யானைக்கும் தேவை நல்லொழுக்கம்!

0
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 9,654 
 

வாரணாசியை ஆட்சி செய்த பிரம்ம தத்தரின் அமைச்சர் போதிசத்துவர்; கூர்மதி கொண்டவர்.

பிரம்ம தத்தரின் பட்டத்து யானை மகிலா முகன். இயல்பிலேயே மென்மையான குணம் கொண்ட மகிலா முகன், எல்லோரிடமும் அன்பாக பழகி வந்தது.

யானைக்கும் தேவை நல்லொழுக்கம்!ஒரு நாள்… நள்ளிரவில், திருடர்கள் சிலர் யானைக் கொட்டடி அருகே வந்து நின்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

”நாம் இரக்கமற்றவர்களாக இருக்க வேண்டும். நமக்கு இடையூறு தருபவர்களை தயவுதாட்சண்யம் இன்றி கொல்ல வேண்டும்” என்ற அவர்களது பேச்சு, மகிலா முகனின் காதுகளிலும் விழுந்தது. இப்படி, திருடர்கள் யானைக் கொட்டடியில் பதுங்கி, தங்களுக்குள் பேசிக் கொள்வது அடுத்தடுத்த நாட்களும் தொடர்ந்தது.

தினமும், திருடர்களின் பேச்சைக் கேட்டு வந்த மகிலா முகன் யானை, ‘இவர்கள் நமக்காகவே போதிக்கின்றனர் போலும்!’ என்று எண்ணிக் கொண்டது.

ஒரு நாள், பாகன் ஒருவன் தன்னருகே வர… அவனை துதிக்கையால் தூக்கி தரையில் அடித்துக் கொன்றது மகிலாமுகன். பாகனின் உறவினர்கள், பிரம்ம தத்தரிடம் வந்து முறையிட்டனர்.

மன்னருக்கு அதிர்ச்சி! ‘சாதுவாக இருந்த மகிலாமுகன், திடீரென்று முரட்டுத்தனமாக நடந்து கொள்வது ஏன்?’ என்று குழம்பினார். முடிவில், அமைச்சர் போதிசத்து வரை வரவழைத்த மன்னர், அவரிடம் நடந்ததை விவரித்து, தகுந்த தீர்வு காணும்படி பணித்தார்.

யானைக் கொட்டடிக்கு வந்த போதிசத்துவர் மகிலா முகன் யானையைக் கூர்ந்து கவனித்தார். வியாதிக்குரிய அடையாளம் எதுவும் தென்படவில்லை.

உடனே அங்கிருந்த பாகர்களிடம், ”இங்கே புதிய ஆசாமிகள் எவரும் வந்தார்களா?” என்று கேட்டார்.

அவர்கள், ”ஆமாம் ஐயா! சில தினங்களாக நள்ளிரவில் சிலர், கொட்டடிக்கு அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர்!” என்றார்கள்.

‘நள்ளிரவில் கூடுபவர்கள் தீயவர்களாகவே இருக்க வேண்டும்!’ என்று எண்ணிய போதிசத்துவர், மன்னரிடம் விவரங்களைக் கூறினார். அத்துடன், ”ஒழுக்கத்தில் சிறந்த சான்றோர்களை வரவழைத்து, கொட்டடிக்கு அருகில் அமர்ந்து நல்ல விஷயங்களைப் பற்றி பேசச் சொல்லலாம்!” என்றார். மன்னரும் சம்மதித்தார்.

அதன்படி நல்லோர்களும் அந்தணர்களும் யானைக் கொட்டடியில் கூடிப் பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டன. நாள்தோறும் அவர்கள் நன்னடத்தைகள்- நீதிநெறிகள் பற்றி உரையாடினர்.

‘எவரையும் துன்புறுத்தவோ, கொல்லவோ கூடாது. எல்லோரிடமும் அன்புடன் பழக வேண்டும்’ என்பன போன்ற அவர்களது பேச்சுகளும் மகிலாமுகன் யானை யின் காதில் விழுந்தன. ‘நமக்காகவே போதிக்கின்றனர்’ என்று கருதிய யானை, படிப்படியாக பழைய நிலைக்குத் திரும்பியது. மன்னருக்கு ஆச்சரியம்! ”யானை மாறியது ஏன்? அது, பழைய நிலைக்குத் திரும்பியது எப்படி?” என்று போதிசத்துவரிடமே கேட்டார்.

”அரசே! எப்போதும் எல்லோரும் நல்ல கருத்து களையே பேச வேண்டும் என்று பெரியோர் கூறுவது இதற்காகவே! திருடர்களது தீய பேச்சுகளைக் கேட்ட யானை, அவற்றை ஏற்று அவ்விதமே செயல்பட்டது. பிறகு அந்தணர்களது நல்லுரைகளைக் கேட்டு, சாதுவாகவும் அன்பாகவும் மாறிவிட்டது” என்று விளக்கினார் போதிசத்துவர்.

அவரது சாதுர்யத்தைப் பாராட்டிய மன்னர், அவருக்குப் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

– எம்.பி. அர்ச்சுனன், கிருஷ்ணகிரி-1 (ஆகஸ்ட் 2008)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *