முகங்கள் இருண்டு கிடக்கின்றன

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 29, 2021
பார்வையிட்டோர்: 3,202 
 
 

பழுக்கக் காய்ச்சிய இரும்பை நெற்றியின் அண்டையில் வைத்துப் பிடித்தாற் போல எறித்துக் கொண்டிருந்த வெய்யில் முகத்தில் கரிக்கோடுகளை கீறிக் கொண்டிருக்க, அந்த எரிப்புணர்வைக் கைக் குட்டையால் துடைத்துக்கொண்டே நடந்து கொண்டிருந்தான் அவன்.

கொழும்பு வீதிகளை மிகவும் கஞ்சத் தனமாக முற்றுகையிட்டு , நடைபாதைகளையும் தாம் மட்டும் ஓங்கி உயர்ந்த கம்பீரத்துடன் நின்று கொண்டிருந்த அந்தக் கட்டிடங்கள் அவனுக்கோ , அவனைப் போன்று ஏதேதேதோ காரணங்களுக்காக அங்குமிங்குமாகவும் அவசர அவசரமாகவும் போய்க்கொண்டிருக்கிற மனித கூட்டத்திற்கோ கிஞ்சித்தும் நிழலைக் கொடுக்காமல் இருந்து ஒன்றும் இந்த நூற்றாண்டுக்கு அதிசயமான காரியமல்ல.

தனக்கென்று எல்லாம் உடையவன் தனக்கென்றே எதுவும் இல்லாதவனுக்குக் கொடுத்துத் தான் தீரவேண்டும் என்பது ஆண்டவன் கட்டளையா? என்ன?

தூரத்தே தெரிந்த மணிக் கூண்டுக் கோபுரமும் அதற்கு எதிர்ப்புறமாகச் சென்ற கடைத்தெருவும் அவன் கண்களை விட்டுப் பின்னோக்கிக் கொண்டிருந்தன.

காலையில் ஊரறிய உலகறிய உத்தியோகத்தன் போல களியான் ஷர்ட் எல்லாம் ‘டிப்டொப் பாக அணிந்து, காசு முட்டியைத் தடவி மனைவி பொறுங்கில். கொடுத்த சில்லறைகளுடன் கோட்டைக்கு வந்து, பதினொரு மணி மட்டும் மாத்திரம் போன்றுள்ள ஓர் ‘அஸோஸியேஸன் கட்டிடத்துக்குள் நின்று அன்றைய தினசரிகளையும். ஆங்காங்கே குழுமி செஸ், பில்லியாட்ஸ் என்று விளையாடுவோரையும் வேடிக்கையாகப் பார்த்துவிட்டு, அவன் போகத் தொடங்கியதுந்தானா, அந்த வெயில் அப்படி எறிக்க வேண்டும்?

வழமை போல அவன் நடந்து கொண்டிருந்தான். ஓர் இராணுவ வீரனின் காரமான நடையை இயல்பாக ஏற்படுத்திக் கொண்ட அவனுடைய உடலில் உள்ள காரம் மனதில் இல்லாததால்தானோ என்னவோ, அவன் தனது பிஸினஸ்க்கு உகந்தனையும் தெரிந்தவையுமான முகங்களை, அவை ஆணாக இருந்தாலென்ன பெண்ணாக இருந்தாலென்ன – அவன் தேடிக்கொண்டும் அப்படி ஒன்றிரண்டு தெரிந்தால் சிரித்து அறிமுகம் செய்து கொண்டும் நடந்து கொண்டிருந்தான்.

வீட்டிலே காலங்காத்தலை அவள் அவனுடைய மனைவி கொடுத்திருந்த லிஸ்டை அவன் நினைத்துப் பார்த்தபொழுது, தலையே சுழன்று விடும் போலிருந்தது. அவ்வளவுக்கு ஜனநெரிசலில் ஒரு பெண்ணின் கழுத்தை அலங்கரிக்கும் ஒரு தங்கச் சங்கிலி மீதோ , சைட் பாக்கட் தொக்குத்தொக்கென்றடிக்கப் பாங்குக்குப் போகும் ஒரு பணக்காரனின் பை மீதோ கை போட்டால் அவனுடைய சில நாட் பிரச்சினைகள் தீர்ந்து விடும்.

ஆனால்…….

அப்படி அவன் செய்துவிட்டால், செய்து ஒரு வேளை பிடிப்பட்டால் பொலிஸிடம் வாங்கும் அடிக்கும் உதைக்கும் மருந்து கட்டவே திருடும் பொருள் போதாமல் இருக்கலாம் என்று அவன் நினைத்து, எக்காரணங்கொண்டும் அப்படியொரு வேலையைத்தான் செய்யக் கூடாது என்று தீர்மானித்துமிருந்தான். அதனால் அந்த அவனுடைய பிஸினஸ்ஸுக்குத் தானே தரகனாக அவன் நடந்து கொண்டிருந்தான்.

மத்தியான வேளை. அசாங்க மாடிகளிலும் அலுவலங்களிலுமிருந்து விடுபட்ட பறவைகளைப் போல , வீட்டுக்கும் ஹோட்டல்களுக்குமாக உத்தியோகத்தர்கள் போய்க்கொண்டிருந்தார்கள். அவனுடைய பழைய கொண்ராக்” குகளும் வெளியில் வரும் வேளை அது என்றதும், கடலோரமாக அடைந்த அந்த நாற்சந்தியை நோக்கி விரைந்து கொண்டிருந்தான் அவன்.

டியூஸன் பீஸ் கட்டவில்லை என்பதற்காகப் பாடசாலைக்கே போகமாட்டேன் என்று அடம் பிடித்த அவனுடைய மகளும், மாற்றி உடுக்க ஆனமுறையில் ‘டைட களிசான் இல்லை என்று சிடுசிடுத்து, காலையில் பேக்கரியிலிருந்து பெரும்பாடுபட்டு இறக்குமதி செய்திருந்த பாண்துண்டையே துச்சமென மதித்து பட்டினியாகவே பாடசாலைக்குச் சென்ற மகனும் வீடு திரும்புவதற்கு முன்னர் அவன் சாதிக்க வேண்டிய அந்தக் காரியம் தலையைக் குடைந்து கொண்டிருந்தது.

வீட்டிலே அவனுடைய வரவை, அவன் பணத்துடன் வீடு வரும் அந்த வரவைப் பார்த்திருக்கும் மனைவியின் நினைவும், அவள் இப்பொழுது பட்டினியாகவே கிடப்பாள் என்ற உணர்வும் அவனை வாட்டத் தொடங்கிய வேளை, நடை பெயராதவனாக அந்தக் கட்டிடத்தின் படிகளில் இளைத்து, இளைத்து ஏறி தூணுடன் தோள் சாய்த்து நின்றான் அவன்.

பக்கத்தால் நடந்து கொண்டிருந்த யாரோ ஒருவன் லயிப்புடன் இழுத்த சிகரட் புகை வெளிவந்து, அவனுடைய முகத்தில் பட்டபொழுது, அவனுடைய நாசி அந்த நெடியை நுகர்ந்து ஒரு சிகரட்டுக்கும் வழியற்றவாறு ஆக்கிவிட்ட தன் நிலையை நினைத்து வருந்தவைத்தது.

பாக்கட்டில் இதுவரையும் கிலுங்கியது மட்டுமல்லாமல், நான் இருக்கிறேன் என்று அவனுடைய நெஞ்சில் அவன் ஒவ்வோர் அடி எடுத்து வைக்கும் போது அடித்து அடித்து உறுத்தி, உணர்த்திய சில் சில்லறைகளை, கீழ்கண்ணால் பார்த்தான்.

பறுவாயில்லை! ஒரு பிளேன் டீக்கும் சிகரட்டுக்கும் பஸ்ஸுக்கும் மேல் மிச்சமாகக் கிடந்த சில நாணயங்கள் சிரித்ததும், தவழ்ந்த குழந்தை படியிற் சறுக்கியது போல் அப்பால் உள்ள ஒரு டீக் கடைக்கு புகுந்தான் அவன்.

அந்தக் கடைக்காரன் அவனை அடிக்கடி பார்த்ததாலும், தொழில் உதவி புரிவதாலும் பழக்கப்பட்டு விட்டதால், அவனை சிரித்த முகத்துடனும் சிரித்த கண்களுடனும் வரவேற்றதை பூரிப்புடன் ஏற்றுக் கோண்டான் அவன்.

“என்ன, ரொம்ப நாளாச்சு. ஏது இந்தப் பக்கமே வரல்லையே” என்ற கடைக்காரன் கேட்டதும், கனநாட்களாகத் தான் பொலிஸ் பாதுகாப்பில் விளக்கம் முடியும் வரையும் இருந்த கதையை எப்படிச் சொல்வது என்று திணறினான். பின்னர், கேள்விக்கு எவன் ஒழுங்காகப் பதில் அளிக்கிறான் என்று நினைத்தவன் போல கூறினான் அவன்.

“சும்மா தெரியாதா! பயணமொண்ணு போயிருந்தேன்……. பிளேன்டி ஒண்ணு….. அப்புடியே சிகரட்…. உம்….. உஸ்…… என்ன வெய்யில் …. மனிதனை அதுவுமில்லியா துன்னப் பாக்குது என்ன மொதலாளி” என்றபடி நீட்டாகப் போடப்பட்டிருந்த வாங்கிலில் அமர்ந்தான்.

“ஏன்…. சோடா குடிக்கிறீங்களா?” என்றபடி சோடாப் போத்தலை எடுத்துத் திறக்காத குறையில் முதலாளி கேட்டதும், ‘சேசே! வானாம்!” என்றான் அவன்.

அவன் கொடுத்த சிகரட்டைப் பற்றி வாயில் வைத்து ஒரு ‘தம்’ இழுத்த பொழுது, தான் எதிர்பார்த்து வந்த அவள் வந்து கொண்டிருந்ததைக் கண்டு, பற்றிய சிகரட்டை மாறி வாயில் வைத்தவன் போல் துடித்து, எழுந்து ஓடினான் அவன்.

“ஏய்! சல்லி குடுக்கலியே…… பிளேன்டி வானாமா?” முதலாளி உரத்துக் கத்தியபொழுது” கொஞ்சம் பொறு” என்று ஓடிக் கொண்டே சைகை காட்டிய அவன் அவளருகில் வந்து தான் மூச்சை விட்டான். இவ்வளவுக்கும் கைளிலிருந்த சிகரட்டும், நினைவிலிருந்த உழைப்பு வெறியுமே அவனிடமிருந்தன.

“லில்லி……. இன்னிக்கு ஏதாச்சம் ஒதவி பண்ண முடியுமா?” என்று அவன் கேட்ட பொழுது, சற்று நிதானித்து, பின்னும் முன்னும் சித்தே பார்த்த லில்லி சொன்னாள்.

“உடம்புக்குச் சரியில்லை . யார் வந்திருக்கான்?”

“பெரிய தொரை… நோமல் பீசைக்காட்டிலும் கூட்டிக் கேட்க்கலாம் ஆமா!” – குழந்தைக்கு மிட்டாய் ஆசை காட்டுவது போல, தனது அரை மாதச் சம்பளமான ஐம்பது ரூபாவுக்கும் மேலாகக் கிடைக்கும் என்ற ஆனந்தத்தில் அவள், மெல்லச் சிரித்ததாள்.

“என்ன லில்லி?” இடிவிழுந்த உணர்வுடன் கேட்டான் அவன்.

“ஒண்ணுமில்லே…. எனக்குச் சொகமில்லை . அது தான் ” லில்லி வேதனை வழியக் கூறியதும், அவன் அழுதே விடுவான் போலிருந்தது.

காலையிலே அஸோஸியேஷன் கட்டிடத்தில் தனக்காகக் காத்திருந்து, சந்தித்து விட்டு, ‘சோட்லீவில் ‘ வீட்டுக்கு வருவதாகக் கூறிவிட்டுச் சென்ற அந்தத் துரையை நினைத்ததும், இதுவரையும் யாரையுமே திருட்டுத் தனமாக ஏமாற்றாதிருந்த தன் நேர்மைக்கு மறுபடியும் களங்கம் வந்து விடுமோ என்று அஞ்சினான் அவன்.

“ஒண்ணு பண்ணலாமா? சொகமோ சொகமில்லியோ…… நீ தான் எண்ணு காட்ட ஒருக்கா வந்து போயேன்” என்று அவன் கெஞ்சியதும் லில்லி மறு பேச்சின்றி உடன் பட்டாள்.

சாதாரணமாக விருப்பமற்ற அல்லது தேவையற்ற வேளைகளில் அவனுடைய மற்றும் “பேற்றன்கள்” காட்டும் கிருபையைத் தான் லில்லியும் “சுகமில்லை ” என்று கூறிக் காட்டினாளா என்று ஏங்கிய அவனுக்கு. அவள் உடன் பட்டது ஆறுதலையளித்தது.

பாக்கட்டுக்குள் கிடந்த சில்லறையை எண்ணி , முதலாளிக்கு இருபத்து மூன்று சதத்தைக் கொடுத்துவிட்டு, அவர்கள் புறப்பட்டதும், அடிக்கடி ஓடிக் கொண்டிருந்த பஸ் வேலைநிறுத்தஞ் செய்தது போல் வராமலே விட்டது.

அவர்கள் வெகு நேரமாகப் பஸ் ஹோல்டில் காத்துக் கொண்டு நின்றார்கள்.

அவள் சொன்னாள் : “இரவில் ஒண்ணுமே செய்ய முடியாமே இருக்கு. பொலிசுத் தொல்லை பெரிய தொல்லையாப் போயிட்டு . வேலைக்கும் வழியில்லை. காசுக்கும் வழி இல்லே. நல்லா பிஸ்னஸ் நடந்தப்போ எல்லாமே நல்லா இருந்துச்சு …. பொலிசு பிடிச்சதும் எல்லாரும் பயப்புடுறாங்க. இப்ப பகல் தான் ஒரு கதி. ஆக்களும் குறைவு…….”

“நானும் ஊருக்குப் போன தோடை ஒரு வாரம் லீவு அடிச்சிட்டேன் . ஒடம்பு தாங்குதில்லே” லில்லி கூறிவிட்டு, ஆக்கொட்டினாள்.

அப்பொழுது வெளித்த மேகங்களுக்கிடையே சூரியன் தகித்துக் கொண்டிருந்தது.

“நாலு நாளா பாண் தான் சாப்பாடு. பிள்ளைங்க சோறு திண்டு ஆசைப்பட்டுப் போச்சுதுகள். அதுகளைப்படிக்க வைக்கோணுங்கறதுக்கு நானும் பத்மினியும் படுற பாடு கொஞ்சமில்லே. என்ன பண்ணுறது …… எல்லாம் தலை எழுத்து. பார்த்த காஷியர் வேலையை ஒழுங்காப் பார்க்க முடிஞ்சிடிச்சா? கள்ளன் பட்டந்தான் கடைசியிலே கெடைச்சிச்சு.”

பத்மினி என்று அவனுடைய மனைவியைக் குறிப்பிட்டு அவன் சொன்னதும் லில்லி கேட்டாள். “ஆமா!” அவங்க சொகந்தானே. என்ன வடிவான பொம்பிளை. உங்க வீட்டிலே நான் தங்கி நின்னப்போ வர்ரவங்கல்லாம் அவவைப் பத்தியே கேட்டுக்கிட்டிருப்பாங்க.”

அவள் சொன்னவற்றை அவனே உணர்ந்திருந்தவன் போல, அதைப் பொருட்படுத்தாமல் கூறினான்.

“எனக்கு அது பாவமன்னு படுது. நான் என்ன பண்ண முடியும்?” அவன் கூறியதை விளங்காதவளாக இமைகளைச் சுருக்கி, உதடுகளை அமுக்கி அவனைப் பார்த்தாள் லில்லி . பின்னர்.

“எது எப்படியும் ஆகட்டும்…… ஆமா….. நான் வந்து ஒங்க தொகையை ஏமாத்தினேன்னு அவர் கோபிக்க மாட்டாரா?”

“சே! ஒண்ணும் நடக்காது. செற்பண்ணிட்டா அவரு சந்திச்சுக்குவார். பத்மினி இருக்கிற இருப்பிலே துட்டுக்கும் வழியில்லேன்னா பொசுக்கிப்புடுவா….. பொசுக்கி…… காத்தாலே சில்லறை குடுத்தா…. அப்ப என்ன சொன்னா தெரியுமோ… ஒரு கெழடையா ஏமாத்துனேனாம். இன்னிக்கும் ஒண்ணுமில்லாட்டி, என்னையே வூட்டுக்கு வரப்புடாதுன்னுட்டா …….”

“அப்பிடியா?”

“அதையேங் கேக்கிறே! மொதல்லே வூட்டுக்கு ஒருத்தியைக் கூட்டி போனப்போ என்ன பாடுபட்டா…. சோ! இதுவே பாவம் புண்ணியம்னு ஒண்ணுமில்லை. பணமும் சந்தோஷமுந்தான் இருக்குன்னு நான் சொன்னேன். ஆறு வயசுப் பொண்ணை வெச்சிக்கிட்டுச் செய்தால் அவவும் நாளைக்கு இப்படித்தான் பண்ணுவான்னு அழுதா….. பத்மினியைத் திருப்ப நான் பட்டபாடு….. அப்புறம் ஒரு மாதிரியா காலம் போயிடிச்சு. இப்ப என்னடான்னா பொம்பளைங்க வந்தாலும் ஆம்பளைங்க வேணாமின்னுறாங்க…… காலமே மாறிப் போயிடிச்சி……. என்று கூறிவிட்டு, அவளைப் பார்த்தான் அவன். லில்லி எங்கோ வெறித்துக் கொண்டு நின்றாள். கட்டிடங்களையும் கடந்து வீசி வந்த கடற்கரைக் காற்று, அவளுடைய முந்தானையையும் இடம் நகர்த்திவிட்டு அப்பால் செல்வதை அவதானிக்காதவள் போல் அமைதியாக நின்றாள் அவள்.

எப்படியோ பிறந்து எப்படியோ வளர்ந்து எதற்காகவோ உத்தியோகம் என்று கம்பனியொன்றில் மிக அற்பமான தொழிலின் மூலம் மிகமிக அற்பமான சம்பளத்தைப் பெற்று வயிறு வளர்க்க நேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களைப் போன்ற அவள், தன் ஏழ்மையையும் அந்த ஏழைமையை நாகரீகம் என்ற மேன்மையால் மறைக்கப் பார்க்கும் தாழ்மையையும் எண்ணி நோகின்றாளா என்ற வியப்புடனும், மனவேதனையுடனும் அவன் அவளைப் பார்த்தான்.

நெடுநேரமாகப் பேச்சரவங் கேட்காது போன திகைப்பில் சுயநிலை பெற்றவளாக, தனது மேலங்கங்களை வெறித்து இரசித்து நிற்கும் சில ஆண்களிடமிருந்து அவற்றை மறைக்கத் துடித்தவளாக , ‘லபக்’ கென்று தாவணியை அள்ளித் தோளில் இட்டாள். பின்னர் ஒன்றும் அறியாதவள் போலச் சிரித்த லில்லியைப் பார்த்துக் கேட்டான் அவன். “மாடு வெச்சுப் பால் கறக்கிறானுகளோ. கோழி வெச்சு முட்டை எடுக்கிறானுங்களே. அதுல்லாம் பாவமில்யைா லில்லி . நான் ஒன்னைப் போல ஆக்களை வெச்சு நம்ம எல்லோருடைய பொழைப்பையும் பார்த்தா…. சட்டம்னு வர்ராங்க……. சட்டம்னு……”

அவன் சொல்லி முடிப்பதற்குள் அங்கு பஸ் ஒன்று வந்து, காத்திராப் பிரகாரமாக நின்றதும், இருவரும் அதில் ஏறிக் கொண்டனர்.

பஸ் போய்க்கொண்டிருந்தது. அவன் லில்லியோடு உராய்ந்தபடி அமராது சற்றே விலகியபடி, குனிந்து, குரலைத் தாழ்த்திக் கேட்டான்.

“ஆமா! பஸ் ஹோல்டிலே ஏன் மூஞ்சியை ஒரு மாதிரி வைச்சிருந்தே?”

“ஒண்ணுமில்லே. எங்க கதையை யோசிச்சேன். சில பொண்ணுங்க வயித்தை வளக்கப்பாடுபடுறாங்க. மத்தவங்க பணஞ் சேத்து கம்முன்னு வாழப்பாக்கிறாங்க….. இன்னும் ஆக்கள் ஆசைவைச்சா அங்க இங்க போறாங்க….. அது தான் யோசிச்சேன்…..” என்று கூறிவிட்டுச் சிரித்தாள் லில்லி.

தனது கிளுக்கென்ற சிரிப்பொலி அநாவசியமாக யாருடைய பார்வையையும் இழுத்ததா என்ற சிவந்த மணிக் கழுத்தை வெட்டிப் பார்த்துவிட்டு, அந்த வேளை பஸ்ஸில் அதிக சனமே இல்லை என்ற உணர்விலும், திருப்தியிலும் தொடர்ந்து கூறினாள்;

“ஒலகம் போற போக்கிகைப் பாத்தா என்னன்னமோல்லாம் நடக்கும் போலிருக்கு. இல்லியா?” அவன் தலையை அசைத்து ஆமென்றதும் அவள் கூறினாள்.

“நான் தான் ஒறிஜினல் ஏழை. ஒங்க கதை பாவமாயிருக்கு. அது தான் ஒடம்பு சொகமில்லைன்னு பொய் சொல்லியும், மனசு கேக்கல்லே. ரொம்ப அசதி. அவ்வளவு தான். உதவி பண்ணனும் போல இருந்துது. வந்துட்டன். அத்தோட நானும் போயி ரொம்ப நாளாவுது.”

அவன் வியப்புடனும், நன்றியுணர்வுடனும் நிர்க்களங்கமாக அவளைப் பார்த்துவிட்டுச் சொன்னான்.

“நீங்க ஒருத்தரும் சரி போகாட்டி, அப்புடியே கோல்பேஸிலே விழுந்துடறதுன்னு முடிவு பண்ணித்தான் நின்னேன். வீட்டிலே பத்மினி படுற பரிதாவத்தைப் பாக்க ஏலாது. பிள்ளைங்க, கடன்காரங்க ஒருபக்கம் நசல் போடுறாங்க.”

அவன் அப்படிக் கூறும் பொழுது அவனுடைய குரல் தழதழுத்ததை லில்லி உணர்ந்து கொண்டாள்.

“ஒங்கட சம்சாரம் ஒழுங்கா இருக்கிறதினால் தான் நீங்க இந்தப் பாடு படுறீங்க. இல்லியா?” என்று அவள் கேட்டதற்கு, கண்களை மூடி, உதடுகளைப் பிதுக்கித் தலையசைத்தான் அவன்.

அவர்கள் அவனுடைய வீட்டை நெருங்கும் பொழுது நேரம் இரண்டு மணியாகியிருந்தது.

பாடசாலைக்குச் சென்ற பிள்ளைகள் திரும்புவதற்கு இன்னும் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் இருந்ததால், அவனுக்குப் பெரும் ஆறுதலாயிருந்தது அது.

லில்லிக்கு மெதுவாக வரும்படி சைகை காட்டிவிட்டு தான் முன்பாக நடந்து, வீதிக்குப் பக்கமாக உள்ளே ஓர் ஒற்றையடிப் பாதை வழியாக நடந்தான் அவன். அவள் அருகில் உள்ள குறுக்கு வீதியின் முடக்கில் காணப்பட்ட கடைக்குச் சென்று டிஸ்பிறினும் சாக்கலெட்டும் வாங்கிக் கொண்டு விருந்தினர் போல் அவனது வீட்டை நோக்கி நடைபோட்டாள்.

வீடு வழமைக்கு மாறாக முழுவதும் பூட்டப்பட்டிருப்பதைக் கண்ட அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. தனியே வீட்டில் தவித்துக் கொண்டிருந்த பத்மினி எங்கே என்ற கேள்விக் குறியுடன் சற்று நின்று பற்றைகள் நிறைந்த பின் வளவுக்குள் விழி வீசிய அவன், வீட்டின் பின் புறமாகவே சென்று கோடிக் கதவின் உட்புறமான தாளைத் திறக்க முயன்றான்.

அப்பொழுது உள்ளே கேட்ட பேச்சரவமும், சிணுங்கல் குழம்பல் ஒலியும் அவனைத் திகைக்க வைத்தன. பின்னர் வெறி கொண்டவன் போல அந்தச் சத்தம் வந்த அறையின் பக்க ஜன்னலால் ஏறி உள்ளே பார்த்தான்.

அவனுடைய கைகள் கம்பிகளைப் பற்றத் திராணியற்றனவாக உதறின. கால்கள் பதிந்திருந்த சீமெந்துக் கட்டுத் தகர்ந்து விழுவது போல் உணர்வும், எது செய்வது என்று ஆராய்ந்து கடைசியில் ஒன்றுமே செய்ய வழியில்லாது கீழே வீழ்ந்தான் அவன்.

அவனுடைய தொழிலற்ற வாழ்க்கையில் எத்தனையோ உறவுகளை ஏற்படுத்திக் கொடுத்திருப்பான். அப்படி அவனுடைய அந்த உறவுகளுட் சிக்கியவர்கள் அப்பொழுதோ பின்னரோ யார் யாருக்கோ , மனைவியாகத் தான் இருப்பார்கள். ஆனால் தன் பேடிமையை, மிகைப்படுத்தி ஆண்மையையே அவமதித்து தன் மனைவியே நடப்பாள் என்று அவன் நம்பியிருக்கவில்லை.

அவன் கண்கள் குதம்ப, நீர் வழியக்கட்டோரத்துடன் கிடந்த கோலத்தைக் கண்ட, லில்லி திகைத்து, அந்த யன்னலைப் பார்த்தாள்.

அறைக்குள்ளிருந்து அவளுக்குப் பழக்கமான துரையும், பத்மினியும் வெளியே பார்ப்பது தெரிந்தது.

அவர்கள் பகலை இரவாக்கியது பொய்யோ என்னவோ, அந்தப் பகலே இரவாகிவிட்ட அந்த நபஞ்சகத் தன்மை அவனுடைய கண்களில் தெரிந்தது .

இனி எனக்கு வேலை இல்லை என்று முணுமுணுத்தபடி லில்லி வெளியேறினாள்.

அது அவன் காதுகளில் விழவில்லை!

– அங்கையன் கதைகள் (சிறுகதைத் தொகுதி), முதற்பதிப்பு: 2000, அங்கையன் பதிப்பகம், கொழும்பு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *