கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 10,335 
 
 

இமாம் ஸலா ஹுத்தீன், ஈசிசேரில் சாய்ந்தார்; மனைவி ராஹிலா, பக்கத்தில் கிடந்த சேரில் அமர்ந்தாள்.
என்ன என்பது போல் இமாம் பார்த்தார்.
“”நம்ம பையனுக்கு நிறைய வரன்கள் வருது. ஏதாவது ஒண்ணு பார்த்துட்டா நல்லது.” “”எங்கேயிருந்து?”
“”உங்க தங்கச்சி மகள், என்னோட அண்ணன் மகள், உங்க பிரண்ட் முஸ்தபாவோட மகள், நம்ம முத்தவல்லியோட சம்பந்தி மகள், நம்ம சாச்சா வீட்டுப் பொண்ணு…”
“”இவ்வளவு தானா? இன்னும் இருக்கா?”
“”நாம பொண்ணு தேட ஆரம்பிச்சா, இன்னும் நெறைய இடம் வரலாம்.”
சிரித்தார் இமாம். அவரது நினைவுகள், பதினைந்து ஆண்டுகள் பின்னோக்கி ஓடின.
முதல் அழைப்புஅப்போது இமாம் ஸலா ஹுத்தீன், அரபிக் கல்லூரியில் பணிபுரிந்தார். மனைவியும், ஒரே மகனும் என்பதால், சமாளிக்க முடிந்தது. அவருக்கு சொற்பொழிவில் கொஞ்சம் ஆர்வம் இருந்தது. குறுகிய வட்டத்திற்குள் நில்லாமல், பொதுப்பார்வை இருந்தது, கொஞ்சம் இலக்கியமும் இருந்தது. இவைகளை கலந்து, பேச்சாற்றலை வெளிப்படுத்தினார். இரண்டு ஆண்டுகளுக்குள் சொற்பொழிவில் மிகப் பிரபலமடைந்தார்.
அவரது பேச்சு, வழக்கமான பாதையை விட்டு விலகி இருந்தது. ஒவ்வொரு பேச்சிலும், மனித நேயம் கொப்பளித்தது. இப்தார் விழா என்றால், உணவுப் பொருளாதாரம் பற்றிப் பேசினார்; மகான்களின் கந்தூரி விழா என்றால், அங்கே தியானக் கூடம் அமைப்பது பற்றி பேசினார்.
தமிழகத்தின் பிரபலமான ஒரு தர்காவில் பிரச்னை ஏற்பட்ட போது, அமைதிக் குழுவில் அவரும் சென்றார். அங்கே முறையான காப்பகம் கட்ட வேண்டும் எனப் பேசினார்.
நாளடைவில் அவரது சொற்பொழிவு மேடைகள் விரிந்தன. பள்ளி, கல்லூரி, இப்தார் நிகழ்வுகள், தமிழ் மன்றம், சர்வ சமயக் கூட்டங்கள், கோவில், கிறிஸ்தவ தேவாலயங்களில் அவரது குரல் ஒலிக்கத் துவங்கின.
இவை போக, அரபிக் கல்லூரியிலும் அயராது உழைத்தார். மாணவர்களை வழி நடத்துதல், வாசிக்க வைத்தல், உடல் நலம் பேணுதல், உலகை அறிமுகப் படுத்துதல், திருக்குர்ஆன் விரிவுரை நிகழ்த்துதல் என தேனீயாய் உழைத்தார்.
அவரது உழைப்பு பெருகப் பெருக வருமானம் உயர்ந்தது. வருமானம் பெருகியதும், குடும்பத்தில் கவனம் செலுத்தினார். வேறு ஒரு வசதியான வாடகை வீட்டில் குடியமர்ந்தார். மகனை தரமான பள்ளிக்கு மாற்றினார். இரு சக்கர வாகனம் வாங்கினார். இந்நிலையில், அவருக்குப் பேரிடி ஒன்று விழுந்தது.
அது ஒரு நோன்புக் காலம். பகலில் நோன்பிருந்தார். இரவு விசேஷத் தொழுகைக்குப் பின், முக்கால் மணி நேரம் திருக்குர்ஆன் விரிவுரை நிகழ்த்தினார். விரிவுரைக்காக பகலில் நெடு நேரம் உழைத்தார். மார்க்க நண்பர்களோடு வெகு நேரம் தொலைபேசியில் விவாதித்தார். கடுமையான உழைப்போடு, அந்த நோன்பு முடிந்தது. அடுத்த வெள்ளி, மேடையில் சொற்பொழிவின் இடையே மயங்கிச் சரிந்தார்.
பத்தாயிரம் ரூபாய் செலவில், மருத்துவர்கள் இமாமுக்கு லோ ஷூகர் எனக் கண்டறிந்தனர். நோய் கண்ட முதல் ஆறு மாதம் ரொம்பவும் சிரமப்பட்டார். ஒரு எண்பது வயது முதியவரின் சோர்வு, உடம்பில் வந்து சேர்ந்திருந்தது. அவரது எல்லாப் பணிகளும் தடைப்பட்டு நின்றன.
குடும்பத்தில் மீண்டும் வறுமை மெல்ல எட்டிப் பார்க்கத் துவங்கியது. அரபிக் கல்லூரியின் வருமானம் நின்று விட்டால், வீட்டில் அடுப்பெரியாது. எனவே, முதல்வரின் யோசனைப்படி, சிரமத்தோடு அரபிக் கல்லூரி சென்று வந்தார்.
சக பேராசிரியர்களும், மாணவர்களும் அற்புதமாய் ஒத்துழைத்தனர். அந்த ஒத்துழைப்பில், தன் சிரமத்தை, நோயை மெல்ல மறக்கத் துவங்கினார்.
நோய் தீவிரமாயிருந்த வேளையில், நெருங்கிய உறவுகள் கூட விலகிப் போயினர். இப்போது மாப்பிள்ளை கேட்டு வந்த தங்கையோ, இரண்டு பாக்கெட் பிஸ்கட்டோடு பார்த்து விட்டுப் போனாள்.
மனைவியின் அண்ணனோ, ஒரு பாக்கெட் சப்பாத்தி மாவு வாங்கி வந்தார்; வெறும் விசாரிப்புகள். பொருளாதார ரீதியாக எவரும் தோள் கொடுக்க முன்வரவில்லை. இவர் திருமறை விரிவுரை செய்யும் பள்ளியின் இமாம், கை கொடுத்தார். அதனால், கடன் சுமை குறைந்தது; ஓரளவு நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
பையன் வேகமாய் வளர்ந்தான். அவரது நீண்ட நாள் கனவான மருத்துவப் படிப்பை, மகனை தேர்ந்தெடுக்க வைத்தார். வசதி படைத்த நல் உள்ளங்கள் உதவின.
இறை நாட்டத்தோடு, அனைவரின் உதவியும் சேர்ந்து, இன்றைக்கு மகன் டாக்டராகி விட்டான். இன்றைக்கு அந்த டாக்டருக்குத் தான், வரன்கள் வரிசையாக வந்து நிற்கின்றன.
இமாமின் சிந்தனையை மனைவி கலைத்தாள்.
“”என்ன யோசனை?”
“”நீ சொன்ன வரன்களைப் பத்தித் தான்…”
“”நான் ஒரு யோசனை சொன்னாக் கேட்பீங்களா?”
“”சொல்லு பார்க்கலாம்…”
“”நீங்க உடம்புக்கு முடியாம இருந்தப்போ, எந்த சொந்தங்களும் எட்டிப் பார்க்கல. நாம கஷ்டப்பட்டப்போ யாரும் உதவி செய்யல. அதனால், இந்த சொந்தங்களே வேண்டாம்.”
“”அப்படிச் சொல்லாதே ராஹிலா. சொந்தங்கள்னா அப்படி இப்படித் தான் இருப்பாங்க. உதவினாத் தான் சொந்தம்ன்னா, உலகத்தில சொந்தம்ன்னு எவரையும் பார்க்க முடியாது. அது மட்டுமில்ல, நம்ம நபிகள் நாயகம் (ஸல்) சொல்லி யிருக்கிறாங்க…
“”உறவுகளோடு சேர்ந்து வாழுங்க… அப்படின்னு சட்டம் தெரிஞ்ச நானே அத உதாசீனப்படுத்தறது நல்லாயில்லே. அதனால தான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்.”
“”என்ன முடிவு?”
“”நம்ம சொந்தத்திலேயே ஒரு பொண்ணப் பார்த்திடலாம்…”
“”சொந்தத்திலேயே இரண்டு, மூணு வருதே?”
“”யாரு?”
“”என் அண்ணன், உங்க தங்கை, நம்ம சாச்சா வீடு.”
“”இதுல யாரு நம்மகிட்டே முதல்லே மாப்பிள்ளை கேட்டது?”
“”எதுக்கு கேக்கறீங்க?”
“”நீ சொல்லு.”
“”என்னோட அண்ணன் தான்.”
“”அப்ப… உன்னோட அண்ணன் மகளையே பேசிடலாம்.”
“”ஏன் அப்படி?”
“”நம்ம மார்க்கத்தில விருந்து சம்பந்தமா சொல்லும் போது, விருந்துக்கு அழைச்சா போய் கலந்துக்கிடணும். ஒரே நேரத்தில் பலரும் விருந்துக்கு அழைச்சா, எங்கே போறதுன்னு குழப்பம் வந்தா, முதன்முதல்ல யாரு கூப்பிட்டாங்களோ, அவங்க வீட்டுக்குப் போகணும்ன்னு சொல்லுது.
“”அந்த அடிப்படையில் தான், இதை நான் முடிவு பண்ணினேன். நமக்கு வந்த வரன்களிலேயே, உங்க அண்ணன் மகள் தான், முதல் வரன்; அது தான் முதல் அழைப்பு. எனவே, அதையே முடிவு பண்ணிடலாம்.”
“”நம்ம பையன்கிட்டே ஒரு வார்த்தை கேட்டுட்டு…”
“”அவனோட சம்மதம் இல்லாமலா?”
அடுத்த அறையில் உடை மாற்றிக் கொண்டிருந்த டாக்டர், தனக்குப் பிரியமான மாமா மகளே வருவதை எண்ணி, சந்தோஷத்தில் மூழ்கினான்.

– செப்டம்பர் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *