மயானத்தின் மர்மம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 28, 2022
பார்வையிட்டோர்: 2,730 
 
 

(1952 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மாலை நேரம் மனம் அமைதியை நாடியது. கால் போன போக்கில் போய்க் கொண்டிருந்தேன். சிந்தனை யினூடே ஊரை விட்டு வெகு தூரம் வந்து விட்டேன். கண்ணுக்கெட்டிய தூரத்தில் கடற்கரை தெரிந்தது. கடற்கரை வரை போய் வரலாம் என்றெண்ணினேன் நடந்தேன்.

உலகம் இருண்டு வந்தது; குளிர்காற்று மழை வரும் என்று எச்சரிக்கை செய்தது. மண் கொதிப்பை மட்டுமல்ல மனிதனின் மண்டைக் கொதிப்பையும் தணித்துவிடக் கங்கணம் கட்டிக் கொண்டிருந்தது வானம். கீழ்த்திசை தன் கருங் கூந்தலை அவிழ்த்துக் கடலிலேயே மிதக்கவிட்டு விளையாடியது. அந்தக் காட்சியிலே நிலையழிந்த மன்ன னின் துடிப்பு மனிதனின் உள்ளத் துடிப்பை விட ஓங்கி யிருந்தது.

கடற்கரைக்குப் போகும் எண்ணத்தை விட்டு விட்டு வந்த வழியே திரும்பினேன். ‘சோ’ என்ற இரைச்சலுடன் மழை பெய்து கொண்டு என்னைத் துரத்தியது! நான் ஓடினேன்! வெற்றி நினைத்ததும் கிட்டி விடும் பொருளா? மழை என்னைத் தொட்டு விட்டது. வேறு வழியின்றி பக்கத்தில் இருந்த பாழடைந்த வீட்டுக்குள் நுழைந்தேன், வீட்டின் கதவு பூட்டியிருந்து. வீட்டின் திண்ணையில் ஒதுங்கிக் கொண்டேன்.

சோவென்று மழை பெய்தது. கடலும் வானமும் முத்தமிடுவது போன்று தென்பட்டது. அந்த மழை நேரக் காட்சி! காற்றின் வேகத்தால் மழைத் துளிகள் என்னைத் தொந்தரவு செய்தன. எனவே வீட்டின் மறு பக்கம் சென்றேன். அங்கே பாதி இடிந்து போன மண்சுவர் ஒன்று இருந்தது அது எனக்கு ஆசனமாக அமைந்தது.

மழை பெய்யும் சத்தம் மனதிற்குக் கிளுகிளுப்பை உண்டாக்கியது. மகிழ்ச்சியுடன் எனக்கு நேரே உலகத்தை நோக்கினேன், புகைப் படலத்துக்கு நடுவே உலகம் தெரிந்தது. நானிருந்த அந்த வீட்டிலிருந்து ஒரு நூறுயார்டு தூரத்தில் ஒரு பாழடைந்த மயானம் தென்பட்டது! ஓங்கி வளர்ந்திருந்த ஈச்ச மரங்களினூடே எகிப்திய கோபுரத்தைப் பார்ப்பது போல் இருந்தது அந்த மயானத்தின் தோற்றம். நான் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

“தம்பி! தீப்பெட்டி இருக்கா?”

நான் அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தேன் எனக்குப் பின்னால் ஒரு வயோதிகர் நின்றார்! தீப்பெட்டியைக் கொடுத்தேன் அவர் ஒரு சுருட்டைப் பற்றவைத்துவிட்டு “மிகவும் நன்றி இந்தாருங்கள்”.

அவர் தீப்பெட்டியைத் தந்தார் நானும் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டேன்.

“அவ்வளவு கூர்மையாக எதைப் பார்த்துக்கொண்டிருந்தீர்கள் தம்பி!” முதியவர் கேட்டார்.

“அந்த மயானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இதை இப்பொழுது யாரும் பாவிப்பதில்லையோ?” என்றேன் நான்.

“இல்லை” என்று தலையசைத்தார்.

“இந்த மயானம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது! ஏன் இதைக் கை விட்டு விட்டார்கள்?”

“அழகும் அவலட்சணமும் ஒன்றுகூடும் இடம் தானே மயானம்! அழகாய்த்தான் இருக்கும்” என்று ஒரு பெரு மூச்சு விட்டு விட்டு மேலும் தொடர்ந்தார்.

“ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த இந்த மயானம் இன்று பறவைகள் தங்குமிடமாகப் போய்விட்டது” என்றார்.

“எப்படி!”

“அது ஒரு பெரிய கதை!”

“வாழ்க்கையே ஒரு கதைதானே! சொல்லுங்கள் கேட்போம்” அவர் சிரித்தார். சிரித்து விட்டுச் சொன்னார்.

“வாழ்க்கை எழுத்தாளனுக்குக் கதையின் கருவூலம்! சிந்தனையாளனுக்குக் அலுப்புத் தட்டிய மூன்றாம் வகுப்பு ரயில் பிரயாணம்! – பணக்காரர்களுக்குப் பூஞ்சோலையின் தென்றல் காற்று! ஏழைகளுக்கோ? மரணத்தை எதிர் பார்த்து நிற்கும் ரெயில்வே ஜங்ஷன்!”

நான் ஆச்சரியத்துடன் அவர் முகத்தைப் பார்த்தேன்.

“என்னடா? இந்தப் பழய மனுசன் புதுத்தத்துவம் பேசுகிறானே! என்று ஆச்சரியப்படுகிறீரா தம்பீ!” வாலிபர்கள் பேசும் தத்துவம் வாழ்க்கையின் உயரப் பாய்ச்சல்! முதியவர்கள் பேசும் தத்துவம் அனுபவத்தின் முத்திரை” என்றார்.

என் கண்கள் மேலும் ஆச்சரியத்தால் விரிந்தன. இத்தகைய தத்துவங்கள் பேசும் மனிதரிடம் இருந்து கடந்து போன காலத்தின் நிகழ்ச்சிகளை அறிவதென்றால் கதை படிப்பது போன்ற ரசனை ஏற்படுமல்லவா?

“நிற்கிறீர்களே! இப்படி உட்காருங்கள்” என்றேன் நான். அவரும் அந்த மண் சுவரில் இடம் பிடித்துக் கொண்டார்.

“நீங்கள் அந்தக் கதையைச் சொல்லவில்லையே?” என்றேன் நான்.

“அந்தக் கதையைச் சொல்லத்தான் வேண்டும். இந்த மயானம் பாழடைந்து கிடப்பதின் பாரம்பரியம் நிலைத் திருக்க நான் அதை யாரிடமாவது சொல்லத்தான் வேண் டும். மேலும் மழை விடும் வரை இப்படி தம் கவனத்தைத் திருப்புவதும் நல்லது தான். நான் எழுத்தானதுமல்ல. காதினிக்கக் கதை சொல்லும் திறமையும் எனக்கில்லை! என் வாழ்க்கையில் நானறிந்த சம்பவத்தைச் சொல்கிறேன் கேளுங்கள்.

“இருபது வருசங்களுக்கு முன் இந்த வீடு உல்லாசப் பிரயாணிகள் தங்கும் வாடி வீடாக இருந்தது. இந்தப் பக்கம் எப்பொழுதும் கலகலப்பாகத்தான் இருக்கும். அதைப் போலத்தான் அந்த மயானமும், இந்தப் பகுதியி லுள்ள பணத்தால் பெரிய மனிதர்களின் கல்லறைகள் இங்கேதான் கட்டப்பட்டன. அந்தக் காலத்தில் இதை மயானம் என்று சொல்ல முடியாது. ஒரு பூந்தோட்டம் போலத்தான் காட்சியளிக்கும். அதனால் தான் இதற்குப் பூந்தோட்ட மயானம் என்று பெயர் வழங்கி வந்தது. மயானத்தைப் பற்றிப் பெரிதாகச் சொல்லிக் கொள்வதற்கு ஒன்றுமில்லை தான் என்றாலும் மகிழ்ச்சியில் கூத்தாடும். மனிதன் மரணத்தில் முற்றுப் பெறுவதைப் போல இந்த வாடி வீட்டில் ஆரம்பித்த நிகழ்ச்சி மயானத்தில் தான் போய் முடிவுற்றது. அதே நிகழ்ச்சி வாடி வீட்டையும் பாதித்து விட்டது?”

“இந்த வாடி வீட்டில் சமயல் வேலை செய்து கொண் டிருந்த செல்லம்மாளுக்குக் ‘கண்ணி’ என்று ஒரு மகள் இருந்தாள். ‘கண்ணி?’ என்பதனால் அவள் கண்கள் பெரிதாக இருக்கு மென்று எண்ணி விடாதீர்கள். ஏழை என்பதால் பெயரும் எளிமையாக இருக்க வேண்டும் என்ப தாலோ என்னவோ அந்தத் தாய் தன் மகளுக்கு அப்படிப் பெயர் வைத்து விட்டாள். ஏழ்மையைப் போல் அழகும் அவளை ஓட்டிக் கொண்டிருந்தது! கண்ணி நம் நாட்டு அழகு ராணிகளை விட அழகாய் இருந்தாள். தாய்க்கு ஒத்தாசையாக மகளும் இந்த வாடி வீட்டில் தான் வேலை செய்வாள். அவர்கள் வசித்த குடிசை அதோ அந்தப் பக்கமாகத்தான் இருந்தது.”

“கண்ணியை இழுத்த காந்தமும் அந்தப் பக்கமாகத் தான் ஒரு குடிசையில் இருந்தது. அந்தக் காந்தம் தான் கணபதி! கணபதி அந்த மயானத்தில் குழி தோண்டும் வேலையோடு தோட்ட வேலையையும் செய்து கொண் டிருந்தான். அந்தத் தோட்டத்திலே தான் கண்ணியும் கணபதியும் சந்தித்தனர். கண்ணிக்கேற்ற காளை தான் கணபதி. எனவேதான் அவர்கள் இருவரும் அந்தக் காதல் வலையில் சிக்கித் தவித்தனர். அந்தத் தவிப்பிலே அன்பு வளர்ந்தது. ஆசை வளர்ந்து காலமும் கடந்தது.

இவர்கள் இருவருக்கும் கலியாணத்தைச் செய்து வைத்துத் தன் பாரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டு மென்று சின்னம்மாள் எண்ணினாள். அந்த எண்ணத்தில் மண்ணைப் போடுவதற்குத் தானோ என்னவோ அந்த வாடி வீட்டுக்கு ஒரு அரசியல் பிரபு வந்தார்.

நம் நாட்டு அரசியல்வாதிகள் தான் மனிதனைப் போல் இல்லையே! யானையைப் போல் கொழு கொழுவென்றிருந்தார் அவர். ஐம்பத்தி ஐந்து வயதும் அரை குறை அரசியல் அறிவும் ஒரு தென்னந் தோட்டமும் அவரை இந்தப் பகுதிக்கே ஒரு பெரிய மனிதனாக்கி விட்டது!

அவருடைய வரவு இந்த வாடி வீட்டு மானேஜரையும் சுறு சுறுப்பாக்கியது. அதன் பிறகு எல்லாமே பெருந்தன்மையாகத்தான் நடந்தது.

அன்று மாலை அந்த அரசியல் பிரபு காற்று வாங்குவதற்காக மயானத்துப் பக்கம் போய் வந்தார். வருகிற பொழுது அதோ அந்த முருங்கை மரம் நிற்கிறதே அந்த இடத்தில் தான் கண்ணியைக் கண்டார். கண்டது மட்டு மல்ல காதலும் பிறந்து விட்டது அவருக்கு!

காலிலே முள்ளுக் குத்துவது போலக் கண்ணிலே அழகும் குத்துகிறது! காலிலே குத்துகிற முள்ளு காலை முடக்கி அங்கேயே உட்கார வைத்து விடுகிறது. ஆனால் கண்ணிலே குத்துகிற அழகு இருக்கிறதே! அது மனிதனை ஆகாயத்துக் கல்லவா கொண்டு செல்கிறது.

இந்த நிலையைத்தான் அந்த அரசியல் வாதியும் உணர்ந்தார். உடல் பறக்க உள்ளம் படபடக்க வாடி வீட்டை நோக்கி நடந்தார் அவர்.

தலையைச் சொரிந்து பல்லைக் காட்டி முதுகு வளைக் கும் ஒரு மனிதனைக் கொண்டு எந்தக் காரியத்தையும் செய்து விடலாம். என்ற தத்துவத்தை அறிந்திருந்த அரசியல் பிரபுவுக்கு அந்த வாடி வீட்டு மானேஜர் ஓரு நல்ல வாய்ப்பு! பிரபுவிடம் இருந்து ஒரு பச்சை நோட்டுக் கை மாறியதும் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டு விட்டது இந்த வாடி வீட்டில்.

அன்றிரவு எட்டு மணி இருக்கும். வேலைகளை முடித்து விட்டுச் சின்னம்மாவும் கண்ணியும் தங்கள் குடிசைக்குப் போகப் புறப்பட்டனர். அந்தச் சமயத்தில் வாடி வீட்டு மானேஜர் கூப்பிட்டார் ‘கண்ணி!’ என்று.

“என்னண்ணன்?” என்று கேட்டுக் கொண்டு கண்ணி அவர் ரூமுக்குள் ஓடினாள்.

“கண்ணி! அதோ அந்த மேசையில் இருக்குதே கண்ணாடிக் கூசா? அது நிறையத் தண்ணியெடுத்துக் கொண்டு போய் அந்த ஐயாட ரூமுள வெச்சிட்டு வாம்மா!”

வழக்கம் போல் கண்ணி தலையசைத்துக் கொண்டே வேலையில் ஈடு பட்டாள், தண்ணிக் கூசாவை அந்த ஐயாவின் ரூமுக்குள் கிடந்த மேசை மேல் வைத்து விட்டுத் திரும்பினாள் கண்ணி. என்ன ஆச்சரியம்! கதவு சாத்தப் பட்டிருந்தது! கதவடியில் ஆபிரிக்க எருமை மாட்டைப் போல் நின்று கொண்டிருந்தார், அந்தப் பிரபு! கண்ணி. மேல் நாட்டு யுவதியல்ல ஹோ! வென்று கத்துவதற்குப் புது அனுபவம் இது! தொண்டை வரண்டு வாயடைத்து விட்டது. உடல் தளர்ந்து உயிர் மயங்கி அப்படியே விழுந்து விட்டாள் அவள்! இல்லை விழுந்தவளைத் தாங்கிப் பிடித்துப் படுக்கையில் கிடத்தினார் பிரபு…

பிறகு? மனதில் ஏறியிருந்த பளுவை மிகவும் இலகுவாக இறக்கி விட்ட சந்தோசத்தில் ஒரு சிகரட்டைப் பற்ற வைத்துக் கொண்டிருந்தார் அந்தப் பிரபு!

கண்ணி கண்விழித்தபொழுது அவள் உடல் கசிந்திருந்தது. உள்ளமும் கசிந்திருந்தது; அதையடுத்து அவள் கண்களிலும் கண்ணீர் கசிந்தது. வாயடைத்துப் போன நிலையில் நேராகத் தன் குடிசைக்குப் போய்விட்டாள் அவள்.

அன்றிரவு குடிசைக்குள் புகுந்த கண்ணி அதன் பிறகு வெளியே தலை காட்டவில்லை, ஏதோ ஒன்றை இழந்து விட்ட நிலையில் இடிந்து போய் விட்டாள் அவள். கணபதியை நினைக்கும் பொழுதெல்லாம் அவள் கண்களிலே கண்ணீர்தான் வடிந்தது. சின்னம்மாள் நினைத்தாள் மகளுக்கு உடம்பு சரியில்லை என்று. கணபதி கேட்ட பொழுதும் இதைத்தான் சொன்னாள் கணபதியும் போய்ப் பார்த்தான். அவள் எதுவுமே பேசவில்லை. கண்ணீர் தான் வெளிவந்தது.

அன்று மாலை சின்னம்மாள் கணபதியிடம் ஓடி வந்தாள். ‘தம்பி! கண்ணி ஒரு மாதிரியா இருக்கிறா கொஞ்சம் வந்து பாருங்க’ என்றாள்.

கணபதி ஓடினான். அங்கே கண்ணி செத்துக் கொண்டிருந்தாள். வாயில் நுரை வந்து கொண்டிருந்தது அவ்வளவு தான் கண்ணி போய் விட்டாள்.

அந்தக் காலத்தில் ஆற்றிலோ கிணற்றிலோ விழுந்து தற்கொலை செய்து கொள்வது தான் பழக்கமாக இருந்தது. ஆனால் நச்சுக்காய் தின்று உயிர்விடும் பழக்கத்தைக் கண்ணிதான் முதல் முதல் செய்து காட்டிவிட்டுப் போனாள்.

கண்ணியின் மரணத்தில் மறைந்து கிடந்த உண்மை யாருக்கும் தெரியாது. ஏழையின் வயிற்றுப் பசிபோல அவள் மரணத்தின் மர்மம் தெரியாமலே மறைந்து போயிற்று. ஆனால் தந்த மாடி வீட்டு மானேஜருக்கு எல்லாம் தெரியும். திருடன் தன்னைத்தானே காட்டிக் கொள்வானா? மறைத்து விட்டான். என்றாலும் இவன் நெஞ்சு அவனை அறுத்தது, மயானம் வேறு அவனைப் பயமுறுத்தியது. இந்த மானேஜர் அங்கிருந்து போய்விட்டான்.

கதையை நிறுத்தி விட்டு என் முகத்தைப் பார்த்தார் பெரியவர். நானும் அனுதாபத்துடன் அவரைப் பார்த்தேன்.

“உலகம் இருண்டு கிடந்தது என்றாலும் மழை நின்று விட்டது. கிளம்புவோமா?” என்றார் பெரியவர். இருவருமாக ஊருக்குள் செல்லும் பாதையில் இருளுக்குள் புகுந்து நடந்தோம்.

“கதை முடிந்து விட்டது! ஆனால் மயானத்தின் மர்மம் புரியவில்லையே?” என்றேன் நான்.

“ஆமாம் அதுவும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் தான்” என்று சொல்லியபடி மேலும் தொடர்ந்தார்.

“கண்ணி இறந்து விட்டாள். கண்ணீர் வடித்தபடி மயானத்தை நோக்கி நடந்தான் கணபதி. இரவு கடும் மழை பெய்து கொண்டிருந்தது. சின்னம்மாவும் இன்னுமொரு பெண்ணும் கண்ணியின் பிரேதத்தை காவல் காத்தனர். விடியும் நேரம் சின்னம்மாள் கண்விழித்துப் பார்த்தாள். என்ன ஆச்சரியம்? கண்ணியின் பிரேதத்தைக் காணவில்லை! கணபதியைத் தேடி ஓடினாள்; சின்னம்மாள் குடிசையில் கணபதி இல்லை. மயானப் பக்கமாக ஓடினாள், அங்கேயும் அவன் இல்லை. ஆனால் புதிதாக மூடிய மண்மேடு இருந்தது. அந்த மண்மேடுதான் கண்ணிக்குக் கணபதி கட்டிய கல்லறை! கணபதி இரவோடு இரவாக அதைச் செய்து விட்டுப் போய் விட்டான். அதன் பிறகு சின்னம்மாளும் அங்கிருந்து போய்விட்டாள்.

எசயம் ஊருக்கு எட்டியது. பூந்தோட்ட மயானத் துக்குச் சொந்தம் பாராட்டியவர்களுக்கும் தெரிய வந்தது. அவ்வளவு தான். மயானத்தின் கதவு திறந்து தானிருந்தது. ஆனால் எந்தப் பிரேதமும் அங்கே கொண்டு வரப் படுவதில்லை.

கண்ணியைப் போன்ற எளிய பெண்கள் அடக்கப்பட்ட மயானத்தில் உயர்ந்த சாதி மனிதர்களின் பிரேதம் புதைக்கப்படுவதா? அத்தோடு முடிவடைந்தது. மயானத்தின் மர்மக் கதை என்றார் அந்த முதியவர்.

“ஒரு சந்தேகம்?” என்றேன் நான.

“இன்னும் என்ன சந்தேகம்?” என்றார் அவர்.

“யாருக்கும் தெரியாத இந்தக் கதை உங்களுக்கு எப்படித் தெரிந்தது?” என்று கேட்டேன் நான்.

“அதை நான் சொன்னால் நீங்கள் நம்ப வேண்டுமே?” என்றார் அவர்.

“நம்ப முடிந்தால் நம்புகிறேன் சொல்லுங்கள்” என்றேன்.

“அப்படியானால் சரி. நான் தான் அந்த வாடி வீட்டு மானேஜர்!” என்றார் அவர்.

“என்ன!” என்று ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்த்தேன். அங்கே அந்த முதியவரைக் காணவில்லை. அங்கு மிங்கும் திரும்பிப் பார்த்தேன். அவர் இல்லவே இல்லை! அதற்கு மேல் நான் அங்கு நிற்க விரும்பவில்லை. இருட்டோடு இருட்டாக நான் வீட்டை நோக்கி நடந்தேன்.

-1952, பித்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்ச் 1995, மல்லிகைப்பந்தல் பதிப்பகம், யாழ்ப்பாணம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *