கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 12, 2024
பார்வையிட்டோர்: 4,176 
 
 

“கமலா… நம்ம பொண்ணை பிடிச்சிருக்குன்னு மாப்பிள வீட்லேர்ந்து போன் பண்ணி உறுதி சொல்லிட்டாங்க…இனி அடுத்த முகூர்த்தத்தில் தேதி குறித்து கல்யாணத்த நடத்திக்கலாமுன்னு சொல்லிட்டாங்க. இனிமே இவளை மேல படிக்கிற பிளானை எல்லாம் நிறுத்திக்க சொல்லு” என்று சமையலறையில் இருக்கும் அம்மாவுக்கு, ரம்யா இருந்த அறையை பார்த்தபடியே சத்தமாக சொன்னார் அப்பா.

‘அது அவளுக்கான செய்தி’ என்பது ரம்யாவுக்கு புரிந்தது.

கடந்த மூன்று மாதங்களாக, இப்படித்தான் அம்மாவை நடுவில் வைத்து … அப்பாவும் அவளும் பேசிக்கொள்கிறார்கள்.

அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அப்பா அவள் முகம் பார்த்து பேசுவதைத் தவிர்த்து விட்டார்

சிறு குழந்தை முதல் இருந்தே அவளுக்கு அப்பாவை நிரம்ப பிடிக்கும். அவருக்கும் அவள்மேல் அவ்வளவு பிரியம்.

அவள் எதைக் கேட்டாலும், அம்மா குறுக்கே வந்து ‘வேண்டாம்’ என்று சொன்னாலும்…

“புள்ள ஆசைபட்டு கேட்டுட்டா .. வாங்கி குடுத்துடலாம் ” ன்னு சொல்பவர் … அவளுக்கு ஒண்ணுன்னா துடிதுடித்துப் போகிறவர்… இன்று பாராமுகமாக இருக்கிறார்.

இதற்கு காரணம் அந்த சுரேஷ்தான். சுரேஷ் அவளுடைய கல்லூரியில் கூட படித்தவன். முதலில் நட்பாக பழகி பின்பு அவளைக் காதலிப்பதாக சொன்னான்.

“இந்த காதல், கல்யாணம் இதிலெல்லாம் எனக்கு விருப்பமில்லை. எனக்குன்னு ஒரு லட்சியம் இருக்கு… நான் நிறைய கனவுகளோடு இருக்கேன். எங்க வீட்டிலயும் இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க…” என்று அவள் எத்தனை எடுத்துச்சொல்லியும் …அவன் மனம் மாறுவதாக தெரியவில்லை.”

பின்பு கல்லூரி இறுதி நாளில் வந்து, இவளை காதலிப்பதாக பேச்சு கொடுத்தான்.

அவள் அவனோடு பேச மறுத்ததும்… வாய்க்கு வந்தபடி பேசினான்.

“பணக்கார பசங்கள தாண்டி உங்களுக்குப் பிடிக்கும். ஒருத்தன் சிவப்பா உயரமாக இருந்தா.. உடனே மயங்கிப்போய் அவன் பின்னாடியே போவீங்க… என்னை மாதிரி நேர்மையாக.. நியாயமா காதலிக்கறவன கண்டா… உங்களுக்கு இளக்காரம்.”

அவன் காதலை மறுத்துவிட்ட ஆத்திரத்தில் கத்தினான்.

அதற்கு இவள் அவனிடம் ‘இப்படியெல்லாம் பேசாதே’ என்று எச்சரித்து… திட்டி அனுப்பி விட்டாள்.

அவனைப்போலவே இன்னும் சிலர்… அவ்வப்போது வந்து நேரிடையாகவோ.. மறைமுகமாகவோ, அவளிடம் விரும்புவதாக சொல்லி அணுகியபோதும் அவள் மசியவில்லை .

காதல் என்பது இருபாலருக்குள்ளும் தானாக வரவேண்டிய… ஆத்மார்த்தமான உணர்வு என்று அவள் நம்பினாள். மேலும் IAS படிப்பதுதான் அவளின் நீண்ட கால கனவு.

கல்லூரி படிப்பு முடிந்த பிறகு… IAS கோச்சிங்க்கு சேர அப்பாவோடு அவள் போகும் போது, சுரேசை பஸ் ஸ்டாப்பில் எதேச்சையாக பார்த்தாள்.

அவனாக வந்து அவளிடம் பேச்சு கொடுத்தான்.

ரம்யா அவனை பார்த்துவிட்டு திரும்பி நின்றுகொண்டாள். அவனோ சட்டென்று நெருங்கி வந்து அவள் கையைப் பிடித்துவிட்டான்.

“சீ விடு ” என்று அவள் கையை உதற…

“ரம்யா… ப்ளீஸ் உனக்கு என்னை ஏன் பிடிக்கலை!?.. ஐ லவ் யூ..” என்று அவன் கெஞ்ச …

இருவருக்கும் இடையே நடக்கும் நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டிருந்த, ரம்யாவின் அப்பாவுக்குப் கோபம் வந்துவிட்டது.

அவன் சட்டையை பிடித்து இழுத்து, ஓங்கி அறைந்துவிட்டார்.

இதை பார்த்ததும் அவர்களைச் சுற்றி கூட்டம் கூடி விட்டது.

சுற்றிலும் இருப்பவர்களில் சிலர் சுரேசை திட்ட… சிலர் ரம்யாவையம் அவனையும் பற்றி ஏதேதோ அவர்கள் கற்பனைக்கு ஏற்றவாறு பேசிக்கொண்டார்கள்.

அப்போது அங்கே இருந்த ஆட்டோ டிரைவர் ஒருவர்… இடையில் நுழைந்து…

“நீங்க கேஸ் கொடுத்தால் இவனை தண்டிக்க முடியும். போலீசுக்கு போன் செய்யலாமா?! என்று கேட்டார்.

‘இதுக்கு போலீஸ்… கேஸ் எல்லாம் வேண்டாம்’ என்று அப்பா சொல்ல..

அங்கிருந்தவர்கள் சுரேஷை எச்சரித்து அனுப்பி விட்டனர்.

அன்று முழுதும் அப்பாவும் அம்மாவும் சேர்ந்து கொண்டு, அவளிடம் வந்து சுரேஷ் அப்படி நடந்து கொண்டதற்கு… இவள் மீதுதான் குறை சொன்னார்கள் .

“இவள் அவனிடம் நெருக்கமாக பழகி இருப்பாள். அதை அவன் சாதகமாக எடுத்துக் கொண்டான்.”

“அவன் அவ்வளவு உரிமையாக கையை பிடிக்கிறான் என்றால்… எப்படி?! ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையுமா ?!”

ரம்யா எவ்வளவு எடுத்து சொல்லியும், அவர்கள் சமாதானம் ஆகவில்லை.

“என்னை நம்புங்கப்பா” என்று அவள் அழுது புலம்பினாள் .

அம்மா கூட ரம்யாவை பிறகு புரிந்துகொண்டாள். ஆனால், அப்பாவுக்கு பயம் வந்து விட்டது.

அவளிடம் இனி கடுமையாக இருந்தால்தான் நல்லது என்று அவரே முடிவு பண்ணிக்கொண்டார்.

அதுவரை அவள் மீது பிரியமாக இருந்த அப்பா … அவள் கனவு நனவாக எப்போதும் துணையாக இருந்த அப்பா, அதன் பிறகு , ஆளே மாறிப் போனார்.

‘பெண்களை அவர்கள் போக்கில் விட்டுவிட்டால்.. வளர்ப்பு சரியில்லை என்று களங்கம் வந்து விடுமோ?! கணவன் குழந்தைகள் சுற்றியே.. பெண்கள் வாழ வேண்டும் என்று சமூகம் வரையறுத்த மாய கூண்டுக்கு வெளியே.. அவள் வாழ்க்கை போய் விடுமோ! ‘

என பயந்து அவளுடைய திருமணத்திற்கு உடனடியாக ஏற்பாடு பண்ணி விட்டார்.

ரம்யா , அப்பாவின் முடிவை எதிர்த்து செயல் படமுடியாமல், அவள் IAS கனவை தியாகம் பண்ண வேண்டிய மனவருத்தத்தில் இருந்தாள்.

அப்பா வெளியே போனபிறகு … அம்மாவிடம் வந்து

“அம்மா ..அப்பா ஏன் இப்படி இருக்கிறார். எனக்கு IAS படிக்கணும்ங்கிற ஆசைய தெரிஞ்சிக்கிட்டும், பிடிவாதமா கல்யாணம் பண்ணி வைக்க நிற்கிறார். இன்னும் அவர் என்னை நம்பவில்லை பாருங்க .” என்றாள்.

அம்மா கமலா.. ஒரு பெரு மூச்சோடு அவளை பார்த்தாள்.

கமலாவும் ப்ளஸ் டூவோடு படிப்பை நிறுத்திவிட்டு …நல்ல வரன் அமைந்தது என்று ரம்யாவின் அப்பாவுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டவள்.

அவளுக்கு மகள் ரம்யாவின் மனநிலையும் புரிந்தது. தன் கணவனின் பயமும் புரிந்தது.

கமலா மகள் ரம்யாவை தன் தோளில் சாய்த்துக்கொண்டு…

“உன்னோட மனசு எனக்கு புரியதுமா … அந்த பையன் செய்த குழப்பத்தில்தான் உனக்கு இப்படி ஒரு நிலைமை ஆயிடுச்சு. அப்பாவுக்கு உன்னைப் பத்தி நல்லா தெரியும். உன்மேல தப்பு இல்லையினும் தெரியும். ஆனா இந்த மாதிரி நடந்தது, உறவுக்காரங்களுக்கு தெரிந்தா .. தப்பா பேசுவாங்க , அது உன்னையும் எங்களையும்தான் பாதிக்கும்” என்றாள்

“அப்போ நான் மேல படிக்க ஆசைபட்டது நடக்காதா …?! வெறும் கனவாகவே போயிடுமா? என் மன கஷ்டத்தைப் பத்தி நீங்க யாரும் நினச்சு பாக்க மாட்டிங்களா?!”

சிறுபிள்ளை போல அவள் அழுதுகொண்டே பேச… அம்மாவின் கண்களும் கலங்கின.

“ரம்யா .. சமூகத்தில் எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும்… நவீன யுகமாக காலம் மாறிக்கொண்டு இருந்தாலும்… பெண்கள் தங்கள் வாழ்க்கையில் இன்னும் சுயமாக முடிவு எடுக்க முடிவதில்லை.

அவர்களின் தனிப்பட்ட விருப்பங்கள்.. ஆசை, கனவுகள் எல்லாம், அவர்கள் யாரை சார்ந்து வாழுகிறார்களோ அவர்கள் முடிவில்தான் நடக்கிறது. அதுவும் இப்படி ஏதாவது ஒரு காரணத்திற்காக அடிபட்டும் விடுகிறது.

உனக்கு உன் விருப்பப்படி IAS படிக்கனுமின்னா, அது உனக்கு வர போறக் கணவனை பொறுத்து… அவரின் விருப்பத்தைப் பொறுத்து.. கல்யாணத்திற்குப் பிறகும் கூட படிக்கலாம்.

நிறைய பெண்கள் அப்படி சாதித்து இருக்காங்க .. உன்னோட சாமர்த்தியத்தால் அதுவும் நடத்தமுடியும்…” என்று அம்மா, அவளுக்குத் தெரிந்த சமூக நடைமுறை பற்றி எடுத்து சொல்ல…

அம்மாவின் சமாதானத்தை ரம்யாவால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும்… அவளுடைய இயலாமை அவளை மௌனமாக்கி விட்டது.

இப்பொது ரம்யா அவள் வருங்கால கணவனுக்காக… பல கனவுகளோடு காத்திருக்கிறாள்.

குறிப்பு: இந்த கதை ஆன்லைன்  கல்கி இதழில் வெளிவந்துள்ளது. குறிப்பாக அவர்கள் 44வது ஆண்டு விழா தொடர்பாக, இந்த கதை முடிவில் இருந்து வாசகர்கள் தொடர்ந்து ஒரு போட்டி கதையை எழுத அறிவிப்பு செய்து வெளியிட்டு இருந்தார்கள்.

mangayar-malar-44th-anniversary-celebration-short-story-competition

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *