீர் தொட்டி ஒன்று உண்டு. வாரம் ஒருமுறை மட்டுமே வரும் நல்ல தண்ணீர், எங்கள் ஊருக்கு மிக முக்கியமானது. தண்ணீர் வரும் அந்த நாள், சிறு திருவிழாவை நடத்தி விடுவார்கள் மக்கள். காலையிலிருந்து, வீட்டில் இருக்கும் பழைய தண்ணீரில் துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது, வீடு கழுவுவது என அனைவரும் பம்பரமாய் சுழன்று கொண்டிருப்பார்கள். அப்போது வீடு துடைக்கும் வழக்கமெல்லாம் இல்லை. வீட்டில் ஊற்றி கழுவும் நீர் வெளியேறும் வகையில் சிறு துளை இருக்கும். அதை சிறு குச்சியில் துணியைச் சுற்றி அடைத்து வைத்திருப்பார்கள். கீழே இருக்கும் பாத்திர பண்டங்களை கட்டில் மேலே ஏற்றி வைத்துவிட்டு, வீட்டை கழுவி காய வைத்து, புது தண்ணீரை குடங்களில் பிடித்து வைத்து என வேலைகள் மடமடவென ஆகும். சீக்கிரம் வேலையை முடித்தவர்கள் அடுத்த வீட்டுக்கு உதவுவதும் நடக்கும். பெரும்பான்மையான வீடுகளுக்கு இடையே காம்பௌண்ட் சுவர் அல்லாது சிறு உயிர்வேலி மட்டுமே இருந்த காலம் அது.

ஏதோ ஒரு விடுமுறை நாளன்று நல்ல தண்ணீர் வந்தது. நாங்கள் வழக்கமாக விளையாட போன போது, அந்த இடிந்த வீட்டின் தொட்டியில், தண்ணீர் வந்து விழுந்து கொண்டிருந்தது. நானும் ரம்யாவும்தான் அதை கவனித்தோம். யாரும் பயன்படுத்தாத அந்தத் தொட்டியின் குழாயை அடைக்க முடிவு செய்தோம். தண்ணியை பார்த்ததும் ஆசை வந்து, நானே இறங்கத் தொடங்கினேன். முட்டி வரை இருந்த நீரில் கவுன் மேலே வந்து புஸ்ஸென நின்றது. நீரில் மிதந்த தக்கையை எடுத்து குழாயை அடைக்கப் பார்த்தேன். நீரின் வேகத்திற்கு அது திரும்ப வெளியே வந்து விழுந்தது. மீண்டும் மீண்டும் முயற்சிக்க, நீர் இடுப்பளவைத் தாண்டி வரத்தொடங்கியது. அதற்குள், மேலே நின்ற ரம்யாவைப் பார்த்து, எதிர்வீட்டு குமாரி சித்தி சத்தம் போட, “எனக்கு தெரியாது, மலர்தான் இறங்கினா “என சொல்லிக் கொண்டே அவள் ஓட்டம் பிடித்து விட்டாள். பதறிப்போன சித்தி தொட்டிக்குள் இறங்கி, என்னை மேலே ஏற்றினார். ஆனால், அதற்கு முன் சுள்ளென்று முதுகில் ஒரு அடியும் கிடைத்தது.

“என்னா தைரியம்! தண்ணி போனா போயிட்டு போது, அதுக்குன்னு தொட்டியில் இறங்குவியா? அந்த பைப்பை உன்னால அடைக்க முடியுமா?உங்க ஆயாவுக்கு யார் பதில் சொல்றது? ” வீடு வரை அர்ச்சனை தொடர்ந்தது. நியாயந்தானே, நான் செய்த வீரதீர செயலும் அப்படி. வீட்டிலும் திட்டு விழுந்தது ஆனால், அடி ஏதுமில்லை.

“அந்த வீட்டை இடிச்சு நெறவுறதுக்கு ஆள் இல்லை. அதுவரை இப்படித்தான் ஏதாவது நடந்துட்டே இருக்கும். “ஆயா வழக்கம்போல் மொத்த பழியையும் வீட்டின் மேல் போட்டார்.

“ஏன் ஆயா, அந்த வீட்டுக்கு சொந்தக்காரங்க யாரும் இல்லையா? “

“ஏன் இல்ல, ஒருத்தன் இருக்கிறானே. அவன் மட்டும் நல்லா இருந்திருந்தா, இப்படியா இருந்திருக்கும் அந்த வீடு. பச்சை சட்டைக்காரர்னு சொல்லுவியே அவனோடு தான் அந்த வீடு “

“அவரோட வீடா “

“ஆமா, அவனுக்கு அப்பா இல்ல. அம்மா பேரு லலிதா. அவளும் பையனும் மட்டும் தான் அந்த வீட்டில் இருந்தாங்க. வீட்டுக்காரரோட பென்ஷன் போக, பஞ்சு மில்லுக்கு வேலைக்கு போயிட்டு வந்துட்டு இருந்தா. பையனுக்கு அப்பவே கொஞ்சம் மனநிலை சரியில்லை. வீட்ல வச்சு பூட்டிட்டு வேலைக்கு போவா. அவளுக்கு வயித்து வலியும் இருந்துச்சு சரியான வைத்தியமும் பார்த்துக்கலை. ஒரு நாள் பையனை வெளியே தள்ளிட்டு, தீ வைச்சுக்கிட்டா. அன்னையிலிருந்து இவனுக்கு இன்னம் கொஞ்சம் சேர்த்து புத்தி மாறிடுச்சு. அப்போ அவனுக்கு பத்துபன்னிரெண்டு வயசு இருக்கும். அதுக்குப்பிறகு ஒரிடத்துல நிக்க மாட்டான், எங்கெங்கேயோ சுத்துவான். அதென்னவோ நம்ம வீடு மட்டும் சரியா தெரியும். பசியாத்தறதால இருக்கும். அப்பப்போ வந்துட்டு போவான். அவன் வீட்டுக்கு கூட போறது இல்ல. அவன் வீடுன்னு நினைப்பு இருக்கான்னும் தெரியலை. எல்லாம் நல்லபடியா இருந்திருந்தா, இன்னைக்கு கல்யாணம் செஞ்சு ஒரு குழந்தையும் பெத்து இருப்பான். அவன் விதி அப்படி “

“ஆயா, இது கதையா,நிஜமா “நம்பமுடியாமல் திரும்பவும் ஒருமுறை கேட்டேன்.

காலம் ஓடியிருந்தது. வளர்ந்து, திருமணம் முடித்து என அந்த ஐந்தாம் வகுப்பு மலர், எனக்குள் எங்கேயோ மறைந்து விட்டிருந்தாள். என் திருமணத்திற்கு முன்பே ஆயாவும் மறைந்து விட்டிருந்தார். திருமணத்தின் போது கையை,காலை உடைத்துக் கொள்ள போட்ட திட்டமே மறந்துபோய் கல்யாணம் செய்திருந்தேன். எனக்கு குழந்தை பிறந்து ஐந்து நாட்கள்தான் ஆயிருந்தது. அடை மழை காலம் என்பதால், குழந்தையை இளவெயிலில் காட்டவே முடியவில்லை. மஞ்சள் காமாலை லேசாக வந்திருந்தது. அட்மிட் செய்த முதல் நாளே குழந்தையின் தலை, கை, கால், விரல் என தனித்தனியாக அளவு எடுத்தார்கள். ஏனோ வித்தியாசமாய் தோன்றியது எனக்கு. டாக்டர் பேச அழைத்திருந்தார். குழந்தையை NICU – வில் விட்டுவிட்டு, எல்லோரும் டாக்டரின் அறையில் கூடியிருந்தோம். அவரின் அறையில் சிலுவை இயேசுவின் ஓவியம் பெரிதாக மாட்டப்பட்டிருந்தது.

“ஏன் அவரை திரும்ப,திரும்ப ஆணியில் அறைகிறார்கள் “எனத் தோன்றியது எனக்கு. மனிதர்களுக்கு மகிழ்ச்சியை கொண்டாடுவதை போல சோகத்தையும் கொண்டாடவேண்டும். எல்லோருமே ஏதோ ஒரு துயரத்தைப் புதைத்து வைத்திருக்கிறோம். தேவைப்படும் போதெல்லாம் தோண்டி எடுத்து மடியில் போட்டு அழ வேண்டும் நமக்கு. இந்த கண்ணீர் இல்லாவிட்டாலும் மனிதம் மறைந்து போய்விடும் போல.

டாக்டர் உள்ளே நுழைந்தார். சம்பிரதாய பேச்சுகளுக்கு பிறகு டிஎன்ஏ, குரோமோசோம்களின் அடுக்கை, இயல்பை விவரிக்கத் தொடங்கினார். குழந்தையின் மன வளர்ச்சியை பற்றி தனது சந்தேக சாத்தியக்கூறுகளை அடுக்கினார். நான் மெல்ல அறையை விட்டு வெளியே வந்தேன். இதெல்லாம் ஏற்கனவே படித்த பாடங்கள் தான். குழந்தையின் மங்கோலிய கண்கள் ஏற்கனவே எனக்கு அதை தெரியப்படுத்தி இருந்தன. நான்தான் அமைதி காத்தேன். இனி நாற்பத்தி ஐந்தாவது நாளில் எடுக்கும் ஒரு ரத்த மாதிரியில், முடிவை எழுத்துப்பூர்வமாக தருவார்கள். மெல்ல நடந்து ஹாஸ்பிடலின் தோட்டத்திற்கு வந்து இருந்தேன்.

நடக்க,நடக்க கர்ப்பப்பை இரத்தத்தை சுரந்துகொண்டே இருந்தது. எவ்வளவு பிரச்சனை என்றாலும், உடல் மீதான கவனம் சிதறாது போல என நினைத்துக் கொண்டேன். தோட்டத்தின் நடுவில் மேரி மாதாவும், இயேசுவும் மெல்லிய தூரலில் நனைந்து கொண்டிருந்தார்கள். மேரியின் தலையை வருடிக் கொடுத்தேன். கையை நீட்டி புன்னகைத்துக் கொண்டிருந்த இயேசுவின் விரல்களில் மெல்லிதாக முத்தமிட்டேன். மேரியின் முத்தம்தான் இவனை இயேசுவாக்கி இருக்கக்கூடும் இல்லையா? சாமியெல்லாம் கும்பிட்டு நான்கைந்து வருடங்கள் ஆகி விட்டிருந்தது. இப்போது வேண்டிக்கொள்ளத் தோன்றியது. யாரிடம் வேண்டுவது? மேரியிடமா?குழந்தை இயேசுவிடமா? மழையிடமா? மழை நனைத்த மண்ணிடமா? இப்போதைக்கு வேண்டுவது முக்கியமாகப்பட்டது. யார் நிறைவேற்றினால் என்ன? இரண்டே இரண்டு வேண்டுதல்கள்தான் ஒன்று, என் குழந்தை இருக்கும் வரை, எனக்கு ஆயுள் கொடு அல்லது எனக்கு முன்னே என் குழந்தையை எடுத்துக் கொள், நான் பாக்கியப்பட்டவளாவேன்.

மழை அடித்துப் பெய்ய தொடங்கியது. அடிவயிற்றுக் குருதி கால் பெரு விரல் தொட்டு பூமியை நனைக்கத் தொடங்கியது.

– NOTION PRESS நடத்திய தேசிய அளவிலான சிறுகதை போட்டியில் சிறப்பு பரிசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *