முள்ளாகும் உறவுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 19, 2022
பார்வையிட்டோர்: 3,178 
 

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சேதுவும் பாலனும் கெஞ்சிப் பார்த்தார்கள். கதறிப் பார்த்தார்கள். ஆனாலும் கோமளா மசியவில்லை. விற்றே தீர வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தாள். இருவரும் சங்கமேஸ்வரனைப் பார்த்தார்கள். அவர் முகத்தை அந்தப்பக்கம் திருப்பிக் கொண்டார். அவர் கடைக்கண் ஓரம் ஈரம் கசிந்தது.

மூன்று கட்டு வீடு. முன்னால் ஆயிரம் சொச்சம் சதுர அடி. பின்னால் ஆயிரம் சொச்சம் சதுர அடி. முன்னால் ஒரு பூங்காவைப் போல் மலர் தோட்டம். பின்னால் காய்கறித் தோட்டம். அத்தனையும் சங்கா, அவரை அப்படித்தான் அவரது சகோதரர்கள் சேதுவும் பாலனும் கூப்பிடுவார்கள், தன் கைப்பட, கண்பட வளர்த்தது. விட மனசில்லை. ஆனால் என்ன பண்ணுவது. கோமளாவிற்கு ஒவ்வாமை நோய். எதை சுவாசித்தாலும் இழுப்பு வந்து விடும். அதனால் பத்து வருடங்களாக தாளிப்பு இல்லாத தாம்பத்தியம்.

சேதுவும் பாலனுமே வீட்டை வாங்கிக் கொண்டார்கள். இன்றோடு பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன. அலுவல் காரணமாக எங்கெங்கோ போய்விட்டு இப்போது சென்னைக்கு குடி பெயர்ந்திருக்கிறார் சங்கமேஸ்வரன். கோமளவல்லி கல்யாணத்தின் போது கொஞ்சம் ஒல்லி. இப்போது இரண்டு பெற்றுப் போட்டவுடன் பெருத்துப் போய் விட்டாள். உடலில் கொஞ்சம் பலம் வந்தவுடன் ஒவ்வாமை தீண்டாமை போல் விலகி விட்டது. கூடவே எது நல்லது எது ஆபத்து என அறிந்து கொண்ட பட்டறிவு.

அந்த அடுக்குமாடி குடியிருப்பில் மூன்றாவது தளத்தில் இருந்தது அந்தக் குடியிருப்பு. தாவர விஞ்ஞானி சங்கமேஸ்வரன் குடியிருக்கும் வீடு அது. சங்கமேஸ்வரன் செடிகளின் பால் அதீத அன்பு கொண்டவர். அவர் அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பதால் அவரால் நினைத்தவண்ணம் செடிகளை வளர்க்க முடியவில்லை என்றொரு ஆதங்கம் உள்மனதில் எப்போதும் குடிகொண்டிருந்தது.

சங்கமேஸ்வரன் அரசு உத்யோகத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். வயது அறுபத்தி நான்கு. வேளாண்மைத் துறையில் இருந்து ஓய்வு பெற்று ஆறு வருடங்கள் ஆயிற்று. சங்கமேஸ்வரனுக்கு ஒரு மனைவியும் இரண்டு மகள்களும் உண்டு. மகள்களுக்கு திருமணம் ஆகி வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்கள். அவர் இன்னமும் அங்கு போகவில்லை. ஆனால் அவரது மனைவி கோமளவல்லி இரண்டு முறை அங்கு போய் விட்டு வந்திருக்கிறார். அவர் சொன்ன விசயங்கள் அவரது ஆவலை மேலும் தூண்டின.

‘பதிமூணாவது மாடிங்க.. எதிரே பூங்கா.. என்ன விதமான செடிகள், மலர்கள்..

இன்பா கிட்ட கூட சொன்னேன்.. அப்பா வந்திருந்தா திரும்பியிருக்கவே மாட்டாருன்னு..’

வானை நோக்கி கட்டிடங்களைக் கட்டிவிட்டு பூங்காக்களை உயிர்ப்போடு வைத்திருக்கிறார்கள்.

அடுக்குமாடி கட்டிடம் கட்டும்போதே தீர்மானமாக சொல்லிவிட்டார், தனக்கு ஒரு படுக்கை அறை போதும் என்றும் மீதமுள்ள இடத்தில் மாடித் தோட்டமாவது அமைக்க வேண்டும் என்று. கோமளவல்லிக்காக மாடி தோட்ட அறை கண்ணாடித் தடுப்புகளால் மூடப்பட்டது. பூவின் வாசம் உள்ளே வராது. வெளியே வீசும்.

‘ரெண்டு மகளுங்கன்னு சொல்றீங்க.. அவங்க வந்தா தங்க இடம் இருக்காதே?’ கட்டிடக்காரன் அதீதமாகக் கவலைப்பட்ட்டான்.

‘தேவைன்னா ஹால்ல படுத்துக்கறேன்.. அதுவும் வேணுமின்னா இருக்கவே இருக்குது என் பூங்கா.. மாடிப்பூங்கா..

அவரது பிடிவாதத்திற்கு முன்னால் கோமளவல்லியின் வாதம் எடுபடவில்லை. பூங்கா அமைத்தே விட்டார். நூலகத்திற்கு சென்று தோட்டக்கலை நூல்களை வாங்கி பிரதி எடுத்து தினமும் ஒரு செடி என்று சேர்த்து இன்று அவரிடம் இருபத்தி ஐந்து செடிகள் இருக்கின்றன. சில அழகுக்கு, பல மருத்துவத்திற்கு.

இரண்டாவது மகள் இன்பா என்கிற இன்பவல்லி நாளை வருகிறாள். அவளுக்கு இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறாள். குடும்பத்தின் முதல் ஆண் வாரிசு. முதல் பெண்ணுக்கு இன்னமும் கருத்தரிக்கவில்லை.

காலையிலிருந்தே ஒரே களேபரம். கோமளவல்லி ஏக உற்சாகத்தில் இருந்தாள். பேரனை பார்க்கப்போகும் சந்தோஷம்.

காலை ஆறுமணிக்கு விமானம் தரையிரங்குமாம். ஏழரை மணிக்கு வந்து விடுவார்களாம். இன்பாவுக்கு பிடித்த பிடிக் கொழுக்கட்டை, சின்ன வெங்காய சாம்பார் என்று காலை நாலு மணிக்கே எழுந்து செய்ய ஆரம்பித்து விட்டாள்.

சங்கமேஸ்வரன் ஐந்து மணிக்கு எழுந்து வாக்கிங் போய் விட்டு, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி விட்டு, கொஞ்ச நேரம் அவைகளை வருடி கொடுத்து விட்டு குளிக்கப் போனார். ஆறு மணிக்கு மகிழுந்து வந்து விடும். அவர்தான் விமான நிலையம் போகப் போகிறார்.

மகிழுந்துவில் இருந்தபோது இன்பா எப்படி தன் தோட்டத்தைக் கண்டவுடன் குதிக்கப் போகிறாள் என்று கற்பனை செய்து பார்த்தார். சிறு வயதிலிருந்தே அவள் இயற்கை பிரியை. தினமும் சைக்கிளில் பூங்கா போக வேண்டும் என்று அடம் பிடிப்பாள். அவள் ரசனைக்கேற்றாற்போல் வெளிநாட்டில் அவள் வீட்டருகிலேயே பூங்கா அமைந்தது அதிர்ஷ்டம் தான் என்று எண்ணினார். அவள் மகனுக்கு பூங்கா பிடிக்குமா?

பேரனைக் கைப்பிடித்து ஒவ்வொரு தொட்டியாக அழைத்துச் சென்று செடிகளையும் அதன் வாசத்தையும் குணங்களையும் விளக்க வேண்டும். சிறு மூளை. ஒரே நாளில் அத்தனையும் திணிக்கக் கூடாது. ஒரு நாள் ஒரு தாவரம்.

விமானம் தரையிரங்கி அரை மணி நேரத்தில் அவர்கள் வந்து விட்டார்கள். இன்பா கொஞ்சம் சதை போட்டிருந்தாள். அவள் பின்னால் டிராலியைப் பிடித்துக் கொண்டு ஒரு வெள்ளைக்காரக் குழந்தை.. அட அது வெள்ளைக்காரக் குழந்தை இல்லை. அவர் பேரன் தான்.

சாமான்களை பின்னால் ஏற்றிய பிறகு சங்கமேஸ்வரன் சொன்னார்:

‘போரூர்.. கௌம்பினோமே அங்கதான்…’

‘அப்பா இப்ப வீட்டுக்கு வேணாம்பா.. நான் நட்சத்திர ஓட்டல்ல அறை போட்டிருக்கேன். சட்டுனு கிளைமேட் மாறினா இவனுக்கு ஒத்துக்காது.. அதுவுமில்லாம வீட்டுல தோட்டம் போட்டிருக்கீங்களாமே? பூ வாசம் டஸ்ட் அலர்ஜி ஏதாவது ஒத்துக்கலைன்னா இவங்க அப்பா என்னை கொன்னுடுவாரு..’

இப்போதெல்லாம் சங்கமேஸ்வரன் தெருவிலிருக்கும் பூங்காவுக்கு போய் மணிக்கணக்கில் உட்கார்ந்திருக்கிறார். அவரது மாடி தோட்டம் அறையாகிவிட்டது. பேரன் வரவுக்காக காத்துக் கொண்டிருக்கிறாள் கோமளவல்லி இரண்டு வருடங்களாக.

– June 2012, திண்ணைக் கதைகள், வெளியிடு : FreeTamilEbooks.com

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *