முத்து கிருஷ்ணன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 19, 2020
பார்வையிட்டோர்: 7,126 
 
 

ரகு விலாஸில், எப்போதும் உட்காரும் டேபிளில் போய் உட்கார்ந்தார் கிருஷ்ணன். அவரைப் பார்த்ததும், சலாம் வைத்துவிட்டு, சற்று நேரத்தில் காஃபியைக் கொண்டு வந்து வைத்தான் சர்வர் ராஜு.

“வேற ஏதாவது சார்…’” என்றான்.

வேண்டாம் என்பது போல் கைகாட்டினார் கிருஷ்ணன். காஃபியைத் தவிர, அவர் எப்போதும் வேறு எதுவும் கேட்கமாட்டார் என்று தெரிந்திருந்தாலும், ராஜுவுக்கு பழக்க தோஷம். ஒவ்வொரு முறையும் கேட்பான். அவரும் இதேபோல் சைகை செய்வார். அவருடன் எப்போது வரும் முத்துவேல் இல்லாமல் எதிர் இருக்கை காலியாக இருப்பது ராஜுவுக்கே கஷ்டமாக இருந்தது. அவனுக்கே அப்படி என்றால் கிருஷ்ணனுக்கு….?

மிகவும் தளர்ந்து விட்டார் கிருஷ்ணன்…. இந்த ஒரு மாதத்தில், முத்துவேல் இல்லாமல் மிகவும் வெறுமையாகிப் போனது வாழ்க்கை. முத்துவேல், கிருஷ்ணனின் நட்புக்கு 67 வயது ஆகிறது. ஆம்… கிருஷ்ணனின் வயதும் 67 தான். கிருஷ்ணனின் குடும்பமும், முத்துவேல் குடும்பமும் அடுத்தடுத்த வீடு. கிருஷ்ணன் பிறந்த போது, முத்துவேலுக்கு இரண்டு வயது. குட்டி பாப்பா, குட்டி பாப்பா என்று கிருஷ்ணனைப் பார்க்க பக்கத்து வீட்டுக்கு ஓடி ஓடி வந்து விடுவான் முத்துவேல். எனவே, கிருஷ்ணனுக்கு முகம் பார்க்கத் தெரிந்த குழந்தைப் பருவம் முதல் முத்துவேல் பழக்கம்.

கிருஷ்ணன் வளர, வளர அவரது விளையாட்டு, பள்ளிக்குப் போய்வருதல், படிப்பில் உதவி எல்லாவற்றிலும் முத்துவேல் தான் இருந்தார். இருவருக்கும் வீட்டில் கூடப் பிறந்தவர்கள் இருந்தாலும், முத்துவேலுக்கு கிருஷ்ணனும், கிருஷ்ணனுக்கு முத்துவேலும்தான் முக்கியம். ஒரே பள்ளியில் வேறு வேறு வகுப்பில் படித்தாலும், இரண்டு வயது மூத்தவர் என்பதால், படிப்பில் கிருஷ்ணனுக்கு முத்துவேல் ஆசான்.

பள்ளியிலும், கல்லூரியிலும் வேறு நண்பர்கள் இருந்தாலும், இந்த முதல் நட்பு ஆழமானது, அழகானது. என்றும் விட்டுப் பிரியாமல் தொடர்ந்த ஒன்று. இவர்களது நட்பால் இரு குடும்பமும் அதே நெருக்கத்துடன் இருந்தது. இருவர் குடும்பத்திலும் இவர்களை முத்து கிருஷ்ணன் என்று சேர்த்தே கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.

பின் வேலை நிமித்தம், திருமணம் போன்ற பல சூழ்நிலையில் வெவ்வேறு இடத்திற்கும், ஊருக்கும் மாற்றிப் போனாலும், இவர்களது நட்பு மட்டும் மாறவேயில்லை. இருவருக்கும் திருமணம் முடிந்த பின், இருவரது மனைவியும் நல்ல தோழிகளாகி விட்டனர். எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ சந்தித்துக் கொள்வார்கள். வருடம் ஒருமுறை இரு குடும்பமும் சேர்ந்தே சுற்றுலா போவார்கள்.

பின் கிருஷ்ணனுக்கும் முத்துவேலுக்கும் குழந்தைகள் பிறந்த பிறகு, அவர்களுக்கும் நட்பு பூத்து, இவர்களது நட்பை ஆழப்படுத்தி, அடுத்த தலைமுறைக்கும் படர விட்டது. மகன், மகளுக்குத் திருமணம் முடித்து, வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, கிருஷ்ணன் வீட்டுக்கு அடுத்த தெருவிலேயே வீடு வாங்கிக் கொண்டு வந்து விட்டார்கள் முத்துவேலும் அவரது மனைவியும்.

அன்றிலிருந்து கிட்டத்தட்ட ஏழெட்டு வருடங்களாக முத்துவேலும், கிருஷ்ணனும் தினமும் சந்தித்துக் கொள்வார்கள். வாரம் இருமுறை, ரகு விலாசில் வந்து உட்கார்ந்து, காஃபி குடித்துக் கொண்டே பேசிக் கொண்டிருப்பார்கள். அதனால் சர்வர் ராஜுவுக்கு, இவர்கள் எந்த நேரத்திற்கு வருவார்கள், என்றைக்கு வருவார்கள், எந்த டேபிளில் உட்காருவார்கள் எல்லாம் அத்துப்படி.

தினமும் இருவரும் சேர்ந்துதான் நடைப் பயிற்சி செய்வார்கள். பூங்காவில் உட்கார்ந்து பேசுவார்கள். இருவர் வீட்டு சமையலும் இங்கும் அங்கும் மாற்றிக் கொள்ளப்படும். தாங்கள் பெற்ற குழந்தைகள் தங்களுடன் இல்லையே என்ற ஏக்கத்தைக் கூட, இந்த நட்பால் அவர்களால் சமாளிக்க முடிந்தது.

இரண்டு வருடங்களுக்கு முன் கிருஷ்ணனின் மனைவி இறந்து விட, கிருஷ்ணன் உடைந்து போனார். இருந்தாலும் முத்துவேலின் ஆறுதல் வார்த்தைகளும், அவர் கூட இருக்கிறார் என்ற தெம்பும், மனைவியின் இழப்பிலிருந்து கிருஷ்ணனை மீட்டெடுத்தது. கிருஷ்ணன், முத்துவை விட்டு வரமாட்டார் என்பது தெரியுமாதலால், அப்பாவைத் தனியேவிட மனசில்லாமல் கிருஷ்ணனின் சின்ன மகன், குடும்பத்துடன் இங்கேயே மாற்றி வந்து அப்பாவைப் பார்த்துக் கொண்டான்.

எல்லாம் பழையபடி நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. போன மாதம் ஒரு நாள், திடீரென நடைப்பயிற்சிக்கு முத்துவேல் வரவில்லை. எப்போதும் சந்தித்துக் கொள்ளும் தெருமுனையில் காத்திருந்துவிட்டு, முத்துவேல் வராததால் நேரே அவர் வீட்டுக்கே போய்விட்டார் கிருஷ்ணன். அங்கே, திடீர் நெஞ்சுவலியால் முத்து துடித்துக் கொண்டிருக்க, அவர் மனைவி செய்வதறியாது தவித்து, தெரிந்த டாக்டருக்கு ஃபோன் செய்து பதறிக் கொண்டிருந்தார்.

கிருஷ்ணன் ஆடிப் போய்விட்டார். வேகமாக போய் முத்துவேலுவின் கைகளைப் பிடித்துக் கொண்டார். நான் இருக்கேன்…. கவலைப்படாதே என்பது போல் ஆதரவாய் ஒரு பார்வை…. ஆனால் கிருஷ்ணனைப் பார்ப்பதற்காகவே காத்திருந்தது போல, அவரைப் பார்த்த நிம்மதியில் முத்துவின் உயிர் பிரிந்தது. கண் முன்னே தன் முதல் நட்பு, குழந்தையிலிருந்து கூடவே இருந்து, ஆதரவாய், ஆறுதலாய், தோழனாய், ஆசானாய், சமயத்தில் தந்தையாய் தன்னைத் தூக்கி நிறுத்திய முத்துவேலுவின் இழப்பு கிருஷ்ணனை மிகவும் நிலைகுலையச் செய்தது.

இயற்கையின் நியதி இதுதான் என்பது புரிந்தாலும், முத்துவேலுவின் இழப்பு கிருஷ்ணனை உலுக்கி விட்டது. அன்று தளர்ந்தவர்தான்…. எதிலும் நாட்டமில்லை. ஏதோ நாட்களைத் தள்ளிக் கொண்டிருந்தார். இதோ, முத்துவுடன் வந்து ரகு விலாசில் காஃபி குடிப்பது போல், அதே நேரத்தில் வந்து, எதிர் நாற்காலியைப் பார்த்துக் கொண்டே காஃபியைக் குடித்து முடித்தார்.

எதிர் சீட்டின் வெறுமையை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. அவரையும் அறியாமல் கண்ணீர் வழிந்தது. எதிர் சீட்டைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருந்தார். ராஜு இதைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தான். அவனுக்கு அவரின் வலி புரிந்தது. அவனும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பில்லை அவரிடம் நீட்டினான்.

“சார்…. சார்… கிருஷ்ணன் சார்….” ராஜு அலறினான்.

ஆனால், கிருஷ்ணன் எதிர் நாற்காலியைப் பார்த்தபடியே, கண்களில் கண்ணீருடன் முத்துவேலுவைத் தேடிப் போயிருந்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *