(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அதிகாலை ஆறு மணிக்கு கிறிங், கிறிங் என்ற பெரிய சத்தத்துடன் மணிக்கூடு தனது வேலையைக் கிரமமாகச் செய்தது. அலாரத்தின் சத்தத்தால் திடுக்கிட்டு விழித்த கோகிலா அதற்குள் விடிந்து விட்டதே என்று நினைத்தவாறு கண்களைக் கசக்கி சோம்பலை முறித்துக் கொண்டு எழுந்தாள்.
அருகில் துயின்று கொண்டிருந்த கணவன் மாதவனை ‘இஞ்சாருங்கோ அப்பா நேரமாச்சு. எழும்புங்கோ’ என எழுப்பிவிட்டு தனது கடமைகளைச் செய்ய ஆயத்த மானாள். மாதவனோ மனைவியின் குரலைக் கேட்டவுடன் பத்து நிமிசம் இருக்குத் தானே, ஆறுதலாக எழும்புவம் என மறுபக்கம் புரண்டு படுத்தான்.
கோகிலா கணவன் வழமையாக வேலைக்குக் கொண்டு போகும் பாக்கிற்குள் காலைச் சாப்பாடு, மதியச் சாப்பாடு என இரண்டாக பிரித்து பார்சல் கட்டி வைத்தாள். சுடுதண்ணீர் போத்தலில் நிறைய தேநீர் வார்த்து வைத்தாள். இன்னும் இடை நேரங்களில் சாப்பிடுவதற்கென அப்பிள், ஒரேஞ் என்று போட்டு வைத்தாள். பின்னர் சுடச்சுட பால் கோப்பி போட்டுக் கொண்டு போய் ‘இந்தாங்கோ’ என்று கணவனிடம் கொடுக்க, அவனும் வாங்கி அருந்தி விட்டு ‘ஆ, அப்பாடா!’ என்று கொட்டாவி விட்டு எழுந்தான்.
‘என் கண்மணி’ என்று கூறி அவளின் கன்னத்தில் கிள்ளி விட்டு விறுவிறு என போய் பல் துலக்கி முகம் கழுவி விட்டு எங்கே லோங்ஸ், எங்கே சப்பாத்து சொக்ஸ்? என இருந்த இடத்திலேயே கேட்க, கோகிலாவும் ஓடியாடி எடுத்துக் கொடுத்து அவனை வேலைக்கு அனுப்பி விட்டு வீட்டு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினாள்.
மாதவன் தொலைக்காட்சிப் பெட்டி உற்ப த்தி நிறுவனம் ஒன்றில் இரண்டு வருடங்க ளாக வேலைசெய்து வருகிறான். ஓரளவு க்கு சரளமாக டொச்சில் கதைப்பான்.
நல்ல இனிதான இல்லற வாழ்க்கையின் ஆரம்பப் படியில் வாழ்ந்து வந்தான். ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்த வன் என்றபடியால் வீட்டுப் பிரச்சனைகள் அவ்வளவாகப் பாதிப்பதில்லை. அத்தி பூத்தது போல் கடிதம், பணம் என்பன வீட்டுக்கு அனுப்புவான்.
கோகிலாவும் அவனுடைய எந்தச் செயலுக்கும் மறுப்புத் தெரிவிப்பதில்லை. தன் ‘இலட்சியக் கணவன்’ அவன் என்று அவனைச் சந்தோசமாக வைத்திருப்பதே தனது வேலையென நினைத்து வாழ்ந்து வந்தாள்.
இளஞ் சோடிகள் திருமணமாகி மூன்று வருடங்கள் தான். கடவுள் ஏதோ வகையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலையைக் கொடுப்பவர்தானே. அதேமாதிரி இவர்களுக்குக் குழந்தையில்லாத கவலையைக் கொடுத்திருந்தான். ஆனாலும் அது பெரிதாக அவர்களுக்குத் தோன்றவில்லை. இளம் தம்பதிகள் என்றபடியால் திடீரென குடும்பச் சுமையை ஏற்றுக் கொள்ளவும் விரும்பவில்லை எனவும் சொல்லலாம்.
கோகிலாவுக்கு இது கவலைதான். ஆனால் காட்டிக் கொள்வதில்லை.
கணவன் வேலைக்குப் போய்விட வீட்டிலே கோகிலா தனிமையில் காலத்தைப் போக்கி, மாலையானதும் அவனை எதிர்பார்த்து மகிழ்ந்து உரையாடுவதுமாக வாழ்ந்தாள். தனியே இருக்கும்போது டொச் புத்தகங்களை வாசிப்பதில் அக்கறை காட்டினாள். மிகுதி நேரங்களில் ரீவி பார்ப்பதும், இங்கு உருவாகும் சஞ்சிகைகளுக்கு ஆக்கங்கள் எழுதுவதுமாக பொழுது போக்கினாள்.
மாதவன் தொழிற்சாலையில் மற்றவர்களைக் கவரக் கூடிய முறையில் வேலை செய்தான். தக்க ஊதியமும் அவனுக்குக் கிடைத்தது. அவன் ‘ஆசியன்’ என்ற காரணத்தினால் தொழிற்சாலை முதலாளி அவன் மீது தனிப் பற்று வைத்திருந்தார். சில நேரங்களில் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று உரையாடுவதுமுண்டு. ஒரு முறை முதலாளி அவனிடம் மனைவியையும் அழைத்து வரும்படி சொன்னார். ‘அவவுக்கு டொச் மொழி தெரியாது. சிலகாலம் செல்ல கூட்டி வருவேன்’ என்று அவன் கூறியிருந்தான்.
முதலாளியின் மனைவி மக்கள் கூட மாதவனில் அன்புடனும் அவனுக்கு உதவி செய்ய வேண்டும். என்ற ஆர்வத்துடனும் பழகி வந்தனர். மாதவன் தன் முதலாளி குடும்பம் பற்றியும் அவர்கள் காட்டும் பரிவு பற்றியும் கோகிலாவுக்கு அடிக்கடி சொல்லுவான். கணவனுக்குக் கிடைக்கும் மரியாதையை எண்ணி அவள் சந்தோசப் படுவாள்.
ஒரு நாள் மாதவன் வேலை முடிந்து முதலாளியின் அழைப்பின் பேரில் அவருடைய வீட்டுக்குச் சென்றான். இதை முன்கூட்டியே கோகிலாவுக்கு தெரிவித்திருந்தான். முதலாளியின் வீட்டுக்குப் போனபின்பு தான் அவருடைய கடைசி மகனின் பிறந்தநாள் என அறிந்தான். அங்கு முதலாளியின் உறவினர் பலர் வந்திருந்தனர். கொண்டாட்டத் திற்கு முதலாளியினுடைய மனைவியினுடைய சகோதரியும் வந்திருந்தாள். பார்ப்பதற்கு அழகான தோற்றம் அவளுக்கு. அவளுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. வங்கி ஒன்றில் காசாளராக வேலை பார்க்கிறாள்.
பேர்த்டே பார்ட்டி ஆரம்பமாகி சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. உணவுகள், குடிவகைகள் எல்லோருக்கும் பரிமாறப்பட்டன. மாதவனுக்கு ஒரு புது அனுபவம்தான் அவன் குடிவகைகளை அறிந்திருக்கிறானே தவிர, குடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவனாக இதுவரை காலமும் வாழ்ந்தது கிடையாது. மேலால் ருசி பார்த்த நாட்களும் உண்டு. அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் குடிக்க வேண்டிய நிலையில் குடித்து விட்டான். முதலாளி, அவரின் மனைவி, மனைவியின் சகோதரி மிலாணி எல்லோரும் நகைச் சுவையாகப் பேசி கிளாஸ் வைப்பதும் தூக்குவதுமாக குடித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர்.
நேரம் போக வந்தவர்கள் மெல்ல விடைபெற்றுப் போனார்கள்.
இறுதியில் மாதவன் மட்டும் தான் இருந்தான். சிறிது நேரத்தின் பின் அவனும் போவதற்கு எழுந்தான். அதிகம் குடித்திருந்த படியாலும், பழக்கம் குறைவு என்ற படியாலும் அவன் தள்ளாடினான். எப்பிடித்தான் குடித்தாலும் ஜேர்மன்காரர்கள் நிதானம் இழப்பது அருமை என தனக்குள் நினைத்துக் கொண்டான். அவன் தள்ளாட்டத்தைப் பார்த்த முதலாளி அவனுடைய நிலைமையைப் புரிந்து கொண்டார். மாதவனை வீட்டில் கொண்டு போய் விடும்படி மிலாணியை கேட்டுக் கொண்டார். மிலாணி மாதவனின் கையைப் பிடித்து, கூட்டிக் கொண்டு போய் காரின் முன் இருக்கையில் அமர வைத்தாள். சாரதி இருக்கையில் அமர்ந்து காரைச் செலுத்தினாள். அவளுக்கு பாதை தெரியாத படியால் துாங்கிக் கொண்டிருந்த மாதவனைத் தட்டித் தட்டி பாதையைக் கேட்டுக் கொண்டிருப்பது அவளுக்கு சிரமமாக இருந்தது.
தற்செயலாக மிலாணியின் கண்களில் மாதவனின் சேட் பொக்கற்றிலிருந்த கடித உறை தென்பட்டது. அதை அவள் எடுக்கும்போது அவளுடைய கை மாதவனின் மார்பில் உராய்ந்தது. அப்போது அவன் ‘கோகிலா’ எனக் கூப்பிட்டு அவளை அணைத்தான்.
அவனிலிருந்து சிரமப்பட்டு தன்னை விடு வித்துக் கொண்ட மிலாணி உறையில் எழுதப்பட்ட முகவரியைப் படித்து அவனு டைய முகவரியைத் தெரிந்து கொண்டு வீட்டில் கொண்டு போய் இறக்கி விட்டாள்.
கோகிலா மாதவனை எதிர்பார்த்த வண்ணம் நித்திரை கொள்ளாதிருந்தாள். ‘நேரம் சென்றுவிட்டது. மன்னிக்கவும்’ என்றுவிட்டு, மிலாணி காரில் ஏறிச் செல்ல மாதவன் விட்டிற்குள் வந்தான். அவன் நடக்கும் போது விழப் போவதைக் கண்ட கோகிலா அவனைத் தாங்கிப் பிடித்துக் கொண்டாள். கூட்டிக் கொண்டுபோய் படுக்க வைத்தாள். அவனது சப்பாத்துக்களை கழற்றிவிட்டு தானும் சரிந்து கொண்டாள். அன்றுதான் அவள் கண்களில் நீர்முட்டி வழிய ஆரம்பித்தது.
சிந்தனைகள் கற்பனைகள் எல்லாம் சிதறிப் போயின.
மறுநாள் மாதவன் வேலைக்குப் போவதற்கு முன், முதல்நாள் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடந்தவற்றைக் கூறினான்.
‘என்ன செய்வது? அவர்கள் தருவதைக் குடிக்க வேண்டிய கட்டாயம். நான் குடிக்க மறுத்தால் நாகரீகமற்றவர்கள் என்று நினைப்பார்கள். அவர்கள் உண்டு குடித்து மகிழும்போது நான் அதில் பங்குபற்றாமல் விடுவது சரியோ? சேர்ந்து ஒத்துழைப்பது தானே நாகரீகம். உமக்குத் தெரியும்தானே. அதனால்தான் குடித்தேன். இனிமேல் இப்படிக் குடிக்கமாட்டேன். உமது முகமே வாடிவிட்டது. உமக்கு விருப்பம் இல்லாதவற்றை இனி நான் செய்ய மாட்டேன். சும்மா தானே குடிச்சனான். குடியில் ஆசைப்பட்டா? நீர் கவலைப்படக் கூடாது’ என்று மாதவன் அவளைத் தேற்றினான். கோகிலாவும் திருப்தி அடைந்தாள். முதலாளி இனிமேல் கேட்டால் தனக்கு ஒத்து வரவில்லை என்று சொல்லி விடுவதாகவும் மாதவன் அவளுக்குக் கூறினான்.
சொன்னது போலவே மாதவன் குடிக்காமல் இருந்தான். தன்மீது அவன் காட்டும் அன்பு மரியாதையை எண்ணி கோகிலா உருகிப் போனாள். மாலை நேரங்களில் மாதவனுடன் கதைப்பதற்காக மிலாணி தொழிற்சாலைக்கு வரத் தொடங்கினாள். மாதவனும் வீட்டிற்குப் போவதற்கு முன் கதைத்து மகிழுவான்.
ஒருநாள் மாலை மாதவன் மிலாணியை தனது வீடடிற்குக் கூட்டிப் போனான். தனது தொழிற்சாலையில் வேலை செய்பவள் என்று மனைவிக்கு அறிமுகப் படுத்தினான். கணவனுடன் வேலை செய்பவள் என்ற மரியாதையுடன் கோகிலா மிலாணியை உபசரித்தாள். டொச்சில் அவளுடன் உரையாடினாள். மாதவனின் கதிரைக்குப் பக்கத்திலேயே மிலாணி அமர்ந்து கொண்டு அவனது முதுகில் தட்டுவதும், கையில் பிடிப்பதுமாக குறும்புகளுடன் கதைத்துக் கொண்டிருந்தாள். மாதவனுக்கு சங்கடமாக இருந்தது. கோகிலாவுக்கு ஏதோ மாதிரி இருந்தது.
ஜேர்மனியப் பெண்கள் இப்படித்தான் சரிசமமாகப் பழகுவார்கள். ஆண்கள் என்று வெட்கப்பட மாட்டார்கள் என்று மிலாணி போனபின் மாதவன் கோகிலாவை சமாதானப்படுத்தினான். கணவன் மேல் வைத்திருக்கும் அன்பு, நம்பிக்கை என்பவற்றால் கோகிலா அவனைத் தவறாக எடைபோடவில்லை.
அதன்பின் தொடர்ந்து அவர்கள் வீட்டுக்கு வந்து உரையாடி இலங்கைச் சாப்பாடு என்று சாப்பிடத் தொடங்கினாள். கோகிலா அதைப் பற்றிக் கொஞ்சமும் சந்தேகப் படவில்லை. சில நாட்களில் அவள் மிலாணியின் சிநேகிதமாகி விட்டாள். ஒருநாள் கோகிலா மிலாணியிடம் தனக்கு ஒரு வேலை எடுத்துத் தர முடியுமா என்று கேட்டாள். ‘வீட்டில் தனிய இருக்க பொழுது போகுதில்ல. குழந்தைகளும் இல்லை. வேலை செய்தால் நல்லது என்று நினைக்கிறேன்’ என்று காரணம் சொன்னாள். தன்னுடைய சகோதரன் வைத்திருக்கும் ரெஸ்ரொரண்டில் வேலை வாங்கித் தருவதாக மிலாணி உறுதியளித்தாள்.
வேலைக்குப் போக விரும்பும் தனது எண்ணத்தை மாதவனுக்குத் தெரிவித்தாள். ‘கோகிலா, நல்லது உமது பொழுதுபோக்குக்காவது நல்லது’ என்று அவன் சம்மதித்தான்.
இரண்டு மாதங்களின் இறுதியில் கோகிலா ரெஸ்ரொரண்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டாள். காலையில் மாதவனும் கோகிலாவும் ஒன்றாகவே வேலைக்குக் கிளம்புவார்கள். வேலைக்குப் போவது கோகிலாவுக்கு திருப்தியாக இருந்தது. இருவரும் உழைத்ததினால் பணமும் சேர்ந்தது. எதிர்கால வாழ்க்கையை சந்தோசமாக அமைக்கலாம் என்று அவள் கற்பனை பண்ணினாள்.
கோகிலா வேலை செய்யும் ரெஸ்ரொரண்டின் ஒருவருடப் பூர்த்தியை முன்னிட்டு ஒரு கொண்டாட்டம் நடைபெறும் என ஒரு மாதத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்டு ஆயத்தங்கள் செய்யப்பட்டன. கொண்டாட்டத்திற்கு ஒரு கிழமைக்கு முன் அங்கே வேலை செய்வோருக்கு மேலதிக வேலை நேரம் இரவு பத்து மணிவரை கொடுக்கப் பட்டது.
அந்த ரெஸ்ரொரன்டில் கோகிலாவுடன் வேறு பெண்களும் வேலை செய்தார்கள். அவர்கள் களைத்துப் போயிருக்கும் போது பியர், வைன் என்பன இலவசமாகக் கொடுக்கப்பட்டன. அவளுடன் வேலை செய்யும் பெண்ணொருத்தி அவளிடம் வைனை நீட்டினாள். ‘குடித்தால் களைப்பெல்லாம் போய்விடும்’ என்று ஆலோசனை கூறினாள்.
கோகிலா முதலில் மறுத்து விட்டாள். அப்போது அவள் கணவன் நாகரீக மில்லை என்று நினைப்பார்கள். தரும் போது மறுக்காமல் குடிக்க வேண்டும். அதுதான் நான் குடித்தேன். அவர்களுடன் சேர்ந்து நடக்க வேண்டும்’ என்று ஒருநாள் அவளுக்குச் சொன்னதை நினைத்துக் கொண்டாள். அதன்படி மறுக்காது வைனை வாங்கிக் குடித்தாள்.
புதுப் பழக்கமாதலால் அவளால் தொடர்ந்து வேலைசெய்ய முடியவில்லை. அவளுடைய நிலைமையைப் பார்த்த சக வேலையாள் பிலிப் தன்னுடைய காரில் ஏற்றி அவளை வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போனார்.
மனைவியை எதிர்பார்த்துக் காத்திருந்த மாதவன் அவளைக் கொண்டு வந்து இறக்கி விட்ட பிலிப்புக்கு நன்றி கூறி அனுப்பி வைத்தான்.
‘நீங்கள் சாப்பிட்டு விட்டீர்களா? எனக்குக் களைப்பாய் இருக்கிறது’ என்று கோகிலா போய்ப் படுத்து விட்டாள்.
சாப்பிட்ட பின் படுக்கைக்கு வந்த மாதவன் கோகிலாவிடமிருந்து மதுவாடை அடிப்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தான். உடனே அவளை உலுப்பி விசாரித்தான். கோகிலா நடந்ததைச் சொன்னாள் . மாதவனுக்கு கோபமும் வெறுப்புமாக இருந்தது. என்றாலும் பேசாமல் படுத்துக் கொண்டான்.
மறுநாள் காலையில் இருவரும் கதைக்காமலேயே வேலைக்குப் போனார்கள். இரவு வேலையால் வந்ததும் மாதவன் துள்ளிக் குதித்தான்.
‘இரவு என்ன களைப்பு?’
‘நீங்கள் தானே சொன்னீர்கள், நாகரீகமில்லை யெண்டு. அதனால்தான் மருந்து போல் குடித்தேன்’ என்றாள் கோகிலா.
மாதவனுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வர காலால் உதைத்தான். கோகிலா தடுமாறி விழுந்தாள்.
‘உன்னை யார் குடிக்கச் சொன்னது?’ மாதவன்
‘நீங்கள் தான் சொன்னீர்கள்’ கோகிலா
‘தருவதை மறுக்கப்படாது என்று…’
கோகிலா சொல்லி முடிப்பதற்குள் அவள் கன்னத்தில் பளாரென்று ஒரு அடி.
‘நீ இனி வேலைக்குப் போக வேண்டாம், போகக் கூடாது’ என்று மாதவன் கத்தினான்.
‘அதெப்பிடி உடனே நிற்பது? முதலாளிக்குச் சொல்லிப் போட்டுத்தான் நிக்கலாம்’ கோகிலா கன்னத்தைத் தடவியபடி ‘ஏன் வேலைக்குப் போகக் கூடாது’ என்று கேட்டாள்.
‘குடிக்கவா?’ மாதவன் கோபத்தில் வெடித்தான்.
‘நீங்கள் குடிக்கேக்க பிழையில்லை. எனக்கு அந்த நிலைமை வந்து நான் குடிச்சா பிழை. வேலைக்குப் போகக் கூடாது; சரி இப்ப வாற ஆண்டு விழாவோட நான் வேலைக்குப் போவதை நிறுத்துறேன்’.
ஆண்டு விழா வந்தது. கோகிலா மாதவனையும் கூட்டிக் கொண்டு ரெஸ்ரொரண்டுக்குப் போனாள். இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. கோகிலா உள்ளே சாப்பாடு தயாரிக்கும் இடத்தில் ஓய்வில்லாமல் வேலை செய்து கொண்டிருந்தாள். முன் பகுதியிலிருந்து இசையை ரசித்துக் கொண்டிருந்த மாதவன் தாகம் எடுக்க கோகிலாவைத் தேடிக் கொண்டு உள்ளே போனான்.
அங்கே பிலிப் கோகிலாவின் முதுகில் தட்டி, தோளில் தட்டி, அதை எடு இதைச் செய் என்று சுறுசுறுப்பாக வேலைவாங்கிக் கொண்டிருந்தான். கொஞ்ச நேரம் அப்படியே நின்று அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்த மாதவனால் பொறுக்க முடியவில்லை. தன்னை மறந்து ‘கோகிலா’ என்று உரத்துக் கத்தினான்.
கோகிலா ஆச்சரியத்துடன் திரும்பினாள்.
அவளை நெருங்கிய மாதவன் ‘சரசமாடவா இங்கு வந்தாய்? என்று கேட்டான் கோகிலா வாயடைத்துப் போனாள்.
என்னையா? என் கணவரா இப்படிக் கேட்பது? அவள் உள்ளம் நொருங்கியது. மாதவன் அந்த இடத்தை விட்டுப் போய் விட்டான்
கோகிலா வேதனையுடன் தனது வேலையை முடித்துக் கொண்டு மாதவனைத் தேடினாள். அவன் அப்போதே போய்விட்டதாக சக வேலையாள் ஒருவர் தெரிவித்தார். கோகிலா வீட்டுக்கு வந்தாள். மாதவன் அங்கில்லை. சிறிது நேரம் கழித்து வந்தான். ‘உனக்கு வெட்கம் இல்லையே, அவனோட முட்டிக் கொண்டு வேலை செய்ய? நீயும் அதுக்கு ஒப்புக் கொண்டாயா? என்னைவிட அவன் அழகு உனக்குப் பிடித்துவிட்டதா?’ என்று பொரிந்தான்.
கோகிலா என்ன சொல்வதென்று தெரியாமல் தலையில் கை வைத்தாள்.
‘சீ இந்த ஆண்களே சுயநலவாதிகள். சந்தேகக்காரர்கள். தான் எந்தப் பெண்ணுடனும் பழகலாம்; அவள் கையைப் பிடிக்கலாம். அதை மனைவி பொறுக்க வேண்டும் வெறும் நட்புத்தான் என்று மனைவி நினைக்க வேண்டும். சந்தேகம் கொள்ளக் கூடாது. விசாரிக்கக் கூடாது. அவன் கூட்டி வரும் பெண்ணுக்கு மரியாதை கொடுத்து மனைவி வரவேற்க வேண்டும். இதுதான் ஆண்களின் நோக்கம். ஆனால் ஒரு பெண் வேலைக்குப் போய் வேலை செய்யும் இடத்தில் ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டால் அவள் அவனைக் கணவனாக அடைய ஆசைப்படுகிறாள் என்று அர்த்தம் கொள்கிறார்கள். சந்தேகத்துடன் நேரடியாக விசாரிக்கிறார்கள். ஆணின் கை தெரியாமல் பட்டாலும் பெண் அதை வலிந்து செய்ததாகவே கணவன் நினைக்கிறான் தனக்கு பெண்களின் நட்பு ஏற்படுவது போல மனைவிக்கும் வேலை செய்யும் இடத்தில் ஆண்களின் பழக்கம், நட்பு ஏற்படும் தானே என சகித்துக் கொள்ளும் மனப்பக்குவம், புரிந்துணர்வு, பொது அறிவு ஆண்களுக்கு இல்லையா என கோகிலா தனக்குள்ளேயே குமுறினாள்
எவ்வளவோ நம்பிய என்னை இவர் இப்படி சந்தேகப்பட்டார் என்றால் இனி அவரோடு வாழ்வது போலிதான். கணவன் மனைவிக்குள் சச்சரவு இருக்கலாம் ஆனால் சந்தேகம் இருக்கக் கூடாது. குடும்பம் எனும் இலையை அரித்துத் தின்னும் புழுப் போன்றது சந்தேகம் என்று மன வேதனைப்பட்டாள். தனது வாழ்க்கையை இந்த அத்திவாரத்தில் அமைக்க முடியாது என்று எண்ணினாள்.
மிலாணி என்ற பெண்ணுடன் என் மனசுக்குப் பிடிக்காத மாதிரி அவர் நடந்து கொண்டார். அதை நான் தப்பாக எண்ணவில்லையே. அவரில் எனக்கு அசையாத நம்பிக்கை இருந்தபோது நான் சந்தேகப்பட அவசியமே இல்லை. இப்படியிருக்க என்னில் நம்பிக்கையுள்ள கணவன் எப்படி என்னில் சந்தேகப்பட முடியும்? பணம் தொழில் குடும்பம் என்று வேலைக்குப் போனேன். இப்பிடி உருவாகும் என்று நினைக்கவில்லையே. பணம் இனி எதற்கு? இப்பிடி வரும் என்று முன் கூட்டியே அறிந்துதான் கடவுள் எமக்குப் பிள்ளைப் பாக்கியத்தைக் கொடுக்க வில்லை என்று பலவாறு சிந்தித்த பின் வீட்டைவிட்டு வெளியேறினாள் கோகிலா.
இந்த உலகத்தில் ஒரு பெண்ணுக்கு தன்னம்பிக்கை துணிவு இருக்குமேயானால் தனித்து வாழலாம் என்ற எண்ணமுடைய புரட்சிப் பெண் இவள்!
– புது உலகம் எமை நோக்கி (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: ஜூலை 1999, சக்தி வெளியீடு, நோர்வே.